=====
இதைப் படித்தவுடன், இதுவும் நினைவுக்கு வந்துவிட்டது.
=====
நீங்கள் காண்பது நமது அண்டை நாடான இந்தோனேசியாவின் இருபதாயிரம் ரூப்பியா பண நோட்டு. அந்நோட்டின் இடது பக்கம் ஒரு குட்டிப் பிள்ளையார் ‘ஜம்மென்று’ உட்கார்ந்திருக்கிறார். பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.
இந்தோனேசியா ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும், அது தன் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் மறக்கவில்லை. இந்தோனேசியாவில் (முக்கியமாக பாலித்தீவில்) பழமையான இந்துக் கோயில்கள் இன்னமும் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எனவே, அது தன் நாட்டின் தொன்மையான கலாச்சாரங்களை சமூகத்திற்கும், உலகத்திற்கும் வெளிப்படுத்துவதற்கு ஒரு கருவியாக பண நோட்டுகளில் பல்வகை கலாச்சாரத்தின் அம்சங்களை வெளியிட்டுள்ளது.
இதற்கு ஒரு நீண்ட பின்னணி உண்டு. ஆழமான பின்னணி. மிகவும் சூட்சுமமான பின்னணி.
ஜாவாவின் மன்னர்கள் மிகவும் புராதனமான க்ஷத்திர மரபைச் சேர்ந்தவர்கள். சைவ சமயம், பௌத்த சமயம் ஆகியவை இரண்டும் செல்வாக்குடன் இருந்தன.சைவ சமயம் என்பது நாம் இன்று வைத்திருக்கும் சொங்கி சைவம் இல்லை.
ஆகமம், தாந்திரீகம் ஆகியவை கலந்த சைவம். அது ஒரு ஒருமாதிரியான துவைத சைவம். சிவனே சர்வேஸ்வரன்; பரமேஸ்வரன். அவனே அருளாளன். அவனே படைத்தல், காத்தல் முதலியவற்றைச் செய்பவன். ருத்ரனாக இருந்து அழிப்பவனும் அவனே.
ஒரு வித்தியாசம். ருத்ரனாக இருந்து காப்பவனும் அவனே. இந்த சைவத்தில் வைஷ்ணவமும் இணைந்திருந்தது. ராமனுடைய கதையாகிய ராமாயணமும் அவர்களிடம் இருந்தது. கிருஷ்ணனுடைய அவதார மகிமைகளைக் கூறும் கிருஷ்ணாயணமும் இருந்தது. 'க்ரிஸ்ணாயாணா' என்ற பெயரில் அந்த இதிகாசம் விளங்கியது. சக்தி வழிபாட்டின் பல கூறுகள் அங்கு விளங்கின. கொடி கட்டிப் பறந்தது சண்டி வழிபாடு என்றழைக்கப்பட்ட துர்க்கை வழிபாடு.
ஒரே இடத்தில் ஆயிரம் கோயில்களைக் கொண்ட இடம் ஜாவா. ப்ராம்பானான் என்று அழைக்கப்படும் கோயில்கூட்டம் அங்கு உள்ளது. அதை லோரோ ஜோங்க்ராங் என்னும் பெயராலும் குறிப்பிடுவார்கள். ப்ராம்பானான் கோயில் கூட்டத்துடன் ஜாவாவில் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருக்கின்றன. அதாவது அழிக்கப்பட்டவை போக மிச்சம் இருப்பவை. அவர்களின் பௌத்தமும் தாந்த்ராயணா பௌத்தம் என்னும் வகையைச் சேர்ந்தது.
வஜ்ரபோதி என்னும் தமிழரைத் தலைமை பிக்குவாகக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஜாவானிய மன்னர் ஒருவர் போரோபுடூர் என்னும் பிரம்மாண்டமாக மேரு விஹாரத்தை நிர்மாணித்தார். மனிதன் என்பவன் தெய்வீக ஆற்றல்கள் பெற்றவனாக விளங்கவேண்டும் என்ற கொள்கையினர். க்ஷத்திரியர்களாக விளங்கியவர்கள் அந்த மாதிரி ஆற்றல்களைப் பெரிதும் வளர்த்துக்கொண்டார்கள்.
அந்த மரபில் வந்த கடைசி மன்னரின் காலத்தில் மிகப்பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஜாவானியர் மந்திரதந்திரங்கள், ஜோதிடம் ஆகியவற்றில் வல்லவர்கள். அந்த சமயத்தில் சில சாபங்கள், ஆணைகள், சபதங்கள், தீர்க்கதரிசனங்கள் ஆகியவை பிறந்தன. அதன்பின்னர் ஆட்சி பல கைகள் மாறி டச்சுக்காரர்களிடம் சென்றது. அந்த சாபங்கள், சபதங்களை மக்கள் மிகவும் நம்பியிருந்தனர். 'ராத்து' எனப்படும் பெருவீரன் ஒருவன் பிற்காலத்தில் வரப்போவதாக நம்பப்பட்டது. அப்போது ஜாவா மீண்டும் பழைய க்ஷத்திரிய மரபினர் கைக்கே சென்றுவிடும் என்றும் நம்பினர். அந்த தீர்க்கதரிசனத்தை நடக்கவொட்டாமால் தடுக்க பலர் முயன்றும் வந்திருக்கின்றனர். ராத்துவின் வருகையால் ஜாவாவும், ஜாவாவின் தலைமைத்துவத்தில் இந்தோனீசியாவும் வல்லரசாக மாறிவிடுமோ என்று பயந்தனர். ராத்து என்னும் அந்த க்ஷத்திரிய வீரன் ஜாவாவின் முக்கிய நகரமாகிய பாண்டுங் என்னும் பிரதேசத்தில் தோன்றுவான் என்று ஏற்கனவே நம்பப்பட்டது.
சொக்கார்ணோ தம்மை ஓர் அவதார புருஷனாக நினைத்திருந்தார். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதிக்கொண்டார். ஒருமுறை வெட்டவெளியில் நிர்மலமான ஆகாயத்தில் மின்னல் தோன்றச்செய்து வெள்ளைக்காரப் பத்திரிக்கையாளர்கள் சிலருக்குக் காட்டினார். அவரே அந்த ராத்துவாக இருக்கக்கூடும் என்றும் நினத்தார்கள்.அந்தப் பழைய தீர்க்கதரிசனத்தின் ஒரு பகுதி சொக்கார்ணோவினால் உண்மையாகியது.
அவரைத் தள்ளிவிட்டு வந்த சுஹார்த்தோ, நாளடைவில் தம்மையே பழைய பாண்டுங் மன்னர் பரம்பரை என்று நினைக்க ஆரம்பித்தார். அதற்குக் காரணமும் உண்டு. இப்போதைய யோக்ஜாக்கார்த்தா சுல்த்தானுக்கு அவர் சகோதர முறை ஆகிறார். ஏதோ ஒரு முறையில் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருடைய மகனுக்கு பாண்டுங் ராஜகுமாரி ஒருத்தியை மணம் முடித்துவைத்தார். அந்த திருமண பெர்ஸாண்டிங்க் சடங்கின்போது, மணமகளும் மணமகனும் பண்டைய க்ஷத்திரிய மரபையட்டி ஆடையணிகள் புனைந்து மணம் செய்துகொண்டனர்.
இந்தோனேஷியாவின் பொருளாதார நிலைமை மோசமாகிக்கொண்டே வந்தபோது, சுஹார்த்தோவின் தரப்பினர் பழைய தீர்க்கதரிசனங்கள், சாபங்கள் போன்றவற்றையெல்லாம் கிளறிக் கிண்டிப் பார்த்தார்கள். பெரும்புலமை வாய்ந்த ஜோதிடர்கள், மாந்திரீகர்கள், தாந்திரீகர்கள் ஆகியோரையெல்லாம் வைத்து மிகவும் நுட்பமாக ஆராயச் செய்தனர். இந்தோனேஷியாவின் தற்சமய இடையூறுகள், துன்பங்களை நீக்குவதற்குச் சில பரிகாரங்களைச் செய்ய வேண்டியிருந்தது.
அவற்றில் ஒன்று, கணேசரை வைத்துச்செய்யவேண்டிய பரிகாரம்.
பொருளாதாரம் சீரடையவும், இந்தோனேஷிய ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கும் ஊறுகள் நீங்குவதற்காகவும் செய்யப்பட்ட பரிகாரங்களின் ஓர் அங்கமாக கணேசரின் உருவத்தை கரன்ஸி நோட்டில் அச்சிட்டு வெளியிட்டார்கள். அவர்கள் பயன்படுத்தியது, பண்டைய ப்ராம்பனான் தாந்திரீக கணேசர். இந்த மூர்த்தம் மிகவும் வீரியம் மிக்கது. அந்த ரூப்யா நோட்டை வெளியிட்டு 18 மாதங்களுக்குள்ளாக சுஹார்த்தோவின் ஆட்சிக்கு மோசம் நேரிட்டது.
ஏன் அவ்வாறு நடந்தது?
இந்தோனேஷியாவின் நல்வாழ்வுக்கு இடையூறுகள் இல்லாவண்ணம் அந்த ஜாவானிய தாந்திரீகர்கள் சடங்குகளைச் செய்து பரிகாரமும் கண்டனர். இந்தோனேஷிய நல்வாழ்வுக்குக் குந்தகமாக இருந்தது சுஹார்த்தோவின் ஆட்சிதான். ஆகவே அந்த ஆட்சி அகன்றது. அதை நடத்திவர் சுஹார்த்தோ என்பதாலும் அவரே இந்தோனேஷியாவின் பாழ்நிலைக்குக் காரணர் என்பதாலும் அந்த சூட்சும மர்மசக்தி அவரை அகற்றிவிட்டது. அவர்கள் நம்பியது வீண்போகவில்லை. ஆட்சியிலிருந்து சுஹார்த்தோவும் அவருடைய ஆட்களும் அகன்றனர். ஒரு கொடுங்கோன்மையான ஆட்சி நீங்கியது. இவ்வாறு அற்புதமான அதிசயமான விதத்தில் ப்ராம்பனான் கணேசர் தம்முடைய ஆற்றலை வெளிப்படுத்தி அரிய காரியத்தை சாதித்துவிட்டார்.
5 comments:
1 Indonesian rupiah = 0.00466368575 Indian rupees ... மற்றபடி பன்முகத்தன்மை கொண்ட உங்கள் எழுத்து சிறக்க பிள்ளையார் அருளட்டும்
பிளையாரோட சக்திக்கு எல்லை இல்லை, ஆமா நீங்க வரலாற்று ஆசிரியரா?
இப்படி பின்னி படல் எடுக்குறீங்க
கலக்கற!
தேங்க்ஸ் சுந்தர். (உன்னை சுந்தர் கூப்பிடறது ரொம்ப அந்நியமா இருக்கு. :(
தேங்க்ஸ் நந்தா.
தேங்க்ஸ் நசரேயன்.
Post a Comment