இலக்கியவாதிகள் இப்படித்தான் எழுதவேண்டுமா?

இன்று வேறு வேலைகள் ஏதும் இல்லாமல் ஆற அமர இருக்க, என் மொபைலைக்கூட அணைத்துவிட்டு, அகநாழிகை, நந்தா, யாத்ரா (கண்டிப்பாய் இவர்கள் எழுதியவற்றைப் படியுங்கள்), டக்லஸ், தூறல் கவிதை, ஆ.முத்துராமலிங்கம், அனுஜன்யா, பிரவின்ஸ்கா, அபிஅப்பா, அய்யனார், எல்லோர் வலைப்பக்கங்களையும் கொஞ்சம் படித்தேன்.

:) ... நான் கொஞ்சம் லேட். மேற்குறிப்பிட்ட இவர்களின் எழுத்துக்களை, அதுவும் இன்றே, படித்துவிட வேண்டும் என்ற அவசர ஆவலில், ரயில் பயணத்தின் போது ஓடும் மரங்களை இரசிப்பது போல கொஞ்சம் அவசரமாக படித்தேன். நிதானமாய் இன்றே படிக்க முடியாத நிலைக்கு மிகவும் வருந்துகிறேன். அற்புதமான எழுத்துக்கள். இவர்கள் எழுத்துக்களைப் படிக்க வாயிலாக இருந்த வலையுலகிற்கு நன்றி. முழுதாகப் படிக்காமல் என்ன comment கொடுப்பது என்று கேட்க வேண்டாம் ப்ளீஸ். இருந்தாலும், ஒரு சில கவிதைகளைப் படித்து என்னுள் எழுந்த என் எண்ணங்களை மட்டும் பகிர்கிறேன்.

இயல்பிலேயே எனக்கு மொழிகளின் மேல் விவரிக்க முடியாத காதல். அதுவும், உருது கவிதைகளுக்கு அடிமைப்பட்டவள். கஜல் பாடல்கள், தமிழ் கவிதைகள், கிவாஜ, முவ, கல்கி, நா.பார்த்தசாரதி, தி.ஜானகிராமன், ஸ்டெல்லா ப்ரூஸ், டெக்னிகல் குரு சுஜாதா போன்றவர்களில் இருந்து அடிமட்ட பக்கோடா பேப்பர் (நிஜமாகவே பொட்டலம் மடித்து வரும் பேப்பர்தான்) வரை, எதையும் விடாமல் முழுதாய் படிக்கும் பேப்பர் கழுதையே நான்.

நான் பன்னிரண்டாம் கிளாஸ் படிக்கும் போது, சமஸ்கிருதம் படித்தேன். நிறையவே படித்தேன். ஆர்வக் கோளாறில் சில சமஸ்கிருத வேத புத்தகங்களைப் படித்து மிரண்டு, ஆனாலும், தோற்கக் கூடாது என்ற ஒரே வீம்பால், பிடிவாதமாய், கொஞ்சம் கொஞ்சமாய் படித்ததில் இப்போதெல்லாம் சிலது புரிகிறது. சமஸ்கிருத வேத, புராணங்கள் கஷ்டமாய் இருப்பதால், புரியாமல் போகின்ற ஒரே காரணத்தால், சமஸ்கிருதம் என்னை விட நன்றாகப் படித்த (அதாவது நிறைய மார்க் வாங்கிய) என் சக தோழர், தோழியர், ஸ்லோகங்களைத் தவிர வேறு எதையுமே படிக்காமல், இப்போது சமஸ்கிருதமே மறந்து போய் இருக்கிறதும் தெரிவதால்... இன்று இதை எழுதுகிறேன்.

Griffith போன்ற பல அறிஞர்கள் சமஸ்கிருதத்தை கரைத்துக் குடித்து, நம் வேத-புராணங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வைத்திருக்கிறார்கள். அந்த மொழி பெயர்ப்புக்களைப் படித்தால், original வேத புராணங்களே தேவலாம் போல இருக்கிறது. அத்தனை கடின ஆங்கிலம். அல்லது, வேதங்கள் எழுதப்பட்ட காலங்களில் படித்தவர்கள் அனைவருமே அவ்வளவு மொழித்திறன் கொண்டவர்களாக இருந்தார்களா? தெரியவில்லை!

எழுதுவது என்பதே, அதை படிக்கும் மற்றவர் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தானே? (குறைந்தபட்சம் அப்படித்தான் நான் நம்புகிறேன்)

போகட்டும்! இப்போது, இன்று, நவீன கவிதைகளில் நிறைய கவிதைகள் நன்றாக, அற்புதமான படைப்புக்களாகவே உள்ளது. ஒரு சிலவற்றில் மட்டும், கருத்துக்கள் உடையதாக இருந்தாலும் சரி, மாறாக content இருக்கோ இல்லையோ ஏதோ எழுதியதாக இருந்தாலும் சரி, அதில் அகராதிகளில் தேடினாலும் புரியாத வார்த்தைகளை பிரயோகித்து, எழுதுவது தன் மொழித் திறனைக் காட்டவே அன்றி வாசகர்களுக்காக எழுதப்பட்டவை இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

அதென்ன, சாதாரணர்களுக்கும் புரியும்படி எழுதிவிட்டால் தவறா?

நவீனமயம் என்றாலே சுலபமயம் என்றிருக்கும் விரல் நுனி உலகில், உண்மையாகவே படிப்பதில் ஆர்வம் உடைய அதிகம் பேர்களால் படிக்கப் படாமலே இருக்கும் பல அற்புதமான சமஸ்கிருத காவியங்களைப் போல, தமிழ் நவீன கதைகளையும் கவிதைகளையும் படைக்கும் போது, அவற்றை படிக்கும் வாசகருக்கும், நவீனங்கள் படிப்பதில் ஒவ்வாமை ஏற்படுத்திவிடாதீர்கள் என்றே வேண்டுகிறேன்.

மேலே இருக்கும் கருத்துக்கும் நான் இங்கே கீழே கொடுக்கும் உதாரணத்திருக்கும் மலைக்கும் பாதாளத்திற்க்கும் உள்ள வித்தியாசம். தயவு செய்து மனதாலும் Griffith-தோடு இவற்றை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்.

நாம் பேசும் subject-க்கு உதாரணமாக இங்கேயும் - இங்கேயும் பார்க்கவும். நான் படித்துப் புரிந்து இதை எழுதிய விரல்களை நொந்து கொண்டு, இதைப் படிக்க கொஞ்சம் time waste பண்ணியதை நினைத்தும் நொந்தேன் :(. கோபம் ஏதுமில்லை. வருத்தம்தான் எனக்கு. இப்படி எக்ஸ்ப்ளிசிட்-ஆக எழுதக் களங்கள் நிறைய இருக்கின்றன. ஜ்யோவ்ராம் அவர்களுக்கு தன் கோபத்தைக் காட்ட வேறு வார்த்தைகளா கிடைக்கவில்லை. இக்கவிதையைப் பாராட்டியவர்கள், பாபா-வைப் பாராட்டிய ரஜினி ரசிகர்களாக மட்டுமே இருக்க முடியும். அல்லது வடிவேலு காண்பித்த கடவுளைக் கண்டவர்கள் என்றும் நினைக்கிறேன்.

ஏற்கனவே எனக்குத் தெரிந்த வரையில், பெண்கள் புத்தகம் / இலக்கியம் / கவிதைகள் படிப்பது குறைவு. அதிலும், இப்படி ஒரு கவிதைக்கு நான், ஒரு சாதாரணப் பெண்ணாக, என்ன பின்னூட்டம் எழுதுவது?

"இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று."
இன்னாது கூறினீர்கள் என்று சொல்லவில்லை. இனிமையானதை (இனிமை அல்லாததையும் கூட) எளிமையாகக் கூறுங்கள் என்று விழைகிறேன். நீங்கள் பயன்படுத்தும் மொழிக்கு அதற்கே உரிய மரியாதையைக் கொடுங்கள். மொழிகள் தான் மனித நாகரீகத்தை வளர்த்தன. அவற்றை மரியாதையை குறைவாக நடத்தாதீர்கள் ப்ளீஸ்.

நியாயமான கோரிக்கை என்றால், ஏற்றுக்கொள்ளவும். உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

7 comments:

நந்தாகுமாரன் said...

என்னைத் தானே திட்டுகிறீர்கள் ... சரி பரவாயில்லை விடுங்கள் ...

சமஸ்கிருதம், உருது, கஜல் ... உங்களுடைய ஹிந்தி வலையில் பாப்பா பாடல்கள் படித்த போதே நினைத்தேன் ... வாழ்க, வளர்க ...

நசரேயன் said...

ஆளுக்கொரு ரசனை .. வேற என்ன சொல்ல

Vidhoosh said...

நன்றி நசரேயன். நந்தா.

நந்தா: உங்களைத் திட்டவில்லை நந்தா. வேறு யாரையும் திட்டவில்லை. வருத்தம்தான் எனக்கு. இப்படி எக்ஸ்ப்ளிசிட்-ஆக எழுதக் களங்கள் நிறைய இருக்கின்றன. ஜ்யோவ்ராம் அவர்களுக்கு தன் கோபத்தைக் காட்ட வேறு வார்த்தைகளா கிடைக்கவில்லை.

சென்ஷி said...

// இக்கவிதையைப் பாராட்டியவர்கள், பாபா-வைப் பாராட்டிய ரஜினி ரசிகர்களாக மட்டுமே இருக்க முடியும். அல்லது வடிவேலு காண்பித்த கடவுளைக் கண்டவர்கள் என்றும் நினைக்கிறேன்.//

ரொம்ப நன்றிங்க...

வடிவேலு கோஷ்டியில ஒருத்தன்! :))

Vidhoosh said...

உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி சென்ஷி.

"confession"-னுக்கும் :))

Joe said...

அவர் இயங்கும் தளம் வேறு.

சுந்தரின் படைப்புகளை வாசிப்பவன் என்ற முறையில், அவர் ஆபாசக் குப்பைகளை அள்ளி வீச வேண்டும் என்ற ரீதியில் எதையும் எழுதுவதில்லை என்று சொல்வேன்.

Vidhoosh said...

நன்றி ஜோ. ஆனால், ஏனோ மனதிலொரு aversion வந்து விட்டது. அதற்குப் பிறகு அவர் வலைத்தளத்திற்கு போவதையே நிறுத்திவிட்டேன். அவருக்கு ஏதும் இழப்பில்லை. இழப்பு எனக்குத்தான். இருந்தாலும், இந்தக் கவிதையின் கசப்பு அப்படியே தங்கி விட்டது.

Post a Comment