ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும்
Posted by
Vidhoosh
on Tuesday, September 8, 2009
Labels:
சக பதிவர்
என் முந்தைய பதிவான ஆயிரங்காலத்து அழுகல்பயிர் - 4 என்ற தொடர்-பதிவில் வால்பையன் அருண் இட்டிருந்த பின்னூட்டம் இவை.
//எப்படி ஒரு குழந்தை தன் தாயிடம் சரணடைந்திருக்கிறதோ, அப்படியே பெண்களும் தம்கணவனிடம் சரணடைந்து இருந்து பாருங்கள். அவன் எப்படிப்பட்ட கொடூரனாக இருந்தாலும், சீக்கிரமே தன் பொறுப்புக்களை உணர்ந்து நல்வழிப்படுவான். //
இதெல்லாம் ஓவரு!
அநியாயத்துக்கு ஆணியம் பேசுறிங்க!
உங்களுக்காக பாடுபட்ட பெரிவங்களை மறந்துறாதிங்க!
ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் இல்லை, அதே நேரம் அனைவரும் நல்லவர்களும் இல்லை!
நீங்கள் சொல்வது போல் இருந்தால் இது தான் வசதின்னு பையன் செம ஆட்டம் போடுவான்!
/ஆணியம் பேசலைங்க. முடிந்தால் இவை உண்மையா இல்லையா என்று உங்கள் அம்மாவிடம் கேட்டுச் சொல்லுங்கள். //
ஏற்கனவே பின்னூட்டங்கள் கொடுத்த கேள்விகளும், அது கிளப்பிய சிந்தனைகளும் அதனால் உண்டான பல பதிவுகளும் இன்னும் முழுமை அடையாமல் editing-கில் இருக்கிறது. இருந்தாலும், உடனடியாக பதில் சொல்ல முடிந்தாலே இந்த பதிவு.
=======================
மரிலின் பிரன்ச் என்ற பெண்ணியவாதி, "ஆண்கள் எல்லோருமே காமுகர்கள்" என்று ஒரு சபையில், ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன் அறிவித்தாராம். அதோடு மட்டும் இல்லாமல் "அவர்கள் கண்களாலும் விதிமுறைகளாலும் சட்டங்களாலும் கற்பழிக்கிறார்கள்" என்று கோபமாக சீறினாராம். இது பெண்கள் மற்றும் ஆண்களிடையே பெரும் சலசலப்பை அப்போது ஏற்படுத்தியது என்று என் தந்தை எனக்கு செய்தித்தாளில் வாசித்து காண்பித்திருக்கிறார்.
ஏன் இந்த பொதுப்படை சிந்தனை? அந்த பத்து சதவீத விதி-விலக்கு பெண்களில் இல்லையா என்ன? அதற்காக பெண்களைப் பார்த்து இப்படி பொதுப்படை கருத்து தெரிவிக்கிறோமா?
பாடுபட்டாங்க. சரிங்க. அவர்கள் இன்று வந்து சில அலுவலங்களிலும், குடும்பத்திலும் நுழைந்து பார்க்கட்டுமே. ஏண்டா பாடுபட்டோம் என்று நொந்து கொள்வார்கள்.
பெண்ணியம் தவறென்று கூறவில்லை. சமத்துவம் என்பது அடுத்தவரை இழிவுபடுத்துவது இல்லை. பெண்ணோ ஆணோ, தனி நபர் உணர்வுகள் மதிக்கப்படும் போதுதான் சமத்துவம் ஏற்படுகிறது. ஆனால், நடப்பதோ, தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது போல, ஆட்சி கைமாறினால், அடுத்தவரை முடிந்தவரை எழவே முடியாதவாறு தோற்கடிக்கும், இகழும் குரூரம் மட்டுமே சமத்துவமாக நடந்து கொண்டு இருக்கிறது. இதென்ன சமத்துவம் என்றே புரியவில்லை.
எப்படி மாமியார் - நாத்தனார் என்றாலே கொடுமைகாரிகள், தோழிகளாக இருக்கவே முடியாது என்று புரையோடி போய் விட்டதோ, அதே போல ஆண்கள் பற்றிய பெண்ணியவாதிகளின் வாதங்களும் புரையோடி போனவையாக இருக்கிறது. பல பெண்ணியவாதிகளின் மகன்கள் introvert-களாக இருப்பதையும் கண்டிருக்கிறேன். மன்னிக்கவும், ஒரு நாய் கூட கல்லால் அடித்தால் குறைந்தபட்சம் திரும்பக் குரைக்கும், ஆனால் நான் குறிப்பிடும் பெண்ணியவாதிகளால் வளர்க்கப்பட்ட மகன்கள், எதாலோ அடித்தால் கூட வாங்கி கொண்டு சிவனே என்று போனதையும் பார்த்து கொதித்திருக்கிறேன். அவன் நிச்சயம் பெண்கள் மீது வெறுப்பு கொண்டவனாகவே வளர்கிறான்.
யாரோ ஒருவன் அடிக்கிறான். அன்று என்னால் அடிக்க முடியவில்லை என்பதற்காக என் கை ஓங்கியதும் அவனை நசுக்குவது நியாயமா? காலச்சக்கரத்தில், மீண்டும் மாற்றான் கை ஓங்கினால், இதே நிகழும், அப்புறம் நாமெல்லாம் நாகரீகமடைந்து விட்டோம் என்று பறை சாற்றுவதில் என்ன பயன்?
சரி, back to the point, கணவனை சரணடைந்து இருத்தல் எல்லோருக்கும் நன்மை தராது, ஆண்கள் ஆட்டம் போடுவார்கள் என்ற தொனியில் வாலின் பின்னூட்டம் இருக்கிறது.
சரணடைவது / சார்ந்து இருத்தல் என்பது நம்பிக்கையின் எல்லை. ஒரே இரவில் அல்லது across the counter நம்பிக்கை வரவே முடியாது. அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி இல்லை பெற்றோர் பார்த்து முடிவெடுத்த திருமணமாக இருந்தாலும் சரி. கூடவே இருந்து, ஒருவர் மற்றவரின் குறை நிறைகளை தெரிந்து புரிந்து, வரும் பிரச்சினைகளை சமாளித்து, எல்லாவற்றுக்கும் பின், இருவருக்கும் மற்றவர் மீது அதீத நம்பிக்கை வரும் போதே, சார்பு ஏற்படுகிறது. சார்பு வந்தால் மட்டுமே குடும்பம் என்ற வட்டம் இணைகிறது, முழுமை பெறுகிறது.
மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல, ஆணையும் பெண்ணையும் ஒரு தராசில் நெறுக்க முடியுமா? நிச்சயம் முடியாது. ஆணையும் பெண்ணையும் ஒப்பீடு செய்வதே தவறு. ஆணோ பெண்ணோ, over-protective ஆகவோ, இல்லை over-liberal ஆகவோ இருப்பது எப்படி balance / சமத்துவமாக கருத முடியும். இவை இரண்டுமே சீர்கேட்டுக்கு / குடும்பச் சிதைவுக்கு மட்டுமே வழிகோலும்.
சில மனைவிகள் இன்றும் கணவன்களால் துன்பத்தில் இருக்கிறார்கள். எங்கே? அடித்தட்டு (below poverty line) மற்றும் மேல்தட்டு (rich) சமூகத்தில் இருக்கும் நான்கு சதவீத பெண்மணிகள் உண்மையாகவே ஆண்களால் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். ஆனால் அவர்களிடம் போய் பேசிப் பாருங்கள், புலம்பிக் கொண்டே, அவனுக்கு உணவு எடுத்து வைத்துக் கொண்டிருப்பாள். இதில் என்ன பெருமை என்றே எனக்கு புரிவதில்லை. தியாகம் என்ற பெயரில் அடிமை வாழ்க்கை வாழ்வாள். எத்தனை பெண்களுக்கு தனக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருக்கிறது? என்று துக்கப்பட்டுக் கொண்டாலும், இதே நிலை ஆண்களுக்கு இல்லையா?
"ஆண்கள் எல்லோரும் மிருகங்கள். அவர்கள் இப்போது எதுவும் செய்யவில்லை என்றாலும், வாய்ப்புக்காக காத்திருந்து, அதை பற்றியே சிந்தனை செய்து கொண்டு இருப்பார்கள்" (Men are animals I don't care if they're not doing anything at the moment they're thinking about it and they will when they have the chance.) என்று ஒரு ஆங்கில நாவலில் படித்திருக்கிறேன். இதே தொனியில், எங்கள் பாட்டி (அவரும் ஒரு பெண்ணியவாதி) கூட "அண்ணனா இருந்தாலும் ஆம்பிள ஆம்பிளதான்" என்பார். இதில் எனக்கு ஒப்புதல் இல்லை.
எத்தனை அண்ணன்கள் தன் தங்கைகளுக்காக, தன்னுடைய திருமணத்தை காலம் கடந்து செய்து கொண்டிருக்கிறார்கள். இதை பெருமை என்றோ அல்லது சரியானது என்றோ, சொல்லவில்லை. அப்படி பெண்களுக்கும், வெறும் சதைக்கும் அலைபவர்கள் என்றால், நம் தந்தை, அண்ணன், தம்பி, நண்பன் என்ற ஒவ்வொரு ஆணும் அப்படிப்பட்டவர்களா? நினைத்து கூட பார்க்க சங்கடமாக இருக்கிறது. எல்லோரும் மன்னிக்க.
"அவர்கள் நம் எதிரிகள்", "after all they are boys", என்றெல்லாம் இன்றும் பள்ளி செல்லும் சிறுமிகள் பேசிக் கொள்வதை பார்க்கிறேன். இதே எண்ணத்தோடே வளரும் அவர்களால், மாமியாரை எதிர்கொள்ளும் அதே மனப்பாங்கோடுதான் கணவனையும் எதிர்கொள்வார்களோ என்று நினைத்தது உண்டு.
யார் நல்லவன் என்பதற்கு விளக்கமளிக்கவே முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு நல்லவன் இருக்கிறான், ஒவ்வொருவரும் அவரவர் நியாயப்படி நல்லவனாகவே இருக்கிறார்கள்.
நான் உண்ணும் இரண்டு சப்பாத்திகள், இந்த உலகில், எங்கோ நான்கு பேருக்கு உணவாக இருக்கலாம். நான் நல்லவளாக இருக்கிறேன் என்பதற்காக, அதை உண்ணாமல் நான் பட்டினி கிடப்பது எவ்வளவு அறியாமையான செயலோ, அதே போல, பொதுப்படையான ஒரு கருத்தை திணித்தலும் அறியாமையே.
ஆண்களில் பத்து சதவீதம் நல்லவர்கள் இல்லை என்றால், பெண்களும் அதே போல பத்து சதவீதம் நல்லவர்களாக இல்லை என்பது ground reality. ஏன் பெண்களால் பெண்களுக்கு துன்பம் விளைவதில்லையா? உண்மையில் சொல்லப் போனால் "மனம் அழுகிய" ஆண்களை பற்றி எப்படி பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் தெரியுமோ, அதே போல பெண்களிலும் "மனம் அழுகிய"வர்கள் இருக்கிறார்கள்.
Let's accept the fact and move on.
உதாரணத்திற்கு, ஒரு பெண்ணை வெள்ளம்/புயல்/மழையிலிருந்து காப்பாற்றிய ஒருவரை பற்றிய செய்தி நமக்கெல்லாம் சப்பென்று இருக்கிறது. ஆனால், "மழையில் சிக்கிய அழகி கற்பழித்து கொலை" என்ற செய்தி நமக்கெல்லாம் "என்னாச்சு" என்றே தெரியாத மாதிரி, ஒரு பரபரப்பைக் கொடுக்கிறது.
எப்படி தேவ-அசுர, நாத்திக-ஆத்திக, ஜாதி-மத வேறுபாடுகள் மீதான விவாதங்கள் தீர்ந்து போய் விடாமல், பரபரப்பை அடிக்கடி உண்டாக்கி, மீடியா பார்த்துக் கொள்கிறதோ, அதே போல ஆண்-பெண் சமத்துவமும் ஏற்பட்டு விடாமல் பெண்ணியவாதிகள் பார்த்துக் கொள்வார்கள்.
ஏன் ஆண்களை வில்லனாகவே பார்க்க வேண்டும்? அதே போல இன்றும் பெண்களை அடியோடு வெறுக்கும் ஒரு தலைமுறை வளர்ந்து வருவதாகவே தோன்றுகிறது.
ஆணோ, பெண்ணோ, எங்கே மெல்லிய உணர்வுகள் நசுக்கப்படுகிறதோ, அங்கே வன்முறை வெடிக்கிறது. புரட்சி, போராட்டம், எதிர்ப்பு என்றெல்லாம் எந்தப் பெயர் வேண்டுமானாலும் கொடுத்துக் கொள்ளலாம். குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் அரவணைப்பு, அவர்களால் தத்தம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இருந்தாலே போது, தனிநபருக்கு சமூகத்தின் அங்கீகாரம் என்ற ஒன்று பற்றிய கவலை கூட வராது. குடும்பத்தின் அரவணைப்பே, அவனுக்கு தன்னம்பிக்கை பெற்றுத் தரும். தன்னம்பிக்கை உடைய யாருமே மனதுக்கு தவறென்று தெரியும் செயல்களைச் செய்வதில்லை.
இதெல்லாம் சாத்தியப்பட ஒன்றே ஒன்று மட்டும் போதும், அது நம்மை சார்ந்தவர்களின் "மெல்லிய உணர்வுகளை மதிப்பது" - நடக்குமா? என்பது million dollar question?
.
16 comments:
நல்ல அலசல் .
"அதே போல ஆண்-பெண் சமத்துவமும் ஏற்பட்டு விடாமல் பெண்ணியவாதிகள் பார்த்துக் கொள்வார்கள்."
இதுதான் உண்மையா இருக்குமோ ??
விதூஷ், விதூஷ்!
என்ன ஆச்சு? இப்படி ஓவரா வறுத்தா பகோடா தீஞ்சு போயிடுமா இல்லையா?
இங்கே, பெண்கள் மட்டுமே தியாகிகள், ஆண்கள் அவர்களைக் கொடுமைப் படுத்திவிட்டுக் கடைசி அத்தியாயத்தில், தன் செயலுக்கு மன்னிப்புக் கோரித் திருந்திவிடுகிற ஆண்களைப் பற்றிக் கதைகள் எழுதின லக்ஷ்மி, மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்ற பாரதியின் கவிதையை அப்படியே அச்சு அசலாக, என்ன மடமையைக் கொளுத்துவதற்குப் பதிலாகக் குடும்பத்தையே கொளுத்தி விடுகிற பெண், மேடையில் பெண்ணீயம் பேசிவிட்டு, வீட்டில் என்னங்க இன்னைக்கு என்ன சமையல் செய்யட்டும் என்று அனுமதி வாங்கும் வாசகிகள் முதலாகப் பலவிதமாகவும் தான் இந்த உலகம் இருக்கிறது.
அதனால் என்ன?
பெண்ணியமா/ஆணீயமா அல்லது வெறும் ஆணிகளா என்பதை, குடும்பம், குடும்பம் சார்ந்த உறவுகளை நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதை மட்டுமே சார்ந்திருக்கிறது. பிறருடன் கூடி வாழுதல் என்பதே கொஞ்சம் விட்டுக் கொடுத்தாலும், சமன் செய்துகொண்டுபோவதிலுமே உறவுகள் நிற்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் இத்தனை விவாதங்களுக்கு அவசியமே இல்லையே!
இது என்னுடைய ரெண்டு நயே பைசே!
கேள்வியும் எதிர் கேள்வியும் சுட சுட இருக்கு வித்யா.
***************
யார் நல்லவன் என்பதற்கு விளக்கமளிக்கவே முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு நல்லவன் இருக்கிறான், ஒவ்வொருவரும் அவரவர் நியாயப்படி நல்லவனாகவே இருக்கிறார்கள்.
***************
இதுதான் உண்மை இதுதான் நிதர்சனம்
நான் ஏதாவது சொன்னா ஹஸ்பண்டாலஜி பேராசிரியை இங்கயும் வகுப்பெடுக்க வந்துட்டாங்கன்னு சொல்வாங்க.
:))
பிறர் உணர்வுகளை மதித்து வாழ்வதில்தான் எல்லாமே அடங்கி இருக்கிறது என பல விசயங்களை உள்ளடக்கி எழுதப்பட்ட அழகிய கட்டுரை.
நானே உசத்தி எனும் எண்ணம் வரும்போது பலவித பிரச்சினைகளும் உடன் எழுந்துவிடுவதை எவராலும் தவிர்க்க இயலாது.
எதிர்த்து பேசுவதில்தான் வீரம் இருக்கிறது என்பதில்லை, அடங்கிப் போவதினால் கோழை என்பதில்லை. எங்கே எதைச் செய்ய வேண்டுமோ அங்கே அதைச் செய்தலே வீரமும் விவேகமும்.
பெண்கள் தியாகம் என்ற போர்வையில் செய்வதில்லை அது, ஒரு கட்டுக்கோப்பான குடும்பம் கலைந்துபோய்விடுமே எனும் அக்கறையினால் செய்வது. தன் வலி பொறுத்துக்கொண்டு பிறருக்கு வலியின்றி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவே எந்த பெண்ணும் விரும்புவார். இந்த அக்கறை ஆண்களுக்கும் உண்டு.
நம்பிக்கையுடன் நல்லதே நடக்கும் என மனம் விட்டு பேசி வாழ்ந்தால் மகிழ்ச்சி உண்டாகும் என அருமையாக எழுதப்பட்ட கட்டுரை.
வித்யா...
சூடான இடுகை ஆரோக்கியமான விவாதங்களுக்கு காத்திருக்கிறேன்
:)
ரெம்ப சீரியஸ்ஸா போய்க்கிட்டிருக்கு.. நமக்கு இதெல்லாம் ஒத்து வராது.. அதனால Attendance மட்டும் தான்.. :)
ஒரு சின்ன டவுட்..
//நான் உண்ணும் இரண்டு சப்பாத்திகள்//
- இது சும்மா ஒரு பேச்சுக்குத்தான??
வித்யா, வால் சொல்வது சரியோனு தோணுதுப்பா...
//ஆணோ, பெண்ணோ, எங்கே மெல்லிய உணர்வுகள் நசுக்கப்படுகிறதோ, அங்கே வன்முறை வெடிக்கிறது//
மிகச்சரி!
முழுமையடைந்தது போல் எனக்கு தோன்றவில்லை!
நின்னை சரணடைந்தேன் என்பது கூடலுக்கும், ஊடலுக்கும் தான் சரியாக இருக்கும், எல்லா நேரமும் அதே நினைப்பில் இருப்பது சுயமரியாதையும், தன்னம்பிக்கையும் குறைக்கும் என்பது என் கருத்து!
வால்பையன் முழுமையடைந்ததாத் தெரியலேன்னுட்டுச் சொன்னது:
/நின்னை சரணடைந்தேன் என்பது கூடலுக்கும், ஊடலுக்கும் தான் சரியாக இருக்கும், எல்லா நேரமும் அதே நினைப்பில் இருப்பது சுயமரியாதையும், தன்னம்பிக்கையும் குறைக்கும்/
சரணடைதல்னு நீங்க புரிஞ்சுகிட்டது காலைப் பிடிக்கிறது பத்தி! அது வேற!
உறவுகளில், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதென்பது, ஒரே மாதிரிச் சிந்திப்பது என்பதல்ல-வேறுமாதிரியும் இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்வது தான்! தன்னுடையது தான் சரி என்று திணிக்க முற்படும்போது, அங்கே விரிசல் ஏற்படத் தொடங்குகிறது!
எடுத்த எடுப்பிலேயே கோவை சரளா வடிவேலு காமெடி ரேஞ்சுக்கு வன்முறை வெடிச்சதுன்னா, அதுக்கும் பெரியவங்க வழி சொல்லியிருக்காங்க-"சொல்லிக்காம சந்நியாசியா ஊரை விட்டு ஓடிப் போயிடு"ன்னு:-))
//உறவுகளில், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதென்பது, ஒரே மாதிரிச் சிந்திப்பது என்பதல்ல-வேறுமாதிரியும் இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்வது தான்!//
அப்படியானால் அனுசரித்து போவது என்று தானே இருக்க வேண்டும்!
சரணடைதல் என்பது நீ எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் நான் கட்டுப்படுகிறேன் என்று தானே அர்த்தம்!
குடும்பம் என்பது இருவர் சேர்ந்து உருவாக்குவது! பெண் முழுமையாக சரணடைவதால் தான் அது முழுமையடைகிறது என்ற கருத்தில் நான் விலகி நிற்கிறேன்!
நான் ஒருமுறை என் மனைவிக்கு புடவை எடுத்து கொடுப்பது பரிசு, அன்பால் ஏற்று கொள்ளலாம், என்நேரமும் அவள் என்ன உடுத்த வேண்டும் என நானே தீர்மானிப்பது ஆணாதிக்கம்!
பெண் சரணடைவதால் ஆண் பொறுப்பாக இருப்பான் என்ற கூற்று சம காலத்திற்கு ஏற்று கொள்ள முடியாத ஒன்று, நாம் அனைவரும் சமூகத்தில் உடை போட்ட விலங்குகள்! அந்த மிருகம் என்நேரமும் தூங்கி கொண்டே தான் இருக்கும் என்று சொல்லமுடியாது!
//எடுத்த எடுப்பிலேயே கோவை சரளா வடிவேலு காமெடி ரேஞ்சுக்கு வன்முறை வெடிச்சதுன்னா,//
ஜாதகத்தில் பொருந்தா காமம் பார்க்கும் மக்கள், பொருந்தா மனம் பார்ப்பதில்லை!
நாட்டில் அனைவரும் உண்மையிலேயே மனமுவந்து தான் மணம் முடிக்கிறார்களா!?
இதற்குத்தான் காத்திருந்தேன். இப்போ ஆஜராகிறேன்.
பெண் மட்டும் சரணடைய / அனுசரிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. சரணடைதல், நம்பிக்கையின் எல்லை. அந்த நம்பிக்கை வரவே சிறிது நாள்/வருஷங்கள் ஆகும். சரணடைதல் எல்லாம் நாற்பது-ஐம்பது வயதுக்கு மேல்தான் தம்பதிகளுக்குள் வருகிறது. :))
ஒரு பெண் நினைத்தால் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமாலும் மாற்ற முடியும். tactics என்று சொல்வோமே அது.
ஆணுக்கு - உண்மையிலேயே இந்த திறம் கிடையாது. குதிரைக்கு லகான் கட்டியது போல, ஒரே திசையிலேயே சிந்திப்பு கொண்டவர்கள்.
உண்மையில் பெண்ணுக்குள் "தான்" என்ற அகங்காரத்திற்கும் "தன்னால் முடியும்" என்ற தன்னம்பிக்கைக்கும் வித்தியாசமே வெளியில் தெரிவதில்லை. இதற்கு அவளை கூர்ந்து கவனிக்க வேண்டும். சமூகமெல்லாம் அப்புறம்தான். முதலில் வீட்டிற்குள் பெண் தன்னம்பிக்கையோடு இருப்பதை எப்படி பார்க்கிறோம்? இதற்கு கணவனின் முழுமையான புரிதலும், நம்பிக்கையும் வேண்டும். கணவன் முழுமையாக நம்பிய பிறகு, மனைவி "அவனுக்கு ஏதும் தெரியாது நான்தான் எல்லாம்" என்ற உணர்வு தலை தூக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு இருவரும் ஒருவரை ஒருவர் சரணடைய வேண்டும். நீயில்லாமல் நானில்லை என்று ஒன்று பட வேண்டும். "நீயா நானா?" என்று ஆனால், முடிந்தது கதை. ஆயிரம் காலத்து பயிர் அழுகலாகி விடும்.
கிருஷ்ணமூர்த்தி சார் சொன்னது போல சொல்லாமல் சந்யாசமே சாலச் சிறந்ததாகும்.
குடும்பமாக இருந்தாலும் / பொது மேடையாக இருந்தாலும் ஒருவர் பேசினால் மட்டும்தான் அது பேச்சு. இல்லை என்றால் அது சலசலப்பாக மாறிவிடும்.
///அந்த மிருகம் என்நேரமும் தூங்கி கொண்டே தான் இருக்கும் என்று சொல்லமுடியாது!///
அந்த மிருகம் சிங்கமா பூனையா என்றும் மனைவி நடந்து கொள்வதை பொறுத்தே அமைகிறது. :)
--வித்யா
//அந்த மிருகம் சிங்கமா பூனையா என்றும் மனைவி நடந்து கொள்வதை பொறுத்தே அமைகிறது. :)//
நீங்கள் ஏட்டுசுரைக்காயை பிராக்டிகலாக நம்ப வைக்க முயற்சி செய்கிறீர்கள்!
இரண்டு பேரும் சரணடைதல் என்பது மணமான மூன்று மாதங்களுக்கு நடக்கத்தான் செய்கிறது! என்நேரமும் போன் பண்ணி கொண்டு, கொஞ்சி கொண்டு, ஆனால் அது உண்மையான சரணடைதல் கிடையாது!
வள்ளவர் உளரியது போல், பத்தினி சொன்னால் வாழைமட்டை எரியும், கிணற்றில் வாளி அப்படியே நிற்கும் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை!
நீங்கள் மாறி மாறி இருவரையும் தான் சொல்கிறேன் என்றாலும் பதிவின் சாரம்சம், பெண் சரணடைந்தால் ஆண் பொறுப்பாக இருப்பான் என்பது தானே!
அந்த பருப்பு இந்த காலத்தில் வேகாது, இரவு நேர சூரிய நமஸ்காரம் உங்கள் பதிவு!
வீட்டில் என்னை நம்பி ஒரு மனைவி இருக்கிறாள் என்ற பொறுப்பு 50 சதவிகத்திற்கும் கீழே தான் இருக்கும், எனக்காக ஒரு மனைவி இருக்கிறாள் என்பதில் பல சுயநலங்கள் ஒழிந்துள்ளது!
இது இருவருக்கும் பொருந்தும்!
//பெண்கள் தியாகம் என்ற போர்வையில் செய்வதில்லை அது, ஒரு கட்டுக்கோப்பான குடும்பம் கலைந்துபோய்விடுமே எனும் அக்கறையினால் செய்வது.//
அந்த அக்கறைக்குள் தான் சுயநலம் ஒழிந்துள்ளது, மீண்டும் சொல்கிறேன் இருபாலருக்கும் மறைமுக சுயநலமே குடும்பத்தை காப்பாற்றுகிறது!
ஒருவர் ஆண்டான், ஒருவர் அடிமை என்றால் டண்டணக்கா தான்!
Post a Comment