சிவனும் அம்புய மலரில் அயனும் இந்திரை கொழுநன்
அவனும் வந்திட உதவும் அரி எனும் பிரமம் அது
துவளும் அஞ்சன உருவு தொடரு செங் கமல மலர்
உவமை கொண்டு இதில் ஒருவன் உலகில் வந்ததுகொல்
(கம்பராமாயணம், அனுமபடலம்)
"பல்லாண்டு" பாடிய பெரியாழ்வாரைப் போல, இராமனை நாம் தெய்வமாக பார்த்தால் தெய்வம். மனிதனாகப் பார்த்தால் மனிதன். அவன் அவதாரம், மனிதர்களாகிய நாம் எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே பார்க்கிறவர்களுக்கு தகுந்த வகையில் ஒரு உயர்வுத் தன்மையை எடுத்து வைக்கிறது. ராமாயணத்தில் ராமன் மட்டும் அல்ல, அதில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு தர்மத்தை எடுத்து நடத்திக் காட்டுகிறார்கள்.
“நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி!” என்று விஸ்வாமித்திரர் தசரதனிடம் 16 வயது நிரம்பாத பாலகனான இராமனை – கரிய செம்மலை தா! என்று கேட்பதில் தொடங்குகிறது, இராமனுக்கு வாழ்வின் சவால்கள். ஒவ்வொன்றிலும் அவனுக்கு வெற்றியே.
நல்லவனாக இருப்பது மட்டும் போதாது, வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டியது ராமாயணம்.
மஹாதீ⁴ர தௌ⁴ரெயா! (மகாவீர வைபவம்(2))
மஹாதீ⁴ர என்றால் மிகுந்த தைரியத்தை உடையவன், தௌ⁴ரெயா! – துணிச்சல் மிகுந்த வீரர்களுள் முதன்மையானவன்!
தான் நாடு நகரம் அனைத்தும் அழிந்த போதும், தன் தந்தை, தம்பிகள், தன் சொந்த பிள்ளைகள் என்று உறவுகளையெல்லாம் பிரிந்தும் இழந்தும் விட்ட போதும் இராமன் பின் வாங்கவில்லை.
உடலில் எத்தனை வலிமை இருந்தாலும் மனதில் அடிபட்டால் தளர்ந்து போகும். பாரதத்தில் துரோணாசார்யரை அவரது பிள்ளை ‘அசுவத்தாமன் இறந்தான்‘ என்று சொல்லி மனக்கலக்கம் அடையச் செய்து வென்றான் அர்ச்சுனன். பெரும் வீராதி வீரனாக இருந்தாலும் மனச்சோர்வு அடையும் போது உடலும் தளர்ந்து போய் விடுகிறது.
சிதை பெரிதா? சிந்தை பெரிதா “சிதை உயிரற்ற சடலத்தைத் தான் எரிக்கிறது. சிந்தையோ (கவலையோ) உயிருள்ள உடலையும் எரித்து விடுகிறது. ”
ராமாயணத்தை வெறும் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே எழுந்த போராட்டம் என்றும் ஒதுக்கி விட முடியாது. வாழ்க்கையின் மர்ம சுழற்சியில் தர்மத்துக்கும் தர்மத்துக்குமே போராட்டம் வந்து விடுகிறது.
சொன்ன சொல்லைக் காப்பாற்ற பெற்ற மகனைக் காட்டுக்கு அனுப்புவதா அல்லது அதை விடுத்து ராஜநீதிப்படி நல்லவனான மகனை அரசமர்த்துவதா?
தந்தை சொல்லைக் காப்பாற்றுவதற்காக காட்டுக்கு செல்வதா அல்லது தர்ம சாத்திரங்கள் சொன்னபடி இறந்து போன தந்தைக்கு ஈமக்கடன்களை தலைப்பிள்ளையாக இருந்து செய்வதா?
ஏங்கி தவித்து அடைந்த மனைவியை சேர்ந்திருப்பதா அல்லது அதே அரசநீதிப்படி மனைவியை துறந்து நேர்மையை நிலை நிறுத்துவதா?
என்று வெவ்வேறு விதமான தர்மங்கள் எல்லாமே ஒவ்வொரு வகையில் நல்ல நோக்கத்தைக் கொண்டிருந்தாலும் எதை பின்பற்றுவது என்ற குழப்பங்கள் எழுந்து அதில் நமக்கு வழிகாட்டுதலாக நல்ல எடுத்துக்காட்டுகளை அள்ளித்தருவது ராமாயணம் என்னும் இந்த மஹா காவியம்!
பக்தியே வடிவாக அனுமன், சேவையே வடிவாக இலக்குவன், கருணையே வடிவாக சீதை, அநேகம் பேர் சொல்ல மறந்த, சொல்லத் தவறிய ஊர்மிளையின் தவம், விரகம் மற்றும் உண்மையானத் தியாகம் (உண்மையில் எனக்கு சீதையை விட ஊர்மிளை மேல் தனி மரியாதை உண்டு), வேதம் காட்டிய தர்மத்தின் இலக்கணமாக இராமன்.
பரந்து விரிந்த பாரத நாட்டில் ஓரிடத்திலிருந்து சில நூறு மைல்கள் பிரயாணம் செய்தோமானால் மக்கள் பேசுகிற மொழியே மாறிப்போய்விடும். ஒவ்வொரு மொழியும் தனித்தனியாக அடையாளங்களைக் கொண்டு புரியவே புரியாது. ஆனால் “ராமா” என்ற ஒற்றை மந்திரம் இமயம் முதல் குமரி வரை எல்லோருக்கும் புரியும்!
அனாயேனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்யா அபயம் மம: விபீஷனோவா சுக்ரீவ யதி வா ராவண ஸ்வயம் (வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம்)
விபீஷண சரணாகதியின் போது, விபீஷணனை ஏற்க வேண்டாம் என்று தடுக்கும் சுக்ரீவனிடம் "என்னை அண்டி விபீஷணன் என்ன அந்த ராவணனே வந்து சரணாகதி செய்தாலும், அவனையும் காப்பேன்" என்று ராமன் சொல்கிறான்.
கடைசியில் இராவணன்
‘தம்மந்யே ராகவம் வீரம் நாராயணம் அநாமயம்!‘
என்று "இந்த வீரன் – இராகவன், உண்மையில் அந்த நாராயணனே" என்றும் ஒப்புக் கொள்கிறான்.
வேதாந்த தேசிகர் சம்ஸ்க்ருதத்தில் இயற்றிய மிக கம்பீரமாக, ஆனால் சுருக்கமாக இயற்றப்பட்ட காவியம் தான் மஹா வீர வைபவம் அல்லது, ரகுவீர கத்யம்.
'பத்யம்' என்பது கவிதை; கத்யம் உரைநடை. இரண்டும் கலந்து அங்கங்கே தெளித்தார்ப் போல இருக்கும் அமைப்பு ‘சம்பூ’. போஜனின் சம்பூ ராமாயணம் புகழ் பெற்றது. இவை எல்லாம் வெண்பாவிற்கான இலக்கணமும், புதுக்கவிதையின் வீச்சும் கொண்ட ஒரு ஒட்டு மாம்பழம்.
கத்யம் என்பது சம்ஸ்க்ருதத்தில் உரை நடை வடிவில் இயற்றப்படும் காவியம் ஆகும். இதில் ஓசை நயம் மிகுந்து சொல்வதற்கு மிக அழகாக இருக்கும். இதற்கு இணையாக தமிழில் வசன கவிதையை ஒப்பிடலாம்.
சரியானபடி உச்சரித்தால், வார்த்தை லயத்தில் ஒருவித அதிர்வலை (vibration) உண்டாகி, வார்த்தைகளின் உணர்ச்சியும் மனதிற்குள் எழும் - இது சமஸ்கிருத மொழியின் சிறப்பு மட்டும் அல்ல - எழுதியவரின் திறமையும் தான் வெளிப்படுகிறது.
இங்கே கேட்டு மகிழுங்கள். மிக கம்பீரமான இப்பாடலை தெளிவான சமஸ்கிருத உச்சரிப்புக்கு, சுந்தர் கிடாம்பி போன்றவர்களின் சேவையால், இதை கேட்டு மகிழும் பேறு நமக்கு கிடைத்திருக்கிறது.
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும்
நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
ஆம், இவற்றைக் காப்பது நம் கடமை ஆகிறது.
நான் படித்து அறிந்து, அதிசயித்து மகிழ்தவைகளை, முடிந்த வரை பகிர்ந்து கொள்கிறேன். இன்னும் தேடிக்கொண்டே இருப்பேன்.
.
இரகுவீர கத்யம் - ஒரு பார்வை
Posted by
Vidhoosh
on Monday, July 20, 2009
Labels:
samskaras,
sanskrit,
பழம்பஞ்சாங்கம்,
வாசிப்பு
6 comments:
//நல்லவனாக இருப்பது மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டியது ராமாயணம்.//
மிக சரியே.........
//உடலில் எத்தனை வலிவு இருந்தாலும் மனதில் அடிபட்டால் தளர்ந்து போகும்//
வாவ்... எவ்வளவு உண்மை......
//சிதை பெரிதா? சிந்தை பெரிதா – “சிதை உயிரற்ற சடலத்தைத் தான் எரிக்கிறது. சிந்தையோ (கவலையோ) உயிருள்ள உடலையும் எரித்து விடுகிறது. ”//
பிரமாதம்.......
//பரந்து விரிந்த பாரத நாட்டில் ஓரிடத்திலிருந்து சில நூறு மைல்கள் பிரயாணம் செய்தோமானால் மக்கள் பேசுகிற மொழியே மாறிப்போய்விடும். ஒவ்வொரு மொழியும் தனித்தனியாக அடையாளங்களைக் கொண்டு புரியவே புரியாது. ஆனால் “ராமா” என்ற ஒற்றை மந்திரம் இமயம் முதல் குமரி வரை எல்லோருக்கும் புரியும்!//
மிக மிக சரி.....
//சரியானபடி உச்சரித்தால், வார்த்தை லயத்தில் ஒருவித அதிர்வலை (vibration) உண்டாகி, வார்த்தைகளின் உணர்ச்சியும் மனதிற்குள் எழும் - இது சமஸ்கிருத மொழியின் சிறப்பு மட்டும் அல்ல - எழுதியவரின் திறமையும் தான் வெளிப்படுகிறது.//
அதற்கு அர்த்தம் புரிதல் வேண்டுமோ??
//நான் படித்து அறிந்து, அதிசயித்து மகிழ்தவைகளை, முடிந்த வரை பகிர்ந்து கொள்கிறேன். இன்னும் தேடிக்கொண்டே இருப்பேன்.//
இதுபோல் நல்லவர்கள் பலர் தாங்கள் கஷ்டப்பட்டு அறிந்தவற்றை, எங்களை போன்றோருடன் பகிர்ந்து கொள்ளுதல் என்பது மிகவும் பாராட்டுதல்குரியது....
தங்கள் சேவை வாழி....... தொடருங்கள்......
நல்ல பகிர்வு தோழி. எனக்கெல்லாம் இந்தளவுக்கு பொருள் பிரித்து படிக்க இயலாது. இப்படி யாராவது பகிர்ந்தால் சுலபமாக படித்து தெளிந்து கொள்வோம். தொடருங்கள். தொடர்வோம்.
இந்தப் புண்ணியம் எல்லாம் வைதீரணி என்னும் வென்நீராற்றை உங்களை எளிதில் கடக்க வைக்கும் போல
அபாரம் !
நன்றி...!
பிரசன்ட், மேடம்.
மிகவும் அருமையாக, எளிமையாக எழுதப்பட்டு இருக்கிறது. பத்யம், கத்யம், சம்பூ என்பதனை அறிந்தேன். சம்பூர்ண ராமாயணம் எனக் கேள்விப்பட்டதுண்டு.
பல விசயங்கள் தெளிந்து கொண்டேன். பகிர்ந்து கொண்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
மிக்க நன்றி வித்யா அவர்களே.
அன்புள்ள வித்யா அக்கா அவர்களுக்கு,
தங்களது இந்த பதிவு அருமை. மிகவும் ரசித்தேன். பகிர்தலுக்கு நன்றி!
Post a Comment