ஜெய் ஹோ - Live Show of A.R. ரஹ்மான்
























ஏ. ஆர. ரஹ்மானை அறிமுகம் செய்வது சூரியனுக்கே டார்ச் போலாகும்.

அவரது நிகழ்ச்சி (லைவ் கான்செர்ட்) சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் செய்யூர் தாண்டி அமைந்துள்ள மார்க்-ஸ்வர்ணபூமி-யில் அக்டோபர் 11-2009 (ஞாயிறு) அன்று மாலை 6.00 மணிமுதல் நடைபெறப் போகிறது (நான்கு மணிநேர நிகழ்ச்சி).

இந்நிகழ்ச்சி மூலம் சக்தி பவுண்டேஷன் தொண்டு அமைப்புக்கு உதவி திரட்டப் படுகிறது. இதன் மூலம் திரட்டப்படும் நிதி ஆதிபராசக்தி மெடிக்கல் அண்ட் ரிசர்ச் ஹாஸ்பிடலுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க உதவும்.

இதற்கும் முன்னால் 2002-ஆம் வருடம் இதே போன்ற லைவ் நிகழ்ச்சி மகேஷ் மெமோரியல் கான்செர் இன்ஸ்டிட்யூட்-க்காக நன்கொடை திரட்ட நடத்தப்பட்டது.

ஆஸ்காருக்குப் பிறகு ஏ.ஆர்.ஆர். அவர் இசையுலகிற்கு அறிமுகமான சென்னையில் நடத்தும் முதல் நிகழ்ச்சி இதுதான்.

சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அறுநூறுக்கும் அதிகமான சிறப்பு பேருந்துகளை இலவசமாக இயக்க மார்க் நிறுவனம் (MARG) ஏற்பாடுகள் செய்துள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் இடம் சென்னை அடையாரிலிருந்து ஒன்றரை மணி நேரம் சாலை வழிப் பயணமாகச் செல்லலாம். கார் பார்கிங் வசதிகளும் மிகவும் அருமையாக செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சி ஜெய் ஹோ வேர்ல்ட் டூர்-ரின் பகுதியாக சென்னையில் நடைபெறுகிறது. இதில் ஹரிஹரன், சிவமணி, சாதனா சர்கம், ப்லேய்ஜ் (BLAAZE), பென்னி தயாள் போன்ற புகழ் பெற்ற இசைக் கலைகர்களும் பங்கேற்கிறார்கள்.
இதில் DRUMMER-களுக்கான போட்டியும் நடைபெறப் போகிறது. இதில் வெற்றிபெறும் போட்டியாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் சில நிமிடங்கள் இணைந்து இசைக்கும் வாய்ப்பைப் பெறுவார். போட்டியில் பங்கேற்க திறமை மட்டும் இருந்தால் போதும். வயதோ வேறெதுவுமோ தடையில்லை.

மூன்று சுவர் LED திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பத்தாயிரம் சதுரடியில் இந்நிகழ்ச்சி நடைபெற அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான ரூ.300-க்கான டோனார் டிக்கெட்டுகள் என்னிடம் இருபத்தைந்து இருக்கின்றன.

For

Time :6:00pm
Date:11th oct 09 Sunday



.

ஒன்பது இரவுகள்

நவராத்திரி வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

அதான் ஷோகேஸில் தினம் கொலு இருக்கே, எங்க குடும்பத்தில் பழக்கமில்லை, ஆகி வராது, யாரு அடுக்கி எடுத்து வைக்கிரது..... என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருந்து, இந்த வருஷம் மனம் மாறி அப்படியெல்லாம் சொல்லாமல், முதன் முதலாக கொலு வைத்த அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும், அவர்கள் பெற்ற குழந்தைகளின் முதல் மகிழ்ச்சிக்கும் வாழ்த்துக்கள்.

நான் இன்று Reader-ரில் சந்தித்த சகோதரி Mrs.Faizakader வைத்த கொலுவுக்கும் என் மனங்கனிந்த வாழ்த்துக்கள். ரொம்ப மகிழ்வாய் உணர்கிறேன் சகோதரி.

முதன்முதலாக புடவை கட்டி அப்பா வயிறுகலங்க புளிநீர் வார்த்த காலேஜ் பெண்களும்,

கிழவி முதல் குழந்தைகள் வரை ஒருத்தர் விடாமல், நம் வீட்டின் ஆண்கள் எல்லாரும் இரகசியமாய் இரசித்துக் கொள்ளும் மாற்றான் தோட்டத்து பூக்களின் அழகு அலங்காரங்களும்,

அவங்க சைடு இவங்க சைடு என்று திருமண வீட்டில் கூட தனிக் குழுக்களாக இருக்கும், இரு வீட்டு உறவுகளும் மந்திரம் போட்டா மாதிரி புன்னகையோடே சந்தித்துக் கொள்ளும் அதிசயங்களும், நடக்கும் ஒன்பது இரவுகள்.

இது அம்மா கொடுத்தது என்று பொக்கிஷமாய் பாதுகாக்கும், இந்த பொம்மையை அறுபது வருஷம் முன்னால் நான் சின்னவளா இருந்தபோது அடம் பண்ணி ஐம்பது காசுக்கு வாங்கினேன் என்று கூறி மகிழும் பாட்டி என்று ஒவ்வொரு பொம்மைக்குள்ளும் ஒரு கதை. இந்த ஒன்பது நாட்கள், குஜராத்தின் கர்பா, கல்கத்தாவின் பண்டாலா, தமிழ்நாட்டின் பொம்மைகளும் எத்தனை கதைகளையும் சந்திப்புக்களையும் நினைவுகளையும் கொடுத்துச் செல்கின்றன?

இந்த பொம்மைகள் பல வண்ணங்களில் பல ரூபங்களில், புன்னகைப்பது போலும் புன்னகைக்காமலும் படைத்தவன் கொடுத்த உணர்வுகளைச் சுமந்து, கடவுள், மஹாராஜா, சன்னியாசிகள், மூத்தோர்கள், தியாகிகள், சாதாரண மனிதர்கள், கிரிக்கெட், ஃபுட்பால் விளையாட்டு வீரர்கள், வயல், பூங்கா, மிருகங்கள், என்று உலகமே நம் வீட்டுக் கூடத்தில் அமைதியாய் நின்று, காட்சியளித்து, போய்விடும் மீண்டும் பெட்டிக்குள் புதையல்களாக. மீண்டும் அற்புத விளக்குத் தேய்படும் நாளுக்காக, பூதங்களாகக் காத்திருக்கும்.

நாமும் தினசரி சக்கரங்களின் அச்சுக்கள் போல மீண்டும் ஓட்டத்தைத் துவங்க, கொலுப்படியோடு மடித்து எல்லா உணர்வுகளையும், உறவுகளையும் லாஃப்டில் போட்டு மூடிவைக்கிறோம். இன்று லாலி பாடி ஒவ்வொரு பொம்மையாக துணியில் சுற்றி செட்-செட்டாக ஒரு கவரில் போட்டு எடுத்து வைக்கும்போது மனம் சுண்டலுக்காக அலையும் சிறுவர்கள் போல அலையும்.

இந்த பொம்மைகள் போலவே ஒவ்வொரு நாளும் ஒரு வீட்டிலேயே இருக்கும் குடும்பத்தார் கூட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாது, பேசிக் கொள்ள நேரம் கூட இல்லாமல் ஏதோ ஓட்டமாய் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

===============================================

மார்கண்டேய புராணத்தில் நவராத்திரி பற்றிய விவரங்கள் இருப்பதாக வீட்டுக்கு வந்திருந்த என் நண்பர் ஒருவர் சொன்னார். தேடிப் பிடித்து படித்தே விட்டேன்.

உங்களுடன் பகிர்தல்....

நவராத்திரி பற்றிய கதைகள் மார்கண்டேய புராணம், வாமன புராணம், வராஹ புராணம், சிவ புராணம், ஸ்கந்த புராணம், தேவி பாகவதம், கல்கி புராணம் போன்ற புனித நூல்களில் உள்ளன. ஒவ்வொன்றாகப் பகிர்கிறேன்.

தனு மஹரிஷியின் இரு புதல்வர்களான ஹிரம்ப-கரம்பன் இருவரும் தன் தவ வலிமையால் அளவில்லாத ஆற்றல்களைப் பெற்று விளங்கினார்கள். இந்திரனுக்கு இவர்கள் ஆற்றல்களைக் கண்டு பயம் வருகிறது. பேராற்றல் கொண்ட கரம்பனை இந்திரன் கொல்கிறான்.

இதனால் சினங்கொண்ட ஹிரம்பன் சிவனாரை நோக்கி கடுந்தவம் புரிந்து "தன்னை ஆண்கள், தேவ-அசுர-மனிதன் யாரும் கொல்லக் கூடாது" என்ற வரம் கேட்கிறான்.

சிவனோ அவனுக்கு "ஆண்கள், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் யாரும் உன்னைக் கொல்லமுடியாது. ஒரு பெண்ணே உன்னைக் கொல்வாள்" என்கிறார்.

இத்தனைப் ஆற்றல் பெற்ற பலசாலியான தன்னை ஒரு பெண்ணால் கொல்ல முடியுமா என்ற தலைகனம் மிகுந்து அட்டூழியங்கள் செய்ய ஆரம்பித்தான். தன் பலத்துக்கு நிகரான பலம் பொருந்திய பெண் யாருமே இவ்வுலகில் இல்லை என்று கர்வித்து மூவுலகின் மக்கள், தேவர்கள், கின்னரர்கள், கந்தர்வர்கள் எல்லோரையும் இரக்கமின்றி வதைத்தான். உலகெங்கும் தமக்குக் கீழ் கட்டுப்பட்டதும் அவன் இந்திரலோகத்தையும் கைப்பற்ற ஆவலுற்றான்.

ஒரு முறை ஒரு யக்ஷனின் மாளிகைத் தோட்டத்தில் ஹிரம்பன் ஆண் எருமை ரூபத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறான். அப்போது ஒரு பெண் எருமை மீது மையல் கொள்கிறான். வேறொரு ஆண்-எருமை ஹிரம்பனின் உண்மையான உருவம் பற்றியறிந்து அவனை நெருப்பிலிடுகிறது. பெண் எருமையும் நெருப்பில் குதிக்கிறது.

ஆண்களால் கொல்லமுடியாது என்ற வரம் பெற்ற அசுரன், நெருப்பினின்றும் மீள்கிறான். நெருப்பில் விழுந்து இறக்கும் பெண் எருமை கர்ப்பமாக இருக்கிறதால் தலை எருமை போலும், உடல் மனிதன் போலுமாக உருவத்தோடு எழுகிறான் மகிஷன்.

வெறிகொண்ட மகிஷன், தம் படை முழுவதையும் திரட்டிக் கொண்டு, இந்திரலோகத்தை கைப்பற்றி, இந்திரனையும் அங்கிருந்த தேவர்களையும் துரத்தினான். பதறிய இந்திரனும் தேவர்களும் ப்ரம்மாவிடம் முறையிட்டார்கள். ப்ரம்மா அவர்களோடு சிவனிடம் முறையிடச் சென்றார். சிவன் யோகத்தியானநிலையில் இருந்ததால், விஷ்ணுவிடம் முறையிட்டார்கள். பெருஞ்சினம் கொண்ட விஷ்ணுவிடமிருந்து பேரொளி மிக்க ஆற்றல் ஒன்று வெளிப்பட்டது. இந்நிலையில் சிவனும் யோகத்தியானத்திலிருந்து மீண்டு, நடந்தவையறிந்து, தன் மூன்றாவது கண்ணைத் திறக்கிறார். மூன்றாவது கண்ணிலிருந்து வெளிப்பட்ட பேராற்றல் விஷ்ணுவிடமிருந்து வெளிப்பட்ட ஆற்றலோடு இணைந்து ஒளிர்ந்தது. மற்ற கடவுள்களும் தத்தம் தெய்வீக ஆற்றல்களை இந்த ஒளியில் இட்டார்கள்.

இவ்வொளி ஒரு பெண்ணாக உருவானது. அவள் முகத்தின் ஒளியானது சிவனின் தெய்வீகத்திற்கு ஒப்பானதாக இருந்தது. அவளது பத்து கரங்களும் விஷ்ணுவின் ஆற்றல்களையும், பாதங்கள் ப்ரம்மரூபமாகவும், கூந்தல் யமரூபமாகவும், உடல் சோமரூபமாகவும் (சோமன்=>சந்திரன்), வயிறு இந்திரரூபமாகவும், கால்கள் வருணரூபமாகவும், இடை பூதேவிரூபமாகவும், விரல்கள் சூரியனையும், வசுக்களையும் (கங்கையின் மகன்கள்) ஒத்ததாகவும், மூக்கு குபேரரூபமாகவும், அமையப் பெற்றிருந்தாள். அவள் பற்கள் ப்ரஜாபதி, கண்களின் ஒளி அக்னி, புருவங்கள் சந்திகளாகவும், காதுகள் வாயுரூபமாகவும், இவ்வாறாக தெய்வங்கள் மற்றும் தேவர்களின் பெண்ணாற்றலிலிருந்து "சக்தி"யாக உருவானாள்.

இவளுக்கு இந்திரனின் வஜ்ராயுதம், சிவனின் திரிசூலம், விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம், வருணனின் சங்கு, அக்னியின் ஈட்டி, வாசுகியின் சர்ப்பம், யமனின் இரும்புக்கோல், வாள் மற்றும் கேடயம், விஸ்வகர்மாவின் கோடாலி மற்றும் கவசம், ஹிமாவதனின் (மலையரசன்) ஆபரணங்கள் மற்றும் சிங்க வாகனம் ஆகியவற்றைப் பெற்றாள். இவள் பூமிக்கு அனுப்பப்படுகிறாள்.

அசுரனான மகிஷன், தேவியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு அவளை மணந்து கொள்ள தூதனுப்புகிறான். இறைவியோ, தன்னை போரில் தோற்கடித்தால் அவனை மணப்பதாகக் கூறுகிறாள். இதனால் மகிஷனின் கவனம் திசைமாறி தேவலோகத்தை விடுத்து பூமிக்குத் திரும்புகிறான்.

அவளோடான யுத்தத்தில் தம் படைகள் அனைத்தையும் இழக்கும் அசுரனுக்கு இறைவியின் ஆற்றல் புரிய ஆரம்பிக்கிறது.

அவளது ஸ்வாசக்காற்று பட்டு அவளது படைவீரர்கள் உயிர் பெற்று எழுகிறார்கள். அவளுக்காக அசுரன் ஏவும் கணைகள் எல்லாம் திரும்பி அவன் படையையே அழிக்கிறது. அதிர்ச்சியடையும் ஹிரம்பன் எருமையுருவம் (மகிஷ) கொண்டு இறைவியின் படைகளை தம் வாலால் விசிறியடிக்கிறான். இறைவியின் வாஹனமான சிங்கம் எருமையை நோக்கிப் பாய்கிறது. இறைவி எருமையின் மூக்கை மூக்கணாங்கயிற்றால் பிணைக்கிறாள். ஹிரம்பன் சிங்கமாகவும், பின் மனிதனாகவும் உருமாறி தப்பிக்கிறான். அப்போதும் இறைவியிடமிருந்து தப்ப முடியாமல் ஒரு பெரிய யானையின் உருவங்கொண்டு தந்தத்தால் சிங்கத்தைத் தாக்குகிறான்.

யானையின் தந்தத்தை இறைவியின் வாள் தூள் தூளாக்குகிறது. அசுரன் மீண்டும் எருமை வடிவங்கொண்டு மலைகளினூடே ஒளிந்து கொள்கிறான். இறைவி எருமையின் கொம்பைப் பிடித்து அடக்கி தரையில் தள்ளி இடக்காலால் மிதித்து, அவன் தலையைக் கொய்து, அவன் உடல் பாகங்களைப் பிய்த்து அவன் படைகள் மீதெறிந்து கொல்கிறாள்.

இப்போரானது ஒன்பது இரவுகள் நடைப்பெற்று, பத்தாம் நாள் அசுரவதம் நிகழ்கிறது. மகிஷரூபத்தில் இருந்த அசுரனை வதைத்தனால் இவளுக்கு மஹிஷாசுரமர்த்தினி என்ற பெயர் விளங்குகிறது. பத்தாம் நாள் தீமை அழிந்து நன்மை ஜெயிப்பதால் அந்நாளை விஜயதசமி எனக் கொண்டாடுகிறோம்.

ஹிரம்பன், மகிஷன் இவர்கள் செய்த தவறுகளுக்கும் அடுத்த உயிருக்கு இழைத்த தீங்குகளுக்கும் சரியான தீர்வும் கிடைத்தாகி விட்டது. பெண்மையின் ஆற்றலை குறைத்து மதிப்பிடும் நல்லவர்களுக்கு மகிஷன் ஒரு பாடமாகிறான்.

இதெல்லாம் சரி இதற்கெல்லாம் மூலமுதற்காரண கர்த்தாவான இந்திரனுக்கு என்ன தண்டனை? எங்காவது இந்திரனுக்கும் சரியான தண்டனை கிடைத்திருக்கும், என்று நம்பிக்கையோடு தேடிக் கொண்டே இருக்கிறேன். கிடைக்கும் கிடைக்கும்....

============================================



.

ஊஞ்சல், பக்கோடா, தேநீர், மழை

1959ம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்தியாவின் முதல் "டிவி' சேனலான தூர்தர்ஷனின் பொன் விழா கொண்டாட்டம் 15.8.2009 அன்று துவங்கியது.

நான் ரசித்த சில பழைய தொலைகாட்சி நிகழ்ச்சிகள்.

நான் முதன்முதலாக பார்த்த ஜெயகாந்தனின் அக்ரஹாரத்தில் பூனை என்ற செவ்வாய்கிழமை நாடகம். இன்று வரை என்னால் மறக்கவே முடியவில்லை.

பின்பு
பார்த்த ரயில் சிநேகம், மால்குடி டேஸ், மகாபாரதம், சாணக்யா, இராமாயணம்.
  • "ஏக் சிடியா அனேக் சிடியா" என்ற ஒரு அனிமேஷன் பாட்டு - எங்கிருந்தாலும் ஓடிவந்து பார்ப்போம்.
  • "பூரப் சே சூர்ய உகா",
  • அமுல் சாக்லேட் விளம்பரம்,
  • Pulsar வந்து market sweep செய்யும் முன்னேயே சக்கை போடு போட்ட "ஹமாராபஜாஜ்",
  • பீம்சந்த் ஜோஷி, பாலமுரளிகிருஷ்ணா என்று எல்லோரும் சேர்ந்துபாடும் "மிலே சுர் மேரா தும்ஹாரா"
என்று பட்டியல் கொஞ்சம் நீளம்.

ஓர் புதன் கிழமை அன்று வழக்கம் போல சேனல் மாற்றிமாற்றி பார்த்து, ஒரு வழியா தூர்தர்ஷன் சானலில் சென்னை ஒளிபரப்பில் (பொதிகை) ஒரு thriller (???) சீரியலாம். பார்த்தேன். சீரியல் பெயர் "ஆக்ஷன் ..... (என்னவோ??)" ஒரு பர்த்டே பார்டியில் துப்பாக்கி சூடு நடத்துகிறார்களாம் சில ரவுடிகள். இதான் ஒன் லைன் கதை.

அரை மணிநேரம். முடிலங்க, இருந்தாலும், ஐம்பது வருஷம் கொண்டாடும்போதாவது மாறியிருக்கலாம் என்ற நம்பிக்கையோடு பார்த்தோம்.
தூர்தர்ஷன் நீண்ட காலம் பயணித்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் இலக்கே இல்லாமல் பயணிக்கிறதோ என்ற உணர்வும் மறுக்கவே முடியவில்லை.

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?"

==============================================
கொசுறு: ஒரு நாள் சிக்னலில் நின்றிருந்த போது, ஒரு lancer கார் அருகில் வந்து நின்னுச்சு.

அந்த வண்டியப் பாத்ததும் மனசுக்குள்ள ஆயிரம் அழகிகள் வெள்ளையுடையில், ''உனக்கும் கீழே உள்ளவர் கோடி' என்று பாடி, கை கொட்டி சிரிச்ச உணர்வுங்க.. அவனுக்கு நான் எவ்வளவோ தேவலாம். சென்னையில் உள்ள காக்கா எல்லாம் இவர் கார் மேலதான் கக்கா..

"hey..its a lancer" என்று கூறி புன்னகைத்தான் என்னைப் பார்த்து.

நானும்
ரொம்ப கூலா "நீங்கதான் ரொம்ப நாளா ஊர்ல இல்ல போலருக்கு" அப்படின்னு சொன்னேன் புன்னகைத்துக் கொண்டே.

என் வண்டியப் பார்த்து பெருமை பட்டவன் எவ்ளோ பேரோ..

"அவருக்கு இவர் எழுந்திருந்து உண்பார்"
=======================================
வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வயர்லெஸ் டெக்னாலஜிசான்றிதழ் படிப்பை பி.எஸ்.என்.எல். நிறுவனம்அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துநடப்படும் இந்த புதிய படிப்பு டிசம்பர்-2009 தொடங்கப்படவுள்ளது.

இந்த படிப்பில், செல்போன் ஜி.எஸ்.எம். டெக்னாலஜி, சி.டி.எம்., வைபி, வைமாக்ஸ் உள்பட வயர்லெஸ் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட அனைத்து பாடங்களும், செல்போன் தொழில்நுட்பங்கள் குறித்தும் சொல்லித்தரப்படும்.

இதற்கான theory மற்றும் செய்முறை பயிற்சி வகுப்புகள் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ராஜீவ்காந்தி நினைவு தொலைத்தொடர்பு பயிற்சி மையத்திலும் குரோம்பேட்டையில் உள்ள எம்..டி. கல்லூரியிலும் நடைபெறும்.

பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு அண்ணாபல்கலைக்கழகமும், பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இணைந்து சான்றிதழ் வழங்கும்.

இதுபற்றிய அறிவிப்பை முன்னணி நாளிதழிகளில் வெளியாகும். மேலும், இதுபற்றிய அறிவிப்புகள் பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்ட இணையத் தளமான http://tamilnadu.bsnl.co.in
ல் வெளியிடப்படும்.

"வௌவால் பட்சி ஆகுமா?" (ஆகலாம்... நம்பலாம்)
======================

கிருஷ்ண பிரபு
என்ற பதிவர் சிற்றிதழ்கள் பற்றிய கவனிப்பை விழைகிறார்.
நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்
கதைகள் மற்றும் கட்டுரைகள்

என்ற பதிவுகளில் பகிர்ந்து வருகிறார். நல்ல பதிவுகள் கிருஷ்ணபிரபு. வாழ்த்துக்கள்.

அவர் சொல்வது:
"சிலர் சிற்றிதழை நடத்துகிறார்கள். ஆனால் நிறைய வாசகர்களை சென்றடைவதில்லை. சில நல்ல இதழ்கள் கூட அறிமுகமாகாமல் இருக்கிறது. அவர்களுடைய உழைப்பு ஒரு வகையில் வெளியில் தெரிவதில்லை.

"ஆ.வி, காலச்சுவடு, உயிர்மை, குமுதம்" போன்ற இதழ்கள் இணையத்தில் கிடைப்பதால் பலரையும் சென்றடைகிறது. இதர இதழ்கள் அப்படி இல்லை. பல திறமைசாலிகள் வெளியில் தெரிய வருவார்கள். அதுமட்டுமின்றி பல ஜீவன்கள் இந்த இதழ்களை நம்பி இருக்கிறார்கள்.

http://sitrithazh.blogspot.com
- இந்தப் பதிவில் சில இதழ்களைப் பற்றி இருக்கிறது. நீங்கள் எங்கேனும் இந்த இதழ்களைப் பார்க்க நேர்ந்தால் அவற்றை வாங்கிப் படித்துவிட்டு உங்களுடைய பதிவில் எழுதுங்களேன். நிறைய பேரை சென்றடையும்." என்றும் கேட்கிறார்.

நல்ல சிந்தனை.
வெற்றி பெறவேண்டிய ஒரு சீரிய முயற்சி. எதாச்சும் செய்யலாமே பாஸ்!

இதோடு சின்னதாக ஒரு பெரிய தகவல்.

தமிழ் சிற்றிதழ்களை மையப்படுத்தி தகவல் செறிவுடனும், அழகியவடிமைப்புடனும், காலந் தவறாது இன்றைப்படுத்தப்படும் இணைய இதழ் தமிழம் www.thamizham.net) ஆகும். இந்த இதழ் தமிழ் உணர்வாளரும், புலமையாளரும், சிற்றிதழ் சேகரிப்பாளருமான பொள்ளாச்சி நாசன் அவர்களால்வெளியிடப்படுகின்றது.

இருபது ஆண்டுகளுக்கு மேலான தமிழ் இதழ்கள் சேகரிப்பாளரான பொள்ளாச்சிநசனின் நூலகத்தில் இருந்து தெரிந்த பழம் இதழ்கள் பற்றிய குறிப்புக்கள், தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் சிற்றிதழ்கள், அவற்றின் ஆக்கர்கள்பற்றிய தகவல்கள், அவற்றில் இருந்து தெரியப்பட்ட சுவையான பகுதிகள், கல்விஆராய்ச்சிகள், தமிழ்ப் புலவர்கள் ஆர்வலர்கள் பற்றிய குறிப்புகள் என முற்றிலும்மாறுபட்ட ஒரு படைப்பாக தமிழம் வெளிவருகின்றது.

பொள்ளாச்சி நாசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம்என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்றுபிறந்தார்.
  • இவர் சிற்றிதழ்ச் செய்தி என்னும் இருமாதத்திற்கு ஒருமுறை வரும்இதழைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
  • 2003 ஆகஸ்டில் தமிழம் வலை ( www.thamizham.net) தொடங்கினார்
  • 1999க்குப் பிறகு தாய்த்தமிழ் பள்ளிகளை பொள்ளாச்சி சூளேசுவரன்பட்டியில்தொடங்கி நடத்தி வருகிறார்.
  • இந்த பக்கத்தில் மற்ற தொகுப்பு முயற்சிகளையும் தந்துள்ளார்.
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.




.

நவராத்திரி




எப்போதும் போல இந்த வருஷமும் நவராத்திரியை விமரிசையாகக் கொண்டாடுகிறோம்.

சமயம் கிடைக்கும் போது எல்லோரும் வாங்க, பாட்டுப் பாடி, நிஜக் கும்மிகள் அடித்து, சுண்டல்-பாயசம் எல்லாம் சாப்பிட்டு, வடை பெறலாம். :))

அதுனால கடைக்கு பத்து நாள் லீவு.

அதனால் 27-9-09 வரை பதிவுகள் மற்றும் ஈமெயில் பக்கம் வரவியலாது.

Happy Navarathri. Happy Kolu.

--வித்யா



.

ஆல்பபெட்டும் அகர வரிசையும் - தொடர் பதிவு

அக்கா மகாதேவி - தமிழாக்க முயற்சி

இந்தக் கவிதையை அறிமுகம் செய்த அய்யனார் விஸ்வநாதன்-னுக்கு நன்றி.

By Akka Mahadevi
(12th Century)

English version by

A. K. Ramanujan

It was like a stream
running into the dry bed
of a lake,
like rain
pouring on plants
parched to sticks.

It was like this world's pleasure
and the way to the other,
both
walking towards me.

Seeing the feet of the master
O lord white as jasmine,
I was made
worthwhile.


எழுநாகத்தில் உறைந்த நியூரோ விஷம்
வறண்டிருந்த ஆன்ம விருத்தி
விஷத்துளியில் நனைந்த பாலை இதயம்

வழிந்தது போலும்
பொழிந்த ரேத மழையில்
பதுக்கிய அமிர்தம் தெளித்து புருவ
மையத்துளிர்ந்த சமித்துகள்

நாகப்புணர்ச்சியின் பரமானந்தம்
மிதக்கும் கால்கள் செய்யும் பிரபஞ்சப் பயணம்

ஜோதியொளி லிங்கம் சூடிய
வெண்பிறை மல்லிகே ஸ்வர
ராக சுதாலாபானை செய்த ஒரு முமுக்சுவின் விடுதலை


[விதூஷ்]




அருஞ்சொற்பொருள்:

எழுநாகம் - குண்டலினி எழுப்புதல் (Often referred to Serpent)


உறைந்த – Here frozen is intended to be understood as “preserved”

நியூரோ விஷம் - Cobras and coral snakes are identified to have neurotoxic venom. Here referred to the misuse of sexual urge.

வறண்டிருந்த ஆன்ம விருத்தி Here Human Heart is referred to Anma, longing for spiritual enlightening

விஷத்துளியில் நனைந்த பாலை இதயம் – ‘Yam’ lies in the chest, which is the Anahatha Chakra, a level prior to the highest degrees of Yoga.

=================

ரேதம் - the sperm cell and/or the ovum. The power of Retha (the sperm cell and/or the ovum) is accumulated through self-control for longer period/cycles to achieve this state of spiritual pleasure.
பதுக்கிய அமிர்தம் - “preserved” power of Retha

புருவ மையத்துளிர்ந்த – Awakening of Muladhara Chakra

சமித்து – Samith is a sacred dried stick widely used in Yagna. Here referred to burning of senses/physical pleasures (Samith) in the Yagna (Yoga)

=================

நாகப்புணர்ச்சியின் பரமானந்தம் - Corporeal energy envisioned as a sleeping serpent coiled at the base of the spine

பேருநிலை மீறும் மிதக்கும் – கால்கள் கொண்ட பிரபஞ்சப் பயணம் Highest level of yogic austerities

=================

ஜோதியொளி லிங்கம் – Jyothir Linga (Mallikarjuna) at Srisailam (AP)

சூடிய வெண்பிறை– Wearing Crescent Moon,

மல்லிகே ஸ்வர – Can be read as Mallikeswara (OR)

மல்லிகே (or just Mallike – as White Jasmine as a comparison to the poetess or the Crescent Moon)

ஸ்வர ராக சுதாலாபானை – (Swara Raga Sudha –Aalaapanai) – The music Aalapana (long notes in Carnatic Music) referred to the life of a mortal

ஒரு முமுக்சுவின் விடுதலை – Mumuksu is a person who is seeking liberation.


.

தென்கச்சி கோ.சுவாமிநாதன்

அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் உதவி இயக்குனரும், பிரபல எழுத்தாளருமான தென்கச்சி கோ.சுவாமிநாதன் இன்று (16.9.2009) மதியம் 12.40 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 67.

உழவர் உலகம், வீடும் வயலும், இன்று ஒரு தகவல், ஏராளமான குழந்தைகள் நிகழ்ச்சிகள், போன்றவற்றை வழங்கி தனது குரலாலும், நகைச்சுவையாலும் ஈர்த்தவர்.

முகத்த ஏன் இப்படி சோகமா வைத்திருக்காரு? ஏன் கொஞ்சம் பளிச்சுன்னு பேசக்கூடாதா? என்று இவர் நிகழ்ச்சிகளை பார்க்கும் போதெல்லாம் நினைத்திருக்கிறேன். சர்வ சாதரணமான குரலில் அவருக்கே உரிய முறையில் பெரிய பெரிய விஷயங்களை, எந்த ஒரு பாவமும் இல்லாமல் பேசிவிட்டு போய்விடுவார்.

அவருக்கு என் நமஸ்காரங்கள்.

=============================================================
அவருடைய தொகுப்பு ஒன்று வலையில் கிடைத்தது.


எதை விட்டுக் கொடுப்பது?
- தென்கச்சி கோ. சுவாமிநாதன்

ஓர் ஊரில் பெரியவர் ஒருவர் வாழ்ந்தார். அவருக்கு நிறைய சீடர்கள். இவர்கள் அனைவரும் பெரியவர் மீது அன்பைப் பொழிந்தனர். அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தனர். பெரியவரது உலக வாழ்க்கை நிறைவு பெறும் நேரம் வந்தது. அவரைத் தேடி வந்த கடவுளின் தூதர், "ஐயா! உங்களை அழைத்துப் போக வந்திருக்கிறேன்! என்றார். சீடர்கள் துடித்துப் போனார்கள்.


இன்னும் சிறிது காலம் அவரை இந்த உலகத்திலேயே இருக்க விடுங்களேன்! என்று கடவுளின் தூதரிடம் மன்றாடினர். இந்த உலகத்தில் அவர் வாழ வேண்டிய காலம் முடிந்து விட்டதே! என்றார் கடவுளின் தூதர். "வேறு வழி இல்லையா? என்று குரலில் சோகம் ததும்பக் கேட்டனர் சீடர்கள். ஒரே ஒரு வழிதான் உள்ளது! என்றார் தூதர். என்ன வழி? தயவு செய்து சொல்லுங்கள்! ஆர்வத்துடன் கேட்டனர் சீடர்கள்.

அவருக்காகக் கொஞ்சம் தியாகம் செய்ய நீங்கள் முன்வர வேண்டும்! என்றார் தூதர். உடனே பெரியவருக்காக எங்கள் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்! என்றனர் சீடர்கள். இதைக் கேட்ட தூதர், உயிர் வேண்டாம்,. உங்கள் வாழ்நாளில் ஆளுக்குக் கொஞ்சம் இவருக்குக் கொடுத்தால்... அதை இவரது ஆயுள் கணக்கில் வரவு வைத்து விடலாம்! என்றார்.

முதலில் ஒருவன் வந்தான். என் ஆயுளில் இரண்டு வருடத்தைத் தருகிறேன்! என்றான். இன்னொருவன், ஒரு வருடம் தருகிறேன்! என்றான். மூன்றாவதாக ஒருவன், ஒரு மாதம்! என்றான். எதையுமே செலவு செய்து பழக்கமில்லாத ஒருவன் எனது ஆயுளில் ஒரு நிமிட நேரத்தை இவருக்காகத் தருகிறேன்! என்றான்.

கடைசியாக வந்த ஒருவன் சொன்னான். இருபது வருடங்களை எடுத்துக் கொள்ளுங்கள்! இதைக் கேட்ட கடவுளின் தூதருக்கு ஆச்சர்யம். இது ரொம்ப அதிகம் இல்லையா? என்று கேட்டார். உடனே அந்த ஆசாமி சொன்னான். ""நான் சொன்ன இருபது வருடங்கள் என் மனைவியின் வயதிலிருந்து!''

நண்பர்களே! உலகில் எதுவுமே உங்களுடையது இல்லை என்பதை உணருங்கள். அப்படி உணரும் போதுதான் நீங்கள் ஆன்மிகத்தில் முதல் அடியை எடுத்து வைக்கிறீர்கள். இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள். "இது என்னுடையது' என்று நினைக்கும் வரை, எதையும் விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை. "எதுவும் என்னுடையது அல்ல!' என்கிற பக்குவம் வரும்போது, விட்டுக் கொடுக்க நம்மிடம் ஏதும் இருப்பதில்லை!.


.


.

சொல்லாதது ஒரு சொல்

எமிலி கவிதைகள்-தமிழாக்க முயற்சி


Emily Dickinson

XIII.EXCLUSION.

The soul selects her own society,
Then shuts the door;
On her divine majority
Obtrude no more.

Unmoved, she notes the chariot's pausing
At her low gate;
Unmoved, an emperor is kneeling
Upon her mat.

I've known her from an ample nation
Choose one;
Then close the valves of her attention
Like stone.


வாசிப்பவரின் பார்வைக்கு தகுந்த மாதிரி நட்பையோ காதலையோ உணர்த்தும் இது. இது சரியான / நேரிடை மொழி பெயர்ப்பு அல்ல, நான் புரிந்த விதத்தில் சமைத்துள்ளேன். உங்கள் விமர்சனங்களை மீறி, இன்னும் கிண்டப்படும்.


தவி(ர்)த்தல்

விழியோரம் பசித்திருக்கும் ஒரு துளி ஆன்மா
மூடியே திறந்திருக்கும் இமைகள்
அரூப சிறகின் நிழல் மீறி
இனி இடமில்லை இதழ்களுக்கு

தங்க மின்னல்கள் தெளிக்கும்
திறக்காத வாசலில்,
நிழல் மழையில் கரைகின்ற
சில அழகான கோலங்கள்

நீண்டுகொண்டே போன சுருங்கிய பாதைகள்
தெரிவது இரண்டா? ஒன்றா?
இருள் நீக்கிய நிழலின் வைர ஒளி பரவும்
கிரிச்டலைஸ்டு இதயம்.


குறிப்பு:
இதை ஏற்கனவே அந்தரவெளிகள்- யாஹூ குழுவில் பகிர்ந்துள்ளேன்.
இந்த கிரிச்டலைஸ்டு-க்கு பதில் வேறு வார்த்தை தெரியாமல் தவித்த பொது அய்யனார் "ஸ்படிகம்" என்றார். இந்த மொழிபெயர்ப்பில் திருப்தி இல்லாமல் தவிக்கிறேன். உங்கள் பார்வைக்கும் வைக்கிறேன்.






.

அவன் அவன் அவள்

உரையாடல் கதைப் பட்டறை

உச்சிவெய்யில். டூ வீலர்ல, சிந்தெடிக் டிரஸ், அதுவும் புடவை கட்டி, டிரைவ் பண்ணிக் கொண்டு போகும்போது எக்கச்சக்கமா மவுண்ட் ரோடு ஸ்பென்செர் சிக்னல்ல 90 செகண்ட், 89, 88, 87-அப்படீன்னு கவுண்ட் டவுன் விழுந்து, நொந்து கொண்டே நம்பர எண்ணிட்டு இருக்கும் போது, திடீர்னு 85-லையே கிரீன் லைட் வந்தா எப்படி இருக்கும்?

அந்தமாதிரியே, ஒரு தினசரி வழக்கத்தில் சிக்கி சுத்திசுத்தி, ஒரு மாறுதல் தேடியும், தெரிந்ததைப் பகிரவும், பதிவுகள் என்ற எழுத்து-வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கையில், திடீர்னு நம்ம எழுத்தில ஏதோ குறையுதேன்னு மண்டை காயும்போது, வந்த கிரீன் சிக்னல் இந்தப் பட்டறை. அப்படியே, எதிர்பாராத சிக்னல் கிடைத்து 65-70 கி.மீ. வேகத்தில் சிலு-சிலுவென டிரைவ் செய்யும் அனுபவம் போல இருந்தது இந்த வொர்க் ஷாப்.

இதே போன்ற ஆர்வத்துடன், வந்திருந்த பதிவுலக நண்பர்கள் - மொத்தம் எண்ணிக்கையில் எண்பதை (80) நெருங்கிய ஆர்வலர்கள், என்னையும் சேர்த்தால் 82 :))

இதை ஏற்பாடு செய்த சிவராமன் மற்றும் ஜ்யோவ் மற்றும் நர்சிம்மின் உழைப்புக்கள் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

இங்கு என் அனுபவத்தை மட்டும் பகிர்கிறேன். இன்னும் விபரமாக எழுதாததற்கு நான் எதையும் விட்டு விடுவேனோ என்ற அச்சம் மட்டுமே காரணம். விபரங்கள் அனைத்தையும் பத்ரி-யின் பதிவிலும், சிவராமன் (சிதைவுகள்) அவர்களின் பதிவிலும் விரிவாகப் பாருங்கள்.

வாசலிலேயே நின்று திருமண வீட்டுக்காரர் மாதிரி "வாங்க" என்று வரவேற்ற சிவராமன், hats off to you Sivaraman. மீண்டும் ஒரு முறை அசந்து விட்டேன் உங்களைப் பார்த்து. :)

முதலில் பேசிய பாஸ்கர் சக்தி, தான் கதை எழுதிய அனுபவங்களைப் பற்றிய தெளிவாக விவரித்தார். கலந்துரையாடலும், சுவாரசியமான பதில்களும் இரசிக்கும்படியாக இருந்தன. ஆரம்பகாலத்தில் இந்திய டுடேவில் தன் கதை பரிசு வென்றது, அழகர்சாமி குறித்த அவர் பகிர்தல்கள், எல்லா கேள்விகளுக்கும் புன்னகையுடன் பதில் சொல்லி, கேட்டது அற்புதமான அனுபவம்.

பின் யுவன்சந்திரசேகர் - கலகலப்பான ஆசாமி. சுவாரசிய பேச்சாளர். "எங்க விட்டேன்” என்று கேட்டு கேட்டு, தூக்கம் வராமலும் பார்த்துக் கொண்டார் :) இவர் எழுத்துக்களை, ஒன்றிரண்டை தவிர அதிகம் வாசித்ததில்லை நான். மொத்தத்தில் அவர் கதையிலிருந்தே ஒரு சின்ன வார்த்தை அவரைப் பற்றி, "தூரத்தில் ஒரு கர்ஜனை…கர்ர் க்ர்ர் க்ர்ர். கூட்டம் அமைதியாகிவிட்டது” என்றது போலும். மொத்தத்தில் இந்தப் பேச்சுக்கு கண்ணனின் குழலுக்கு மயங்கிய நிலையிலேயே இருந்தோம். நீண்ட நாள் நண்பரிடம் பேசிய உணர்வு. அவர் வார்த்தையிலேயே சொல்லனும்னா "சொக்கிட்டோம்ங்க" :))

சாப்பாடு முடிந்த பின், தேவதாஸ் அவர்களின் உலகச் சிறுகதைகள் பற்றிய வலிமையான, ஆனால் மெல்லியப் பேச்சை எவ்வளவு பேர் தூங்காமல் கேட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அவர் பேசியவை அனைத்துமே ரொம்ப முக்கியமானதாக இருந்தன. எங்க அம்மாக்கு அப்புறம், இவரிடம் நிறையா கதைகள் சொல்லி கேட்டேன். மகிழ்ச்சியாக இருந்தது. உலக கதைகள் மீதும், மொழிகள் மீதும் தீராத காதல் இவர் கண்களில் கண்டேன். பொதுவாகவே, எனக்கு மொழிகள் மீது obsession இருப்பதால், இவர் பேச்சு எனக்கு உற்சாகமாய் இருந்தது.

பா. ரா. அவர்கள் பத்திரிக்கைக்குக் கதை எழுத வேண்டியது பற்றியும், வெகுஜனப் பத்திரிகைகள் பற்றிய பொதுப்படையான எதிர்மறைக் கருத்துக்களையும் மிக அழகாக விவரித்தார். கதைகளை படித்து, சிறந்ததைத் தேர்ந்தெடுக்கும் sub-editor-கள் பாவ ஜீவிகள் என்ற அவரது விளக்கம், சிரிப்பை வரவழைத்தாலும், கருத்தில் விவேகம். தரமணியிலிருந்து படையெடுத்த எழுத்தாளர் ஆயிரம்-கஜினிக்கு tough கொடுப்பார் போலருக்கு. பா.ரா. வுக்கு எத்தனை அனுபவங்களைக் கொடுத்தார் என்று சொல்லியபோது சிரிப்பு வந்தாலும், அவர் முகத்தில் புன்னகை கூட இல்லைங்க. எனக்கென்னவோ அவரே சொன்னது போல, "ஐயோ, இந்தாளு கதையை ஒன்னு கூட பிரசுரிக்க முடியலையே" என்ற வருத்தம் மட்டுமே தெரிந்தது. இரசனை பேச்சாளர். பேச்சுகள் பாடங்கள்.

வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை பத்ரி அவர்கள் முழுதுமாக வெளியிடுவார் என்றே நினைக்கிறேன். ஒவ்வொருவரும் கண்டிப்பாய் பாருங்கள். நாம் ஒரு எழுத்தாளராக போக வேண்டிய தூரம், ஒன்றிரண்டு முக்காதம் :)

===================

வழக்கமாக weekend-களில் நாங்கள் இருவரும் எங்கும் போவதில்லை என்றே முடிவெடுத்திருந்தோம். போறாக் குறைக்கு உடல்நிலை வேறு சிறிது ஒத்துழைக்காமல் இருந்தது. "நாளைக்கு வொர்க் ஷாப் போகனும்னு சொல்லிண்டிருந்தையே" என்று நேரத்துக்கு மருந்து-மாத்திரை கொடுத்து, என்னை கவனித்துக் கொண்ட, என்னை இதில் பங்கேற்கும் படி செய்த, பாஸ்கருக்கு (என் கணவர்) ஒரு பெரிய நன்றி. :)


.

ஈரமான ஆடை

ஆயிரங்காலத்து அழுகல் பயிர் - பாகம் 5

கர்ணன் என் காதலன்

எப்படிச் சொல்வேன்!!! கர்ணா...நீ ரொம்பப் பாவம்டா (துளசிதளம் by துளசி கோபால்) என்ற பதிவு கொடுத்த ஆர்வம், என்னையும் கர்ணனை நினைக்க வைத்தது.

கர்ணா! நீ என் காதலன்! என்று ஒவ்வொரு முறை கர்ணனை பற்றிய வாசிப்பு வாய்ப்பு நேரும்போதும் நான் நினைத்துக்கொள்வேன். அந்த அளவுக்கு ஈர்ப்பான கதாபாத்திரம். சூழ்நிலையால் ஊமையாக்கப்பட்டு, மௌனக் கண்ணீர் வடித்தவன்.

கர்ணனின் பிறப்பு:

இளவரசி ப்ருதா (அதாவது குந்திதேவி) சூரசேனன் என்ற போஜ-யாதவ குல தலைவனுக்குப் பிறந்தவள். கிருஷ்ணனின் தந்தையான வசுதேவருக்கு சகோதரி முறையானவள்.

ஜராசந்தன் என்ற அசுரனால் துன்புறுத்தப் பட்டு, பதினெட்டு வகை பழங்குடியினங்கள் மேற்கு திசை நோக்கி இடம் பெயர்ந்தன. இதில், சூரசேனா, பத்ரகா, வோதா, சல்வா, பதச்சவா, சுஸ்தலா, முகுத்தா, குலிந்தா, குந்தி, சல்வாயனா, பாஞ்சாலா, கோசலா, மத்ஸயா, சன்யஸ்தபதா போன்ற அனைத்து குடியும் தப்பித்து இடம் பெயர்ந்தனர்.

குழந்தைபேறு இல்லாத குந்திபோஜன் என்ற அரசனுக்கு (குழுத் தலைவன்) தத்து கொடுக்கப்பட்டாள். ஒரு முறை துர்வாச மகரிஷி குந்திக்கு ஒரு மந்திரம் சொல்லி வரமளிக்கிறார், மேலும் அவளுக்கு எதிர்காலத்தில் இது உதவும் என்றே இவ்வரத்தை கொடுப்பதாகவும் சொல்கிறார். தாம் பெற்ற வரத்தை சோதிக்க,
சூரியன் மூலமாக பிறந்த கர்ணன், பிறப்பிலேயே பொன்னாலான கவச குண்டலங்களோடு பிறந்ததாக கூறப்படுகிறது. யாராலும் உடைக்கவே முடியாத இதை, அவன் தந்தையான சூரியதேவன் கர்ணனின் பாதுகாப்புக்காக கொடுத்ததாகவும் அறியப்படுகிறது.

ஆனால், கன்னித்தாயான குந்தியும் ஒரு தாதியும், தம் தவறை மறைக்க, ஒரு பெரிய கூடையில் குழந்தையை வைத்து, மூடி, மெழுகால் மூடியை அடைத்து, ஆக்வா என்ற நதியில் விடுகிறாள் (யமுனை) . நதியில் அலைகளால் அழைத்து செல்லப்படும் கர்ணன் இருக்கும் கூடை, கங்கை வழியாக கம்பா நதி இருக்கும் நகரங்களைக் கடந்து, பயணிக்கிறது. முடிவில் தேரோட்டியான அதிரதன் மனைவி இராதை
யை தாயாக்கி, கர்ணனை காலம் ஒரே ஒரு முறை மட்டும் கரை சேர்க்கிறது.

கரை சேர்ந்தானா கர்ணன்? காலம் இன்னும் அவனை எப்படியெல்லாம் அலைகழிக்கிறது? துவண்டு மருண்டு கர்ணன், மௌனி ஆகிறான். இந்த மௌனம் அவனே நிரந்தரமாக மௌனிக்கும் வரை நீடிக்கிறது. தலை குனிவுக்கு பயந்து குந்திதேவி செய்த ஒரு செயல், கர்ணனை வாழ் நாள் முழுதும் தலை குனிந்தே வாழச் செய்து, அவனை விதி போகும் இடமெல்லாம் துரத்துகிறது.

அவனை ளர்த்அதிரதன்-இராதை மற்றும் துரியோதனனைத் தவிர அவனை யாருமே போற்றியதில்லை. அவனுக்கு பரிவாய் இருக்கவில்லை. அவனை ஆதரிக்கவில்லை. யாருமே நண்பரில்லை. எத்தனை சாபங்கள் துரத்துகின்றன கர்ணனை? தோல்விகளே ஒவ்வொரு அடியிலும் அவனுக்கு பரிசாக கிடைக்கிறது. இருந்தாலும் அனைத்தையும் மௌனமாகவே ஏற்கிறான். கடைசி வரை, அவனை, அவன் சாரதியான (தேரோட்டி) சல்லியன் கூட, இகழ்ந்து, மனச்சோர்வுக்கு மட்டுமே ஆளாக்குகிறான். எல்லோருக்கும் கர்ணனைத் தெரியும். ஆனால், யாருமே அவனை மனதார ஏற்கவில்லை. கர்ணன் அர்ஜுனனை விட சிறந்த வீரன். மஹாரதி. தானப்பிரபு. ஆனால் சரித்திரம் அவனை பாடவில்லை. (உத்திரகாசியில், தேராதூனுக்கு அருகில் தியோரா என்றகிராமத்தில் கர்ணனுக்கு கோவில் கட்டப்பட்டிருக்கிறது)

பின்னாளில், குந்தி பாண்டுவை மணக்கிறாள். ஒரு முறை பாண்டு வேட்டையாடச் சென்றிருந்த போது, கிந்தம ரிஷி என்பவர் தம் மனைவியுடன் இருந்தபோது, மான் என்று நினைத்து, சப்தம் வந்த திசையில் அம்பு எய்தி, கொன்று விடுகிறான். இறக்கும் தருவாயில் அந்த ரிஷி சபித்துவிடுகிறார். இதனால்,
பாண்டுவுக்கு மனைவியுடன் உறவு கொண்டால், அவள் மடியிலேயே இறந்து விடுவான் என்றொரு சாபம் வருகிறது.

குந்தி தனக்கு கிடைத்த வரத்தால் (?) மந்திரம் சொல்லி, மூன்று மகன்களைப் பெறுகிறாள். யுதிஷ்டிரன் (தர்மதேவன் மகன் ), பீமன் (வாயுதேவன் மகன்), அர்ஜுனன் (இந்திரன் மகன்) பிறக்கிறார்கள். குந்தி, மாத்ரிக்கு (பாண்டுவின் இரண்டாம் மனைவி) இந்த மந்திரத்தை சொல்லித் தருகிறாள். இவளுக்கு அஸ்வினி குமாரர்களின் மகன்களாக நகுலன், சகாதேவன் இருவரும் பிறக்கிறார்கள்.


ஒரு நாள், பாண்டு தன்னிலை மறந்து, மாத்ரியுடன் உறவு கொள்கிறான். பாண்டு
தன் இரண்டாவது மனைவியின் மடியில் இறக்கிறான். இதற்கு தானே காரணம் என்று கருதி, மாத்ரியும் மரிக்கிறாள். பாண்டவர்கள் ஐவராகி, குந்தியால் வளர்க்கப் படுகிறார்கள்.


இவர்கள் வளர்ந்த பிறகு, ஒரு போட்டியில், கர்ணனுக்கு அர்ஜுனனுக்கும் சிறந்த வில்லாளன் யார் என்ற போட்டி வருகிறது. அர்ஜுனன் "தேரோட்டி மகன்" என்று கர்ணனை இகழ்கிறான். அப்போது, அர்ஜுனனுக்கு சமமான போட்டியாளனாக இருக்கும் கர்ணனை, துரியோதனன் அங்கத அரசனாக்குகிறான். கர்ணனின் அங்கலக்ஷணங்கள் மற்றும் கவச குண்டலங்களைப் பார்த்து, குந்திதேவி, அவனை தம் மகன் என்று அடையாளங்காண்கிறாள். குந்தி கர்ணனிடம் தானே அவன் தாய் என்ற உண்மையைக் கூறுகிறாள்.
கர்ணன் இதை நம்ப மறுக்கிறான் அப்போதும் கூட, அவனிடம் தன் தாய்மையை காட்ட அல்ல, அவனிடம் அர்ஜுனனுடன் போட்டியிட வேண்டாம் என்று கூறவே வருகிறாள். ஆனாலும், மிகுந்த முயற்சிக்குப் பின்பும், கர்ணன் அர்ஜுனனிடம் தோல்வி அடைகிறான். இருவரிடையே தீராத பகையுணர்வு தோன்றுகிறது.

===================================================================
கர்ணனின் பாத்திரம் போலவே, இன்னும் சில இடத்திலும், குறிக்கப்பட்டுள்ளது.
===================================================================
2340 BC - யில், அரபிக் பெனின்சுலா (Peninsula) பகுதிகளில் (கிழக்கு) Afro-Asiatic மொழியான செமிடிக் (Semitic) மொழி பேசும் அக்கட் (Akkad) வம்சாவளியினர் பற்றிய குறிப்புக்களில் கர்ணனுக்கு ஒப்பான ஒருவனின் (சார்கோன் என்பவன்) குறிப்புகளும் இருக்கிறது. அக்காடியர்கள், ஹீப்ரு குறிப்புக்களில், செமிடிக் என்ற மொழி பேசும் செமைட் (Semite) வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக குறிப்புகள் இருக்கின்றன. ஷெம் (Shem) நோவா(Noah)-வின் மகன். இவனால் ஏற்படுத்தப் பட்ட வம்சம், செமைட் என்றழைக்கப்பட்டனர். இவர்கள் மொழி ஹீப்ரு, அராபிக், அஸ்ஸிரியன் மற்றும் பாபிலோனியன் மொழிகளை உள்ளடக்கி இருந்தன. 2000 BC-யில் சுமேரிய கலாச்சாரம் இருந்த இடங்கள் எல்லாம், செமிடிக் (அக்காடியர்) மக்களின் வசம் பல நூற்றாண்டுகள் இருந்ததாக குறித்துள்ளனர். அக்காடியர்கள் பற்றிய அதிக குறிப்புக்கள் கிடைக்காவிட்டாலும், இவர்கள் தெற்கிலிருந்து, சார்கோன் (Sargon) என்ற தலைவனின் கீழ், சுமேரியர்கள் மீது படையெடுத்து, அக்காடிய சாம்ராஜியத்தை விரிவாகி, லெபனான் வரை சென்றுள்ளான். ஏறத்தாழ இராண்டாயிரம் ஆண்டுகள் வரை, இவன் சாம்ராஜியத்தில் (பாபிலோன் நகரம்) வர்த்தக - கலாச்சார வளர்ச்சியை பெற்றதாக குறித்துள்ளார்கள் (middle-east). ஆனால் இவன் (சார்கோன்) சாம்ராஜ்யம், மெசபொடோமிய கலாச்சாரம் (அல்லது அதை பற்றிய குறிப்பு) ஆரம்பிக்கும் வரையே நீடித்தது. 2125 BC - யில் வடக்கு மெசபொடோமியாவில், சுமேரிய நகரமான உர் (Ur) என்ற இடத்தில் ஏற்பட்ட புரட்சியில், அக்காடிய சாம்ராஜ்யம் வீழ்ந்து, சுமேரியர்கள் மீண்டனர்.

Sargon, the mighty king, king of Agade, am I.
My mother was a changeling, my father I knew not.
The brother(s) of my father loved the hills.
My city is Azupiranu, which is situated on the banks of the Euphrates.
My changeling mother conceived me, in secret she bore me.
She set me in a basket of rushes, with bitumen she sealed My lid.
She cast me into the river which rose not (over) me,
The river bore me up and carried me to Akki, the drawer of water.
[The Akkadians-THE LEGEND OF SARGON]


changeling - minor by age
Agade - A city located right between the Euphrates and Tigris rivers. Now, considered to be Iraq.
Azupiranu - A town in ancient Mesopotamia
Euphrates - The main river of nearer Asia, often mentioned in the Bible, the fourth river of paradise

===================================================================

இந்து காவியங்களில் குறிக்கப் பட்டுள்ள, விக்கிரமாதித்தன், கன்னித் தாய்க்குப் பிறந்தவன். இவனுக்கும் கர்ணனைப் போன்றே அதிக சாபங்கள் மூத்தோர்களால் கொடுக்கப்பட்டன. பல அவமானங்கள் / கஷ்டங்களுக்கு பிறகு, சாம்ராஜ்யங்களை படைக்கிறான். விக்கிரமாத்தித்தன் பற்றிய பிறப்பு குறிப்பு கொஞ்சமாகவே இருக்கிறது.

===================================================================

அடுத்தது, அயோனியான் (Ionian) வம்சத்தினை படைத்த அயான் என்பவனின் கதையில் கர்ணனை போலவே ஒருவனின் குறிப்பு வருகிறது.

கிரேக்க கடவுளான
அப்பல்லோ (ஜீயஸ் மற்றும் லேடோ-க்கு பிறந்தவன்) க்ரேயோசா (Creusa, born to King of Athens-Erechtheus) என்பவள் மீது மையல் கொண்டு, அவளை கடத்திச் செல்கிறான். இவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறான். அப்பல்லோ இந்த குழந்தையை கொன்று விடுவான் என்று பயந்து, ஹெர்மேஸ் (Hermes)-ஸிடம் கொடுத்தனுப்புகிறாள். ஹெர்மேஸ், தெல்பி (Delphi) என்ற நகருக்கு கொண்டு சென்று ஒரு கோவிலில் உள்ள கன்யாஸ்திரீயிடம் கொடுக்க அவள் குழந்தையை அந்த கோவிலிலேயே ஒரு சேவகனாக வளர்க்கிறாள்.

க்ரேயோசா பின்னாளில் ஜுதுஸ் (Xuthus) என்ற மன்னனை மணக்கிறாள். ஆனால் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை.

ஒரு நாள் ஜுதுஸ் கனவில் தெல்பி நகரத்து கோவிலை விட்டு வெளியேறும்போது முதலில் யாரை சந்திக்கிறானோ அவனே உனக்கு மகன் என்று ஒரு குரல் ஒலிக்கிறது.

இதனால் அவன் கோவிலுக்கு செல்கிறான், வெளியேறும்போது, க்ரேயோசாவுக்கு ஏற்கனவே பிறந்த குழந்தையே தென்படுகிறான். ஜுதுஸும் மகிழ்ச்சியோடு அவனை ஏற்கிறான். குழந்தைக்கு அயான் (Ion) என்றும் பெயர் சூட்டுகிறான். ஆனால், க்ரேயோசா இவனை தம் மகனாக ஏற்க முடியாமல், விஷம் கொடுத்து கொல்லப் பார்க்கிறாள்.

இது தெரிய வரும் அயானும் க்ரேயோசாவை கொல்ல முயற்சிக்கிறான். இதை கண்ணுறும் அப்பல்லோ, தாயை மகனே கொல்வதை தடுக்க, கன்னியாஸ்த்ரீயிடம் அயானின் பிறப்பு இரகசியத்தை தெரிவிக்கிறான். அந்த கூடையை பார்த்ததும் தாய்-மகன் இருவரும் இதை உண்மையென நம்புகிறார்கள்.

===================================================================
[தொடரும்]


.

ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும்


என் முந்தைய பதிவான ஆயிரங்காலத்து அழுகல்பயிர் - 4 என்ற தொடர்-பதிவில் வால்பையன் அருண் இட்டிருந்த பின்னூட்டம் இவை.

//எப்படி ஒரு குழந்தை தன் தாயிடம் சரணடைந்திருக்கிறதோ, அப்படியே பெண்களும் தம்கணவனிடம் சரணடைந்து இருந்து பாருங்கள். அவன் எப்படிப்பட்ட கொடூரனாக இருந்தாலும், சீக்கிரமே தன் பொறுப்புக்களை உணர்ந்து நல்வழிப்படுவான். //

இதெல்லாம் ஓவரு!
அநியாயத்துக்கு ஆணியம் பேசுறிங்க!
உங்களுக்காக பாடுபட்ட பெரிவங்களை மறந்துறாதிங்க!
ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் இல்லை, அதே நேரம் அனைவரும் நல்லவர்களும் இல்லை!
நீங்கள் சொல்வது போல் இருந்தால் இது தான் வசதின்னு பையன் செம ஆட்டம் போடுவான்!

/ஆணியம் பேசலைங்க. முடிந்தால் இவை உண்மையா இல்லையா என்று உங்கள் அம்மாவிடம் கேட்டுச் சொல்லுங்கள். //

ஏற்கனவே பின்னூட்டங்கள் கொடுத்த கேள்விகளும், அது கிளப்பிய சிந்தனைகளும் அதனால் உண்டான பல பதிவுகளும் இன்னும் முழுமை அடையாமல் editing-கில் இருக்கிறது. இருந்தாலும், உடனடியாக பதில் சொல்ல முடிந்தாலே இந்த பதிவு.

=======================

மரிலின் பிரன்ச் என்ற பெண்ணியவாதி, "ஆண்கள் எல்லோருமே காமுகர்கள்" என்று ஒரு சபையில், ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன் அறிவித்தாராம். அதோடு மட்டும் இல்லாமல் "அவர்கள் கண்களாலும் விதிமுறைகளாலும் சட்டங்களாலும் கற்பழிக்கிறார்கள்" என்று கோபமாக சீறினாராம். இது பெண்கள் மற்றும் ஆண்களிடையே பெரும் சலசலப்பை அப்போது ஏற்படுத்தியது என்று என் தந்தை எனக்கு செய்தித்தாளில் வாசித்து காண்பித்திருக்கிறார்.

ஏன் இந்த பொதுப்படை சிந்தனை? அந்த பத்து சதவீத விதி-விலக்கு பெண்களில் இல்லையா என்ன? அதற்காக பெண்களைப் பார்த்து இப்படி பொதுப்படை கருத்து தெரிவிக்கிறோமா?

பாடுபட்டாங்க. சரிங்க. அவர்கள் இன்று வந்து சில அலுவலங்களிலும், குடும்பத்திலும் நுழைந்து பார்க்கட்டுமே. ஏண்டா பாடுபட்டோம் என்று நொந்து கொள்வார்கள்.

பெண்ணியம் தவறென்று கூறவில்லை. சமத்துவம் என்பது அடுத்தவரை இழிவுபடுத்துவது இல்லை. பெண்ணோ ஆணோ, தனி நபர் உணர்வுகள் மதிக்கப்படும் போதுதான் சமத்துவம் ஏற்படுகிறது. ஆனால், நடப்பதோ, தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது போல, ஆட்சி கைமாறினால், அடுத்தவரை முடிந்தவரை எழவே முடியாதவாறு தோற்கடிக்கும், இகழும் குரூரம் மட்டுமே சமத்துவமாக நடந்து கொண்டு இருக்கிறது. இதென்ன சமத்துவம் என்றே புரியவில்லை.

எப்படி மாமியார் - நாத்தனார் என்றாலே கொடுமைகாரிகள், தோழிகளாக இருக்கவே முடியாது என்று புரையோடி போய் விட்டதோ, அதே போல ஆண்கள் பற்றிய பெண்ணியவாதிகளின் வாதங்களும் புரையோடி போனவையாக இருக்கிறது. பல பெண்ணியவாதிகளின் மகன்கள் introvert-களாக இருப்பதையும் கண்டிருக்கிறேன். மன்னிக்கவும், ஒரு நாய் கூட கல்லால் அடித்தால் குறைந்தபட்சம் திரும்பக் குரைக்கும், ஆனால் நான் குறிப்பிடும் பெண்ணியவாதிகளால் வளர்க்கப்பட்ட மகன்கள், எதாலோ அடித்தால் கூட வாங்கி கொண்டு சிவனே என்று போனதையும் பார்த்து கொதித்திருக்கிறேன். அவன் நிச்சயம் பெண்கள் மீது வெறுப்பு கொண்டவனாகவே வளர்கிறான்.

யாரோ ஒருவன் அடிக்கிறான். அன்று என்னால் அடிக்க முடியவில்லை என்பதற்காக என் கை ஓங்கியதும் அவனை நசுக்குவது நியாயமா? காலச்சக்கரத்தில், மீண்டும் மாற்றான் கை ஓங்கினால், இதே நிகழும், அப்புறம் நாமெல்லாம் நாகரீகமடைந்து விட்டோம் என்று பறை சாற்றுவதில் என்ன பயன்?

சரி, back to the point, கணவனை சரணடைந்து இருத்தல் எல்லோருக்கும் நன்மை தராது, ஆண்கள் ஆட்டம் போடுவார்கள் என்ற தொனியில் வாலின் பின்னூட்டம் இருக்கிறது.

சரணடைவது / சார்ந்து இருத்தல் என்பது நம்பிக்கையின் எல்லை. ஒரே இரவில் அல்லது across the counter நம்பிக்கை வரவே முடியாது. அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி இல்லை பெற்றோர் பார்த்து முடிவெடுத்த திருமணமாக இருந்தாலும் சரி. கூடவே இருந்து, ஒருவர் மற்றவரின் குறை நிறைகளை தெரிந்து புரிந்து, வரும் பிரச்சினைகளை சமாளித்து, எல்லாவற்றுக்கும் பின், இருவருக்கும் மற்றவர் மீது அதீத நம்பிக்கை வரும் போதே, சார்பு ஏற்படுகிறது. சார்பு வந்தால் மட்டுமே குடும்பம் என்ற வட்டம் இணைகிறது, முழுமை பெறுகிறது.

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல, ஆணையும் பெண்ணையும் ஒரு தராசில் நெறுக்க முடியுமா? நிச்சயம் முடியாது. ஆணையும் பெண்ணையும் ஒப்பீடு செய்வதே தவறு. ஆணோ பெண்ணோ, over-protective ஆகவோ, இல்லை over-liberal ஆகவோ இருப்பது எப்படி balance / சமத்துவமாக கருத முடியும். இவை இரண்டுமே சீர்கேட்டுக்கு / குடும்பச் சிதைவுக்கு மட்டுமே வழிகோலும்.

சில மனைவிகள் இன்றும் கணவன்களால் துன்பத்தில் இருக்கிறார்கள். எங்கே? அடித்தட்டு (below poverty line) மற்றும் மேல்தட்டு (rich) சமூகத்தில் இருக்கும் நான்கு சதவீத பெண்மணிகள் உண்மையாகவே ஆண்களால் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். ஆனால் அவர்களிடம் போய் பேசிப் பாருங்கள், புலம்பிக் கொண்டே, அவனுக்கு உணவு எடுத்து வைத்துக் கொண்டிருப்பாள். இதில் என்ன பெருமை என்றே எனக்கு புரிவதில்லை. தியாகம் என்ற பெயரில் அடிமை வாழ்க்கை வாழ்வாள். எத்தனை பெண்களுக்கு தனக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருக்கிறது? என்று துக்கப்பட்டுக் கொண்டாலும், இதே நிலை ஆண்களுக்கு இல்லையா?

"ஆண்கள் எல்லோரும் மிருகங்கள். அவர்கள் இப்போது எதுவும் செய்யவில்லை என்றாலும், வாய்ப்புக்காக காத்திருந்து, அதை பற்றியே சிந்தனை செய்து கொண்டு இருப்பார்கள்" (Men are animals I don't care if they're not doing anything at the moment they're thinking about it and they will when they have the chance.) என்று ஒரு ஆங்கில நாவலில் படித்திருக்கிறேன். இதே தொனியில், எங்கள் பாட்டி (அவரும் ஒரு பெண்ணியவாதி) கூட "அண்ணனா இருந்தாலும் ஆம்பிள ஆம்பிளதான்" என்பார். இதில் எனக்கு ஒப்புதல் இல்லை.

எத்தனை அண்ணன்கள் தன் தங்கைகளுக்காக, தன்னுடைய திருமணத்தை காலம் கடந்து செய்து கொண்டிருக்கிறார்கள். இதை பெருமை என்றோ அல்லது சரியானது என்றோ, சொல்லவில்லை. அப்படி பெண்களுக்கும், வெறும் சதைக்கும் அலைபவர்கள் என்றால், நம் தந்தை, அண்ணன், தம்பி, நண்பன் என்ற ஒவ்வொரு ஆணும் அப்படிப்பட்டவர்களா? நினைத்து கூட பார்க்க சங்கடமாக இருக்கிறது. எல்லோரும் மன்னிக்க.

"அவர்கள் நம் எதிரிகள்", "after all they are boys", என்றெல்லாம் இன்றும் பள்ளி செல்லும் சிறுமிகள் பேசிக் கொள்வதை பார்க்கிறேன். இதே எண்ணத்தோடே வளரும் அவர்களால், மாமியாரை எதிர்கொள்ளும் அதே மனப்பாங்கோடுதான் கணவனையும் எதிர்கொள்வார்களோ என்று நினைத்தது உண்டு.

யார் நல்லவன் என்பதற்கு விளக்கமளிக்கவே முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு நல்லவன் இருக்கிறான், ஒவ்வொருவரும் அவரவர் நியாயப்படி நல்லவனாகவே இருக்கிறார்கள்.

நான் உண்ணும் இரண்டு சப்பாத்திகள், இந்த உலகில், எங்கோ நான்கு பேருக்கு உணவாக இருக்கலாம். நான் நல்லவளாக இருக்கிறேன் என்பதற்காக, அதை உண்ணாமல் நான் பட்டினி கிடப்பது எவ்வளவு அறியாமையான செயலோ, அதே போல, பொதுப்படையான ஒரு கருத்தை திணித்தலும் அறியாமையே.

ஆண்களில் பத்து சதவீதம் நல்லவர்கள் இல்லை என்றால், பெண்களும் அதே போல பத்து சதவீதம் நல்லவர்களாக இல்லை என்பது ground reality. ஏன் பெண்களால் பெண்களுக்கு துன்பம் விளைவதில்லையா? உண்மையில் சொல்லப் போனால் "மனம் அழுகிய" ஆண்களை பற்றி எப்படி பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் தெரியுமோ, அதே போல பெண்களிலும் "மனம் அழுகிய"வர்கள் இருக்கிறார்கள்.

Let's accept the fact and move on.

உதாரணத்திற்கு, ஒரு பெண்ணை வெள்ளம்/புயல்/மழையிலிருந்து காப்பாற்றிய ஒருவரை பற்றிய செய்தி நமக்கெல்லாம் சப்பென்று இருக்கிறது. ஆனால், "மழையில் சிக்கிய அழகி கற்பழித்து கொலை" என்ற செய்தி நமக்கெல்லாம் "என்னாச்சு" என்றே தெரியாத மாதிரி, ஒரு பரபரப்பைக் கொடுக்கிறது.

எப்படி தேவ-அசுர, நாத்திக-ஆத்திக, ஜாதி-மத வேறுபாடுகள் மீதான விவாதங்கள் தீர்ந்து போய் விடாமல், பரபரப்பை அடிக்கடி உண்டாக்கி, மீடியா பார்த்துக் கொள்கிறதோ, அதே போல ஆண்-பெண் சமத்துவமும் ஏற்பட்டு விடாமல் பெண்ணியவாதிகள் பார்த்துக் கொள்வார்கள்.

ஏன் ஆண்களை வில்லனாகவே பார்க்க வேண்டும்? அதே போல இன்றும் பெண்களை அடியோடு வெறுக்கும் ஒரு தலைமுறை வளர்ந்து வருவதாகவே தோன்றுகிறது.

ஆணோ, பெண்ணோ, எங்கே மெல்லிய உணர்வுகள் நசுக்கப்படுகிறதோ, அங்கே வன்முறை வெடிக்கிறது. புரட்சி, போராட்டம், எதிர்ப்பு என்றெல்லாம் எந்தப் பெயர் வேண்டுமானாலும் கொடுத்துக் கொள்ளலாம். குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் அரவணைப்பு, அவர்களால் தத்தம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இருந்தாலே போது, தனிநபருக்கு சமூகத்தின் அங்கீகாரம் என்ற ஒன்று பற்றிய கவலை கூட வராது. குடும்பத்தின் அரவணைப்பே, அவனுக்கு தன்னம்பிக்கை பெற்றுத் தரும். தன்னம்பிக்கை உடைய யாருமே மனதுக்கு தவறென்று தெரியும் செயல்களைச் செய்வதில்லை.

இதெல்லாம் சாத்தியப்பட ஒன்றே ஒன்று மட்டும் போதும், அது நம்மை சார்ந்தவர்களின் "மெல்லிய உணர்வுகளை மதிப்பது" - நடக்குமா? என்பது million dollar question?



.

ஆசிரியரே-உங்களுக்கு வணக்கம்

சொல்வனம் - இணையச் சிற்றிதழ்


அதிக உழைப்புடன் எழுதப்பட்டிருக்கும் சொல்வனம் இணையப் பத்திரிக்கை மிகவும் தெளிவான நடையோடு, நல்ல கட்டுரைகளைக் கொண்டு இருக்கிறது.

மாய உறுப்புகள் நிறுவிய ஞான தரிசனம்

வெட்டவெளியில் மோதும் உடுக்கையொலி

இந்திய இசையின் மார்க்கதரிசிகள்

மனத்தளர்ச்சியின் பரிணாம வேர்கள்?


போன்ற அற்புதமான வாசிப்புக்கள் கிடைக்கிறது.

சினிமா மற்றும் (எல்லா வித) அரசியல், சிநேகாவுக்கு ஆனது என்னவென்று ஆர்வத்தோடு பார்த்துவரும் கூட்டத்தில், எத்தனையோ அற்புதமான கட்டுரைகளை கொண்டு, படிப்பார் இல்லாமல் காணாமல் போன சிற்றிதழ்களுக்கு நடுவே, மீண்டும் ஒரு நல்ல முயற்சி. முக்கியமாக, சினிமா இல்லாத சிற்றிதழ்.

ஒரு முறை போய் பார்த்துவிட்டு வாருங்களேன்.

Worth reading, feel good quality time spent...


.

ஆயிரங்காலத்து அழுகல் பயிர் - பாகம் 4

நூறு புதிர்

இந்த புதிருக்கு பதில் சொல்லுங்க!!

1 2 3 4 5 6 7 8 9 0 = 100

இந்த formula-வை mathematical symbols பயன்படுத்தி கரெக்டா 100 வரும்படிசொல்லுங்க.


==============================

அதாவது என்ன சொல்ல வரேன்னா, இது என்னோட நூறாவது பதிவுங்க.



சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் "பைத்தியக்காரன்" சிவராமன் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். இன்றும் ஒரு முறை "நன்றி சார்".

ஆடிக்கும் அமாவாசைக்கும் ஒருமுறை, எட்டி நின்றுகொண்டே எட்டி எட்டி பார்த்துக் கொண்டு இருந்த என்னை உரையாடல் சிறுகதைப் போட்டியே மீண்டும் எழுத வைத்தது. உண்மையில் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவே இல்லை. என் எழுத்துக்களுக்கு ஒரு அறிமுகம் தேடியே வந்தேன். (ஆனாலும் முடிவுகள் வந்த அன்று வயிற்றில் பட்டாம்பூச்சிகள் என்னவோ உண்மைதான்!!)

பதிவுலக நட்புக்கள் எல்லாமே போற்றத்தகுந்தவை. இது எனக்கு கொடுத்த முகமறியா நட்புக்களும், நான் நேரில் சந்தித்த ஒரே ஒரு பதிவரும், மிகவும் அற்புதமான மனிதர்கள். எவ்வளவு விஷயங்கள், கவிதைகள், எத்தனை விதமான சிந்தனைகள், எத்தனை நிறங்கள்?

எத்தனை கருத்துக்கள் உள்ளதோ, அத்துணைக்கும் வாசலாக இருக்கிறது blogging. இதுவரை அற்புதமான பயணம். அழகான நட்புக்கள். 2002-விலிரிந்து பதிவுலகை தொடர்ந்து படித்து வருகிறேன். எது என்னை blog-கிற்கு முதன் முதலில் இழுத்தது என்றெல்லாம் மறந்து விட்டது. ஆனால் ஏதோ ஒரு கூகிள் தேடலில்தான், வந்து சேர்ந்தேன் என்பது மட்டும் நிச்சயம்.

ஒரு சுபயோக சுபதினத்தில், தேடித் தேடித் படித்த என் பல வருட புத்தக படிப்பு தந்த, கையொடிய குறிப்பெடுத்த பல அருமையான புத்தக குறிப்புக்கள் அனைத்தும் நிஜமாகவே "பக்கோடா பேப்பர்கள்" ஆகிவிட, ஆரம்பத்தில், நான் கொஞ்சம் நினைவிலும் சேமித்து வைத்த புத்தகக் குறிப்புக்களை எங்கும் பத்திரமாக வைக்க வேண்டும் என்றே பதிவிட ஆரம்பித்தேன். என்ன, சிலவற்றை மீண்டும் ஒருமுறை மறுவாசித்தல் செய்து சரி பார்த்துக் கொள்ளவேண்டியதாய் இருக்கிறது.

சென்ற பிப்ரவரியில்தான் என்ட்ரி. ஆங்கிலமா தமிழா ஹிந்தியா சமஸ்கிருதமா என்று யோசித்துக் கொண்டே, தமிழை தேர்ந்தெடுத்தேன், என் எண்ணங்களும் உணர்வுகளும், தாய்மொழியில், எந்தவித சாயமும், உதட்டுப் பூச்சும் இல்லாமல் அப்படியே வந்து விழும் என்பதால்.

நான் எழுதுவதை படித்து, என்னுடன் கருத்துக்களை பகிரும், லைப்ரரியில் படிக்கிறா மாதிரி சத்தம் போடாமல் படித்துவிட்டு மட்டும் போகும், அனைவருக்கும் மிகவும் நன்றி. :)

ஒரு நல்ல மழை நாளில், ஊஞ்சலில் ஆடியபடி, நா. பார்த்தசாரதியின் "சமுதாய வீதி" புத்தகத்தோடு, அருமையான டீயுடன், பக்கோடா சாப்பிடுவது போல ஒரு மகிழ்ச்சி இங்கு வரும் போதெல்லாம்.

அப்படியே மறக்காம, அந்த புதிரையும் முயற்சி செய்யுங்க. :)

யாருமே அழைக்காமல், இந்த கல்யாண வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் வாங்க வாங்கன்னு, கை பிடிச்சு கூட்டிட்டுப் போயி, ஆதரவு விருந்து கொடுத்து, என்னை நூறாவது பதிவு வரை நகர்த்திக் கொண்டு வந்த உங்கள் எல்லோருக்கும் ரொம்ப நன்றிங்க.

உங்கள் தோழி: விதூஷ் :)



===============
அப்படியே இதையும் படிச்சு இரசியுங்க...
The Fray's Hundred
(The Fray is a Grammy Award-nominated four-piece piano rock band.)

The how I cant recall
But I'm staring at
What once was the wall
Separating east and west
Now they meet amidst
The broad daylight

So this is where you are
And this is where I am
Somewhere between
Unsure and a hundred

Its hard I must confess
I'm banking on the rest to clear away
Cause we have spoken everything
Everything short of I love you

You right where you are
From right where I am
Somewhere between
Unsure and a hundred

And who's to say its wrong
And who's to say that its not right
Where we should be for now

So this is where you are
And this is where I am
So this is where you are
And this is where I've been
Somewhere between
Unsure and a hundred

==============================





.

மஹாபாரதத்தில் வெற்றிக்கு இரகசியம்

நன்றி: படங்களுக்கு போட்டோ பக்கெட்டுக்கு நன்றி.

இதில் பெரும்பாலான பகுதிகளை ஈமெயில்-லில் சமஸ்கிருதத்தில் இதை அனுப்பிய யாரோ (ரமேஷ் என்று மட்டும் இருந்தது) - அவருக்கு ரொம்ப நன்றி. இந்தப் பதிவை எழுதத் தூண்டியதும் அவர் அனுப்பிய செய்தியே. அதெப்படி ஈமெயில் முகவரி தெரியாமல் அனுப்புகிறார்கள் என்று தெரியவில்லை :(

தமிழாக்கம் செய்தது, மற்றும் சில பகுதிகளை இணைத்தது மட்டுமே என் வேலை:)

===============================================================

இந்தியாவின் இரண்டாவது மாபெரும் இதிகாசமான மஹாபாரதம், "பாரதத்தில் சொல்லாதது பாரதத்தில் இல்லை" என்று கூறுமளவுக்கு பரந்த விரிந்து அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியது. இது கி.மு.3000-ஆம் ஆண்டு ஹரப்பா நாகரீகம் தோன்றிய சமயத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.

மஹாபாரதம் மூன்று முறை விவரிக்கப்பட்டுள்ளது.
  • ஜெயம் - வைசிய மஹரிஷியால் விநாயகருக்கு சொல்லப்பட்டது
  • பாரதம் - வைசம்பாயண மஹரிஷியால் ஜன்மேஜயனுக்கு சொல்லப்பட்டது
  • மஹாபாரதம் - சூதர் (அ) சௌதர் (அ) உக்கிரஸர்வர் என்ற மஹரிஷியால் நைமிசாரண்யத்தில் உள்ள ரிஷிகளுக்கு விவரிக்கப்பட்டது (நைமிசாரண்யம் உத்திரப்பிரதேசத்தில் சீதாபூர் மாவட்டத்தில் உள்ளது).
நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பல விஞ்ஞானச் சான்றுகளை உள்ளடக்கியுள்ளது. பாரதத்தில் கூறப்பட்ட பெரும்பான்மையான விஷயங்கள் பின்பு விஞ்ஞானிகளால் / மருத்துவர்களால் உண்மைதான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் (patent)பேடன்ட் என்னவோ இன்னும் அவர்கள் பெயரிலேதான் இருக்கிறது. சரி அதை விடுங்கள்.
  • விண்வெளி பற்றியக் குறிப்புக்களில் யுரேனஸ் (ஸ்வேதா) மற்றும் நெப்ட்யூன் (க்ஷரகா) போன்றவையும்,
  • புவியியல் குறிப்புக்களில் கம்போடியா (காம்போஜம்), கசாக்கிஸ்தான் மற்றும் ஸ்கான்திநேவியா (உத்திரகுரு) ஆகியவற்றைப் பற்றியக் குறிப்புக்கள்,
  • கணிதத்தில் 10, பத்தின் பவர் 10 to the power (+16) முதல் 10 to the power (- 16) வரையான எண்வரிசைகள்
  • போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இன்றும் நாம் நியூக்ளியர் வெபன்ஸ் / கெமிக்கல் வெபன்ஸ் என்று கூறப்படும் அணு / இரசாயன ஆயுதங்களோடு இணைத்துப் பார்க்கும் அளவுக்கு ஒற்றுமையுள்ளதாக இருக்கிறது,
  • போர் முறைகள், போர் அமைப்புக்கள் மற்றும் போர் தந்திரங்கள்,
  • ஆன்மீகம், மனோதத்துவம், சமூகவியல், இறையாண்மை, வாழ்வியல் நெறிகள், அரசியல், மேலாண்மைத்தத்துவங்கள் (மேனேஜ்மண்ட் டெக்னிக்ஸ்)
இது போன்ற நாம் என்னவோ இப்போதுதான் கண்டுபிடித்ததாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும், இவையனைத்துமே பாரதத்தில் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன.

சரி, அதென்ன பாரதத்தில் வெற்றியின் இரகசியம்?

======

கௌரவ-பாண்டவ படைபலம் - ஒரு ஒப்பீடு

கௌரவர்கள் - 11 அக்ஸௌஹிணி
பாண்டவர்கள் - 7 அக்ஸௌஹிணி

சே, இவ்வளவுதானா என்கிறீர்களா? ஒரு அக்ஸௌஹிணி என்பது என்ன தெரியுமா?
  • 21870 தேர்கள் - இதில் ஒவ்வொரு தேருக்கும் ஒரு அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட குதிரை, தேரோட்டி மற்றும் ஒரு வீரர்
  • 21870 யானைகள் - ஒரு யானைப்பாகன் மற்றும் ஒரு வீரர்
  • 65610 குதிரைகள் - வீரர்கள்
  • 109350 காலாட்படை (மனிதர்கள் - ஆண் மற்றும் பெண்கள்)
இது 1:1:3:5 என்ற விகிதத்தில் இருப்பதையும் காணுங்கள்.

இதை தவிர படை குழுத்தலைவர்கள், தளபதிகள், சேனாதிபதிகள், அரசர்கள், மந்திரிகள், ஆலோசகர்கள் என அதிகம் பேர் உள்ளனர்.

======

தலைமை ஏற்றவர்கள்

(இது முதலிலிருந்து கடைசிவரை வரிசை தனிநபர் ஆற்றல் சார்ந்து அமைந்துள்ளது)

கௌரவர்களுக்கு பீஷ்மர், துரோணர், கர்ணன், சல்லியன், க்ருபாச்சாரியர், அஸ்வத்தாமன், துரியோதனன்

பாண்டவர்களில் அர்ஜூனன், பீமன், த்ருஷ்டத்தும்னன், அபிமன்யூ, கடோத்கஜன், சிகண்டீ, சத்யகீ

======

பிண்ணனி

பாண்டவர்கள் - 13 வருடங்கள் நாடு கடத்தப்பட்டனர். தனியாக இராஜ்ஜியம் ஏதுமில்லை. அவர்களுக்கு அரசியல் மற்றும் பொருளாதார உதவிக்கு பக்கபலமாக அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களே அமைந்திருந்தனர். பாஞ்சாலர்கள், யாதவர்கள், மகதர்கள், சேதீக்கள் போன்றவர்கள் மட்டுமே இதில் அடக்கம்.

கௌரவர்கள் - 13 வருடங்கள் ஆட்சியில் இருந்தனர். துரியோதனன் இளகிய மனம் கொண்ட, நல்லாட்சி புரிந்த அரசனாக இருந்திருக்கிறான். குடிமக்கள் பாண்டவர்கள் ஆட்சியில் இல்லாததால் துன்புற்றதாகவெல்லாம் கூறப்படவில்லை. துரியோதனனிடம் ஹஸ்தினாபுரம் போன்ற செல்வச்செழிப்பு மற்றும் வளமை மிகுந்த இடங்கள் இருந்தாலும், பாண்டவர் தம் கடின உழைப்பால் மேம்படுத்திய இந்திரப்பிரஸ்தம் ஹஸ்தினாபுரத்தை விட அதிக வளமையும் அழகும் கொண்டதாக இருந்தது. இந்திரப்பிரஸ்தத்தையும் தனதாக்கிக் கொண்டான் துரியோதனன். துரியோதனனுக்காக கர்ணன் நாடெங்கும் போரிட்டு முழு நாட்டையும் துரியோதனனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.
======

கௌரவ-பாண்டவ போர் வந்த காரணம்


கௌரவர்கள் சார்பாக துரியோதனன் சொன்னது - போரில்லாமல் ஒரு ஊசி முனையளவு நிலம் கூட தரமாட்டோம், என்றான். துரியோதனன் போர் செய்வதிலேயே குறியாக இருந்தான். அந்த ஒன்று மட்டுமே நிகழும், நிகழ வேண்டும் என்றே விரும்பினான். அவன், எல்லாம் தனக்கே உரிமையானது என்பதால், சூழ்ச்சியாலோ, அநீதி இழைத்தோ, தனக்குக் கிடைத்த அனைத்தையும் தானே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக எந்தச் செயலையும் செய்யத் தயாராக இருந்தான்.

பாண்டவர்கள் சார்பாக யுதிஷ்டிரன் சொன்னது - நாய் எப்படி மாமிசத்துண்டிற்காகப் போராடுகிறதோ அதே போல நம் ராஜ்ஜியத்திற்காக போராடுவோம் என்றான். பாண்டவர்கள் இழிவுபடுத்தப் பட்டார்கள், அவர்களது மனைவி அவமானப்படுத்தப்பட்டாள். அவர் ராஜ்ஜியம் பறிக்கப்பட்டது. இருந்தாலும் யுதிஷ்டிரன் போரை தவிர்க்கவே விரும்பினான். ஐந்தே ஐந்து கிராமங்களைக் கொடுத்தால் கூட போரை நிறுத்துவதாக அறிவித்தான் யுதிஷ்டிரன்.
======

போரின் பலன்

இவ்வாறு, 18 நாட்கள் போர், 10 நாள் பீஷ்மர், 3 நாள் துரோணர், 1 1/2 நாள் கர்ணன், 1/2 நாள் பொது, 1 நாள் சல்லியன், 1 இரவு அஸ்வத்தாமன் என்று நடந்தது.

இப்போரில் பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் அவனது மகன்கள், சல்லியன், பாகதத்தன், புரீஸ்வரன், சசர்மன், ஜயத்ரதன், துச்சாதனன், சகுனி, உலூகன், துரியோதனனின் 99 சகோதரர்களுமாகிய அனைவருமே கொல்லப்பட்டனர்.

பாண்டவர்களில் துருபதன், விராடன் மற்றும் அவனது மகன்கள், அபிமன்யூ, கடோத்கஜன், ஐரவன் ஆகியோர் கொல்லப்பட்டனர். 18-ஆம் நாளிரவு அஸ்வத்தாமன் பாண்டவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது கொன்றான்.
======

பாண்டவர்கள் எப்படி வென்றார்கள்?

கௌரவர்கள் சார்பாக கர்ணன் நாடெங்கும் போர் செய்து அடக்குமுறை மூலம் பல்வேறு இராஜ்ஜியங்களை வென்று கைப்பற்றினான். கௌரவர்கள் இதனால் அதிப்படியான உயிர்சேதம், ஆற்றல் இழப்பு, பொருள் விரயம் மற்றும் புதிய பகையையும் உண்டாக்கிக் கொண்டனர்.

பாண்டவர்கள் நாடிழந்து மறைந்து வாழ வானப்ரஸ்த்தம் செய்த போதும் தன்னுடைய பலவீனங்களை அடையாளங்கண்டு பலமாக்கிக் கொண்டனர். யுதிஷ்டிரன் இன்னொரு முறை சூதாட்டத்திற்கு அழைக்கப்பட்டால் ஜெயிக்கும் வண்ணம், கந்தர்வ ச்சத்ரசேனா என்பவரிடமிருந்து சூதாடக் யாருமே அவனை ஜெயிக்க முடியாதளவு கற்றறிந்தான். மேலும் பல்வேறு ரிஷிகளையும் முனிவர்களையும் சந்தித்து அவர்அர்ஜுனன் திவ்யாஸ்திரங்களை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றான். பீமன் அனுமனின் சகோதரனைச் சந்தித்து தன் பலத்தை மேம்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபட்டான்.

உங்கள் பலவீனங்களை அடையாளங் காணுங்கள். அதை பலமாக மாற்றுங்கள்.
======

நட்பு / உறவுகள்

கௌரவர்கள் ஒரே ஒரு தலைவனைக் கொண்டு அவன் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. பழைய உறவுகளான காந்தாரம் (சகுனி), சிந்து (ஜயத்ரன்) மற்றும் காம்போஜம் (பாகதத்தன்) ஆகியோரைத் தவிர புதிய நட்புக்கள் எதுவுமே உருவாக்கவில்லை. மாறாக அடக்குமுறை மூலம் புதிய பகைவர்களை உண்டாக்கினார்கள்.

பாண்டவர்கள் தனக்கென்ற அதிகாரம் ஏதுமின்றி இருந்தாலும், பாஞ்சாலம் (திரௌபதி), துவாரகை (சுபத்திரை), மகதம் (விஜயா - சகாதேவன் மனைவி), சேதீ (கரேன்மயீ - நகுலன் மனைவி), காசி (பலாந்தாரா - பீமன் மனைவி), காகேயம் (தேவிகா - யுதிஷ்டிரன் மனைவி), மத்ஸயம் (உத்தரா - அபிமன்யூ மனைவி), ராக்ஷஸர்கள் அனைவரும் (ஹிடம்பீ - பீமன் மனைவி), நாகர்கள் அனைவரும் (உலூபி - அர்ஜுனன் மனைவி) போன்ற திருமண பந்தங்கள் கொடுத்த உறவுகள் இந்தியா முழுதும் பரவியிருந்தனர்.

சான்றோர் மற்றும் ஆற்றல் மிக்கவரின் நட்பை / உறவைப் பேணுங்கள்

======

தலைமை

கௌரவர்களுக்கு ஒரு நேரத்தில் ஒரே ஒரு தலைவன் தான் படையை நடத்திச் சென்றான். அவனுக்கு மட்டுமே 11 அக்ஸௌஹிணி அனைத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் முறையே பீஷ்மர், துரோணர், கர்ணன், சல்லியன் மற்றும் அஸ்வத்தாமன் ஆவார்கள். இவர்களும் கடமையால் கௌரவர்கள் சார்பில் இருந்தாலும் மனத்தால்/உணர்வால் பாண்டவர்களுக்கே அனுகூலமாக இருந்திருக்கிறார்கள்.

பாண்டவர்கள் ஏழு அக்ஸௌஹிணிக்கும் ஒவ்வொருவரென ஏழு தலைவர்கள் இருந்தனர், அவர்கள் முறையே மத்ஸய அரசரான விராடன், பாஞ்சால அரசரான துருபதன், மகத அரசரான சகாதேவன், சேதீயின் அரசரான த்ரஷ்டகேது, துவாரகையிலிருந்து வந்த ஒரே வீரனான சத்யகீ, பாஞ்சால இளவரசரான சிகண்டீ. த்ருஷ்டத்யும்னன் படைத்தளபதியாகவும், அர்ஜுனன் போர்தலைவனாகவும், கிருஷ்ணர் போர் ஆலோசகராகவும், அர்ஜுனனுக்கு சாரதியாகவும் இருந்ததாக கூறுகிறது.

======

குழுவுணர்வு / ஒத்த சிந்தனை


கௌரவர்களிடம் குழுவுணர்வோ ஒருமித்த சிந்தனையோ இல்லை. அவரவருக்கு தனிப்பட்ட சொந்த விஷயங்களுக்காக போரிட்டனர். பீஷ்மர் ஹஸ்தினாபுர அரியணையில் இருக்கும் அரசனைக் காக்க சபதமெடுத்ததாலும், துரோணரும் கிருபாச்சாரியாரும் கடமையுணர்வாலும், சல்லியன் பாண்டவர்கள் சபையிலிருந்து துரியோதனனால் ஏமாற்றப்பட்டு சூழ்ச்சியால் தம் பக்கம் இழுத்துக்கொண்டதாலும், கர்ணன் அர்ஜுனன் மீது கொண்ட பகையுணர்ச்சியாலும், துரியோதனன் மீதுள்ள நட்பின் நன்றிக்கடனுக்காவும் கூடி இருந்தனர். ஆனாலும் இவர்களுக்குள்ளே ஒருவருக்கொருவர் பிடிக்காமலும், பகையும் உள்ளுக்குள்ளேளே இருந்தது. அதாவது பீஷ்மருக்கு கர்ணனும், சகுனியும் விரோதிகள். சகுனிக்கு கர்ணன் விரோதி. கர்ணனுக்கு சல்லியன் விரோதி. சல்லியனுக்கு பீஷ்மர் விரோதி. இதனால் ஈக்களையும், கொசுக்களையும், வண்டுக்களையும் ஒரே குடுவையில் இட்டால் எப்படி சத்தமாக இருக்குமோ அதேபோல இவர்கள் கூடாரத்தில் எப்போதும் பகையுணர்ச்சியின் ரீங்காரம் கேட்டுக்கொண்டே இருந்தது.

பாண்டவர்களே, ஒரு குழு ஒரே நோக்கம். அனைவரும் கிருஷ்ணர் மற்றும் யுதிஷ்டிரன் என்ன சொன்னாரோ, அதன்படியே நடந்துகொண்டனர். போரிடச் செல்லும் போது, அர்ஜுனன் மற்றும் பீமன் சொற்படியே மற்ற அனைவரும் நடந்தனர். சகோதரர்கள், மாமன், மாமனார், கொழுந்தன் என அனைவருமே உறவினர்கள். அனைவருமே முடிவெடுக்கும் தருணங்களில் ஒன்றாவே இருந்தார்கள்.

உங்கள் பொறுப்புக்களை பகிருங்கள்.

========

தனிநபர் கருத்துக்கள்/நம்பிக்கைகள்

கௌரவர்கள் சபையில், துரியோதனனைத் தவிர வேறு யாருக்கும் போரில் விருப்பமில்லை. அவனைத் தவிர அவன் குழுவில் இருந்த தலைவர்கள் அனைவருமே பாண்டவர்கள் மீது அபிமானம் கொண்டவர்கள்.

  • பீஷ்மருக்கு பாண்டவர்கள் பேரக்குழந்தைகள் என்பதால் இவர் ஒவ்வொரு நாளும் போரில் ஆயிரம் பேரைக் கொன்றாலும் பாண்டவர்களைக் கொல்ல மாட்டேன் என்று சபதம் பூண்டார்.
  • துரோணருக்கு பாண்டவர்கள் மாணவர்கள், இவரும் பாண்டவர்களை சிறைபிடிப்பதாகவும் கொல்ல மாட்டேன் என்றும் சபதம் பூண்டார்.
  • சல்லியன் (நகுல சகாதேவனின் தாய்மாமன்) கர்ணனின் சாரதியாக இருந்தான். இவன் துரியோதனனின் சூழ்ச்சியால் கௌரவர்களை ஆதரிக்கும் படி ஆனதால், கௌரவர்கள் பக்கம் இருந்தாலும், கர்ணனை சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் தோல்விபயம் மற்றும் எதிர்மறை சிந்தனைகளைக் கொடுத்து அவன் ஆற்றலைக் குறைத்தான். இதனால் இவன் மறைமுகமாக பாண்டவர்களையே ஆதரித்தான்.
  • கர்ணன் பாண்டவர்களில் மூத்தவன், அதனால் குந்தியிடம் அர்ஜுனனைத் தவிர வேறு யாரையும் கொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்கிறான். தாயே இந்தப் போர் முடியும் போது உங்களுக்கு நிச்சயம் ஐந்து மகன்கள் மிஞ்சுவார்கள் என்று இவன் சொல்லும் பகுதிகளைப் படிக்கும் போது, கர்ணன் மீது அளவில்லா பாசம் ஏற்படும் நமக்கு. கண்ணீரையே வரவழைக்கும் பகுதிகள் அவை. கர்ணனைப் பற்றி எழுதுவதென்றால் பக்கங்கள் போதாது.

ஆனால் பாண்டவர்களோ திட்டமிட்ட செயல்வடிவமும், யார் என்ன செய்ய வேண்டும் என்ற நோக்கமும், குழுவுக்கான செயல்பாடுகளையும் ஏற்கனவே நிர்ணயித்தனர். அதாவது, த்ருஷ்டத்யும்னன் துரோணரையும், சிகண்டீ பீஷ்மரையும், சத்யகீ புரிஸ்வரர்களையும், அர்ஜுனன் கர்ணனையும், பீமன் துரியோதன் மற்றும் அவன் சகோதரர்களையும், சகாதேவன் சகுனி மற்றும் அவன் மகன்களையும், நகுலன் கர்ணனின் மகன்களையும் குறித்து போரிட முடிவு செய்திருந்தனர். சூழ்நிலைக்கேற்ப செயல்முறைகளை மாற்றினார்கள் ஆனால் நோக்கத்தை கடைசி வரை மாற்றவேயில்லை.

ஒரே நோக்கமுடைய குழுவுணர்வை வளருங்கள்.
நோக்கங்களையும் செயல்பாடுகளையும் திட்டமிடுங்கள்.

========

ஈடுபாடு
  • கௌரவர்களிடம் ஏற்கனவே சொல்லியபடி பாண்டவ அபிமானிகளே அதிகம் இருந்தனர். இதைப் பற்றி மேலும் சொல்வதாயிருந்தால், பீஷ்மர் போரின் நோக்கத்திற்கு சம்பந்தமேயில்லாத, சாதாரணப் போர் வீரர்களை மட்டுமே கொன்று போரை வளர்த்தார். இவர் தனது பாரபட்சத்தால், சிகண்டீ போல முழுமையான ஈடுபாட்டுடன் போர் புரியவில்லை. தன்னைக் கொல்லும் இரகசியத்தை பாண்டவர்களிடம் மட்டும் கூறுகிறார்.
  • துரோணரும் தன்னிடம் அஸ்திரங்கள் இருக்கும் வரை மட்டுமே போரிடுவதாகக் கூறியதன் மூலம், அவரை வீழ்த்தும் இரகசியத்தைத் தெரிவிக்கிறார். கிருஷ்ணரின் தந்திரத்தால், அஸ்வத்தாமன் இறந்த செய்தி கேட்டதும் அஸ்திரங்களை விடுத்தார்.
  • கர்ணனோ பீமனையும் யுதிஷ்டிரனையும் சந்தர்ப்பம் வாய்த்தும் கொல்லவில்லை. அவன் தன் கவச குண்டலங்களை போருக்கு முன்பே தானம் செய்கிறான். மேலும் துச்சாதனனை பீமன் கொல்லும் போது, கர்ணன் அவனைக் காப்பாற்றவில்லை.
  • சல்லியனே கர்ணனை தாழ்த்திக்கொண்டே இருந்தான்.

  • பாண்டவர்களிடமோ, 16 வயதேயான அபிமன்யூவோ, 13-ஆம் நாள் போரில் சக்கரவியூகத்தை உடைத்து, 7 மகாரதிகள் (பெரும் வீரர்கள்) சேர்ந்து பகல் முழுதும் போரிட்டு அவனை வீழ்த்தினர்.
  • கடோத்கஜன் இறக்கும் போது கூட, தன் பெருத்த உருவத்தோடு, அதிககூட்டமாக கௌரவ வீரர்கள் இருக்கும் பக்கமாக விழுந்தானாம். இதனால் கௌரவர்களுக்கு அதிக குதிரை மற்றும் போர்வீரர்கள் சேதம் மிகுந்ததாம்.
  • யுதிஷ்டிரனோ கர்ணனை எதிர்கொள்ள முடியாதென்றாலும், குழுவுக்கு தைரியமளிக்க போருக்குச் சென்றான். மேலும் சில சந்தர்ப்பங்களில் பொய்யுரைத்தும், உண்மையைத் திரித்துக் கூறியும், குழுவின் நன்மைக்காக தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்தான்.
  • கிருஷ்ணரோ, துரியோதனனுக்கு தான் ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று அளித்த வாக்கையும் மீறி இருமுறை ஆயுதங்களை எடுக்கிறார். ஆனால் அர்ஜுனன் அவரைத் தடுத்து விடுகிறான்.

தனிப்பட்ட விருப்பங்கள் குழுவின் நோக்கத்தை மீறக்கூடாது. தனிமனித ஆற்றலைக் காட்டிலும் நோக்கத்தைக் குறித்து செயல்படும் தனிமனிதரின் ஈடுபாடே முக்கியம். உங்களால் இயலாது என்றாலும் உங்கள் குழுவுக்கு நம்பிக்கை அளிக்க கடினமான செயல்களைச் செய்து காட்டுங்கள்.

========

மேலும் கிருஷ்ணர் பாண்டவர்கள் பலங்குறைந்தும் மனத்தைரியம் இழந்து காணப்பட்டபோதெல்லாம் அதை சரி செய்கிறார். யுதிஷ்டிரனோ அடக்கி வாசித்து ஜெயிப்பவன். போரின் முதல் நாளன்று கௌரவர் கூடாரத்திற்கு ஆபத்தையும் பொருட்படுத்தாமல் சென்று, தன் குடும்பத்தின் ஆறு மூத்தவர்களிடம் ஆசி பெறச் செல்கிறான். உண்மையாக இவன் அங்கு போரின் முதல் நாள் ஏன் போக வேண்டும்? அங்கு போய் அந்த ஆறு ஆற்றல் மிக்க சான்றோர்களிடமும், ஆசியும் பெற்று, அவர்கள் பாசமிகுதியால் அவர்களை வெல்லும் இரகசியத்தை கூற அதையறிந்து வந்தான். மேலும் அங்கு குழுமியிருந்த சபையோரிடம், துணிந்து எப்போது வேண்டுமானாலும் பாண்டவர்கள் கூடாரத்திற்கு வந்து அவர்களோடு சேர்ந்து கொள்ளலாம் என்று அறைகூவுகிறான். யுதிஷ்டிரனுக்கு கௌரவர்களிடம் ஒற்றுமை இல்லை என்பது நன்றாகத் தெரியும். இது கிடைத்தவரைக்கும் லாபம் என்ற கடைந்தெடுத்த போர்தந்திரம். இம்முறை திருதராஷ்டிரனின் வேறொரு மகனான யுயுத்சு என்பவன் கட்சி மாறுகிறான். இவன் மூலம் யுதிஷ்டிரன் கௌரவர்களைப் பற்றியும், அவர்களது பலம் மற்றும் பலவீனங்களையும் அறிகிறான்.

சரியான தலைமை குழுவின் வெற்றிக் காரணமாகிறது.
சரியான கணக்கிட்டு அபாயங்களை எதிர்கொள்ளுங்கள். எதிரிகளின் பலவீனத்தைப் பயன்படுத்தி அவர்களை வீழ்த்தும் வழியைக் காணுங்கள்.

=========

வாழ்க்கை முறை

கௌரவர்கள் அரண்மனைச்சூழலில், அதிகாரம் செலுத்தி, புகழ், துணிச்சல் எல்லாம் பெற்று, சமூக நடைமுறைகளை அறியாமலேயே இருந்தனர்.

பாண்டவர்கள், குழந்தைப்பருவத்தில் (5-13 வயது) ஹிமாலயத்தில் குருகுலம் பயின்றனர். ஒரு வருடம் குரு-பாஞ்சாலத்தில் மறைந்திருந்தனர். 12 வருடம் வனவாசமும், 1 வருட அஹ்யாதவாசமும் அவர்களுக்கு பல இன்னல்களையும் துன்பங்களையும் தாண்டி வரக் கற்றுக் கொடுத்தது. நிதர்சனங்களை சந்தித்தனர். பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து, சன்னியாசிகள், ஆச்சாரியார்கள், குருமார்கள், யோகிகள், வேதிகர்கள், சுரங்கம் செய்பவர், உழவர், குயவர், தச்சர் போன்ற அனைத்து தொழில் செய்யும் மக்களையும் சந்தித்து, அவர்களது தொழில் நுணுக்கங்களையும் கற்றறிந்தனர். ராக்ஷஸர்கள், காந்தர்வர்கள், அப்சரஸுகள், நாகார்கள் என உத்திரகுரு, வங்காளம் போன்ற பகுதிகள் அனைத்திலும் உறவுகளைப் பெறுக்கினர்.

நிதர்சனத்தை உணர்ந்து எதையும் தேவையில்லை என்று ஒதுக்காமல் கற்றறியுங்கள். தேவையான நேரத்தில் ஒப்பீடு செய்து பார்க்க எளிதாக இருக்கும். உறவுகளை வளருங்கள்.

==========

குழுவில் பெண்களின் பங்கேற்பு

கௌரவர்கள் கூடாரத்தில் பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார், த்ருதராஷ்டிரன், விதுரன், சகுனி, துரியோதனன், கர்ணன், துச்சாதனன் என அனைவருமே ஆண்கள். அதனால் முடிவெடுக்கும் செயலில் ஆளுமையுணர்வும் அதிகாரமுமே மேலோங்கியிருந்தது. இதனால் அதிகாரமும் பகைமையும் உட்பூசலும் அதிகரித்தது.

பாண்டவர்களுக்கு உதவியவர்கள் எல்லோருமே அவர்களின் மனைவி வீட்டைச் சார்ந்தவர்கள்.
  • குந்தி சொல்வதை வேதவாக்காக யுதிஷ்டிரன் மதித்தான். அவள் சொல்லே தன் தர்மமாக கருதினான்.
  • திரௌபதியோ பாண்டவர்கள் எதைச் செய்தாலும் அதற்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருந்தாள். பாண்டவர்களோடான அவளது உரையாடல்களைப் படிக்கையில் இப்போரில் அவளது முடிவுகள் எத்தனை தூரம் சென்று வெற்றிப் பாதையை காட்டியிருக்கின்றன என்றறியமுடிகிறது.
உங்கள் குழுவில் சமமான அளவில் (1:1 விகிதம்) பெண்களைக் கொள்ளுங்கள். இதனால் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்கும் போதெல்லாம் நிதானமாக உணர்வுபூர்வமாக ஆலோசனை கூற பெண்கள் இருப்பார்கள்.

========


இந்தப் படங்களில் மகாபாரத காலத்தில் காணப்பட்ட இந்தியா (நன்றி விக்கிபீடியா). படத்தை கிளிக் செய்தால் இன்னும் விபரமாகப் பார்க்கலாம்.








.