பெரிய்ய தேவதாஸ் பரம்பரையாக்கும்

எல்லாம் மாயா


கொடியது கேட்கின் வரிவடிவேலோய்உங்களைச் சுற்றி உலகில் வேறெந்த ஜீவனுமே மிச்சமில்லாமல் போய்விட்டால், நீங்கள் மட்டுமே உயிரோடு இருப்பதாக இருந்தால், சுற்றிலும் பிணங்களே இருந்தால், நீங்கள் நம்பிக்கை இழக்காமல், மனம் தளராமல், துணையேதும் இன்றி எப்படி வாழ்வீர்கள்.

உலகமே அழிந்து விட்டு நாம் மட்டும் தனியாக இருந்தால் என்ன செய்வது.  நாம் மட்டும் வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம் என்று கேட்கிறீர்களா? யார் கண்டது... நதியின் அக்கரையில் ஒரு ஹ்ருதிக் ரோஷனோ, அல்லது ஸ்ரேயாவோ உயிரோடு இருந்தால்.


ஆகவே, இனியும் கங்கையை அசுத்தப்படுத்த வேண்டாம்  என்ற பதிவின் தொடர்ச்சியாக.

கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது அவர் கையால்
இன்புற உண்பது தானே


இவையெல்லாவற்றையும் விடக் கொடியது தனிமை.


நம் generation-களில் single child என்பது சகஜமான ஒன்றாகி விட்டது. அதையும் தவிர சூழ்நிலைக் காரணங்களாலும், தன் சொந்த விருப்பத்தாலும், பணி நிமித்தமாகவும், குடும்பத்தோடு கூடி இருந்தாலும் களிப்பில்லாமல் மனதாலும், தன்னம்பிக்கை இல்லாது சமூகத்தோடு இணைய முடியாமலும், சமூகத்தால் பல காரணங்களுக்காக மதிக்கப்படாமல் இருத்தலும், துணை மற்றும் மகன் / பெற்றோர் போன்ற உறவுகளின் இழப்பு, மற்றவர் மீது நம்பிக்கையின்மை, சுய-மதிப்பின்மை, போன்ற பல காரணங்களுக்காக ஒருவர் தனித்துப் போகிறார்.


இக்காரணங்களில் எதுவுமே ஒருவர் மனதிற்கு நேர்மறையான விளைவுகளைக் கொடுப்பதில்லை. இதனால் வெறுமை, வெறுப்பு, பாதுகாப்பு உணர்வின்மை, மன அழுத்தம், தற்கொலை உணர்வு, போன்ற எதிர்மறை எண்ணங்கள் விளைகின்றன. இந்த எதிர்மறை எண்ணங்கள் உடலில் பல்வேறு ஆற்றொணாக் கொடுநோய்கள் விளைய வித்தாகின்றன.


தனிமையில் இருந்தாலும் தனித்தில்லாமல் இருக்க நம்மிடம் டீ.வி., ரேடியோ, மியூசிக் பிளேயர் போன்ற பல வசதிகள் இருந்தாலும், மனம் லயிக்குமா? நம்மோடு ஒருவர் இருந்து அவர் football match பார்க்க விருப்பம் என்று சொன்னால், ஒரு போட்டிக்காவது 89-களின் ஹீரோ கப் repeat telecast-டில் கபில்தேவை பிடிவாதமாய் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் போட்டிக்கு ஆளே இல்லையென்றால், டீ.வியில் மனம் லயிக்காது. மனம் அப்போது வெறுமையால் சோர்வுறாமல் இருக்க என்ன செய்வது?


இந்து சமூகத்தில் ஒரு பிரிவினர் தினமும் சமைத்த உண்ணும் உணவை சாப்பிடும் முன் காக்கைக்கு இட்டு, பின் தட்டின் முன் அமர்ந்து 'பரிஷேஷனம்' செய்துவிட்டு சாப்பிடும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். இதன் பின்னணியில் இருக்கும் மனோதத்துவம் என்ன? இதனால் ஒருவருக்கு விளையும் நன்மைகள் என்ன?


நம் மூத்தோர்கள் இறந்து, காக்கை ரூபத்தில் வந்து நம் வீட்டில் உணவு உண்பதாக நம்பிக்கை நிலவுகிறது. இதில் எத்தனை உண்மை இருக்கலாம். 


ஒரு உதாரணத்திற்கு என்றாலும் என் தாய் வீட்டில் ஒரு நிகழ்வை இன்றும் நினைத்து நினைத்து ஆச்சரியப்படுவேன். எங்கள் பாட்டி (அம்மாவின் மாமியார்) தன் தாயார் திதி மற்றும் சுமங்கலி பிரார்த்தனை செய்யும் நாட்களில், எள் கலந்த சாதம் வைப்பார். அன்று மட்டும் ஜோடியாக ஒரு அண்டங்காக்கையும் காகமும் வந்து சாப்பிடும். மற்ற தினங்கள் எல்லாமே, பாட்டி கொடுக்கும் உணவை அந்தக் காகம் மட்டும் தான் வந்து உண்டு செல்லும். காகங்கள் பார்ப்பதற்கு ஒன்று போலவே இருப்பதால், நான் கூட சின்ன வயதில் "எப்படிப் பாட்டி இந்த காக்காய்தான் தினோம் வரதுன்னு கண்டுபிடிகிற" என்றும் "பாட்டி. உங்கம்மா வந்திருக்கா பாரு" என்று கிண்டல் செய்துள்ளேன். ஆனால் இன்றும் கூட என் பாட்டி திதியன்று இதே போலத்தான் நிகழ்கிறது. மிகச் சரியாக திவசம் (திதி காரியங்கள்) முடிந்து, அந்தணர்களுக்கு இலையில் சாதம் பரிமாறி,  அவர்கள் பரிஷேஷனம் செய்யும் போது, "சாப்பிடும்மா" என்று பாட்டி (இப்போது என் தாய்) குரல் கொடுத்த பின்தான், காக்கையும் உணவைச் சாப்பிடும். இதை படிக்கும் போது, நம்பவே முடியாது. ஆனால் நான் கண்ணால் கண்டு கொண்டிருக்கும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.சமீபத்தில் இந்து பத்திரிகையில் ஒரு article வந்திருந்தது. காக்கைக்கும், பறவைகளுக்கும், வீட்டுக் கொட்டில் மாட்டுக்கும் உணவு கொடுத்துச் சாப்பிடும் பழக்கம், மற்றும் அதே போல நாய், பூனை போன்ற மிருகங்களை வீட்டில் வளர்ப்பதும் தனிமை உணர்வைக் கொல்கிறதாம்.


தைத்திரீய உபநிஷதில் குறிப்பிட்டபடி,"அஹம் அன்னம் அஹம் அன்னம்  அஹம் அன்னம்,
அஹம் அன்னாதோஹம் அஹம் அன்னாதோஹம் அஹமன்னத: " என்று பிராணனுக்கு அன்னத்தை வழங்குகிறார்கள்.


இதன் பொருள்: நான் பரமாத்மாவுக்காக இந்த உணவை உண்கிறேன், அதனால் ஆத்மாவுக்கு நானே உணவாகிறேன். நானே இந்த உணவு. நானே இதை உண்கிறேன். நானே ஆத்மா. ஆத்மாவை மகிழ்விக்க நான் என்னையே உணவாக  உண்கிறேன்.


உணவை வெறும் ருசிக்காக இல்லாமல் ஆத்மாவோடு இணைத்து ஆத்மநிந்தனைக்கு (உடலையும் மனதையும் வருத்துதல்) இடமில்லாமல் செய்ய இந்த சுலோகம் உதவுகிறது. பரிஷேஷன தத்துவம் என்ன? பரிஷேஷனம் என்றால் என்ன? இதை ப்ராணாக்னிஹோத்ரம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. அக்னி ஹோத்ரம் / நித்ய யக்ஞம். நித்ய யக்ஞம் என்பது daily assertions. Self-Love, Counselling, Prayer, Meditation என்றெல்லாம் ஆங்கிலத்தில் ஒரு Psycho-analyst சொல்லும்போதுதான் நமக்கு அதைச் செய்து பின்பற்றுவது பற்றிய ஒரு பெருமை உண்டாகிறது. சரி!


வெறும் பசியாற்றுவது மட்டும் உணவின் செயல் இல்லை. உடலின் ஆற்றலுக்கும் சுறுசுறுப்புக்கும் மந்தத் தன்மைக்கும் நாம் உண்ணும் உணவே அடிப்படையாக அமைகிறது. அந்த உணவு தகுந்த முறையில் ஜெரிக்கப்பட்டு, கழிவுகள் வெளியேற்றப்படும்போதுதான் உணவின் சுழற்சி முடிந்து மீண்டும் பசி ஏற்படுகிறது. இந்த சுழற்சிகள் சரியான முறையில் நடைபெற "ப்ராண" என்று வேதங்கள் சொல்லும் வாயு (காற்று) மிகவும் முக்கியமானது. காற்றே நம் உடலை இயக்குகிறது. காற்றுதான் நம் மூட்டுக்களின் அசைவுக்கு காரணம். காற்றே இரத்த சுழற்சிக்கு தூண்டுகிறது. அதனால்தான் ஒருவர் இறந்துவிட்டால் "ப்ராணன் போய் விட்டது" அல்லது "breathed their last" என்கிறார்கள்.


பிராணா / ஆத்மா இரண்டுமே இணைந்து அன்னமய கோஸம், பிராணமய கோஸம், மற்றும் மனோன்மய கோஸம் ஆகிறது. அன்னமும் பிராண வாயும் மனதை ஆட்டி படைக்கும் ஆற்றல்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. சைவ அசைவ உணவுகள் எதுவென்றாலும் ஆத்மாவுக்கு என்று சொல்லி ருசி-அருசிகளை பாராது மகிழ்ச்சியோடு ஏற்று உண்ணும் போது மனது (ஆத்மா) மகிழ்கிறது. "இன்று இந்த உணவை இவர்களோடு பகிர்கிறேன்" என்று மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் அளித்து உண்ணும்போது தனிமை நீங்கி மனம் திருப்தி அடைகிறது. 


பரிஷேஷனம் மூன்று  நிலையாக செய்யப் படுகிறது. அதாவது, ஆபோஜனம் (உணவுக்கு முன்), ப்ராணாஹுதி (உணவை பிராணனுக்கு வழங்குவது / சாப்பிடுதல்), உத்திரபோஜனம் (உணவுக்குப் பின்).


ஓம் பூர் புவ: ஸுவ: என்று காயத்ரி மந்திரம் சொல்லி,


சத்யம் த்வருதேன  பரிஷிஞ்சாமி"  என்று பகலிலும் (சத்யம் + து + றுதேன + பரிஷிஞ்சாமி = உணவே! நீயே சத்யம். எனக்கு ஏற்ற உணவான (சரியான) உன்னைச் சுற்றி தண்ணீர் தெளித்து, தெய்வமாக வணங்குகிறேன்) இரவில் "ருதம் தவ சத்யேன பரிஷிஞ்சாமி" என்றும் (அதே அர்த்தம் தான் - ஆனால் வார்த்தைகள் இடம் மாறி இருப்பதைக் கவனிக்க) வணங்குகிறார்கள்.


ஓம் ப்ரணய ஸ்வாஹா (மூச்சுக் காற்றை வணங்குதல் / breath )
ஓம் அபானாய ஸ்வாஹா (மல ஜலங்கள் வெளியேறும் முறையை வணங்குதல் /excretion system )
ஓம் வ்யானாய ஸ்வாஹா (இரத்தவோட்டத்தை வணங்குதல் / circulatory system)
ஓம் உதானாய ஸ்வாஹா (சுவாசத்தை வணங்குதல் / respiratory system)
ஓம் ஸமானாய  ஸ்வாஹா (ஜெரிக்க உதவும் உறுப்புக்களை வணங்குதல் / digestive system)
ஓம் ப்ரஹ்மனே ஸ்வாஹா (காக்கும் கடவுளாக பிரம்மனை வரித்ததால் இந்த உணவு பிரம்மனாகட்டும்)

ஓம் பிரம்மாணி மா ஆத்மா அம்ருதத்வாய (இந்த உணவே இந்த அனைத்தையும் இணைத்து (ப்ராண, அபான, வ்யான, உதான, ஸமான) என் ஆத்மா மற்றும் உடலாகி என்னையும் பிரம்மனாக்கட்டும்)சந்தோக்யோபநிஷத்-தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தத் யத் பக்தான  ப்ரதமமாகச்சேத் தத்தோமீயம்!
ஸ யாம் ப்ரதமாம் ஆஹுதிம் ஜுஹுயாத் ப்ராணாய ஸ்வாஹேதி!
ப்ராணஸ்த்ருப்யாதி !

ப்ராணே த்ருப்யாதி சக்ஷுஸ் த்ருப்யாதி!
சக்ஷுஷி த்ருப்யத்யாத் ஆதித்யஸ் த்ருப்யாதி!
ஆதித்யே த்ருப்யாதி த்யௌஸ் த்ருப்யாதி!
திவி த்ருப்யந்த்யாம் யத் கிஞ்ச தௌஸ்வ ஆதித்யஸ்சாத் அதிதிஷ்டாத:
தத் த்ருப்யாதி!
தஸ்ய அனுத்ருப்திம் த்ருப்யாதி பிரஜா பஷுபீர் அன்னாத்யேன தேஜஸா
ப்ரஹ்மாவரச்சேநேதி !


இதன் பொருள்: உணவை உண்பவன் முதலில் தானம் (மற்றவருக்கு அதாவது மனிதன், மிருகம், பறவைகள் முதலானவை) அளித்து விட்டு உண்கிறான். அப்படி அளிக்கப்பட்ட உணவானது இறைநிலை பெறுகிறது. இதனால் ப்ராணன் திருப்தி அடைகிறது. இந்தத் திருப்தியானது ஹோமம் செய்வதற்கு ஒப்பானதாகும். ப்ராணன் திருப்தி அடைந்ததும் (மற்றவர்கள் திருப்தியாக உண்பதைக் கண்ட) கண்களும் திருப்தி அடைகின்றன. கண்கள் திருப்தியடைந்ததும் சூரியன் திருப்தியடைகிறான். சூரியன் திருப்தியடைந்ததும் ஸ்வர்கங்கள் (ப்ரபஞ்சம்) திருப்தியடைகிறது. எல்லாரும் திருப்தியடைகிறார்கள். பசு (மிருகங்கள்), பக்ஷி (பறவைகள்) ஆகியவையும் மனிதர்கள் போலவே திருப்தியடைகிற காரணத்தால், எங்கும் தேஜஸ் (ஒளி) நிறைந்திருக்கிறது. இதனால் பிரம்ம தேஜஸ் (உயிர் / ஆத்மா ஒளி) எங்கும் பரவி மகிழ்ச்சி நிறைந்திருக்கிறது.இவை எல்லாவற்றிற்கும் மேலே "அம்ருதோபஸ்தரணம் அஸி" என்றும் தண்ணீரை உணவுக்கு ஆடையாக போர்த்தி அம்ருதம் என்றழைக்கிறது வேதம். பூமிக்கும், மிருகங்களுக்கும், பக்ஷிகளுக்கும் இதே நீரை அம்ருதமாக வழங்குமாறும் அறிவுறுத்துகிறது.


(இன்னும் வரும்).


டிராகுலாவின் காதலி

ஒரு ஆங்கிலக் கவிதை போலும்

நா தஸ்ய ப்ரதிமஸ்தி


பதிவர் அ. மு. செய்யது ரொம்ப நாள் முன்னர் என்னுடைய இந்தப் பதிவில் "நா தஸ்ய பிரதிம அஸ்தி" அவனுக்கு எந்தவொரு தோற்றமும் கிடையாது. (யசூர் வேதம் 32:3)" என்றும் ய‌சூர் வேத‌ம் சொல்லியிருக்க‌, ர‌விவ‌ர்மாவால் வ‌ரைய‌ப்ப‌ட்ட‌ ச‌ர‌ஸ்வ‌தி ஓவிய‌த்தை,க‌ட‌வுளாக‌ பாவித்து இந்துக்க‌ள் தொழுவ‌தேன் ??" என்றும் கேட்டிருந்தார்.

அப்போது என்னிடம் எந்தவொரு reference-ம் (ஆதாரங்கள்) இல்லாததாலும், ஏனோ தானோ என்று எதுவும் பேசுவதில் உடன்பாடில்லை என்பதாலும் உடனடியாக எதுவும் சொல்ல முடியவில்லை.

நா தஸ்ய ப்ரதிமஸ்தி என்ற இந்த விவாதத்தை முதலில் எழுப்பியவர் முகமதியராக இருந்தாலும் வேதங்களைப் படித்து அறிந்த, மதிப்புக்குரிய டாக்டர்.ஜாகீர் நாயக் அவர்கள். சமஸ்கிருதத்தின் பதம் பிரிக்கும் முறைகளை அனுமன் போலவே கையாண்ட இவரின் மொழிப் புலமையை வியக்கிறேன். விஞ்ஞானமும் சமஸ்கிருதமும் மட்டும்தான் எடுத்தார் கைப்பிள்ளை. சொல்லும் வண்ணம், பதம் பிரிக்கும் வண்ணம், வளைந்து கொடுத்து நமக்கேற்ற மாதிரி ஒரு அர்த்தம் பலனையும் கொடுக்கும்.

"நா தஸ்ய ப்ரதிமஸ்தி" என்பது ஒரு யஜுர்வேதக் கடலில் இருந்து எடுக்கப்பட்டவொரு சின்னத் துளி.

ஒரு கதையில் ஆசிரியர் "நான் குற்றம் புரிந்த ஒருவன் ஓடுவதைக் கண்டேன்" என்று எழுதி இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதில் "நான் குற்றம் புரிந்த ஒருவன்" என்பது ஒரு பக்கத்திலும் "ஓடுவதைக் கண்டேன்" என்பது மற்றொரு பக்கத்திலும் பதிக்கும்போது பதிந்துவிட்டால், அதைப் படிப்பவர் பிற்பகுதியை படிக்காமல் விட்டுவிட்டால், அதை மாற்றான அர்த்தம் கொள்வதும் புரிந்துகொள்வதும் யார் தவறு?

ஒரு வக்கீல் போல, நமக்குச் சாதகமாக ஒன்றை பேச, ஒரே ஒரு வரி கிடைத்து விட்டால், அதை வைத்துக் கொண்டே கொஞ்ச காலம் வாதாட முடியும். புகழடைய முடியும். ஆனால் அதுதான் சரி என்று முடிவெடுக்க முடியாது. உண்மையை மறைப்பதும் பொய்யா இல்லையா? ஒரு திறமையான வக்கீலால் எந்தவொரு சின்ன வார்த்தையைக் கையில் எடுத்து யாருக்கு வேண்டுமானாலும் எதிரான ஆயுதமாக ஆக்க முடியும். இதையெல்லாம் யார் போய் ஆராய்ந்து கொண்டிருக்கப் போகிறார்கள் என்ற அலட்சியப் போக்கு. மேலும் நம் மக்கள் விரைவிலேயே எதையும் மறந்துவிட்டு அடுத்த பிரச்சினையை கவனிக்கப் போய் விடும் ஆற்றலும்தான் இந்த மாதிரியான பொறுப்பற்ற கருத்துப் பகிர்தல்களுக்கு அடித்தளமாக ஆகி விடுகிறது. இதைப் பற்றி விமர்சிக்கவோ விவாதிக்கவோ போவதில்லை இங்கு.

விரைவில் யஜுர்வேதத்தின் முழுமையானத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பெயர்பை பி.டி.எஃப்-ஆக வெளியிடுகிறேன். இதை முழுதாகப் படிக்கும் பொறுமையிருந்தால் நா தஸ்ய ப்ரதிமஸ்தி என்பதன் விரிவான அர்த்தம் புரியும். ஒரு வரியிலோ, ஒரு பதிவிலோ அடக்க முடியாத பெருங்கடல் அது.

எனக்கு புரிந்ததை மட்டும் சொல்கிறேன்.

ரவி வர்மாவால் வரையப்பட்ட சரஸ்வதி ஒரு தென்னிந்தியப் பெண்ணை மாடலாக வைத்து வரையப்பட்டது. ரவி வர்மாவின் படங்கள் பெரும்பாலும் உயிருடன் இருக்கும் பெண்டிரை வைத்துதான் வரையப்பட்டன. இவரால் வரையப்பட்ட படங்கள் இன்றும் பூஜையறையில் வைத்து வணங்கப்படுகின்றன என்றால் அவரது கலைக்கும் திறமைக்கும் கிடைத்த அங்கீகாரம் அது. மாடலாக இருந்த பெண்டிர்களுக்கும் அழியாத இறைநிலையை அளித்த அவரது ஓவியங்களை என்னவென்று சொல்வது. இன்றும் கூட இந்திய கலைப் பொருட்கள் விற்பனையில் தஞ்சாவூர் ஓவியங்களுக்கு அடுத்து ரவிவர்மாவின் ஓவியங்கள்தான் உலகெங்கும் அதிக விலையில் விற்கப்படுகின்றன.

நான் இன்றும் வியந்து இரசிக்கும் படங்களில் சில. இந்தப் படங்களில் தெறிக்கும் உணர்வுகளைப் பாருங்கள். எவ்வளவு அழகான ஓவியங்கள்.


இவள் கங்கை.


அர்ஜுனனும் சுபத்திரையும்


தாதிப் பெண்

இறைவன் மனிதனின் நேர்மறையான நம்பிக்கை என்றே வேதங்கள் கூறுகிறது. நம் நம்பிக்கையின் ரூபமாக அல்லாவாக, ஏசுவாக, கிருஷ்ணனாக அல்லது சரஸ்வதி, இல்லை வேறு எந்தக் கடவுள் என்றாலும் அவர்களை நாம் இறைவனின் பிரதிநிதியாக அல்லது messenger ஆகவே வரித்துள்ளோம் என்பதை ஏறத்தாழ எல்லாருமே ஒப்புக் கொண்டிருக்கிறோம். இந்த இறைத்தூதர்கள் கொண்டு வந்த செய்தி "மனிதத்துவம்" மற்றும் "அன்பு".

ஒருவர் தன் நம்பிக்கைக்குப் பெயர் சூட்டுவது சரியென்றால் அதே நம்பிக்கைக்கு இன்னொருவர் தனக்கு பிடித்த உருவமும் கொடுத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? போகும் பாதை எதுவென்றாலும் இருவரின் இலக்கு "மனிதத்துவம்" மற்றும் "அன்பு" என்ற செய்தியை மற்றவருக்கும் கொடுப்பது மட்டும்தானே?

இலக்கை விட்டு, பாதையிலேயே உழன்று கொண்டிருந்தால், இலக்கை என்று சென்றடைவது? அவரவர் தனக்குக் கிடைத்த பாதையில் சென்றாலே போதுமே. டிராபிக் ஜாம் எதுவும் இல்லாமல் சுலபமாக இலக்கை அடைந்து  விடலாமே. வடையை சாப்பிடாமல் அதில் உள்ள துளைகளை எண்ணிக்கொண்டிருந்தால், வடையை யார் சாப்பிடுவது?

அவர்கள் கொண்டு வந்த செய்தியைத் தொலைத்து விட்டு தூதர்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் எந்த மதத்தினரும் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவராக இல்லை. எல்லோருக்குமே அவரவர் நம்பிக்கை மதிப்புக்குரியதாகவும் இருக்கிறது. அவற்றை சக மனிதர்களின் நம்பிக்கையை விட உசத்தியாக காண்பிப்பதையும் முக்கியமாக நினைக்கிறார்கள். என் நம்பிக்கை சிறந்தது என்று நினைப்பதில் தவறே கிடையாது. அதற்காக அடுத்தவர் நம்பிக்கையை பொய் என்று சொல்வதும், தம் நம்பிக்கையை அடுத்தவர் மீது திணிப்பதும், நிச்சயம் திணிக்கப்பட்ட நம்பிக்கையின் வாழ்நாளைக் குறைக்கும். நம்பிக்கையின் ஆதாரமே, 'அட, இதை நம்பலாம் போலருக்கே' என்று நினைக்கும் சுதந்திரம்தான்.

என் முந்தைய பதிவில் சொன்ன மாதிரியே, என் பதின் பருவங்களில் நான் அலட்சியம் செய்த சிலவற்றை, அதன் பின்னணியில் இருக்கும் காரண காரியங்கள் தெரிந்ததும் ஆச்சரியம் அடைந்து, அவற்றையே நானும் நம்ப ஆரம்பித்தேன். இந்தக் கருத்துக்கள் என் மீது திணிக்கவோ, கட்டாயப்படுத்தவோ முயற்சிக்காமல் என் தேடலுக்கும், வாசிப்புக்கும் துணை நின்ற என் தந்தையை நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். நான் ஒவ்வொரு விஷயத்தையும் ஏன், எதற்கு என்று கேட்டுத் தெரிந்து கொள்ளும் போது என் தந்தை மகிழ்ச்சியோடு ஒவ்வொன்றையும் விளக்குவார்.

எனக்குச் சொல்லப்பட்ட ஒவ்வொரு விஷயங்களிலும் என் தனிப்பட்ட நலன் மட்டுமின்றி என் குடும்பத்தின் நலனும் அடங்கியே இருந்தன. காரணங்கள் தெரிய ஆரம்பித்ததும், நாளடைவில் எந்தக் கேள்வியும் கேட்காமல் அவர்கள் சொன்னதை செய்து விட்டு, பின்னர் அதற்கான பலன் கிடைத்ததும் அதற்கான அர்த்தங்களை உணரவும் ஆரம்பித்தேன். இன்று அவர்கள் நம்பிக்கையை நான் புறந்தள்ளாமலும், என் மகளுக்கு எடுத்துச் சொல்லும் போது என் தந்தை கையாண்ட முறையையே பின்பற்றுகிறேன்.

சரி சொந்தக்கதைகளை விட்டு விஷயத்துக்கு வரலாம்.

என் தாயை நான் தெய்வம் என்று நினைத்தால் என் தாய்க்கும், ஒரு நடிகையை அதே போல நினைத்தால் அவருக்கும் கூட, எனக்கு இட வசதியும், அளவுக்கு மீறிய பணமும், வேறு முக்கியப் பொறுப்புக்களோ எதுவும் இல்லாமலும் இருந்தால் கோவில் கட்டி சிலையும் வைக்க எனக்கு தனி மனித சுதந்திரம் இருக்கிறது, இல்லையா?

நமக்கு பிடித்திருந்தால் அங்கு போய் வணங்கலாம். பிடிக்காவிட்டால் ஒன்று போகாமல் இருக்கலாம், இல்லை, அங்கு போய் இருக்கு சிற்பங்களின் கலையழகை இரசித்து விட்டு மட்டும் வரலாம். சில வைஷ்ணவக் கோவில்களில் கிடைக்கும் பிரசாதங்கள் சாப்பிடவும் கூட ரொம்ப பிரமாதமாக இருக்கும். :))

இந்துக்கள் இறைவனும் இறைவியுமாக பல உருவங்களில் ஏன் கொண்டாடுகிறார்கள்?

யோகா பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஆனால், யோக நிலையின் பல்வேறு நிலைகளில் ஒன்றானது குண்டலினி யோகா. இந்த யோக நிலையின் உச்சத்தை அடையும் போது, யோகிக்கு பல்வேறு உணர்வுகளின் காட்சிகள் தெரிகின்றன. இவற்றை வெறுமே வாயால் விரித்துச் சொன்னால் புரிபடுவது சிரமம் என்பதால், அதை உருவகப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கான படங்கள் என்னிடம் கிடைக்கவில்லை. இல்லையென்றால் இந்த சிறு விளக்கத்தோடே இந்த பதில் முடிந்திருக்கும்.

பகவத் கீதையில் (7:21) "எந்த வடிவத்தில் என்னை வணங்கினாலும் அதே ஆகிறேன்" என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

குளியல் சோப்பு இருக்கிறது. அதைப் பயன்படுத்துவதின் நோக்கம் உடல் சுத்தமாக வேண்டும் என்பதுதான். அதில் ஏன் இவ்வளவு வகைகள் இன்று சந்தையில் இருக்கிறது? ஒன்றில் moisturiser அதிகம் இருக்கு என்றும், இன்னொன்றில் pH குறைந்து இருக்கு என்றும், வாசனை சோப் என்றும், சினிமா நட்சத்திரம் உபயோகிக்கும் சோப் என்றும் பலவிதமாக சந்தைப் படுத்துவது ஏன்? ஒரே வீட்டில் எல்லோரும் இருந்தாலும், ஆளுக்கொரு சோப் வைத்துக் கொள்கிறோமே அது ஏன்? அடிப்படை சுகாதாரம் மற்றும் உடல் அழுக்கை நீக்கும் என்பதற்காக இருக்கும் சோப்பிலேயே இவ்வளவு வகைகள்.

தாய் பிள்ளை என்றாலும் தனித்தனி விருப்பு வெறுப்புக்கள் கொண்ட மனித மனத்துக்குள் நம்பிக்கைகள் எத்தனை விதங்கள்! அவற்றிற்கு எத்தனை உருவங்கள் கொடுத்திருக்கலாம். மனிதன் கடந்து வந்த பாதைகளில் இருப்பதையெல்லாம் மரியாதையோடும் பக்தியோடும் புனிதமான ஒன்றாகவே பார்த்து வந்திருக்கிறான்.

வாழ்வா சாவா என்ற இக்கட்டான ஒரு நிலையில் இருக்கும் ஒருவருக்கு, மற்றவரது தகுந்த நேரத்தில் செய்த உதவி, சின்னதே என்றாலும், உதவி பெற்றவனின் மனம், உதவி செய்தவரை தெய்வமாக்கி விடுகிறது. அல்லது அதற்குச் சமமான உயரிடத்தை அவர் இதயத்தில் பெற்று விடுகிறார். இல்லையா?

எல்லோருக்குமே ஒரே மாதிரிதான் இயற்கை மழையாகவும் வெயிலாகவும், காற்றாகவும் இருக்கிறது. மரங்கள் காய்கனிகளைத் தருகின்றன. நதிகளும் கடலும் நீர் தருகின்றன. இவற்றை எல்லாமே தெய்வங்களாக்கிப் பார்க்கிறது இந்துத்துவம். தான் நம்பியதை அடுத்தடுத்த வம்சங்களுக்கும் pass செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஒரு கோவிலும் ஒரு உருவமும் கொடுத்து, பரம்பரையாக கொண்டாடிய குலதெய்வ பழக்கங்கள் உண்டாகின. இதனால் கோவில்களும், உருவங்களும் பெருகின.

இந்துத்துவத்தில் இருக்கும் கருத்து சுதந்திரம் எனக்கு பிடித்தமானது. யாரையும் விமர்சிக்காமல், புண்படுத்தாமல், கட்டுப்படுத்தாமல், ஒரு பண்பான ஆசிரியர் போல, இது நல்லது, உனக்கு உடன்பாடென்றால் பின்பற்று என்றும், ஒருவேளை பின்பற்றினால் விதிமுறைகளின் படி பின்பற்றினால் நல்லதென்றும், விதிமுறைகளை மீறுவதால் உண்டாகும் விளைவுகளையும் மட்டும் வேதங்கள் சொல்லியிருக்கிறது. பின்பற்றவில்லையென்றால் உனக்கு கேடு விளையும் என்று வேதங்களில் எங்கும் சொல்லப்படவில்லை.

பதினெட்டு கையுடைய துர்கை அத்தனை ஆயுதங்களின் பிரயோகத்திலும் தேர்ச்சி பெற்றவர் என்பதையே குறிக்கிறது. உருவகப்படுத்தும் போது, ஒருவருக்கு இத்தனையும் தெரியும் என்பதை எப்படிக் காட்டுவது? அதனால் பதினெட்டு கைகள் கொடுத்திருக்கலாம்.

வீணை வாசிக்கப்படுவது போன்ற உருவமும் (சரஸ்வதி), ஐந்து தலை நாகத்தில் மனிதன் படுத்திருப்பது போன்ற உருவமும் (விஷ்ணு) குண்டலினி யோகத்தின் உருவகங்களே. யோக சாஸ்திரங்களின் சுலோகங்களைப் படிக்கும் போது, அதில் அந்தந்த யோகத்தின் உச்சநிலையை விவரித்தபடி படமாக வரைந்தால், நிச்சயம் இந்துக் கடவுள்களின் உருவங்களை ஒத்த ஒரு காட்சி விரியக்கூடும்.

இது என் கருத்து மட்டும்தான். இதில் நிறைய பேருக்கு உடன்பாடு இல்லாமலும் இருக்கலாம். யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்க.

இன்னும் சிறிது தேடினால் இதற்கான படங்களும் ஆதாரங்களும் நிச்சயம் எங்கோ இருக்கலாம். தேடுவேன் :)

இந்தத் தேடலில் நான் அறிந்த சில விஷயங்கள். உங்களுடன் பகிர்தல்.

கிருஸ்துவ சமூகத்தில் ஏசுபிரான் மற்றும் பைபிள் ஒன்றுதான். ஆனால், லத்தின் கதோலிக், சிரியன் கதோலிக் சர்ச்சுக்குள் போகமாட்டாராம். இவர்கள் இருவருமே பெண்டேகோஸ்ட் சர்ச்-க்கு போகமாட்டாராம்.இவர்கள் மூவரும் மர்தொமா சர்ச்-க்கு போகமாட்டாராம்.மர்தொமா மற்றவர்களது சர்ச்-க்கு போகமாட்டார்.இந்த நால்வருமே சால்வேஷன் ஆர்மி சர்ச்-க்கு போகமாட்டார்கள்.இந்த ஐந்து பேருமே செவன்த் டே அட்வெண்டிஸ்ட் சர்ச்-க்குப் போக மாட்டார்கள்.மேற்சொன்ன ஆறு குழுவினரும் ஆர்தொடாக்ஸ் சர்ச்-க்குப் போக மாட்டார்கள்.இந்த ஏழு பேருமே ஜகோபைத் சர்ச்-க்கு போக மாட்டார்கள்.கேரளாவில் மட்டும் 146 விதமான கிருஸ்துவப் பிரிவினர்கள் இருக்கிறார்கள்.இதில் எந்தப் பிரிவினருமே மற்ற சர்ச்சுகள் போவதில்லை அல்லது தமக்கு வரும் நன்கொடைகளைப் பகிர்வதில்லை.

இங்கு இப்படி இருக்க, முஸ்லிம்களில் அல்லா, குரான், நபிகள் எல்லாம் ஒன்றுதான் என்கிறார்கள். ஆனால்,ஷியா மற்றும் சுன்னி முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.ஷியாக்கள் சுன்னி முஸ்லிம்கள் மசூதிகளுக்குப் போக மாட்டார்கள். அகமதிய மசூதிகளுக்கு இவர்கள் இருவருமே போக மாட்டார்கள். சுஃபி மசூதிக்கு இந்த மூவரும் போக மாட்டார்கள்.முஜாஹித்தின் மசூதிகளுக்கு இவர்கள் யாருமே போகமாட்டார்கள். 13 ஜாதிப் பிரிவுகளைக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரே புனித நூலை அடிப்படையாக கொண்டு, இறை நம்பிக்கை வளர்க்கும்  மனிதர்களிடமே இத்தனை வித்தியாசங்கள்.

1,280 புனித நூல்கள், 12,000 விளக்கங்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட உபவிளக்கங்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், பலதரப்பட்ட மடங்கள், ஆசாரியர்கள், ரிஷிகள், நூற்றுக்கணக்கான மொழிகள் என்று இருக்கிறது கூட இந்து மதத்தில் இருக்கும் சுதந்திரம் காரணமாகத்தான். ஆனாலும் ஹிந்துக்கள் அனைவரும் எல்லாக் கோவில்களுக்கும் அவரவர் விருப்பம் போல போகிறார்கள்.

சிலை/உருவ வழிபாடு முறையை ஹிந்துக்கள் மட்டும்தான் பின்பற்றுகிறார்கள் என்று இல்லை.  முஸ்லிம்கள் மெக்காவைக் குறித்த ஒரு காபாவையும், கிருஸ்தவர்கள் சிலுவையையும் ஒரு உருவம்/idol ஆக வரித்துக் கொண்டுதான் தத்தம் தொழுகைகைகளையும், பிரார்த்தனைகளையும் செய்கிறார்கள். படங்களும், ஓவியங்களும், சிலைகளும் இதைப் போன்ற தனிநபர் மன உருவங்களின் வெளிப்பாடுதான்.

பழுத்துப் போன ஆன்மீகவாதிகளுக்கு இறைவனைக் காண மீடியம்(medium) ஏதும் தேவைப்படுவதில்லை. ஆனால் என்னைப் போன்ற ஆரம்ப நிலை கத்துக்குட்டிகளுக்கு இதுதான் இறைவன் என்று சொல்லித்தான் தலை வணங்கவே கற்றுக் கொடுத்தார் என் தந்தை. பூஜையறையையும், கோவில்களையும் கடக்கும் போதெல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்வதும், ஒரு ஆம்புலன்ஸ் அலறிக்கொண்டே போனால் கூட "கடவுளே அவர்களோடு இரு" என்று வேண்டிக் கொள்வதும் கூட, என் தந்தையார் எனக்குள் இறைவனாக வரித்த உருவங்கள் இருப்பதால் மட்டுமே. இல்லையென்றால் என் தலை வானை நோக்கியே பார்த்துக்கொண்டு, கர்வம் தலைக்கேறி, அடுத்தவர் உணர்வுகளை குனிந்தும் பார்க்காமல், அஹங்கார குழிக்குள் என்றோ விழுந்திருப்பேன்.

மனதிற்குள் மட்டும் உருவமே இல்லாத இறைவைனைக் காணும் அளவுக்கு நமக்கு பக்குவம் வந்து விட்டிருந்தால், நாம் இங்கு blog எழுதிக் கொண்டு, சாயந்திரம் சப்பாத்திக்கு தாலா இல்லை, உருளைக் கிழங்கு குருமாவா என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்க மாட்டேன். அடுத்த மாதம் வரும் அரியர்ஸ் பற்றியும், Activa மற்றும் Wagon-R சர்வீஸ் நாட்களையும் எண்ணிக் கொண்டு டைரியில் குறித்துக் கொண்டிருக்க மாட்டோம்.

முக்கியமாக டூம்ஸ் டே இவ்வளோ சீக்கிரம் வந்து விட்டதே. என் பெண் கல்யாணத்தை பாக்காமலே போயிடுவேனோ என்றெல்லாம் கவலைப்படமாட்டேன்.:))

அழுத்தப்பட்டப் பந்து எப்படி நீரிலிருந்து வெளியேறி விழுந்து விடுமோ, கட்டுப்படுத்தி திணிக்கப்பட்ட கருத்துக்களும், கட்டுப்படுத்துபவன் இருக்கும் வரை இருப்பது போலத் தெரிந்தாலும், காலப்போக்கில் மறைந்து விடும். நம் சமயங்கள் உணர்த்துவது அன்பு மட்டும்தான். நம் வீடுகள் தனித்தனியென்றாலும், பயணிக்கும் பாதைகள் வெவ்வேறேன்றாலும், நம் இலக்கு ஒன்றுதான். இலக்கையே குறித்திருப்போம். நம் நம்பிக்கையை மதிப்பது போலவே மற்றவர் நம்பிக்கையையும் மதிப்போம். இல்லை, குறைந்த பட்சம் விமர்சிக்காமலாவது இருக்கலாமே. :)

ஒரு நாட்டின் கொடி என்பது துணியில் வரையப்பட்ட ஓவியம்தான். ஆனால் தன் நாட்டுக் கொடியை காக்க இராணுவ வீரர்கள் உயிரைக் கூடத் தியாகம் செய்கிறார்கள். துணியில் வரையப்பட்ட கொடியின் உருவம் அவருக்கு அவ்வளவு மதிப்பு மிக்கதாக ஆகி விடுகிறது, இல்லையா?

சாதாரண வெள்ளைத் தாள் எந்த மதிப்பும் இல்லாதது. ஆனால் அதன் மேல் அரசாங்கத்தின் முத்திரை இட்டிருந்தால், அதை வைத்து கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் அளவுக்கு மதிப்பு மிக்கதாகி விடுகிறதே?

மின்சாரம் உருவமற்றது. ஆனால் மின் விசிறியோ அல்லது ஏ.சியோ இருந்தால்தான் நம்மால் காற்றைப் பெற முடிகிறது இல்லையா? இரவில் ஒரு ட்யூப் லைட் இருந்தால் தான் ஒளி பெற முடிகிறது. இல்லை அந்த ஆற்றலை ஒரு பாட்டரி மூலம் பெறுகிறோம் இல்லையா?

அதே போலத்தான், ஆற்றலை, ஒருவர் பஜாஜ் ஃபேன் ஆகவும், இன்னொருத்தர் கெய்தான் ஃபேன் ஆகவும், வேறொருவர் ஹவெல்ஸ் ஃபேன் ஆகவும் அவரவர் வீட்டுக் கூடத்தில் பொருத்திக் கொண்டு காற்றை வாங்கி கொண்டிருக்கிறார்கள்.

ஒரு அற்புதமான வாசிப்பு அனுபவத்திற்குத் தூண்டிய அ.மு.செய்யதுக்கு நன்றிகள் பல.

யாரையும் புண்படுத்தும் நோக்கமோ, விமர்சிக்கும் எண்ணத்துடனோ எழுதவில்லை. இதில் உள்ளவை என் கருத்துக்கள் மட்டுமே.

யாரையும் காயப்படுத்தாதீர்கள் தாழ்மையான கோரிக்கையோடு ஆரோக்கியமான விவாதத்திற்கு வைக்கிறேன்.

நன்றி.


.

ஊஞ்சல் - 16 Nov 09

========================================================================================== 
ஊஞ்சல்:
==============================================================================================
நம் உடலிலிருந்து வெளியேறும் எண்பது சதவிகித நச்சுக்கள் நம் மூச்சுக்காற்றின் மூலம் வெளியேறுகின்றது. மேலும் ஆழ்ந்த மூச்சிழுத்தல் (Inhalation) மூலம் இரத்த ஓட்டம் சீராகி மனமும் உடலும் அமைதி பெறுகின்றது. 

இந்துக்களில் ஒரு பிரிவினர் தன் தினசரி வழக்கமாக மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்வது என்று வைத்திருக்கிறார்கள். ஆழ்ந்து கவனிக்கும் போது சந்தியாவந்தனப் பயிற்சிகளில், சூரிய வெளிச்சத்தை உள்வாங்குவதும், மூச்சுப் பயிற்சியும் உள்ளடங்கி இருக்கின்றன. 

கடந்த இரண்டு மாதங்கள், நிறைய பிரயாணங்கள் மற்றும் ஓயாத சொந்த மற்றும் புற வேலைகள் ஒய்வு என்பதையே இல்லாமல் செய்து தினமும் உறங்கும் நேரமே ஒன்றிரண்டு மணிநேரம் மட்டும் என்றாகி, பதினைந்து நாட்களுக்கு முன் தீராத தலை வலி மற்றும் கழுத்து வலி உண்டாகி துன்புற்றேன். அதன் விளைவாக நான்காவது முறையாக இப்பயிற்சி வகுப்புக்களுக்குப் போனேன்.

புல்லாங்குழல் ஊதுவது போன்ற இசையான ஒலியோடு மூச்சை உள்ளிழுத்தும், கடல் அலை போன்ற ஒலியோடு மூச்சை வெளி விட்டும் காட்டினார் குருஜி (கணேஷ்).

ஒவ்வொரு முறை வகுப்புக்களுக்குப் போகும்போதும் குருஜி "தினமும் உனக்கென ஒரு மணி நேரம் ஒதுக்கக் கூடாதா?" என்று கேட்பார். 

வழக்கம் போல புன்னைகைத்து "இப்போதெல்லாம் blog எழுதறேன் குருஜி" என்று சொல்லினேன். 

"அதான்" என்றார் சிரித்தார் குருஜி.

நான் என்னவோ "blogging எனக்கு ஒரு மாற்று சிந்தனை மாதிரி குருஜி" என்றே இன்னும் புன்னகைத்துக் கொண்டே சொல்லிவிட்டு வந்தேன்.

வாழும் கலை பயிற்சியில் பல நுணுக்கமான மூச்சு பயிற்சிகள் சுலபமாகப் பின்பற்றும் வகையில் கற்றுகொடுக்கப்படுகின்றது. கஷ்டமான உடற்பயிற்சியை aerobics என்ற வகையில் சுலபமாகினது போல. உங்கள் ஊரில் அருகாமையில் உள்ள வாழும் கலை மையத்திற்குச் சென்று முடிந்தால் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறுங்கள்.

"தினோம்தான் மூச்சு விடறோம். இதுக்குப் போயி பாடம் சொல்லிக்கணுமா?" என்று கேட்பவர்கள் கொஞ்சம் மாத்தி யோசிங்க. குருஜிக்களின் கதைகளையும் உரையாடல்களையும் கொஞ்சம் பின்னே தள்ளி விட்டு, பயிற்சி முறைகளை மட்டும் கவனியுங்கள். ஒரே ஒரு முறை சும்ம்ம்ம்ம்மா முயற்சித்துப் பாருங்களேன்.  காற்றின் மொழி இசைபோல இதமாக இருக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை உணர்ந்து அனுபவித்தேன். பின்ன...சும்ம்ம்மாவா?

சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்  
வகைதெரி வான்கட்டே உலகு (27)
ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.

=============================================================================================
மழை:
============================================================================================== 
நண்பர் நேசமித்திரன் அனுப்பிய மின்னஞ்சல் தகவல். மீண்டும் ஒரு அற்புதமான சேவையைத் தருகிறது டாட்டா நிறுவனம். எத்தனையோ குறை நிறைகள் இருந்தாலும், ethics and morale விஷயங்களில் டாட்டா நிறுவனங்களில் உள்ள கட்டுப்பாடு வேறெங்கும் நான் கண்டதில்லை. சரி. விஷயத்துக்கு வருவோம்.

இதய நோய் உள்ள குழந்தைகளின் சிகிச்சைக்கு ஆகும் செலவுகள் அவர்கள் பெற்றோர்களை திக்கித்து விடச் செய்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓர் தொண்டு அமைப்பு இந்தச் சிகிச்சைகளை இலவசமாகவே செய்கிறது.

உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும், மற்ற எல்லோருக்கும் இத்தகவலைப் பரப்புங்களேன்.


ஈ.பி.ஐ.பி ஏரியா, வைட் ஃபீல்டு, பெங்களூர் - 560066 கர்நாடகா, இந்தியா.
போன்: +91-80-28411500, ஃபாக்ஸ்: +91-80-28411508
மின்னஞ்சல்: adminblr@sssihms.org.in

E.P.I.P. Area, Whitefield, Bangalore - 560066 Karnataka, India
Phone: +91-80-28411500, Fax: +91-80-28411508
Email: adminblr@sssihms.org.in

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். 19

மழை பெய்யவில்லையானால் இந்தப் பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லை
=============================================================================================
பக்கோடா: 
==============================================================================================
இதுவும் ஒரு மின்னஞ்சல்தான்.

உங்கள் கார் கண்ணாடிகளில் முட்டை எறியப்பட்டால், Wiper அல்லது Wind Shield Washer (தண்ணீரை spray செய்வது) போன்றவற்றை இயக்கவேண்டாம். இதனால் முட்டை கலக்கப்பட்டு, வெண்ணிறமாக உங்கள் கார் கண்ணாடியில் பால் போல படிந்துவிடும். பார்வையையும் மறைக்கும். இதனால் வேறு வழியின்றி நீங்கள் காரை ஓரமாக ஒதுக்க வேண்டி வரும். வழிப்பறி கொள்ளைக்காரர்கள் இப்போது (இந்தியாவில் இன்னும் ஆரம்பிக்கவில்லை) இது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு உங்களை சிக்க வைக்கிறார்களாம்.  மாறாக முட்டையை உடனே துடைக்காமல் கொஞ்ச தூரம் ஓட்டிச் சென்று விட்டு நிதானித்துத் துடையுங்கள். ஜாக்கிரதை நண்பர்களே.

எப்படியெல்லாம் பீதியக் கிளப்புறாங்கப்பா!
  
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும். (284)


அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

==============================================================================================
தேநீர்:
==============================================================================================
தொலைதூரக்கல்வி மாணவர்கள் கூடுதலாக பட்டயபடிப்பில் சேர்ந்தால் அவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும் என்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் பல்கலைக்கழக மானியக்கழு மற்றும் தொலைநிலைக்கல்வி குழுமம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி பட்டப்படிப்புகளுக்கான பாடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன் ஒரே குறிக்கோள் தொலைதூரக்கல்வி பாடங்களும் நேரடி வகுப்பு பாடங்களும் சரிசமமாக இருக்க வேண்டும் என்பதுதான். மாணவர்கள் தங்களது விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துப்  பாடத்திட்டங்களும் தரமாகவும் சுலபமாகவும் புரியும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. நேரடிப் பயிற்சி வகுப்புகள் பல புதிய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இப்பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பாடங்கள் பட்ட மேற்படிப்பு, பட்ட படிப்பு, பட்டய மேற்படிப்பு, பட்டய படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளை உள்ளடக்கியதாகும்.
தொலைதூரக்கல்வி மூலம் இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் மேலும் ஒரு பட்டயம் அல்லது முதுநிலை பட்டயம் அல்லது சான்றிதழ் படிப்பினை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும்போது அவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

இப்பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் தற்போது தொலைதூரக்கல்வி மூலம்பட்டயம் அல்லது முதுநிலை பட்டயம் படிக்க விரும்பினால் அவர்களுக்கு 50 சதவீத கல்வி கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

(நன்றி தினத்தந்தி - 15.11.2009)

தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். (399)
                       

தாம் இன்பம் அடைவதாகிய கல்வியினாலே உலகத்தாரும் இன்பம் அடைவதைக் கண்டு, கற்றறிந்தவர், மேன்மேலும் தாம் கற்பதையே விரும்புவார்கள்.

==============================================================================================
நிச்சயம் வோட்டுப் போடுங்க. இந்த தமிழ்மணத்தில் இணையவே முடியலையே...:(
==============================================================================================

.

வாழும் கலை - லீவு விட்டாச்சு

வாழும் கலை வகுப்புக்கள் இருப்பதால் திங்கள் வரை வரமுடியாது. கடையும் கிடையாது. என்ஜாய் மக்களே. மீண்டும் திங்கள் அன்று வந்து விடுவேன் - ஜாக்க்க்கிரதை... :)


வந்ததும்:

1. சிலை வழிபாடு ஏன் (அ.மு.செய்யது)
2. மாயாவதியும் நந்திகிராமும் (சஞ்சய் காந்தி)
3. திருக்குறள் கதைகள் (புதுகைத் தென்றல்)
4. ஆண் பெண் சமத்துவம் (அனலிஸ்ட்)
5. உலகமே அழிந்து விட்டு நாம் மட்டும் தனியாக இருந்தால் என்ன செய்வது. இந்தப் பதிவின் தொடர்ச்சியாக.


-விதூஷ்.

பத்து போட்டுக்கலாமா

ஜாக்கிரதை.. மழை பெய்கிறது - சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009

முட்டாள் தாத்தாவும் மூடப் பாட்டியும்

வாயில் பல்லெல்லாம் போன பிறகும் ஓயாமல் தஸ்-புஸ்ஸென்றும்... பக்..பக்கென்றும் எனக்கு தலை சுற்றி, பித்தம் தலைக்கேறி, வாந்தி வரும் அளவுக்கு பேசியே கொல்லும் தாத்தாவிடமிருந்து பதுங்கி ஒளிந்தோடிய போது வராத உணர்வு,

"காலாட்டாதேடி. உறவு பிரிஞ்சிரும்" என்று பாட்டி சொல்லும் போது  "பேசிப் பேசி சும்மா தொளைக்காத பாட்டி" என்று சள்ளென்று விழுந்து போன போதும் ஏற்படாத உணர்வு,

"மை பொட்டு வச்சுகாதேடி, மாமனுக்கு ஆகாது" என்று வைய்யும் (திட்டும்) அத்தையிடம் "சரி சரி. போரும்" என்ற என் அகம்பாவம் தலைவிரித்து ஆடிய போது ஏற்படாத உணர்வு,

அம்மா "ஈரத் தலைய வாராத. சனியன் பிடிக்கும்" என்ற போது, "போம்மா. சும்மா அறுக்காத" என்ற என் திமிர் பேசியபோதும் ஏற்படாத இந்த உணர்வு,

காலையின் அலுவலக அவசரத்தில் நான் ஓடிக்கொண்டிருக்க, என் மாமியார் ஒவ்வொரு கீரையாக அரைக்கீரையைத் தட்டித் தட்டி ஆய்ந்து வைக்கும் போது "இவ்வளோ மெள்ளமா செஞ்சா லேட்டாயிடும். நைட் செஞ்சுக்கலாம்" என்ற போது "ஏன்? இருக்குற தரித்திரம் போதாதா? ராத்திரி கீரை செஞ்சு வேற கொண்டு வரணுமா?" என்ற போது அதில் இருந்த உள்குத்தான சொல்லம்பு மட்டும் புலப்பட்டு, உள்ளுக்குள் குமைந்த போது ஏற்படாத இந்த உணர்வு,

"அப்படிச் செய்யாதேடி மகாலக்ஷ்மி போயிடுவா" என்றெல்லாம்  மிரட்டிக் கொண்டே அவர்கள் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் இன்னும் நிறையா தெரிஞ்சு கொண்டிருக்கலாமே என்ற உணர்வு வந்தன்று எங்கள் தாத்தா-பாட்டியின் பதினைந்தாவது நினைவு நாள்.

வரிசையாக ஏதேதோ பல அறிவியல் மற்றும் விஞ்ஞான புத்தக வாசிப்பின் போது, அவர்கள் கூறிய வசனங்களும் அறிவுரைகளும் தானாகவே "repeat telecast" ஆகி சுய ஒப்பீடு  செய்துகொண்டு, என்னைப் பார்த்து கெக்கலித்த அந்த வினாடி

என் புத்தியை மூடியிருந்த "எனக்கெல்லாம் தெரியும். நீ சும்மாயிரு பாட்டி" என்று அறைகூவிய கர்வத்திரை விலகி, "இந்த அம்மாவே இப்படித்தான்" என்ற ஆங்காரம் அழிந்து, "ம்ச்.. அறுவை" என்ற அலட்சியம் தொலைந்து, "இதுக்கு இருக்கும் திமிரப்பாரு" என்ற வெஞ்சினம் ஒழிந்து, "எனக்குத்தான் புரியவில்லை போலருக்கு" என்ற வெட்கம் தோன்றி அவர்களின் வார்த்தைகளை மனதும் என் கையேடும் குறிக்க ஆரம்பித்து, அதைப் பற்றிய தேடலும் துவங்கியது. இன்னும் கற்றது கைமண்ணின் துகள் அளவில் கூட இல்லை என்பதும் புலப்பட்டது.

நம் மூத்தோர்கள் சொன்னதெல்லாம் மூட நம்பிக்கைகளா? அதன் பின்னணியில் அப்படி என்னதான் காரணம் இருந்திருக்கும்? அதையெல்லாம் போய் ஏன் மகாலக்ஷ்மியுடனும், மாமனுடனும், மூடத்தனமாக இணைத்தார்கள்? இன்னும் நம்மில் சிலர் அதையே பின்பற்றுவதுடன், நம் குழந்தைகளுக்கும் சொல்ல விழைவதேன்?

புரியவில்லையே? சந்தன முல்லையின் இந்தப் பதிவையும் பாருங்கள்.

சில நம்பிக்கைகள் தற்போதைய சூழ்நிலைக்கு ஒத்து வராது என்பதால் அவற்றை ஒதுக்கலாமே தவிர, தற்போதைய விஞ்ஞான வளர்ச்சிகள் இல்லாத முன்பிருந்த சூழலுக்குப் பொருத்தமாயிருப்பதால் அவற்றை மூடநம்பிக்கை என்று தள்ள முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.

இப்போது உடனடியாக நினைவிலிருக்கும் ஒன்றிரண்டு நம்பிக்கைகளில் மூடத்தனம் ஏதும் இல்லை என்பதைக் குறிக்கிறேன்.

1. இடக்கண் துடித்தால் நல்லதா கெட்டதா?

பொதுவாகவே இந்தியாவில் இடக்கண் துடித்தால் நல்லதென்றும் வலதுகண் துடித்தால் அபசகுனம் என்றும் கூறுவார்கள். இதே போலவே சீனா, ஹவாய், ஆப்ரிக்கா போன்ற இடங்களிலும் இதே போன்ற நம்பிக்கை நிலவுகிறது.

மருத்துவ ரீதியாகப் பார்த்தால், அதீத உழைப்பு, தூக்கமின்மை, மனஅழுத்தம், நரம்புத் தளர்ச்சி, ரத்தவோட்டம் சீராக இல்லாதிருத்தல் போன்ற காரணங்கள் வலது கண்ணை துடிக்கச் செய்கின்றன.

மகிழ்ச்சி, குதூகல உணர்வு, பிட்ட்யூடரி சுரப்பி (pitutary) எண்டார்பின் (endorphins) என்ற compound சுரக்கும்போதும் இடக்கண் துடிக்கிறது.

2.  மாமிசத்தை வேறு இடத்துக்கு சமைத்து/அப்படியே உணவுக்காக கொண்டு போகும் போது கரித் துண்டு (charcoal) வைத்து எடுத்து போகவேண்டும். சுடுகாடு வழியாக போகக் கூடாது. 

கரி சயனைட் போன்ற கொடூரமான விஷ வாயுக்களைக் கூட உறிஞ்சிக்கொள்ளும் தன்மை உடையது. மேலும் கரித்தூள் குழந்தைகளுக்கு ஏற்படும் colic மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் உப்புசம், வாயு மற்றும் அஜீரணக் கோளாறுகளையும், அல்சர் போன்ற வயிற்று சம்பந்தமான நோய்களையும் குணமாக்கும் மருத்துவ குணம் கொண்டது. சிறு வயதிலிருந்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கரித்துண்டை உண்டு வந்தால் அவரை விஷம் தாக்காது என்று சித்த மருத்துவத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்று மற்றும் இறந்தவர் உடலில் இருந்து கிளம்பும் நோய்க்கிருமிகள் போன்றவை மாமிசத்தை எளிதில் தாக்கக் கூடும்.

3. வெற்றிலை போட்டால் படிப்பு வராது / மாடு முட்டும் / நாய் கடிக்கும் இன்னும் பிற....

பன்னிரண்டு வயதுக்குள், நாக்கு (சுவை மொட்டுக்கள் / taste buds) இன்னும் முழுமையாக முதிர்ச்சி அடையாத நிலையில், வெற்றிலையின் காரம் மற்றும் வெற்றிலை நரம்புகளில் உள்ள சில இரசாயனங்கள் நாக்கின் சுவை மொட்டுக்களை கொன்று விடும். இதனால் நாக்கு தடிக்கும். பேச்சும் சரியாக வராது. அதனாலேயே படிப்பு வராது என்று சொல்லி இருக்கலாம்.

4. உப்பில் கால் பட்டால் தரித்திரம் வரும் (and so on....) உப்பைக் கொட்டினா சண்டை வரும், பிறகு இன்னொருவருக்கு உப்பு தரும் போது கையால் தரக்கூடாது. உப்பிருக்கும் பாத்திரத்தைத்தான் தரவேண்டும்.

உப்புக்கு வரி விதித்த காலங்களில் இது தோன்றி இருக்கலாம். இருந்தாலும், உணவுப் பொருட்கள் எதையுமே காலால் இடறுவதோ, உதைப்பதோ, மிதிப்பதோ அவ்வளவு நாகரீகம் இல்லை மேலும் சுகாதாரமானதும் இல்லை. விலை அதிகம் என்பதால் உப்பு கீழே சிந்தக் கூடாது, வீணாகக் கூடாது என்ற காரணத்தால் கூறப்பட்டிருக்கலாம்.

மேலும் உப்பை கையால் எடுத்தால் உப்பு நீர் விட்டுக்கொள்ளும். பிசுபிசுத்து மறுநாளே உபயோகிக்க முடியாமல் ஆகி விடும். வேண்டுமானால் ஒரு முறை செய்து பாருங்களேன்.

5. வீட்டில் யாராவது வெளியே போயிருந்தால், வீடு துடைக்கக் கூடாது / தலைக்கு குளிக்கக் கூடாது and so on...

இது முற்றிலும் sentimental தான். யாராவது வீட்டில் இறந்து விட்டால் அவரை தூக்கி இடுகாட்டுக்கு போய், தீ வைத்த பின், ஒருவர் வீட்டுக்குச் செய்தி அனுப்புவார். அப்போது வீடு முழுதும் அலம்பித் துடைத்து, வீட்டில் இருக்கும் அனைவரும் தலை முழுகுவார்கள். அதாவது அவருடனான பந்தத்தை அன்றோடு விடுவித்ததாக ஆகும். இதனால்தான் யாராவது வீட்டை விட்டு கிளம்பியதும் துடைப்பதோ தலை குளிப்பதோ கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்.


ஊருக்குப் போகும்போது தலைக்கு எண்ணெய் வச்சு தலைகுளிக்கக்கூடாது! 

முன்னெல்லாம் எண்ணெய் வைத்து தலை குளிப்பார்கள். உடல் அசதி ஏற்படும். எண்ணைக் குளியலுக்குப் பின் பயணம் செய்தால் உடல்நலக் குறைவு ஏற்படும். அதிக வேலைகள் / நடை பயணம் போன்றவற்றால் ஏற்படும் வியர்வையால் ஜலதோஷமும் உண்டாகும். இப்போதும் ஷாம்பூ போட்டுக் குளித்தாலும், பயணம் செய்தால் எனக்கெல்லாம் தலை வியர்த்து மதியத்திற்கு மேல் தலை வலிக்க ஆரம்பித்து விடுகிறது :(

===============================================

மூடநம்பிக்கைகளும் அதன் பின்னணியில் உள்ள உண்மைகளையும் நம்மிடம் திரித்துப் பேசிய அந்த முட்டாள் தாத்தாவும் மூடப் பாட்டியும் பற்றி இன்னும் பேசுவேன் தொடரும்  பதிவுகளில்.


--விதூஷ்.


.

புர்கா போட்டுண்டா என்ன

எனக்கு இன்னும் புர்கா, பக்டி, கூங்கட் போன்றவற்றை அணியும் அவர்களது கலாச்சாரமோ இல்லை அவர்களது புனித நூல்களையோ முழுமையாக படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. அதனால் பர்தா தேவையா இல்லையா என்னவென்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணும் அளவுக்கு கிஞ்சித்தும் தகுதி இல்லாத எனக்கு இதென்ன கேள்வி?

இப்போதெல்லாம் ப்யூட்டி பார்லர் போய் வெய்யிலில் கருத்துப் போன என் தோலை வெளுக்கச் செய்யும் பிளீச்சிங், ஸ்கின் டோனிங் போன்றவற்றுக்கு சில ஆயிரங்களை செலவழித்து விட்டு, இரு சக்கர வாகனங்களில் போகும் போதும்,

அக்னி நட்சத்திரத்தின் போது சென்னை அண்ணா சாலை முதல் தம்புரான்பட்டி வரை இருக்கும் மக்கள் அனைவரும் ஈரத்துண்டை தலையில் போட்டுக் கொண்டாமாதிரியே நானும்,

பன்றிக் காய்ச்சல் பயத்தில் உலகம் முழுதும் இருந்த பகுத்தறிவாளர்களும் செய்ததையும் போலவே, நானும் ஏதோ ஒரு காரணத்தால் பாதுகாப்பு கருதி, துப்பட்டாவையோ, கர்சீப்பையோ இல்லை துணிக்கிழிசலையோ, இல்லை ஐம்பது ரூபாய்க்கு விற்ற மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கும் மாஸ்க் அல்லது ஏதோ ஒன்றையோ அணிந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டேன்.

அதே வாயால் பேசும்போதும் 'பெண்ணடிமைத்தனம்' என்று நான் பேசும் போதும் சிறிது யோசித்து விட்டு பேசினால் நன்றாக இருக்கும். ஆண்களிடம் இருந்து பெண்ணைப் பாதுகாப்பது என்று இன்னும் ஏதேதோ காரணங்கள் கூறினாலும், எனக்கு தோன்றிய ஒன்றையும் பகிர விரும்புகிறேன்.

பாலைவனங்கள், மணற்பகுதிகள், அதிக வெய்யில் சூடு, தூசிக்காற்று மற்றும் அனல் வீசும் காற்றுடைய பகுதிகளில் வாழும் ராஜஸ்தானியர்கள், அரபியர்கள், முகமதியர்கள்  வாயையும், மூக்கையும் மறைக்கும் முகத்திரை (PARDA / BURKA) மற்றும் பக்டி (PAGDI) என்ற தலைப்பாகை அணிகிறார்கள். இதனால் என்ன லாபம்? இயற்கையாகவே அவர்கள் இருக்கும் சுற்று சூழல் மாசிலிருந்து தம்மைப் பாதுகாக்க இந்தமாதிரி எல்லாம் துணிகளையோ அல்லது உடலையே மறைக்கும் உடையோ அணிய வேண்டியுள்ளது.

இன்றைக்கு சென்னையில் இருக்கும் அனல் காற்றுக்கும், தூசிக்கும், கார்பன் மாசுக்கும் தினமும் நான் என் கண்ணைத் தவிர முகத்தின் எல்லா பகுதிகளையும் துப்பட்டாவால் மறைத்துக் கொண்டால்தான் வீசிங், தொண்டை எரிச்சல், வராமலும், கண்ணிலும் வாயிலும் மண் துகள்கள் விழாமலும், அதற்கும் மேல் ஒரு ஹெல்மெட் ஒன்றையும் அணிந்து கொள்ள வேண்டியிருப்பதால், இருக்கும் கொஞ்ச நஞ்ச தலை முடியும் கொட்டாமல் இருக்க தலைக்கும் ஒரு துணியை போட்டு மூடிக் கொள்ள வேண்டியிருக்கிறது. கண்ணில் தூசி விழாமல் இருக்கவும், UV கதிர்களிடமிருந்து தப்பிக்கவும், வெயிலில் கண் கூசாமல் இருக்கவும், ஒரு கறுப்புக் கண்ணாடியும் அணிந்துகொள்ள வேண்டியுள்ளது.

இது போதாது என்று என் கைகள் கருக்காமல் இருக்கவும், புடவை கட்டி டூ வீலர் ஓட்டும் போது இடது பக்கம் புடவைத் தலைப்பு விலகி விடும் பயத்திலும், கிளவ்சோ இல்லை, காட்டன் முழுக்கைச் சட்டை ஒன்றையும் மேலே அணிந்து கொள்ளவும் வேண்டி இருக்கிறது.

சிக்னல் போன்ற இடங்களில் கால் கீழே ஊன்றினால் புடவை மேலே ஏறிக்கொண்டு சில நேரம் ஆடு சதைப் பகுதிகள் வரை தூக்கிக் கொண்டு விடுவதால், எல்லோர் பார்வையையும் தவிர்க்கவென  ஒரு டைட்ஸ் ஒன்றையும் அணிந்து கொண்டால்தான், என்னால் மாற்று சிந்தனைகளோ பயமோ இன்றி அலுவலகத்துக்கு புடவை அணித்து, இரு சக்கர வாகனத்தில் பயணிக்க முடிகிறது. அட தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போகட்டுமே என்றளவுக்கு இன்னும் துணியவில்லையோ என்னவோ போடா மாதவா.....

இங்கே சிக்னலில் எப்போது இவள் புடவை விலகும் - கணுக்கால் தெரியும், நாம் பார்க்கலாம் என்று மற்ற வாகன ஓட்டிகள் காத்திருக்கிறார்கள் என்றோ, கழுகுக் கண்கள் என்றோ, ஆணாதிக்கம் என்றெல்லாமோ, ச்சே இந்த உலகமே மோசம் என்றோ நான் கூற வரவில்லை.

என் சொந்த விருப்பு வெறுப்பின் பேரில், இதெல்லாம் நான் செய்கிறேன். அதே போல இந்த மாதிரி சுற்றுச்சூழலிலிருந்து தம்மை பாதுக்காக்க யாரோ ஒருவர் ஏற்படுத்திய சில பழக்கங்களை, காலப்போக்கில் ஹாமில்டன் வாராவதி அம்பட்டன் வாராவதியானது போலாகியதோ என்னவோ?

திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் எழுதியிருப்பதையும் பாருங்களேன்.

இதை படிச்சதும் தோன்றியதை சொல்லலாமே என்ற உணர்வுதான். சரியோ தவறோ? என் தினசரி டூ வீலர் ஆடை ஆயத்தம் செய்வதற்கு பதிலாக நானும் ஒரு புர்கா வாங்கி போட்டுண்டா என்ன? அதையே கொஞ்ச நாள் கழிச்சு சட்டமாக்கிட மாட்டீங்களே?.

என்கு ட்டமில் பேஷ வறாஜு

பேரூர் சிற்றூர் ஆன கதை

புத்தக வாசிப்பில் எனக்கென ஒரு கோணலான இரசனை. பொதுவாகவே புத்தகங்களை வாங்கியதும் படிக்க மாட்டேன். புத்தகம் சின்னதோ பெரிசோ, ஒவ்வொரு பக்கமாக flip செய்து random-மாக நான்கு-ஐந்து நாட்களுக்கு படிப்பேன். அத்தியாயங்களின் தலைப்புகளில் எது முதலில் கவர்கிறதோ அதைப் படிப்பேன். பெரியப் பத்திகளைப் படிப்பேன். பிறகுதான் ஆரம்பத்திலிருந்து முழு புத்தக வாசிப்பும். இதனால் புத்தகத்தில் எந்த இடத்தில் தொய்வு இருக்கிறது என்று எனக்கு easy-யாகத் தெரிவது போன்ற ஒரு நம்பிக்கை. அப்படியாக இந்த முறை ஐந்து நாள் பயணத்தில் இரயில் துணையாக வந்த எட்டுப் புத்தகங்களில் ஒன்று நந்திதா கிருஷ்ணா-வின் "மெட்ராஸ் - சென்னை" (ஜெயஸ்ரீ கோவிந்தராஜனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது) வந்தது. என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து பத்ரியின் கிழக்கு பதிப்பகம் (Prodigy) அனுப்பிய இலவசத் தமிழ் புத்தகம். இந்தப் புத்தகம் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது.

வாங்கலாமா?
 • வாங்கலாம். இந்தப் புத்தகத்தை easy reading வகையில் சேர்க்கலாம். வரலாற்றுச் செய்திகள் கொண்டது என்றாலும் படிக்கும்போது தொய்வில்லாமல் இருக்கிறதால் முழுப் புத்தகத்தையும் ஒரே நேரத்தில் படிக்க முடிகிறது. உண்மையில் இதொரு டைரிக் குறிப்பு.
 • யார் படிக்கலாம்? சிறுவ-சிறுமியர்கள், மாணவ-மாணவிகள், சுற்றுச் சூழல் பற்றிய ஆர்வமுடையவர்கள், வரலாற்றுப் பசியுள்ளவர்களுக்கு இந்தப் புத்தகம் இளநீர். என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆசையுடைய, curiosity உடையவர்கள் யாருமே படிக்கலாம். Guide-கள், பள்ளிச் சிறார்கள், சென்னைக்கு வரும்/வர ஆசைப்படும் சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டவர்கள்.
 • என்ன சொல்றாங்க? மதராஸ், சென்னை ஆனபோது வெறும் பெயர் மாற்றம் மட்டுமா நடந்தது? பேரூராக இருந்த மதராஸ், சென்னையாக சுருங்கியதும், மனித ஆக்கிரமிப்புக்களால் சுற்றுச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள், மரங்களும் கோவில்களும், பெயர்க் காரணங்களும், தற்போதைய நிலை மாற்றங்கள், நகரம் சுருங்கி மீண்டும் விரிகிறதும் போன்ற விஷயங்கள் summarise செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இரசிப்பான வாசிப்பனுபவம் பெறுவது உறுதி. இப்போது இருக்கும் சென்னையிலிருந்து முன்னாளைய மதராசுக்கு கூட்டிச் செல்லும் ஒரு பயணம் - அலுக்கவில்லை.
சிந்தனைகள்:
 • அந்தக் காலத்தில எல்லாம் இப்படியா? என்று ஒரு அலுப்போடு ஆசிரியர் எழுதியது போல இருக்கிறது. உண்மையாகவே மதராஸாக இருந்தபோது இருந்த பல நல்ல விஷயங்களை, கலாச்சாரங்களை தொலைத்துவிட்டது  சென்னை. ஆனால் கால மாற்றங்கள் கொடுத்த நன்மைகளையும் அங்கங்கே சொல்லியிருந்தால் ஒரு balanced view ஆக இருந்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியதை மறைக்க முடியவில்லை.
 • வாசிக்க மாட்டார்களோ என்று தோன்றியோ என்னவோ, சின்னச் சின்ன விஷயங்கள் விபரமாகச் சேர்க்கப்படாமல் glimpse மட்டுமாக இருக்கிறதால், முழுமையான வாசிப்பின் நிறைவைக் கொடுக்கவில்லை. நிறைய அறிய வேண்டுமானால் அந்தப் புத்தகத்தை படியுங்கள் என்று இன்னொரு புத்தகத்துக்கும் ஒரு reference கொடுத்திருக்கலாம்.
ப்பொருளடக்கம்:
 • சென்னையின் இயற்கை வளங்களான நீர் நிலைகள், விலங்கியல், மற்றும் தாவரங்களைப் பற்றிய விவரிப்புக்கள் அருமை.1985-க்குப் பிறகுதான் கூவம் மாசுபெற்றது என்பதை அறியும் போது வேதனை தலைதூக்குகிறது.
 • சுனாமியின் போது பக்கிங்காம் கால்வாய் நீரின் வேகத்தைக் குறைக்க உதவியது குறித்து படிக்கையில் ஆச்சரியமும், அதை நாம் போற்றிக் கொண்டிருக்கும் இழி நிலையும் பற்றிய வருத்தமும் தோன்றியது. இருந்த செயற்கை ஏரிகளையும் ஆக்கிரமித்து அரங்சாங்கமே கட்டியுள்ள கட்டிடங்களைப் பற்றி என்ன சொல்ல?
 • பெரும்பாணாற்றுப்படையில் கரிகால் சோழன் விவசாயத்தை அறிமுகம் செய்தது குறித்த பகுதிகள் அடேடே! என்றே படிக்க வைக்கும். பல்லவர்கள் குறிப்புக்கள் படித்தார்ப் போல இருந்தாலும், செய்திகள் சுவையாக இருக்கின்றன.
 • மயிலாப்பூர், புனித தாமஸ் குன்று, திருவல்லிகேணி, திருவான்மியூர், பல்லாவரம், திருவொற்றியூர் கோவில்கள் பற்றிய குறிப்பும் உள்ளன.
 • பூந்தமல்லி என்றால் மல்லிகைபூக்கள் விளையும் இடம் என்று குறித்துள்ளார்கள். உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் உலகு உய்யகொண்ட சோழபுரம் என்றும் பூவிருந்த வல்லி (மகாலக்ஷ்மி) என்றும் பெயர் உடையது இத்தலம். சிவபுராணங்களில் புஷ்பகவல்லி என்றும் லக்ஷ்மிபூர் என்றும் குறிக்கப்பட்டுள்ளன.
 • விவரிப்பில் சென்னை புகழ் அடையாறு ஆலமரம் இல்லாமல் போனது பற்றிய குறிப்புக்கள் ஏதும் இல்லாததும் வருத்தமே.
 • பிரிட்டிஷாரின் வருகை பற்றியும், அதன் பின் சென்னையின் தாறுமாறான குடியிருப்புகளின் வளர்ச்சியும் இதன் விளைவாக சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பும் பற்றியும் சொல்லியிருக்கிறார். புனித ஜார்ஜ் கோட்டை, மற்றும் ஏழு கிணறின் கதைகளும் சுவை. 
 • சென்னையில் தற்போதும் புழக்கத்தில் உள்ள பல்வேறு இடங்களின் பெயர்க் காரணங்கள் simply superb. 
 • இதில் பெரம்பூர் பற்றிய குறிப்பில் தவறு இருக்கிறது. பிரம்பு/மூங்கில் காடுகள் நிறைந்த இடமாகையால் பிரம்பு+ஊர் = பிரம்பூர் மருவி பெரம்பூர் ஆனது. இதில் குறித்தபடி பேர்+அன்பு+ஊர் என்றெல்லாம் இருந்திருக்க முடியாது.
 • இயற்கையான துறைமுகமான பழவேற்காடு (புலிகாட்) படுக்கை (Padouke) என்றும், புலிகாட் என்றும், மாமல்லப்பட்டினம் என்றும், பிரளய காவேரி என்றும் அனந்தராயன்பட்டினம் என்றும் அழைக்கப் பட்டு, பின் 1521-னில்தான் பழவேற்காடு என்ற பெயர் வந்தது.
 • சென்னையின் பல்வேறு நினைவிடங்கள், முக்கியக் கட்டிடங்கள்,  பற்றிய குறிப்புக்கள் தெளிவாக இருக்கின்றன. ருக்மிணிஅருண்டேல் அவர்கள் நிர்மாணித்த கலாக்ஷேத்திரா இந்தியாவின் முதல் பள்ளி என்று குறிக்கப்பட்டுள்ளது, இதை இந்தியாவின் முதல் கலைக்கூடம்/கலைக் கல்லூரி என்று குறிப்பிடலாம்.
 • பிரச்சினைகளும் தீர்வும் : ஆஹா வென்று மகிழ்ந்த குறிப்புக்கள். தீர்வுகளில் சாலை போக்குவரத்து மற்றும் வாகனப் புகையினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மெட்ரோ இரயில் திட்டத்தை ஒரு நல்ல மாற்றாக சொல்லியிருப்பார்கள் என்று நம்பித் தேடித் பார்த்தேன். போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வே காணோமே? மின்சார இரயிலால் சுற்றுச் சூழல் மாசு மற்றும் டிராபிக் ஜாம் / போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படலாமே?
 • மொத்தத்தில் இந்தப் புத்தகம் மெட்ராஸ் - சென்னை ஒரு பயணக்குறிப்பு. இன்னும் கொஞ்சம் உழைப்பும், தேடலும் இருந்திருந்தால் இந்தப் புத்தகம் போற்றுதலுக்குரியதாகவே ஆகியிருக்கலாம். இந்த விலைக்கு இதுதான் என்றாலும், press ink-க்குக்கு கொஞ்சம் மதிப்பும் கொடுத்திருக்கலாம். விலை இன்னும் கொஞ்சம் கூட்டி, அதிகமென்றால் கூட பரவாயில்லையே! ஓர் நல்ல வரலாற்றுப் பதிவாக வந்திருக்க வேண்டிய புத்தகம் இது. ஹும்ம்ம்.  தாளிக்கும் ஓசை புகழ் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அவர்களா? சமையல் குறிப்புக்கே அதிக details கொடுக்கும் நீங்களோ மேடம் இப்படி?
புதுசா வாங்க:  இங்கே செல்லவும்..

மறந்துட்டப் போலருக்கு