கொடியது கேட்கின் வரிவடிவேலோய்உங்களைச் சுற்றி உலகில் வேறெந்த ஜீவனுமே மிச்சமில்லாமல் போய்விட்டால், நீங்கள் மட்டுமே உயிரோடு இருப்பதாக இருந்தால், சுற்றிலும் பிணங்களே இருந்தால், நீங்கள் நம்பிக்கை இழக்காமல், மனம் தளராமல், துணையேதும் இன்றி எப்படி வாழ்வீர்கள்.

உலகமே அழிந்து விட்டு நாம் மட்டும் தனியாக இருந்தால் என்ன செய்வது.  நாம் மட்டும் வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம் என்று கேட்கிறீர்களா? யார் கண்டது... நதியின் அக்கரையில் ஒரு ஹ்ருதிக் ரோஷனோ, அல்லது ஸ்ரேயாவோ உயிரோடு இருந்தால்.


ஆகவே, இனியும் கங்கையை அசுத்தப்படுத்த வேண்டாம்  என்ற பதிவின் தொடர்ச்சியாக.

கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது அவர் கையால்
இன்புற உண்பது தானே


இவையெல்லாவற்றையும் விடக் கொடியது தனிமை.


நம் generation-களில் single child என்பது சகஜமான ஒன்றாகி விட்டது. அதையும் தவிர சூழ்நிலைக் காரணங்களாலும், தன் சொந்த விருப்பத்தாலும், பணி நிமித்தமாகவும், குடும்பத்தோடு கூடி இருந்தாலும் களிப்பில்லாமல் மனதாலும், தன்னம்பிக்கை இல்லாது சமூகத்தோடு இணைய முடியாமலும், சமூகத்தால் பல காரணங்களுக்காக மதிக்கப்படாமல் இருத்தலும், துணை மற்றும் மகன் / பெற்றோர் போன்ற உறவுகளின் இழப்பு, மற்றவர் மீது நம்பிக்கையின்மை, சுய-மதிப்பின்மை, போன்ற பல காரணங்களுக்காக ஒருவர் தனித்துப் போகிறார்.


இக்காரணங்களில் எதுவுமே ஒருவர் மனதிற்கு நேர்மறையான விளைவுகளைக் கொடுப்பதில்லை. இதனால் வெறுமை, வெறுப்பு, பாதுகாப்பு உணர்வின்மை, மன அழுத்தம், தற்கொலை உணர்வு, போன்ற எதிர்மறை எண்ணங்கள் விளைகின்றன. இந்த எதிர்மறை எண்ணங்கள் உடலில் பல்வேறு ஆற்றொணாக் கொடுநோய்கள் விளைய வித்தாகின்றன.


தனிமையில் இருந்தாலும் தனித்தில்லாமல் இருக்க நம்மிடம் டீ.வி., ரேடியோ, மியூசிக் பிளேயர் போன்ற பல வசதிகள் இருந்தாலும், மனம் லயிக்குமா? நம்மோடு ஒருவர் இருந்து அவர் football match பார்க்க விருப்பம் என்று சொன்னால், ஒரு போட்டிக்காவது 89-களின் ஹீரோ கப் repeat telecast-டில் கபில்தேவை பிடிவாதமாய் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் போட்டிக்கு ஆளே இல்லையென்றால், டீ.வியில் மனம் லயிக்காது. மனம் அப்போது வெறுமையால் சோர்வுறாமல் இருக்க என்ன செய்வது?


இந்து சமூகத்தில் ஒரு பிரிவினர் தினமும் சமைத்த உண்ணும் உணவை சாப்பிடும் முன் காக்கைக்கு இட்டு, பின் தட்டின் முன் அமர்ந்து 'பரிஷேஷனம்' செய்துவிட்டு சாப்பிடும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். இதன் பின்னணியில் இருக்கும் மனோதத்துவம் என்ன? இதனால் ஒருவருக்கு விளையும் நன்மைகள் என்ன?


நம் மூத்தோர்கள் இறந்து, காக்கை ரூபத்தில் வந்து நம் வீட்டில் உணவு உண்பதாக நம்பிக்கை நிலவுகிறது. இதில் எத்தனை உண்மை இருக்கலாம். 


ஒரு உதாரணத்திற்கு என்றாலும் என் தாய் வீட்டில் ஒரு நிகழ்வை இன்றும் நினைத்து நினைத்து ஆச்சரியப்படுவேன். எங்கள் பாட்டி (அம்மாவின் மாமியார்) தன் தாயார் திதி மற்றும் சுமங்கலி பிரார்த்தனை செய்யும் நாட்களில், எள் கலந்த சாதம் வைப்பார். அன்று மட்டும் ஜோடியாக ஒரு அண்டங்காக்கையும் காகமும் வந்து சாப்பிடும். மற்ற தினங்கள் எல்லாமே, பாட்டி கொடுக்கும் உணவை அந்தக் காகம் மட்டும் தான் வந்து உண்டு செல்லும். காகங்கள் பார்ப்பதற்கு ஒன்று போலவே இருப்பதால், நான் கூட சின்ன வயதில் "எப்படிப் பாட்டி இந்த காக்காய்தான் தினோம் வரதுன்னு கண்டுபிடிகிற" என்றும் "பாட்டி. உங்கம்மா வந்திருக்கா பாரு" என்று கிண்டல் செய்துள்ளேன். ஆனால் இன்றும் கூட என் பாட்டி திதியன்று இதே போலத்தான் நிகழ்கிறது. மிகச் சரியாக திவசம் (திதி காரியங்கள்) முடிந்து, அந்தணர்களுக்கு இலையில் சாதம் பரிமாறி,  அவர்கள் பரிஷேஷனம் செய்யும் போது, "சாப்பிடும்மா" என்று பாட்டி (இப்போது என் தாய்) குரல் கொடுத்த பின்தான், காக்கையும் உணவைச் சாப்பிடும். இதை படிக்கும் போது, நம்பவே முடியாது. ஆனால் நான் கண்ணால் கண்டு கொண்டிருக்கும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.சமீபத்தில் இந்து பத்திரிகையில் ஒரு article வந்திருந்தது. காக்கைக்கும், பறவைகளுக்கும், வீட்டுக் கொட்டில் மாட்டுக்கும் உணவு கொடுத்துச் சாப்பிடும் பழக்கம், மற்றும் அதே போல நாய், பூனை போன்ற மிருகங்களை வீட்டில் வளர்ப்பதும் தனிமை உணர்வைக் கொல்கிறதாம்.


தைத்திரீய உபநிஷதில் குறிப்பிட்டபடி,"அஹம் அன்னம் அஹம் அன்னம்  அஹம் அன்னம்,
அஹம் அன்னாதோஹம் அஹம் அன்னாதோஹம் அஹமன்னத: " என்று பிராணனுக்கு அன்னத்தை வழங்குகிறார்கள்.


இதன் பொருள்: நான் பரமாத்மாவுக்காக இந்த உணவை உண்கிறேன், அதனால் ஆத்மாவுக்கு நானே உணவாகிறேன். நானே இந்த உணவு. நானே இதை உண்கிறேன். நானே ஆத்மா. ஆத்மாவை மகிழ்விக்க நான் என்னையே உணவாக  உண்கிறேன்.


உணவை வெறும் ருசிக்காக இல்லாமல் ஆத்மாவோடு இணைத்து ஆத்மநிந்தனைக்கு (உடலையும் மனதையும் வருத்துதல்) இடமில்லாமல் செய்ய இந்த சுலோகம் உதவுகிறது. பரிஷேஷன தத்துவம் என்ன? பரிஷேஷனம் என்றால் என்ன? இதை ப்ராணாக்னிஹோத்ரம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. அக்னி ஹோத்ரம் / நித்ய யக்ஞம். நித்ய யக்ஞம் என்பது daily assertions. Self-Love, Counselling, Prayer, Meditation என்றெல்லாம் ஆங்கிலத்தில் ஒரு Psycho-analyst சொல்லும்போதுதான் நமக்கு அதைச் செய்து பின்பற்றுவது பற்றிய ஒரு பெருமை உண்டாகிறது. சரி!


வெறும் பசியாற்றுவது மட்டும் உணவின் செயல் இல்லை. உடலின் ஆற்றலுக்கும் சுறுசுறுப்புக்கும் மந்தத் தன்மைக்கும் நாம் உண்ணும் உணவே அடிப்படையாக அமைகிறது. அந்த உணவு தகுந்த முறையில் ஜெரிக்கப்பட்டு, கழிவுகள் வெளியேற்றப்படும்போதுதான் உணவின் சுழற்சி முடிந்து மீண்டும் பசி ஏற்படுகிறது. இந்த சுழற்சிகள் சரியான முறையில் நடைபெற "ப்ராண" என்று வேதங்கள் சொல்லும் வாயு (காற்று) மிகவும் முக்கியமானது. காற்றே நம் உடலை இயக்குகிறது. காற்றுதான் நம் மூட்டுக்களின் அசைவுக்கு காரணம். காற்றே இரத்த சுழற்சிக்கு தூண்டுகிறது. அதனால்தான் ஒருவர் இறந்துவிட்டால் "ப்ராணன் போய் விட்டது" அல்லது "breathed their last" என்கிறார்கள்.


பிராணா / ஆத்மா இரண்டுமே இணைந்து அன்னமய கோஸம், பிராணமய கோஸம், மற்றும் மனோன்மய கோஸம் ஆகிறது. அன்னமும் பிராண வாயும் மனதை ஆட்டி படைக்கும் ஆற்றல்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. சைவ அசைவ உணவுகள் எதுவென்றாலும் ஆத்மாவுக்கு என்று சொல்லி ருசி-அருசிகளை பாராது மகிழ்ச்சியோடு ஏற்று உண்ணும் போது மனது (ஆத்மா) மகிழ்கிறது. "இன்று இந்த உணவை இவர்களோடு பகிர்கிறேன்" என்று மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் அளித்து உண்ணும்போது தனிமை நீங்கி மனம் திருப்தி அடைகிறது. 


பரிஷேஷனம் மூன்று  நிலையாக செய்யப் படுகிறது. அதாவது, ஆபோஜனம் (உணவுக்கு முன்), ப்ராணாஹுதி (உணவை பிராணனுக்கு வழங்குவது / சாப்பிடுதல்), உத்திரபோஜனம் (உணவுக்குப் பின்).


ஓம் பூர் புவ: ஸுவ: என்று காயத்ரி மந்திரம் சொல்லி,


சத்யம் த்வருதேன  பரிஷிஞ்சாமி"  என்று பகலிலும் (சத்யம் + து + றுதேன + பரிஷிஞ்சாமி = உணவே! நீயே சத்யம். எனக்கு ஏற்ற உணவான (சரியான) உன்னைச் சுற்றி தண்ணீர் தெளித்து, தெய்வமாக வணங்குகிறேன்) இரவில் "ருதம் தவ சத்யேன பரிஷிஞ்சாமி" என்றும் (அதே அர்த்தம் தான் - ஆனால் வார்த்தைகள் இடம் மாறி இருப்பதைக் கவனிக்க) வணங்குகிறார்கள்.


ஓம் ப்ரணய ஸ்வாஹா (மூச்சுக் காற்றை வணங்குதல் / breath )
ஓம் அபானாய ஸ்வாஹா (மல ஜலங்கள் வெளியேறும் முறையை வணங்குதல் /excretion system )
ஓம் வ்யானாய ஸ்வாஹா (இரத்தவோட்டத்தை வணங்குதல் / circulatory system)
ஓம் உதானாய ஸ்வாஹா (சுவாசத்தை வணங்குதல் / respiratory system)
ஓம் ஸமானாய  ஸ்வாஹா (ஜெரிக்க உதவும் உறுப்புக்களை வணங்குதல் / digestive system)
ஓம் ப்ரஹ்மனே ஸ்வாஹா (காக்கும் கடவுளாக பிரம்மனை வரித்ததால் இந்த உணவு பிரம்மனாகட்டும்)

ஓம் பிரம்மாணி மா ஆத்மா அம்ருதத்வாய (இந்த உணவே இந்த அனைத்தையும் இணைத்து (ப்ராண, அபான, வ்யான, உதான, ஸமான) என் ஆத்மா மற்றும் உடலாகி என்னையும் பிரம்மனாக்கட்டும்)சந்தோக்யோபநிஷத்-தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தத் யத் பக்தான  ப்ரதமமாகச்சேத் தத்தோமீயம்!
ஸ யாம் ப்ரதமாம் ஆஹுதிம் ஜுஹுயாத் ப்ராணாய ஸ்வாஹேதி!
ப்ராணஸ்த்ருப்யாதி !

ப்ராணே த்ருப்யாதி சக்ஷுஸ் த்ருப்யாதி!
சக்ஷுஷி த்ருப்யத்யாத் ஆதித்யஸ் த்ருப்யாதி!
ஆதித்யே த்ருப்யாதி த்யௌஸ் த்ருப்யாதி!
திவி த்ருப்யந்த்யாம் யத் கிஞ்ச தௌஸ்வ ஆதித்யஸ்சாத் அதிதிஷ்டாத:
தத் த்ருப்யாதி!
தஸ்ய அனுத்ருப்திம் த்ருப்யாதி பிரஜா பஷுபீர் அன்னாத்யேன தேஜஸா
ப்ரஹ்மாவரச்சேநேதி !


இதன் பொருள்: உணவை உண்பவன் முதலில் தானம் (மற்றவருக்கு அதாவது மனிதன், மிருகம், பறவைகள் முதலானவை) அளித்து விட்டு உண்கிறான். அப்படி அளிக்கப்பட்ட உணவானது இறைநிலை பெறுகிறது. இதனால் ப்ராணன் திருப்தி அடைகிறது. இந்தத் திருப்தியானது ஹோமம் செய்வதற்கு ஒப்பானதாகும். ப்ராணன் திருப்தி அடைந்ததும் (மற்றவர்கள் திருப்தியாக உண்பதைக் கண்ட) கண்களும் திருப்தி அடைகின்றன. கண்கள் திருப்தியடைந்ததும் சூரியன் திருப்தியடைகிறான். சூரியன் திருப்தியடைந்ததும் ஸ்வர்கங்கள் (ப்ரபஞ்சம்) திருப்தியடைகிறது. எல்லாரும் திருப்தியடைகிறார்கள். பசு (மிருகங்கள்), பக்ஷி (பறவைகள்) ஆகியவையும் மனிதர்கள் போலவே திருப்தியடைகிற காரணத்தால், எங்கும் தேஜஸ் (ஒளி) நிறைந்திருக்கிறது. இதனால் பிரம்ம தேஜஸ் (உயிர் / ஆத்மா ஒளி) எங்கும் பரவி மகிழ்ச்சி நிறைந்திருக்கிறது.இவை எல்லாவற்றிற்கும் மேலே "அம்ருதோபஸ்தரணம் அஸி" என்றும் தண்ணீரை உணவுக்கு ஆடையாக போர்த்தி அம்ருதம் என்றழைக்கிறது வேதம். பூமிக்கும், மிருகங்களுக்கும், பக்ஷிகளுக்கும் இதே நீரை அம்ருதமாக வழங்குமாறும் அறிவுறுத்துகிறது.


(இன்னும் வரும்).


16 comments:

malar said...

உங்கள் பதிவு என்னை ரொம்ப கவர்ந்தது .பழைய பதிவுகளும் பார்த்தேன் .நல்ல இருந்தது.

உங்கள் பதிவில் வரும்

கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது அவர் கையால்
இன்புற உண்பது தானே

இது எனக்கு பிடித்த பாடல் .

''''நம் generation-களில் single child என்பது சகஜமான ஒன்றாகி விட்டது.''' நான் இந்த வெறுக்கிறேன் .

நானும் காகத்துக்கு சோறு வைக்க விரும்புவேன் .இப்போது உள்ள காகம் non veg ஆக இருந்தால் மட்டுமே சாப்பிடுகிறது.
இது நான் கண்கூடாக கண்டது .

'''''ஒரு இரப்பர் பந்தை சுவற்றில் அடித்தால் அது எப்படி நம்மிடமே திரும்பி வருகிறதோ, அதே போல நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் பலன்கள் நம்மையே வந்து சேரும்.''''


இதை நான் முற்றிலும் உண்மை என்று சொல்லுவேன் .

நான் அறிவை தேடி அலைவள .உங்கள் பதிவில் இருந்து பல விசயங்களை தெரிந்துக்கொண்டேன்

Unknown said...

அதனினும் கொடிது
முதுமையில் செல்வம் ...

Unknown said...

அது அம்ருதாபிதாநமஸின்னு நினைக்கிறேன்.

அன்னதாதா சுகிபவா. என்று வாழ்த்துவார்கள்

Unknown said...

நன்றி மலர். என் பதிவுகள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததில் சந்தோஷம் :)

நன்றி ஜமால். உண்மைதான். :))


நன்றி புதுகைத்தென்றல். :) அம்ருத + உபஸ்தரணம் + அஸி = அம்ருதோபஸ்தரணம் அஸி அல்லது அம்ருதோபஸ்தரணமஸி என்றும் சொல்வார்கள்.

அன்னதாதா சுகி பவ என்றால் உணவளிப்பவன் மகிழ்ச்சியாக இருக்கட்டும் :) நன்றி தென்றல்.

கல்யாணி சுரேஷ் said...

பயனுள்ள பதிவு. நன்றி விதூஷ். (அதென்ன அம்மாவின் மாமியார்? அப்பாவின் அம்மா என்று சொல்லலாமே?)

வால்பையன் said...

//அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது அவர் கையால்
இன்புற உண்பது தானே //

இது ஆண் வர்க்கத்தை முன் நிறுத்தி எழுதப்பட்ட பாடல் என்பதால் செல்லாது செல்லாது என ஒதுக்கப்படுகிறது!

நேசமித்ரன் said...

//இது ஆண் வர்க்கத்தை முன் நிறுத்தி எழுதப்பட்ட பாடல் என்பதால் செல்லாது செல்லாது என ஒதுக்கப்படுகிறது!//

ரிப்பீட்டுங்க

நேசமித்ரன் said...

எவ்வளவு பெரிய பதிவு

எங்கெல்லாம் பயணப்படுது மூளை

ஆயிரம் மைல்களை கடந்து

வருஷஙளையும் .....

ராமலக்ஷ்மி said...

பயனுள்ள பதிவு. மிக அருமையாக விவரித்திருக்கிறீர்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல விவரிப்பு.

அமாவாசைகளின் போது என் அம்மா காக்கைக்கு உணவு வைக்கும் போது நீங்கள் சொன்ன அந்த காக்கை விஷயம் போல
நானும் சில சமயங்களில் ஆச்சர்யப்பட்டது உண்டு!

Unknown said...

நன்றி கல்யாணி சுரேஷ். :)) அப்பா சீன்ல இல்லாததால் அம்மா கேரக்டர் முன்னிறுத்தப்பட்டது.

நன்றி வால் அருண்:

//இது ஆண் வர்க்கத்தை முன் நிறுத்தி எழுதப்பட்ட பாடல் என்பதால் செல்லாது செல்லாது என ஒதுக்கப்படுகிறது!//

அன்பில்லாமல் ஆண்கள் பரிமாறுவதை இன்றும் ஹோட்டல்களில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். அதனால் எந்த மன வருத்தமும் ஏற்படுவதில்லை. அன்பில்லாத பெண்கள் கையால் சாப்பிட்டு இருக்கிறீர்களா?

நேசன்: உங்களுக்கும் மேலே இருக்கும் பதிலே ரிப்பீட்டுங்க. :))
நன்றிங்க.

ராமலக்ஷ்மி: நன்றிங்க.

அமைத்து அம்மா: தேங்க்ஸ். :)

வால்பையன் said...

//அன்பில்லாத பெண்கள் கையால் சாப்பிட்டு இருக்கிறீர்களா?//

நான் ஒரே நேரத்தில் இரண்டு விசயங்களில் கவனம் செலுத்துவதில்லை!

ரெண்டாவது தற்கால மனிதர்கள் நன்றாக நடிக்க கற்று கொண்டார்கள்!

நர்சிம் said...

//கல்யாணி சுரேஷ் said...
பயனுள்ள பதிவு. நன்றி விதூஷ். (அதென்ன அம்மாவின் மாமியார்? அப்பாவின் அம்மா என்று சொல்லலாமே?)
//

;)

நசரேயன் said...

ம்ம்மம்மம்ம்ம்ம்

இன்றைய கவிதை said...

அருமையான பதிவுகள்!
தொடரட்டும் உங்களது சீரிய பணி!

-கேயார்

Sundar சுந்தர் said...

நல்லா பாட்டி கதை சொல்றே. புக் அளவுக்கு மேட்டர் வச்சிருக்கே. ஏன் நீ ஒரு புக் பப்ளிஷ் பண்ண கூடாது?


//கல்யாணி சுரேஷ் said...
பயனுள்ள பதிவு. நன்றி விதூஷ். (அதென்ன அம்மாவின் மாமியார்? அப்பாவின் அம்மா என்று சொல்லலாமே?)
//
:) good catch.

Post a Comment