ஆயிரங்காலத்து அழுகல் பயிர் - பாகம் 5

==========================

பாகம் 9. முரண்களின் சங்கமம்

==========================

ஒரு மாக்னெட் போல முற்றிலும் முரண் பட்ட சிந்தனைகள், விருப்பங்கள் இருந்தாலும், எப்படி திருமண பந்தம் இவர்களை இணைக்கிறது?

கணவனுக்கு ராக் மியூசிக் பிடிக்கும். மனைவிக்கோ ஹிந்துஸ்தானி. கணவனுக்கு இட்லிக்கு சாம்பார் . மனைவிக்கு சட்டினிதான் என்று சின்னச் சின்ன விஷயங்கள் தான். ஆனால், இவை இருவரின் உறவையே முறிக்கவோ, அல்லது பலப்படுத்தவோ செய்கிறது. அது எப்படி?

எங்கள் வீட்டுக்கருகில் ஒரு தாத்தா பாட்டி. பாட்டி ஓயாமல் பேசுவார். தாத்தாவோ இன்ஜினீயர். மௌனி. எப்போதும் புத்தக வாசிப்புதான். சிடு சிடுவென இருப்பார். படிக்கும் போது வேறு யாராவது ஏதாவது கேட்டு விட்டால் அவ்வளவுதான். வீடே ரெண்டாகி விடும். ஆனால், பாட்டி பேசினால் மட்டும் புன்னகையோடே பதில் சொல்வார். எல்லோரும் பொண்டாடிக்கு பயந்தவன்னு கிண்டல் செய்வாங்க. அவரோ, "ஆமாண்டா. என் பொண்டாட்டி எனக்கு கடவுள் மாதிரி" அப்படீனு சொல்லுவார். பாட்டியோ, அவரை என்றும் விட்டு கொடுத்து பேசி பார்த்ததே இல்லை. அவர் இல்லன்னா நான் இல்லை என்றே கூறுவார். ஒரு அன்னியோனியம் அவர்களிடம் இருப்பதை பல முறை சிலாகித்து பேசி இருக்கிறோம்.

பாட்டி அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார் "தாத்தா எனக்கு முன்னாடியே போய் விடணும். அவருக்கு என்னை விட்டால் யாரும் பரிஞ்சு பரிஞ்சு செய்ய முடியாது. அவருக்கு கடைசி வரை நானே எல்லாம் செய்ய வேண்டும்" என்று. அவரும் அதே போல கான்சர் வந்து இறந்து விட்டார். அவர் இறந்த அன்றே "சுமங்கலியாப் போய் சேரணும்னு ஒரு நாளாவது சொல்லி இருக்கியா" அப்படீன்னு எல்லோரும் பாட்டியை திட்டினார்கள்.

ஆனா, அந்த பாட்டி சொன்னது போலவே, எனக்கு தெரிந்த வரையில், அவர் இறக்கும் வரை அவர் மகனோ மகளோ வந்து பார்கவே இல்லை. படுத்த படுக்கையிலேயே உணவருந்துவது சுத்தம் செய்வது என்று அனைத்தையுமே பாட்டிதான் செய்தார். "நீ இல்லைனா நான் நாறி போயிருப்பேன்" என்று சொல்லிக் கொண்டே இருப்பார். பக்கத்திலேயே விகடன், ஹிந்து பத்திரிக்கைகள் வாசித்து காட்டுவது, ரேடியோ டியூன் செய்து கொடுப்பது போன்ற எல்லாமே செய்து கொண்டே இருப்பார். எத்தனை முறை கூப்பிட்டாலும் ஓயாமல் முகம் சுளிக்காமல் "என்ன" என்று கிட்ட நின்று கேட்பார். இதையெல்லாம் பார்த்து அசந்து போயிருக்கிறேன் நான்.

சரி, அப்புறம் அந்த பாட்டியின் கதி என்ன? இருவராய் இருக்கும் போதே, திரும்பி பார்க்காத பிள்ளைகள், இவரை தனியாகவே விட்டுச் சென்றனர். (ஒரு வேளை இவரும் வரமாட்டேன் என்று கூட சொல்லி இருக்கலாம்.) ஆனால், பெண்மையின் மனதிடத்தை அன்றுதான் நான் உணர்ந்தேன். அவர் தனக்கென ஒரு புது உலகை படைத்தார். இறக்கும் தருவாயில், அவர் கணவர் (தாத்தா) ஊருக்கு வெளியில் இவருக்காக ஒரு கூடம் (சத்திரம் போல) கட்டி, இருவரில் யார் தனியானாலும், பின்னாளில் முதியர்வர்களை அங்கே பாதுகாக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பாராம். அதே போல அவரும் தம் சேவைகளை தொடர்ந்தார்.

என் உலகம் குறுகியதா விரிந்ததா என்று தெரியவில்லை, ஆனால், கணவனை இழந்த மனைவிகளை விட, மனைவியை இழந்த கணவன்கள் அதிக துன்பத்திற்கு ஆளாகிறார்கள். இது ஏன்? அளவுக்கு அதிகமான பாதுகாப்புக்கு கணவனை ஆளாக்குவது யார்? தானே எதுவும் செய்து கொள்ள தூண்டாது, "நான் வீட்ல தானே இருக்கேன்" என்று அவருக்கும், பிள்ளைகளுக்கும் கையில் காபி கொண்டு கொடுப்பது, ஷூ பாலிஷ் செய்வது, சட்டையை அயன் செய்வது, துணிகளை அவர் பீரோவில் அடுக்குவது, ஊருக்கு போக pack செய்வது, போன்று அவரவர்களே செய்து கொள்ளக் கூடிய வேலைகளையும் தானே இழுத்து போட்டுக் கொண்டு உபசரணை செய்தல்.

தனக்கென ஒரு வெந்நீர் கூட போட்டு கொள்ள முடியாத அளவுக்கு கணவன்களுக்கு இடம் கொடுத்து விடுவது. இது அன்பென்றே சொல்ல மாட்டேன். தான் இல்லை என்றாலும் தன் கணவனோ / மனைவியோ தவிக்கக் கூடாது என்ற உணர்வு இருவருக்கும் வரவேண்டும். இதற்கு transparency மற்றும் பகிர்தல் தேவை.

சரி, honeymoon போகும்போதுதான், இரசனைகளின் முரண்கள் தெரிய ஆரம்பிக்கிறது, கணவன் மனைவிக்கான சண்டைகளின் முதல் இலை அங்கே தான் துளிர்கிறது என்று என் அம்மா கூறிக்கொண்டே இருப்பார். உண்மையில், பிரச்சினை எப்போது ஆரம்பிக்கிறது தெரியுமா "உன்னை விட நான் உசத்தி" என்று காதல், அன்பு, attitude, justification போன்ற "நான் ரொம்ப நல்லவன் / நல்லவள்" என்ற மாயத் தோற்றம் / திரை விலகி, ஒருவர் மற்றவரது மாயத்தோற்றம் கொடுத்த எதிர்பார்புக்களை உடைக்க ஆரம்பிக்கும் போது, அவர்கள் உண்மை முகம் / முரண்கள் தெரிய ஆரம்பிக்கும் போது பிரச்சினைகள் துவங்குகிறது.

பின்பு, இந்த முரண்கள் அவர்கள் "முடிவு" எடுக்க வைக்கிறது. இவன்/இவள் இப்படித்தான் என்று. நிஜமாகவே அவனோ/அவளோ இவர்கள் விருப்பத்துக்கு ஏற்றார்ப்போல நடந்து கொண்டாலும், இந்த முடிவு மாயத்திரை மீண்டும் அவர்களுக்கு இடையே சுவராகும் வரை விடாமல் துரத்துகிறது.

உதாரணத்திற்கு, கணவன் இரவில் வெகுநேரம் கண்விழித்து காலையில் நேரம் கழித்து எழுந்திருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். மனைவியோ மாறாக சீக்கிரம் தூங்கி, சீக்கிரம் எழுந்திருக்கிறாள். இது அவர்களது குழந்தை பருவத்தில் ஏற்பட்ட பழக்கம் என்பதால் இருவராலும் மாற்றிக் கொள்ள முடிவதில்லை. கணவன் உலகமே தூங்கும் நேரத்தில் எழுந்திருக்கும் லூசு என்று மனைவியையும், மனைவி கணவனின் "சோம்பேறித்தனத்தை"யும் விமர்சிக்க ஆரம்பிக்கிறாள். அவனை "திருத்த"வும், விடியற்காலையில் எழுப்பவும் முயற்சிக்கிறாள். இது எரிச்சல் கொடுக்கிறது அவனுக்கு. விளைவு, விடிந்ததில் இருந்து தகராறு. திருத்துவது நம் வேலை அல்ல. அவரவர் தம் பொறுப்புக்களையும், நல்லது கெட்டது தெரிந்து கொள்ளும் வயதை அடைந்த பிறக்கே திருமண வாழ்வில் ஈடுபடுகிறோம். மனைவி அசைலம் (asylum) நடத்துபவள் அல்ல என்பதை எல்லா கணவன்களும் உணரவேண்டும்.

முரண்கள் எப்போது போற்றுதலுக்குரியதாக ஆகிறது? எப்படி முரண்களோடு மகிழ்ச்சியாக இருப்பது?

வித்தியாசங்களை இரசிப்பது - இது கஷ்டம் தான். ஆனால் இருவரும் ஒரே மாதிரி இருந்து விட்டால் வாழ்கை இரசிக்காது. "ச்சே! நீயே இப்பிடித்தான்" என்று சொல்லிக்கொண்டே, தொண தொணக்கும் மனைவியை பேச விட்டு, "ம்ம்" கொட்டிக் கொண்டே, பேச்சை கேட்டுக் கொண்டே தூங்கி போகும் கணவன், மறுநாள் காலையிலும், அவள் "நான் பேசிக்கிடே இருக்கும் போது தூங்கிட்டீங்களே" என்று மீண்டும் தொண தொணப்புக்கு தயாராகிறான். அப்போது ஒரு கிண்டல், கேலி என வளரும் பேச்சுகள், சண்டையில் முடியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மற்றவர்களின் நம்பிக்கையும், கொள்கைகளையும் மதிக்கும் போதும் முரண்கள் சிறப்படைகின்றன.

இரசனை, வாசிப்பு பழக்கம், ஆர்வங்கள், இருப்பிடம், வளர்ப்பு போன்ற சூழ்நிலைகளும், கலாச்சார வித்தியாசங்களும், உணவுப் பழக்கங்கள், இறை நம்பிக்கை விவகாரங்களும் பெரும்பாலும் முரண்களாக இருக்கின்றன. இவற்றை விமர்சிக்காமல், உணர்வுகளை மதித்து personal space கொடுத்து பழகும் போது, முரண்கள் இரசிக்கும் படியாக அமைகிறது.

ஏற்றுக் கொள்ளுதல் - எதிர் பார்புக்களை பூர்த்தி செய்வது யாராலுமே இயாலாத காரியம். தவறோ குறைகளோ இல்லாதவர் யாருமே கிடையாது. நிறைகளை போற்றி, குறைகளை விட்டுத்தள்ளி பார்த்தால், மகிழ்ச்சி தானாகவே வளரும்.

மரியாதை கொடுத்தல் - வெறுமனே வாங்க போங்க என்பது, வாடி போடி என்பது அன்பையோ மரியாதையையோ காட்டுவதில்லை. ஆத்மார்த்தமாக, அன்பு செலுத்தும் போது, மற்றவரது விருப்பங்களும், விருப்பமின்மையும் அடுத்தவருக்கு தானே தெரிகிறது.

என்னைப் பொறுத்தவரையில், இது மனைவிகள் கையில்தான் இருக்கிறது. ஆரம்பகாலங்களில், அதிகப்படியாக பணிவது, பணிவிடைகள் செய்வது, சாதம் ஊட்டுவது போன்ற எல்லை மீறிய "சார்பு/dependency" ஏற்படுத்தி, வளர்த்து விட்டு ரொம்ப உயரத்தில் கூட்டி கொண்டு போய் திடீரென, (மனைவிகள்) இவர்களுக்கு மூச்சு திணறும் போது தள்ளிவிடும் முதல் ஆள், கணவனாகத்தான் இருப்பான். "இதக் கூட செஞ்சுக்க முடியாதா" என்று சண்டைகள் வரும். இது பெரும்பாலும் குழந்தை பிறப்புக்கு பின் இருவரையும் (கணவன்-குழந்தை) ஒருவரே கவனிக்க வேண்டிய நிலை வரும்போது நடக்கிறது. கணவனோ ஒரு கர்சீப்பை கூட தானாக தேடி எடுத்துக் கொள்ள முடியாதவாறு மனைவியே பழக்கி இருப்பார்.

அதே போல சில கணவன்களும், கறிகாய் முதல் புடவை வரை தானே எல்லாம் வாங்கி கொடுத்து, வெயில் கூட படாமல் மனைவியை பாதுகாக்கிறேன் என்றோ, இல்லை "அவளுக்கு ஏதும் தெரியாது" என்று கூறிக்கொண்டே எதுவும் தெரியாமலே ஆக்கி விட்டு, கடைசியில் தன்னாலும் முடியாத போது "நீ ஒரு முட்டாள்" என்று திட்டுவது போன்றவை.

தனக்கும் சுதந்திரம் வேண்டுமென்றால் மற்றவருக்கு முதலில் சுதந்திரம் கொடுத்து பழக வேண்டும். "முந்தானையில் முடிந்து கொள்கிறேன்" பேர்வழி என்று, ஒரு காபி கூட தானாக கலந்து கொள்ள முடியாதவாறு பாசமழையில் நனைத்து வைக்க கூடாது. கணவன் எவ்வளவு ஒரு மனைவியை சின்ன சின்ன வேலைகளுக்கும் எதிர்பார்த்து, அடுப்படியிலோ பீரோவிலோ என்ன இருக்கிறது என்று தெரியாமல் இருக்கிறானோ, அன்றே இருவருக்குமான அடிமை வாழ்க்கை துவங்குகிறது. இருவரில் ஒருவர் இல்லை என்றாலும், வீடு இரணகளம் ஆகிவிடும். வீடு என்ற system தானாக நடக்கும் படி, இருவருமே பகிர்ந்து வேலைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். transparency என்றும் கூறலாம்.

விட்டுக் கொடுத்தல் - பெரும்பாலும் விட்டுக் கொடுப்பது மனைவிதான். ஆனால், மேற்சொன்ன அனைத்தையும் பின் பற்றும் போது, விட்டு கொடுத்தல் என்பது automatic result ஆக தானாகவே நடக்கிறது.

பேசுங்கள் - பேசுவதற்கு நேரம் ஒதுக்கவும். நிறைய பேசுவதால் மட்டும் இல்லை, சில விஷயங்கள் பேசப்படாமல் போவதால் கூட பூதமாய் வளர்கிறது சின்ன சின்னப் பிரச்சினைகள். திருமணத்தால் இருவரும் ஒருவராகுவது இல்லை. இருவரும் தனித் தனியான மனிதப் பிறவிகள், தனி உணர்வுகள், தனி இரசனை, தனி நம்பிக்கைகள் உள்ளவர்கள் என்று புரிந்து கொண்டு, தன் விருப்பு வெறுப்புக்களை தெரிவிக்க மட்டும் செய்து, அதை அடுத்தவர் மீது திணிக்காமல் இருக்கும் போது, முரண்கள் இரசிக்கும் படியாக இருக்கிறது.

பழி போடுதல் - தன் வாழ்க்கையை சீராக்க வந்த தேவதை என்றோ, தன் கனவுகளை நிறைவேற்ற வந்த இராஜகுமாரன் என்றோ அளவுக்கு மீறிய கற்பனை எதிர்பார்ப்புக்கள், தோல்வி அடையும் போதும் முரண்கள் பூதக் கண்ணாடியால் பார்த்து பெரிதாகப் படுகிறது. உங்கள் கற்பனைகளுக்கும் யூகங்களுக்கும், நீங்களே பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். எதிர்பார்ப்புக்கள் பூர்த்தி ஆகாத போது, தனி நபர் தாக்குதலை ஆரம்பிக்க வேண்டாம். இதையும் ஒரு முரணாக கருதி, தக்க சமயத்தில் தக்க படி, எடுத்துச் சொல்லும்போது, உங்களுக்கு சாதகமாக சூழ்நிலை மாறக் கூடும்.

சமத்துவம் என்பதில் எனக்கு எப்போதுமே உடன்பாடு கிடையாது. ஆணும் பெண்ணும் எப்போதுமே சமமாக இருக்கவே முடியாது. என்னை பொறுத்தவரை, ஒவ்வொரு மனிதனுமே தனியானவர்கள்தான், வலி மட்டும்தான் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கக் கூடும். வலி கூட, அவரவர் தாங்கும் சக்தியினால் வித்தியாசப்படுகிறது. ஆண்-பெண்களது, நோக்கம், வாழ்க்கையை பார்க்கும் கோணம், உணர்வுகள், முக்கியத்துவம் கொடுக்கும் விஷயங்கள் போன்ற ஒவ்வொன்றுமே வித்தியாசமானது.
=================================================================
என் சொந்த அனுபவத்தில் சொல்லப் போனால், முக்கால்வாசி சண்டைகள் எல்லாமே, அவர் tang-ஜூஸை தீர்த்து விட்டு refill செய்யாம போனது, விடியற்காலையில் toothpaste தீர்ந்து stock இல்லாம போனதை அவர்கிட்ட சொல்லாதது / அல்லது, நானே போய் வாங்கி வராதது, போன்ற அல்ப விஷயங்களுக்காகவே சண்டை வந்திருக்கிறது. இது மேலோட்டமாக அல்ப விஷயமாகத் தோன்றினாலும், அடுத்தவரை பற்றிய consideration என்ற மாபெரும் விஷயம் இதற்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது.

penny wise pound foolish என்பது போல, அற்ப விஷயங்களை பெரியதாக்கி உறவே விரியும் படி செய்து கொள்ளாமல் பார்த்துக் கொள்வது கணவன்-மனைவி இருவரில் வீட்டை நிர்வகிக்கும் மனைவி கையிலும், நிர்வாகத்திற்கு மூலாதாரமான பொருளை ஈட்டி வரும் கணவன் கையிலும் இருக்கிறது.


========================

பகுதி 10. தனிமை

========================

விவகாரத்து, திருமணம் செய்யாமை, மறுமணம் எல்லாமே ஒருவித தனிமையே கொடுக்கிறது.

கட்டுப்பாடில்லாத சுதந்திரம் வேண்டித்தானே திருமணம் செய்யாமலோ, விவகாரத்து பெற்றோ இருக்கிறார்கள். ஆனால், இச்சுதந்திரம் நிம்மதி தருகிறதா? நிச்சயமாக இருக்காது. ஏதோ ஒரு உணர்வு அவர்களுக்குலேயே கரையானாய் அவர்களையே தின்று கொண்டே இருக்கும்.

திருமணமே வேண்டாம் என்று இருக்க, குடும்பத்தில் உள்ள சகோதர-சகோதரிகளின் மீதான அந்த நபரின் பொறுப்புக்கள், காதல் தோல்வியாக இருக்கலாம் அல்லது பொருளாதாரக் காரணங்களாக இருக்கலாம். இந்த இரண்டையும் மற்ற தனிப்பட்ட நபர்களுக்கு மனம் மாற்றம் என்ற ஒன்று இருந்து விட்டால் போதும்.

பல பெண்களுக்கு முதிர் கன்னிகளாக ஆகும் வரையும் கல்யாணம் ஆகாமல் இருப்பதற்கு காரணமாகச் சொல்லப் படும் பொருளாதார சூழல், வரதட்சிணை போன்றவற்றையும், தாண்டி, அந்த பெண்ணின் / அவள் பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்களும் தடையாகவே இருக்கின்றன என்றே நினைக்கிறேன்.

விவகாரத்துக்கு முக்கிய காரணங்களாக சொல்லப் படுவன:
 • திருமண வாழ்வில் ஈடுபாடின்மை
 • திருமணமே பிடிக்காதது
 • துரோகம்
 • தள்ளி வைத்தல்
 • குடி / போதை அடிமைத்தனம்
 • துன்புறுத்தல், வன்முறை - சொல் / செயல் / பாலியல்
 • பிரச்சினைகளை வளர்த்துக் கொண்டே போகுதல்
 • தோற்ற வித்தியாசங்கள் (கருப்பு, குள்ளம் போன்ற)
 • தொழில் / வேலை நிமித்தமான தனி நபர் விருப்பங்கள்/குறிக்கோள்கள்
 • பணப் பிரச்சினைகள்
 • வீட்டு பொறுப்புக்கள் குறித்த வித்தியாசங்கள்
 • குழந்தை பராமரிப்பு குறித்த வித்தியாசங்கள்
 • வெளி நபர் / பெற்றோர் / மாமனார்-மாமியார் தலையீடுகள்
 • அறிவுத் திறமின்மை / உளவியல் பிரச்சினைகள்
 • பாலியல் குறைபாடுகள்
 • கலாச்சார வித்தியாசங்கள்
 • உணவு பழக்கம் / வித்தியாசங்கள்
 • சுய மேம்பாட்டுக்கு திருமண பந்தம் தடையாக இருப்பது
 • வேறொரு காதலில் ஈடுபடுவது
 • ஆன்மீக ஈடுபாடு / வித்தியாசம்
 • வாழ்கை முறை / உடை வித்தியாசங்கள்
 • குற்றவாளியாக இருத்தல் / சட்ட புறம்பான செயல்களில் ஈடுபடுதல்
 • நோயாளியாக இருத்தல் / தீராத நோய்
 • முக்கியத்துவம் கொடுக்காதது / வேறுபாடுகள்
 • நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்
 • ஏமாற்றுதல் / பெற்றோருக்கு/சகோதர-சகோதரிகளுக்கு உதவுதல்
 • காரணங்கள் ஏதுமில்லாத அப்பட்டமான சுயநலம் / பண ஆசை
மனம் விட்டு ஒருவருக்கொருவர் பேசாதே முக்கால்வாசி திருமணங்கள் முறிய காரணமாகிறது.

விவகாரத்து என்பது வேறு வழியே இல்லை என்பதால் மட்டுமே எடுக்கப் பட வேண்டும். Choose the best answer போல ஒரு option-னாக அல்ல. விவகாரத்து என்பது தற்கொலை போன்றது.

விவகாரத்து பெற்றவர்கள் மனச்சோர்வு, மன-அழுத்தம், தனிமை நாடுதல், depression போன்ற மன-நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதே போல, திருமணமே வேண்டாம் என்று இருப்பவர்களும் துன்புறுகிறார்கள். திருமணமாகி இணைந்து இருப்பவர்களை விட, திருமண/காதல் உறவுக்குள் வந்து, பிரிந்தவர்கள் அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள் / செய்துகொள்ள முயல்கிறார்கள் என்று அறியப் படுகிறது.

நண்பர்கள் மற்றும் உறவினர்களால் இவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவர்கள் ஒரு குற்றவாளி போல பார்க்கப்படுகிறார்கள். (கவனிக்க - இது உலகெங்கும் நடக்கிறது)

வாழ்கையில் ஒருவித emptiness ஏற்படுகிறது. பழைய வாழ்க்கையை இவரது சின்னச் சின்ன செய்கைகளும், வார்த்தைகளும், சினிமா, பாட்டு, போன்றவைகளும் நினைவூட்டி துன்புறுகிறார்கள்.

Last but not the least, இவர்களுக்கு குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு மன உளைச்சல், பாதுகாப்பில்லாத உணர்வுக்கு ஆளாகுதல், குற்றவுணர்ச்சி, வெறுப்பு போன்ற உணர்வுகளுக்கு ஆளாகிறார்கள். இதனால் இவர்கள் எதிர் காலமே பாதிப்படைகிறது.


========================

பகுதி 11. பயிரை அழுக விடலாமா?

========================

திருமணம் என்பது ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று நம் முன்னோர்கள் கூறியதற்கு அர்த்தம் என்ன?

நெல், கரும்பு போன்ற பயிர்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மகசூல் கொடுத்துவிடும்.

நெல் பயிரிட்டு அறுவடை செய்வதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப் படுகிறது என்று சஞ்சய் காந்தியின் இந்தப் பதிவில் பாருங்கள். (நன்றி சஞ்சய்காந்தி)

நெல்லையே மழை, வெய்யில், கொக்கு, குருவிகள், அதிக தண்ணீர் பாய்ச்சாமல், பார்த்து பார்த்து வளர்த்தால் தான், நல்ல மகசூல் தருகிறது.

அன்பும் தண்ணீர் போன்றதுதான். அதிகமாக பாய்ந்தால் கதிர் அழுகி விடும் அல்லது குறைவாக இருந்தாலோ காய்ந்து விடும்.

அனைத்துக் காலத்திலும், வரும் சுக-துக்கங்கள் மற்றும் பிரச்சனைகளை சமாளித்து வாழ்ந்து, இல்லறம் என்ற பயிரை பேணுவதை, பழங்கால மக்கள் இயற்கையுடன் ஒப்பிட்டு திருமணமும் காலம் காலமாக மகசூல் (பலன்) அளிக்கக் கூடிய ஒன்று என்றே கூறி இருக்கிறார்கள்.

கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு முன்னுதாரணமாக ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டனர்.

ஒருவருக்கொருவர் மதித்தும், தனிப்பட்ட உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் சுதந்திரம் அளித்து (personal space), அவரவர் சொந்த பந்த உறவுகளையும் அலட்சியம் செய்யாமல், அனாவசிய விமர்சனங்கள் செய்யாமல், இந்தப் பயிர் அழுகியோ, காய்ந்தோ போய்விடாமல் காப்பாற்றுவோம்.
=================
தொடரும்...
.

10 comments:

பாலா said...

அப்பப்பா அருமைங்கோ
மழை பெஞ்சி விட்ட மாதிரி இருந்தது படிச்சு முடிச்ச வுடனே
(கைகட்டி வாய் பொத்தி உக்கார்ந்து படிசெனுங்கோ )

தொடரும்????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

D.R.Ashok said...

கல்யாணம் செஞ்சுக்காம்ம இருக்கறது தான் பெஸ்ட்ன்னு... கல்யாணம் ஆன பிறகுதான் புரியுது.

தியாவின் பேனா said...

அருமை

கார்ல்ஸ்பெர்க் said...

நீங்க என்ன மாதிரி பசங்கள ரெம்பவே பயமுறுத்துறீங்க :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

தெளிவான பதிவு

வெ.இராதாகிருஷ்ணன் said...

இப்படியொரு அழகிய பதிவுகளின் தொடர்ச்சிக்கு எதிர்மறையான தலைப்பு ஏனோ என்று கேட்கும்படி வைத்துவிட்டது இந்த பதிவு. மிகவும் அருமை.

ஒரு முக்கியமான விசயம் என்னவெனில் சில விசயங்களை நமது கட்டுப்பாட்டில் நாம் கொண்டு வர இயலுவதில்லை. இதற்கான முழு முயற்சி இருந்தாலும் கூட ஏதேனும் ஒருவிதத்தில் சறுக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

நமது மனதில் அவ்வப்போது தோன்றும் எண்ண வேறுபாடுகள் திருமண வாழ்வில் தோன்றும் சிறு சிறு சலசலப்புகளுக்குக் காரணம் ஆகும்.

மேலும் நாம் அதீத உரிமை எடுத்துக்கொள்வதாலேயே நாம் அன்பின் பொருட்டு கோபம் கொள்கிறோம். மனதுக்குப் பிடித்தால் ஒழிய அல்லது பிடிக்கும் படி நாம் வளர்த்துக் கொண்டால் ஒழிய 'பழகப் பழக பாலும் புளிக்கும்' எனும் கதைதான் திருமண வாழ்வில்.

திருமணம் ஆகும் முன்னரே ஒருவர் எனக்கு சொன்னார், எப்பொழுது நமது பலவீனங்கள் மற்றவருக்குத் தெரிகிறதோ அப்பொழுதே வாழ்க்கையில் தோற்றுப் போய்விட்டோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியதுதான். இப்பொழுது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமெனில் அந்த பலவீனங்களைச் சரிபடுத்த முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டுமேயன்றி பிறரது பலவீனங்களை உனக்கு சாதகமாக்கிக் கொள்ள ஒருபோதும் முயலாதே. இது திருமண வாழ்க்கைக்கு மிக மிகப் பொருந்தும்.

பேசுதல், விட்டுக்கொடுத்தல் என பல இருந்தாலும் 'சொன்னதை ஒழுங்காகச் செய்தால் சுகம் பெறுமாம் திருமண வாழ்க்கை'

தொடரட்டும் அரிய பதிவு.

வால்பையன் said...

//சமத்துவம் என்பதில் எனக்கு எப்போதுமே உடன்பாடு கிடையாது. ஆணும் பெண்ணும் எப்போதுமே சமமாக இருக்கவே முடியாது. //

உடலளவில் சமத்துவம் பேசவில்லை!
நீ பத்து இட்லி தின்னா நானும் பத்து இட்லி திப்பேங்கிறதுல சமத்துவம் இல்ல!

நீ ஆசைப்பட்டதை செய்ய யாரையாச்சும் கேக்குறியா?
நான் மட்டும் ஏன் எல்லாத்துக்கும் உன்னைய கேக்கனும்!

நான் என்ன உன் அடிமையா?

புரியுது எதை நான் சமத்துவம்னு சொல்றேன்னு!


ஆணுக்கும், பெண்ணுக்குமே சமத்துவம் இல்லைங்கிறிங்க!
பின்ன எப்படி இந்த உலகதை சாதி, மதமில்லாத சமத்துவ உலகாய் உருவாக்குறது!

வால்பையன் said...

//விவகாரத்து என்பது தற்கொலை போன்றது.//

சிலருக்கு விவாகரத்தாகமல் இருப்பது நரகத்தில் வாழ்வதை போன்றது!

அட்வைஸ் பண்றது ஈஸி மேடம், வாழ்க்கையை அவுங்க தான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க!

The Analyst said...

Very nicely written article. I agree with most of your points. However there are few places I strongly disagree.

"சமத்துவம் என்பதில் எனக்கு எப்போதுமே உடன்பாடு கிடையாது. ஆணும் பெண்ணும் எப்போதுமே சமமாக இருக்கவே முடியாது. என்னை பொறுத்தவரை, ஒவ்வொரு மனிதனுமே தனியானவர்கள்தான், வலி மட்டும்தான் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கக் கூடும். வலி கூட, அவரவர் தாங்கும் சக்தியினால் வித்தியாசப்படுகிறது. ஆண்-பெண்களது, நோக்கம், வாழ்க்கையை பார்க்கும் கோணம், உணர்வுகள், முக்கியத்துவம் கொடுக்கும் விஷயங்கள் போன்ற ஒவ்வொன்றுமே வித்தியாசமானது."

Equality DOES NOT BEEN sameness, which is what I believe you have written about in the above para. Men and women are definitely not identical. But I would argue their abilities/qualities should be valued equally, which doesn't happen in our society.

"கணவன்-மனைவி இருவரில் வீட்டை நிர்வகிக்கும் மனைவி கையிலும், நிர்வாகத்திற்கு மூலாதாரமான பொருளை ஈட்டி வரும் கணவன் கையிலும் இருக்கிறது."

Why does it have to fit into these stereotypes. What happens when each others dreams and aspiraitons don't fit neatly into the gender stereotypes of women maintain the house and men earn money.

I think an ideal family unit will be where husband and wife (or any other combinations) help each other acheive their dreams in life. If that means husband takes care of the house and kids while the wife goes out to study or work for a while, so be it (as long as both parties are ok with the arrangement).

"விவகாரத்து என்பது வேறு வழியே இல்லை என்பதால் மட்டுமே எடுக்கப் பட வேண்டும். Choose the best answer போல ஒரு option-னாக அல்ல. விவகாரத்து என்பது தற்கொலை போன்றது."

Again, Divorce should be an option and the divorcees should not be looked down upon by the society. Unhappy homes really are hell to life in, even for the kids. It takes two to tango. If a wife decides for example to stay in a marriage where she's being physically or mentally abused just for the sake of her kids, it wouldn't help the kids at all in the future. As the sons will proabbly learn that violence is ok as long as you get what you want and the daughters will learn that no matter what they should put up with it. Instead, they should actually be taught that it's not acceptabel to abuse anyone and they should stand up when they are being oppressed.

The Analyst said...

"சமத்துவம் என்பதில் எனக்கு எப்போதுமே உடன்பாடு கிடையாது. ஆணும் பெண்ணும் எப்போதுமே சமமாக இருக்கவே முடியாது. என்னை பொறுத்தவரை, ஒவ்வொரு மனிதனுமே தனியானவர்கள்தான், வலி மட்டும்தான் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கக் கூடும். வலி கூட, அவரவர் தாங்கும் சக்தியினால் வித்தியாசப்படுகிறது. ஆண்-பெண்களது, நோக்கம், வாழ்க்கையை பார்க்கும் கோணம், உணர்வுகள், முக்கியத்துவம் கொடுக்கும் விஷயங்கள் போன்ற ஒவ்வொன்றுமே வித்தியாசமானது."

Just to elaborate further, by euqlity I also mean that both men and women should be given equal opportunities/rights to pursue their dreams or to life their life.

Post a Comment