சம்பளம்
Posted by
Vidhoosh
on Monday, June 22, 2009
Labels:
கதை
பச்சையம்மா வழக்கமான கலகல பேச்சுகள் இல்லாமல் இருந்தாள். போன வருடம் தேர்தல் நேரத்தில் “உடம்புக்கு முடியலை” என்று இரண்டு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு போனதில் இருந்துதான் இப்படி. பாத்திரங்களை தேய்த்து, துணி மணிகளை மடித்து, என் முகம் கூட பார்க்காமல், "அம்மா. வேலையெல்லாம் முடிஞ்சிரிச்சு. நாங் கிளம்பறேன்." புடவை தலைப்பில் முகம் துடைத்தபடி பச்சையம்மா விரைந்தாள்.
"பச்சை. சம்பளத்த வாங்கிட்டு போ." என்று ஐந்நூறு ரூபாயை கொடுத்து, "நீ கொஞ்ச நாளா முன் போல இல்லையே. ஏதும் பிரச்சினையா?" என்றேன்.
கேட்பதற்கே காத்திருந்தவள் போல ஓவென்று அழுதே விட்டாள்.
மூன்றும் பெண்ணாகவே பிறந்த காரணத்திற்காகவே அவள் கணவன் அவளை விட்டு வேறு மணம் புரிந்ததால், கல்லாய் இறுகி விட்டிருந்த மனதோடு, தம் குழந்தைகளுக்குத் தாயாய் எப்போதும் சிரித்தபடியே வலம் வருவாள். பச்சையம்மா பொதுவாகவே அவளுக்கு இருந்த எத்தனையோ கஷ்டங்களிலும் கண்ணீர் விட்டு அழுது நான் பார்த்ததே இல்லை. எங்கள் வீட்டையும் சேர்த்து, மூன்றே வீடுகளில் பாத்திரம் துலக்கி வரும் சம்பளத்தில் மூன்று பெண்களையும் படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பதைத் தவிர, அவள் வேறு எதற்கும் ஆசைப்பட்டு பார்த்ததில்லை.
தலையைக் கோதி, "வாய் விட்டு சொல்லிவிட்டால் பாரம் இறங்கிடும்டி. அம்மாவா நினைச்சு சொல்லிடு" என்றேன்.
"அம்மா.. அம்மா!" என்று என் மடியில் தலை வைத்து அழற்றினாள்.
சொல்ல வந்தவை, தொண்டையை அடைத்துவிட, "இல்லைம்மா. கொஞ்சம் மனசு சரியில்லை. வேறொன்னும் இல்லை. எம் பொண்ணுகள தங்கி படிக்கற இஸ்கூலு எதிலையும் சேத்திடறேம்மா. ஏதோ கிளப்புல சொன்னா இலவசமா புள்ளங்கள படிக்க வைப்பாங்களே. ஐயாகிட்ட சொல்லி கொஞ்சம் இஸ்கூலு பெரியவங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்ல சொல்லுங்கம்மா. அதுங்களாவது வாழட்டும்." என்றபடி எழுந்த பச்சை. "ரெண்டு நாள் லீவு வேணும்மா. உடம்புக்கு முடியலை" என்றாள்.
ஏதும் புரியவில்லை. ஆனால் எனக்கென்னவோ அவள் எதையோ தொலைத்து விட்டாள் என்றே பட்டது.
போகும் போது, பச்சையம்மாவுக்கு போன வருடம் நிகழ்ந்தவை மனதில் நிழலாய் இருண்டது.
மனதில் ஏதோ பாரமாய் அழுத்த "நான் வரல பொன்னாத்தா. உழைக்காம காசு வருமா" தலை குனிந்து முனகினாள்.
"இந்தா! சும்மா போயி கூட்டத்தோட வாழ்க வாழ்கன்னு கூவ வேண்டியதுதான். அது உழைப்பில்லயா. சீக்கிரம் கிளம்பு. ரூவாய் தாராங்களாம். சேல வேற கொடுக்கராங்கடி. புள்ளைங்க பள்ளியோடம் விட்டு வாரதுக்குள்ள மதியம் பிரியாணி சாப்பிட்டு வந்திரலாம்." என்று பொன்னாத்தா கொடுத்த ஆசையில் பச்சையம்மா அவசரமாய் தலையை அள்ளி முடிந்து கிளம்பினாள்.
"பெரியவளுக்கு தாவணி வாங்கோனும்னு சொல்லியிடிருந்தீல. நானூறுபாடி! ஏறிக்க." லாரியில் பொன்னாத்தா ஏறி இவளுக்கும் கை கொடுத்து தூக்கி விட்டாள். ஆண் பெண் என்று அனைவரும் கசகசவென்று அந்தக் கூட்டமே அவளுக்குப் பிடிக்கவில்லை.
லாரி நேராக கூட்டம் நடக்கும் பந்தலை நோக்கி விரைந்தது. எல்லோரும் இறங்கிக் கொண்டார்கள். அங்கிருக்கும் மக்கள் கூட்டத்தில் எங்கும் தொலைந்து போய் விடுவோமோ என்று பயந்து பொன்னாத்தாளின் சேலை நுனியைப் பற்றியபடியே பச்சையம்மா ஒரு குழந்தையைப் போல மிரண்டாள்.
"நா போயி பணம் வாங்கியாந்துர்றேன். நீ இங்கியே உக்காந்திரு. பிறவு உன்னை கூட்டிபோறேன். என்ன?" விருந்தினர் மாளிகை வாசலில் அவளை விட்டு விட்டு பொன்னாத்தா நகர்ந்தாள்.
சிறிது நேரம் கழித்து, ஒரு ஆள் வந்து, "பொன்னாத்தா கூப்பிடுது" என்று இவளை ஒரு அறை பக்கம் இட்டுச் சென்றான்.
பச்சை தயங்கி உள்ளே நுழையவும், வேலையாள் அறைக்கதவைத் தாளிடவும், அவளால் நடக்கும் எதையும் தடுக்க முடியவில்லை. அந்த ஆள் "நீ ரொம்ப அழகு" என்று கூறி ஆயிரம் ரூபாய் கொடுத்துச் சென்றான்.
பொன்னாத்தா வராண்டாவில் நின்று அழுதபடியே யாரையோ சபித்துக்கொண்டு இருந்தாள். அவளும் அழத்தான் நினைத்தாள். கண்ணீர் வரவே இல்லை.
3 comments:
சாத்தியம் உள்ள கதைதான். அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. பொன்னாத்தாவாவது எச்சரித்துக் காப்பாற்றியிருக்கலாமே. அல்லது அவள் இதற்கு உடந்தையா?
நன்றி முத்துவேல்.
புரிஞ்ச மாதிரியும் இருக்கு..புரியாத மாதிரியும் இருக்கு
Post a Comment