பைத்தியம் - 3

இதன் முதல் பாகம் இங்கே
இரண்டாம் பாகம் இங்கே

==========================


மதிய நேரத்தில் என் தாயார் போனில் பேசினார். நலங்கள் விசாரித்து, சாப்பிட்டியா என்று கேட்டு, எனக்கு பெண் பார்த்திருக்கும் விஷயமும் கூறினார். பொண்ணு எந்த ஊர் என்று கேட்டேன்.

"சேந்தமங்கலம்" என்றார் அம்மா.
========
நேற்றிரவிலிருந்து மூன்றாவது முறை இந்த ஊர் பெயரைக் கேட்கிறேன். எப்படியும் ஒரு முறை சேந்தமங்கலத்துக்குச் சென்று பார்த்து விடுவது என்று மனதிற்குள்ளேயே முடிவெடுத்துக் கொண்டேன்.

வார இறுதியில், மீண்டும் பயணம். ஆனால் இம்முறை சேந்தமங்கலம். திடீரென பெண் வீட்டுக்கு போனதால், அங்கு ஒரே பரபரப்பானது. எனக்கு பெண்ணை விட, இந்த ஊரை பார்ப்பதில் அதிக ஆவல் இருந்தது.

அந்த வீட்டின் பின்கட்டுக்கு போனேன். எங்கும் புல்பச்சை. கொடிகள் சுவரெல்லாம் படர்ந்திருந்தது. வெள்ளை அடிக்கப்பட்ட மதில் சுவற்றின் நடுவே குனிந்துதான் போகவேண்டும் போல ஒரு சின்ன இரும்பு கேட் இருந்தது. அதை தள்ளியதுமே லொட லொடவென திறந்து கொண்டது. நசநசவென மழையில் நனைந்த இலைகளின் ஈரத்தால் செருப்பு போட்டுக் கொண்டு நடக்க கடினமாயிருந்தது.

மலைக் குன்று தெரிந்தது.

யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. கேட்டைக் கடந்து ஒரு மணிநேரம் நடந்திருப்பேன். மலை அடிவாரம் வந்தது. கோவிலுக்கு இட்டுச் செல்லும் படிகள் தெரிந்தது. நிறைய படிகள் சிதிலமாகி இருந்தன.

கற்பகிரகத்துக்குள் நுழைந்தேன். மூன்று முகம் கொண்டு, ஆறு கைகளுடன் கருங்கல் சிலை. கைகளில், சங்கு சக்கரம், வேத புத்தகம் மற்றும் ருத்திராக்ஷங்கள் இருப்பது கண்டு அச்சிலை பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

அர்ச்சகர் "இது தத்தாத்ரேயர்" என்றார். "அத்திரி மகரிஷி மற்றும் ரிஷி பத்தினி அனுசுயாவிற்க்குப் பிறந்தவர்" என்றார். என் ஆர்வத்தை கண்டு, கோவிலை சுற்றி கூட்டிச் சென்றார். கோவிலின் கிழக்குப் பகுதி தாழ்ந்து இருந்தது. கூர்ந்து பார்த்தால் ஒரு குகை போல. குகையேதான். ஐந்தடி சுற்று கொண்ட வாயிற் பகுதி வழியே எட்டிப் பார்த்தால், சுமாராக இருபதடி நீளம் உள்ளே தெரிந்தது. பழைய நாற்றம் மூச்சடைத்தது. உள்ளே ஒரு சமாதி போல இருந்தது. அதில் அகல் விளக்கு ஏற்றி இருந்தது. அது என்னவென்று கேட்டேன்.

"இது ஒரு சித்தரின் சமாதி. அதோ அந்த போட்டோவில் இருக்கிறார் பாருங்கள். முப்பத்தஞ்சு வருஷம் முன்னாடியே இறந்துட்டார். நீங்கல்லாம் பிறந்திருக்கவே மாட்டீங்க" என்றார் அர்ச்சகர்.

திரும்பிப் பார்த்தேன்.

அன்றிரவு என்னை சேந்தமங்கலத்துக்கு வரச்சொன்ன அதே மெலிந்த உருவம் பிரேமுக்குள் படமாக இருந்தார். கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.

(தொடரும்.............)

இதன் முதல் பகுதி இங்கே
இரண்டாம் பாகம் இங்கே

==========================

.

7 comments:

அ.மு.செய்யது said...

கதைக்கு பின்னாடி நீங்க பண்ணியிருக்க சின்ன சின்ன ஹோம்வொர்க் தான் கதையோட சுவாரஸியத்த‌
அதிகப்படுத்துதுன்னு நினைக்கிறேன்.

நல்லா எழுதறீஙக்..வேறென்ன சொல்ல..கொஞ்சம் பெரிய பெரிய பாகமா போடுங்க..சட்டுன்னு விளம்பர இடைவேளை மாதிரி தொடரும் போடாதீங்க...ப்ளீஸ்..செம்ம இன்ட்ரஸ்டிங்.

Vidhoosh said...

ரொம்ப பெரிய பதிவென்றால், எனக்கே கொஞ்சம் படிக்க அலுப்பாக இருக்கும். நேரமின்மையே காரணம். உங்களுக்கெல்லாமும் அப்படித்தான் இருக்குமென்று ரொம்ப கஷ்டப்பட்டு சுருக்கி எழுதிருக்கேன்.

--வித்யா

Vidhoosh said...

நன்றி செய்யது. இன்னும் இரண்டு பாகம்தான். சனிக்கிழமை இரவில் கடைசி பாகம் - கொஞ்சம் பெரிசாகவே வரும். பொறுமை ப்ளீஸ்.
--வித்யா

பாலா said...

அப்படியே இந்திர சௌந்திரராஜன் கதையை படிப்பதை போன்ற உணர்வு வித்யா
பின்னி பெடலேக்குறீங்க
இந்திர சௌந்திரராஜன் கதைகள்லாம் படிச்சிருக்கீங்களா ?
இந்த சித்தர் சமாச்சாரம் லாம் அவருக்கு அல்வா சாப்புடற மாதிரி மனுஷன் சும்மா கொன்னுபுடுவார்
கதாநாயகனாகவே நம்மை பாவித்துக்கொள்ள செய்து விடுவார்

நேசமித்ரன் said...

பட்டு சேலை நெய்றது ரொம்ப கஷ்டம்
அதுவும் கல்யாண சேலை

Radhakrishnan said...

அட! கதையின் தலைப்புக்கும் நடக்கும் விசய வசியங்களுக்கும் அதீதத் தொடர்பு இருக்கும் போலிருக்கிறதே.

ஓசோ சொன்னதுபோல 'காமத்திலிருந்து கடவுள்' அப்படிங்கிற தத்துவமா எனத் தெரியாத அளவுக்கு கதையின் நடை அருமையாகச் செல்கிறது. மிக்க நன்றி.

குடந்தை அன்புமணி said...

ரொம்ப சஸ்பென்ஸாக இருக்குங்க...அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங். சனிக்கிழமைதானே... அலுவலகத்தில் வேலை அதிகமிருக்காது என்று நினைக்கிறேன்.

Post a Comment