பைத்தியம் - 2

இதன் முதல் பாகம் இங்கே...

===================

அன்று இரவே என்னை என் அம்மா ஊருக்குப் போக சொல்லி விட்டார். பழனிக்குத் திரும்பி விட்டேன். வழிக்கு அம்மா வேப்பிலைஎல்லாம் கொடுத்து அனுப்பினார். என் அறைக்கு வந்து படுத்துக் கொண்டேன். தூக்கம் வருவதாயில்லை.

மீண்டும் மீண்டும் காத்திருக்கும் தெய்வத்தைப் பற்றியே சிந்தித்தேன். தவிர்க்க நினைக்க நினைக்க அதே நினைவுகள் சுழற்றியடித்தன.

திடீரென வாயிற்கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்தால் யாருமில்லை. நான் மாடிப் படியிறங்கி வாசல் வரை சென்று பார்த்தேன். யாருமில்லை.

மீண்டும் கதவு தட்டப்பட்டது. மீண்டும் சென்று பார்த்தேன். யாருமில்லை.

ஒருவேளை எனக்கு பிரமையோ என்று நினைக்கும் போதே, மீண்டும் கதவு தட்டப்பட்டது. இம்முறை கதவை திறக்காமல், ஜன்னல் வழி எட்டிப் பார்த்தேன். கும்மிருட்டு.

இரவின் சாயலில் ஒரு மெலிந்த உருவம் நடந்து கொண்டிருந்தது, திடீரென என்னைப் பார்த்து "சேந்தமங்கலத்துக்கு வா" என்று கூறி இருட்டில் மறைந்து விட்டார் அவர்.

நான் உணர்வில்லா ஒரு உணர்வில் உறைந்திருந்தேன். என் முகத்தில் நீரை வாரி இறைத்துக் கொண்டு கண்ணாடியில் பார்த்துக் கொண்டேன். சாதாரணமாகவே இருந்தது. நல்லவேளை.

இவ்வுலகில் சேந்தமங்கலம் எங்கிருக்கிறது? இதெல்லாம் கனவாக இருக்குமோ? என்றெல்லாம் நினைத்தபடி இரவெல்லாம் விழித்திருந்தேன்.

எப்போது தூங்கினேன் என்றே தெரியாமல் ஏதேதோ கனவுகள் அலைகழிக்க தூக்கத்திலேயே சஞ்சாரித்தேன். கனவில் ஒரு குளம் மற்றும் ஒரு குன்று தென்பட்டது. திடீரென அந்தக் குன்றின் நிழல் விழுந்து அந்த குளத்தின் நீர் என் மேல் தெளிப்பது போல உணர்ந்து, திடுக்கிட்டுக் கண் விழித்தேன்.

காலை ஆகியிருந்தது. அலுவலகம் சென்றேன்.

ஆடிட்டிங் செய்ய கொடுக்கப்பட்ட வவுச்சர் மற்றும் பில்களை சரி பார்த்துக் கொண்டே வந்த போது, ஒரு பில்லில் ஏதோ பிழை இருந்தது. ஜூனியரிடம் கொடுத்து சரி பார்க்கச் சொன்னேன். எல்லாம் சரியாக இருக்கிறது என்றே கூறினான். நான் மீண்டும் படித்த போதுதான் சரியாகவே இருக்கிறது என்று கண்டேன். என்ன இது? என்று யோசிக்கும் போதே, அந்த பில்லில் டெலிவரி இடம் என்று குறிக்கப் பட்டு இருந்தது கண்ணில் பட்டது;

"சேந்தமங்கலம்".

உடனே அந்நிறுவனத்திற்கு போன் செய்து, சேந்தமங்கலம் எங்கு இருக்கிறது என்று கேட்டேன். சேலத்திலிருந்து இரண்டு மணிநேரப் பயணம் என்றார்கள். எனக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும் மீள முடியாமல் இருந்தது.

மதிய நேரத்தில் என் தாயார் போனில் பேசினார். நலங்கள் விசாரித்து, சாப்பிட்டியா என்று கேட்டு, எனக்கு பெண் பார்த்திருக்கும் விஷயமும் கூறினார். பொண்ணு எந்த ஊர் என்று கேட்டேன்.

"சேந்தமங்கலம்" என்றார் அம்மா.

(தொடரும்.............)
இதன் முதல் பாகம் இங்கே...

===================

.

7 comments:

அ.மு.செய்யது said...

இப்ப புரிஞ்சது வித்யா...

கடைசில செம்ம ட்விஸ்ட் வெக்கறீங்க..நல்ல ஃப்ளோ...!!!

தொடருங்கள்.

R.Gopi said...

//நான் மீண்டும் படித்த போதுதான் சரியாகவே இருக்கிறது என்று கண்டேன். என்ன இது? என்று யோசிக்கும் போதே, அந்த பில்லில் டெலிவரி இடம் என்று குறிக்கப் பட்டு இருந்தது கண்ணில் பட்டது;

"சேந்தமங்கலம்".//

திக் திக்......

அங்கே....சேந்தமங்கலத்தில் நடந்தது என்ன??

ஆவலை சிறிது குறைத்து வெயிட் பண்ணுங்கள்......

(பக்கோடா சுவை - உப்பு, காரம், டேஸ்ட் நல்லா இருக்கு.....)

உமா said...

பரபரப்பா இருக்கே, சீக்கிரம் அடுத்த பாகத்தை தந்துவிடுங்கள்.
ஆவலுடன்

நேசமித்ரன் said...

இந்தக் கதையை இனி இரவு நேரத்தில் படிப்பதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறேன்
அமானுஷ்யமா? இல்லை அதிமானுடர் உலவும் கதையா?
போக போக தெரியும் என்று காத்திருக்கிறேன் .

நர்சிம் said...

மர்ம தேச திகில் கலக்கல்.அடுத்த பார்ட் எப்போ?

வெ.இராதாகிருஷ்ணன் said...

ஆஹா சேந்தமங்கலத்தில் ரவிக்குப் பொண்ணுப் பார்த்துருக்காங்களா? பெண் பாவம் பொல்லாதது போலிருக்கே!

குடந்தை அன்புமணி said...

ஆகா... ஆகா... சூப்பரா போகுதுங்க... வேலைப்பளுவால் இப்போதுதான் படிக்கிறேன். தொடர்ந்து கலக்குங்க...

Post a Comment