பைத்தியம் - கடைசி பாகம்

முதல் பாகம் இங்கே
இரண்டாம் பாகம் இங்கே
மூன்றாம் பாகம் இங்கே
நான்காம் பாகம் இங்கே
ஐந்தாம் பாகம் இங்கே

==========================

நான் செய்தவை குற்றம் இல்லை என்றால் ஏன் அழுகிறேன்? ஏன் பயம் வருகிறது? எந்த வழியில் போனால் எனக்கு இந்த குற்றவுணர்வு தீரும். எனக்கு இதிலிருந்து விடுதலைக் கிடைக்கும்? எந்தப் புத்தகம் படிப்பது? எந்த சுலோகம் சொல்வது? எந்தக் கடவுளை நாடுவது? எது உண்மையானது?

விடிந்து விட்டது. வானம் தெளிந்திருந்தது. மெல்ல அறையின் கதவை பயந்து கொண்டே திறந்தேன்.

"நான் உனக்காகத்தான் இத்தனை நேரம் இங்கியே நின்னுண்டிருந்தேன். என்னோட வா" என்றாள் கல்யாணி.

அப்படியே திடுக்கிட்டு இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றேன். "யாரு நீ. என்னை எப்படித் தெரியும்?" என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டேன்.

========================

எனக்கு எதுவும் அந்த நிமிடம் புரியாதிருந்தாலும், அறிந்து கொள்ளும் ஆவல் மேலிட்டு ஒரு வித தைரியத்தைக் கொடுத்தது, ஒன்று இவ்வளவு தெய்வாம்சம் பொருந்திய இவள் யார்? இந்தப் பெண்ணுக்கு என்னைப் பற்றி எப்படித் தெரியும்? மற்றது, வேறு யாருக்கும் நிகழாது எனக்கு மட்டும் ஏன்?

இவளே மகிஷியா? இறைவியும் சித்தர்களும் என்னைப் போல கேடுகெட்ட ஜென்மத்துக்கு காட்சி அளிப்பார்களா? இல்லை எனக்கு நிஜமாகவே ஏதும் ஹாலுசினேஷன் ஏற்பட்டு விட்டதா?

நான் மரணித்த பிறகுதான் நரகம் வரும் என்று நினைத்திருந்தேன். இதென்ன? என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் நரகமாக கொல்கிறதே? என் நிம்மதி அழிந்து கொண்டு வருகிறதே?

படித்தவனை கொன்றால் பிரம்மஹத்திதோஷம் பிடித்து மஹரௌரவ நரகத்தில் விழுவான். படித்தவன் மதுவருந்தினால் ரௌரவ நரகத்தில். படித்தவனின் சொத்துக்களை திருடுபவன், பிரம்ம ராக்ஷஷனால் பீடிக்கப்பட்டு, தன் மறு ஜன்மத்தில் அதே பொருட்களுக்காக ஏங்கி ஏங்கி துன்புறுவானாம். மாற்றான் மனைவியோடு உறவுகொள்பவன் மறு ஜன்மத்தில் அவளுக்கே நபும்சகனாய் போன மகனாக பிறப்பானாம். காலசூத்திர நரகத்தில் விழுந்து யமதூதர்களால் அடிக்கப்படுவானாம்.

மற்றவனுக்கு விஷம் வைப்பவன், உலகறியாமல் மறைந்திருந்து பாவம் செய்பவன் ஆகியோர் சம்ஹாரம் எனப்படும் நரகத்தில் விழுந்து, கை கால்கள் பிய்க்கப்பட்டு, மூளை பிசையப்பட்டு சித்த பேதம் அடைந்து வீடிழந்து திரிவானாம்.

இவையெல்லாம் படித்தும், அறிந்தே நான் தவறிழைத்தேன். நரகம் என்று தனியாக ஒன்றுமில்லை போலும். குற்றஞ்செய்தவன் மனமே, மனசாட்சியே நரகமாகிறது.

மனம் ஆட்சி செய்ய ஆரம்பிக்கும் போது, உடல் தன் முக்கியத்துவம் இழந்து இறக்கிறது. மனம் பாரபட்சம் அற்றது. மனமே சித்திரகுப்தன். நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் குறித்து வைக்கிறது. மற்றவருக்கு நன்மை செய்து, நம் மனம் மகிழும்போது, உடல் தாங்கும் தலை நிமிர்ந்து நடக்கிறது. வன்மத்தால் அடுத்தவர் ஐயோ என்று சிறிது அவர் மனம் நோகும் போது, நம் மனமும் நொந்து, தலை குனிகிறது. எத்தனை மனங்களை நோகடித்தேன். என் மனம் மீண்டு, என் உடல் மரித்து விட்டது போலும்.

யோசிக்கும் போதே, "ரவி, என்னோடு வா" என்றாள் கல்யாணி.

"அம்மா" என்ற என் குரலில் வந்த வார்த்தை மட்டும்தான் என் காதில் விழுந்தது. என்னுடல் அவள் கால்களில் விழுந்து கிடந்தது. சூழல் முழுதும் கருநீலம் படர்ந்து சிறிது சிறிதாக முழு இருட்டு வந்தது. நான் கண் விழித்த போது, என்னருகில் அந்த மெலிந்த தேக சித்தர் மற்றும் கல்யாணி நின்று கொண்டிருந்தனர்.

அவர் என்னிடம் "நீ கிடந்து இரப்பா. இந்தப் பெண் எப்பயும் இப்படித்தான். குழந்தைதானே?" என்றார்.

நான் எழுந்து ஓட எத்தனித்தேன். என் உடல் ஒத்துழைக்கவில்லை.

இவள் தேவியேதான். இருபது ஆயுதங்களை கையில் அவள் ஒரு பெண்ணாக தாங்கி இருப்பது, வேதங்களில் கூறப்பட்ட இருபது தெய்வ குணங்களே. பெண்மையை வணங்கி இக்குணங்களை கையில் தாங்குவதன் மூலம் மிருக குணங்களை அழிக்கலாம் என்று கூறுவது போல நின்றாளே? எனக்குத்தான் புரியவில்லை போலிருக்கிறது.

இந்த நிகழ்வுக்குப் பிறகு பெண்களைப் பற்றிய என் எண்ணங்கள் மாறி இருந்தன. திரும்பிச் சென்று, தினமும் தேவியை பெண் குழந்தை வடிவில் பாலாவாகப் பூஜிக்கவும் முடிவெடுத்தேன்.

அத்வைதங்களில் படித்தது போல, பிரம்மநிலை எய்துவதொன்றும் அவ்வளவு கடினமில்லை. அது ஒருவித மனோநிலையே ஆகும். புத்தகங்களைப் படித்து ஞானம் பெறுவது என்பது விலாங்குமீனின் வாலைப் பிடிப்பது போன்றது. அது எப்போது வேண்டுமானாலும் கை நழுவிப் போய் விடும். அதேபோலத்தான் அக்ஞானம் என்னை விட்டு நழுவவே இல்லை. இன்றும் நழுவிப்போகும் கருத்துகளுடைய புத்தகங்களை பிடித்துக் கொண்டிருக்கிறேன்.

இவ்வுலகமேல்லாம் மாயையென்றும், மாயையெல்லாம் ஒரு கனவே என்றும் தீர்மானம் செய்து கொண்டால் போதும் போலிருக்கிறது. உண்மையான ஒன்றை மாயை மறைத்திருக்கிறது. எல்லா ஜீவனும் ஒரு நிலையில் நிம்மதியான சூழல் மற்றும் அமைதியையே நாடுகிறது. அந்த அமைதி உலக விஷயங்கள் எதிலும் இல்லை. நம் மனதில் நம்மிடமே எப்போதும் இருந்து வருகிறது. "தத் த்வம் மஸி" என்று கூறி "நானேதான் அந்த பிரம்மன்" என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளதே? நானே பிரம்மன் என்றால் உலகம் என்று நான் நினைத்திருப்பது ஹாலுசினேஷன் தானே?

வாயில் உள்ள எலும்புத்துண்டை கடித்து, தன் நாக்கிலிருந்தே வரும் இரத்த ருசியை எலும்பிலிருந்து வருகிறது என்றும் நினைக்கும் நாய் போல, நிலையில்லாத இன்பங்களை நாடிச் சென்றேனே? நாம் படைத்த இவ்வுலகம், தண்ணீரில் தெரியும் நிலவின் பிரதிபலிப்பு மட்டுமே. உண்மையான மகிழ்ச்சி அந்த நிலவு போல நம் மனமே ஆகும். பிரம்ம நிலை என்பது ஒரு பொருள் அல்ல, இதை எதனோடும் ஒப்பிட முடியாது.

பரம யோகியான சிவபெருமான், ப்ரதிபாஸிகா (முழுமையான மாயையை அறிதல்), வ்யவகாரிகா (உபயோகமுள்ள மாயையை அறிதல்) மற்றும் பரமார்த்திகா (ஞான நிலையடைதல்) என்று மூன்று நிலையில் ஞானம் பெற்று மேன்மையடைவதைக் குறிக்கிறார். எல்லாமே மாயை என்றால், எது நிஜம்? பரமார்த்திகா நிலையில் ஒருவர் தன்னை அறிகிறார் என்று கூறப்படுகிறது. பெண்ணாசை, பொருளாசை எல்லாம் தானாகவே அழிந்து விடுகிறது என்கிறார்கள். அதனால்தான் அவர்கள் முகத்தில் அப்படி ஒரு தெய்வீகக் களை வந்து விடுகிறதோ?

அத்வைதத்தில் இப்படியாக இருந்தால், நானே பிரம்மன் என்றால், எல்லோரும் நான்தானே. எல்லோரும் பிரம்மந்தானே? ஆனால் ஒரு சில ஆன்மாக்கள் மட்டுமே அதை உணர்வது ஏன்? எல்லோரும் இந்நிலை அடைய வேண்டுமே? நான் பிரம்மன் என்றால் ஏன் தவறு செய்தேன்? தவறு செய்யும் போது எல்லாமே நானாக எப்படி ஆக முடியும்?

சூரியனால் உருவாக்கப்பட்டது என்றாலும், மேகங்கள் சூரியனின் சக்தியைப் பெறமுடியுமா? மேகம் என்ற மாயை விலகினால் மட்டுமே ஆன்மாவின் சூரியவொளி நமக்குள் பரவும். எங்கு அமைதி இருக்கிறதோ, அங்கே இறைவன் இருக்கிறான்.

என்று நீண்ட யோசனைக்குப் பிறகு, கண்களைத் திறந்தேன். யாரையுமே காணோம். கல்யாணியும் பெரியவரும் எங்கே?

என் மனம் ஒரு விலங்கு போல அலைந்தது. நான் மெல்ல எழுந்திருந்தேன். நடக்கத் துவங்கினேன். திசைகள் தெரியவில்லை. பயணம் நீண்டுகொண்டே இருந்தது.

திடீரென, "எங்கு போகிறாய்?" என்று கேட்டாள் கல்யாணி.

"நான் எங்கு போவது?" என்று கேட்டேன்.

"இனி நீ திரும்பிப் போகமுடியாது. என் தாய்க்குப் பிறந்து இறந்த குழந்தை நீதான்" என்றாள்.

"என்னைப் போக விடு" என்று கத்தினேன்.


=================


எதிரில் அமர்ந்திருந்த என் தாய் "நல்லாத்தான் இருந்தான். இப்போ ஒரு மூணு மாசமாத்தான் இப்படி தனக்குதானே பேசிக்கிறான்" என்று டாக்டரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"நான் நல்லாத்தானா இருந்தேன்? நான் நல்லா இருந்தேனாம்..." என்று கேட்டுக் கொண்டே சத்தம் போட்டுச் சிரித்தேன்.

டாக்டர் ஏதோ ஒரு ஊசியை போட, கண்கள் சொருகிக் கொண்டது. மீண்டும் பெரியவரையும், கல்யாணியையும் பார்க்க நெடுந்தூரம் நடந்து சென்று கொண்டிருந்தேன் நான்.

...முடிவுற்றது.

(படித்த எல்லோருக்கும் நன்றி)






--

6 comments:

Radhakrishnan said...

பல அரிய விசயங்களை, அறியாத விசயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

மனம் போல் வாழ்வு என்பதை மிகவும் தெள்ளத் தெளிவாக பைத்திய நிலையில் இருக்கும் கதாபாத்திரம் மூலமாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

சில வார்த்தைகள் உச்சரிப்பதற்கும், நினைவில் கொள்வதற்கும் சற்று சிரமமாக இருந்தாலும் அவை தரும் அர்த்தங்கள் பொக்கிஷங்கள்.

அவசர அவசரமாக முடிக்க வேண்டும் எனும் போக்கில் கதைக்கு மிக முக்கியமான அத்தனை விசயங்களும் ஒரே நேரத்தில் தெளிக்கப்பட்டிருக்கின்றன, இருப்பினும் அவையே கதையின் முடிவிற்கும் ஒரு பலமாக, பாலமாக அமைந்து இருக்கிறது.

பல விசயங்களைத் தெரிந்து கொண்டதன் மூலமும், சரளமானப் பேச்சு நடை போன்ற எழுத்து நடையும் ஒரு நல்ல கதையைப் படித்த திருப்தியைத் தந்தது.

மீண்டும் ஒரு அற்புதமான கதையுடன் நீங்கள் வருவீர்கள் எனும் நம்பிக்கை உண்டு. மிக்க நன்றி வித்யா.

Vidhoosh said...

//அவசர அவசரமாக முடிக்க வேண்டும் எனும் போக்கில் கதைக்கு மிக முக்கியமான அத்தனை விசயங்களும் ஒரே நேரத்தில் தெளிக்கப்பட்டிருக்கின்றன//

ரொம்ப ரொம்ப சரி.

இதற்கு மன்னிக்கவும். இந்தக் கதை நான் எழுதியபடியே பதிவிட்டால் கிட்டத்தட்ட பதினைந்து பாகம் வரும். நீங்கள் எல்லாம் ஓடிப் போய் விடுவீர்கள். ரொம்ப சுருக்கி, எடுக்கவே முடியாது என்பவை மட்டும் கொடுத்துள்ளேன்.

நன்றி இராதகிருஷ்ணன்.

Radhakrishnan said...

ஹா ஹா! அப்படியெல்லாம் கதையின் பல பாகங்கள் பார்த்து வெறுத்து ஓடிவிடும் நிலைக்கு எல்லாம் செல்லமாட்டேன். ஒரு கதையைப் படிக்கத் தொடங்கினால் அந்த கதையின் முடிவு வரை தொடர்ந்து படித்து விடுவேன். என்னதான் சொல்லி இருக்கிறார்கள் எனும் ஆவலும், பல விசயங்கள் கற்றுக்கொள்ள முடியும் எனும் அதீத நம்பிக்கைதான் காரணம். முடிந்தால் முழுக்கதையையும் பிடிஎப் கோப்பாகத் தரவேற்றி அதன் இணைப்பைத் தாருங்கள், தரவிறக்கிப் படித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.

நேசமித்ரன் said...

விதூஷ்
காம்பிரமைஸ் பண்ணிட்டே போனோம்னா படைப்பு தன் இயல்பை இழந்துடும்ங்குறது உங்களுக்கே நல்லாத் தெரியும் .

ஜரிகை இல்லாமப் போன என்ன தங்கச்சி முத தடவையா சேலை கட்டி நல்ல இருக்கன்னு கேட்கும்போது தங்கச்சி சேலை கட்டி இருக்கா அப்டீங்க்றதே ஒரு தனி அழக குடுக்குமே அப்பிடி உங்களோட இயல்பான வெளிப்பாடு நல்லா இருக்கு இந்தக் கதையில .நீளம் பார்த்து குறைக்குற எழுத்தா உங்களோடது..ம்ம்ம்

Vidhoosh said...

நன்றி ராதாகிருஷ்ணன்.
விரைவில் அந்த பதினைந்து பாகங்களையும், pdf கோப்பாக upload செய்கிறேன். படித்துக் கொள்ளுங்கள். :)
=============
:(/ நன்றி நேசமித்ரன். தெரியும்தான்.
காம்ப்ரமைஸ் மட்டும் இல்லை, நேரமின்மையும் ஒரு பெரிய காரணம்தான்.:(
=============
--வித்யா

உமா said...

அறுசுவையுண் டிக்கோ மணம்நாவுக் கோமணம்
காற்றுக்கோ மணம்நாசிக் கோமன மாசைத்
துடைத்தொரு கோமணங்கட் டும்ரமண ருக்கோ
மணமுண் டறிவாய் மதி.

சடலத்துக்கு இல்லாத மணத்தை,உறங்கும் போது உயிர்த்திருந்தும், புலனுறுப்புக்கள் இருந்தும் அறியாத மணத்தை,விழித்ததும் எப்படி அறிகிறோம்? உள்ளே 'நான்' எனும் உணர்வாக ஒளிரும் பகவானுக்கே மணம்'

இப்போதுதான் இந்த பதிவையிடடேன்.உணமையுணராமல் தான் எல்லோரும் பைத்தியமாக இருக்கிறோம்.

அழகாக துவங்கி அற்புமாய் முடிந்தது.

Post a Comment