இன்னிக்கு என்னாச்சு தெரியுமா....?

"ஏற்கனவே நேற்று என் கணவர் ரவியின் வேலை போய்விட்டது. இதில் இது வேற. இன்று சாயந்திரமே கருக்கலைப்பு செய்து விட வேண்டும் டாக்டர்" என்று குற்ற உணர்வோடு கூறினேன்.

"என்னம்மா. ஜாக்கிரதையா இருந்திருக்கக் கூடாது? உங்க உடல் நலம்தான் கெடும். அதோடு உங்க முதல் குழந்தைக்கு பின்னாடி ஒரு துணை வேண்டாமா? அவங்கவங்க குழந்தை இல்லையேன்னு அழுவறாங்க" என்று திட்டியபடியே, "நாளைக்கு சாயந்திரம் ஆறரைக்கு வாங்க. இன்னிக்கு மட்டும் பஸ்ல போயிடுங்க. டூ வீலர் வேண்டாம்" என்று சீட்டு எழுதிக் கொடுத்தார்.

மருத்துவமனையை விட்டு வெளியேறி, ஆட்டோ பிடித்து, சஞ்சய்-யை கிரெச்சில் விட்டு விட்டு, திருவான்மியூர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன். நான் போக வேண்டிய பேருந்தைத் தவிர எல்லாப் பேருந்தும் கிளம்பிச் சென்ற வண்ணம் இருந்தது.

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன என்ற இந்திரா பார்த்தசாரதியின் புத்தகம் பையில். எடுத்து விசிறிப் பார்த்தேன்.

திருவொற்றியூர் செல்லும் பேருந்து வந்து விட்டது. ஒரு சீட்டின் ஜன்னல் ஓரமாய்ப் போய் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தேன். இப்படி பயணித்துக் கொண்டே படிக்கும் சுகத்தை இழந்தது நான் ஸ்கூட்டர் வாங்கியதில் இருந்துதான். சிறிது படித்தேன். படிக்க விடாமல், என் சிந்தனைகள் பிரக்ஞையில்லாத சமிக்ஞைகள் செய்து அழைத்தன. சிறிது நேரம் கண் இமை மூடி இருந்தேன். நிறைய காட்சிகள் தெரிந்து சஞ்சலம் செய்தது.

டூ வீலர் என்ற சுயசார்பு சுதந்திரம் இல்லாமல், பேருந்து ஓட்டுனரை நம்பி பயணிப்பது சுகமாய் இருந்தது. ஒருவரைச் சார்ந்து இருப்பதில் எவ்வளவு நிம்மதி கிடைக்கிறது என்பது இன்றைய பேருந்து பயணத்தின் தத்துவார்த்த அனுபவமாக இருந்தது.

நத்தை போல் ஓடும் கட்டிடங்கள்,
நடைபாதைக் குடைக் கடைகள்
ஒரு வேகமான திருப்பத்தில்
இறங்கி ஓடினான்...விழுந்துவிட
போகிறானோ பதறியது மனம்
பிக்பாக்கெட் அடித்தவனாம் அவன் - பின் அங்கு
பணப்பையைத் தொலைத்தவரின் புலம்பல்
அன்றும் நடந்த ஆண் பெண் அன்றாட சண்டைகள்
ஜன்னல் வழி எச்சில்கள் - நடத்துனரின்
சில்லறைத்தனமான திருட்டுக்கள்,
முன் இருக்கை தோழிகளின் கிசுகிசுக்கள்,
அங்கே நின்று கொண்டே - கண்ணாலே
காதல் வளர்க்கும் காதலர்கள்,
அவன் காற்றில் வீசிய முத்தம்
பெற்ற அந்த காதலின் புது வெட்கம்,
"இவள் எப்போது எழுந்திருப்பாள்" என
என்னருகில் காத்து நிற்கும் நடுவயதினள்,
அவள் மனம் புரிந்தும் அழும்பாய்
அமர்ந்திருக்கும் நான்!!
'சலாம் குலாமு' பாட்டை
முணுமுணுக்கும் பள்ளிச் சிறுமி,
கடைசி இருக்கையில் கானா பாட்டுக்கள்,
இத்தனைக்கும் நடுவில் வாய் திறந்து
தூங்கிக் கொண்டிருந்த அந்த ஆள்,
தம்மகள் திருமண பணக்குறையை
நட்பிடம் புலம்பும் ஏழைத் தந்தை,
படு வேகமாய் இடப் பக்கம் முந்தி
ஓவர்டேக் செய்தவனை
"டேய். $$@#@^&* மவனே" என
திட்டியபடியே ஸ்கூட்டரில் பறந்த
பாரதியின் புதுமை பெண்ணின் அழகு
இத்தனையும் இன்றுதான்
நிதானித்துப் பார்க்கிறேன்
ஊர்ந்தேன் நான் பேருந்தில் இன்று....

என் எண்ணம் திருடிக் கொண்டிருந்த எல்லோரையும் துரத்திவிட்டு பின் சீட்டில் இருந்த குழந்தை என் நீண்ட பின்னலைப் பிடித்து இழுக்கவும், கவனம் சிதறி, குழந்தையின் சிரிப்பையும் அதன் வாயில் இருந்து வழியும் ஜொள்ளைப் பார்த்து, மனது சிறிது இளகினார் போல இருந்தது. குழந்தையைக் கொஞ்ச ஆரம்பித்து விட்டால் என் முக பாவங்கள் மற்றவருக்கு கேலிக் கூத்தாகி விடும் என்று நினைத்து மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டேன்.

நான் இறங்கவேண்டிய நிறுத்தம் வந்துவிட்டது. எத்தனை அற்புதமான பயணம். என் அபார்ஷன் குற்ற உணர்வு கூட சிறிது மறந்திருந்தேன்.

=================

அலுவலகத்திற்குள் நுழையும் போது, கைபேசி கூவியது.

"ஹலோ"

"பத்மா மேடம். உங்க மகன் ரொம்ப அழுதுட்டிருக்கான். உடனே வாங்க."

"என்னங்க ஆச்சு?" லேசாய்ப் பதறினேன்.

"சீக்கிரம் வாங்க." போனை வைத்து விட்டாள் கிரெச்சுக்காரி.

அலுவலகத்தில் சொல்லிவிட்டு திரும்பி சென்ற ஆட்டோ பயணம் அவ்வளவு சுகிக்கவில்லை. அவன் கேட்ட இருமடங்கு பயணக்கூலி வேறு நெஞ்சை நிரப்பி என் மகனைப் பற்றிக் கூட சிந்திக்க விடாமல் செய்தது. ஒரு வழியாய் அடையாரில் இருக்கும் கிரெச்சுக்கு வந்து சேர்ந்தேன்.

அவன் அழுகுரல் என்னை பதறச்செய்தது. "குழந்தை எங்கே?" என்றவாறே விரைந்தேன். குழந்தை இருக்கும் பக்கம் திரும்பிப் பார்க்கும் தைரியம் ஏனோ வரவில்லை.

"விளையாடும் போது கால் இடறி, டெஸ்க் முனையில் தலை பட்டு விட்டது. அரைமணி நேரம் ஆச்சு. கொட கொடன்னு இரத்தம். நாங்களே பயந்துட்டோம். பர்ஸ்டு எய்டு செய்தேன். உடனே டாக்டரிடம் கூட்டிப் போங்க."

"அரை மணிநேரமா? என்னங்க நீங்க ஹாஸ்பிடல் கூட்டிப் போயிட்டு என்னை வரச்சொல்லி இருக்கலாமில்ல? இவ்ளோ பொறுப்பில்லாம இருக்கீங்களே?" என்று கையாலாகாத குரலில் அவர்களிடம் சீறிவிட்டு, மீண்டும் ஆட்டோ பிடித்தேன்.

"அருகில் இருக்கும் எந்த ஆஸ்பத்திரிக்கும் போங்க" என்றேன். ரவிக்கு போன் செய்தால் ஏதோ இண்டெர்வியூவில் இருப்பதாக சொன்னார்.

===================

"இந்த மருந்தெல்லாம் வாங்குங்க. சூச்சர் போடணும். நானூறு ரூபாய் பார்மசில கட்டிடுங்க. ஐந்நூறு ரூபா என் பீஸ். கவுன்டருல கட்டிடுங்க." என்றார் டூட்டி டாக்டர்.

பர்சில் இருந்தது நூறே ரூபாய்தான். காலையில் வங்கியில் டிராப் செய்த ஆயிரம் ரூபாயும் செலவாகி விட்டதா? அப்படி என்ன செய்தோம் என்று யோசித்தபடியே, "நூறு ரூபாதான் இருக்கு. நீங்க டிரீட்மன்ட் கொடுங்க. நான் டிராப் செய்து தரேன்" என்றேன்.

"நீங்க டிராப் செய்துட்டு வந்திடுங்க மேடம்." என்றார் நிர்தாட்சணியமாய்.

"சார். இது ஆக்சிடென்ட். நான் மட்டும்தான் குழந்தையோட வந்திருக்கேன். என்னோடு வேறு யாரும் இல்லை. இவனை விட்டு விட்டு எப்படி சார் போக முடியும்? இல்ல கூட்டிட்டு தான் போக முடியுமா" கண் கலங்காமல் இருக்க ஆன வரை முயற்சித்தேன்.

"சரி சரி. தெரிஞ்சவங்க யாருக்காவது போன் செய்து சீக்கிரம் வரச் சொல்லுங்க. நான் டிரீட்மன்ட் கொடுக்கிறேன். ஆனா பணம் கட்டாம நீங்க வெளில போக முடியாது. சரியா?" என்றார்.

பலியாடு போல தலை ஆட்டினேன்.

ஏழு தையல். சஞ்சய் ஒவ்வொரு ப்ரிக்குக்கும் கதறினான். போறாக்குறைக்கு டெட்டனஸ் ஊசி வேறு. ஒரு வலி குறைக்கும் ஊசிக்குப் பிறகு என் தோளில் சாய்ந்து தூங்கிப் போனான். என் துப்பட்டாவை ஆஸ்பத்திரி வராண்டா தரையில் விரித்து, அதில் அவனைக் கிடத்தினேன்.

பக்கத்து வீட்டில் இருக்கும் ஷ்யாமளவுக்கு போன் செய்தேன். அவள் ஏதோ நண்பரின் திருமணத்திற்குப் போவதாக கூறினாள். சஞ்சயை எப்போதும் கொஞ்சிக் கொண்டிருக்கும் கீழ் வீட்டுத் தாத்தாவைக் கூப்பிட்டேன். அவருக்கு மூட்டு வலியாம். அலுவலகத்திலிருந்த சகாக்கள் எல்லோருக்கும் தொலைவு ஒரு பிரச்சினையாய் இருந்தது. நான் நம்பி அழைத்த ஒவ்வொருவருக்கும் மறுக்க ஒரு காரணம் இருந்தது. மாதமானால் ஐயாயிரம் ரூபாய் கூசாமல் வாங்கிக் கொள்ளும் கிரெச்சுக்காரி போனை எடுக்கக் கூட இல்லை.

ஆஸ்பத்திரியில் இருந்த இந்த ஒரு மணிநேரத்தில் திடீரென உலகில் நான் தனியாகி விட்ட மாதிரி இருந்தது. மூச்சு முட்டியது. தொண்டை வலித்தது. கீழே விழுந்து விடுவேன் போல இருந்தது. தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தை கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவன் முகம் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். ரொம்ப சோர்வாய் இருந்தது.

கைபேசி கூவியது.

"நான் ஒரு வேலையாய் சென்னை வந்தேன். இப்போ அடையார்லதான் இருக்கேன். எங்கக்கா இருக்க?" என் தம்பி மணி.

"டேய் தம்பி." வாயில் வார்த்தை தழுதழுத்தது. எல்லாவற்றையும் சொல்லி முடிக்கும் போது கன்னங்கள் நனைந்திருந்தன.

"நான் இப்பயே வரேன் அக்கா. நீ கவலைப் படாத. எப்பயும் கையில பைசா வச்சுக்கணும் அக்கா" என்றான் மணி.

மணி வந்து வேண்டிய பணங்களைக் கட்டிவிட்டு, அவசரமாய் வரச்சொன்ன அலுவலகத்திற்கு விரைந்தான். அவனை தன் வேலை முடித்து பின் எங்கள் வீட்டுக்கு வரச்சொல்லி வழியனுப்பி விட்டு ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வரும் போது வெளிச்சமாய் இருந்தது சாயங்கால வெயில்.

என் டாக்டருக்கு போன் செய்தேன். "டாக்டர்! நான் கருக்கலைப்பு செய்யப் போவதில்லை. நாளைக்கு மாலை இருந்த அபாயிண்டுமண்ட கான்சல் செஞ்சுருங்க" என்ற போது மகிழ்ச்சியாக இருந்தது.

இனி பேருந்தில்தான் பிரயாணம், நிறையப் புத்தகம் படிக்கலாம் என்ற குதூகலித்தபடியே, குழந்தையைத் தூக்கிக் கொண்டு சாலைக்கு வந்து "ஆட்டோ" என்று கூவினேன்.

10 comments:

நேசமித்ரன் said...

வெகு நேர்த்தியாக செதுக்கி இருக்கிறீர்கள்
மிக அணுக்கமான கதைமொழி வாய்த்திருக்கிறது
சொற்கள் இழுத்து செல்கின்றன கண்களை
வெல்லத்தை சுமந்தபடி வரிசை மாறாத எறும்புகளைப் போல...

Vidhoosh said...

ரொம்ப நன்றி நேசமித்ரன் சார். தொடர்ந்த வாசிப்பிற்கு. எனக்கு ஊக்கம் அளிப்பதற்கு.
:)

யாத்ரா said...

எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இந்தக் கதை, அருமையா எழுதியிருக்கீங்க, பல இடங்கள் கவிதை போலவே இருந்தது,

//ஒருவரைச் சார்ந்து இருப்பதில் எவ்வளவு நிம்மதி கிடைக்கிறது என்பது இன்றைய பேருந்து பயணத்தின் தத்துவார்த்த அனுபவமாக இருந்தது//

பிறகு உங்கள் எண்ணம் திருடியவர்கள் பற்றி எழுதியவைகனைத்தும் கவிதைகள்

//குழந்தையின் சிரிப்பையும் அதன் வாயில் இருந்து வழியும் ஜொள்ளைப் பார்த்து//

//நான் நம்பி அழைத்த ஒவ்வொருவருக்கும் மறுக்க ஒரு காரணம் இருந்தது//

இம்மாதிரி தெறிப்பாய் பல இடங்கள் பிடித்திருக்கிறது, சிறுகதை வடிவம் உங்களுக்கு அழகாய் வருகிறது, நிறைய எழுதுங்கள்,

மற்றபடி எனக்கு கருக்கலைப்பு என்பது மிகவும் பிடிக்காத விஷயம், இன்னும் ஒரு படி மேலே கருத்தடுப்பு என்பதே பிடிக்காது, அந்தக் காலம் போல் பத்து பதினைந்து என வீடு நிறைய குழந்தைகள் இருக்க வேண்டும்.

தம்பி ஆஸ்பிட்டலுக்கு வந்து, பிறகு அவரை விழியனுப்பனப்பியவுடன் கருக்கலைப்பு குறித்த எண்ணம் மாறியதாக சித்தரிக்கப்பட்டிருக்கும் இடம்,கதையின் மிக சிறப்பான இடம்.

அருமையான கதை,

உண்மையில் உங்களுக்கு தம்பி இருக்காங்களா

நசரேயன் said...

நல்ல தெளிவான கதை ஓட்டம், ஆட்டோ விலே போன மாதிரி இல்லை.. விமானத்திலே போன மாதிரி இருந்தது

நந்தாகுமாரன் said...

என் எளிய அறிவிற்கு இது மிக அபாரமான படைப்பு என்று தோன்றுகிறது ... WOW VIDHYA ...

Vidhoosh said...

நன்றி யாத்ரா.
நன்றி நந்தா.
நன்றி நசரேயன். (இதில் ஏதும் உள்குத்து இல்லையே??)

அகநாழிகை said...

விதூஷ்,
கதை உண்மையிலேயே நன்றாக இருக்கிறது. எனக்குப் பிடித்திருக்கிறது. இன்னும் கூட நீளமாக வந்திருக்க வேண்டிய கதை இது. அருமை,

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

மணிப்பயல் said...

நிதானமான நடையில் பயணிக்கிறது கதை. வாழ்த்துக்கள்.

Vidhoosh said...

நன்றி வாசு. அதென்ன "உண்மையிலேயே"??? :ப

நன்றி மணி. நல்லாருக்கீங்களா?

Paleo God said...

:)))

Post a Comment