மஹாபாரதத்தில் வெற்றிக்கு இரகசியம்

நன்றி: படங்களுக்கு போட்டோ பக்கெட்டுக்கு நன்றி.

இதில் பெரும்பாலான பகுதிகளை ஈமெயில்-லில் சமஸ்கிருதத்தில் இதை அனுப்பிய யாரோ (ரமேஷ் என்று மட்டும் இருந்தது) - அவருக்கு ரொம்ப நன்றி. இந்தப் பதிவை எழுதத் தூண்டியதும் அவர் அனுப்பிய செய்தியே. அதெப்படி ஈமெயில் முகவரி தெரியாமல் அனுப்புகிறார்கள் என்று தெரியவில்லை :(

தமிழாக்கம் செய்தது, மற்றும் சில பகுதிகளை இணைத்தது மட்டுமே என் வேலை:)

===============================================================

இந்தியாவின் இரண்டாவது மாபெரும் இதிகாசமான மஹாபாரதம், "பாரதத்தில் சொல்லாதது பாரதத்தில் இல்லை" என்று கூறுமளவுக்கு பரந்த விரிந்து அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியது. இது கி.மு.3000-ஆம் ஆண்டு ஹரப்பா நாகரீகம் தோன்றிய சமயத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.

மஹாபாரதம் மூன்று முறை விவரிக்கப்பட்டுள்ளது.
  • ஜெயம் - வைசிய மஹரிஷியால் விநாயகருக்கு சொல்லப்பட்டது
  • பாரதம் - வைசம்பாயண மஹரிஷியால் ஜன்மேஜயனுக்கு சொல்லப்பட்டது
  • மஹாபாரதம் - சூதர் (அ) சௌதர் (அ) உக்கிரஸர்வர் என்ற மஹரிஷியால் நைமிசாரண்யத்தில் உள்ள ரிஷிகளுக்கு விவரிக்கப்பட்டது (நைமிசாரண்யம் உத்திரப்பிரதேசத்தில் சீதாபூர் மாவட்டத்தில் உள்ளது).
நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பல விஞ்ஞானச் சான்றுகளை உள்ளடக்கியுள்ளது. பாரதத்தில் கூறப்பட்ட பெரும்பான்மையான விஷயங்கள் பின்பு விஞ்ஞானிகளால் / மருத்துவர்களால் உண்மைதான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் (patent)பேடன்ட் என்னவோ இன்னும் அவர்கள் பெயரிலேதான் இருக்கிறது. சரி அதை விடுங்கள்.
  • விண்வெளி பற்றியக் குறிப்புக்களில் யுரேனஸ் (ஸ்வேதா) மற்றும் நெப்ட்யூன் (க்ஷரகா) போன்றவையும்,
  • புவியியல் குறிப்புக்களில் கம்போடியா (காம்போஜம்), கசாக்கிஸ்தான் மற்றும் ஸ்கான்திநேவியா (உத்திரகுரு) ஆகியவற்றைப் பற்றியக் குறிப்புக்கள்,
  • கணிதத்தில் 10, பத்தின் பவர் 10 to the power (+16) முதல் 10 to the power (- 16) வரையான எண்வரிசைகள்
  • போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இன்றும் நாம் நியூக்ளியர் வெபன்ஸ் / கெமிக்கல் வெபன்ஸ் என்று கூறப்படும் அணு / இரசாயன ஆயுதங்களோடு இணைத்துப் பார்க்கும் அளவுக்கு ஒற்றுமையுள்ளதாக இருக்கிறது,
  • போர் முறைகள், போர் அமைப்புக்கள் மற்றும் போர் தந்திரங்கள்,
  • ஆன்மீகம், மனோதத்துவம், சமூகவியல், இறையாண்மை, வாழ்வியல் நெறிகள், அரசியல், மேலாண்மைத்தத்துவங்கள் (மேனேஜ்மண்ட் டெக்னிக்ஸ்)
இது போன்ற நாம் என்னவோ இப்போதுதான் கண்டுபிடித்ததாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும், இவையனைத்துமே பாரதத்தில் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன.

சரி, அதென்ன பாரதத்தில் வெற்றியின் இரகசியம்?

======

கௌரவ-பாண்டவ படைபலம் - ஒரு ஒப்பீடு

கௌரவர்கள் - 11 அக்ஸௌஹிணி
பாண்டவர்கள் - 7 அக்ஸௌஹிணி

சே, இவ்வளவுதானா என்கிறீர்களா? ஒரு அக்ஸௌஹிணி என்பது என்ன தெரியுமா?
  • 21870 தேர்கள் - இதில் ஒவ்வொரு தேருக்கும் ஒரு அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட குதிரை, தேரோட்டி மற்றும் ஒரு வீரர்
  • 21870 யானைகள் - ஒரு யானைப்பாகன் மற்றும் ஒரு வீரர்
  • 65610 குதிரைகள் - வீரர்கள்
  • 109350 காலாட்படை (மனிதர்கள் - ஆண் மற்றும் பெண்கள்)
இது 1:1:3:5 என்ற விகிதத்தில் இருப்பதையும் காணுங்கள்.

இதை தவிர படை குழுத்தலைவர்கள், தளபதிகள், சேனாதிபதிகள், அரசர்கள், மந்திரிகள், ஆலோசகர்கள் என அதிகம் பேர் உள்ளனர்.

======

தலைமை ஏற்றவர்கள்

(இது முதலிலிருந்து கடைசிவரை வரிசை தனிநபர் ஆற்றல் சார்ந்து அமைந்துள்ளது)

கௌரவர்களுக்கு பீஷ்மர், துரோணர், கர்ணன், சல்லியன், க்ருபாச்சாரியர், அஸ்வத்தாமன், துரியோதனன்

பாண்டவர்களில் அர்ஜூனன், பீமன், த்ருஷ்டத்தும்னன், அபிமன்யூ, கடோத்கஜன், சிகண்டீ, சத்யகீ

======

பிண்ணனி

பாண்டவர்கள் - 13 வருடங்கள் நாடு கடத்தப்பட்டனர். தனியாக இராஜ்ஜியம் ஏதுமில்லை. அவர்களுக்கு அரசியல் மற்றும் பொருளாதார உதவிக்கு பக்கபலமாக அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களே அமைந்திருந்தனர். பாஞ்சாலர்கள், யாதவர்கள், மகதர்கள், சேதீக்கள் போன்றவர்கள் மட்டுமே இதில் அடக்கம்.

கௌரவர்கள் - 13 வருடங்கள் ஆட்சியில் இருந்தனர். துரியோதனன் இளகிய மனம் கொண்ட, நல்லாட்சி புரிந்த அரசனாக இருந்திருக்கிறான். குடிமக்கள் பாண்டவர்கள் ஆட்சியில் இல்லாததால் துன்புற்றதாகவெல்லாம் கூறப்படவில்லை. துரியோதனனிடம் ஹஸ்தினாபுரம் போன்ற செல்வச்செழிப்பு மற்றும் வளமை மிகுந்த இடங்கள் இருந்தாலும், பாண்டவர் தம் கடின உழைப்பால் மேம்படுத்திய இந்திரப்பிரஸ்தம் ஹஸ்தினாபுரத்தை விட அதிக வளமையும் அழகும் கொண்டதாக இருந்தது. இந்திரப்பிரஸ்தத்தையும் தனதாக்கிக் கொண்டான் துரியோதனன். துரியோதனனுக்காக கர்ணன் நாடெங்கும் போரிட்டு முழு நாட்டையும் துரியோதனனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.
======

கௌரவ-பாண்டவ போர் வந்த காரணம்


கௌரவர்கள் சார்பாக துரியோதனன் சொன்னது - போரில்லாமல் ஒரு ஊசி முனையளவு நிலம் கூட தரமாட்டோம், என்றான். துரியோதனன் போர் செய்வதிலேயே குறியாக இருந்தான். அந்த ஒன்று மட்டுமே நிகழும், நிகழ வேண்டும் என்றே விரும்பினான். அவன், எல்லாம் தனக்கே உரிமையானது என்பதால், சூழ்ச்சியாலோ, அநீதி இழைத்தோ, தனக்குக் கிடைத்த அனைத்தையும் தானே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக எந்தச் செயலையும் செய்யத் தயாராக இருந்தான்.

பாண்டவர்கள் சார்பாக யுதிஷ்டிரன் சொன்னது - நாய் எப்படி மாமிசத்துண்டிற்காகப் போராடுகிறதோ அதே போல நம் ராஜ்ஜியத்திற்காக போராடுவோம் என்றான். பாண்டவர்கள் இழிவுபடுத்தப் பட்டார்கள், அவர்களது மனைவி அவமானப்படுத்தப்பட்டாள். அவர் ராஜ்ஜியம் பறிக்கப்பட்டது. இருந்தாலும் யுதிஷ்டிரன் போரை தவிர்க்கவே விரும்பினான். ஐந்தே ஐந்து கிராமங்களைக் கொடுத்தால் கூட போரை நிறுத்துவதாக அறிவித்தான் யுதிஷ்டிரன்.
======

போரின் பலன்

இவ்வாறு, 18 நாட்கள் போர், 10 நாள் பீஷ்மர், 3 நாள் துரோணர், 1 1/2 நாள் கர்ணன், 1/2 நாள் பொது, 1 நாள் சல்லியன், 1 இரவு அஸ்வத்தாமன் என்று நடந்தது.

இப்போரில் பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் அவனது மகன்கள், சல்லியன், பாகதத்தன், புரீஸ்வரன், சசர்மன், ஜயத்ரதன், துச்சாதனன், சகுனி, உலூகன், துரியோதனனின் 99 சகோதரர்களுமாகிய அனைவருமே கொல்லப்பட்டனர்.

பாண்டவர்களில் துருபதன், விராடன் மற்றும் அவனது மகன்கள், அபிமன்யூ, கடோத்கஜன், ஐரவன் ஆகியோர் கொல்லப்பட்டனர். 18-ஆம் நாளிரவு அஸ்வத்தாமன் பாண்டவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது கொன்றான்.
======

பாண்டவர்கள் எப்படி வென்றார்கள்?

கௌரவர்கள் சார்பாக கர்ணன் நாடெங்கும் போர் செய்து அடக்குமுறை மூலம் பல்வேறு இராஜ்ஜியங்களை வென்று கைப்பற்றினான். கௌரவர்கள் இதனால் அதிப்படியான உயிர்சேதம், ஆற்றல் இழப்பு, பொருள் விரயம் மற்றும் புதிய பகையையும் உண்டாக்கிக் கொண்டனர்.

பாண்டவர்கள் நாடிழந்து மறைந்து வாழ வானப்ரஸ்த்தம் செய்த போதும் தன்னுடைய பலவீனங்களை அடையாளங்கண்டு பலமாக்கிக் கொண்டனர். யுதிஷ்டிரன் இன்னொரு முறை சூதாட்டத்திற்கு அழைக்கப்பட்டால் ஜெயிக்கும் வண்ணம், கந்தர்வ ச்சத்ரசேனா என்பவரிடமிருந்து சூதாடக் யாருமே அவனை ஜெயிக்க முடியாதளவு கற்றறிந்தான். மேலும் பல்வேறு ரிஷிகளையும் முனிவர்களையும் சந்தித்து அவர்அர்ஜுனன் திவ்யாஸ்திரங்களை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றான். பீமன் அனுமனின் சகோதரனைச் சந்தித்து தன் பலத்தை மேம்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபட்டான்.

உங்கள் பலவீனங்களை அடையாளங் காணுங்கள். அதை பலமாக மாற்றுங்கள்.
======

நட்பு / உறவுகள்

கௌரவர்கள் ஒரே ஒரு தலைவனைக் கொண்டு அவன் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. பழைய உறவுகளான காந்தாரம் (சகுனி), சிந்து (ஜயத்ரன்) மற்றும் காம்போஜம் (பாகதத்தன்) ஆகியோரைத் தவிர புதிய நட்புக்கள் எதுவுமே உருவாக்கவில்லை. மாறாக அடக்குமுறை மூலம் புதிய பகைவர்களை உண்டாக்கினார்கள்.

பாண்டவர்கள் தனக்கென்ற அதிகாரம் ஏதுமின்றி இருந்தாலும், பாஞ்சாலம் (திரௌபதி), துவாரகை (சுபத்திரை), மகதம் (விஜயா - சகாதேவன் மனைவி), சேதீ (கரேன்மயீ - நகுலன் மனைவி), காசி (பலாந்தாரா - பீமன் மனைவி), காகேயம் (தேவிகா - யுதிஷ்டிரன் மனைவி), மத்ஸயம் (உத்தரா - அபிமன்யூ மனைவி), ராக்ஷஸர்கள் அனைவரும் (ஹிடம்பீ - பீமன் மனைவி), நாகர்கள் அனைவரும் (உலூபி - அர்ஜுனன் மனைவி) போன்ற திருமண பந்தங்கள் கொடுத்த உறவுகள் இந்தியா முழுதும் பரவியிருந்தனர்.

சான்றோர் மற்றும் ஆற்றல் மிக்கவரின் நட்பை / உறவைப் பேணுங்கள்

======

தலைமை

கௌரவர்களுக்கு ஒரு நேரத்தில் ஒரே ஒரு தலைவன் தான் படையை நடத்திச் சென்றான். அவனுக்கு மட்டுமே 11 அக்ஸௌஹிணி அனைத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் முறையே பீஷ்மர், துரோணர், கர்ணன், சல்லியன் மற்றும் அஸ்வத்தாமன் ஆவார்கள். இவர்களும் கடமையால் கௌரவர்கள் சார்பில் இருந்தாலும் மனத்தால்/உணர்வால் பாண்டவர்களுக்கே அனுகூலமாக இருந்திருக்கிறார்கள்.

பாண்டவர்கள் ஏழு அக்ஸௌஹிணிக்கும் ஒவ்வொருவரென ஏழு தலைவர்கள் இருந்தனர், அவர்கள் முறையே மத்ஸய அரசரான விராடன், பாஞ்சால அரசரான துருபதன், மகத அரசரான சகாதேவன், சேதீயின் அரசரான த்ரஷ்டகேது, துவாரகையிலிருந்து வந்த ஒரே வீரனான சத்யகீ, பாஞ்சால இளவரசரான சிகண்டீ. த்ருஷ்டத்யும்னன் படைத்தளபதியாகவும், அர்ஜுனன் போர்தலைவனாகவும், கிருஷ்ணர் போர் ஆலோசகராகவும், அர்ஜுனனுக்கு சாரதியாகவும் இருந்ததாக கூறுகிறது.

======

குழுவுணர்வு / ஒத்த சிந்தனை


கௌரவர்களிடம் குழுவுணர்வோ ஒருமித்த சிந்தனையோ இல்லை. அவரவருக்கு தனிப்பட்ட சொந்த விஷயங்களுக்காக போரிட்டனர். பீஷ்மர் ஹஸ்தினாபுர அரியணையில் இருக்கும் அரசனைக் காக்க சபதமெடுத்ததாலும், துரோணரும் கிருபாச்சாரியாரும் கடமையுணர்வாலும், சல்லியன் பாண்டவர்கள் சபையிலிருந்து துரியோதனனால் ஏமாற்றப்பட்டு சூழ்ச்சியால் தம் பக்கம் இழுத்துக்கொண்டதாலும், கர்ணன் அர்ஜுனன் மீது கொண்ட பகையுணர்ச்சியாலும், துரியோதனன் மீதுள்ள நட்பின் நன்றிக்கடனுக்காவும் கூடி இருந்தனர். ஆனாலும் இவர்களுக்குள்ளே ஒருவருக்கொருவர் பிடிக்காமலும், பகையும் உள்ளுக்குள்ளேளே இருந்தது. அதாவது பீஷ்மருக்கு கர்ணனும், சகுனியும் விரோதிகள். சகுனிக்கு கர்ணன் விரோதி. கர்ணனுக்கு சல்லியன் விரோதி. சல்லியனுக்கு பீஷ்மர் விரோதி. இதனால் ஈக்களையும், கொசுக்களையும், வண்டுக்களையும் ஒரே குடுவையில் இட்டால் எப்படி சத்தமாக இருக்குமோ அதேபோல இவர்கள் கூடாரத்தில் எப்போதும் பகையுணர்ச்சியின் ரீங்காரம் கேட்டுக்கொண்டே இருந்தது.

பாண்டவர்களே, ஒரு குழு ஒரே நோக்கம். அனைவரும் கிருஷ்ணர் மற்றும் யுதிஷ்டிரன் என்ன சொன்னாரோ, அதன்படியே நடந்துகொண்டனர். போரிடச் செல்லும் போது, அர்ஜுனன் மற்றும் பீமன் சொற்படியே மற்ற அனைவரும் நடந்தனர். சகோதரர்கள், மாமன், மாமனார், கொழுந்தன் என அனைவருமே உறவினர்கள். அனைவருமே முடிவெடுக்கும் தருணங்களில் ஒன்றாவே இருந்தார்கள்.

உங்கள் பொறுப்புக்களை பகிருங்கள்.

========

தனிநபர் கருத்துக்கள்/நம்பிக்கைகள்

கௌரவர்கள் சபையில், துரியோதனனைத் தவிர வேறு யாருக்கும் போரில் விருப்பமில்லை. அவனைத் தவிர அவன் குழுவில் இருந்த தலைவர்கள் அனைவருமே பாண்டவர்கள் மீது அபிமானம் கொண்டவர்கள்.

  • பீஷ்மருக்கு பாண்டவர்கள் பேரக்குழந்தைகள் என்பதால் இவர் ஒவ்வொரு நாளும் போரில் ஆயிரம் பேரைக் கொன்றாலும் பாண்டவர்களைக் கொல்ல மாட்டேன் என்று சபதம் பூண்டார்.
  • துரோணருக்கு பாண்டவர்கள் மாணவர்கள், இவரும் பாண்டவர்களை சிறைபிடிப்பதாகவும் கொல்ல மாட்டேன் என்றும் சபதம் பூண்டார்.
  • சல்லியன் (நகுல சகாதேவனின் தாய்மாமன்) கர்ணனின் சாரதியாக இருந்தான். இவன் துரியோதனனின் சூழ்ச்சியால் கௌரவர்களை ஆதரிக்கும் படி ஆனதால், கௌரவர்கள் பக்கம் இருந்தாலும், கர்ணனை சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் தோல்விபயம் மற்றும் எதிர்மறை சிந்தனைகளைக் கொடுத்து அவன் ஆற்றலைக் குறைத்தான். இதனால் இவன் மறைமுகமாக பாண்டவர்களையே ஆதரித்தான்.
  • கர்ணன் பாண்டவர்களில் மூத்தவன், அதனால் குந்தியிடம் அர்ஜுனனைத் தவிர வேறு யாரையும் கொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்கிறான். தாயே இந்தப் போர் முடியும் போது உங்களுக்கு நிச்சயம் ஐந்து மகன்கள் மிஞ்சுவார்கள் என்று இவன் சொல்லும் பகுதிகளைப் படிக்கும் போது, கர்ணன் மீது அளவில்லா பாசம் ஏற்படும் நமக்கு. கண்ணீரையே வரவழைக்கும் பகுதிகள் அவை. கர்ணனைப் பற்றி எழுதுவதென்றால் பக்கங்கள் போதாது.

ஆனால் பாண்டவர்களோ திட்டமிட்ட செயல்வடிவமும், யார் என்ன செய்ய வேண்டும் என்ற நோக்கமும், குழுவுக்கான செயல்பாடுகளையும் ஏற்கனவே நிர்ணயித்தனர். அதாவது, த்ருஷ்டத்யும்னன் துரோணரையும், சிகண்டீ பீஷ்மரையும், சத்யகீ புரிஸ்வரர்களையும், அர்ஜுனன் கர்ணனையும், பீமன் துரியோதன் மற்றும் அவன் சகோதரர்களையும், சகாதேவன் சகுனி மற்றும் அவன் மகன்களையும், நகுலன் கர்ணனின் மகன்களையும் குறித்து போரிட முடிவு செய்திருந்தனர். சூழ்நிலைக்கேற்ப செயல்முறைகளை மாற்றினார்கள் ஆனால் நோக்கத்தை கடைசி வரை மாற்றவேயில்லை.

ஒரே நோக்கமுடைய குழுவுணர்வை வளருங்கள்.
நோக்கங்களையும் செயல்பாடுகளையும் திட்டமிடுங்கள்.

========

ஈடுபாடு
  • கௌரவர்களிடம் ஏற்கனவே சொல்லியபடி பாண்டவ அபிமானிகளே அதிகம் இருந்தனர். இதைப் பற்றி மேலும் சொல்வதாயிருந்தால், பீஷ்மர் போரின் நோக்கத்திற்கு சம்பந்தமேயில்லாத, சாதாரணப் போர் வீரர்களை மட்டுமே கொன்று போரை வளர்த்தார். இவர் தனது பாரபட்சத்தால், சிகண்டீ போல முழுமையான ஈடுபாட்டுடன் போர் புரியவில்லை. தன்னைக் கொல்லும் இரகசியத்தை பாண்டவர்களிடம் மட்டும் கூறுகிறார்.
  • துரோணரும் தன்னிடம் அஸ்திரங்கள் இருக்கும் வரை மட்டுமே போரிடுவதாகக் கூறியதன் மூலம், அவரை வீழ்த்தும் இரகசியத்தைத் தெரிவிக்கிறார். கிருஷ்ணரின் தந்திரத்தால், அஸ்வத்தாமன் இறந்த செய்தி கேட்டதும் அஸ்திரங்களை விடுத்தார்.
  • கர்ணனோ பீமனையும் யுதிஷ்டிரனையும் சந்தர்ப்பம் வாய்த்தும் கொல்லவில்லை. அவன் தன் கவச குண்டலங்களை போருக்கு முன்பே தானம் செய்கிறான். மேலும் துச்சாதனனை பீமன் கொல்லும் போது, கர்ணன் அவனைக் காப்பாற்றவில்லை.
  • சல்லியனே கர்ணனை தாழ்த்திக்கொண்டே இருந்தான்.

  • பாண்டவர்களிடமோ, 16 வயதேயான அபிமன்யூவோ, 13-ஆம் நாள் போரில் சக்கரவியூகத்தை உடைத்து, 7 மகாரதிகள் (பெரும் வீரர்கள்) சேர்ந்து பகல் முழுதும் போரிட்டு அவனை வீழ்த்தினர்.
  • கடோத்கஜன் இறக்கும் போது கூட, தன் பெருத்த உருவத்தோடு, அதிககூட்டமாக கௌரவ வீரர்கள் இருக்கும் பக்கமாக விழுந்தானாம். இதனால் கௌரவர்களுக்கு அதிக குதிரை மற்றும் போர்வீரர்கள் சேதம் மிகுந்ததாம்.
  • யுதிஷ்டிரனோ கர்ணனை எதிர்கொள்ள முடியாதென்றாலும், குழுவுக்கு தைரியமளிக்க போருக்குச் சென்றான். மேலும் சில சந்தர்ப்பங்களில் பொய்யுரைத்தும், உண்மையைத் திரித்துக் கூறியும், குழுவின் நன்மைக்காக தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்தான்.
  • கிருஷ்ணரோ, துரியோதனனுக்கு தான் ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று அளித்த வாக்கையும் மீறி இருமுறை ஆயுதங்களை எடுக்கிறார். ஆனால் அர்ஜுனன் அவரைத் தடுத்து விடுகிறான்.

தனிப்பட்ட விருப்பங்கள் குழுவின் நோக்கத்தை மீறக்கூடாது. தனிமனித ஆற்றலைக் காட்டிலும் நோக்கத்தைக் குறித்து செயல்படும் தனிமனிதரின் ஈடுபாடே முக்கியம். உங்களால் இயலாது என்றாலும் உங்கள் குழுவுக்கு நம்பிக்கை அளிக்க கடினமான செயல்களைச் செய்து காட்டுங்கள்.

========

மேலும் கிருஷ்ணர் பாண்டவர்கள் பலங்குறைந்தும் மனத்தைரியம் இழந்து காணப்பட்டபோதெல்லாம் அதை சரி செய்கிறார். யுதிஷ்டிரனோ அடக்கி வாசித்து ஜெயிப்பவன். போரின் முதல் நாளன்று கௌரவர் கூடாரத்திற்கு ஆபத்தையும் பொருட்படுத்தாமல் சென்று, தன் குடும்பத்தின் ஆறு மூத்தவர்களிடம் ஆசி பெறச் செல்கிறான். உண்மையாக இவன் அங்கு போரின் முதல் நாள் ஏன் போக வேண்டும்? அங்கு போய் அந்த ஆறு ஆற்றல் மிக்க சான்றோர்களிடமும், ஆசியும் பெற்று, அவர்கள் பாசமிகுதியால் அவர்களை வெல்லும் இரகசியத்தை கூற அதையறிந்து வந்தான். மேலும் அங்கு குழுமியிருந்த சபையோரிடம், துணிந்து எப்போது வேண்டுமானாலும் பாண்டவர்கள் கூடாரத்திற்கு வந்து அவர்களோடு சேர்ந்து கொள்ளலாம் என்று அறைகூவுகிறான். யுதிஷ்டிரனுக்கு கௌரவர்களிடம் ஒற்றுமை இல்லை என்பது நன்றாகத் தெரியும். இது கிடைத்தவரைக்கும் லாபம் என்ற கடைந்தெடுத்த போர்தந்திரம். இம்முறை திருதராஷ்டிரனின் வேறொரு மகனான யுயுத்சு என்பவன் கட்சி மாறுகிறான். இவன் மூலம் யுதிஷ்டிரன் கௌரவர்களைப் பற்றியும், அவர்களது பலம் மற்றும் பலவீனங்களையும் அறிகிறான்.

சரியான தலைமை குழுவின் வெற்றிக் காரணமாகிறது.
சரியான கணக்கிட்டு அபாயங்களை எதிர்கொள்ளுங்கள். எதிரிகளின் பலவீனத்தைப் பயன்படுத்தி அவர்களை வீழ்த்தும் வழியைக் காணுங்கள்.

=========

வாழ்க்கை முறை

கௌரவர்கள் அரண்மனைச்சூழலில், அதிகாரம் செலுத்தி, புகழ், துணிச்சல் எல்லாம் பெற்று, சமூக நடைமுறைகளை அறியாமலேயே இருந்தனர்.

பாண்டவர்கள், குழந்தைப்பருவத்தில் (5-13 வயது) ஹிமாலயத்தில் குருகுலம் பயின்றனர். ஒரு வருடம் குரு-பாஞ்சாலத்தில் மறைந்திருந்தனர். 12 வருடம் வனவாசமும், 1 வருட அஹ்யாதவாசமும் அவர்களுக்கு பல இன்னல்களையும் துன்பங்களையும் தாண்டி வரக் கற்றுக் கொடுத்தது. நிதர்சனங்களை சந்தித்தனர். பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து, சன்னியாசிகள், ஆச்சாரியார்கள், குருமார்கள், யோகிகள், வேதிகர்கள், சுரங்கம் செய்பவர், உழவர், குயவர், தச்சர் போன்ற அனைத்து தொழில் செய்யும் மக்களையும் சந்தித்து, அவர்களது தொழில் நுணுக்கங்களையும் கற்றறிந்தனர். ராக்ஷஸர்கள், காந்தர்வர்கள், அப்சரஸுகள், நாகார்கள் என உத்திரகுரு, வங்காளம் போன்ற பகுதிகள் அனைத்திலும் உறவுகளைப் பெறுக்கினர்.

நிதர்சனத்தை உணர்ந்து எதையும் தேவையில்லை என்று ஒதுக்காமல் கற்றறியுங்கள். தேவையான நேரத்தில் ஒப்பீடு செய்து பார்க்க எளிதாக இருக்கும். உறவுகளை வளருங்கள்.

==========

குழுவில் பெண்களின் பங்கேற்பு

கௌரவர்கள் கூடாரத்தில் பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார், த்ருதராஷ்டிரன், விதுரன், சகுனி, துரியோதனன், கர்ணன், துச்சாதனன் என அனைவருமே ஆண்கள். அதனால் முடிவெடுக்கும் செயலில் ஆளுமையுணர்வும் அதிகாரமுமே மேலோங்கியிருந்தது. இதனால் அதிகாரமும் பகைமையும் உட்பூசலும் அதிகரித்தது.

பாண்டவர்களுக்கு உதவியவர்கள் எல்லோருமே அவர்களின் மனைவி வீட்டைச் சார்ந்தவர்கள்.
  • குந்தி சொல்வதை வேதவாக்காக யுதிஷ்டிரன் மதித்தான். அவள் சொல்லே தன் தர்மமாக கருதினான்.
  • திரௌபதியோ பாண்டவர்கள் எதைச் செய்தாலும் அதற்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருந்தாள். பாண்டவர்களோடான அவளது உரையாடல்களைப் படிக்கையில் இப்போரில் அவளது முடிவுகள் எத்தனை தூரம் சென்று வெற்றிப் பாதையை காட்டியிருக்கின்றன என்றறியமுடிகிறது.
உங்கள் குழுவில் சமமான அளவில் (1:1 விகிதம்) பெண்களைக் கொள்ளுங்கள். இதனால் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்கும் போதெல்லாம் நிதானமாக உணர்வுபூர்வமாக ஆலோசனை கூற பெண்கள் இருப்பார்கள்.

========


இந்தப் படங்களில் மகாபாரத காலத்தில் காணப்பட்ட இந்தியா (நன்றி விக்கிபீடியா). படத்தை கிளிக் செய்தால் இன்னும் விபரமாகப் பார்க்கலாம்.








.

10 comments:

வால்பையன் said...

ரைட்டு அடுத்த கதை!

நடக்கட்டும் நடக்கட்டும்!

நான் ஓரமா நின்னு வேடிக்கை பார்க்கிறேன்!

Radhakrishnan said...

நல்லதொரு அலசல். இதை அனைத்தையும் 'விதி'எனும் ஒரு வார்த்தையில் அடக்கிவிடலாம்.

ஒவ்வொரு விசயத்தையும் குறிப்பிட்டு எவ்வாறு இருக்க வேண்டும் என சொன்னவிதம் மிகவும் நன்றாக இருந்தது.

மஹாபாரதத்தைச் சுருக்கமாக ஆனால் விபரமாக அறிந்து கொள்ள முடிந்தது.

போர் முறை தந்திரங்களைக் காட்டிலும், நட்பு, பாசம் போன்றவை பாண்டவர்கள் வென்றிட பெரிதும் பங்கெடுத்து இருக்கின்றன. இதே நட்பு பாசம் துரியோதனனிடம் இருந்திருந்தால் இப்படியொரு இதிகாசம் எழுதிட வாய்ப்பில்லாது போய் இருக்கும்.

துரியோதனனைக் காட்டி தலைக்கனம் கிருஷ்ணரின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டது எனச் சொல்வார்கள். ஆனால் கிருஷ்ணருக்குத் தன்னைவிட எவரும் உயர்ந்தவர் இருக்கக்கூடாது என்ற எண்ணம் இல்லாமல் இல்லை என்பதையும் இந்நிகழ்வு காட்டும் என்பதை குறித்துக் கொள்வாரில்லை.

தவறு செய்தவனை விட தவறு செய்ய துணையாய் இருந்தவர்கள்தான் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அந்த வழியில் துரியோதனன் தவறிப்போக காரணமான அனைவருமேத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

துரியோதனனின் மனதில் வெறுப்பை உருவாக்கிய ஆச்சார்யார்கள் கடும் கண்டனத்துக்கு உரியவர்கள். இதையெல்லாம் ஏன் இந்த மஹாபாரதம் பற்றிய அலசல் சொல்ல மாட்டேன்கிறது, காரணம் தவறு செய்பவனை அப்படியே ஓரங்கட்டும் மனப்பான்மை நமக்கு இருப்பதால்தான்.

தவறு நடப்பது அறிந்தும் அதைத் தடுக்க வழியின்றி மெளனமாக இருப்பவர்களுக்கு உயர்நிலை தருவது வேடிக்கையே.

நானே எல்லாம் எனும் சொல்லும் கிருஷ்ணர் சற்று யோசித்து இருந்தால் இப்படியொரு போர் அன்று ஏற்பட்டிருக்காது. ஆனால் கிருஷ்ணரின் அவதாரமே கொலைநோக்குடன் தொடங்குகிறது, தொலைநோக்குடன் அல்ல.

அதுசரி, இப்படியெல்லாம் எழுதினால் நான் எழுதுவது தொலைநோக்குப் பார்வையாக ஆகாதே!

மிக்க நன்றி வித்யா.

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்பையன்களுக்குக் கதைன்னா ரொம்பப் பிடிக்கும்னு யாரோ சொல்லியிருக்காங்க, அப்படித்தானே விதூஷ்? அதான் கதை சொல்ற இடங்களில் எல்லாம் ஓரமா நின்னு கேக்கறார்!

அப்புறம், இந்த குழு குழுத் தலைவன் மாதிரி வார்த்தைப் பிரயோகங்களை வால்ஸ் தொடர்ந்து மேற்கொண்டிருப்பதால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்திருக்கக் கூடும்!

யார் அது? ரமேஷ்? விதூஷ்?

கிருஷ்ண மூர்த்தி S said...

நானே கண்டுபுடிச்சுட்டேன்! ரமேஷ் இல்லை நரேஷ்! அவர் சம்ஸ்க்ருதத்தில் எழுதவில்லை, தமிழில் தான் விரிவாக எழுதிக் கொண்டிருக்கிறார்!

கதை வேண்டாம், நிர்வாகம் எப்படின்னு கேக்குற வால்பையன்களுக்கு மட்டும் இதோ சுட்டி!

http://nareshin.wordpress.com/

Vidhoosh said...

அட. ரொம்ப நன்றி கிருஷ்ணமூர்த்தி. இதப் பாத்தீங்களா. ஆனா எனக்கு சமஸ்கிருதத்தில்தான் forwarded mail -லில் இது வந்தது. நினைவில் இருந்ததை எழுதினேன். தமிழிலிருந்து, மீண்டும் சமஸ்கிருதம் போயி, திரும்பி தமிழுக்கே வந்து, கடைசியில், கண்டுபிடுச்சாச்சு, உண்மையான எழுத்தாளரை. வாழ்க நரேஷ்.

மீண்டும் ஒருமுறை நன்றி கிருஷ்ணமூர்த்தி.
:)
வித்யா

Vidhoosh said...

கிருஷ்ணமூர்த்தி சார்.
ஆனா இந்த மெயில் எனக்கு கிட்டத் தட்ட மூன்று வருஷம் முன் வந்ததுங்க.

இவர் என்னை விடவே ரொம்ப விளக்கமாகவும், அருமையாகவும் எழுதி இருக்கிறார். ரொம்ப பொறுமையாக.
--வித்யா.

வால்பையன் said...

//இதே நட்பு பாசம் துரியோதனனிடம் இருந்திருந்தால் இப்படியொரு இதிகாசம் ”எழுதிட” வாய்ப்பில்லாது போய் இருக்கும். //

நல்லவேளை ”நடந்திட” வாய்ப்பில்லாமல் போயிருக்கும் என்று சொல்லிவிடுவீர்களோ என்று நினைத்தேன்! என்ன இருந்தாலும் உண்மை தானே முதலில் வெளிவரும்!

வால்பையன் said...

//இந்த குழு குழுத் தலைவன் மாதிரி வார்த்தைப் பிரயோகங்களை வால்ஸ் தொடர்ந்து மேற்கொண்டிருப்பதால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்திருக்கக் கூடும்!//

கடவுள் ஆரம்பித்த இடம் அது தான் என்பதால் அதை பயன்படுத்த வேண்டியிருக்கிறது!,

இந்து மதத்தில் தான் கடவுள் நான் சொன்னது போல் தாவாகட்டையில் கை வைத்து சும்மா இருக்கவில்லையே!

வால்பையன் said...

//கதை வேண்டாம், நிர்வாகம் எப்படின்னு கேக்குற வால்பையன்களுக்கு மட்டும் இதோ சுட்டி!//


அர்த்தசாஸ்திரம் கூட நிர்வாகம் சொல்லிதருகிறது! ஆனால் உங்களை போல ஆட்களுக்கு அதை கூட கடவுள் சொன்னதாக சொன்னால் தான் கேட்பேன் என்கிறீர்கள், எனக்கு அப்படியல்ல, நல்லதை யார் சொன்னாலும் கேட்பேன்!

Radhakrishnan said...

வால்பையன் said...
//இதே நட்பு பாசம் துரியோதனனிடம் இருந்திருந்தால் இப்படியொரு இதிகாசம் ”எழுதிட” வாய்ப்பில்லாது போய் இருக்கும். //

நல்லவேளை ”நடந்திட” வாய்ப்பில்லாமல் போயிருக்கும் என்று சொல்லிவிடுவீர்களோ என்று நினைத்தேன்! என்ன இருந்தாலும் உண்மை தானே முதலில் வெளிவரும்!//

ஹா ஹா வால்பையன் அவர்களே, நீங்கள் எழுதியது மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஒன்று மட்டுமே உண்மை, அது என்னவெனில் வரலாற்று குறிப்புகள் மூலமோ, எழுதப்பட்ட இதிகாசங்கள் மூலமோ, அறிவியல் செய்முறைப் பயிற்சி மூலமோ இதற்கு முன்னால் நடந்ததாகச் சொல்லப்படும் விசயங்களை துல்லியமாக நிரூபித்துக் காட்ட இயலாது, தோராயமாக இருக்கக் கூடும் என்றுதான் சொல்ல இயலும்.

மஹாபாரதம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றோ, நடந்தது என்றோ சொல்ல என்னிடம் எந்தவொரு விபரமும் இல்லை. நடந்திருக்கக் கூடும், நடக்காமலே அதை எழுத்தில் வைத்திருக்கக்கூடும். யார் கண்டார்? நமக்கு எது தேவையோ அதை எடுத்து வாழ்வதுதானே வாழ்க்கை.

அது இல்லை, இது இல்லை எனச் சொல்வதில் என்ன இருக்கிறது. ஒரு விசயத்தை நம்புவதற்கு கடவுள் சொன்னார் எனச் சொல்வதால் மட்டுமே நம்புவோர்க்கு அப்படியேச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை என்பதைத்தான் பொய்யாக இருப்பினும் அவை வாய்மையாகவே கருதப்படும் என சொல்லி வைத்திருக்கிறார்கள்.

நல்லதை யார் சொன்னாலும் கேட்பேன் என சொல்லும் உங்களுக்கு கடவுள் சொன்னார் என சொல்வதால் மட்டும் ஏற்படும் கசப்பினை நியாயப்படுத்துவது போல அவரவருக்கு அவரவர் விருப்பம் எனபது சரிதானே.

எனது வழியே சிறந்தது எனச் சொல்பவரை விட எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும் வலியில்லாமல் வாழவேண்டும் எனச் சொல்பவரின் உரைதான் சிறப்பு என்கிறேன் நான், உங்களுக்கு இது வேறுபடக் கூடும். மிக்க நன்றி.

Post a Comment