பந்தம்
Posted by
Vidhoosh
on Wednesday, August 12, 2009
Labels:
கதை
"இங்க பாருங்க. என் மகனை பாத்துக்க ஆள் இல்லாம அன்னிக்கி ஹாஸ்டலுக்கு அனுப்பினது தப்பில்லைன்னா, இன்னிக்கி உங்க அம்மாவ முதியோர் இல்லத்துக்கு அனுப்புறதும் தப்பில்லை" என்ற பத்மாவின் பதிலடியில் அதிர்ந்து போய் நான் வாய் அடைத்து நின்றேன்.
"இங்க பாரு. இன்னும் எத்தனை நாளுக்கு அதையே சொல்லிட்டு இருப்ப? அஞ்சு பசங்கள்ள நாந்தான் மூத்தவன். யாருமே காப்பற்றவில்லை அப்படீன்னு ஊர் நினைக்காதா?" தோற்றுப் புலம்பினேன் அவளிடம்.
"ஐயே. ஊருக்கு பயந்து இவங்கள நாமதான் இங்க வெச்சுக்கிட்டு, நாளைக்கு நாம ரெண்டு பெரும் ஆபீசுக்கு போயிருக்கும் நேரத்துல கீழ விழுந்து அடி பட்டா, யார் பாக்கறது. இந்த அம்போன்னு இருக்கற டெல்லிக்கு உங்க ஊரா வரும்? நான்தான் லீவு போடணும். இன்னும் நாலு வருஷம் தான் சர்வீஸ்." விட்டால் அழுதுவிடும் குரலில் தொடர்ந்தாள் பத்மா.
"ஏன்? உங்க கடைசீ தம்பி பொண்டாட்டி ஹோம் மேக்கர் தான. அவ பாத்துக்கட்டுமே. போதாகுறைக்கு அவுங்க வேற இங்க வந்திட்டு, டெல்லி பிடிக்கல, நான் காவல் நாய் இல்ல அது இதுன்னு சொல்லி நாலே நாள்ல கிளம்பி, என்னை வேதனைப் படுத்திட்டுப் போவாங்க. இன்னும் எத்தனை முறை என் வேதனையை கீறிப் பாப்பீங்க? இராத்திரி நேரத்துல சண்டையை கிளப்பாதீங்க" லொட்டென்று வந்தது தட்டு சப்பாத்திகளோடு.
அமைதியானேன் நான். நான் உருகி உருகி காதலிக்கும் மெல்லிய பூவா இவள். இவளா இப்படி? எப்போது இப்படி மாறி விட்டாள்? சப்பாத்தியை விழுங்கியபடியே யோசித்தேன்.
ஐந்து சகோதரர்களைக் கொண்ட என் குடும்பம் பெரியது. நான் மூத்தவன். எல்லோரும் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற ஆசையில் இந்த ஐந்து படுக்கை அறை கொண்ட இந்த வீட்டை பழைய டில்லியில் கடன் வாங்கியேனும் சொந்தமாக்க ஆசைபட்டவளும் இவள்தான். அது நிறைவேற உந்துதலாய் இருந்தவள் இதே பத்மாதான். அந்தக் கடனைத் திருப்பிக் கட்டவே அவள் இன்றும் வேலைக்குப் போகிறாள்.
ஆனால் என் சகோதரர்கள் அனைவருமே ஒவ்வொருவராய் மணமான பின் தனியாகி விட்டார்கள். தன் ஓரகத்தியானவளை "கடைசி தம்பி பொண்டாட்டி" என்ற வினோத உறவு கொண்டாடும் காழ்ப்பு இவளுக்கு வந்த காரணம், நாங்கள் பார்த்து பார்த்து கட்டிய வீட்டை "அந்தறைப் பெட்டியில் யார் இருப்பார்கள்" என்று கேலி பேசி விட்டு தமிழ்நாட்டுக்கு தனிக் கூடு தேடி பறந்து போனதுதான்.
அதன் பின், பத்மாவின் கடைசி நம்பிக்கையும் சின்னாபின்னம் ஆனது. அன்றுதான் அவள் கடைசியாய் அழுதாள்.
தான் தன் பெற்றோருக்கு ஒரே பெண்ணாக தனிமையில் வளர்ந்தது குறித்த வருத்தம் அவளுக்கு நிறையவே உண்டு.
என் தாயும் இங்கும் அங்குமாய் இருந்து ஒரு வழியாய் என் கடைசி தம்பி வீட்டிலேயே இருந்து விட்டார். நாங்களும் தனித்துப் போனோம். வாழ்கையோடு போராடி வளர்த்த எங்கள் மகனும் இப்போது புனே இராணுவ மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கிறான்.
இந்தத் தனிமை அவளை கல்லாக்கி விட்டதா? உறவுகளின் அண்மைக்கு ஏங்கி, கிடைக்காமல், ஏமாந்து ஏமாந்து தன் உணர்வுகளையே கொன்று விட்டாளா?
பதினாலு வருடம் முன்பு என் அம்மா இங்கு வந்த போது நல்ல ஆரோக்கியத்தோடுதான் இருந்தாள். அப்போது அவள் அர்ஜுனுக்கு நான்கு வயது. பத்மா அம்மாவிடம் தனக்கும் அர்ஜுனுக்கும் துணையாக இங்கேயே தங்கிவிடும்படி நிறையக் கெஞ்சினாள்.
"யாருமில்லா வீட்டுக்கு நான் என்ன காவல் நாயா?" என்று கேட்டு விட்டு அம்மா கிளம்பிய போதும் இதேபோலத்தான் வாய் அடைத்து அதிர்ந்து நின்றேன்.
அதன் பிறகு என்றுமே எதற்குமே பத்மா என் அம்மாவை இங்கு வந்து தங்க அழைத்ததில்லை. அவர்களை நாங்கள்தான் விடுமுறைகளில் சென்று பார்ப்போம். எங்கள் உறவுகள் தூரத்தில் இருந்ததே அவளுக்கு துயரமாகிப் போனது. அவர்களிடம் தொலைபேசியில் பேசுவதைக் கூட குறைத்துக் கொண்டாள். அப்படி என்றேனும் பேச நேர்ந்து விட்டால், அவள் தனிமையின் கையாலாகத்தனம் அவளைத் தோற்கடித்து, அன்றைய தினம் முழுதும் எதற்கெடுத்தாலும் சிடுசிடுப்பு, எரிச்சல், கத்தல் என்றே போகும்.
இருவரின் நியாயமும், யார் பக்கமும் சார்ந்து என்னைப் பேச விடாமல் செய்தது. நான் யாருக்கு பரிந்து பேசுவது? இவளையும் விடமுடியாமல், தாயையும் விட முடியாமல் இரு தலை கொள்ளியாக தூக்கமும் வராமல் தவித்தேன் நான்.
பத்மா தூங்கி விட்டாள். தொலைபேசி அழைத்தது. என்னை மேலும் தவிக்க விடாமல், அன்றிரவே என் தம்பியிடமிருந்து அம்மா எங்குமே வர முடியாத தூரத்திற்குச் சென்று விட்ட செய்தி வந்தது. எனக்கு எந்த உணர்வும் வரவில்லை. கண்ணீரும் வரவில்லை. சிந்தனை மட்டும் என்னோடு கைகோர்த்து சென்னை நோக்கி நடந்தது. இனியும் என் சகோதரர் நால்வரும் என் தாயைச் சுமப்பார்கள், மூத்த பிள்ளையான நான் பந்தம் மட்டும்தான் சுமப்பேன்.
இந்த வீட்டின் முற்றம் வழி
விழுந்துவிட்ட விருந்தாளி..
பறந்து போனால் மீண்டு கைக்குக்
கிடைக்காது அதுவான நான்!
ஜன்னல் வழி வந்த தென்றலில்
பறக்கத் தயாரானது இலேசாக
அதன் இறகுகள்...
அந்த இறக்கைகளில் கிடக்கும்
காய்ந்த குருதியின் கனம்..
பாதி மூடிய விழிகளால் பார்க்கும் அது
குருதி வழியும் இதயம் திறந்து,
"என்றேனும் என் அருகில் வாருங்கள்
இன்னும் துடித்துதான் கொண்டிருக்கிறது
என் இதயம்" எனச் சொல்லியபடி
மீதி விழியும் மென்மையாய் மூடியது!
திறந்திருக்கும் ஜன்னல் வழி இவையனைத்தும்
காணும் என் மானுடம்! கண்டது வாழ்க்கையே...
வாழ்க்கையின் வேடிக்கை!
பாதி விழி மூடி தூங்கிக் கொண்டிருந்தாள் பத்மா. விழிகளின் ஓரத்தில் தனியாகவே காய்ந்திருந்தது ஒரு உப்புத்துளி. அருகில் அமர்ந்து அவளையே வேடிக்கை பார்த்தேன் நான்.
.
12 comments:
nicely balance on both side
touching
வித்யா,
கதை நன்றாக இருக்கிறது. அந்த கவிதை தோன்றிய கதை இதுதானா ?
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
"இங்க பாருங்க. என் மகனை பாத்துக்க ஆள் இல்லாம அன்னிக்கி ஹாஸ்டலுக்கு அனுப்பினது தப்பில்லைன்னா, இன்னிக்கி உங்க அம்மாவ முதியோர் இல்லத்துக்கு அனுப்புறதும் தப்பில்லை"//
நிறைய வீட்டில் இன்று நடக்கும் ஒரு விஷயத்தை பளீரென சொல்லி இருக்கிறீர்கள் வித்யா... ரொம்ப டச்சிங்கா இருக்கு.
//இன்னும் எத்தனை முறை என் வேதனையை கீறிப் பாப்பீங்க?//
வேதனையின் வெளிப்பாடு வார்த்தையிம் அருமையாக வெளிவந்திருக்கிறது...
//நான் உருகி உருகி காதலிக்கும் மெல்லிய பூவா இவள். இவளா இப்படி? எப்போது இப்படி மாறி விட்டாள்?//
காதல் மற்றும் அன்பு என்பது கல்யாணம் ஆனவுடன் இவ்வளவு மாறிவிடுமா என்ன?
//எங்கள் உறவுகள் தூரத்தில் இருந்ததே அவளுக்கு துயரமாகிப் போனது. //
வாவ்....சூப்பர்........
//என் சகோதரர் நால்வரும் என் தாயைச் சுமப்பார்கள், மூத்த பிள்ளையான நான் பந்தம் மட்டும்தான் சுமப்பேன்.//
நல்லா எழுதி இருக்கீங்க, மூத்த மகனின் மனநிலையை...
முடிவில் அந்த கவிதை அருமை.....
வாழ்த்துக்கள்.......
கதை நல்லா வந்திருக்குதுங்க..
//அந்த இறக்கைகளில் கிடக்கும்
காய்ந்த குருதியின் கனம்..//
அருமை.. படிச்சுட்டு ஒரு நிமிசம் லைட்டா திகைக்க வைக்குது.
கதை ரொம்ப நல்லா இருக்கு.
Padma's feelings are really true.
Dear Vidya!
The story is well said, the emotions of the wife, Padma, is well portrayed. I really saw my mother in her. A touching story that tells the other side of the angry woman!!
Thanks,
Thiru
மிகவும் அருமையான நல்லதொரு கதையும் கவிதையும். மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது.
வார்த்தைகள் ஒவ்வொன்றும் பாதிக்கப்பட்ட மனதிற்கு ஆறுதலாக இருக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
ரொம்ப நல்லா வந்திருக்குங்க வித்யா.சென்ஷி சொன்ன வரிகள் குலுக்கியது.வாழ்த்துக்கள்.
அருமையான கவிதையை வைத்து கதையை திறம்பட சமைத்திருக்கிறீர்கள்.
உரையாடலுடன் ஆரம்பிக்கும் எந்த கதையாக இருந்தாலும்,வாசகர்களை சுண்டியிழுத்து விடும்.
அந்த நயம் உங்களுக்கு கைவந்திருக்கிறது. பாராட்டுகள்.
ரொம்ப நல்லா இருக்குங்க.
காய்ந்த குருதியின் கனம் கனம்
கதையில் இன்னும் கொஞ்சம் அடர்த்தி இருந்தா நல்லா இருக்குமோ?
:)
Post a Comment