ஒன்பது இரவுகள்

நவராத்திரி வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

அதான் ஷோகேஸில் தினம் கொலு இருக்கே, எங்க குடும்பத்தில் பழக்கமில்லை, ஆகி வராது, யாரு அடுக்கி எடுத்து வைக்கிரது..... என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருந்து, இந்த வருஷம் மனம் மாறி அப்படியெல்லாம் சொல்லாமல், முதன் முதலாக கொலு வைத்த அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும், அவர்கள் பெற்ற குழந்தைகளின் முதல் மகிழ்ச்சிக்கும் வாழ்த்துக்கள்.

நான் இன்று Reader-ரில் சந்தித்த சகோதரி Mrs.Faizakader வைத்த கொலுவுக்கும் என் மனங்கனிந்த வாழ்த்துக்கள். ரொம்ப மகிழ்வாய் உணர்கிறேன் சகோதரி.

முதன்முதலாக புடவை கட்டி அப்பா வயிறுகலங்க புளிநீர் வார்த்த காலேஜ் பெண்களும்,

கிழவி முதல் குழந்தைகள் வரை ஒருத்தர் விடாமல், நம் வீட்டின் ஆண்கள் எல்லாரும் இரகசியமாய் இரசித்துக் கொள்ளும் மாற்றான் தோட்டத்து பூக்களின் அழகு அலங்காரங்களும்,

அவங்க சைடு இவங்க சைடு என்று திருமண வீட்டில் கூட தனிக் குழுக்களாக இருக்கும், இரு வீட்டு உறவுகளும் மந்திரம் போட்டா மாதிரி புன்னகையோடே சந்தித்துக் கொள்ளும் அதிசயங்களும், நடக்கும் ஒன்பது இரவுகள்.

இது அம்மா கொடுத்தது என்று பொக்கிஷமாய் பாதுகாக்கும், இந்த பொம்மையை அறுபது வருஷம் முன்னால் நான் சின்னவளா இருந்தபோது அடம் பண்ணி ஐம்பது காசுக்கு வாங்கினேன் என்று கூறி மகிழும் பாட்டி என்று ஒவ்வொரு பொம்மைக்குள்ளும் ஒரு கதை. இந்த ஒன்பது நாட்கள், குஜராத்தின் கர்பா, கல்கத்தாவின் பண்டாலா, தமிழ்நாட்டின் பொம்மைகளும் எத்தனை கதைகளையும் சந்திப்புக்களையும் நினைவுகளையும் கொடுத்துச் செல்கின்றன?

இந்த பொம்மைகள் பல வண்ணங்களில் பல ரூபங்களில், புன்னகைப்பது போலும் புன்னகைக்காமலும் படைத்தவன் கொடுத்த உணர்வுகளைச் சுமந்து, கடவுள், மஹாராஜா, சன்னியாசிகள், மூத்தோர்கள், தியாகிகள், சாதாரண மனிதர்கள், கிரிக்கெட், ஃபுட்பால் விளையாட்டு வீரர்கள், வயல், பூங்கா, மிருகங்கள், என்று உலகமே நம் வீட்டுக் கூடத்தில் அமைதியாய் நின்று, காட்சியளித்து, போய்விடும் மீண்டும் பெட்டிக்குள் புதையல்களாக. மீண்டும் அற்புத விளக்குத் தேய்படும் நாளுக்காக, பூதங்களாகக் காத்திருக்கும்.

நாமும் தினசரி சக்கரங்களின் அச்சுக்கள் போல மீண்டும் ஓட்டத்தைத் துவங்க, கொலுப்படியோடு மடித்து எல்லா உணர்வுகளையும், உறவுகளையும் லாஃப்டில் போட்டு மூடிவைக்கிறோம். இன்று லாலி பாடி ஒவ்வொரு பொம்மையாக துணியில் சுற்றி செட்-செட்டாக ஒரு கவரில் போட்டு எடுத்து வைக்கும்போது மனம் சுண்டலுக்காக அலையும் சிறுவர்கள் போல அலையும்.

இந்த பொம்மைகள் போலவே ஒவ்வொரு நாளும் ஒரு வீட்டிலேயே இருக்கும் குடும்பத்தார் கூட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாது, பேசிக் கொள்ள நேரம் கூட இல்லாமல் ஏதோ ஓட்டமாய் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

===============================================

மார்கண்டேய புராணத்தில் நவராத்திரி பற்றிய விவரங்கள் இருப்பதாக வீட்டுக்கு வந்திருந்த என் நண்பர் ஒருவர் சொன்னார். தேடிப் பிடித்து படித்தே விட்டேன்.

உங்களுடன் பகிர்தல்....

நவராத்திரி பற்றிய கதைகள் மார்கண்டேய புராணம், வாமன புராணம், வராஹ புராணம், சிவ புராணம், ஸ்கந்த புராணம், தேவி பாகவதம், கல்கி புராணம் போன்ற புனித நூல்களில் உள்ளன. ஒவ்வொன்றாகப் பகிர்கிறேன்.

தனு மஹரிஷியின் இரு புதல்வர்களான ஹிரம்ப-கரம்பன் இருவரும் தன் தவ வலிமையால் அளவில்லாத ஆற்றல்களைப் பெற்று விளங்கினார்கள். இந்திரனுக்கு இவர்கள் ஆற்றல்களைக் கண்டு பயம் வருகிறது. பேராற்றல் கொண்ட கரம்பனை இந்திரன் கொல்கிறான்.

இதனால் சினங்கொண்ட ஹிரம்பன் சிவனாரை நோக்கி கடுந்தவம் புரிந்து "தன்னை ஆண்கள், தேவ-அசுர-மனிதன் யாரும் கொல்லக் கூடாது" என்ற வரம் கேட்கிறான்.

சிவனோ அவனுக்கு "ஆண்கள், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் யாரும் உன்னைக் கொல்லமுடியாது. ஒரு பெண்ணே உன்னைக் கொல்வாள்" என்கிறார்.

இத்தனைப் ஆற்றல் பெற்ற பலசாலியான தன்னை ஒரு பெண்ணால் கொல்ல முடியுமா என்ற தலைகனம் மிகுந்து அட்டூழியங்கள் செய்ய ஆரம்பித்தான். தன் பலத்துக்கு நிகரான பலம் பொருந்திய பெண் யாருமே இவ்வுலகில் இல்லை என்று கர்வித்து மூவுலகின் மக்கள், தேவர்கள், கின்னரர்கள், கந்தர்வர்கள் எல்லோரையும் இரக்கமின்றி வதைத்தான். உலகெங்கும் தமக்குக் கீழ் கட்டுப்பட்டதும் அவன் இந்திரலோகத்தையும் கைப்பற்ற ஆவலுற்றான்.

ஒரு முறை ஒரு யக்ஷனின் மாளிகைத் தோட்டத்தில் ஹிரம்பன் ஆண் எருமை ரூபத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறான். அப்போது ஒரு பெண் எருமை மீது மையல் கொள்கிறான். வேறொரு ஆண்-எருமை ஹிரம்பனின் உண்மையான உருவம் பற்றியறிந்து அவனை நெருப்பிலிடுகிறது. பெண் எருமையும் நெருப்பில் குதிக்கிறது.

ஆண்களால் கொல்லமுடியாது என்ற வரம் பெற்ற அசுரன், நெருப்பினின்றும் மீள்கிறான். நெருப்பில் விழுந்து இறக்கும் பெண் எருமை கர்ப்பமாக இருக்கிறதால் தலை எருமை போலும், உடல் மனிதன் போலுமாக உருவத்தோடு எழுகிறான் மகிஷன்.

வெறிகொண்ட மகிஷன், தம் படை முழுவதையும் திரட்டிக் கொண்டு, இந்திரலோகத்தை கைப்பற்றி, இந்திரனையும் அங்கிருந்த தேவர்களையும் துரத்தினான். பதறிய இந்திரனும் தேவர்களும் ப்ரம்மாவிடம் முறையிட்டார்கள். ப்ரம்மா அவர்களோடு சிவனிடம் முறையிடச் சென்றார். சிவன் யோகத்தியானநிலையில் இருந்ததால், விஷ்ணுவிடம் முறையிட்டார்கள். பெருஞ்சினம் கொண்ட விஷ்ணுவிடமிருந்து பேரொளி மிக்க ஆற்றல் ஒன்று வெளிப்பட்டது. இந்நிலையில் சிவனும் யோகத்தியானத்திலிருந்து மீண்டு, நடந்தவையறிந்து, தன் மூன்றாவது கண்ணைத் திறக்கிறார். மூன்றாவது கண்ணிலிருந்து வெளிப்பட்ட பேராற்றல் விஷ்ணுவிடமிருந்து வெளிப்பட்ட ஆற்றலோடு இணைந்து ஒளிர்ந்தது. மற்ற கடவுள்களும் தத்தம் தெய்வீக ஆற்றல்களை இந்த ஒளியில் இட்டார்கள்.

இவ்வொளி ஒரு பெண்ணாக உருவானது. அவள் முகத்தின் ஒளியானது சிவனின் தெய்வீகத்திற்கு ஒப்பானதாக இருந்தது. அவளது பத்து கரங்களும் விஷ்ணுவின் ஆற்றல்களையும், பாதங்கள் ப்ரம்மரூபமாகவும், கூந்தல் யமரூபமாகவும், உடல் சோமரூபமாகவும் (சோமன்=>சந்திரன்), வயிறு இந்திரரூபமாகவும், கால்கள் வருணரூபமாகவும், இடை பூதேவிரூபமாகவும், விரல்கள் சூரியனையும், வசுக்களையும் (கங்கையின் மகன்கள்) ஒத்ததாகவும், மூக்கு குபேரரூபமாகவும், அமையப் பெற்றிருந்தாள். அவள் பற்கள் ப்ரஜாபதி, கண்களின் ஒளி அக்னி, புருவங்கள் சந்திகளாகவும், காதுகள் வாயுரூபமாகவும், இவ்வாறாக தெய்வங்கள் மற்றும் தேவர்களின் பெண்ணாற்றலிலிருந்து "சக்தி"யாக உருவானாள்.

இவளுக்கு இந்திரனின் வஜ்ராயுதம், சிவனின் திரிசூலம், விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம், வருணனின் சங்கு, அக்னியின் ஈட்டி, வாசுகியின் சர்ப்பம், யமனின் இரும்புக்கோல், வாள் மற்றும் கேடயம், விஸ்வகர்மாவின் கோடாலி மற்றும் கவசம், ஹிமாவதனின் (மலையரசன்) ஆபரணங்கள் மற்றும் சிங்க வாகனம் ஆகியவற்றைப் பெற்றாள். இவள் பூமிக்கு அனுப்பப்படுகிறாள்.

அசுரனான மகிஷன், தேவியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு அவளை மணந்து கொள்ள தூதனுப்புகிறான். இறைவியோ, தன்னை போரில் தோற்கடித்தால் அவனை மணப்பதாகக் கூறுகிறாள். இதனால் மகிஷனின் கவனம் திசைமாறி தேவலோகத்தை விடுத்து பூமிக்குத் திரும்புகிறான்.

அவளோடான யுத்தத்தில் தம் படைகள் அனைத்தையும் இழக்கும் அசுரனுக்கு இறைவியின் ஆற்றல் புரிய ஆரம்பிக்கிறது.

அவளது ஸ்வாசக்காற்று பட்டு அவளது படைவீரர்கள் உயிர் பெற்று எழுகிறார்கள். அவளுக்காக அசுரன் ஏவும் கணைகள் எல்லாம் திரும்பி அவன் படையையே அழிக்கிறது. அதிர்ச்சியடையும் ஹிரம்பன் எருமையுருவம் (மகிஷ) கொண்டு இறைவியின் படைகளை தம் வாலால் விசிறியடிக்கிறான். இறைவியின் வாஹனமான சிங்கம் எருமையை நோக்கிப் பாய்கிறது. இறைவி எருமையின் மூக்கை மூக்கணாங்கயிற்றால் பிணைக்கிறாள். ஹிரம்பன் சிங்கமாகவும், பின் மனிதனாகவும் உருமாறி தப்பிக்கிறான். அப்போதும் இறைவியிடமிருந்து தப்ப முடியாமல் ஒரு பெரிய யானையின் உருவங்கொண்டு தந்தத்தால் சிங்கத்தைத் தாக்குகிறான்.

யானையின் தந்தத்தை இறைவியின் வாள் தூள் தூளாக்குகிறது. அசுரன் மீண்டும் எருமை வடிவங்கொண்டு மலைகளினூடே ஒளிந்து கொள்கிறான். இறைவி எருமையின் கொம்பைப் பிடித்து அடக்கி தரையில் தள்ளி இடக்காலால் மிதித்து, அவன் தலையைக் கொய்து, அவன் உடல் பாகங்களைப் பிய்த்து அவன் படைகள் மீதெறிந்து கொல்கிறாள்.

இப்போரானது ஒன்பது இரவுகள் நடைப்பெற்று, பத்தாம் நாள் அசுரவதம் நிகழ்கிறது. மகிஷரூபத்தில் இருந்த அசுரனை வதைத்தனால் இவளுக்கு மஹிஷாசுரமர்த்தினி என்ற பெயர் விளங்குகிறது. பத்தாம் நாள் தீமை அழிந்து நன்மை ஜெயிப்பதால் அந்நாளை விஜயதசமி எனக் கொண்டாடுகிறோம்.

ஹிரம்பன், மகிஷன் இவர்கள் செய்த தவறுகளுக்கும் அடுத்த உயிருக்கு இழைத்த தீங்குகளுக்கும் சரியான தீர்வும் கிடைத்தாகி விட்டது. பெண்மையின் ஆற்றலை குறைத்து மதிப்பிடும் நல்லவர்களுக்கு மகிஷன் ஒரு பாடமாகிறான்.

இதெல்லாம் சரி இதற்கெல்லாம் மூலமுதற்காரண கர்த்தாவான இந்திரனுக்கு என்ன தண்டனை? எங்காவது இந்திரனுக்கும் சரியான தண்டனை கிடைத்திருக்கும், என்று நம்பிக்கையோடு தேடிக் கொண்டே இருக்கிறேன். கிடைக்கும் கிடைக்கும்....

============================================.

13 comments:

D.R.Ashok said...

பாதி படிச்சேன்.. மீதி படிக்க சொல்ல.. choicela விட்டுறேனே.

Nags said...

//படைத்தவன் கொடுத்த உணர்வுகளைச் சுமந்து//
cool.

ஆமாம் அதுக்கப்புறம் என்ன ...கமல் படம் பார்க்க வந்தா புராண படம் :(

Krishna Prabhu said...

நவராத்திரி பற்றிய மீதி புராண கதைகளுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். நல்லா எழுதி இருக்கீங்க. தொடருங்கள்...

சந்தனமுல்லை said...

/இந்த பொம்மைகள் பல வண்ணங்களில் பல ரூபங்களில், புன்னகைப்பது போலும் புன்னகைக்காமலும் படைத்தவன் கொடுத்த உணர்வுகளைச் சுமந்து, கடவுள், மஹாராஜா, சன்னியாசிகள், மூத்தோர்கள், தியாகிகள், சாதாரண மனிதர்கள், கிரிக்கெட், ஃபுட்பால் விளையாட்டு வீரர்கள், வயல், பூங்கா, மிருகங்கள், என்று உலகமே நம் வீட்டுக் கூடத்தில் அமைதியாய் நின்று, காட்சியளித்து, போய்விடும் மீண்டும் பெட்டிக்குள் புதையல்களாக. மீண்டும் அற்புத விளக்குத் தேய்படும் நாளுக்காக, பூதங்களாகக் காத்திருக்கும்./

;-)

R.Gopi said...

//கிழவி முதல் குழந்தைகள் வரை ஒருத்தர் விடாமல், நம் வீட்டின் ஆண்கள் எல்லாரும் இரகசியமாய் இரசித்துக் கொள்ளும் மாற்றான் தோட்டத்து பூக்களின் அழகு அலங்காரங்களும்,//

ம்ம்ம்ம்.... இதுதான் விதூஷ் ட‌ச்... ந‌ல்லா நோட் ப‌ண்றீங்க‌...

//அவங்க சைடு இவங்க சைடு என்று திருமண வீட்டில் கூட தனிக் குழுக்களாக இருக்கும், இரு வீட்டு உறவுகளும் மந்திரம் போட்டா மாதிரி புன்னகையோடே சந்தித்துக் கொள்ளும் அதிசயங்களும், நடக்கும் ஒன்பது இரவுகள்.//

சொந்த, பந்தங்களை தேடி செல்லும் வழக்கம் குறைந்த நிலையில், குறைந்த‌ ப‌ட்ச‌ம், ந‌வ‌ராத்திரி போன்ற‌ ப‌ண்டிகைக‌ளாவ‌து இதுபோன்ற‌ கெட்‍டூகெத‌ர்க‌ளுக்கு வ‌ழி வ‌குக்கிற‌தே... அது வ‌ரை சந்தோஷ‌ம் விதூஷ்...

//இந்த பொம்மைகள் போலவே ஒவ்வொரு நாளும் ஒரு வீட்டிலேயே இருக்கும் குடும்பத்தார் கூட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாது, பேசிக் கொள்ள நேரம் கூட இல்லாமல் ஏதோ ஓட்டமாய் ஓடிக் கொண்டிருக்கிறோம்.//

ஒப்ப‌னிங் ம‌ட்டும‌ல்ல‌... பினிஷிங் டச் கூட‌ ந‌ல்லாதான் இருக்கு... இதுதான் இன்றைய‌ இயந்திர‌ வாழ்க்கை என்ப‌தை அழ‌காக‌ சொல்லிட்டீங்க‌...

நண்பர் சொன்ன மார்க்கண்டேய நவராத்திரு புராணம் டாப்...

//இப்போரானது ஒன்பது இரவுகள் நடைப்பெற்று, பத்தாம் நாள் அசுரவதம் நிகழ்கிறது. மகிஷரூபத்தில் இருந்த அசுரனை வதைத்தனால் இவளுக்கு மஹிஷாசுரமர்த்தினி என்ற பெயர் விளங்குகிறது. பத்தாம் நாள் தீமை அழிந்து நன்மை ஜெயிப்பதால் அந்நாளை விஜயதசமி எனக் கொண்டாடுகிறோம்.//

ந‌ல்ல‌ விள‌க்க‌ம்...

//ஹிரம்பன், மகிஷன் இவர்கள் செய்த தவறுகளுக்கும் அடுத்த உயிருக்கு இழைத்த தீங்குகளுக்கும் சரியான தீர்வும் கிடைத்தாகி விட்டது. பெண்மையின் ஆற்றலை குறைத்து மதிப்பிடும் நல்லவர்களுக்கு மகிஷன் ஒரு பாடமாகிறான்.//


பெண்மையின் ஆற்றலை குறைத்து மதிப்பிடும் நல்லவர்கள் இந்த பதமே அதிரடியா இருக்கே... நல்ல வேளை நான் அந்த க்ரூப்ல இல்ல...விதூஷ்... நான் பெண்மையை மதிக்கிறேன்... அவர்களின் ஆற்றலுக்கு தலை வணங்குகிறேன்... ஏளனம் செய்ய மாட்டேன்...

வாழ்த்துக்கள் விதூஷ்... தொடர்ந்து கலக்குங்கள்...

வால்பையன் said...

இதற்கு பெயர் மேஜிகல் ரியலிச கதைகள்!

வார்த்தைக்கு வார்த்தை எதிர் கேள்வி கேட்கலாம்!

இப்ப தான் விடுமுறை முடிந்து வந்துருக்கிங்க! அப்புறம் பார்த்துக்கலாம்!

நர்சிம் said...

ரைட்டு!

நேசமித்ரன் said...

//கிழவி முதல் குழந்தைகள் வரை ஒருத்தர் விடாமல், நம் வீட்டின் ஆண்கள் எல்லாரும் இரகசியமாய் இரசித்துக் கொள்ளும் மாற்றான் தோட்டத்து பூக்களின் அழகு அலங்காரங்களும்,//

:)

பிரியமுடன்...வசந்த் said...

//வமுதன்முதலாக புடவை கட்டி அப்பா வயிறுகலங்க புளிநீர் வார்த்த காலேஜ் பெண்களும்,//

ஹ ஹ ஹா.....

நசரேயன் said...

நான் இப்பதான் வாழ்த்து சொல்லுறேன்

" உழவன் " " Uzhavan " said...

 இதில் வரும் பெரும்பான்மையான பெயர்களை இப்போதுதான் முதன்முதலாகப் படிக்கிறேன். :-)

//பெண்மையின் ஆற்றலை குறைத்து மதிப்பிடும் நல்லவர்களுக்கு மகிஷன் ஒரு பாடமாகிறான்.//

கடைசியில ஒரு கருத்து சொல்லியாச்சு. இதுபோதும்.

Vidhoosh said...

Hi ssrividhyaiyer,

Congrats!

Your story titled 'ஒன்பது இரவுகள்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 30th September 2009 11:30:01 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/119279

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

THANKS TO ALL WHO VOTED. THANKS TAMILSH

Vidhoosh said...

அசோக், கிருஷ்ணப்ரபு, சந்தனமுல்லை, கோபி,நர்சிம், வசந்த், நேசன், நசரேயா, வாலு, உழவன் எல்லோருக்கும் நன்றிகள்.

வாலு: இப்படியெல்லாம் பயமுறுத்தினா எப்படி?

நாக்ஸ் (நீதானே இது. எத்தனை பெயர்கள்)

Post a Comment