பைத்தியம் - பாகம் 1

நான் ரவி. ஒரு அமெரிக்க நிறுவனத்தில் சார்டர்ட் அக்கவுண்டன்ட். என் முழு பெயர் கிருஷ்ணமூர்த்தி ரவிசங்கர். சி.எ. படித்துவிட்டு, ஐயர்-ஆங்கிலம் மட்டுமே பேசி வரும் தமிழ்நாட்டு கணக்காளர்களைப் போலவே என் பெயரையும் அலுவலகத்தில் கே.ஆர். என்று சுருக்கியே அழைத்தனர்.

பட்டை பட்டையாய் வீபூதியும், பிராமண பிறப்பின் தோல் சிவப்பும், எனக்கு ஒரு நல்லவன் தோற்றத்தையே கொடுத்திருந்தன. என்னுடன் பாச்சுலர் அறையில் தங்கி இருக்கும் என் நண்பர்களான, ராகவன் மற்றும் சுப்பு இருவருக்குமே என் இன்னொரு முகம் தெரியாது. நான் உண்மையில் நல்லவனே கிடையாது. அதுவும் பெண்கள் விஷயத்தில். என் நல்லவன் தோற்றம் எந்த பெண்ணையும் என்னை நம்பி விட வைக்கும். பெண்களை போகப் பொருளாகவே பார்கிறவன் நான். என் கேடு கெட்ட வாழ்க்கை முறையை யாருக்கும் தெரியாமல் காத்து வந்தேன். வெளியுலகிற்கு தாய்க்கு மகனாக நல்லவன் போல மதிப்பும் மரியாதையும் பெற்று நல்ல பெயரைக் காப்பாற்றி வந்தேன்.

ஒரு முறை அலுவலகத்தின் கேரளக் கிளைக்கு என்னை மாற்றியதால் செங்கண்ணூர் வந்து சேர்ந்தேன். தனியறை, அழகான பெண்கள், அளவில்லாத பணம் என யார் தொல்லையும் இன்றி என் நாட்கள் சென்றன.

கேரளாவில் ஏதோ ஒரு ஆவலில் சில தாந்தரிக முறைகளையும் கற்றேன். அடிப்படையில் தியானம் மற்றும் சில யோக பயிற்சிகளும் கற்றிருந்தாலும், வாம மார்க்கமும் சில தாந்த்ரீக முறைகளையும் கற்றதால், பெண்களைப் பலவீனமாக்குவதில் கை தேர்ந்தவன் ஆகி விட்டேன். அளவுக்கு மிகுந்தால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது போல, விரைவிலேயே எனக்கு பெண்கள் மீது அலுப்பும் வெறுப்பும் வந்து விட்டது. யோக பயிற்சியும் தந்த்ரீகமும் மட்டும்தான் என்னிடம் மிச்சம் இருந்தது. இவற்றை விடாமல் தொடர்ந்தேன். இவற்றின் மீது மட்டும் என் முழு கவனம் திரும்பியதும் வெறும் உடல் மீது கொண்டிருந்த காமம் நீங்கி, பெண்களின் சிரிப்பொலிகளை விடுத்து என் அற்ப ஆசைகளை முறைப்படுத்தி என் ஆழ்மனத்தின் குரல்களை தேட ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக இந்துத்துவம் மீது என் ஆர்வம் திரும்பியது. ஐயப்ப ஜோதியை காணச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

எல்லாம் ஹரி வரும் வரைதான். இங்கு ஹரி பொறுப்பேற்றதும், மீண்டும் தமிழ்நாட்டுக்கே மாற்றலாகி விட்டது. பழனி வந்து சேர்ந்தேன். மலை அடிவாரத்தில் மீண்டும் ஒரு தனியறைவாசி ஆனேன். தனியனாகவே இருந்தேன். முருகனைப் பற்றி புராணத்தில் படித்து நினைவில் வந்தது. தேவ கன்னிகையர்களை முருகன் ஓயாமல் தொல்லை செய்து வந்ததால், தேவர்கள் பார்வதியிடம் முறையிட்டார்களாம். பார்வதி முருகனுக்கு பாடம் கற்பிக்க, உலகில் பெண்களை எல்லாம் சக்தியின் வடிவமாக்கி விட்டாராம். இதனால், எல்லோரும் முருகனை, "குமரா" (மகனே) என்று அழைக்கத் துவங்கினார்கள். முருகன் வெட்கித் தலை குனிந்தாராம்.

ஏதோ ஒரு வகையில் நானும் முருகனும் ஒன்றாகவே இருப்பது போலத் தெரிந்ததால், முருகனிடம் அபிமானம் உண்டானது. தினமும் அலுவலகம் முடிந்ததும் மலைக்குப் போவதை வழக்கமாக்கிக் கொண்டேன். வார இறுதியில் சேலத்திற்கு அம்மா வீட்டுக்கு செல்வேன். பயணிப்பதே வாழ்க்கையானது.

ஒரு முறை இப்படி சென்ற போது, அருகிலிருந்த முருகன் கோவிலுக்கு தாயுடன் சென்றேன்.கோவில் வாசலில் ஒரு அழகான பெண். நீண்ட நாட்கள் கழித்து ஒரு பெண்ணை தலை நிமிர்ந்து பார்க்கிறேன். திடீரென அந்தப் பெண்ணே என்னிடம் வந்தாள். பேசினாள்.

"ரவி. நீ முன்பு என் தாய்க்குப் இறந்தே பிறந்த பெண் குழந்தை. இங்கு என்ன செய்கிறாய்?" என்றாள்.

என் தாய் அதிர்ந்து போனாள். நான் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன். நாக்கு ஒட்டிக் கொண்டது.

"இங்கிருந்து போய் விடலாம் வாடா" என்று என் அம்மா என்னை அழைத்ததற்கும் அவளே பதில் சொன்னாள், "அவன் இனி வரமாட்டான். தெய்வம் காத்திருக்கிறது அவனுக்காக" என்று கூறி விட்டு ஓடிவிட்டாள்.

(தொடரும்..............)




.

10 comments:

நட்புடன் ஜமால் said...

முதல் இரண்டு பத்திகளும் அதனை தொடர்ந்து வருபவையும் வேறு விதமான ‘ரவி’யை காட்டுகிறது

கடைசியில் ரொம்ப யோசிக்க வைக்குமாறாக இருக்கின்றது


அடுத்த பதிவினை ஆவளுடன் எதிர்ப்பார்க்க வைத்து விட்டது ...

S.A. நவாஸுதீன் said...

"ரவி. நீ முன்பு என் தாய்க்குப் இறந்தே பிறந்த பெண் குழந்தை. இங்கு என்ன செய்கிறாய்?" என்றாள்.

கதையில் அசர வைக்கும் திருப்பமாக அமைகிறது இந்த வரிகள். அடுத்த பகுதியை சீக்கிரம் எழுதுங்க நண்பரே.

குடந்தை அன்புமணி said...

கதையைப் படித்த பிறகே தலைப்பு ஞாபகத்திற்கு வருகிறது.

தொடருமா... கலக்குங்க...

நேசமித்ரன் said...

தேர்ந்த நடை
நல்லா போகுது எங்கே அடுத்த பாகம்
அங்கங்க வித்யா டச் இருக்கு ..!

பாலா said...

thodar kathaiyaa ezhuthi thalreenga pola irukku

nalla irukku sagothari

அகநாழிகை said...

நடத்துங்க.. நடத்துங்க...

//வாம மார்க்கமும் சில தாந்த்ரீக முறைகளையும் கற்றதால்//

என்னதிது... புதுசா இருக்கு.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

நந்தாகுமாரன் said...

ஸ்வாரஸ்யம் ... முந்தைய paraவின் பாதிப்பில் கேரளக் கிளை என்பதை கேரளக் கிழங்கு என்றே சில முறை வாசித்துத் தெளிந்தேன் ... தொடருங்கள் ...

Vidhoosh said...

நன்றி ஜமால் - இன்று வெளியிட்டு விட்டேன்.
நன்றி நவாஸுதீன்
நன்றி அன்புமணி

நன்றி நேசமித்ரன் - நிறைய வித்யா டச் வரும். வேத-புராணங்களை அப்படியே கூறினால் கதாகாலட்சேபம் மாதிரி ஆகி விடும், யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்பதால் கதை சொல்லி ஆகிவிட்டேன். இடைச்சொருகல்கள் மூலம் ஒரு சிலருக்காவது செய்தி போய்ச் சேரும் என்ற நம்பிக்கைதான். ஏதோ என்னாலான சிறு முயற்சிகள்.

பாலா - நன்றி :)

வாசு - வாம மார்க்கம் என்பதும் தந்த்ரீகத்தில் ஒரு பாகம். இதைப் பற்றி ஒருவரியில் கூறமுடியாது. விரைவில் ஒரு தனிப் பதிவாக இடுகிறேன்.

நந்தா - :) ம்ம்.

அ.மு.செய்யது said...

எனக்கு கொஞ்சம் புரியலங்க.....ரொம்பவே புரியல...

விளக்குங்களேன்.

Radhakrishnan said...

மிகவும் சுவாரஸ்யமாக எழுதப்பட்டு இருக்கிறது. ரவியின் குணாதிசயங்கள் மிகவும் அழகாக எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது.

Post a Comment