புழுதி
சின்ன செங்கல் அடுப்பில் சருகுகள் எரித்து
சமைத்த மண் சோறு தின்ன நீ நான் என
பால்ய போட்டியெல்லாம் சிரித்தபடி மட்டுமே~
வீசி வீசி ஆடி உடைத்த மர ஊஞ்சல்கள்
டிநோபால் டப்பாவில் சேமித்த உடைசல் வளையல்கள்

தேடித் தேடித் பொறுக்கிய கல்லாங்காய் சரளை கற்கள்
புளியங்கொட்டை சோழி வைத்து ஆடிய பல்லாங்குழி
ரப்பர் பந்து வைத்து விளையாடிய முதுகு பங்ச்சர்
கண்ணாமூச்சி, ஷட்டில் காக், ஹீரோ கப் கிரிக்கெட்டு,
வாட் கலர், பேங்க், டிரேட், ஸ்கிப்பிங், தாயம், ஐஸ்பைஸ்
கொட்டில் கன்னுகுட்டி மேல உட்காந்து, அது பயந்தோட
சாணி மேல விழுந்து சொன்ன 'என் பெயர் மானம்
என்னைத் தொட்டால் பாவம்'

சிங்கபூரு வெத்திலைதான் சிறப்பென்று சொல்லும்
முதன் முதலாய் சிங்கப்பூர் போய் வந்த அம்பி மாமா
வாயில் ரத்தம் தெறித்த படி பேசும் 'சீவல்' தாத்தா
இராணுவத்தில் சமையல் செஞ்ச 'ஆர்மி' தாத்தா
எல்லோரும் நேயர் விருப்பப் பாடல் கேட்கும்
கரண்டு போன இரவுகள், விளக்கு வரும் வரை
வாசல் படியமர்ந்து நாங்கள் பாடிய "வாராய் நீ வாராய்"

'ஒரு கொடம் தண்ணி ஊத்தி' குளித்த குளக்கரை பிள்ளையார்,
காவேரியில் குளித்து கிட்ட வந்தால் கிள்ளி
விளையாடிய 'சிறு சிறு வானம்', மண் தோய்ந்த
காலோடு வந்த காவேரி மணலோடு ரேழிக்கு போனால்
"ஐயோ, வீடெல்லாம் மண்" என்று என் கால்துடைக்கும் சரோஜா
இரவில் போகாதே என்றதாலே போய் பார்த்த சந்திக்கரை
போயி நாங்கெல்லாம் நடுங்கிக்கொண்டே
ஆணி அடித்த பேயிருக்கும் ஆலமரம்

கூடத்துக் குதிருக்குள் நெல் ஊற்றும் மாடித்தரை ஓட்டை வழி,
நெல் புடைக்கும் ஜெயம்மா மேல் எறிந்த கற்கள்
அவர் முறமெடுத்து எமைப் புடைக்க மூச்சுவாங்கி ஓடிவர
"நொண்டி காலு ஜெயம்மா , நொண்டி நொண்டி வரம்மா"
என்று ஹோவென்று கத்தி 'பச்சை குதிரை' தாண்டி ஓடிய ஒட்டுமாடிகள்
திறந்தே கிடக்கும் வீடுகளின் வாசல் முதல் கொல்லை வரை
எங்கள் விளையாட்டு மைதானம்

திரௌபதி அம்மன் கோவில் வாசல் பங்க்கு தலை இரமேசு,
பயல் என்ற முதிர்கண்ணன், பாலு தியேட்டர் மணி,
ரைஸ் மில்லு ஜெயந்தி அக்கா, அங்கிச்சி பொண்ணு கலா அக்கா,
தோப்பு வீட்டு ராமக்கா, ஆறு பேரும் ஒன்னாவே
காணாமல் போனதுக்கு வந்த பரிகார மந்திரவாதி

வண்டிக்கார சீனுவின் வண்டி அச்சை கொண்டு வரைந்து
இச்சா இனியா காயா பழமா என்ற பாண்டி கோடுகள்
சிவராத்திரிக்கு ராமுழுதும் பாடசாலைத் திண்ணையில்
நாடகமாய் சபதமிடும் சரஸ்வதியும், அக்பர் சாஸ்திரியும்
அன்று எல்லோரும் கூடும் அந்த லாந்தக் கம்பம்
பந்தலிட்டு கம்பசுத்த காவடியோடு வரும்
பங்குனி உத்திர முருகன் பல்லாக்கு

எந்தவாசல் கோலம் எண்ணிக்கையில் அதிகமென
ஒவ்வொரு வாசலிலும் மலர்ந்த மார்கழி பூசணிப்பூக்கள்
தீபாவளிக்கு கூட வரும் கலர் மயில் கோலங்கள்
நான்தான் இந்த முறை என்று திண்ணை சுவற்றுக்கு
பொங்கல் சுண்ணங்-காவி பூசும் சுழற்சிமுறை
விளையாட்டுக்களே வாழ்க்கையான வெள்ளை ஷிம்மி நாட்கள்.

இவை எல்லாம், எங்க வீட்ல கலர் டீவி
என்ற நண்பன் வீட்டு சக்திமான் பாக்கும்
கருப்பு வெள்ளை டீவியில் டூபிளிகேட்டு "கலர் ஸ்க்ரீன்"
வந்த பின்னால் காணாமல் போனது

பிறிதொருநாள் பயணித்தேன் அவ்வழியே,
நகரம் தந்த மௌனம் துறந்து கேட்டே விட்டேன்
பழனி, ஸ்ரீனி, சாரு, மாரி எல்லாம் எப்படி இருக்காங்கடா?
ஒத்தைக் கேள்விதான், சென்ற வழியெல்லாம் கதை கதையாய்
இன்னும் சொல்லிக்கொண்டே போனான் ஹிந்தி டீச்சர் மகன்
மீன்காரனை மணந்தாளாம் சாருமதி,
டாக்டராகி யூரோப்பில் பழனியப்பன்
அமெரிக்காவில் செட்டில் ஆனான் ஸ்ரீநிவாசன்
சிமெண்ட்டு கடை செந்தில் கூட மும்பையிலாம்
கோவில் குருக்கள் வீட்டு முத்து சைனாவில் BPO நடத்துரானாம்

இப்பத்தான் குளிரூட்டிய குவாலிசின் ஜன்னல் திறந்தேன்
எதிரில் பல்லே இல்லாமல் வாய் பிளந்து
சிரித்தாள் என்னை வளர்த்த தாயம்மா சரோஜா
கார் சக்கரத்துப் புழுதிக்கு என் மூக்கு பொத்தி, பார்த்தால்
இன்னும் அப்படிதான் கிடக்கிறது மண் சாலை
நாங்க புரண்டு புரண்டு விளையாடிய புழுதியோடு.

புழுதி கூட பறக்கவில்லை இப்போது, ஏனோ
கண் மட்டும் கொஞ்சமாகக் கலங்கியது..

23 comments:

மண்குதிரை said...

ninaivukalai...,, -:)

வெ.இராதாகிருஷ்ணன் said...

நல்ல ஞாபக கற்பனை திறன் உங்களுக்கு.

கடைசி சில வரிகளில் எனது கண்களும் தான் கலங்கியது.

சிறு வயது கிராமத்து நினைவுகளை சில்லென்று மனதில் ஓடச் செய்தது.

அதுவும் வீட்டுப் படம் மனதில் ஏதோ செய்தது.

மிகவும் அருமை வித்யா.

R.Gopi said...

//சின்ன செங்கல் அடுப்பில் சருகுகள் எரித்து
சமைத்த மண் சோறு தின்ன நீ நான் என
பால்ய போட்டியெல்லாம் சிரித்தபடி மட்டுமே~
வீசி வீசி ஆடி உடைத்த மர ஊஞ்சல்கள்
.................
பொங்கல் சுண்ணங்-காவி பூசும் சுழற்சிமுறை
விளையாட்டுக்களே வாழ்க்கையான வெள்ளை ஷிம்மி நாட்கள்.//

ய‌ப்பா....எம்புட்டு விஷ‌ய‌ங்க‌ள் விதூஷ்.... உங்க‌ள் ஞாப‌க‌ச‌க்திக்காக ஸ்பெஷலா என்ன‌ சாப்பிட‌றீங்க‌ன்னு க‌ண்டிப்பாக‌ கேட்டு தெரிந்து கொள்ள‌த்தான் வேண்டும்...!!??

//இப்பத்தான் குளிரூட்டிய குவாலிசின் ஜன்னல் திறந்தேன்
எதிரில் பல்லே இல்லாமல் வாய் பிளந்து
சிரித்தாள் என்னை வளர்த்த தாயம்மா சரோஜா//

ந‌ல்ல‌ நினைவு.... அவ‌ள் இன்ன‌மும் அப்ப‌டியேதான் இருக்கிறாள் என்ப‌தை சொல்லாம‌ல் சொல்லிய‌ உங்க‌ள் சாம‌ர்த்திய‌ம்...!! ப‌லே...

//நாங்க புரண்டு புரண்டு விளையாடிய புழுதியோடு
புழுதி கூட பறக்கவில்லை இப்போது, ஏனோ
கண் மட்டும் கொஞ்சமாகக் கலங்கியது.//

ப‌டிக்கும் போது என‌க்கும் லேசா க‌ண் க‌ல‌ங்கிய‌தை உங்க‌ கிட்ட‌ ம‌ட்டும் சொல்றேன்..வித்யா...

ந‌ல்லா இருக்கு.......

(கூட‌வே ம‌ன‌சு ரொம்ப‌ பார‌மாக‌வும்...)

குடந்தை அன்புமணி said...

பழைய நினைவுகள் கண்முன் நிழலாடுகிறது உங்கள் இடுகையின் மூலம்...

மிஸஸ்.தேவ் said...

wow... very nice

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்குங்க இந்த கவிதை, என் பல நினைவுகளை கிளறி விட்டது இந்தக் கவிதை, இதில் குறிப்பிடப் பட்டிருக்கிற விளையாட்டுகள் மனிதர்கள் வீடுகள் மண் புழுதி எல்லாமும் எனக்கும் நெருக்கமானவை.

அ.மு.செய்யது said...

அசத்திட்டீங்க விதூஷ்...எத்தனை எத்தனை நினைவுகள் .....!!!!

பதிவுலகில் நிச்சயமாக இது குறிப்பிடத்தக்க கவிதையாக இருக்கும்.

sakthi said...

இது போன்ற கருத்துடன் ஒரு சிறு கவிதை எழுதி வைத்திருந்தேன்

உங்களின் அழகு கவிதையை பார்த்ததும் அதை அழித்துவிட்டேன்

அருமை வித்யா

ஆயில்யன் said...

கலக்கல்ங்க!

ஒவ்வொரு வரிகளுமே, - நினைவுகளில் நன்கு ஊறிப்போன விசயங்களை வெளிக்கொணர்தல் என்பது சில பல காலங்கள் ஆகக்கூடிய ஒன்று - அசத்தலாய் வெளிப்பட அமைதியாய் சில வரிகளை பின் தொடர்ந்து நினைவுகளில் என்னை அமிழ்த்துகின்றேன்!

பிரியமுடன்...வசந்த் said...

இதுவரைக்கும் இதுமாதிரி கவிதை நினைவுகள் படித்ததில்லை

நல்லாயிருக்குங்க வித்யா

SanjaiGandhi said...

அழகான நினைவுகள்.. அற்புதமா வார்த்தைகளில் வடிச்சிருக்கிங்க. பாராட்டுகள்.

பாலா said...

நீங்க குறிப்பிடற ஒவ்வொன்னையும் பத்தி தனியா கதையே எழுதலாம்
எல்லாத்தையும் கொட்டிடீங்க போல

பிரமாதம்

Vidhoosh/விதூஷ் said...

நன்றிங்க மண்குதிரை.
நன்றிங்க இராதாகிருஷ்ணன்
நன்றிங்க கோபி
நன்றிங்க அன்பு மணி
நன்றிங்க மிஸஸ் தேவ்
நன்றிங்க செய்யது
நன்றிங்க சக்தி - ஏன் அழிச்சீங்க? :( சின்ன வயது ஞாபகங்கள் ஒவ்வொன்னும் அழகுதானே!
நன்றிங்க ஆயில்யன்.
நன்றிங்க வசந்த்
நன்றிங்க சஞ்சய் காந்தி
நன்றிங்க பாலா
--வித்யா

வால்பையன் said...

நல்லாயிருக்கு!

ரீடரில் தெரியவில்லை!
என்னவென்று பார்க்கவும்!

சப்ராஸ் அபூ பக்கர் said...

நினைவுகள் கவி வடிவில் அருமையாக இருந்தது.... வாழ்த்துக்கள்...

" உழவன் " " Uzhavan " said...

பழைய நினைவுகளை நல்லா செதுக்கியிருக்கீங்க :-)

Vidhoosh/விதூஷ் said...

// வால்பையன் said...

நல்லாயிருக்கு!

ரீடரில் தெரியவில்லை!
என்னவென்று பார்க்கவும்!///

நன்றி வால்/ ஏதோ பிரச்சினை. இரண்டு நாட்களாக என்னால் லாகின் பண்ணவும் முடியலை. schedule செய்த போஸ்ட் மட்டும் நல்ல வேலை ரிலீஸ் ஆகிட்டது. இப்போ பரவால்லை. இன்று சரியகிடுச்சுன்னே நினைக்கிறேன்.

:(
வித்யா

Vidhoosh/விதூஷ் said...

சப்ராஸ் அபூ பக்கர், உழவன் -- ரொம்ப நன்றிங்க.

--வித்யா

"அகநாழிகை" பொன்.வாசுதேவன் said...

கவிதை வாசித்தேன் மிகவும் அருமையாக இருக்கிறது.

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்குங்க வித்யா...
சமீபத்தில் நான் வாசித்த சிறந்த மலரும் நினைவுகள்.சொல்லபோனால் ஆக சிறந்த!
கொஞ்ச நேரம் ஒண்ணுமே ஓடலை.கண் கலங்கி படைக்கிற எதுவும்,வாசிப்பவர்களையும் அதே பாதிப்பு ஏற்படுத்தும்தான்.நேரில் எனில்,உங்கள் கைகள் ரெண்டையும் பிடித்து கொண்டிருப்பேன்.மணிக்கட்டோடு லாவிக்கொண்டு கண்கலங்கி சிரிக்கும் என் மங்கை அக்கா போல.

ரௌத்ரன் said...

நல்லாயிருக்கு :)

பழைய நினைவுகளை அசை போட வைத்தது...

நன்றி.

Vidhoosh/விதூஷ் said...

"அகநாழிகை" பொன்.வாசுதேவன் -- ரொம்ப நன்றிங்க. :)

பா.ராஜாராம்: வாங்க சாரே! மங்கை அக்கா போல என்ன? அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே. :) ரொம்ப நன்றிங்க தம்பி.


ரௌத்ரன் : வாங்க. ரொம்ப அருமையான கவிதைகளுக்கு சொந்தக்காரர் நீங்க. :) நன்றிங்க.


--வித்யா

Nithya said...

I am so happy I was also a part of your childhood. Tears rolled down my eyes after reading this. What a wonderful life that was.

Sorry can't write like you in tamil.

Post a Comment