பைத்தியம் - 5

முதல் பாகம் இங்கே
இரண்டாம் பாகம் இங்கே
மூன்றாம் பாகம் இங்கே
நான்காம் பாகம் இங்கே


==========================
சாயும் வெய்யில் என் முதுகில் விழுந்து தோள்களினூடே என் நிழலைத் தொட பிரயத்தனம் செய்து கொண்டிருந்தது. உப்பு காற்றும், அலைகளின் ஓசையும் மட்டுமே என்னுடன் இருந்தது.

மழை பெய்ய ஆரம்பித்தது. அலைகள் வெளி வர முயன்றாலும், கடலிடம் தோற்று திரும்பிச் சென்று கொண்டிருந்தன.

ஒரு பெண் நானிருக்கும் திசை நோக்கி வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தாள்.
===============================

இரவு நீண்டு கொண்டிருந்தது.

கடைசி பஸ் கூட இந்நேரம் போயிருக்கும். நான் அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை. வேகமாக கொட்டும் மழை மணலை என் மீது இறைத்துக் கொண்டிருந்தது. அந்தப் பெண் என்னைக் குறித்துதான் ஓடி வருகிறாள். யார் அவள் என்று நினைத்தபடியே எழுந்தேன்.

இப்போது எனக்கு பெண்களைப் பார்கவே பயமாக இருந்தது. திரும்பி தேவி மண்டபம் நோக்கி விரைந்தேன். சற்று வேகமாகவே நடப்பது போல இருந்தது. ஒடுவதென்றும் சொல்லலாம். மூச்சு இரைத்தது. நாமும் கடைசி பஸ்சுக்கு போயிருக்கலாம் என்று நினைக்கும் போதே, மண்டபம் வந்து விட்டது. சற்று மறைந்த மாதிரி ஒளிந்து அமர்ந்து கொண்டேன்.

மண்டபத்தின் சுவர்களில் மழை பெய்யும் ஓசையும் காற்று சுழற்றி அடிக்கும் ஓசையும் பட்டு இணைந்து எதிரொலித்தது. அப்படியே கண் மூடி அமர்ந்து கொண்டேன்.

"நீ இன்னுமா போகல? மழை நின்னு போயிடுத்தே." என்று ஒரு குரல்.

கண் திறக்கும் மனபலம் இல்லை. இருந்தாலும் "யாரு?" என்று கேட்டேன்.

"நாந்தா கல்யாணி. தெரியல?"

திடுக்கிட்டு விழித்தேன். எதிரே பால்யம் மாறாத பெண் குழந்தை. ஏழு வயதிருக்கும். பட்டுப் பாவாடை அணிந்திருந்தாள். கால்களில் கனமான கொலுசு தண்டை போல இருந்தது. கையில் வளையல்கள், கழுத்தில் தங்க மாலை என அணிந்து, அற்புதமான தெய்வாம்சத்துடன் நின்றிருந்தாள்.

எழுந்து நின்றேன். பதில் கூடச் சொல்லாமல் திரும்பி ஓட ஆரம்பித்தேன்.

"நில்லு ரவி. ஓடாத. எனக்கு பதில் சொல்லாம நீ போகமுடியாது" குரல் அங்கிருந்தே ஒலித்தது.

இதயம் துள்ளி வெளியே விழுந்துவிடும் போல இருந்தது. நின்றேன். வானத்தை நிமிர்ந்து பார்த்தேன்.

வானம் ஒரு மிருகம் போல உறுமிக்கொண்டு இருந்தது. நிலாவும் நட்சத்திரங்களும் கருமையான பின்புலத்தைக் கண்டு பயந்து கீழே பூமியில் குதித்து விடும் போலவே எனக்கு தோன்றியது. இரவு ஒரு அதிசயங்களை தனக்குள் வைத்திருக்கும் காலம். அது காண்பவனின் கண்ணுக்கு அவன் மனநிலை போலவே தெரிகிறது. விவரிக்கவே முடியாத வானின் நிறங்களும், ஆழமாகவும், நீண்டதாகவும், உம்ம்ம்-மென்ற ரீங்காரத்தோடும், இரசிக்கமுடியாத அமைதியோடும், இன்னும் காணாத பல மர்மங்களையும் உள்ளடக்கி இருக்கிறது. பல அழகுச்சிலைகளை இரசித்த என் கண்கள், எவ்வளவோ நாட்களில் இரவு வராதா என்று ஏங்கியிருக்கிறது. ஆனால் இன்றைய இரவு விசித்திரமாக இருந்தது. பயங்கரமாய் இருந்தது. இந்தக் கண்களை மூடி தூங்கிவிடலாம் என்று நினைத்தேன். தூங்க முடியவில்லை. அதனால்தான் இரவு தூங்காதவனை பைத்தியம் பிடிக்கிறது போலும். எனக்கும் அப்படியே ஆகிவிடும் போல இருந்தது.

நான் நின்று கொண்டேயிருந்தேன். ஆனால் யாரும் என்னை நெருங்கி வரவில்லை. திரும்பிப் பார்த்தேன். யாருமே இல்லை. அந்தப் பெண் கூட கண்ணுக்கு தென்படவில்லை.

ஆனால் நான் தனியாக இல்லை என்பதை மட்டும் உணர்ந்தேன். நிஜமாகவே பைத்தியம் ஆகிவிட்டேனோ? என்று எனக்கே தோன்றியது. என் மூக்கு விடைத்துக் கொண்டது. இருளினூடே யாரும் தெரிகிறார்களா என்று கூர்ந்து பார்த்தேன். தெரியவில்லை. மெல்ல நடந்தேன். மண்டபம் வரை சென்று பார்த்தேன். யாருமேயில்லை. மண்டபத்தில் விட்டுச் சென்ற என் பையை எடுத்துக்கொண்டு ஓடினேன். சந்தடி நிறைந்த ஹோட்டல் பகுதிக்கு வந்ததும்தான் எனக்கு நிம்மதியானது.

"யாரும் செய்யாததையா நான் செய்தேன்? நான் செய்தது பாவமா? குற்றமா? இப்போதுதான் பெண்களை ஏறிட்டும் பார்ப்பதில்லையே? எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் ஆகிறது?" என்று நினைக்க நினைக்க அழுகை வந்தது. யாரும் பார்க்கும் முன் ரூமுக்கு போய் விட வேண்டும் என்று நினைத்து, வேகமாக நடந்தேன். ரூமுக்குள் கதவை சாத்திக் கொண்டு விட்டு கதறி அழுதேன்.

சந்தோக உபநிஷதில் பிரம்மன் விவரித்தது போல இந்திரனும், விரோச்சன அசுரனும் ஒரு நிலைக்கண்ணாடியை பார்த்து தன்னை உணர்ந்து, ஞானம் பெற்று தம் தவறுகளைத் திருத்திக் கொண்டது போல, இன்று நானும் என் தவறுகளை உணர்ந்தேன்.

வேத-புராணங்கள், பழங்கதைகள் இதையெல்லாம் படித்து இறைவனே தவறு செய்திருக்கிறான் நாம் செய்தால் என்ன என்று நினைத்தது எவ்வளவு தவறு. இறைவன் செய்த தவறுகளுக்கே அவ்வளவு பெரிய தண்டனை கிடைத்தது. நான் சாதாரண மனிதன்தானே? இப்படியெல்லாம் வாழ்ந்தால் புத்தி பேதலிக்கும் என்று அவற்றில் கூறியிருப்பது எவ்வளவு நிஜம்.

நான் செய்தவை குற்றம் இல்லை என்றால் ஏன் அழுகிறேன்? ஏன் பயம் வருகிறது? எந்த வழியில் போனால் எனக்கு இந்த குற்றவுணர்வு தீரும். எனக்கு இதிலிருந்து விடுதலைக் கிடைக்கும்? எந்தப் புத்தகம் படிப்பது? எந்த சுலோகம் சொல்வது? எந்தக் கடவுளை நாடுவது? எது உண்மையானது?

விடிந்து விட்டது. வானம் தெளிந்திருந்தது. மெல்ல அறையின் கதவை பயந்து கொண்டே திறந்தேன்.

"நான் உனக்காகத்தான் இத்தனை நேரம் இங்கியே நின்னுண்டிருந்தேன். என்னோட வா" என்றாள் கல்யாணி.

அப்படியே திடுக்கிட்டு இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றேன். "யாரு நீ. என்னை எப்படித் தெரியும்?" என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டேன்.



...................தொடரும்.



.

10 comments:

அ.மு.செய்யது said...

4,5 படிச்சாச்சி !!!! ( அவசரத்துல )..இன்னும் ஒருமுறை பொறுமையாக‌ படித்து விட்டு வருகிறேன்.

Radhakrishnan said...

திடுக்கிடும் வைக்கும் சம்பவங்களும், கல்யாணியின் பிரவேசமும், வேத காலத்திலிருந்து நடைபெற்று வரும் தவறுகளும், திருத்தங்களும் என அட்டகாசமாக கதை நகர்கிறது. மிக்க நன்றி.

தேவன் மாயம் said...

பொறுமை சாலி..நீங்க!! சரி படிச்சிட்டு வருகிறேன்!!!

நேசமித்ரன் said...

விதூஷ் அருமை !
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
:)

சப்ராஸ் அபூ பக்கர் said...

முன்னைய பதிவுகளையும் கட்டாயம் படிக்கிறதா முடிவு பண்ணியாச்சுங்கோ.....

Vidhoosh said...

நன்றி நண்பர்களே. உங்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

மன்னிக்கவும். தவிர்க்க முடியாத சில வேலைகளால் தொடர்ந்த பயணத்தில் இருக்கிறேன். வியாழன் வரை விடுமுறை. அடுத்த பகுதி பதிவேற்ற நேரமில்லாமல் காத்திருக்கிறது.

--வித்யா

உமா said...

அடுத்த பகுதிவரை நெஞ்சில் திக் திக்...
காத்திருக்கிறோம்.

நந்தாகுமாரன் said...

தீர்த்துக்கட்டுங்க மொத்தமா படிச்சுக்கிறேன் :)

நர்சிம் said...

//அலைகள் வெளி வர முயன்றாலும், கடலிடம் தோற்று திரும்பிச் சென்று கொண்டிருந்தன.//

gud one

Nathanjagk said...

//அதனால்தான் இரவு தூங்காதவனை பைத்தியம் பிடிக்கிறது போலும்// தாங்க்ஸ்ங்க! குட் நைட்! ஸ்.ட்.!
இந்த வரி​கொண்ட பத்தி அருமை!

Post a Comment