பாகம் 2
பாகம் 3
4. அலுவலகத்தில் தொல்லைகளை எப்படி சமாளிப்பது?
குடும்பம் மற்றும் குழந்தைகளைச் சமாளிக்க இரவு நேரப் பணிகளைப் பெண்கள் இப்போதெல்லாம் அதிகம் தேர்ந்தெடுப்பதாகத் தெரிகிறது. இரவில் மட்டும் இல்லாமல் பொதுவான அலுவல் நேரங்களில் கூட சக பணியாளர்களால் வரக்கூடிய பாலியல் ரீதியான தொந்தரவுகளை எப்படிச் சமாளிப்பது?
எதிக்ஸ் (நன்னெறி) பற்றிய உயர்ந்த கோட்பாடுகள் (நிஜமாகவே) கொண்ட ஒரு அலுவலகத்தில் மார்கெடிங் பிரிவில் பணி புரியும் போது ஏறத்தாழ ஐந்து வருடம் தொடர்ந்து பெண்களுக்கான CSR மற்றும் அலுவகத்தில் பணிபுரியும் பெண்கள் சார்பாக coordinate செய்யும் பொறுப்பு அளிக்கப் பட்டது. அப்போது தான் அலுவலகத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவுகள் பற்றி அறிய முடிந்தது.
ஒருமுறை மேனேஜர் லெவெலில் இருக்கும் பெண் ஒருவள் தன்னுடைய பாஸ் சாரா லீ உள்ளாடைகளின் இணைய தளம் ஒன்றை தன் கம்ப்யூட்டரில் ஓபன் செய்து வைத்துக் கொண்டே பேசினார் என்றாள். அவளிடம் நீ இதை பற்றி உடனேயே எதிக்ஸ் டீமிடம் சொல்லிவிடு, பேசாமல் இருக்காதே என்று சொன்னேன். அப்ரைசலில் கை வைப்பான் ராஸ்கல் என்று சொல்லி பேசாமல் இருந்துவிட்டாள். சில மாதங்கள் கழித்து இவள் பிஹெச்டி படிப்புக்காக கைட் (guide) தேவை என்றும், பிலானி பிட்ஸ்சில் படிக்க அலுவலகத்தின் அனுமதி தேவை என்றும் அவரை அணுகிய போது "if it is a guy it is money, you may pay me in kind" என்று கூறியதும் அதிர்ந்து போய் அழுதே விட்டாள். பின் எதிக்ஸ் போய் என்குயரி எல்லாம் செய்து அவரைப் பதவி நீக்கம் செய்தார்கள். 98-டிலேயே ஏறத்தாழ ஒன்றரை லட்சம் மாதம் சம்பளம் வாங்கியவர், திறமையானவர், சின்ன சறுக்கலில் கிட்டத் தட்ட மூன்று வருடம் வேலை இல்லாமல் இருந்தார். எதிக்ஸ் மேனேஜர் அவளிடம் முதலில் கேட்ட கேள்வி "இத்தனை நாள் நீ ஏன் பொறுத்துக் கொண்டாய்" என்பதுதான்.
அதே போல் இன்னொரு பெண்ணும் இருந்தாள். அவளிடம் பேசவே எல்லோரும் பயப்படுவார்கள். வாயில் அத்தனை நாராசமான வார்த்தைகள் சரளமாகக் கொட்டும். ஆனால் மற்றவர்கள் அவளைப் பற்றி புறம் பேசுவதைக் கேட்டுவிட்டால் காது கூசும்.
இப்படியும் பேசாமல் இருக்க வேண்டாம் அப்படிப் பேசிக் கொண்டும் இருக்க வேண்டாம்.
எப்படிப்பட்டத் தொந்தரவுகள் வரலாம்?
- அவசியம் இல்லாத போதெல்லாம் உங்களை தன் காபின்/அறைக்கு அழைத்து ரொம்ப நேரம் அலுவலகம்/வேலை சம்பந்தமே இல்லாத பேச்சுக்கள் பேசுதல்
- உங்கள் உடை, அலங்காரம், ஹேர் ஸ்டைல் பற்றிய அவசியமில்லாத, அநாகரீகமான கமெண்ட்களைத் தருவது உதா: இந்த ட்ரஸில் 'சிக்' என்று இருக்கீங்க, இந்தத் தோடு உங்கள் காதை ரொம்ப அழகாக காட்டுகிறது, தலை முடியை லூசா விட்டா உங்கள் கழுத்தை மறைக்கிறது போன்றவை
- நோட்டம் பார்த்தல்: மொபைல் / லேப்டாப் / அலுவலக கம்ப்யூட்டர்ரில் ஆபாசப் படங்களை மினிமைஸ் செய்து வைத்து விட்டு இந்த டாகுமென்ட் சரியா இருக்கான்னு பாருங்க என்று உங்களை ஆபரேட் செய்ய வைத்துப் பார்ப்பது
- அலுவலக ஈமெயில் மூலமாக உடல் உறவு சம்பந்தமான செய்திகளை இன்டர்நெட் பக்கங்களில் இருந்து காப்பி-பேஸ்ட் செய்தோ அல்லது லிங்க் இணைத்தோ அனுப்பி, உங்களை ஆழம் பார்ப்பது. முதலில் இம்மாதிரியான மறைமுகச் செய்திகளை அனுப்புவார்கள். நீங்கள் பேசாமல் விட்டு விட்டால் இது பெரியளவில் தொடரும். (இவற்றை எக்காரணம் கொண்டும் அழித்து விடாதீர்கள்)
- அவசியமே இல்லாமல் விடுமுறை நாட்களில் வரச்செய்வது அல்லது அலுவலக நேரம் முடிந்தும் காக்க வைப்பது.
- ஹஸ்பண்ட் வீட்டுக்கு எத்தனை மணிக்கு வருவார்?, முடியலைன்னா குடும்பத்தோட இருத்துக்க வேண்டியதுதானே என்கிற ஒரு மாதிரியான பேச்சுக்கள்
- திறமையால் முன்னுக்கு வந்திருந்தால் கூட சக பணியாளர்களின் "என்ன செஞ்சாளோ" என்பது மாதிரியான பேச்சுக்கள்
- பைல் வாங்குவது போலவோ, கம்ப்யூட்டர் திரையைத் தொடுவது போலவோ திடீரென்று பின்னால் இருந்து கன்னத்தை உரசுவது மாதிரி கை நீட்டுதல்
- flirt-செய்ய முயற்சித்தல்
- லிப்ட்டில் கூட்டமே இல்லாத போதும் உரசி நிற்பது
- அறை வாசலில் அடைத்து கொண்டு நின்று கொண்டே உங்களை போகச் சொல்வது
ஹிந்தியில் ஐத்ராஸ் (Aitraaz) என்ற சினிமா. அதில் பெண் மேனேஜர் (பிரியங்கா சோப்ரா) தனக்கு கீழ் பணிபுரியும் (அக்ஷய் குமார்) ஒருவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பாள். அவன் மறுக்கும் போது அவன் மீதே குற்றம் சாட்டி பணி நீக்கம் செய்ய முற்படுவாள். அவன் நீதி மன்றத்தில் வழக்கு போடும் போது மீடியா முதல் அவனது வக்கீல் வரை "அழகாக இருக்கிறாள். என்ஜாய் செய்து விட்டுப் போவதுதானே" என்பார்கள். அவன் "எனக்கென்று ஒரு மரியாதை கிடையாதா" என்று கேட்பான். பின் அவன் மனைவியே அவனுக்காக வாதாடி ஜெயிப்பது போல முடியும் இத்திரைப்படம். இந்த சினிமாவைப் பார்த்த பின், இது குறித்த சட்டம் பற்றி என் அப்பாவிடம் பேசிய போது ஆண்களைப் பாதுகாக்க சட்டங்கள் ஏதும் இல்லை என்றார்.
====================
இருந்தாலும் அதிகளவில் பெண்களைக் குறித்தே இது மாதிரியான தாக்குதல்கள் நிகழ்வதால், எங்கள் அலுவலகத்தில் ஒரு சின்ன சர்வே எடுத்தோம். அதில் வந்த பதில்களைப் பார்க்கையில் நிஜமாகவே இன்னும் பல ஆண்களும் பெண்களும் மாறவே இல்லை என்பது அப்பட்டமாக உள்ளங்கை நெல்லிக்கனி போல வெளிச்சமானது. அதில் பெரும்பான்மையோர் டிக் செய்திருந்தவைகளில் கீழே இருப்பவை 76% மேல் இருந்தன. இந்த சர்வேயில் பதில் அளித்தவர்கள் 56% ஆண்கள் 44% பெண்கள்
- பெண்கள் தன் குடும்பத்தில் உள்ள ஆண்களின் சம்பாத்தியம் போதாமல் இருப்பதாலேயே வேலைக்கு வருகிறார்கள்
- பெண்கள் தன் Career வளர்ச்சியைப் பற்றியதான தனிப்பட்ட முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது.
- பெண்களுக்கு வீட்டிலிருந்து பணி புரியும் வாய்ப்பு கிடைத்தால், வளர்ச்சி ஏதும் இல்லாமலோ(அ)குறைந்த சம்பளமாக இருந்தால் கூட ஒத்துக் கொண்டு போக வேண்டும்.
- பெண்கள் டைம்-பாஸ் செய்யவே வேலைக்கு வருகிறார்கள்.
- பெண்கள் தன் உடைகள் மூலம் தன் பாலியல் ஆசைகளை / ஒப்புதலை வெளிப்படுத்துகிறாள்
- வீட்டை விட்டு தாண்டி வந்து விட்டால் அவள் "எதற்கும்" தயாராக இருக்கிறாள்
- அலுவலகம் செல்லும் போதே 'இப்படி எல்லாம் இருக்குமோ' என்று பயந்து கொண்டே போக வேண்டாம்.
- சகஜமாக பழகுகிறேன் பேர்வழி என்று எல்லை மீறி பழக வேண்டாம். வேலை சம்பந்தம் அல்லாத பேச்சுக்களை யாரிடமும் அலுவலகத்தில் பேசாதீர்கள்.
- குடும்ப விஷயங்களை பற்றியோ, கணவன் / மாமியார்-மாமனார் பற்றியோ இல்லை குடும்பத்தில் யாரை பற்றியுமே, தோழியாக இருந்தாலும் கூட, பொதுவில் புலம்பாதீர்கள்.
- மீட்டிங் நடக்கும் போது இரட்டை அர்த்த ஜோக்குகள், மற்றவர்கள் நிஜமாகவே வாய் தவறி உச்சரித்து விட்ட வார்த்தைகள் போன்றவற்றுக்கு சிரிக்காதீர்கள். இது கஷ்டம் தான், இருந்தாலும், ஒரு பெண்ணாக இருப்பதால், பொதுவில் உங்கள் கெளரவம் இதனால் நிச்சயம் குறையும். குறைந்த பட்சம் வாய்ப்பு தேடுபவர்கள் கண்ணில் நீங்கள் சிக்குவீர்கள்.
- அலுவலகத்தில் காதல், நட்பு என்று எது இருந்தாலும், அவர்களோடு அடித்து/தொட்டுப் பேசுவது, கை கோர்த்து நடப்பது, கட்டிப் பிடிப்பது, டேபிள் மீது உட்கார்ந்து பேசுவது, நாற்காலியின் கைப்பிடியில் அமர்வது, அளவுக்கு மீறி நேரம் செலவிடுவது, ஒரே அலுவலகப் பேருந்தில் சென்றால் மடியில் அமர்ந்து செல்வது என்றெல்லாம் செய்யாதீர்கள். உங்கள் மரியாதை இதனால் குறையும். யாராக இருந்தாலும் வெறுமே கைகுலுக்குவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் formalஆக இருங்கள்.
- அலுவலகப் பார்டிகளில் மது அருந்தாதீர்கள். social drinking என்றாலும் அலுவலகத்தில் நடக்கிறது என்றால் soft drinks மட்டும் தேர்ந்தெடுங்கள்.
- அலுவலகத்தில் சில நேரம் மாறுவேடப் போட்டிகள் என்றெல்லாம் team building கூத்துக்கள் நடக்கும். அப்போது மற்றவர் கற்பனைக்கு எதையும் விட்டு வைக்காமல் எல்லாம் தெரியும் படியான அலங்காரங்களைச் செய்து கொண்டு போகாதீர்கள். கேலிக்கூத்தான உடைகளை (ஸ்கூல் யூனிபார்ம், பிகினி ஆடைகள் போன்றவை) / வேஷங்களை செய்து கொள்ளாதீர்கள். உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வது போலாகும்.
- நீங்கள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாகி இருக்கிறீர்கள் என்று உணர்ந்தால், அதிரடியாக எந்த முடிவும் எடுக்காதீர்கள். வேலையை ரிசைன் செய்யவும் வேண்டாம். நீங்கள் சொன்னதை வைத்து மட்டும் யார் மீதும் ஆக்ஷன் எடுக்க முடியாது. அவர் உங்களை தொந்தரவு செய்கிறார் என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் தேவை.
- அலுவலகத்தில் இது குறித்த அலுவர்கள் தவிர வேறு யாரிடமும் இப்பிரச்சினை பற்றி பேசாதீர்கள்.அவர்கள் இது போன்ற விஷயங்களை நாசுக்காக கையாளவும், அவசியம் என்றால் அதிரடி முடிவுகள் எடுக்கவும் அனுபவம் பெற்று இருப்பார்கள். அதுவும் தவிர, மற்றவர்களிடம் பேசுவதால் குறிப்பிட்ட நபரை பற்றிய மரியாதையான பொது இமேஜ்-ஜை நீங்கள் தகர்ப்பதோடு மட்டும் இல்லாமல் உங்கள் மீதே அவதூறு திரும்பி விடவும் வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட நபர் அதிகாரம் படைத்தவராகவும் இருந்து விட்டால் ஆதாரங்களை அழித்து விடவும் முடியும். அல்லது ஆதாரங்களை உங்களுக்கே எதிராக மாற்றவும் முயற்சிக்கலாம்.
- உங்கள் சார்பாக யாரையும் பேசும்படியோ, உங்களுக்கு பதிலாக முறையீடு செய்யும்படியோ, ஆதரவு கேட்டோ சக பணியாளர் யாரிடமும் கேட்காதீர்கள். உங்களை "கம்ப்ளைன்ட்ஸ்" டிபார்ட்மென்ட் ஆக பார்க்கும் நிலையும் ஏற்படும்.
- முறையீடு செய்யும் முன் ஒரு முறை சம்பந்தப் பட்ட நபரிடம் நீங்களே நேரடியாக "நீங்கள் இவ்வாறு செய்வது சரியில்லை" என்பதை அலுவலக நேரத்தில், அலுவலகத்திற்குள் சொல்லி விடுங்கள். "சார். நீங்கள் எதிர்பார்ப்பது போன்றான பெண் நான் இல்லை." என்றும் சொல்லுங்கள்.
- உதாரணத்திற்கு, ஒரு மீட்டிங் நடக்கும் அறைக்குள் "கம் ஆன் பேபி. இட்ஸ் யுவர் டர்ன் (come on baby. it's your turn)" என்று கூறிக்கொண்டே உங்கள் முதுகில் தட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உடனேயே மெல்லிய குரலில் அவருக்கு மட்டும் கேட்குமாறு "ஐ நோ யு டோன்ட் மீன் இட். பட் ப்ளீஸ் கீப் யுவர் ஹான்ட்ஸ் ஆப். ஐம் பீலிங் அன்கம்பர்டபிள் (i know you don't mean it, but please keep your hands off. i am feeling uncomfortable") என்று உறுதியான தொனியில் அவர் கண்களைப் பார்த்துக் கூறுங்கள். முக்கால்வாசி அவரது முயற்சிகள் இதோடு நின்று விடும். இல்லை என்கிற பட்சத்தில் மேல் முறையீடு செய்யுங்கள்.
- நீங்கள் அவரது செய்கைகளால் பயந்தே போனாலும் உங்கள் நடுக்கத்தை வெளிக் காட்டாதீர்கள். உங்கள் தன்னம்பிக்கையையும் தெளிவையும் உங்கள் செய்கைகளில் காட்டுங்கள்.
- நீங்கள் அவருக்கு உடன் பட மாட்டீர்கள் என்று (அல்லது) அவரது நோக்கம் நிறைவேறாது என்று தெரிய ஆரம்பித்த உடனேயே"நல்லவர்" போல உங்களைச் சமாதானம் செய்ய முயற்சிப்பார்கள். மயங்கி விட வேண்டாம். "நீங்கள் அப்படிச் செய்யாவில்லை என்று நம்புகிறேன். ஆனால் நமக்குள் சில வரைமுறைகளையும் எல்லைகளையும் நியமித்துக் கொண்டால் எதிர்காலத்தில் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று உறுதியாகக் கூறுங்கள். இவர்களால் நிச்சயம் உங்களோடு "நட்புடன்" பழகவே முடியாது.
- "எனக்கென்று குடும்பம் இருக்கிறது" என்று உங்களிடம் புலம்பி உங்களை இம்ப்ரெஸ் செய்ய முயற்சிப்பான். கலங்கி இறக்கம் காட்டாதீர்கள். "நீங்கள் உங்கள் எல்லைக்குள் இருந்தால் நான் முறையீடு செய்ய மாட்டேன்" என்பதை அவர் உணரும்படி கூறுங்கள்.
- யாரும் வேலை இழப்பையோ, அவமானத்தையோ விரும்புவதில்லை. உங்கள் இருவருக்குள் இப்பிரச்சினையை யாருக்கும் பாதிப்பு இல்லாமல் முடித்துக் கொண்டால் ரொம்பவே நல்லது.
- இதற்குப் பிறகும் உங்களைத் தொல்லை செய்தால், அலுவலகத்தில் பொதுவில் சிறிது சத்தமாக அவரது செய்கையை உரத்துக் கூறி அவரை நேரடியாகக் கண்டியுங்கள். உதா: உங்கள் இடுப்பில் கைவைத்து நகரும்படி கூறினார் என்று வைத்துக் கொள்ளுங்கள். "சார். கீப் யுவர் ஹான்ட்ஸ் ஆப்" என்று அருகிருக்கும் சக பணியாளருக்கு கேட்கும் படி கூறுங்கள். இதனால் நீங்கள் முறையீடு செய்யும் போது சாட்சிகள் கிடைப்பார்கள். அல்லது அதற்குப் பிறகு அவர் பின்வாங்கவும் வாய்ப்புக்கள் இருக்கிறது. அவர் பின் வாங்கினாலும் உடனடியாக இதைப் பற்றிய முறையீடு HR-இல் செய்து விடுங்கள். இல்லை என்றால் அவரை நீங்கள் வேண்டுமென்றே களங்கப் படுத்தியதாக பேச்சை மாற்றி விடும் அபாயமும், உங்கள் மரியாதையைக் குலைக்கும் வதந்திகளைப் பரப்பவும் தயங்கமாட்டார்.
- வேறு வழி இல்லையென்றால் முறையீடு செய்யுங்கள். முறையீடு செய்யும் போது உணர்ச்சி வசப்பட்டோ, புலம்பியோ, அழுது எல்லாம் செய்யாதீர்கள். நேரடியாக தெளிவான வார்த்தைகளில் உங்களை பாலியல் ரீதியாகப் புண்படுத்திய குறிப்பிட்ட ஒரு சில ஆதார பூர்வமான, உங்களை அதிர்ச்சிக்குஉள்ளாக்கிய நிகழ்வுகளை மட்டும் கூறுங்கள். "என்னை late-sitting பண்ணச் சொன்னார்" என்பது vague ஆக இருப்பதால் சில நேரம் எடுபடாமல் போகலாம்.
- இப்படிப் பட்ட நபர் / அலுவலர் உங்களிடம் மட்டும் இவ்வாறு நடந்து கொண்டிருக்க மாட்டார். உங்கள் சக பெண் பணியாளர்களிடம் (கம்ப்ளைன்ட் கொடுத்த பிறகு) அவரைப் பற்றி விசாரியுங்கள்.
- அவருக்கும் மேலதிகாரியிடம் இது பற்றி பேசுங்கள்.
- ஒரு வேளை தொல்லை கொடுத்த நபர் இது பற்றி, தன் மேலதிகாரியிருக்கும்போதே, நேருக்கு நேர் உங்களிடம் பேசும்படி அழைத்தால், பயப்பட வேண்டாம். உள்ளது உள்ளபடி தெளிவாகக் கூறுங்கள்.
- இது போன்றவர்கள் வேண்டுமென்றே உங்களைக் கோபப் படுத்தும், அவமானப் படுத்தும் வார்த்தைகளை பேச்சினூடே கூறுவார்கள். கவனம். உணர்ச்சி வசப் பட்டால் இழப்பு உங்களுடையதாகி விடும்.
- இது எல்லாவற்றிற்கும் எடுபடவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடலாம். இங்கே தர்மசங்கடமான பல சூழல்களையும், கேள்விகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
- தொல்லை கொடுப்பவன், நீங்கள் எந்த உடை அணித்திருக்கிறீர்கள், நீங்கள் தைரியசாலியா, பணிந்து விடுவீர்களா என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. அவன் நோக்கமெல்லாம் "வாய்ப்பு". அவன் எல்லாப் பக்கமும் அம்புகளை எய்துகொண்டே இருப்பான். கிடைத்தால் லாபம் கிடைக்காவிட்டால் நஷ்டமில்லை என்பதே அவன் துணிச்சலுக்கு காரணம். என்னைச் சீண்டினால் உனக்கும் நஷ்டம் என்று தெளிவு படுத்தாமல் ஒதுங்கிப் போகாதீர்கள். "சண்டைக் கோழி" என்ற பெயர் வந்தாலும் பரவாயில்லை.
- ஒருவன் தவறானவன் என்பதற்காக உங்கள் வேலையை விட்டு விடாதீர்கள். இருந்தாலும் உங்கள் ரெசூம் (resume) ஒன்றையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இப்போராட்டத்தில் தோற்றும் கூடப் போகலாம். ஆனால் உங்கள் மூக்கையும் தாண்டி உங்களைத் தொட முயற்சித்ததை எதிர்த்து எழுந்து நின்று குரல் கொடுத்தீர்கள் என்று உங்கள் சுய மரியாதையோடு தலை நிமிர்ந்து வாழுங்கள். பயந்து பயந்து தலை குனிந்து வாழ்வதெல்லாம் வாழ்க்கையா?
இருந்தாலும் மீண்டும் சொல்கிறேன், வருமுன் காப்பது நலம். எக்ஸ்போசர் (exposure) என்பது தொழிலுக்கு மட்டும்தான் அவசியம். உடலுக்கு அல்ல. அலுவலகத்திற்கு மற்றவர் பார்க்கும்படியான உடைகளை அணிந்து போனால், மற்றவரின் பார்வையைப் பற்றியும் கவலைப் படக்கூடாது. எந்த உடை அணிந்தாலும் அது உங்கள் கௌரவத்தை பாதிக்காதவாறு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அணிந்திருக்கும் உடைக்கும் மற்றவர் உங்களிடம் நடந்து கொள்ளும் முறைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பிரச்சினை என்று ஆகும் போது மற்றவர்களின் பார்வை "நீ பேசறியா" என்கிற மாதிரி உங்கள் உடைகள் மேல் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கடைசியாக அடுத்து: தாக்குதல் / கற்பழிப்பு நடந்து விட்டால்?
.
12 comments:
சொல்றதுக்கு எதுவுமே இல்ல வித்யா ஜி...இத விட பக்காவா சொல்றதுக்கு எதுவும் இல்லை .. நிதர்சனத்த புரிஞ்சிக்காம உரிமை என்று சொல்லி உளைச்சலுக்கு ஆளாகாம இருக்கறதுதான் இன்றைய சூழ்நிலைக்கு நல்லது. அவன் பாத்தா பாக்கட்டும் i dont care என்று சொல்பவர்கள் நிறைய விஷ செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி போஷாக்காக வளர்க்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். போண்டியாகி நம்ம பீச் ல திரியலாம் ஆனா நம்ம பீச் போண்டி கிடையாது :) புரிஞ்சா சரி.
excellent post...:)
சொல்வதை Crystal Clear-ஆ சொல்லியிருக்கீங்க.
வேளைக்கு செல்லும் பெண்கள் நிச்சயம் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் அனைத்தையும் சூழ்நிலையையும் அதை நேர்கொள்ளவேண்டிய முறையையும் கூறி மிகத்தெளிவாக விளக்கியிருப்பது சிறப்பு.
அடுத்த பதிவு மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்
ஆழமான அலசல் ..
உங்க தலைப்பை கடன் வாங்கி நான் ஒரு இடுகை போடலாமுன்னு இருக்கேன்.
மிக அழகான சொல் முறை தீர்க்கமான பார்வை பின்னிருக்கும் உழைப்பு
விதூஷ் சபாஷ் விதூஷ்
அருமையிலும் அருமை வித்யா. வாவ்
நிறைய உழைப்பு
நிறைய தன்னம்பிக்கை
வாழ்த்துகள்.
கடுமையான உழைப்பு தெரிகிறது. கலாச்சார காவல் சிந்தனை இல்லாமல் இருந்தால் குற்றவாளிகள் மீது எளிதில் பெண்கள் குற்றம் சுமத்துவார்கள். ஆனால் நம் சமூகம் பட்டம் கட்டிவிடுமே.
அனைவருக்கும் நன்றி.
பலாபட்டறை, நவாஸ், நந்தா, நேசமித்ரன், சின்ன அம்மிணி, ஜமால், குடுகுடுப்பை - ரொம்ப நன்றி.
நசரேயன் (தாராளமாய் இடுங்கள் - காமெடி பதிவா? :))
அசத்தல். பலரையும் சென்றடைய வேண்டிய, அச்சில் ஏற வேண்டிய கருத்துக்கள்.
உங்கள் கட்டுரைகள் மிகவும் அருமையாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. இங்கே வன்புணர்வு ஆதரவு மையத்தில் நடக்கும் சில கவுன்சிலிங் முறைகள், குழந்தைகள் மீதான வன்முறை பற்றியும் முன்பு நான் பல கட்டுரைகள் எழுதி இருந்தேன்.வன்முறையை கண்டறிவது பற்றியும் வன்முறையாளர்களி தெரிந்து கொள்வது பற்றியும் அதிகம் எழுதி இருந்தேன். அதில் மேலோட்டமாக சொன்ன முக்கியமான ஒன்றை (தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்)) மிகவும் அழகாக விவரித்து எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
\\சொல்றதுக்கு எதுவுமே இல்ல வித்யா ஜி...இத விட பக்காவா சொல்றதுக்கு எதுவும் இல்லை .. \\
கருத்துக்களை தெளிவாகவும், ஆணித்தரமாகவும் விளக்கியிருக்கிறீர்கள். அருமையான பதிவு.
Post a Comment