கர்ணன் என் காதலன் - 3

கர்ணன் என் காதலன் - 1, 2
இந்தத் தொகுப்புக்களில் உள்ளவை பல்வேறு புத்தகங்களிலிருந்தும், மகாபாரதத்திலிருந்தும் கர்ணனைப் பற்றிய குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.


இராதேயனும் இராதையும்

இராதேயன் நதிக்கரையில் நின்றிருந்தான். விடியற்காலையில் செய்யவேண்டிய தர்ப்பணங்கள் மற்றும் சூரியனுக்கும் அர்க்கியம் விடுவதற்கான பொழுது.

அவன் பெயர் இன்றும் வசுஷேணன் என்றே அறியப்பட்டிருந்தது (வசதிகளுடன் பிறந்தவன்). கர்ணன் (அறுத்துத் தந்தவன் அதாவது கவச குண்டலங்களை அறுத்தவன் என்ற பொருள்படும்) என்று பின்னாளில் அழைக்கப்பட்டான்.

அவன் உயரமாகவும், தேஜஸ்வீயாகவும், தலை நிமிர்ந்தும், சூரியனுக்கு ஒப்பான ஒளி படைத்த பரந்த கண்களையும், பலம் பொருந்தியவனாகவும், புஜங்களும் தோளும் திரண்டு, விரிந்த மார்போடும் நின்றிருந்தான். அவனை சுற்றியிருந்த காற்றில் கூட அவன் வாசமே வீசியது. அவன் விழியின் ஒளியினால் சூரியனின் ஒளி குறைந்து தெரிந்தது. அவன் நடந்த வழிகளில் இருந்த சோலைகளின் பூக்கள் இவன் வருகை கண்டே மலர்ந்தன. இவன் ஸ்பரிசித்த நீர்ச் சுனைகளின் தன்மை இன்னும் குழைந்து குளிர்ந்தது. காலையின் இறைபூஜைக்கு அவன் பூக்களை பறித்த போது குழந்தையின் கைகளைப் போன்ற மிருதுவான தொடுதலும், அதன் பின்பு வாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவன் கரங்கள் வாளைப் பற்றும் போது உறுதியாகவும், இறுக்கமாகவும் இருந்தன. பூமியில் அவன் உறுதியான பாதங்கள் அழுந்தியதில் மண்துகள்கள் மேலும் பொடிந்தன. அவன் வியர்வையை தொட்ட தென்றல் இன்னும் மணம் கொண்டு பூக்களை தோற்கடித்தன. வாள் போகும் திசையிலெல்லாம் அவன் விழிகள் திரும்பியதைக் காணும் போது, ஒரு தாய் தன் குழந்தை போகுமிடமெல்லாம் கவனித்துக் கொண்டே இருப்பது போன்ற அதீத கவனம் இருந்தது.  அவன் நிமிர்ந்த பார்வையும், சதுர முகமும், கூர்மையான் முகவாயும், விரிந்த தோள்களும், குறுகிய வயிறும், பலம் பொருந்திய கரங்களும், தொடைகளும், உறுதியான பாதங்களும் அவன் வீரத்தையும், கூரான மூக்கும், காதுகளும்,  நிமிர்ந்த புருவங்களும் அவன் அறிவையும், அவன் கருமையான கண்களின் வசீகரமும், உதடுகளின் ஈர்ப்பான புன்னகையும் அவன் ஈர குணத்தையும் பறைசாற்றிக் கொண்டிருந்தன. அவன் திசைக்கு எதிரான திசையில் அவனது வாள் பயிற்சியின் வேகத்தில் விரிந்த கூந்தல் அவனது வசீகரத்தைக் கூட்டியது. அவன் அசைவுகளின் கம்பீரத்தை சிம்மத்திற்கு ஈடாக்கினால் கூட கம்பீரத்தில் குறைத்தே கூறியதாகும்.

இப்படி அற்புதமான தோற்றத்தோடு கம்பீரமாக வாள் பயிற்சியில் இருந்த தன் மகனைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் இராதை.

"மகனே" என்ற அழைப்புக்கு திரும்பினான் இராதேயன். அவன் விழிகளில் தாயன்பின் மகிழ்வும் அவள் அரவணைப்பின் கர்வமும் தெரிந்தன.

அவனுக்கு ஏதோ உண்ணக் கொடுத்தவாறே, "என்ன இவ்வளவு மகிழ்ந்திருக்கிறாய் கண்ணே" என்று கேட்கிறாள் தாய். "நான் வெல்லப்போகிறேன் தாயே" என்றான் இராதேயன். "குரு வம்ச இளவரசர்கள் தம் வீரத்தையும் திறனையும் காட்டும் போட்டியொன்று நடக்கப் போகிறது. அங்கு நானும் என் திறனை வெளிப்படுத்தப் போகிறேன்" என்றவன் மார்பு கர்வத்தால் விரிந்திருந்தது.

இராதையின் முகம் சுருங்கிவிட்டது. "அதிரதன் என் கரங்களில் ஆற்றிலிருந்தும் கொண்டு வந்த சின்னஞ்சிறு குழந்தையாகவே அவனை கருதியிருந்தேனே. இவ்வளவு வளர்ந்து விட்டானா? துரோணர் இவனை க்ஷத்திரியன் இல்லை என்றும் பரசுராமர் இவனை பிராமணன் இல்லையென சபித்ததும் இன்றும் என்னைத் துன்புறுத்துகிறதே. இவனுக்கு வில்-வாள் பயிற்சியில் ஆர்வம் ஏன் ஏற்பட்டது? அவனைத் தானே சிறந்தவனாக நிரூபிக்க எது தூண்டுகிறது? அவன் ஒருவேளை க்ஷத்திரியனோ? அல்ல தேவனாகவும் இருப்பானோ? அதிரதனைப் போன்றே தேரோட்டுவதில் இவனுக்கு ஏன் விருப்பமில்லை? சூதர்களும் பாதி க்ஷத்திரியர்கள்தானே. அவர்கள் தேரோட்டுவதில் திருப்தியடையவில்லையா? இவன் க்ஷத்திரிய குலத்தவனாக இருந்திருந்தால் இவன் தாய் இவனை ஏன் ஒதுக்கினாள்? ஒருவேளை தவறான தொடர்பில் பிறந்தவனோ? நான் வளர்த்த என் மகன், க்ஷத்திரிய குலத்தவன் என்றால் அவனுக்கான வழிதான் என்ன? அவன் சூதனாகவும் தன்னை ஏற்க மறுக்கிறான். க்ஷத்திரியர்கள் இவனை ஏற்க மாட்டார்கள். எனக்கே பிறந்திருந்தால் இவனுக்கு இத்தனை துன்பங்கள் வந்திருக்காதே. இந்த எண்ணங்கள் என் மனதை இப்படித் துன்புறுத்துகிறதே"

இப்படி மனதிற்குள் எண்ணியவாறே இராதை பெருமூச்செறிந்தாள். தன் மடியில் ஒரு குழந்தை போல சாய்ந்திருந்தவனின் தலையை பாசத்துடன் கோதினாள்.

===================================

போட்டியரங்கில், துரியோதனன் தன்னை பீமனுக்கு இணையாகவே கருதிய போதும், அர்ஜுனனுக்கு இணை யாருமில்லையே என்ற கவலை அவனுள் இருந்தது. அரங்கில் வசுஷேணனின் திறமைகளைக் கண்டதும் "நீ என் நண்பன். அர்ஜுனனுக்கும் மேலானவன்" என்றறிவித்தான்.

மேலும் வசுஷேணன் அவமதிக்கப்பட்டபோது மதங்கொண்ட யானையை போல துரியோதனன் "வீரமே க்ஷத்திரியனின் திறமை. பிறப்பு இல்லை. வீரர்களின் பிறப்பும் நதிகளின் பிறப்பைப் போலவே யாராலும் அறியமுடியாது. உலகையே எரிக்கும் நெருப்பு தண்ணீரிலிருந்துதான் பிறக்கிறது. தானவர்களை அழித்த இடி டடித்சி என்ற தேவனின் எலும்பாகும். நாம் வணங்கும் தெய்வங்களின் பிறப்பு இரகசியம் யாருமறியாதது. சிலர் அக்னி வம்சமென்றும், ருத்ர வம்சமென்றும், கங்கை வம்சமென்றும் கூறிக்கொள்கிறார்கள். விச்வாமித்திரர் போன்ற க்ஷத்திரியர்கள் சிலர் வீர வாழ்வைத் துறந்து பிராமணர்கள் ஆகி கல்வி-ஞான போதனைகள் செய்து கொண்டிருப்பதை நாமெல்லாம் அறிவோம். இன்று நம் குலகுருக்களான துரோணர் தண்ணீர் குடத்தில் பிறந்தவர், கௌதம வம்ஸியான கிருபாச்சாரியர் பூக்களின் கூடையிலிருந்து பிறந்தவர். பண்டவர்களே! உங்கள் பிறப்பின் இரகசியத்தையும் நான் நன்றாக அறிவேன். பெண்மான் என்றேனும் சிங்கத்தை பெற முடியுமா? அது போலவே வசுஷேணன் போன்ற வீரனின் தாயும் சாதாரணமானவராக இருக்க முடியாது. அவனது தேஜசும், வாளை பிடிக்கும் கரங்களின் அசைவும் அவன் கவச குண்டலங்களும் நமக்கு அறிவிக்கவில்லையா? இவன் அங்க அரசன் மட்டும் இல்லை, இந்த உலகத்தையே ஆளப் பிறந்தவன். இந்த வீரனை அவன் திறமைக்கு நான் தலை வணங்குகிறேன். இங்கு யாருக்கேனும் நான் வசுஷேனனுக்கு அளித்த பெருமைகள், பொறுத்துக்கொள்ள முடியாதவாறு இருந்தால், அவன் வசுஷேணனின் வில்லை தன் காலால் முறித்து காட்டட்டும்" என்று அறைகூவல் விடுத்தான்.

==============================

இராதேயன் தன் தாயிடம் விரைந்து "தாயே. நான் இன்றொரு மன்னன்" என்று அணைத்துக் கொண்டான். இராதையின் மௌனத்தைக் கண்டு "தாயே. உன் விழிகளில் அந்த மகிழ்ச்சி இல்லையே. உங்களுக்கு என்னால் பெருமை இல்லையா?" என்று கேட்டான்.

இராதை "என் அன்பு மகனே. நாம் க்ஷத்திரியர்கள் இல்லை. நம்மிலும் உயர்ந்தவர்களின் நட்பு நமக்கு நன்மையோ பெருமையோ தராது. துரியோதனன் தன் சொந்த சகோதரன்  பீமனுக்கே விஷம் வைத்தவன். அவனைப் பற்றிய நல்ல அபிப்பிராயங்கள் மக்களிடையே இல்லை. அவன் சபையில் உன்னை புகழ தன்னிலும் மூத்தவர்களையே இகழ்ந்தான். அவனுக்கு தன் குடும்பத்து பெரியவர்களையே மதிக்கத் தெரியாது. அவன் மாமன் சகுனி அவனை தவறான வழிக்குத் தூண்டுகிறான். அவன் தந்தையோ பிள்ளைப் பாசத்தில் குருடானவர். அவன் அளித்த மகுடம் சூடினால், அவனுக்கு நன்றிகடன் பட்டவனாவாய். உன் நன்றிக்கு அவன் தகுதியானவனா? அப்படிப்பட்டவனின் இராஜ்ஜியத்தில் ஒரு பகுதியில் நீ அரசனாவது அவசியம்தானா? உனக்கு உன்னைப் பெற்றவர்களோ, குருமார்களோ அளிக்காத பெருமையை ஏன் ஒரு கபடும் வஞ்சகமும் நிரந்தவனிடம் தேடுகிறாய்?" இராதையின் கண்களின் கண்ணீர் வசுஷேணனை அசைக்கவில்லை.

"தாயே. நான் க்ஷத்திரியன் என்ற உணர்வு என் பிறப்பின் இரகசியம். என்னை என் குலத்தாய் ஏன் நீக்கினார்கள் என்பது தெரியவில்லை. என்னைப் பெற்ற தாயின் தவறுக்கு நான் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? நான் க்ஷத்திரியன். வீரன். திறமிக்கவன். இன்று என் வீரத்திற்கு தகுந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது" என்று மகிழ்ந்தான் இராதேயன்.

"மகனே. உன் தகுதிகளை அங்கீகரித்தவன் உன் வீரத்தை தன் சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்துவான். தன் சகோதரர்களை அழித்து அவர்கள் இராஜ்ஜியத்தை வெல்ல உன்னைப் பகடைக் காயாகவே பயன்படுத்துவான். உன் நண்பன் சமூகத்திற்கும் தன் அரசாங்கத்துக்கும் நன்மை விளைவிக்க உன்னை நண்பனாக்கவில்லை." என்கிறாள் இராதை.

அந்த நேரம் அதிரதன் வருகிறான். இராதேயன் "தந்தையாரே. ஒரு தேரோட்டியாக உங்களை மகிழ்வித்தது எது?" என்று கேட்கிறான்.

புன்னகைத்த அதிரதன் "என் மகனே. பெருமைமிக்க அரசனே. எனக்கு குதிரைகள் பிடிக்கும். அதன் வேகம் சரியான செயல்பாடுகள், என் தேரைக் கட்டுப் படுத்தும் போது அவை அதை புரிந்து கொண்டு எனக்கு பணியும் குணங்கள் எல்லாம் பிடிக்கும். தேரோட்டும் வித்தையில் என்னைவிட நள மகாராஜாவே சிறந்தவராக இருக்க முடியும்" என்கிறார்.

இப்போது தாயை நோக்கி இராதேயன் "அதே போலத்தான் தாயே. இதே ஈர்ப்பு தான் எனக்கும் வில் வாள் மற்றும் ஆளுமை மீது. என் பிறப்போடு இரத்தத்தோடு வந்தவை இவை. என்னால் ஒதுக்கவே முடியாத குணங்களாக இருக்கிறது. என்னால் மற்றவனுக்கு பணிய முடியவில்லை.துரியோதனன் மட்டுமே எனக்கு அரசனாகும் வாய்ப்பளித்தான். அவனே என்னை ஒரு வீரனாகவும், வில்லாலனாகவும் அங்கீகரித்தான். நான் இதை ஏற்கப் போகிறேன்"

"ஆனால் மகனே. நீ பரந்தாமன் கிருஷ்ணனிடம் போயிருந்தால் இதை விட அதிகமாகவே பெற்றிருப்பாய். அவன் ஆதரவில்லாதவரின் ஆதாரம். அவன் எதிரிகளின் பயம். அவன் இதயத்தால் நியாயஸ்தன். புத்தியால் வியாபாரி. அவன் உன் உற்ற தோழனாகவும், போர்க்களத்தில் துணையாகவும், உன் ஆசானாகவும், உன் வழிகாட்டியாகவும், அவன் உனக்கு தேரோட்டியாகக் கூட இருந்திருப்பான். அவன் உன் சகோதரன். என் சகோதரனின் மகனே அவன். அவனிடம் போ வசுஷேணா, உலகம் உன்னை பெருமையுடன் பார்க்கும் அளவுக்கு நீ வளருவாய். நீ விரும்பியது கிடைக்கும். துரியோதனர்கள் உன்னை நாடுவது தன் விருப்பத்திற்காவே அன்றி உன் நலத்திற்காக அல்ல என் மகனே. புரிந்துகொள். ஆனால் கிருஷ்ணனோ நீ நம்பி பாதம் பற்றினால் கைவிடவே மாட்டான். உன் இதயத்தில் வசிப்பான். உன்னைப்போலவே அவன் தர்மவான். வேறு யாரிடமும் கேட்காதே. கிருஷ்ணனிடம் கேள்." என்று கெஞ்சினாள் இராதை.

"தாயே. நீ கண்ணனின் நண்பனாகச் சொல்கிறாய். நானோ அவனை விட மேலானவனாக விரும்புகிறேன். அவனைப் போலவே மற்றவர் கேட்பதையெல்லாம் மறுக்காமல் கொடுக்கிறேன். சூரியன் பாவிகள் மீது, முனிவர்கள் மீதும் ஒரே போலத்தான் ஒளிர்கிறது. இன்று நான் கண்ணனிடம் போய் இராஜ்ஜியம் கேட்டால், துரியோதனனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? அவன் சுயநலத்திற்கு என்னை நண்பனாக்கினான் என்கிறாய், நான் என் சுயநலத்திற்கு கண்ணனை நண்பனாக்கினால் அது தகுமா? நான் கிருஷ்ணனை மதிக்கிறேன். நான் கேட்காமலேயே துரியோதனன் எனக்கு இராஜ்ஜியம் அளித்தான். கைமாறாக நான் என்ன வேண்டும் என்று கேட்ட பிறகுதான் என் நட்பையே கேட்டான் அவன். என் நட்பை ஏற்கனவே அவனுக்காக வாக்கு கொடுத்துவிட்டேன். கிருஷ்ணன் நல்லோர் நட்பை மட்டுமே பேண வேண்டுமென்றால், இந்த உலகில் யார்தான் நல்லவர்? கண்ணனின் கொடுக்கும் முன் நல்லது கேட்டதை பார்த்தா கொடுக்கிறார்? நானும் அதேபோல நல்லவன் கேட்டவன் என்றெல்லாம் யோசித்து வாக்கு கொடுக்கவில்லை. ஈகை என் தர்மம். என் நோக்கம் வீரம். இவையே என் வாழ்கையின் குறிக்கோள்கள். ஒருநாள் கிருஷ்ணனே என்னிடம் வந்து தனக்கு ஏதும் அளிக்கும்படி கேட்பான். இதுவே என் நெஞ்சின் ஆவல். அன்று நான் அவனைவிட ஈகையில் சிறந்தவன் என்றறியப்படுவேன்" என்று பெருமையுடன் கூறிய அங்க அரசன் தன் தாயின் பாதங்களைத் தொட்டு வணங்கினான். அவள் விழிகள் கண்ணீரில் நனைந்தன.

"என்னுயிரே. என் உடலின் ஒவ்வொரு அணுவும் உன்னைக் காக்கட்டும்." என்று வாழ்த்தினாள் அன்னை.

========================

அப்படியே கர்ணனைக் குறித்த இன்னொரு பதிவு இங்கே பாருங்கள்.

.

4 comments:

Unknown said...

அருமையான பதிவு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

Unknown said...

விதூஷ், ரொம்ப நல்லா இருக்கும்மா, உங்கள் மற்ற பதிவுகளும் படித்திருக்கிறேன். எப்பவும் போல் அறியாத பல செய்திகளோடு, சுவையாக சொல்கிறீர்கள். மனம்நிறைந்த‌ வாழ்த்துகள்.

R.Gopi said...

வழக்கம் போல, இந்த பாகமும் மிக நன்றாக எழுதி உள்ளீர்கள் விதூஷ்...

வாழ்த்துக்கள்...

கர்ணன் வாழ்க்கை சோகம் கலந்த ஒரு வீர வரலாறு....

Post a Comment