பகல் வேஷக்காரன்

ஏழுமணி மெட்ரோ இரயில் தடதடத்து மாயாண்டியின் உறக்கத்திற்கு அலாரமானது. "இந்தா. எந்திரி வள்ளி. தொழிலுக்குப் போக வேணாவா" என்றபடி அவளை உலுக்கினான்.

"நீ போ வே. எனக்கு நோவுது. பொம்பளப் பொறப்பே..." அலுத்தாள்.

நீலக் கலரை உடம்பெல்லாம் ஊற்றி அவன் இராமனாகவும், எதிர் பிளாட்பார்மில் இருக்கும் பச்சை அனுமாராகிவிட்டிருந்த சுரேசை அழைத்துக்கொண்டு, சீதை இல்லாமலே கிளம்பிவிட்டார்கள் . அடுக்கடுக்காய் மாடிகள்.

""ராம ராம ராம நீல மேகத ச்யாமா" ஜல் ஜல் என்று அனுமாரும் நீல வண்ணத்தில் ராமனும் பாடியபடி வந்தனர்.

"ஜானகி. சித்த ஒரு தம்ளர் தண்ணி கொண்டா..தரித்திரங்கள் காலங்கார்த்தால கிளம்பும் போது வந்துடுத்துகள். ஏய் வாச்மேன்... என்னடா பண்ற அங்க.. இவங்களை எல்லாம் உள்ள விட்டுக்கிட்டு....என்ன தூங்கவா சம்பளம் வாங்கற" கத்தினார் சங்கரன்.

வாட்ச்மேன் ஓடி வந்தான். "ஏலே ராமா... திருட்டு நாயே.. எத்தினி தபா சொல்லறது உனிக்கி... சொரணை வேணாம்.. வந்துட்டாணுவ" துரத்தினான்.

மூன்றாம் மாடியில் இருந்து ஒரு குழந்தை வீசிய ஐந்து ரூபாய் காசை பொறுக்கிக் கொண்டு காவி ஏறிய பல்லை காட்டியபடி இன்றைய முதல் சம்பாத்தியத்தின் ஆனந்தத்தில் "ராம ராம ராம நீல மேகத ச்யாமா ராம ராவ...ஆ ஆ... ரகுகுல சோம பத்ராசல ஸீ ராமா ஆ...." என்று உச்சஸ்தாயியில் ராமனே கதறினான். அனுமாரும் காலில் கட்டிய பிய்ந்த சலங்கையை ஜல் ஜல் என்று ஒலித்தபடி வாயிலை நோக்கி நடந்தனர்.

"சொல்லவே மறந்துட்டேன். இந்த வருஷம் ராதா கல்யாணத்து உஞ்சவ்ருத்திக்கி இருபது கிலோ அரிசியும், நாலு லிட்டர் நெய்யும், பத்து கிலோ துவரம் பருப்பும் பிராமண சங்கத்துக்கு அனுப்பிடு ஜானகி" என்றபடி கார் சாவியை எடுத்துக்கொண்டு படி இறங்கினார் சங்கரன்.

4 comments:

நந்தாகுமாரன் said...

இம்மாதிரி ஓராயிரம் கதைகளாவது தமிழில் மட்டுமே எழுதப்பட்டுவிட்டன ... இதில் நீங்கள் எங்கே எப்படி வித்தியாப்படுகிறீர்கள் ... முரண் நகை என்பது cliche என்பதைத் தாண்ட வேண்டுமெனில் மிகுந்த கவனம் அவசியம் ... ஆனாலும் ஒரு ஸ்வாரஸ்யமான உரையாடல் புனைவு நடை உங்கள் கைவசம் இருக்கிறது என்பதை மட்டும் ஏற்றுக் கொள்கிறேன் இப்போதைக்கு

நசரேயன் said...

உண்மைய சொல்லுங்க கார் ஓட்டினது நீங்கதானே

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை..

Unknown said...

நன்றி நந்தா (என் முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்)

நன்றி நசரேயன் (சைக்கிள் தான் எனக்குப் பிரியம். காரில் அடைபபட்டுச் செல்வது பிடிக்காது.)

நன்றி ராதாகிருஷ்ணன் உங்கள் வரவுக்கும், கமெண்ட்-க்கும்.

Post a Comment