பெண்ணே நீயும் பெண்ணா - 3

பாகம் 1
பாகம் 2

இந்த பதிவில் குழந்தைகள் என்று குறிப்பிடப் பட்டது பதினைந்து வயது வரையான குழந்தைகள் (இரு பாலாரும்) பற்றியது.

ஆபத்து வரப் போகிறது / ஒருவர் வரம்பு/எல்லை மீறி நடக்கிறார் என்று எப்படி அறிவது?

ஊடகங்களில் (media) காண்பது போல, வன்முறையாளன் பார்ப்பதற்கு கொடூரமாகவோ, பயங்கரமாகவோ இருப்பதில்லை. மிக மிகச் சாதாரணமாக இருப்பவர் (ஆணோ பெண்ணோ) கூட குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைச் செய்பவர்களாக இருக்கலாம். (இப்பதிவில் வன்முறையாளன்/அவன்/இவன் என்று சொல்லியிருந்தாலும் அது இரு பாலாரையுமே குறிக்கிறது)
 • திடீரென்று அன்னியர் உங்களிடம் நட்பாக இருக்க முயற்சித்து, உங்கள் குடும்ப விபரங்கள் போன்றவற்றில் எல்லாம் கருத்து சொல்லி, "இயல்புக்கு" மீறிய நட்பு காட்டினால், அவர் மூலம் நிச்சயம் ஆபத்து நேரலாம். அவனது இலக்கு நீங்களோ, உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளோ, உங்கள் குடும்பத்தில் ஒருவராகவோ கூட இருக்கலாம். "தாய் தந்தையின் அன்பைத் தவிர உலகில் எதுவுமே இலவசம் இல்லை" என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
 • உங்கள் நம்பிக்கையைப் பெற முயற்சித்தல். சாதாரண நண்பருக்கும் இவனுக்குமான முயற்சிகளின் வித்தியாசம் நிச்சயம் ஒவ்வொருவரின் உள்ளுணர்வுக்குத் தெரியும். அப்படிப் பட்டவரை உடனடியாக விலக்கி விடுங்கள். நீங்கள் கெட்டவராக ஆனால் கூட பரவாயில்லை. உங்கள் உள்ளுணர்வுக்கு ஒருவரது "நம்பிக்கை பெறும்" முயற்சிகள் அசாதாரணமாக இருந்தால் அவருடனான தொடர்புகளை முற்றிலும் துண்டித்து விடுங்கள்.
 • உணர்வுகளைத் தூண்டும் உடல் பாகங்களைத் தொடுதல்
 • குழந்தைகளை மிரட்டுதல், பணிய வைத்தல் போன்ற செயல்களை அடிக்கடிச் செய்வான் - அவன் எல்லை மீறும் போதும் இதே தொனியில் மிரட்டி யாரிடமும் சொல்லாமல் இருக்கும் படி பயமுறுத்துவான்
 • அளவுக்கு மீறி "நல்லவர்கள்"ஆக உங்களிடமோ உங்கள் குழந்தைகளிடமோ நடக்க முற்பட்டால், impress செய்ய முயற்சித்தால்
 • "உங்கள் குடும்பத்தில் ஒருவன்" ஆக தீவிர முயற்சி செய்வான்
 • தன் வயதிற்கு சமமில்லாதவர்களோடான நட்பு, முக்கியமாக குழந்தைகளிடம் நட்பு
 • பெற்றோர் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீற சொல்லித் தருவான் - உதா: "அவனுக்கு இருமல் இருக்கிறது சாக்கலேட் சாப்பிடக்கூடாது" என்று நீங்கள் சொல்லி இருந்தால் மறுநாளே சாக்லேட் ஐஸ்கிரீமோடு வருவான்
 • குழந்தைகள் / நீங்கள் நிறுத்தச் சொன்ன பிறகும் கிச்சு-கிச்சு மூட்டுதல், தூக்கிப் போட்டு விளையாடுதல், உலுக்குதல் போன்றவை
 • குழந்தையை / உங்களைத் தனிமையில் சந்திப்பதை விரும்புவான்.
பாலியல் வன்முறைக்கு ஆளாகி இருக்கிறார்கள் அல்லது குழந்தைக்கு ஆபத்து என்று எப்படி அறிவது?

தாக்குதலுக்கு ஆளான குழந்தைகள் / பெண்கள் மீதான உடல் / மனம் நல மற்றும் மற்றவரோடு பழகும் தன்மை ஆகியவற்றில் பெருமளவில் எதிர்மறையான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

குழந்தைகளுக்கு வன்முறையாளன் பாலியல் சம்பந்தமான புகைப் படங்கள், திரைக் காட்சிகள் போன்றவற்றைக் காண்பித்து வன்முறைக்கு ஆளாக்குகிறான். நேரடியாகத் தொடவே தொடாமல் இப்படி முறைகேடான படங்களைக் கட்டுவதும் வன்முறைதான். உடலில் நேரடியாக தாக்கப் படுவதைவிட, இது போன்ற மன ரீதியான, உணர்வு ரீதியான தாக்குதலுக்கு ஆளாகிய குழந்தைக்கு அதன் பாதிப்பும் விளைவும் அவர்கள் எதிர் காலத்தை பாதிக்கும் அளவுக்கு வன்மையானது. தன் மீது தாக்குதல் நடந்ததற்கு தானே காரணம் என்று கருதி அவமானத்தாலும், குற்ற உணர்வாலும் சுருங்கி போகிறது குழந்தை. இத்தகைய மனஉணர்வை உடனடியாக கண்டறிய குழந்தையின் தாயால் மட்டுமே முடிகிறது.

பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று குழந்தைக்குச் சொல்லத் தெரியாது. ஆனால் பெற்றோராகிய நாமும் அதைக் கண்டறிய தவறி விட்டோமானால் குழந்தைகள் தனித்துப் போய் "தனக்கு ஒரு துன்பம் ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி பெற்றோர் கவலை படவில்லையே" என்கிற மாதிரியான "ஒதுக்கப்பட்ட" உணர்வுக்கும் ஆளாகி எதையும் பகிரவே மாட்டார்கள். இந்த மாதிரி நிலையிலேயே அவர்கள் நேரடித் தாக்குதலுக்கும் ஆளாகிறார்கள்.

வன்முறைக்கோ / தாக்குதலுக்கு ஆளான குழந்தைகள் தன் உணர்வுகளை தகுந்த முறையில் வெளிக்காட்டத் தெரியாமல் இருப்பார்கள். வழக்கத்திற்கு மாறாக தனிமையில் அமர்வது, அமைதியாக இருப்பது, திடீரென்று கோபம், சுவற்றில் முட்டிக் கொள்வது, முகத்தில் தானே அறைந்து கொள்வது போன்ற முரண்பட்ட செயல்களை செய்வார்கள். (இச்செயல்கள் உதாரணம்தான்). வளர்ந்த குழந்தைகள் இந்த அவமான உணர்வைத் தவிர்க்க குடித்தல், சிகரட் பிடித்தல், டிரக் (போதை) உபயோகித்தல் போன்ற புதிய பழக்கங்களில் ஈடுபடுவார்கள். குழந்தை சாதரணமாக இல்லை என்றாலே உங்கள் கவனமும் ஆதரவும் அவர்களுக்குத் தேவை என்பதை உணருங்கள். அவர்களோடு பேசுங்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டால் சீராக்கவே முடியாத பிரச்சினையை உருவாக்கிக் கொள்வீர்கள்.

எதெல்லாம் குழந்தைகள் மீதான வன்முறை?

உடலில் காயங்களோ பாதிப்போ ஏற்பட்டால்தான் அது வன்முறை என்று ஆகாது. அவர்களுக்கு நிரந்தர பயமோ, இரவில் தூக்கம் இல்லாமல் பயந்துகொண்டு திடீர் திடீர் என்று முழித்துக் கொண்டு அழுதல் போன்றவை ஏற்பட்டால் கூட கவனியுங்கள். அவர்களை பேசத் தூண்டுங்கள். நேரடியான கேள்வி கேட்பதை விட, "இன்னிக்கி யார் யார் கூட விளையாடின", "ஸ்கூலில் என்ன செய்தாய்" என்பது போன்றான கேள்விகள் கேட்டு அவர்களைப் பதில் சொல்லத் தூண்ட வேண்டும். தினமும் மாலை எத்தனை மணியானாலும், அவர்களோடு அரை மணிநேரம் பேசுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் முக பாவங்களையும், புருவங்களையும், கண்களையும் அமைதியாக வைத்துக் கொள்வது கட்டாயம் அவசியம். குழந்தைகளை மடியில் அமர்த்திக் கொண்டோ, அல்லது அவர்கள் கையைப் பிடித்துக் கொண்டோ பேசுங்கள்.

அவர்கள் ஒரு வேளை கெட்ட வார்த்தையோ, தவறான பேச்சுக்களையோ, முரணான செய்தியையோ கூறினால் அப்போதே பேச்சை இடைமறித்து திட்டாதீர்கள். உங்களுக்கு கோபம் வந்தால் கூட பார்வையை வேறு எங்கும் மாற்றிக் கொண்டு, சிறிது நிமிடம் கழித்து அவர்களைப் பாருங்கள். அவர்கள் கூற வந்ததை முழுதும் கேட்டு விட்டு அவர்கள் முடித்த பின் நீங்கள் பேசுங்கள். "கெட்ட வார்த்தைகளைப் பயன் படுத்தினால் எனக்குப் பிடிக்கவில்லை, இனி இப்படிப் பேசாதே சரியா" என்று மட்டும் கூறுங்கள். அவர்களுக்குத் தெரியும் எது கெட்ட வார்த்தை என்று. அவர்களே யோசித்து திருத்திக் கொள்வார்கள்.பேச்சினூடே உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தி இருந்தால், உங்கள் உணர்வுகளை வெளிப் படுத்தாதீர்கள். கவனிக்க, குழந்தைகள் உங்கள் முகபாவத்தை ஒரே வினாடியில் வெகு சீக்கிரமே, எளிதில் கண்டுபிடித்துவிடும்.

தாயிடம் குழந்தை பேசிக்கொண்டிருந்தால் தந்தை குறுக்கே போக வேண்டாம். அதேபோல தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தால் தாய் குறுக்கே போகக் கூடாது. குழந்தைகள் தாயிடம் இதை பகிரவேண்டும், தந்தையிடம் இதைப் பகிர வேண்டும் என்று தீர்மானித்து வைத்திருப்பார்கள். நீங்கள் இருவரும் குழந்தைகள் இல்லாத சமயத்தில் ஒருவருக்கொருவர் பகிருங்கள். எந்நிலையிலும் உங்களிடம் பகிரப் படாத விஷயம் உங்களுக்குத் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ள வேண்டாம். இதனால் குழந்தைகளுக்கு உங்கள் இருவரின் மீதான நம்பிக்கையும் தோழமையும் அதிகரிக்கும். பெற்றோரிடம்(தந்தை / தாய்) நாம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம் என்ற பாதுகாப்பு உணர்வு ஏற்படும். அதிகப்படியான "லெக்சர்" குழந்தையை உங்களிடம் இருந்து விலக்கும். பெற்றோரை நம்பாமல் யாரைத்தான் நம்ப முடியும் அவர்களால்? உங்களிடம் பயமோ விலகி செல்லும் எண்ணமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்காகத்தானே இந்த ஓட்டமும் உழைப்பும். அவர்கள் தவறான கரங்களில் சிக்காமல் இருக்க உங்கள் இடையேயான பேச்சுக்கள் நிச்சயம் உதவும். குழந்தைகளுக்கும் உங்கள் மீது நம்பிக்கை வளரும்.

குழந்தைகளின் தேவைகளை கவனிக்காமல் இருப்பது, அவர்களின் உடல் நலம் பற்றிய அக்கறை கொள்ளாமல் இருப்பது, பொதுவிடங்களில் (அ) மற்றவர்கள் முன்னால் குழந்தைகளைத் திட்டுவது, அடிப்பது போன்ற செயல்களும் குழந்தைகள் மீதான வன்முறைதான்.இவை குழந்தைகள் தன்னைத் தானே மதிப்பில்லாதவராகவும், தேவை இல்லாத ஒரு ஜீவனாகவும் கருதும் படியான நிலைக்கு ஆளாக்கும்.

அன்னியர்கள்தான் குழந்தைகள் மீதான வன்முறையை செய்கிறார்கள் என்று நம்புகிறோம். நமக்கு நன்றாக தெரிந்த நபர்களே இது மாதிரியான செயல்களில் ஈடுபடலாம்.

முடிந்த வரை வீடு அல்லாத வெளியிடங்களில் அல்லது பொது இடங்களில், பெற்றோராகிய நீங்களே, குழந்தைகளை, அணைப்பது, தொட்டுப் பேசுவது, தோளில் கைப் போட்டு நடப்பது, முதுகில் தட்டுவது, முத்தம் கொடுப்பது (அ) உதடுகளில் முத்தமிடுவது, தொடையில் / பின்னால் தட்டுவது, அவர்கள் முன்னாலே உடை மாற்றுவது, அவர்கள் முன்னால் உங்கள் உடைகள் விலகி இருந்தாலும் "குழந்தைதானே" என்று கண்டுகொள்ளாமல் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். உங்கள் நட்பையும் அன்பையும் வீட்டுக் கூடத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான் குழந்தைகளும் அவ்வாறே நடக்கும். பொது இடங்களில் தன்னிடம் மற்றவர்கள் வேறுமாதிரி / மாறுதலாய் நடந்து கொள்ள முற்பட்டால், வித்தியாசத்தை உணர்வார்கள்.

பாலியல் வன்முறை (Sexual Abuse) உயிர் இழப்பை விடக் கொடுமையானது. குழந்தைகள் / பெண்கள் மீதான பாலியல் வன்முறை பற்றி பெரும்பாலும் வெளியே பேசப்படுவதில்லை. குற்றவாளிகளும் தண்டிக்கப் படுவதில்லை. குழந்தைகளும் பயத்தினாலோ, அதிர்ச்சியாலோ பேசாமல் இருந்து விடுகிறார்கள்.

எதெல்லாம் குழந்தைகளுக்கு (பதிமூன்று வயதிற்குட்பட்ட) எதிரான வன்முறை 

கவனிக்க: இதில் எல்லாமே பெற்றோரைக் குறித்தே இருக்கிறது. மூன்றாம் நபர் செய்யக் கூடிய பாலியல் வன்முறை இதில் வரவே இல்லை. இதில் உள்ளவை முறையாக பின்பற்றப் பட்டாலே, வெளியிலிருந்து வரும் முக்கால் வாசி ஆபத்துக்களைத் தவிர்க்கலாம்.
 • குழந்தைகளை முறையாக பராமரிக்காமல் இருப்பது - உணவு உடை கல்வி மற்றும் அரவணைப்பு.
 • தொடர்ந்து வைய்வது / திட்டுவது, குழந்தையைச் சீண்டி குழந்தைக்கு எரிச்சல்/அழுகை வரவழைப்பது, குழந்தையை அவமானப் படுத்துவது - உதா: "நீ முட்டாள்" "இது கூட தெரில", "வாயப் பாரு கிழவியாட்டம்", "ஐயோ உன் வாய் நாற்றம் அடிக்கிறது", படுக்கையிலேயே "இஸ்"ஸு போயிட்டியா - ஷேம் ஷேம்... போன்றவை
 • குழந்தைக்குப் பட்ட பெயர் வைப்பது, குழந்தையின் தாய்/தந்தையைப் பற்றி குழந்தைகளுக்கு எதிரேயே விமர்சிப்பது, குழந்தையை மற்றவரோடு ஒப்பிடுவது
 • குழந்தையிடம் "உன்னைப் போயி பெற்றேனே", "நீயெல்லா.....ம் " என்று இழுப்பது, "நீ தப்பு பண்ணிட்ட" "உனக்கு ஒண்ணுமே தெரியல", "நீ கெட்டவ/ன்" என்றெல்லாம் எதிர்மறையாகப் பேசுவது அவர்களை தனக்குதானே மதிப்பு குறைந்தவர்களாக உணரச் செய்யும்.
 • எப்போதும் "அதை செய்யாதே" அங்கே போகாதே என்று கட்டுப்படுத்திக் கொண்டே இருப்பது, குழந்தையிடம் உரத்த குரலில் கத்துவது, "இதை செய்-அதை செய்" என்று துரத்திக் கொண்டே இருப்பது, மிரட்டுவது போன்றவை
 • குழந்தை தவறு செய்து விட்டால் அதோடு பேசாமல் இருப்பது, தண்டனை கொடுப்பதாக நினைத்துக் கொண்டு அதை ஒதுக்கி வைப்பது (அல்லது) புறக்கணிப்பது போன்றவை.
 • மற்றவர் வன்முறைக்கு ஆளாகும்படி, taken for granted ஆக குழந்தைகளை விட்டு வைப்பது
பாலியல் வன்முறைக்கு ஆளாகி இருப்பதன் அறிகுறிகள்:
 • வழக்கத்திற்கு மாறாக பயம், தனித்திருத்தல், பதட்டப்படுத்தல், 'ஏதோ நடக்கப் போகிறது' என்று பதறுதல்
 • முரணான நடத்தை - அதிக கோபம், அளவுக்கு அதிகமான அழுகை, ஒரேயடியான அமைதி, ஏதோ யோசித்துக் கொண்டே இருத்தல், வெறித்த பார்வை
 • பெற்றோரிடம் / சக நண்பர்களிடம் சரிவர பேசாமல் இருத்தல்
 • எப்போதும் எச்சரிக்கை உணர்வோடும் பயத்தோடும் இருத்தல்
 • பெரியவர்களிடம் எரிச்சல் அடைதல் அல்லது பெரியவர்கள் போல நடத்தல், சில நேரம் இதற்கும் முரணாக விரல் சப்புதல், நை நை என்று நச்சரித்தல் போன்ற அதீத குழந்தைதனத்தோடும் நடத்தல்
 • குழந்தையின் உடலில் வித்தியாசமான சிராய்ப்புக்கள், அசாத்தியமான காயங்கள், வெட்டுகள், கீறல்கள்
 • அப்படிப்பட்டக் காயங்களை மறைத்துக் கொள்ளும்
 • நீங்கள் தொட்டால் கூச்சப் படுத்தல், வெட்கப் படுத்தல், திடுக்கிடுதல், பயப்படுதல்
 • நடக்கவோ, நிற்கவோ, உட்காரவோ கஷ்டப் படும்
 • வயதிற்கு முரணான செயல்களில் / பேச்சுகளில் ஈடுபடுவார்கள், தனக்கு தெரிந்ததை பேச்சின் மூலம் / நடத்தையின் மூலம் வெளிக்காட்ட முற்படுவார்கள்
 • வெளிப்படையான (உங்களுக்குத் தெரிந்த) காரணம் ஏதும் இன்றி ஒரு குறிப்பிட்ட நபரை வெறுப்பது, அவரைப் பார்த்து பயப்படுவது, அவரிடம் போகமாட்டேன் என்று சொல்வது, அவர் வந்தால் ஓடி ஒளிவது, முரண்டு பிடிப்பது போன்றவை
 • பதிமூன்று வயதிற்கு மேல் (பூப்படைந்த பெண் என்றால்) மாத விலக்கு நின்று போதல் / கர்ப்பமடைதல்
 • வீட்டை விட்டு வெளியேற முயற்சித்தல்/பெற்றோரைப் பிரிய முற்படுதல்

குழந்தைகளுக்கு பொதுவில் ஏற்படக்கூடிய (அ) வரக்கூடிய ஆபத்துக்கள்

பெண்/ஆண் குழந்தைகளுக்கும், பதின் பருவத்தில் உள்ள இரு பாலாருக்கும் என்னென்ன மாதிரியான ஆபத்துக்கள் நேரலாம்?
 • கீழே விழுதல், அடி படுதல் (Accidents)
 • தண்ணீரில் மூழ்கிப் போதல் (Drowning / Dangers related to water)
 • லிப்ட், நகரும் படிகள் கொண்ட எஸ்கலேட்டர் மற்றும் மெகா ஸ்டோர்களில் இருக்கும் கார்ட் என்ற சக்கரம் வைத்த கூடைகள் (Lift / Escalators / Shopping Carts), இவைகளால் கூடவா என்று நினைத்தால், பல குழந்தைகளுக்கு உயிரிழப்பு கூட இவைகளால் நேர்ந்திருக்கிறது என்பதையும் அறியுங்கள். முடிந்த வரை குழந்தைகளுக்கு நூல் நூலாக தொங்கும் ஆடைகள், காக்ரா சோலி துப்பட்டா போன்ற உடைகளை அணிவித்தோ அல்லது நீண்ட ஷூ லேஸ் கொண்ட ஷூக்கள், குதிகால் உயர்ந்த செருப்புக்கள் போன்றவற்றையோபோட்டு இது மாதிரி இடங்களில் கூட்டிச் செல்லாதீர்கள்.
 • டீ வீயில் வரும் ஜெடெக்ஸ் போன்ற கொடூரமான "குழந்தைகள் (?)" சேனல்கள், ரியாலிடி ஷோக்கள், எதிர்மறை சிந்தனை கொண்ட சினிமாக்கள், மெகாத் தொடர்கள், இணையம்(TV / Movies / Mega Serials / Internet)
 • காற்றடைத்த பீன் பாக், சோபாக்கள், மெத்தைகள், குதித்து விளையாடும் பவுன்ஸ் ஹவுஸ், காற்றடைத்த பொம்மைகள் (Air inflatable sofas / beds / bounce-houses / toys). இவை தவறுதலாக வெடித்து காயப்படுத்தும் /அதிர்ச்சியூட்டும் அல்லது நாசில் (nozzle) கழன்று காற்று பீய்ச்சிட்டு சோக் (choke) ஆகும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது
 • கதவுகள், அடித்து சாத்தும் கட்டுகள், மாடிப்படிகள், மொட்டை மாடி (Collapsible Gates / Stair Cases / Open Terrace)
 • மைக்ரோ வேவ் அவன், மிக்சி, கிரைண்டர், கூர்மையான முனை கொண்ட நாற்காலி மேஜைகள், ப்ரிட்ஜ் ஸ்டாண்ட், வாஷிங் மெஷின் ஸ்டாண்ட் போன்றவை (Kitchen / Furniture / Home appliances / musical instruments ) மற்றும் வீணை, வயலின், கிடார் போன்ற ஸ்ட்ரிங்/தந்திகள் உள்ள இசைக் கருவிகள் over-tune செய்து விடும் போது படாரென்று அறுந்து கண்கள், முகம் போன்ற இடங்களில் கீறி விடக் கூடும்.
 • இந்தியாவில் பல இடங்களில் இன்றும் சீட் பெல்ட் அணிந்து பயணிக்கும் பழக்கம் இல்லை. அதுவும் இல்லாமல் குழந்தைகளை முன்னால் அமர்த்தியே கூட்டிச் செல்கிறார்கள். அதே போல பத்து வயதுக் குழந்தைகள் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். சைக்கிளில் செல்வதானால் கூட முடிந்த வரை பாதுக்காப்பான சாலை விதிமுறைகளைப் பற்றியும், சாலையைக் கடக்கும் போது கொள்ளவேண்டிய கவனங்களையும் அறிவுறுத்த வேண்டும். பதினைந்து வயது வரை சைக்கிள் பயணமே சிறந்தது. (Vehicles such as Car & Two Wheeler)
 • தனிமை. பலருக்கு குழந்தை பேறே அரிதாகிப் போன கொடுமை ஒரு பக்கம் என்றால் "ஒரு குடும்பம் ஒரு குழந்தை" என்று ஒற்றை குழந்தைகள் அதிகமாகிப் போனதற்கு பொருளாதாரம் பெறும் பங்கு வகிக்கிறது. பெற்றோர் இருவரும் வேலைக்கு போய் விடுவதால் இன்னொரு குழந்தையையும் பார்த்துக்கொள்ள ஆளில்லாமலும் திண்டாடும் நிலை குறித்த பயமும் ஒரு பக்கம் வாட்டுகிறது.(Loneliness) குழந்தைகளோடு பேசுங்கள். வேலைக்கு செல்லாமல் இருக்கும் குடும்பத் தலைவிகள் இணைந்து play group ஒன்றை உருவாக்கி, (neighbourhood) அருகிருக்கும் குழந்தைகளை எல்லாம் ஒன்றிணைத்து விளையாட விட்டு கவனித்துக் கொள்ளலாம். இதற்காக அவர்கள் செலவிடும் நேரத்திற்கு மற்ற பெற்றோர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை அவருக்குக் கொடுக்கலாம். மூன்று மணி நேரமாவது மற்ற குழந்தைகளோடு விளையாடினால், குழந்தைகளின் தனிமையும் தீரும். பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது என்ற நிம்மதியும் கொள்ள முடியும். ஓய்வு நேரத்தில் இப்படியாக அந்தப் பெண்மணியும் கொஞ்சம் பொருளீட்ட முடியும்.
 • (Verbal Abuse) பார்த்துக்கொள்ள வரும் ஆயாவோ, அல்லது பல இடங்களில் பெற்றோரே கூட குழந்தைகளைக் கண்டபடி திட்டுவது நடக்கிறது (வசவுகள்). இதைச் செய்யாதீர்கள்.
ரோஜாப்பூச் செடிக் கதை நினைவிருக்கிறதா? ஒருவர் இரண்டு தனித் தனித் தொட்டிகளில் ரோஜாச் செடிகளை வளர்த்தாராம். ஒரு பூச்செடியை தினமும் "நீ அழகான பூக்களைக் கொண்டு வளர்வாய்" என்று சொல்லி சொல்லி தண்ணீர் ஊற்றுவாராம். இன்னொரு செடியில் "சனியன். உருப்படாம போ" என்று சொல்லி சொல்லி தண்ணீர் ஊற்றுவாராம். வாழ்த்திய செடி நன்றாக வளர்ந்ததாம். வசவு வாங்கிய செடி விரைவிலேயே வாடிப் போனதாம். குழந்தைகள் கண்டிப்பது தவறேதும் இல்லை. குழந்தைகளிடம் "இது என் வீடு. என்னிஷ்டம் போலத்தான் இருக்க வேண்டும். இல்லைனா நீ வெளியே போ", என்றோ கெட்ட வார்த்தைகள் திட்டியோ செய்வது அவர்களை பொய்யர்கள் ஆக்கும். வெளியாட்களிடம் ஆறுதல் தேடி சென்று தவறான கரங்களில் விழ வழி செய்யும்.

எச்சரிக்கை.

இணையத்தில் உள்ள குழந்தைகளின் / பெண்களின் புகைப்படத்தை உருமாற்றி இல்லாத புகைப்படங்களைக் கூட உருவாக்க முடியும். ஆகையால், பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடாதீர்கள்.

.

24 comments:

கண்ணகி said...

அருமையான பதிவு விதூ....

sathishsangkavi.blogspot.com said...

காலத்திற்கு ஏற்ற பதிவு..

Unknown said...

இந்தத் தொடரை நம்ம பேரண்ட்ஸ் கிளப்பிலும் போடலாமே வித்யா.

Unknown said...

புதுகைத் தென்றல்: பேரன்ட்ஸ் கிளப்பில் போட பனிக்கால நோய்கள் பற்றி இப்போதுதான் இன்னொரு பதிவும் எழுதி வருகிறேன். மொத்தம் மூன்று பகுதியாக இருப்பதை இரண்டாக சுருக்கி எழுதி வருகிறேன். நாளை அங்கே பனிக்கால நோய்கள் பதிவை இட்டு விடுவேன். அது முடிந்ததும் இதை மறு பதிவு செய்து விடலாம். :)

வித்யா

Unknown said...

நன்றி கண்ணகி
நன்றி சங்ககவி

S.A. நவாஸுதீன் said...

மூன்று பாகங்களும் நிச்சயம் எல்லோரும் படிக்கனும். மாத/வார இதழ்களுக்கு கண்டிப்பா அனுப்புங்கள் வித்யா

Unknown said...

நிச்சயம் அனுப்புகிறேன் நவாஸ். ரொம்ப நன்றி.:)

Paleo God said...

சூப்பர்.....

// தினமும் மாலை எத்தனை மணியானாலும், அவர்களோடு அரை மணிநேரம் பேசுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் முக பாவங்களையும், புருவங்களையும், கண்களையும் அமைதியாக வைத்துக் கொள்வது கட்டாயம் அவசியம். குழந்தைகளை மடியில் அமர்த்திக் கொண்டோ, அல்லது அவர்கள் கையைப் பிடித்துக் கொண்டோ பேசுங்கள். //

correct.. நிறைய பெற்றோர்கள் தவறவிடும் இடம் இதுதான்.

குழந்தைகளுக்கு பொதுவில் ஏற்படக்கூடிய (அ) வரக்கூடிய ஆபத்துக்கள் ""

மெர்குரி அடைத்த தெர்மாமீட்டர் உபயோகிக்கும்போது மிகுந்த கவனம் தேவை, கொடிய விஷமான அது உடைந்து உள்ளே சென்றாலோ, கை தவறி கீழே விழுந்தாலோ அந்த பாதரசத்தை மிகுந்த கவனத்துடன் அப்புறப்படுத்த வேண்டும். (பெட்டர் டிஜிட்டல் தெர்மாமீட்டர்). தரம் குறைந்த செருப்புகள் (உயரம் மாறுமேயானால் தலை வலி முதல் பல வலிகளுக்கு காரணமாகும்) உள்ளாடைகள், ஆடை அணியும்போது, செருப்பு அணியும்போது உதறி பூச்சி ஏதாவது உள்ளதா என்று சோதிப்பது, தேவையட்ற முக உடல் அழகு கிரீம்கள், சோப்புகள், கண் மை, வாக்மானில், மொபைலில் காதடைத்து பல மணி நேரம் பாட்டு கேட்பது, சிறுநீர் பலமணி நேரம் அடக்கி வைத்துக்கொள்வது, துப்பட்டா, கயிறு போன்றவற்றை கழுத்தில் சுற்றி விளையாடுதல், தரம் குறைந்த sunglass போன்றவையும் கூட என்று நினைக்கிறேன்..

பதிவுக்கு நன்றி தொடருங்கள் ... நண்பர் நவாஸ் சொன்னதை நானும் வழி மொழிகிறேன்.. :))

கமலேஷ் said...

அருமையான பதிவு...மிகவும் ஆழமாக அலசி இருக்கறீர்கள்...வாழ்த்துக்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான பதிவு

நசரேயன் said...

நீங்க எழுதிட்டு யோசிப்பீங்களா?
யோசித்திட்டு எழுதுவீங்களா?
ஒவ்வொரு இடுகையும் ஒரு புத்தகமா வெளியிடலாம்.

புலவன் புலிகேசி said...

தேவையான பதிவு

பா.ராஜாராம் said...

எவ்வளவு பெரிய உழைப்பு வித்யா!

தயவு கூர்ந்து பத்திரிக்கைக்கு அனுப்புங்கள்.அனுப்பியே ஆகணும்.

எங்கிருந்து மக்கா இப்படி ஒரு சக்தி கிளம்புகிறது?

ஆதாரம், அன்புதானே?.அது எல்லோருக்கும் சேரட்டும்.

GREAT VIDHYA!

aruna said...

என் போன்ற பெண்களுக்கு ரெம்ப நல்ல பதிவு மிக்க நன்றி

Unknown said...

மிக நல்ல பதிவுங்க

இந்த முறை வெளியிட்டதை கொஞ்சம் பிரித்து வெளியிட்டுருக்கலாம்

மிக நீண்ட பதிவாக வெளியிட்டால் விடயங்கள் கவணிக்கபடாமல் போகலாம்

அவசியம் புத்தகத்திற்கு அனுப்பி வையுங்கள்.

பதிவு - ஆரோக்கியம்.

cheena (சீனா) said...

அன்பின் வித்யா விதூஷ்

பயனுள்ள இடுகை - அனைவரும் படிக்க வேண்டிய இடுகை - நல்ல பணி - நல்ல சிந்தனை - நீளம் குறைத்து பகுதிகளாக வெளியிடலாமே

நல்வாழ்த்துகள் வித்யா

Unknown said...

நன்றி பலாபட்டறை. நீங்கள் பகிர்ந்தவை எல்லாமே மிகச்சரியானதுதான். பாதரசம் எனக்கு தெரியாத செய்தி.

நன்றி கமலேஷ்.

நன்றி டி.வி.ராதாகிருஷ்ணன் சார்.

நன்றி நசரேயன்: பாதிக்கப் பட்டவர்களை கண்ணால் பார்த்துவிட்ட வேதனைதான். :(

நன்றி புலவன் புலிகேசி.

நன்றி ராஜாராம்: அன்புதான்-வேறென்ன. சின்ன அலட்சியம் பெண்களை பாதாளத்திற்குள் தள்ளி விடுகிறது.:( நிச்சயம் பத்திரிக்கைக்கும் அனுப்புகிறேன். இன்னும் கொஞ்சம் செதுக்க வேண்டும்.

அருணா: நன்றி தோழி.

ஜமால்: ரொம்ப நன்றிங்க. அனுப்புகிறேன். :)

சீனா சார்: வருகைக்கு நன்றி. பல பகுதிகளாகவா? தொடர்பு (continuity) அறுந்து போகும் என்ற பயம்தான்.

--வித்யா

மதார் said...

very gud post

நந்தாகுமாரன் said...

hmmm ... அவசியமான பதிவு தான் ... திரும்ப திரும்ப சொல்லப்பட வேண்டிய விஷயம் தான் ...

அமுதா said...

நல்ல பகிர்வு.

Iyappan Krishnan said...

மிகவும் தேவையான பதிவு வித்யா..

ஒரு சந்தேகம்

//தன் வயதிற்கு சமமில்லாதவர்களோடான நட்பு, முக்கியமாக குழந்தைகளிடம் நட்பு//


இது பொதுவானது தானே ? நான் எந்த விழாவிற்குப் போனாலும் என்னிடம் குழந்தைகள் ஒட்டிக் கொள்ளும். பெரியவர்களிடம் வெட்டிப் பேச்சு பேசுவதை விட குழந்தைகளிடம் கூட்டமாக விளையாடுவது எனக்கு பிடித்தமான ஒன்று. அதனாலேயே வீட்டு விழாக்களில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு என்னிடம் இருக்கும்.

ஒருவேளை நீங்கள் விளக்கமாக சொல்லவில்லையோ அல்லது நீங்கள் சொல்ல வந்ததை நான் புரிந்துக் கொள்ளவில்லையோ தெரியவில்லை.

மற்றபடி மிகவும் அருமையான பதிவு வாழ்த்துகள்.

Unknown said...

ஜீவ்ஸ்: ஹா ஹா ... என்ன்னங்க இது? ஹா ஹா...

"அதிகப்படியான" நட்பு எனலாம். அது மட்டும் இல்லாமல், இந்த ஒரு பாயிண்டை மட்டும் தனியாகப படித்தால் சரிப்படாது. மொத்தத்தில் இதுவும் ஒன்று. நிச்சயம் "அவர்களது" 'நட்பு' வித்தியாசமாகத் தெரியும்.

Iyappan Krishnan said...

வித்யா,
நீங்கள் சொல்ல வந்தது/வருவது புரிகிறது. ஆனால் பலர் இதைத் தவறான அர்த்தத்தில் புரிந்துக் கொள்ளக் கூடாதே என்ற அளவில் தான் என்னுடைய முந்தையப் பின்னூட்டம்.

எந்த ஒரு மனிதரிடமும் நம்பிக்கைத் தேவை அது சரியான விதத்தில் எச்சரிக்கையுடன் கலக்கப்படவேண்டும்.

விரைவில் பேரண்ட்ஸ் கிளப்பில் இது பற்றிய பதிவை எதிர் பார்க்கிறேன்.

Unknown said...

பல நேரங்களில் குழந்தைகள் மீதான வன்முறை பற்றி நானும் என் மனைவியும் பேசி இருக்கிறோம். குழந்தைகளுக்கு எப்படி அதைப் புரியவைப்பது போன்ற விஷயங்கள்.

பல இடங்களில் அக்கம்பக்கத்து வீடுகளில் இருக்கும் பெருசுகள், சித்தப்பாக்கள் மூலமாக அதிகம் நேரிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. வெளியில் இருந்து பார்க்கும்போது “இவ்ளோ நல்லவரா” என்றும் “ரொம்ப பெரிய மனுஷன்”களாகவும் தெரிபவர்கள் இது போன்ற பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். குழந்தைகளும் சொல்ல பயந்து ஒரு வித பிறழ்ந்த மனநிலைக்கு ஆளாகிறார்கள்.

பெண் குழந்தைகளிடம் மட்டுமல்லாது ஆண் குழந்தைகளிடமும் பதின்வயது சிறுவர்களிடமும் சில்மிஷங்கள் செய்யும் பெருசுகளும் உண்டு.

நான்கு இடுகைகளையும் இப்பொழுது தான் படித்தேன். மிக அவசியமான இடுகைகள்.

Post a Comment