கல்லாங்காய் விளையாட்டுப் பாடல்கள்

இன்று இக்கவிதை படித்ததும்:

சரியா தப்பா எனக் கேட்டு சரியாகவே
தாண்டி தாண்டி பாண்டி விளையாடும்,
பத்து வயதில் 'உக்கார்ந்து' குழந்தை பருவத்தைத் தொலைத்து
'பெரியவள்' ஆகிப்போன பட்டணத்துப் பாப்பாக்களை
விளையாடத் தடைவிதித்து வீட்டுக்குள் உக்காரவைக்கும்
உலகில் எல்லாம் தெரிந்த உள்ளம் உள்ளவர்களுக்கு,
உங்களுக்குத் தெரியுமா?அந்த நாள் உபாதைகளை
அடியோடு போக்கிடவே நம் முன்னோர்கள் கண்ட
முழுத்தீர்வு தான் இந்த விளையாட்டோடு சேர்ந்த
வினை தீர்க்கும் மருந்து உணர்ந்து கொள் உடனே,
தொடரச் சொல் அதனை.
--துரை.ந.உ தூத்துக்குடி

எனக்குள் நிறைய நினைவலைகள். சில்லு விளையாட்டு, பல்லாங்குழி, கல்லாங்காய் அல்லது கல்லாங்கல் அல்லது கழங்காடுதல் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் இந்த விளையாட்டுக்கள் தரும் மகிழ்ச்சிக்கு வேறு பெயரே கிடையாது.

கல்லாங்கா விளையாட்டு, ஒண்ணாங்கா, ரெண்டாங்கா, மூணாங்கா, நாலாங்கா, அஞ்சாங்கா என்று போகும். இந்த விளையாட்டு விளையாட கருங்கல் பொறுக்குவதில் போட்டியே நடக்கும். அழகான உருண்டையான ஒரே அளவிலான கற்களை சேமித்தல் ஒரு கலை.

புளியங்கொட்டை, கூழாங்கற்கள் அல்லது ஜல்லிகற்கள் கரடும் முரடுமாக, சொரசொரவென்று ஆரம்பத்தில் இருக்கும். நாளடைவில் விளையாட விளையாட வழவழப்பாகிவிடும். நிறைய கருங்கற்களை தரையில் பரப்பி கற்களை கையால் மேலே எறிந்து சுழற்றிப் பிடிப்பது, புறங்கையில் பிடிப்பது, வாரிப் பிடிப்பது, போன்று பல விதங்கள். எனக்கு கொஞ்சம் மறந்து விட்டது. நினைவிருப்பவர்கள் பகிரலாம்.

விளையாடும் போது பாடும் பாடல்கள் இவை.

கொக்குச்சி கொக்குகுச்சி, ரெட்டை ரெட்டை சிலாக்கு
முக்குக்குச் சிலந்தி கடிபடுடி, நான்கு வந்தா வாரணும்
ஐயப்பன் சோலை, ஆறுமுக தாளம் போட்டு
ஏழுக்குக் கூழு குடி, எட்டுக்கு முட்டி போடு
ஒன்பது கம்பளம் விரிச்சு படு, பத்துக்கு பழம் கொடு.
கட்டை வச்சேன் கால் நீட்டி, கல்லெடுத்து ஆடினேன்,
ஈரிரண்டைப் போடடி, இறுக்கி மாட்டைக் கட்டடி
பருத்திக் கட்டி வையடி, பட்டு கட்ட முடியாம
முக்கட்டி வாணியன் சொல்லாட, சொல்லுஞ் சொல்லும் சேர்ந்தாட
வாணியன் வந்து வழக்காட, வாணிச்சி வந்து வசைபாட
நாலை வைச்சு நாலெடு, நாராயணன் பேரச் சொல்லு
பேரச் சொல்லி வாழ்ந்து நில்லு, ஐவரளி பசுமஞ்சள்
அரைக்க அரைக்கப் பத்தாது, பத்தாத மஞ்சள் பசுமஞ்சள்
ஆக்குருத்தலம் குருத்தலம், அடுப்புத் தண்டலம் தண்டலம்
வேம்பு கட்டால் வெண்கலம், ஏழு புத்திர சகாயம்,
புத்திர சகாயம் வேணாண்டி, மாடு கட்டினா மகராஜி.
எட்டும் பொட்டும் போடட்டும், ஒன்பதுநரி சித்திரத்தை
பேரன் பிறந்தத சொல்லத்தான், பேரிடவாடி பெரியக்கா
பத்திர சித்திர கோலாட்டம், பங்குனி மாசம் ஆடடி
வெள்ளிக்கிழமை அம்மன் கொண்டாட்டம்.

என்னை மறந்து இதை முணுத்த போது, எங்கள் வீட்டில் வீட்டு வேலை செய்யும் (பத்துப் பாத்திரம் தேய்ப்பது போன்ற) மீனாம்மா "இது என்ன பட்டிகாட்டு பாட்டு போல?" என்று என்னை அவங்க கிண்டல் பண்ணிட்டு போனாங்க... ஹ்ம்ம்..


..

11 comments:

நேசமித்ரன் said...

ஆத்தி எம்புட்டு ஞாவக சக்தி
தூத்துக்குடி காரவுக பாட்டும் நல்லா இருக்கு ..!

நெசந்தேன் என்ன செய்ய ..

உமா said...

அற்புதம், கலாங்காய் ஆடினதெல்லாம் நியாபபடுத்திட்டீங்க.

உண்மையைச் சொல்லணும்னா நான் உங்கள் எழுத்துக்கு இரசிகையாகிவிட்டேன். மிக இனிமையாக எழுதுகிறீர்கள்.

உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மிக மகிழ்ச்சி.
அன்புடன் உமா.

R.Gopi said...

//கொக்குச்சி கொக்குகுச்சி, ரெட்டை ரெட்டை சிலாக்கு
முக்குக்குச் சிலந்தி கடிபடுடி, நான்கு வந்தா வாரணும்//

இத இப்போ எப்படிங்க ஞாபகம் வச்சு இருக்கீங்க, வித்யா?? அதுவும் முழுசா??

அசத்தல்தான்......

அ.மு.செய்யது said...

//கொக்குச்சி கொக்குகுச்சி, ரெட்டை ரெட்டை சிலாக்கு
முக்குக்குச் சிலந்தி கடிபடுடி, நான்கு வந்தா வாரணும்
ஐயப்பன் சோலை, ஆறுமுக தாளம் போட்டு
ஏழுக்குக் கூழு குடி, எட்டுக்கு முட்டி போடு
ஒன்பது கம்பளம் விரிச்சு படு, பத்துக்கு பழம் கொடு.
கட்டை வச்சேன் கால் நீட்டி, கல்லெடுத்து ஆடினேன்,
//

இவ்வளவு அழகா இந்த பாட்டெல்லாம் எழுதினது யாருன்னு நம்மளால கண்டு பிடிக்க முடியுமா ??

அழகான நினைவுகள் விதயா...

யாத்ரா said...

மனதிற்கு இனிமையாக இருக்கிறது இந்தப் பகிர்வு.

நட்புடன் ஜமால் said...

செய்யது சொன்னதையே நானும் சொல்லிக்கிறேன் ...

“சென்னை பட்டனம்

பார்க்க போறியா - போறியா

சிங்காரமா வாழப்போறியா”

இப்படி ஒரு பாடல் கல்லூரி படிக்கையில் உதகமண்டலத்தில் ஒரு போட்டியின் போது ஒரு மதுரைகாரவர் பாடினார் - அதன் பின் இதன் வரிகள் மறந்து விட்டது

ரொம்ப நல்ல வரிகள் இருந்தன அவற்றில்.

சுபஸ்ரீ இராகவன் said...

கல்லாங்கா விளையாடின காலத்துக்கு பயணித்தேன்.பகிர்ந்தமைக்கு நன்றி.

பதிவை படித்தபின் பின்னோக்கி பயணித்து நினைவில் இருந்து அரைகுறையாக வெளி வந்தவை.. :-))

ஏல...
ஈரி .. ஈரிரெண்டு எடுக்கவே எலந்தை பழுக்கவே
முக்கூட்டு - மூணு முக்கூட்டு ஜெயிக்கவே .. முந்தி நானும் இருக்கவே..
நாலு - நான்குத்து செங்குத்து நாக பழங்குத்து
-----
-----
ஏழு - எம்பி எழுந்துக்கோ எலந்தபழம் கடிச்சுக்கோ

அமிர்தவர்ஷினி அம்மா said...

கல்லாங்கா விளையாட்டு, ஒண்ணாங்கா, ரெண்டாங்கா, மூணாங்கா, நாலாங்கா, அஞ்சாங்கா என்று போகும். இந்த விளையாட்டு விளையாட கருங்கல் பொறுக்குவதில் போட்டியே நடக்கும். அழகான உருண்டையான ஒரே அளவிலான கற்களை சேமித்தல் ஒரு கலை //


அட நானும் இந்த கேட்டகிரிதாங்க.

ஆனா அந்தப் பாட்டு புதுசு எனக்கு. நல்லா இருக்கு சொல்லிப்பார்க்க ரைமிங்கா.

Vidhoosh said...

அட அமித்து அம்மாவா? வாங்க வாங்க மேடம். இப்பதான் வழி தெரிஞ்சுதா? நல்லா இருக்கீங்களா?

--வித்யா

பிரவின்ஸ்கா said...

நல்லாருக்கு .
வேலை அதிகமாக இருப்பதால்
ப்லோக் பக்கம் வரமுடியவில்லை
மற்ற படைப்புக்களை நாளை
வாசிக்க முடியும் என நம்புகிறேன்.


- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சூப்பர்!

:)

Post a Comment