இன்னிக்கு என்னாச்சு தெரியுமா


(இது ஒரு கதையில் வரும் கவிதை)
நத்தை போல் ஓடும் கட்டிடங்கள்,
நடைபாதைக் குடைக் கடைகள்
ஒரு வேகமான திருப்பத்தில்
இறங்கி ஓடினான்...விழுந்துவிட
போகிறானோ பதறியது மனம்
பிக்பாக்கெட் அடித்தவனாம் அவன் - பின் அங்கு
பணப்பையைத் தொலைத்தவரின் புலம்பல்
அன்றும் நடந்த ஆண் பெண் அன்றாட சண்டைகள்
ஜன்னல் வழி எச்சில்கள் - நடத்துனரின்
சில்லறைத்தனமான திருட்டுக்கள்,
முன் இருக்கை தோழிகளின் கிசுகிசுக்கள்,
அங்கே நின்று கொண்டே - கண்ணாலே
காதல் வளர்க்கும் காதலர்கள்,
அவன் காற்றில் வீசிய முத்தம்
பெற்ற அந்த காதலின் புது வெட்கம்,
"இவள் எப்போது எழுந்திருப்பாள்" என
என்னருகில் காத்து நிற்கும் நடுவயதினள்,
அவள் மனம் புரிந்தும் அழும்பாய்
அமர்ந்திருக்கும் நான்!!
'சலாம் குலாமு' பாட்டை
முணுமுணுக்கும் பள்ளிச் சிறுமி,
கடைசி இருக்கையில் கானா பாட்டுக்கள்,
இத்தனைக்கும் நடுவில் வாய் திறந்து
தூங்கிக் கொண்டிருந்த அந்த ஆள்,
தம்மகள் திருமண பணக்குறையை
நட்பிடம் புலம்பும் ஏழைத் தந்தை,
படு வேகமாய் இடப் பக்கம் முந்தி
ஓவர்டேக் செய்தவனை
"டேய். $$@#@^&* மவனே" என
திட்டியபடியே ஸ்கூட்டரில் பறந்த
பாரதியின் புதுமை பெண்ணின் அழகு
இத்தனையும் இன்றுதான்
நிதானித்துப் பார்க்கிறேன்
ஊர்ந்தேன் நான் பேருந்தில் இன்று....
.

0 comments:

Post a Comment