பைத்தியம் - 4

இதன் முதல் பாகம் இங்கே
இரண்டாம் பாகம் இங்கே
மூன்றாம் பாகம் இங்கே
==========================

"இது ஒரு சித்தரின் சமாதி. அதோ அந்த போட்டோவில் இருக்கிறார் பாருங்கள். முப்பத்தஞ்சு வருஷம் முன்னாடியே இறந்துட்டார். நீங்கல்லாம் பிறந்திருக்கவே மாட்டீங்க" என்றார் அர்ச்சகர்.

திரும்பிப் பார்த்தேன்.

அன்றிரவு என்னை சேந்தமங்கலத்துக்கு வரச்சொன்ன அதே மெலிந்த உருவம் பிரேமுக்குள் படமாக இருந்தார். கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.
=======================================
"தம்பி தம்பி" என்றார் அர்ச்சகர்.

அர்ச்சகரின் குரல் என்னை உணர்வுகளுக்கு கொண்டு வந்தது. மயங்கி விழுந்து விட்டேன் போலிருக்கிறது. குகை வாயிலில் என்னை கிடத்தியிருந்தார். படுத்தே கிடந்தேன்.

"இங்கு ஒரு குளம் இருக்கிறதா?" என்று கேட்டேன்.

"இருந்தது. சித்தர் இறந்ததும் வத்திப் போயிடுத்து. அங்கு வெறும் புல்தான் இருக்கு" என்றார் அர்ச்சகர். "ஆமாம் உங்களுக்கு குளம் இருந்தது எப்படி தெரியும்?" என்று கேட்டார்.

நான் பதிலேதும் கூறவில்லை. "குளம் இருக்க வேண்டுமே" என்றபடி எழுந்தேன்.

என்னை ஒருமாதிரியாக சந்தேகத்துடன் பார்த்து விட்டு, "சரி வாங்க போகலாம். நடை சாத்த வேண்டும்" என்றார் அர்ச்சகர்.

வெளியே வந்து கோவில் படிகளிலேயே இரவு வரை அமர்ந்திருந்தேன். பெண் வீட்டிலிருந்து தேடிக்கொண்டு, அர்ச்சகர் கூறியதால் கண்டுபிடித்து வந்து அழைத்தனர். அவர்களுடன் நடந்து கொண்டிருந்தேன். பெண்ணின் அண்ணன், "எனக்கெனவோ இவரு ஒரு மாதிரியான ஆளென்றே தோணறது." என்று தன் தந்தையிடம் கிசுகிசுத்தான்.

நான் கண்டுகொள்ளவில்லை. கல்யாணம் பண்ணி கொள்ளவா சேந்தமங்கலம் வந்தேன். நான் வந்த நோக்கம் இன்னும் எனக்கே புரியவில்லை.

"என்னங்க ஆச்சு" என்று என்னிடம் பெண்ணின் அண்ணன் கேட்டான்.

"குழந்தை கல்யாணி செத்துப் போயிட்டாள். இல்லையா?" என்றேன்.

அவர்கள் இருவரும் திடுக்கிட்டு என்னைப் பார்த்தனர். இதற்குப் பிறகு கொஞ்சம் என்னிடமிருந்து விலகியே நடந்து வந்தனர். அவர்கள் வீடு வந்ததும், அந்தப் பெண் ஒரு தட்டில் காபி டம்ப்ளரை வைத்து நீட்டினாள். அவள் அண்ணன் அவளை உள்ளே போகச் சொன்னான். அந்த பெண்ணும் என்னை பைத்தியம் என்பது போலவே பார்த்துக் கொண்டே உள்ளே போனாள். விடைபெற்று கிளம்பினேன்.

இந்த நிகழ்வுக்குப் பின் என் அம்மா கூட என்னை மனநல மருத்துவரிடம் போகச் சொல்லி வற்புறுத்தினார். நான் மறுத்து விட்டேன்.

அதன் பின் என் வீட்டுக்குப் போவதை குறைத்து விட்டு, சேந்தமங்கலத்திற்கு, அந்த சமாதியை பார்க்க அடிக்கடி போக ஆரம்பித்தேன். என் மனம் அங்கேயே சுற்றியது. ஏதோ ஒரு அதிர்வலை என்னை அங்கு ஈர்த்துக்கொண்டே இருந்தது.

நாளடைவில், அந்த ஊர் மக்கள் கூட என்னை மனநலம் பிழன்றவன் என்றது போலவே பார்த்தனர்.

இந்த மாதிரி ஒரு நேரத்தில்தான், நான் அத்வைதம் பயில ஆரம்பித்தேன். இது சம்பந்தமாக ஒரு புத்தகத் தேடலில், மகாபலிபுரம் சென்றேன். மகாபலிபுரம் சென்னையிலிருந்து, ஏறத்தாழ 70-80 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அங்குள்ள பழைய கோவில்கள், குடவறைகள், பல்லவர் காலத்து கலைச் சிற்பங்கள் எல்லாமே மனத்தை கொள்ளை கொள்ளும் விதத்தில் அமைந்திருக்கும்.

மகாபலிபுரம் கலங்கரை விளக்கத்தினருகில் இருக்கும் தேவி கோவிலில் மதியம் அமர்ந்திருந்தேன். மகிஷாசுரமர்தினி மண்டபம் அருகே போனேன். அங்கு பழுப்பேறிய குகை சுவற்றில் விஷ்ணு மது-கைடப அசுரர்களுடன் போரிடுவது பற்றிய செதுக்கப்பட்ட சுவர்ச் சிற்பங்களைக் கண்டேன்.

பொதுவாக இந்திய நாட்டின் அமைப்பு, வடக்கே உயர்ந்தும், தெற்கே தாழ்ந்தும் இருக்கிறது. பொதுவாக உயரமான வெளிச்சமான இடத்தை நேரிடை சிந்தனை கொண்டவர்களும், மறைவான தாழ்வான இருண்ட இடத்தையே எதிர்மறை சிந்தனை கொண்டவர்களும் தேர்ந்தெடுப்பார்கள் என்று ஒரு மனநல ஆய்வில் கூறப்படுகிறது. அதன் படி பார்த்தால், இந்தியாவில் தேவர்கள் மற்றும் அசுரர்கள் இருந்திருக்கக் கூடும். வடக்கே குளிர்ந்தும், மழை அதிகமாகவும், மலைகள் அதிகமாகவும் இருப்பதால், அங்கே தேவர்களும், வனங்கள் நிறைந்து, வறட்சியும், வெப்பமும் அதிகம் உள்ள பகுதியான தெற்கில் அசுரர்களும் வாசம் செய்து வந்திருக்கலாம். அதனால்தானோ என்னவோ, யமன் கூட தெற்கிலே வாசம் செய்கிறான். தெற்கில் எதிர்மறை அலைகள் நிறைந்து இருப்பதால் தெற்குப் பக்கம் தலை வைத்து படுக்கக் கூடாது என்கிறார்கள். இன்றைக்கு அப்படியெல்லாம் இல்லை. நாம் எல்லோருமே அசுரர்கள்தான்.

இப்படி சிந்தித்துக் கொண்டே தனக்குத்தானே சத்தமாய் சிரித்தேன். யாரும் பார்த்துவிட்டர்களா என்று சுற்றிலும் பார்த்தேன்.

எதிர் சுவற்றில் தேவி பதினெட்டு கரங்களுடன் மகிஷாசுரானை வதம் பண்ணும் காட்சி தத்ரூபமாய் இருந்தது.

டூரிஸ்டுகள் அவரவர் பேருந்துகளில் மீண்டு திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். நானோ தேவியின் முகத்தை பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்.

தேவியின் ஆங்கார முகத்தினூடே, நான் பழகி கூடி மறந்த பெண்களின் முகம் ஒவ்வொன்றாக தோன்றி மறைந்தது. கொஞ்சம் பயமாக இருந்தது. கண்களை மூடிக் கொண்டேன்.

கண்ணை மூடியதும் மனம் பேச ஆரம்பித்தது. கல்யாணி என்று கூறினேனே, அப்படி யாரையுமே பார்த்ததில்லையே? யார் கல்யாணி? என்று என்னையே கேட்டது.

துரோகம் துரத்தும் என்று படித்திருக்கிறேன். அது இதுதானா? நான் ஏமாற்றி மறந்த பெண்களின் சாபமும் என் முதுகின் பின் சுடுவது போலவே இருந்தது. சாயும் வெய்யில் என் முதுகில் விழுந்து தோள்களினூடே என் நிழலைத் தொட பிரயத்தனம் செய்து கொண்டிருந்தது. உப்பு காற்றும், அலைகளின் ஓசையும் மட்டுமே என்னுடன் இருந்தது.

மழை பெய்ய ஆரம்பித்தது. அலைகள் வெளி வர முயன்றாலும், கடலிடம் தோற்று திரும்பிச் சென்று கொண்டிருந்தன.

ஒரு பெண் நானிருக்கும் திசை நோக்கி வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தாள்.

தொடரும்...............

இதன் முதல் பால் இங்கே
இரண்டாம் பாகம் இங்கே
மூன்றாம் பாகம் இங்கே

==========================



.

7 comments:

Radhakrishnan said...

பல அரிய செய்திகளுடன் அழகாக நகர்கிறது கதை. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது எனும் வழக்கு மொழியும் உண்டு.

'வடக்கில்தான் தலை வைத்துப் படுக்கக் கூடாது' என சொல்வார்கள். எதிர்மறை சிந்தனையாக இருக்கிறதே தெற்கில் தலை வைத்துப் படுக்கக் கூடாது என.

தெற்கில் மேற்குத் தொடர்ச்சி மலை மிகவும் பிரசித்திப் பெற்றது அல்லவா. குற்றாலத்தில் கூட மிகவும் குளிர்ச்சியாகத்தான் இருக்கும்.

திருந்தியவனுக்கு குற்ற உணர்வு கொல்கிறது போலும். நல்ல எழுத்து நடை. மிக்க நன்றி.

R.Gopi said...

எழுத்து நடை நன்றாக உள்ளது....

கதையும் விறுவிறுப்பாக போகிறது.....

வாழ்த்துக்கள்....

Vidhoosh said...

இராதாகிருஷ்ணன்: நன்றி.
====================
தெற்கில் முக்கியமாக இரு துன்பம் தரும் அதிர்வலைகள் உள்ளன. அதில் ஒன்று கீழ்நோக்கி செல்லும் (பாதாளம்) பூமியின் அதிர்வலைகளின் அமைப்பினால் நம் இரத்த ஓட்டம் தலைப் (மூளைப்)பகுதிக்கு அதிகமாகிறது. மூளை இல்லாதவர்கள் இதைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. "திர்யக்" அதிர்வுகளின் (சாய்ந்தவாட்டில் இருத்தல்) காரணத்தால், இப்படி படுத்தால், ரஜ-தம அதிர்வுகள் நம் உடலுக்குள்ளும் வெளியிலும் அதிகமாகி, நமக்கு எரிச்சலும், நம்மைப் பார்த்தமாத்திரத்திலேயே அடுத்தவருக்கு நம் மேல் ஆத்திரமும் வரும் "ஆரா" உருவாகும்.

இரண்டாவது, மிக முக்கியமான ஒன்றாகும். பொதுவாக மயானங்கள் / இடுகாடுகள் தெற்கிலே அமைந்திருக்கும். புவியீ்ர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் இப்படி அமைந்திருக்கக் கூடும். இத்திசை நோக்கி கால் நீட்டியோ, தலை வைத்தோ படுத்தால், அமைதியற்ற, கெட்டக் கனவுகள் நிறைந்த தூக்கமும், திடுக்கிட்டு விழிப்பதும், பய உணர்வும் சீக்கிரமே விழிப்பும் வரும்.

தெற்குப் பக்கத்தின் அடிப்படையிலேயே, வடக்கில் தலை வைக்காதே என்று கூறி இருக்கிறார்கள், என்று நான் அறிந்தவரை நினைக்கிறேன்.

கிழக்குப் பக்கம் தலை வைத்தல் வெகு நலம். மேற்கும் பரவாயில்லை.

---வித்யா

பாலா said...

சூப்பர் பாஸ்ட் சகோதரி

நான் கேள்வி பட்டது
வடக்கில் தலை வைத்து வாழ்ந்தாருமில்லை
தெற்கில் தலை வைத்து தாழ்ந்தாரும் இல்லை என

இது சரியா தப்பா னு தெரியல கேள்வி பட்டது தான்

குடந்தை அன்புமணி said...

அந்த பெண்தான் கல்யாணியா...?
நன்றாக போகிறது... அடுத்த பாகம் எப்போ....?

( ஒரு விண்ணப்பம். கருத்துரை படிவத்தை பழைய முறைக்கே மாற்றுங்கள்.)

நேசமித்ரன் said...

வித்யா

மிரட்டுறீங்களே ...!
அடிச்சு ஆடுங்க
அருமை ...!

Radhakrishnan said...

மேலதிக விளக்கங்களுக்கு மிக்க நன்றி வித்யா.

Post a Comment