மனு நீதியில் சமூக வேறுபாடு மற்றும் பெண்ணடிமைத்தனம் - ஒரு பெண்ணின் பார்வை


பெண்ணடிமைப்பட வேண்டும் என்றும் சமூக வேறுபாடுகளையும் மனுநீதி (மனுஸ்ம்ரிதி) வலியுறுத்துகிறதா?

சரியான பார்வையில் மனு ஸ்மிருதி: எந்த விஷயத்தையும் பார்க்க வேண்டிய கோணத்தில் பார்க்காமல், அதைத் தவறான முறையில் அணுகுவதே நாம் காலம் காலமாய்ச் செய்து வந்த தவறாக இருக்கிறது. மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன், நம் வேதங்களும், புராணங்களும் கிடைக்கதற்க்கரிய கலைப் பொக்கிஷங்கள். மனிதனாக, மனுஷியாக பிறந்த ஒவ்வொரு ஜீவனும் படித்தறிய வேண்டிய ஒன்று.

ஓரு குலத்துக்கொரு நீதி என்பதுவே மனுநீதி என்று ஓசை நயத்திற்காகப் பேசிப் பேசி, சமுதாயத்தைப் பிளவு படுத்தி, மக்களிடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் பழங்காலத்துப் பிற்போக்கான சட்ட நூல்தான் மனு நீதி என்கிற எண்ணம் நம்மில் பலரிடையே நிச்சயமாகிவிட்டிருக்கிறது. விருப்பு வெறுப்பின்றி, முன்கூட்டியே ஓர் அபிப்பிராயத்துடன் அணுகாமல் ஆராய்ந்து பார்த்தால்தான் மனு நீதி என்கிற மனு ஸ்மிருதி வகுத்திருக்கும் விதிமுறைகள் எத்தகையன என்னும் முடிவுக்கு வரமுடியும்.

முதலில் ஸ்மிருதி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆதியிலிருந்து தொடர்ந்து வருபவை ஸ்ருதி என்கிற செவி வழியாகத் தலைமுறை தலைமுறையாய் மிகுந்த மரியாதையுடன் ஏற்கப்பட்டு வரும் கோட்பாடுகள்.

நான்மறைகளும் அவற்றின் அடியற்றி வரும் உபநிடதங்களும் இவ்வகையைச் சேர்ந்தவை. பகவான் கிருஷ்ணன் அருளியதாக அறியப்படும் பகவத் கீதையையுங்கூட ஸ்ருதி என்று கூற இயலாதுதான். ஆனால் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு வாய்மொழியாக அது உபதேசிக்கப்பட்டமையால் அதையும் ஸ்ருதியெனக் கொள்வதில் தவறில்லை எனக் கருதுவோர் உண்டு.

ஸ்மிருதி எனப்படுபவை ஏட்டில் பதிவு செய்யப்பட்ட விதிமுறைகள்.

வேத காலத்திற்குப் பின் வெகு காலங் கழிந்த பிறகுதான் இவை உருவாயின. பொதுவாக தர்ம சாஸ்திரங்கள் எனக் கருதப்படுபவைதாம் ஸ்மிருதி என்று அழைக்கப்படுகின்றன.

மாறும் அவ்வாறு மாற்றங்கொள்ளாமல் சில விதிமுறைகள் முரண்டுபிடித்தால் மூலாதாரமான ஸ்ருதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, ஸ்ருதிகள் என்ன சொல்கின்றனவோ அவற்றை ஏற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட ஸ்மிருதியின் கூற்றைத் தள்ளிவிட வேண்டும் என்று தர்ம சாஸ்திரங்களான ஸ்மிருதிகளே அறிவுறுத்தியிருக்கின்றன. ஸ்மிருதிக்கும் ஸ்ருதிக்கும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு காணப்படுமானால் ஸ்ருதியில் சொல்லப்பட்டிருப்பதைத்தான் சரியென்று கொள்ளவேண்டும் என மனு ஸ்மிருதியும் தனது இரண்டாவது சருக்கத்தின் பனிரெண்டாவது, பதிமூன்றாவது செய்யுள்களில் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

ஆக, சமுதாயத்திற்கு ஸ்ருதிகளான வேதங்கள்தாம் வழிகாட்டும் அறநெறிகள். மனு ஸ்மிருதியே ஒப்புக்கொண்டுள்ளவாறு, ஸ்மிருதிகள் இரண்டாம் பட்சந்தான். மனு நீதி எனப்படும் மனு ஸ்மிருதியானது சமுதாயத்தின் ஒரேயரு ஸ்மிருதியல்ல. மொத்தம் உள்ள பதினெட்டு ஸ்மிருதிகளுள் ஒன்றுதான் அது. ஒரு தனி நபர், ஒரு குடும்பம், ஒரு சமுதயம், ஒரு தேசம் ஆகியவை கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகளை, தான் எழுதப்பட்ட காலத்திற்கேற்ப வகுத்துள்ளது, மனு ஸ்மிருதி. விண்ணியல், மருத்துவம் முதலான விஷயங்கள் குறித்தும் அது பேசுகிறது.

மனு ஸ்மிருதி எப்பொழுது எழுதப்பட்டது என்பதற்கு வரலாற்றுப் பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை. எந்தக் கால கட்டத்தில் அது ஹிந்து சமூகத்தால் வார்த்தை பிசகாமல் அனுசரிக்கப்பட்டது என்பதற்கும் ஆதாரம் இல்லை.

ஸ்ருதிகளான வேதங்கள் தோன்றி நீண்ட நெடுங்காலம் கழிந்த பிறகுதான் ஸ்மிருதிகளுள் ஒன்றான மனு ஸ்மிருதி தோன்றியது. மனு ஸ்மிருதிக்குப் புராண அந்தஸ்தை அளிப்பதற்காக அதனை இயற்றியவர் மனு என்கிற ஆதி புருஷன் என்று கற்பிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் பதினான்கு மன்வந்தரங்கள் கொண்டது ஒரு கல்ப காலம் என்றும், ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் ஒரு மனு ஆதியானவர் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. தற்சமயம் நடப்பது ஏழாவது மன்வந்தரம். இதன் ஆதிபுருஷர் வைவஸ்த மனு என்கிறது, புராணம். இந்த மனு எழுதி வைத்ததுதான் மனு ஸ்மிருதி என்று எவரும் கூறினால் அதை ஏற்பது எளிதல்ல.

வரலாற்றுக் கண்ணோட்டப்படிப் பார்த்தால் சுங்க வம்சத்துப் பேரரசர் புஷ்யமித்திரர் காலத்தில்தான் மனு ஸ்மிருதி என்கிற பெயரில் ஒரு சாஸ்திரம் எழுதப்பட்டது என்று ஒரு தரப்பினரால் கருதப்படுகிறது. ஆனால் இதற்கும் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. ஆக, புராதன வேத காலத்து ஹிந்து சமுதாயம் இந்த மனு ஸ்மிருதியை அனுசரித்திருக்க வாய்ப்பில்லை. மனு ஸ்மிருதி எழுதப்பட்ட காலம் கி. மு. முதல் நூற்றாண்டு என ஒரு கருத்து நிலவுகிறது.

மனு ஸ்மிருதியைப் பற்றிய பிரதான கருத்துகள் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்தான் வெளிப்படலாயின. இவை பெரும்பாலும் ஹிந்து சமய நம்பிக்கைகளையும் ஹிந்து சமூக நடைமுறைகளையும் இழிவானவை என நிறுவவேண்டும் என்கிற நோக்கத்துடன்தான் தெரிவிக்கப்பட்டன. மேலும் மனு ஸ்மிருதியின் மீதான கடுமையான விமர்சனங்கள் பெரும்பாலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டுத்தான் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த மொழிபெயர்ப்புகள் ஐரோப்பியர்களால், அவர்களின் கண்ணோட்டத்திற்கும் புரிந்துகொள்ளும் ஆற்றலுக்கும் பயிற்சிக்கும் ஏற்பவே இருக்கும் என யூகிப்பதில் தவறிருக்காது.

மனு ஸ்மிருதியில் மொத்தம் 2031 செய்யுள்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு ஒழுக்க விதியை வலியுறுத்துகிறது. ஆனால் இந்த 2031 விதிமுறைகளும் எந்தக் கால கட்டத்திலேனும் ஹிந்து சமூகத்தால் பாரத தேசம் முழுவதும் ஒட்டுமொத்தமாகக் கடைப்பிடிக்கப்பட்டதாகக் கூறுவதற்கில்லை.

மனு ஸ்மிருதியை ஆதாரம் காட்டிப் பேசப்படுகின்ற விதிமுறைகள் பலவும் அவரவர் கண்ணோட்டப் படியான விளக்கவுரைகளேயன்றி நேரடியான மொழிபெயர்ப்புகள் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த தலை சிறந்த சமூக சீர்திருத்தத் துறவியும், ஆரிய சமாஜம் என்னும் அமைப்பை உருவாக்கியவருமான சுவாமி தயானந்த சரஸ்வதி மனு ஸ்மிருதிக்கு ஒரு விளக்கம் தந்துள்ளார்.

மனு ஸ்மிருதியின் செய்யுள்களிலேயே பல ஒன்றுக்கொன்று முரண்படுவதை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது, ஒவ்வொரு கால கட்டத்திலும் அவ்வப்போதைய வாய்ப்புகளுக்கு இணங்க மனு ஸ்மிருதியில் இடைச் செருகல்கள் நுழைந்து விட்டிருக்கின்றன என்பதுதான். ஒன்றோடொன்று முரண்படும் விதிமுறைகளைக் கண்டறிந்து இன்றைய காலகட்டத்திற்கு எந்த விதிமுறைகள் பொருந்துகின்றனவோ அவற்றை ஏற்றுக்கொண்டு பொருந்தாதவற்றைப் புறக்கணிப்பதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக, மனு ஸ்மிருதியின் இரண்டாம் சருக்கத்தின் 97-வது செய்யுள் கீழான குணவியல்புகள் உள்ளவர்கள் வேதமெய்ப்பொருளை அறியவியலாது என்று கூறுகிறது. பிறவியின் அடிப்படையில் பேசப்படாமல் குண நலன்களையே வலியுறுத்துவதாக இது இருப்பதால் இதனை ஏற்பதுதான் முறையாக இருக்கும்.

ஆண், பெண் என்கிற பேதமின்றி எல்லாக் குழந்தைகளையும் ஐந்து அல்லது எட்டாவது வயதிலாவது கட்டாயக் கல்வி பெறச் செய்வது பெற்றொருக்கு மட்டுமின்றி அரசுக்கும் நிர்வாக சபைகளுக்கும் கடமை யென்று ஏழாவது சருக்கத்தின் 152 வது செய்யுள் விதிக்கிறது. குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யத் தவறுவது தண்டனைக்குரிய குற்றம் என்றே இச்செய்யுள் எச்சரிக்கிறது. எனவே பெண்களுக்குக் கல்வி அவசியமில்லை என விதிமுறை ஏதும் இருக்குமானால் முரண்பாடான அந்த விதியைத் தூக்கியெறிந்துவிடலாம்.

திருமணத்தைப் பற்றிப் பேசும்போது, தனது ஒன்பதாவது சருக்கத்தின் 90-வது செய்யுளில் ஒரு பெண்ணுக்கு உரிய பருவத்தில் தன் தகுதிக்கு ஏற்ற கணவனைத் தேர்வு செய்துகொள்ளும் உரிமையை மனு ஸ்மிருதி உறுதிசெய்கிறது. எனவே பாலிய விவாகத்தை அது வலியுறுத்துவதாகக் கருதத் தேவையில்லை.

திருமணப் பொருத்தம் என்பது மனப் பொருத்தம், குணவியல்புகளுக்கியைந்த கருத்தொற்றுமை, உடல் ஆரோக்கியம் ஆகியவைதான் என்று மனு ஸ்மிருதி கூறுகிறது. அவரவர் வகுப்பில் மணம் செய்துகொள்வது அவசியம் என்று கூறுகையில் இவற்றைத்தான் மனு ஸ்மிருதி வலியுறுத்துகின்றதேயல்லாமல் பிறவியின் மூலம் வருகின்ற வகுப்பைக் குறிப்பிடவில்லை.

பெண்களை மிக உயர்வாகப் போற்றும் பல செய்யுள்களை மனுஸ்மிருதியில் காணலாம். மூன்றாவது சருக்கத்தின் 62-வது செய்யுள் மனைவியைக் கணவன் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என விதிக்கிறது. மகிழ்ச்சியில்லாத மனைவி இருக்கிற குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்காது என்று மனு ஸ்மிருதி எச்சரிக்கிறது. பெண்களை தந்தைமாரும் சகோதர்களும், ஏன் கணவனுங்கூட வணங்கக் கடமைப்பட்டிருப்பதாக அது கூறுகிறது. பெண்களுக்குக் குடும்பங்களில் நல்ல உணவு, சிறந்த ஆடையாபரணங்கள் ஆகியவற்றை அளித்து மகிழ்விக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி விதிக்கிறது. பெண்கள் மதிக்கப் படுகின்ற குடும்பங்களிலும் சமுதாயத்திலும்தான் சிறந்த மனிதர்கள் தோன்றுவார்கள் என்று மனு ஸ்மிருதி அறிவுறுத்துகிறது. பெண்கள் துன்புறும் நிலை இருக்கின்ற குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது என்று அது சொல்கிறது. பெண்களை மதிக்காத சமுதாயத்தில் எத்தனை நல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றால் பயன் விளையாது என்கிறது, மனு ஸ்மிருதி. அதன் மூன்றாவது சருக்கத்தில் 55-லிருந்து, 59 வரையிலான செய்யுள்கள் பெண்கள் நலனையே பிரதானமாக வலியுறுத்துகின்றன.

தகப்பன் பெயர் இல்லையேல் தாயின் பெயரால் பிள்ளைகள் அறியப்படட்டும் என்று சொல்கிற நடைமுறை வேத கால சமுதயத்தில் இருந்திருக்கிறது. பெண்கள் ஆண்களோடு சரிசமானமாக அமர்ந்து தத்துவ விசாரங்களிலும் தர்க்கங்களிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என்பதற்கும் சான்றுகள் உண்டு. எனவே பெண்ணடிமை முறையும், பெண்களை அறிவார்ந்த சபைகளிலிருந்து விலக்கி வைக்கும் போக்கும் இடையில்தான் நுழைந்திருக்கக்கூடும் எனப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்குச் சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனு ஸ்மிருதியில் அதற்கு ஏற்ற இடைச் செருகல்கள் உள்நோக்கத்துடன் நுழைக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்க முடியும்.

னு ஸ்மிருதியின் பத்தாவது சருக்கத்தில் உள்ள 65-வது செய்யுள் ஒரு சூத்திரன் பிராமணனின் நிலைக்கு உயர்வதும் அதேபோல் ஒரு பிராமணன் சூத்திரனின் நிலைக்குத் தாழ்வதும் சாத்தியம் என்று சொல்கிறது. (ஜாதியை குறிப்பிட்டு பேசுவதற்கு மன்னிக்கவும். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் கூறப்படவில்லை). சத்திரியர், வைசியர் விஷயத்திலும் இது பொருந்தும் என்று அது மேலும் விளக்குகிறது. இதிலிருந்து பிறவியின் பயனாக வர்ணங்கள் அமைவதில்லை, குணநலன்களின் அடிப்படையில்தான் அவை நிர்ணயிக்கப்படுகின்றன என்று மனு ஸ்மிருதி வலியுறுத்துவதாகக் கொள்ளமுடியும்.

மேலும், பிராமணன் ஒரு குற்றம் இழைத்தால் அதற்கு மிக அதிகபட்சமாகவும், அதே குற்ற்றத்தை இழைத்த சத்திரியனுக்கு அதைவிடச் சிறிது குறைவாகவும் வைசியனுக்கு அந்தக் குற்றத்திற்கு மேலும் குறைவாகவும் சூத்திரனுக்கு மிக மிகக் குறைவாகவும் தண்டனை விதிக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி நிர்ணயிக்கிறது. காரணம், பிராமணனாக அறிவு நிலையில் உயர்ந்திருப்பவன் தெரிந்தே குற்றம் இழைத்திருப்பான் என்று கொள்ளவேண்டும் என அது விளக்குகிறது. பிற பிரிவினரை ஓரளவுக்கே விவரம் தெரிந்தவர்களாகக் கருத வேண்டுமாதலால் அதற்கேற்பக் குறைவாகவும், சூத்திரன் தனது அறியாமையால் குற்றம் இழைத்திருப்பான் ஆதலால் மிக மிகக் குறைவாகவும் அதே குற்றத்திற்குத் தண்டணை விதிப்பதே பொருத்தம் என்கிறது, மனு ஸ்மிருதி.

மனு ஸ்மிருதியைப் பற்றிய விரிவான பிரஸ்தாபம் காலனியாதிக்க (colony) காலத்தில்தான் தலையெடுத்தது. குறிப்பாக ஹிந்து சமூகத்தைக் குறை கூறி, மேற்கத்திய நாகரிகமும் சம்பிரதாயங்களும்தாம் மேன்மையானவை என்று மனதில் பதிய வைப்பதற்குத்தான் அத்தகைய பிரஸ்தாபம் பயன்படுத்தப் பட்டது. இதற்குச் சான்றாக இங்கே பாருங்கள். ஆங்கிலக் கல்வியின் வழியாகத் தம் தாயகத்தின் கலாசாரத்தையும் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் காணப் பழகியவர்களுக்கு காலனியாதிக்கக் கல்வியாளர்கள் மனு ஸ்மிருதி பற்றி வெளியிட்ட கருத்துகள்தாம் வேதவாக்காகவும் அமைந்துவிட்டன. அந்த அடிச்சுவட்டில் தொடர்ந்து நடப்பவர்களிடையே மனு ஸ்மிருதியைப் பற்றி ஒருதலைப்பட்சமான கருத்து நிலவுவது இயற்கைதான்.

புராணங்களையும் வேதங்களையும் முடிந்தால் படியுங்கள். நீங்கள் பல்லாயிரக்கணக்கான புத்தங்கங்கள் படித்திருந்தாலும், ஒரு தனி மனிதனாக ஒருவரை மேன்னிலைக்கு உயர்த்திக்கொள்ளவும், உயரிய சிந்தனைகள் பெறவும் அவை உதவும்.





..

22 comments:

நந்தாகுமாரன் said...

உங்கள் வாசிப்புத் தளம் என்னை பிரம்மிக்க வைக்கிறது

நேசமித்ரன் said...

மிரண்டு போயிட்டேனுங்க
எவ்ளோ ஆழமான கருத்து
விசாலமான பார்வை ...!

நசரேயன் said...

புரியுற அளவுக்கு எனக்கு அறிவு இல்லை, ஆனா படிக்க நல்லா இருக்கு

//
சிறந்த ஆடையாபரணங்கள் ஆகியவற்றை அளித்து மகிழ்விக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி விதிக்கிறது.//

ஓ.. தங்க விலை கிடு.. கிடுன்னு உயர இதுதான் காரணமா ??

Anonymous said...

தயவு செய்து உங்க பதிவின் பேரை மாற்றி விடுங்கள். பக்கோடா பேப்பரில் படிக்கும் சமாசாரம் உங்கள் பதிவில் கண்டிப்பாக இல்லை.

மிகப் பெரிய விஷயங்களை சிறிய இடுகைக்குள் அடக்கி வாசித்து இருக்கிறீர்கள்.
வாழ்த்த எனக்கு திறமை இல்லை. வணங்குகிறேன்.

மணிப்பயல் said...

// காரணம், பிராமணனாக அறிவு நிலையில் உயர்ந்திருப்பவன் தெரிந்தே குற்றம் இழைத்திருப்பான் என்று கொள்ளவேண்டும் என அது விளக்குகிறது. பிற பிரிவினரை ஓரளவுக்கே விவரம் தெரிந்தவர்களாகக் கருத வேண்டுமாதலால் அதற்கேற்பக் குறைவாகவும், சூத்திரன் தனது அறியாமையால் குற்றம் இழைத்திருப்பான் ஆதலால் மிக மிகக் குறைவாகவும் அதே குற்றத்திற்குத் தண்டணை விதிப்பதே பொருத்தம் என்கிறது, மனு ஸ்மிருதி.
//
எதுக்குங்க இந்த பாகுபாடு?

Vidhoosh said...

பாகுபாடு என்பது பிறப்பால் இல்லை என்றே சொல்கிறேன், மனு நீதியின் ஆதாரத்தோடு.

ஒரு மனிதன் தவறு செய்தால் கூட அவன் அறிவு நிலையை பொறுத்தே தண்டனை வழங்கப்பட்டு வந்திருக்கிறது என்கிறது மனு நீதி.

அதைத்தான் சொல்லி இருக்கிறேன் மணி. யாரையும் காயப் படுத்த சொல்லப்படவில்லை.

வால்பையன் said...

//பிராமணனாக அறிவு நிலையில் உயர்ந்திருப்பவன் //

பின்நவீனத்தை விட கடினமாக இருந்தது படிக்க!

சரி வாங்க மேட்டருக்கு, அது என்ன பிராமணன் அறிவு நிலையில் உயர்ந்தவன்! அந்த எண்ணம் உங்ககிட்ட இருக்குற வரைக்கும், உங்க நம்பிக்கையை அசைக்ககூட முடியாது!

புத்தகத்தில் எழுதியவற்றை தூக்கி போட்டுட்டு மனுசனா வாழப்பாருங்க!

வால்பையன் said...

மனுநீதி மனுசனால் எழுதப்பட்டதே!

அதே போல் தான் எல்லா மத நூல்களும், தனக்கு தகுந்தமாதிரி நாமளே எழுதிக்க வேண்டியது தான்!

Vidhoosh said...

அட மனிதனே! (கடவுளே என்று சொன்னாலும் திட்டுவீர்களே வால்!)

உங்கள் மனம் சிறிது ஆறுதலாய் இருக்கும் நேரத்தில் எந்த முன் முடிவும் இல்லாமல் படித்து பாருங்கள் வால். வெளிப்படையாய் கூட ஒத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் மனதிற்குப் புரிந்தால் போதும்.

ஏறத்தாழ 15 வருடமாய் நான் கோவில்களுக்கு போவதில்லை. புத்தகம் படிக்கிறேன். மனிதர்களை மட்டும் தான் மதிக்கிறேன். இந்த எண்ணத்தை எனக்குள் விதைத்தது வேதம்தான்.

வால்பையன் said...

எனக்கு எந்த குழப்பமும் இல்லை!
குழம்பிய குளத்தில் மீன் நிறைய கிடைக்கும், ஆன்மீகத்திற்கும் அது தான் தேவை,

படிக்க கடினமாக இருந்ததற்கு காரணம் புதிய வார்த்தைகள்! மற்றபடி எல்லாம் டுபாக்கூர் தானே!

Vidhoosh said...

:) நல்லது.
டுபாகூர் என்றாலும் பரவாயில்லை. படித்துத்தான் பாருங்கள்.

நான் தவறாக நினைத்த பல விஷயங்களை மாற்றி பார்க்க வைத்தது சில புத்தகங்கள். அதில் கடினமான வார்த்தைகள் இருப்பது சாபம்தான். முடியாததை முயற்சிக்கும் சுமைகழுதை நான். நானும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன். நான் புரிந்து கொண்டதை சொல்கிறேன்.

வேதங்கள் மனித உயர்வுக்காக மட்டுமே இயற்றப் பட்டவை. நம்மை பாகு படுத்தியது ஆங்கிலேயர்கள்.

என்னால் முடிந்த போதெல்லாம் மொழி பெயர்த்து தருகிறேன் சிலவற்றை. ஒரு சிலரையாவது சென்றடையும் என்ற ஆசையில்.

வால்பையன் said...

படிச்சிட்டு தான் சொல்றேன்!

கடவுள் என்ற கற்பனை உருவதுக்கு போட்ட வார்த்தை மாலைகள் தான் வேதம்னு!

Vidhoosh said...

அப்படி எந்தப் புத்தகத்தைப் படித்தீர்கள் வால்?
நானும் படித்து தெரிந்து கொள்கிறேன்.

வால்பையன் said...

இந்து மத வேதங்கள் நேரடியாக கிடைக்காவிட்டாலும், உங்களை போல் நண்பர்கள் சொல்லும் கதைகளை கேட்டிருக்கிறேன்!

பைபிளும், குரானும் படித்திருக்கிறேன்!

Vidhoosh said...

நீங்கள் குறிப்பிட்ட மரியாதைக்கு உரிய மூன்று காவியங்களிலும் மனிதனுக்கு மட்டும் தான், மனிதத்தன்மைக்கு மட்டும்தான் வழி காட்டி இருக்கிறார்கள்.

இடைப்பட்ட காலங்களில் ஊர் இரண்டுபட்டா கொண்டாடும் சுயநலவாதிகள் அதிக எண்ணிக்கையில் இருந்ததாலும், எடுத்துச் சொல்லும் பொறுமை இல்லாமல், இரண்டுபட்ட தருணங்களின் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சுயநலவாதிகளும் நோக்கத்தை மாற்றி விட்டனர்.

எந்த வேதத்துக்கும் முதன் முதலின் ஒரு ஆங்கிலேயர்தான் மொழி பெயர்த்துள்ளார். (http://vidhoosh.blogspot.com/2009/06/blog-post_10.html) இங்கும் கூறிஉள்ளேன்

வால்பையன் said...

நல்வழி காட்டுவதெல்லாம் வேதம்னா!

எம்.எஸ்.உதயமூர்த்தி தான் வாழும் கடவுளா இருக்கணும்!

வேதத்துல சொன்னாலும் சொல்லாட்டியும் மனுசன் செய்யுறதை தான் செய்வான்!

கிருஷ்ண மூர்த்தி S said...

/படிக்க கடினமாக இருந்ததற்கு காரணம் புதிய வார்த்தைகள்! மற்றபடி எல்லாம் டுபாக்கூர் தானே!/
வாங்க, அருண்! புரிஞ்சுக்கணும்னு முயற்சி பண்ண மாட்டேன், பண்ணவே மாட்டேன்னு பிடிவாதமா இருக்கும் போது, பின் நவீனத்துவக் கொடுமையை விடப் பெரும் கொடுமையாகத் தான் இருக்கும்!

/ஒரு மனிதன் தவறு செய்தால் கூட அவன் அறிவு நிலையை பொறுத்தே தண்டனை வழங்கப்பட்டு வந்திருக்கிறது என்கிறது மனு நீதி./

படிச்சவன் பொய் சொன்னா, அய்யோன்னுபோவான், அய்யோன்னு போவான்னு, பாரதி சொன்னதும் இதைத் தான்.

பிராம்மணன் என்ற வார்த்தையைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், இதில் இருக்கும் நியாயத்தை நீங்களே ஒத்துக் கொள்வீர்கள்.

உங்களுடைய எதிர்ப்பும், பிராம்மணன் என்கிற ஒரு வார்த்தையின் மீது தான் இருக்கிறது, இல்லையா?:

வால்பையன் said...

//படிச்சவன் பொய் சொன்னா, அய்யோன்னுபோவான், அய்யோன்னு போவான்னு, பாரதி சொன்னதும் இதைத் தான்.//

வாழும் தகுதியாக நான் படிப்பை என்றுமே பார்ப்பதில்லை! படித்தவனுக்கு மட்டும் தான் அறிவு இருக்கனும்னா மத்தவங்கலெல்லாம் பிட்சை தான் எடுக்கனும்!

பிராமனன் தவறு செய்தால் அதிக தண்டனை என்று இருப்பதால் மனுநீதி பாரபட்சமற்றதுன்னு நீங்க வேணா சொல்லிக்கலாம், அதே மனுநீதியில் எங்கேயாவது இடை சொருகலாக பிராமணன் செய்தால் அது தவறே இல்லை என்று இருக்கும்!

தெரிந்து கொள்ள எனெகொன்றும் மாற்று கருத்து இல்லை! எனது கேள்வி ஏன் தெரிந்து கொள்ள வேண்டும், அதை படித்த பிராமணன் இன்று என்ன கடவுளுக்கு அடுத்த நிலையையா அடைந்து விட்டார்கள்!

வாழத்தேவை தனிமனித ஒழுக்கம்!,
தன்னை தானே காப்பாற்ற தேவையான திறன், செய்திகளையோ, உணர்வுகளையோ பகிர்ந்து கொள்ளும் அறிவு, இவைகள் இருந்தாலே அவன் வாழ் தகுதியுடையவனாகிறான்! அவனை குழப்பி இல்லாத கற்பனை நரகத்தையும், சொர்க்கதையும் காட்டி குற்ற உணர்வுக்கு ஆளாக்குவதே வேதங்களும், மதங்களும்!

உருப்படியாக மதம் கற்று தரும் ஒன்றிரண்டு காரியங்களை விட நாங்கள் கடைபடிப்பது பல மடங்கு பெட்டர்!

Vidhoosh said...

நன்றி கிருஷ்ணமூர்த்தி அவர்களே.
================
அன்பின் அருண்.
எல்லாவற்றிற்குமே ஒரு எதிர்வாதம் இருக்கிறது. யானை எர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம்மா??

தர்க்கவாதம் என்றால் கூட பரவாயில்லை. ஒரே பிடிவாதம்.. ஒரே குதர்க்கவாதம். இதற்கு தீர்வே கிடையாது.
இதை இங்கேயே நிறுத்தி விடலாம். கொஞ்சம் எரிச்சலாய் இருக்கிறது. ப்ளீஸ். Sorry if that hurts.

வால்பையன் said...

:)

உங்கள் அடியை நான் வாங்கி கொண்டால் தான் காயம் எனக்கு!

kamala said...

I appreciate your views as a woman. I too have similar views.

Radhakrishnan said...

பிரமிக்க வைத்த அதி அற்புதமான இடுகை இது.

வேதங்கள் பற்றியும், வாழ்க்கை நடைமுறைப் பற்றியும் பல கேள்விக்குறிகளைக் கொண்டிருக்கும் எனக்குள் புதிய கோணத்தினைக் காட்டியப் பதிவு.

எந்தவொரு விசயத்தையும் திறந்த மனதுடன் அணுக வேண்டும். இதில் குறை இருக்கும், இப்படி எழுதியது தவறு என்ற நோக்கத்தில் பார்க்கும் பொருட்டே வெறுப்பும், ஏளனமும் மனிதனிடம் தலைதூக்குகிறது.

ஸ்ருதி, ஸ்மிருதி பற்றிய விசயங்களும், இடைச்செருகல்களும் மிகவும் அதிகமாகவே சிந்திக்கப்பட வேண்டியவை.

மனிதர்கள் அதிலும் பெண்கள் ஒடுக்கப்பட்டார்கள் என்கிற மனோபாவமே வேதங்களை, வேத மதங்களை குற்றமுள்ளவையாகச் சித்தரிக்க வழிவகை செய்தது என்றால் மிகையாகாது.

இந்த இடுகை பல விசயங்களை அறிய உதவியது. மிக்க நன்றி வித்யா.

Post a Comment