பெண்ணே நீயும் பெண்ணா - 5

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4


(இந்தப் பத்தியில் இருக்கும் எல்லாமே முற்றிலும் என் சொந்தக் கருத்துதான். அவரவர் சூழ்நிலைக்கேற்ப முடிவுகளைத் தீர்மானம் செய்து கொள்ளலாம். இதை பற்றி மாற்று கருத்துக்கள் நிச்சயம் இருக்கலாம். விவாதம் ஆரோக்கியமானதாக இருத்தல் நலம்).
5. தாக்குதல் / பலாத்காரம் (அ) கற்பழிப்பு நடந்து விட்டால்?
மனம் பிழற்சி அடைந்த நிலையில் இருப்பவர்கள், மது/போதை வஸ்த்துக்களின் ஆளுமையில் தன்னிலை மறந்திருப்பவர்கள், பழி வாங்க என்று எந்தக் காரணம் சொல்லப்பட்டாலும் தன் ஆளுமையை வெளிக்காட்ட, தன்னம்பிக்கை இல்லாதவர்கள் மற்றவர் மீது பலப் பிரயோகம் செய்வதே பலாத்காரம். பலாத்காரம் செய்தவர் (மரியாதை இல்லை - இரு பாலாரையும் குறிக்கவே இந்த -வர்)அவருடைய ஒரு நிமிடத் தேவை தீர்ந்ததும் அடுத்த இலக்கை நோக்கியோ இல்லை வேறு வேலையைப் பார்க்கவோ போய் விடுகிறார்.

பாலாத்காரிக்கப்பட்டவர்? ஆணோ பெண்ணோ இரு பாலாரும் எந்த வயதில் பாலாத்காரத்துக்கு ஆளாகலாம். டேட் ரேப் என்று பொதுவாக அழைக்கப்படும் நண்பர்களால் செய்யப்படும் பலாத்காரமே அதிகம் நிகழ்ந்து விடுகிறது என்பது வேதனையான உண்மை.

தன் ஆளுமையைக் காட்டவே கற்பழிப்பு செய்கிறான். அவர்கள் போராடுவதைத் தடுக்க வன்முறை, மிரட்டல், மயக்க நிலைக்கு (போதை/மது) கொண்டு செல்வது, என்று எதை வேண்டுமானாலும் செய்து மற்றவரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். எப்படி நிகழ்ந்ததென்றாலும் பலாத்கரிக்கப்பட்டவரின் மனநிலையும் உடல்நிலையும் இதனால் பெருமளவில் பாதிப்படைகிறது. உடல் நலத்தை எப்படியும் மீட்டுவிடலாம். அவர்களுக்கு உண்டாகி இருக்கும் பயம், அவமான உணர்வு, அதிர்ச்சி (trauma), வேதனை, குற்ற உணர்ச்சி, போன்றவை வார்த்தைகளால் வரிக்க இயலாதது. அவர்களுக்கு உடனடித் தேவை, குடும்பம்/நண்பர்களின் அரவணைப்பும் ஆறுதலும்.
  • இந்நிகழ்வு உங்கள் தவறால் ஏற்பட்டதில்லை. உங்கள் மீது தவறில்லை. உங்கள் அனுமதி இல்லாமல் வன்முறையாக உங்களோடு உறவு கொள்ள யாருக்கும் உரிமை கிடையாது. இதற்கான குற்றவுணர்ச்சி கூட கற்பழித்தவனுக்குத்தான் ஏற்படவேண்டுமே தவிர உங்களுக்கு அல்ல.
  • தக்க மருத்துவரிடம், நேரடியாக, அப்படியே உடனடியாகச் செல்லுங்கள். உடை மாற்றியோ, உள்ளாடைகளை மாற்றியோ, குளித்தோ செய்ய வேண்டாம். இது கஷ்டம்தான். இருந்தாலும், மருத்துவ பரிசோதனைக்கு traces பெரிதும் உதவியாக இருக்கும்.
  • ரத்தப் பரிசோதனை, STD/HIV/AIDS, உடலுக்குள் ஏற்பட்டிருக்கும் காயங்கள் போன்ற நோய்களுக்கான பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதனால் ஒருவேளை உங்களுக்கு இன்பெக்ஷன் ஏதும் ஏற்பட்டிருந்தால் கூட உடனடியாக தக்க மருத்துவம் செய்து கொள்வதன் மூலம் குணமாகலாம். நீங்கள் திருமணமானவராக இருந்தால் இத்தகைய மருத்துவப் பரிசோனையின் ரிசல்டுகள் வரும் வரை கணவரோடு(அ)மனைவியோடு உறவு கொள்ளாதீர்கள் / குழந்தைக்கு தாய்பாலூட்டாதீர்கள்.
  • கற்பழிப்பு நிகழாமல், பலாத்கார முயற்சி செய்யப் பட்டிருந்தாலும் உடலில் எந்த பாகத்திலும் இரத்தக் காயம் ஏற்பட்டிருந்தாலும் கூட HIV/STD/AIDS போன்றவற்றிக்கான பரிசோதனையை செய்து கொள்ளுங்கள்.
  • ஒருவேளை உடனடியாக மருத்துவரை நாட முடியவில்லை என்றாலும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்ளுங்கள். சில நேரங்களில் அப்போது கூட மருத்துவர்களால் தேவையான சாம்பிள்களை எடுக்க முடியும்.
  • உங்கள் மனநலத்தைப் பேண தகுந்த மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் பெறுங்கள். டிப்ரெஷன் (depression) ஏற்படுவதைத் தடுக்கும் மருத்துவம் ஏதும் மன நல மருத்துவரால் பரிந்துரைக்கப் பட்டால் அவற்றைத் தவறாது எடுத்துக் கொள்ளுங்கள்.
  • ஒருவேளை மயக்க மருந்து, போதை வஸ்துக்கள் உங்கள் உடலில் செலுத்தப் பட்டிருந்தால் அல்லது உங்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அதற்குரிய டாக்சிகாலாஜி (toxicology) சிகிச்சைகளைச் செய்து கொள்ளுங்கள். ரூபீஸ் (roofies), கேடமைன், ஜி.ஹெச்.பி போன்ற போதை மருந்துகள் மதுவில் கலந்து கொடுக்கப்பட்டிருந்தால், இம்மருந்துகளால் நரம்பியல் கோளாறுகளான பக்கவாதம், வலிப்பு, பார்வை இழப்பு போன்றவையோ இல்லை உயிரிழப்பே கூட ஏற்படலாம். உங்களுக்கு சந்தேகமாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாய் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
  • மருத்துவரின் ஆலோசனைப் படி, உங்கள் உடலில் இருந்து samples எடுத்துக்கொள்ள அனுமதியுங்கள். ஒவ்வொரு மருத்துவ சிகிச்சைக்கும் / பரிசோதனைக்குமான சான்றிதழ்களை உடனடியாகப் பெற்று பத்திரப் படுத்துங்கள்.
  • உங்கள் உள்ளாடை / அப்போது அணிதிருந்த ஆடைகள் போன்றவற்றை தூக்கி எறிந்தோ / துவைக்கவோ செய்யாதீர்கள். இதில் குற்றவாளியின் தலைமுடி/இரத்தம்/உடல் திரவம்/நகம்/எச்சில் போன்றவை சிக்கலாம். ஒருவேளை சட்ட ரீதியாக அணுகும் பட்சத்தில் குற்றவாளியைப் பிடிக்க இவை தேவைப் படலாம்.
  • மருத்துவ ஆலோசனைகளையோ, சிகிச்சை முறைகளையோ, பரிசோதனைகளையோ நீங்கள் விரும்பினால், உங்களைக் குறித்த விபரங்களைப் பதிவு (record) செய்ய வேண்டாம் என்றும் கூற முடியும். அதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது. இருந்தாலும் இவற்றை பதிவு செய்வது உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கக் கூடும்.
  • மருத்துவரையோ அல்லது மருத்துவமனையையோ உங்களைப் பற்றிய / மருத்துவ பரிசோதனைகள் பற்றிய இரகசியம் காக்கச் சொல்வதற்கும் உங்களுக்கு பூரண உரிமை இருக்கிறது.
  • அதீதக் காதலினால் யாரும் (டேட்டிங் / காதலன் / நண்பர்கள் போன்றவர்கள்) கற்பழிப்பதில்லை. அப்படி கூறப்பட்டால் அது முழுப் பொய். கற்பழிப்பு வன்முறை. கற்பழிப்பை நியாயப் படுத்தவே முடியாது. அப்படிக் கூறப்படும் காரணங்களை எந்நிலையிலும் ஏற்காதீர்கள். குற்றவாளியை மன்னிக்க வேண்டாம்.
  • நிகழ்வை ஒரு போதும் குடும்பத்தார்/பெற்றோரிடமிருந்து மறைக்காதீர்கள்.
  • ஒருவேளை நீங்கள் விரும்பினால், போலீஸ் / காவல்துறையில் FIR பதிவு செய்யுங்கள். இது சம்பந்தமான உங்கள் மருத்துவக் குறிப்புக்கள், உடலில் இருந்து எடுக்கப்பட்ட sample-களுக்கான மருத்துவ/Lab ரிப்போர்ட்டுகள் எல்லாவற்றையும் கொண்டு செல்லுங்கள். சட்ட ரீதியாக அணுகுவதை பற்றி தயக்கமோ வெட்கமோ கொள்ளாதீர்கள்.
  • மீடியா / பத்திரிகை போன்றவை தனி நபர் (முக்கியமாக பெண்கள்/குழந்தைகள்) இரகசியத்தை அவர் அனுமதி இல்லாமல் வெளிப்படுத்த முடியாது. அவசியம் இல்லாமல் உங்களை மீடியாவில் வெளிப்படுத்தாதீர்கள்.
  • இந்நிகழ்வை உங்களுக்கே தெரியாமல் உங்களைப் புகைப்படம் / வீடியோ எடுத்து குற்றவாளி வெளியிட்டு பரப்பலாம். ஒரு வேளை இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தால், குறிப்பிட்ட வீடியோவை நீக்கும்படி கேட்க நீங்கள் தகுந்த ஆதாரங்களைக் காட்ட வேண்டி இருக்கலாம். ஒருவேளை நீங்கள் ஏற்கனவே காவல்துறையை அணுகாமல் இருந்திருந்தாலும், இந்நிலையில், நீங்கள் கண்டிப்பாய் காவல்துறை உதவியை நாட வேண்டி இருக்கும். அந்நிலையில், உங்கள் அந்த ஆடைகள், மருத்துவ சான்றிதழ்கள் போன்றவை குற்றத்தை நிரூபிக்க, அல்லது உங்களுக்கே தெரியாமல் எடுக்கப் பட்ட படம் (அ) வீடியோ என்று நிரூபணம் செய்யத் தேவையாக இருக்கும். அதனால் இவற்றை பத்திரமாக வையுங்கள்.
  • பெண்ணாக இருந்தால், கர்ப்பமடையாமல் இருக்கத் தகுந்த emergency contraception போன்ற மருத்துவ ஆலோசனைகளைப் பெறுங்கள். அடுத்த மாதவிலக்கு வரும் வரை தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லுங்கள்.
  • ஒருவேளை கற்பழிப்பினால் கர்ப்பமடைந்திருந்தால், சட்ட ரீதியாக அனுமதி பெற்று கருக்கலைப்பு செய்துகொள்ளுங்கள். (The Indian abortion laws under the Medical Termination of Pregnancy (MTP) Act) கருக்கலைப்பு செய்வது பற்றிய குற்ற உணர்வெல்லாம் கொள்ள வேண்டாம். கற்பழிப்புக்கு ஆளானவர் 18-வயதுக்கும் குறைந்த மைனர் என்றால் MTP Act 1971-இன் கீழ் தனியாக கருக்கலைப்புக்கான அனுமதி பெற வேண்டும். கருக்கலைப்பை முறையாகச் செய்து கொள்ளுங்கள். அதற்கான மருத்துவ சான்றிதழையும் பெற்று பாதுகாத்து வையுங்கள். சினிமாவில் மட்டுமே அவனையே மணந்து கொள்ளும் / அவனை திருத்தி நல்லவனாக்கும் ஹீரோயினித்தனமெல்லாம் நடக்கும். நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமில்லை. உங்கள் மனமும் உடலும் இருக்கும் நிலையில் குழந்தை பேறு நிச்சயம் ஆரோக்கியமானதாக இருக்காது. பிறக்கும் குழந்தையின் எதிர்காலமும் (முக்கியமாக மனநிலை) பாதிக்கலாம். உங்களால் தனியாக யார் உதவியும் இல்லாமல் பிறக்கும் குழந்தைக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு நடை முறைப் படுத்த முடியும் என்ற முழு நம்பிக்கை இருந்தால் மட்டுமே குழந்தையைப் பெற்றுக் கொள்ளவும். குழந்தை பிறந்த பின் குப்பைத் தொட்டியிலோ, அரசு தொட்டிலிலோ வீசுவதை விட சட்ட ரீதியாக கருக்கலைப்பு செய்தல் உங்கள் உடல் நலத்திற்கும் எதிர்காலத்திற்கும், ஒன்றுமறியாத அக்குழந்தைக்கும் நல்லது.
  • பெரும்பாலான நிகழ்வுகளில் கற்பழிக்கப்பட்டவருக்கு கற்பழித்தவனை ஏற்கனவே தெரிந்திருக்கிறது. இதனால் "பாவம்" பார்த்தோ, இல்லை வேறு காரணங்களுக்காகவோ குற்றவாளியை பற்றி வெளியே கூறாமல் பாதிக்கப் பட்டவர் மறைத்து விடுகிறார்கள். உங்கள் பாதுகாப்பை முதன்மையாக கருதுங்கள். உங்களுக்கு தீங்கு விளைவித்து எளிதில் 'காரணங்கள்' கூறி கௌரவமாக வாழ்ந்து விடலாம் என்ற எண்ணமே இன்றும் பல குற்றங்களுக்கு காரணமாக அமைகிறது. உங்கள் சுய-கௌரவத்துக்கு (கவனிக்க கற்பு அல்ல) பங்கம் விளைவித்தவனை தப்பித்து நிம்மதியாக வாழ விடாதீர்கள். இதனால் அவன் இன்னும் பல குற்றங்களைச் செய்யும் துணிவை பெறுவான். குறைந்த பட்சம் உங்கள் பெற்றோருக்கு அவனைப் பற்றிய விபரங்களைக் கொடுத்து விடுங்கள்.
  • எப்படியாகிலும், நிகழ்வுக்கு நீங்கள் காரணம் என்று புழுங்கிப் போகாதீர்கள். பெற்றோர்கள்/குடும்பத்தாரின் ஆதரவும் இதற்கு முக்கியம்.
  • பாதிப்புக்குள்ளானவருக்கு பொதுவாக கோபம், குழப்பம், பயம், நடுக்கம், அதிர்ச்சி, நரம்பியல் கோளாறுகள், சுயபச்சாதாபம், அவமான உணர்வு, கூச்சம், வெட்கம், குற்ற உணர்ச்சி, மன அழுத்தம், டிப்ரெஷன், தற்கொலை உணர்வு, போன்றவை ஏற்படுகிறது. சிலர் குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்தும் ஒதுங்கிப் போய் தனிமைப் படுகின்றனர். தூக்கம், மற்றும் உணவு உண்ணும் முறைகளில் எதிர்மறையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவருக்கு இதைப் பற்றி யாரிடமும் பேசுவதோ பகிர்வதோ கூட, அந்நிகழ்வை நினைவூட்டி பயம் ஏற்படுத்துகிறது. இந்த உணர்வுகளை அப்படியே விட்டு விடுவது சரியல்ல. இதற்கு சரியான தீர்வு மனநல மருத்துவம் மட்டுமே. அதனால் மன நல மருத்துவரை கலந்தாலோசிக்கத் தவறாதீர்கள்.
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை பெரும்பாலும் ஆண்களே செய்கிறார்கள். குழந்தைக்கு / குடும்பத்துக்கு அவமானம் நேருமே என்று பயந்து வன்முறையாளனை சும்மா விடாதீர்கள். பதிமூன்று வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் பலாத்காரம் செய்யப் பட்டிருந்தால் அந்த அதிர்ச்சியிலிருந்து எப்படி மீட்பது?
    • குழந்தையை சந்தேகக் கண்களோடு பார்க்காதீர்கள். உங்கள் அரவணைப்பு மிகவும் அவசியம். நீங்களே அதிர்ச்சி அடைந்திருக்கிறீர்கள் என்பதை எந்நிலையிலும் வெளிப்படுத்த வேண்டாம்.
    • குழந்தையை மீண்டும் இணையதளங்களை தனியாக பார்க்கவோ, அல்லது பெரும்பாலும் தலிமையில் இருப்பதையோ அனுமதிக்காதீர்கள். கட்டாயம் செய்ய வேண்டாம். அவர்களையே அறியாது எப்போதும் யாருடனாவது இருப்பது போல செய்து விடுங்கள்.
    • பெற்றோர் இருவரும் அலுவலகம் செல்பவர்களாக இருந்தால், பாதுகாப்பான கிரெச் போன்ற இடங்களிலோ, கிடார், வாய்ப்பாட்டு போன்ற இசை பயிற்சிக்கோ, பகுதி நேர வேலைக்கோ அனுப்புங்கள்.
    • குழந்தைகளை பொதுசேவை, சமூக சேவை போன்றவற்றை செய்ய ஊக்கப் படுத்துங்கள். வார இறுதி நாட்களில் முதியோர் இல்லம் போன்றவற்றிற்குக் கூட்டிச் சென்று குழந்தைகளை விட்டே முதியோருக்கு உணவு பரிமாறுதல், மிகவும் நோய் வாய்பட்டிருப்பவருக்கு உணவு ஊட்டி விடுதல், போன்ற செயல்களால் தன்னம்பிக்கையும் சுயமரியாதை மேலோங்கும். தான் ஒருவருக்கு பயன் படுகிறோம் என்ற உணர்வே அவர்களுக்கு மீண்டும் வாழ்கையின் மீதான நம்பிக்கை வர உதவும்.
    • முடிந்தால் நலிந்த பள்ளிகளுக்குச் சென்று அவர்களை விட்டே அவரவர் தகுதிக்கேற்ற பாடங்களை கற்றுத் தரவும் செய்யுங்கள்.
    என்ன மாதிரியான பாலியல் கேள்விகளைக் குழந்தைகள் கேட்கலாம்? எது இயல்பானது? எது அசாதாரணமானது?

    0 முதல் 5 வயது வரை
    சாதாரணம்
    • உடல் பாகங்கள் குறித்த சந்தேகங்கள். (பாய்ன்னா யாரு? அல்லது கேர்ள்ன்னா என்ன போன்றவை)
    • டாய்லெட் உபயோகிக்கும் போது மல-ஜலம் குறித்த கேள்விகள் (இது ஏன் தண்ணியா இருக்கு அது ஏன் கெட்டியா இருக்கு போன்றவை)
    • குழந்தைப் பேறு / பிரசவம் குறித்த சந்தேகங்கள் (நான் ஏன் உங்க கல்யாணத்துக்கு வரல?, நான் எப்படி வயிற்றுக்குள்ள போனேன்? என்னை எப்படி வெளில கொண்டு வந்த? போன்றவை)
    • பிறப்புறுப்பை கண்ணாடியில் பார்த்துக் கொள்வது 
    அசாதாரணம்
    • உடல் உறவு பற்றி பேசுவது
    • மற்ற குழந்தைகளின் உடல் பாகங்களை பார்க்க / தொட முயற்சிப்பது
    • பிறப்புறுப்பில் எதையாவது சொருகிக் கொள்ள முயற்சித்தல்
    6 முதல் 12 வயது வரை
    சாதாரணம்
    • மாத விலக்கு, கர்ப்பமடைதல், உடல் உறவு சம்பந்தமான கேள்விகள் / தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருத்தல்
    • ஒத்த வயதுடைய குழந்தைகளுடன் இதை பற்றிய பேச்சுக்கள்
    • சுய-இன்பம் 
    அசாதாரணம்
    • வெளிப்படையான உறவு வர்ணனைகள் செய்தல்
    • மற்ற குழந்தைகளிடம் தனக்குத் தெரிந்ததை நிஜத்தில் பரிசோதித்து பார்க்க முயற்சித்தல்
    13 முதல் 16 வரை
    சாதாரணம்
    • சுயமாக முடிவெடுக்கும் உரிமை கோருதல், 
    • வேறு பாலாரோடான நட்பு பற்றிய வித்தியாசம் தெரிய ஆரம்பித்தல் / காதல், 
    • உடல் உறவு / பாலியல்/சமூகம் பற்றிய சிந்தனை/விவாதத்தில் ஈடுபடுதல்
    • திருமணம் போன்ற நிகழ்வுகளைப் பற்றி அறிய முற்படுதல்
    • சுய இன்பம்
    • வேறு பாலாரோடு பழகுவதை, நேரம் செலவிடுவதை, அவர்களைத் தொட்டுப் பார்ப்பதை விரும்புதல்
    • பெரும்பாலான சிறார்கள் இந்த வயது முடியும்போதே உடல் உறவில் ஈடுபடுகிறார்கள்
    அசாதாரணம்
    • தாய் தந்தையரின் படுக்கை அறையை எட்டிப் பார்த்தல்
    • தன்னை விட வயதில் குறைந்த குழந்தைகளை உறவில் ஈடுபடுத்தல்
    • ஒத்த வயதுடைய மற்ற குழந்தைகளின் பிறப்புறுப்புக்களை தொட முயற்சித்தல்
    • தன்னை விட வயது மூத்தவரை உறவுக்கு அழைத்தல்

    ===================================


    (இரு பாலாருக்கும்) உங்கள் மீது சந்தேகக் கண் விழாமல் இருக்க பொதுவான எச்சரிக்கை
    • உங்கள் நோக்கம் நேர்மையானதாகவே இருந்தால் கூட அலுவலகத்தில் யாரையும் தொட்டுப் பேசாதீர்கள்.
    • குழந்தைகளை தனியான இடத்திற்கு கூட்டிச் செல்லாதீர்கள்.
    • முடிந்த வரை, மூடிய அறைக்குள் மூன்றாம் நபருடன் தேவை இல்லாமல் அதிக நேரம் செலவிடாதீர்கள்.
    • மற்றவரின் நடை உடை பாவனைகள் மீதான உங்கள் கருத்துக்களை உங்கள் கற்பனையோடு நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் வார்த்தைகள் உங்களுக்கு எதிரான ஆயுதமாக மாற வெகு நேரம் ஆகாது. கிண்டலாகவும் மிக சாதாரணமாகக் கூட "ஷி இஸ் செக்ஸி" போன்ற மாதிரியான கமெண்ட்களை அலுவலகத்தில் பகிராதீர்கள்.
    • Just for fun - வேண்டவே வேண்டாம்.
    • நீங்கள் குழந்தைகளைக் கொஞ்சும்/தூக்கும் முன் குழந்தையின் பெற்றோரிடம் அனுமதி கேளுங்கள். குழந்தைக்கு முத்தம் கொடுப்பதாயிருந்தால் உச்சந்தலை அல்லது நெற்றியில் முத்தமிடுங்கள். நீங்கள் பிடிக்கும் போதோ தொடும் போதோ குழந்தை அழுதாலோ, எரிச்சல் அடைந்தாலோ உடனே குழந்தையை விட்டு விடுங்கள் / அல்லது தாயாரிடம்/தந்தையிடம் ஒப்படைத்து விடுங்கள்.
    • இந்தியாவைத் தவிர மற்ற சில நாடுகளில் மற்றவன் குழந்தையை யாரும் இரண்டாவது முறை திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். அவ்வளவு பயம். அங்கேயே இவ்வளவு தூரம் குழந்தைகளுக்கு வன்முறை நடக்கிறது என்றால், குழந்தையை தன் கண் எதிரே வாயில் முத்தமிட்டால் கூட "அப்படி செய்யாதீங்க" சொல்லாத எவ்வளவோ அம்மாக்களை கண்டிருக்கிறேன். இந்தியாவில் இன்னும் மறைந்து கொண்ட மிருகங்கள் எத்தனை உலாவுகிறதோ தெரியவில்லை. ஜாக்கிரதை அம்மாக்களே.பெண்களே.
    அவ்வளவுதான். தொடர்ந்து படித்து வந்த அனைவருக்கும் நன்றி.
    .

    18 comments:

    விக்னேஷ்வரி said...

    எங்கேயோ போயிட்டீங்க வித்யா. அவசியமான விஷயங்களின் அசத்தலான அலசல்.

    Paleo God said...

    டேட்டிங் drug பலாத்காரத்தில் பயன்படுத்தப்படுவதன் நோக்கமே உயிரணுக்களை மருத்துவ பரிசோதனையின்போது கண்டுபிடிக்காமல் இருக்கவே என்று படித்திருக்கிறேன். மேலும் எந்தவிதமான வாசனையும் ருசியும் நிறமும் இல்லாத அது சுலபத்தில் குளிர்பானங்களில், தண்ணீரில் அல்லது வேறு வகையில் கலந்து குடுக்கப்பட்டு பின்னர் பலாத்காரம் நடை பெறுகிறது இம் மாதிரி சமயங்களில் அணிந்திருந்த உடைகள்தாம் பெரும்பாலும் சாட்சியமாகின்றன. (பில் கிளிண்டனே கவுந்த இடம் அது )

    பொதுவாய் இன்று இணைய தளங்களில் வெளியாகி வரும் இளைஞ்ஞர்களின் உறவு காட்சிகள் எல்லாமே just for fun என்று எடுக்கப்பட்டு பிறகு அவையே மிரட்டல்களுக்கும் பயன்படுகிறது. வெறும் 5 நிமிட உணர்ச்சிக்காக குடுக்கப்படும் முக்கியத்துவம் பல வகைகளில் வாழ்க்கையை (இரு பாலருக்கும் ) நாரசமாக்கிவிடுகிறது. அதை பற்றிய புரிதல் இங்கு இல்லை மற்ற எல்லா விலங்கினங்களும் அதனை இனப்பெருக்கத்துக்காய் உபயோகப்படுத்துவது இங்கே வாழ்க்கையே அதுதான் என்று பார்க்கப்படுவது அல்லது சித்தரிக்கப்படுவதின் கோளாறு இது. 90 களில் என்னுடைய ஒரு பெண் நண்பி ஆண்களுடன் சகஜமாய் பழகுபவர் (உறவு முதல் கொண்டு ) ஒரு முறை அவர் இம்மாதிரி வன்முறைக்கு ஆளானார், இது போன்ற விஷயங்களை சினிமாவில் அரசல் புரசலாக பார்த்த நான் கன்னம் வீங்கி (நன்றாக அடித்திருக்கிறான் ) வந்தவரை என்ன ஆச்சு என்று கேட்டபோது,, என்னல்லாம் ஒருத்தன் rape பண்ணுவானா என்று எகத்தாளமா இருந்தேன் ஆனா எனக்கும் இப்படி ஆயிடிச்சி அதுவும் நான் யார் கூட பழகிநேனோ அவங்களே என்ன ஆளு வெச்சி இப்படி பண்ணிட்டாங்க என்று சொன்னபோது உண்மையில் அவர்களை விட அதிகம் நான்தான் பாதிக்கப்பட்டேன் (என்னை அவர்களில் பொருத்திப்பார்த்த வினை) என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட தருணம் அவளை தேற்றக்கூட எனக்கு தெரிந்திருக்க வில்லை . டக்கென்று மறுநாள் சாதாரணமானது எனக்கு இன்னும் ஆச்சரியம் அந்த அளவுக்கு அவள் maturity பெண்களின் மீதான மரியாதையும், அனாவசிய தொந்தரவுகள் தராமல் விலகிப்போகும் மனதும் எனக்கு பக்குவப்பட்டது அதன் பின்தான்.

    எதற்கு இது என்றால் நமக்கான உரிமைகள் என்ன என்ன என்று நமக்கே தெரிவதில்லை மேலே நீங்கள் குறிப்பிட்டவை இவ்வளவு விளக்கமாக இது வரை நான் படித்ததில்லை. பாதிக்கப்பட்டவர்கள் அப்படியே மென்று முழுங்கி உளைச்சலுக்கு ஆளாகாமல் போராடி இம்மாதிரி கயவர்களை ஒடுக்க வேண்டும் (நம்மூரில் ruchikaa கேசுக்கு வழங்கற நீதிய பார்த்தா :( கொடுமை ...) இதெல்லாம் மாற நிச்சயம் பெரும் போராட்டம் தேவை. பாதிக்கப்படாத சமூகம்/மீடியா வாயை மூடிக்கொண்டு (உதவி செய்யவில்லை என்றாலும் ) வெறும் அவ(ளை)லை மெல்லாமல் இருந்தாலே இவைகள் கம்மியாகும். விரைவான தீர்ப்பு, அதற்கான வழிமுறைகள், தவறான குற்றச்சாட்டுகளுக்கு அதைவிட அதிக தண்டனை போன்றவைகளும் அவசியம். இதற்கான காவல் துறையில் சிறப்பு பிரிவுகள் பயிற்சிகள் உடனடி கவுன்சிலிங் வசதி, மீடியாக்களிளிருந்து பாதுகாப்பு/சம்பந்தப்பட்டவரின் ரகசியங்கள் பாதுகாத்தல் (பத்தி பத்தியா இதப்பத்தி விலா வாரியா புதுசு புதுசான அயோக்கியத்தனங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் ஊடங்கங்களின் போக்கு) போன்றவையும் தேவை. நியாமமாய் மீடியாக்கள் இதற்கான சட்ட வழிகள், அரசுக்கு தேவையான ஆலோசனைகள், மக்களுக்கான நீதி கிடைக்க உதவுதல், ரகசியங்கள் பாதுகாத்தல், தங்களின் நிருபர்கள் மூலம் இதற்கான ஒரு பாதுகாப்பு வளையத்தை மக்களுக்கு அளித்தல், துணை போகும் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் யாராக இருந்தாலும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்து, நீதி கிடைக்க வழி செய்தல் போன்றவைகளை செய்யவேண்டும் ஆனால் அவர்கள் இதை (பெரும்பாலும் ) பரபரப்புக்கு தீனி ஆக்குவதுதான் கொடுமை ) ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்களுக்கும் செய்திகளுக்கும் முன்னுரிமை அளித்து வந்தாலே சமூக முன்னேற்றத்துக்கு நல்லது .

    ஹும்ம் மனசு கொதிக்குதுங்க பரஸ்பர புரிதலின் உறவு வேறு அதை பற்றிய புரிதல் வேறு, 'வன்முறையில்' சாதிப்பது வேறு - நமக்கு வரல என்று enjoy பண்ணி இதை பார்ப்பவர்களும்/தூண்டுபவர்களும் ஒருவகையில் குற்றவாளிகள்தான் என்பது என் கருத்து. எனக்கும் நிறைய விஷயங்கள் கிடைத்தது இப் பதிவின் மூலம் சில விஷயங்களில் நானும் சருக்குகிறேன். சரி செய்து கொள்கிறேன் - கற்றுக்கொள்ளுதலே வாழ்க்கை. H1N1 போல எல்லா இடங்களிலும் வைக்க வேண்டிய செய்தி இது. நல்ல செய்தி சொல்லி சமூக அக்கறை கொண்ட நீங்கள் நீடூழி வாழவேண்டும். நன்றி.

    - ஷங்கர்

    இராஜ ப்ரியன் said...

    தொடர்க தொடர்ந்து உங்கள் நற்பணி ......

    நட்புடன் ஜமால் said...

    ஐந்து பகுதிகளையும் படித்தாயிற்று.

    இந்த பகுதி கொஞ்சம் தகிரியத்தோட வந்திருக்கு. நல்ல பக்குவம் சகோதரி.

    இதுவரை சொல்லப்பட்டதில் பல விடயங்கள் நானும் செய்து இருக்கின்றேன் - தவறான நோக்கத்தோடு அல்ல என்றாலும் - இது தவறான பாதைக்கு இழுத்து செல்லக்கூடியது என்று அறிய முடிகின்றது.

    -------------------

    அந்நிய ஆணும் பெண்ணும் தனித்து இருந்தால் மூன்றாவதாக சாத்தான் இருக்கின்றான் எனும் இறைத்தூதர் எச்சரிக்கையை நினைவுகூர்கிறேன்.

    பித்தனின் வாக்கு said...

    நல்ல கட்டுரைத் தொடர். குழந்தைகளின் வளர்ச்சி பற்றி எழுதியுள்ளீர்கள். நல்ல பயணுள்ள தகவல்கள். நன்றி.

    புலவன் புலிகேசி said...

    அருமையான அலசலுங்க...

    கல்யாணி சுரேஷ் said...

    மொத்தமா கருத்து சொல்லிக்கலாம் னு தான் அமைதியா வந்து போயிட்டிருந்தேன். அருமையான உபயோகமான பதிவு விதூஷ். எனக்கு தெரியாத பல விஷயங்களையும், எச்சரிக்கை நடவடிக்கைகளையும் தெரிந்து கொண்டேன். பல முன்னெச்சரிக்கை குறிப்புகளும் பாதிக்கப்பட நேர்ந்தால் என்னென்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலும் மிக பயனுள்ளதாக இருந்தன. மிக்க நன்றிவித்யா.

    உமா said...

    அற்புதம் விதூஷ். உங்கள் நடை வெகு அருமை. மிகத் தெளிவாக, அவசியமானதை மட்டும் மனதில் பதியும் வண்ணம் சொல்லியிருக்கிறீர்கள்.
    " சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து."
    என்பதற்க்கிணங்க மிக அருமையாய் எழுதியுள்ளீர்."

    சொல்லியுள்ளக் கருத்துக்கள் ஒவ்வொன்றும் எல்லோருக்கும் மிகப் பயனுள்ளது. இதைப் பற்றியெல்லாம் இதுவரை யோசிக்கவில்லை இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு ஆளாகவில்லை என்பவர்களுக்குக் கூட முன் ஜாக்கிரதையாக இருக்க இது உதவும்.

    பாகம் பாகமாக பிரித்து எழுதியது முழுவதுமாக படிக்கவும் ஒவ்வொரு பாகத்தில் கூறப்பட்டிருந்ததை உள்வாங்கிக்கொள்ளும் படியாகவும் இருந்தது.

    வாழ்த்துக்கள்

    Vidhoosh said...

    விக்னேஷ்வரி: நன்றி

    ராஜப்ரியன்: நன்றி

    ஜமால்: நன்றி

    பித்தனின் வாக்கு: அவ்வ்வ்... :)) என்னங்க நீங்க... படிச்சிட்டு பின்னூட்டம் போடக்கூடாதா.. ஐயோ தேவுடா.. தேவுடா :))

    நன்றி புலவன் புலிகேசி

    கல்யாணி சுரேஷ்: நன்றி (எங்க காணுமேன்னு நினைச்சேன்)

    நன்றி உமா: மன்னிக்க. இந்தக் குறைதான் நம் பெண்களிடம். நமக்கு வராத வரை தலைவலியின் வேதனை தெரிவதில்லை. அதே மாதிரி தனக்கு வரவில்லை என்பதால் எங்கேயுமே பிரச்சினை இல்லை என்கிறமாதிரி ஒரு நம்பிக்கை வேறு வந்து விடுகிறது.

    படிப்பு தொழில் என்று எதில் முன்னேறினாலும், parallel-ஆக சமூகத்தை, அதில் உள்ள மேடு பள்ளங்களை கவனித்துக்கொண்டே அதற்கேற்றவாறு தம்மை தயாராக்கிக் கொள்ளவும், அவசியம் என்றால் பள்ளங்களைத் தாண்டவும், எதிரிகளை மிதிக்கவும் தவறி விடுகிறார்கள். லட்சக்கணக்கில் பேங்க் பாலன்சும் நவீன மோஸ்தரில் உடைகளும் "சுதந்திரம்" ஆகி விடுமா? இதுவா பெண் விடுதலை? என்னவோ போடா மாதவா...

    ///விரைவான தீர்ப்பு, அதற்கான வழிமுறைகள், தவறான குற்றச்சாட்டுகளுக்கு அதைவிட அதிக தண்டனை போன்றவைகளும் அவசியம். ///

    மிக அருமையான சிந்தனை. நடக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.

    உங்கள் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி ஷங்கர்.

    குறைந்தது ஒரு பெண்ணாவது இப்பதிவினால் விழிப்படைந்தால் அது எனக்கு மில்லியன் டாலர் மாதிரிதான் :) பார்க்கலாம்.

    இன்னும் செப்பனிட்டு பத்திரிக்கைக்கு அனுப்பவேண்டும்.

    --வித்யா

    Unknown said...

    நல்ல கட்டுரை வித்யா. கற்பழிப்பு - இந்த வார்த்தையைக் கொஞ்சம் reconsider பண்ணுங்க. வன்புணர்வு?

    Vidhoosh said...

    நிச்சயம் கே.வி.ஆர். நன்றி.

    Sundar சுந்தர் said...

    மிக நேர்த்தி. மனநல ஆலோசகர்களுக்கான பயிற்சி எதுவும் முறைப்படி கற்றாயா என்ன?

    உமா said...

    //இந்தக் குறைதான் நம் பெண்களிடம்.//
    இதைத்தான் நானும் சொல்கிறேன்.

    //நமக்கு வராத வரை தலைவலியின் வேதனை தெரிவதில்லை. அதே மாதிரி தனக்கு வரவில்லை என்பதால் எங்கேயுமே பிரச்சினை இல்லை என்கிறமாதிரி ஒரு நம்பிக்கை வேறு வந்து விடுகிறது.//

    உண்மைதான்
    வண்டிக்குதிரை மாதிரி தம் பாதையை மட்டுமே பார்த்துக்கொண்டு சொல்பவர்கள்,"இதைப் பற்றியெல்லாம் இதுவரை யோசிக்கவில்லை, இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு ஆளாகவில்லை" என்ற மனநிலையில் இருப்பவர்களுக்குக் கூட, பட்டுத்தானா எல்லாவற்றையும் தெரிந்துக்கொள்ள முடியும்? என்பதால் இது சமூகத்தின் இன்னொறு பக்கத்தை வெளிக்காட்டும் என்பதே என் கருத்து.

    ஒரு அலுவலகத்தில் இப்படி ஒரு பெண் சிக்கினால் அங்கு மற்ற பெண்களின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்.
    அவருக்கு உதவுவது சிக்கலானது,எதிர்ப்புகளைச் சமாளிக்கவேண்டியிருக்கும் என்பதாலும்
    குறைக்கூறுவது எளிதானது என்பதாலும்easy option ஐத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள். [பேசாமலாவது இருக்கலாமென்றால் அதுதான் நம்மில் பலருக்கு முடியவேமுடியாதே.] இப்படிப்பட்டச் சூழலில் மற்றவர்கள் எப்படி நடந்துக்கொள்ள/உதவ வேண்டும் என்பதும் சிந்திக்க வேண்டிய கருத்து.

    "உழவன்" "Uzhavan" said...

    இதுபோன்ற பயனுள்ள பதிவை சமீபத்தில் படித்ததாக ஞாபகமில்லை.. இந்த இடுகைகளுக்காக நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கும் ஆர்வத்திற்கும் மிக்க நன்றி.
    இந்த ஐந்து இடுகைகளையும் அனைவருமே படிக்கவேண்டியவைகள்!

    க.நா.சாந்தி லெட்சுமணன். said...

    அருமையான விழிப்புணர்வுக்கட்டுரை வித்யா! இருபாலருக்கும்னு சொன்னீங்க இல்லையா அது ரொம்ப சரி! ஒவ்வொருவரும் நாம பழகுற எதிர்ப்பாலினர அவுங்களோட பின்புலத்தோட,குடும்ப உறவுகளோட சேர்த்துப்பாத்து,நம்மள மாதிரி நினச்சாலே,நினக்க வச்சாலே போதும்.பாதிக்குற்றம் காணாமப்போயிடும்.யாரையும் சீண்டுவது,சுயகௌரவத்திற்கு இழுக்கு செய்து அவமானப்படுத்துவது இவையெல்லாம் கூட பலாத்காரத்திற்குக் காரணமாகிறது.பலாத்காரம் மாதிரிப்பிரச்சினைகள மனிதாபிமானத்தோட அணுகற மனப்பக்குவம் வரணும்.அதவிட்டு உனக்குத் தெரியுமாங்கற ரீதியில வம்பு வளக்குறதால தான், பாதிக்கப்பட்டவுங்க கமுக்கமா இருக்க நினக்கிறாங்க.ருச்சிகா வழக்கையெல்லாம் பாத்தா, அதுவும் 19 வருஷம் கழிச்சு தீர்ப்புகுடுக்கற நம்ம நீதிமன்றங்கள நினச்சா, பெண்குழந்தைகள வச்சுருக்கற என் மாதிரி தாய்மார்களுக்கு நெருப்புல இருக்கறமாதிரி இருக்கு.இறைவா!

    snegithi said...

    அருமை வித்யா, சுய சிந்தனை, சுய அலசல், சுய கட்டுபாடு, தற்பாதுகாப்பு மனித பிறவி அத்தனை பேருக்கும் இருக்குமானால் துவேஷம், கோபம், ஆக்ரோஷம்,பொறாமை,வன்முறை, வஞ்சம், ஒழுக்ககேடு அத்தனையும் தடுக்கபடும்.

    snegithi said...

    அருமை வித்யா, சுய சிந்தனை, சுய அலசல், சுய கட்டுபாடு, தற்பாதுகாப்பு மனித பிறவி அத்தனை பேருக்கும் இருக்குமானால் துவேஷம், கோபம், ஆக்ரோஷம்,பொறாமை,வன்முறை, வஞ்சம், ஒழுக்ககேடு அத்தனையும் தடுக்கபடும்.

    snegithi said...

    அருமை வித்யா, சுய சிந்தனை, சுய அலசல், சுய கட்டுபாடு, தற்பாதுகாப்பு மனித பிறவி அத்தனை பேருக்கும் இருக்குமானால் துவேஷம், கோபம், ஆக்ரோஷம்,பொறாமை,வன்முறை, வஞ்சம், ஒழுக்ககேடு அத்தனையும் தடுக்கபடும்.

    Post a Comment