திருக்காட்டுப்பள்ளி

பால்யம் - கள்ளமறியவில்லை, அப்போதுதான் கற்க ஆரம்பித்திருந்தோம் - கல்வியும், கள்ளமும். திருக்காட்டுப்"பள்ளி" நாட்கள், எல்லோருக்கும் போல எனக்கும் செல்ல நாட்கள்தான்.

கூகிள் உதவியில், மைக்கேல்பட்டி வில்சன் லூர்து சேவியர், ஒ.வேலி நித்யா நாராயணன் இரண்டு பேரும் தெரிந்தார்கள். கிடைக்கவில்லை :( இருவரும் 1989 batchmates. நண்பர்களே! எங்கிருந்தாலும் வருக...

செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி ...என்ற ஒலி கேட்டு காலை எழுந்து, எட்டரை மணிக்கு திரையிசை ஒலிக்க "வாஷிங் பவுடர் நிர்மா" என்று பாடஆரம்பித்தால் ஸ்கூலுக்கு கிளம்ப வேண்டும்.

பால வித்யாலயா (இப்போது மெட்ரிகுலேஷன் பள்ளியாகி விட்டது) மற்றும் லேடி சிவசாமி அய்யர் பெண்கள் பள்ளி (கேர்ல்ஸ் ஸ்கூல்) மற்றும் சர் பி.எஸ். சிவசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளி (Sir P.S.Sivasamy Iyer HSS). இந்தப் பள்ளிதான் சுத்தியிருக்கும் 'பதினெட்டு' பட்டிக்கும் நிஜமாவே ஒரே ஸ்கூல். திருவையாறு, மைகேல்பட்டி, விஷ்ணம்பேட்டை, பழமார்நேரி, வரகூர், பூதலூர், பவனமங்கலம், நேமம், இன்னும் நிறையவென்று சுற்றுவட்டாரத்து எல்லா ஊரிலிருந்தும் நண்பர்கள் சங்கமிக்கும் இடமாக இந்தப் பள்ளி.

இதையும் தவிர அங்கன்வாடி பாலவாடிகளைக் கொண்ட அரசாங்கப் பள்ளி ஒன்றும் முருகன் கோவிலுக்கு எதிரில் ஒன்றும், பக்கத்தில் ஒன்றும் இருக்கும். அங்கு கூரை வழியாக வெளிச்சம் வரும். மூங்கில் தட்டுக்கள் வழியாக காற்று வரும். ஆசிரிய-ஆசிரியர்கள் மொத்தமே மூன்று பேர்தான் இருப்பார்கள். அந்தப் பள்ளிக்குள் போகவே பயமாக இருக்கும். சுகாதாரம் என்ற பேச்சுக்குக் கூட வழியில்லாதப் பழையக் கட்டிடம். ரொம்ப கேள்வி கேட்டால் ஆசிரியர் அடிப்பார்என்பார்கள் அங்கு படித்த சிறுவர்கள்.

ஆசிரியர்கள் நண்பர்களா இல்லை, குடும்பத்தின் அங்கத்தினரா என்றே தெரியாமல், ஸார் / டீச்சர் என்று மட்டும் அழைத்தாலும், அவரது மகனோ மகளோ எங்கள் நண்பர் குழாமில் ஒருவராக இருப்பார்கள்.

"செவென்த் பிப்ரவரி" -- இப்போதெல்லாம் கல்லூரிகளில் கல்சுரல்ஸ் என்றழைக்கப்படும் வருடாந்திரக் கொண்டாட்டம் போன்றது. பள்ளியின் நிர்வகித்த சர்.சிவசாமி ஐயர் (1864-1946) பிறந்த நாளான 7th February-க்கும் ஒரு மாதம் முன்பே பாட்டு, நடனம், பேச்சு, கட்டுரை, கவிதை, விளையாட்டுப் போட்டிகள் எல்லாம் துவங்கி விடும். கோலாகலமான திருவிழா போல அன்றைய தினம்.

மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே
நாட்டுப் பொய்யெலாம் பேசிடும் நாணிலீர்
கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே. (5.84.2)

`செல்வத்தைத் தேடி உமக்குள்ளே மகிழ்ந்து நாட்டில் உள்ள பொய்கள் எல்லாம் பேசிடும் நாணம் இல்லாதவர்களே! உடலைவிட்டு உயிர் போவதற்கு முன்பே திருக்காட்டுப்பள்ளி உள்ளான் திருவடி சேர்வீர்களாக!’

என்று எனக்குச் சொல்லும் தட்டாம் பூச்சி வாலில் கட்டப்பட்ட மனம்.

தட்டாம் பூச்சியின் வாலில் கட்டிய நூல் போல மனம் மட்டும் அங்கேயேச் சுற்றிச்சுற்றி வருகிறது. நாங்கள் புழுதியில் புரண்டு விளையாடிய மண்.

==========================

திருக்காட்டுப்பள்ளி. ஒன்பது தேவார ஸ்தலங்களில் ஒன்றானது. சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் பெற்ற தலம். காவிரி, குடமுருட்டி ஆறுகள், கல்லணை என்று நீர் நிலைகளுக்குப்பஞ்சமில்லாத கிராமம்.

வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்
ஊருமன் னும்பலி யுண்பதும் வெண்டலை
காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நீருமன் னுஞ்சடை நிமலர்தம் நீர்மையே.

நிருத்தனார் நீள்சடை மதியொடு பாம்பணி
கருத்தனார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
அருத்தனா ரழகமர் மங்கையோர் பாகமாப்
பொருத்தனார் கழலிணை போற்றுதல் பொருளதே.

பொருபுனல் புடையணி புறவநன் னகர்மன்னன்
அருமறை யவைவல்ல வணிகொள்சம் பந்தன்சொல்
கருமணி மிடற்றினன் கருதுகாட் டுப்பள்ளி
பரவிய தமிழ்சொலப் பறையுமெய்ப் பாவமே.

பொன்னியின் செல்வனில் கல்கியும், உடையாரில் பாலகுமாரனும் குறிப்பிட்டவாறே திருக்காட்டுப்பள்ளி, சோழர்களின் வர்த்தக மையமாக விளங்கியதும் குறிப்பிடத்தகுந்தது.

உறையூரிலிருந்து ஆண்டு வந்த மன்னன், உறையூர் நந்தவனத்தில் இறைவனுக்குரியதாகப் பூத்து வந்த செவ்வந்தி மலர்களைப் பணியாளன் பறித்து வந்து தர அவற்றைப் பெற்றுத் தன் இரு மனைவியருக்கும் தந்தான். மூத்த மனைவி அம்மலர்களைத் தான் சூடிக்கொள்ளாமல் சிவபெருமானுக்கு அணிவித்து வந்தாள். இளைய மனைவி தான் சூடி மகிழ்ந்தாள். இதனால் இளையவள் இருந்த உறையூர் மண் மாரியால் அழிந்தது. மூத்தவள் இருந்த திருக்காட்டுப்பள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது என்று சொல்லப்படுகின்றது.

ஐந்து நிலைகளுடன் கூடிப் பொலிவுடன் ராஜகோபுரம் உள்ளது. செப்புக்கவசமிட்ட கொடிமரம் உள்ளது. வலமாகச் சென்றால் விநாயகர் சந்நிதி உள்ளது. உட்சென்றதும் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது - தெற்கு நோக்கியது - நின்ற திருக்கோலம். சந்நிதி வாயிலில் சுதையாலான துவாரபாலகிகள் உளர். உள்கோபுரம் மூன்று நிலைகளுடன் உள்ளது. உட்சென்றால் வலப்பால் நடராச சபை உள்ளது. உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன.

மூலவர் - சிவலிங்கத் திருமேனி. நான்கு படிகள் பூமியில் தாழ உள்ளார். வௌளிக் கவச அலங்காரம், உள்ளத்திற்கு ஓர் அலாதியான மனநிறைவு. படிகள் இறங்கிச் சுற்றி வலம் வரலாம். சோழ மன்னன் பிரதிஷ்டை, மூலவரைச் சுற்றி வரும் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். உள் பிராகாரத்தில் விநாயகர் உள்ளார். இலிங்கோற்பவர், கோஷ்ட மூர்த்தமாக இருக்காமல், விநாயகருக்குப் பக்கத்தில் சந்நிதியாகவுள்ளது. இலிங்கோற்பவரிடத்தில் அர்த்த நாரீஸ்வரர் உள்ளார். அடுத்து வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப் பெருமானுள்ளார். பக்கத்தில் காசி விசுவநாதர் விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சந்நிதிகள்.

முன் மண்டபத்தில் வலப்பால் பைரவர், நால்வர் திருமேனிகள் உள்ளன. நித்திய வழிபாடுகள் முறையாக நடைபெறுகின்றன. மாசிமகமும் பங்குனி உத்திரப் பெருவிழாவும் இங்குச் சிறப்புடையன. முதல் ஆதித்திய சோழனின் காலத் திருப்பணியைப் பெற்ற கோயில். ‘பள்ளி’ என்ற சொல்லைக் கொண்டு இவ்வூரில் ஒரு காலத்தில் சமணர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். அதற்கேற்ப 24-வது தீர்த்தங்கரரின் சிலை இத்தலத்தில் கிடைத்துள்ளதாம்.

“வேதனார் வெண்மழு ஏந்தினார் அங்கமுன்
ஓதினார் உமையொரு கூறனார் ஒண்குழைக்
காதினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப் பள்ளி
நாதனார் திருவடி நாளும் நின்றேத்துமே.” (சம்பந்தர்)

“மாட்டைத் தேடி மகிழ்ந்து நீர் நும்முளே
நாட்டுப் பொய் யெலாம் பேசிடும் நாணிலர்
கூட்டை விட் டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளி யுளான் கழல் சேர்மினே.” (அப்பர்)

"- எண்ணார்
தருக்காட்டுப் பள்ளித் தகைகொண்டார் சூழுந்
திருக்காட்டுப் பள்ளியில் வாழ் தேவே. (அருட்பா)

==========================
சிவப்பிரகாசரின் ரசனை
(நன்றி - கடாரத் தமிழ் பேரறிஞர் டாக்டர். எஸ். ஜெயபாரதி)

சிவப்பிரகாச முனிவர் என்று ஒரு புலவர்/சாமியார். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தார். நல்ல புலவர். அவர் சிறுவயதிலேயே கவி பாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார். பல நூல்களை இயற்றியுள்ளார்.

அவருடைய சொந்த ஊர் திருக்காட்டுப்பள்ளி. அவருக்குப் பதினைந்து வயதாகும்போது நடந்த சம்பவம். அப்போது இன்னும் அவர் சன்னியாசம் வாங்கவில்லை. ஒருநாள், அவர்கள் இருந்த வீதியில் ஒரு பெண் உப்பு விற்றுக்கொண்டு போனாள். சுவாமிகளின் தாயார் அப்போது கைவேலையாக இருந்தார். ஆகவே உப்புக்காரியை அழைக்குமாறு சுவாமிகளை ஏவிவிட்டார். அவர் சும்மா போய் அழைக்காமல், வெண்பாவாக அமைத்து அவளை அழைத்தார்.

நிறைய உளதோ வெளிதோ கொளுவோம்
பிறையை முடிக்கணியும் பெம்மான் - உறையும்
திருக்காட்டுப்பள்ளி திரிபாவாய் நீயுங்
கிருக்காட்டுப்பள்ளி யெமக்கு

பிறையணிந்த சீமானாகிய இறைவன் இருக்கும் இடமாகிய திருக்காட்டுப்பள்ளியில் உப்பு விற்பதற்காக வீதி தோறும் திரியும் பெண்ணே! உன்னிடம் உப்பு நிறைய உள்ளதோ? நல்ல தரமான வெண்மையான உப்பாக இருக்கிறதோ? அப்படியானால் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். ஆகவே நீ இங்கு இரு! எங்களுக்கு உப்பு அள்ளிக் காட்டு.

நீயிங் கிருக்காட்டுப்பள்ளியெமக்கு =
நீ + இங்கு + இரு + காட்டு + உப்பு + அள்ளி + எமக்கு

கொஞ்சம் குறும்புடன் பாடிய பாடல். அப்போதெல்லாம் பதினைந்து பதினாறு வயதிலேயே திருமணம் ஆகிவிடும். இளவட்ட வயது.

அதன்பின்னர் சிவப்பிரகாசர் ஒரு மடத்தில் சேர்ந்துவிட்டார். தமிழ்நாட்டு சைவ ஆதீனங்களுக்கென பல சம்பிரதாயங்கள் இருந்தன. அவர்களுக்கென Hierarchy எனப்படும் அதிகார/அந்தஸ்துத் தட்டுக்கள் இருந்தன.அப்போதெல்லாம் ஆதீனங்களில் hierarchy நிறைய உண்டு. சாமியார்களிலேயே பண்டார சன்னிதி எனப்படும் ஆதீனகர்த்தர். அவருக்கு அடுத்தபடியாக தலைமைத்துவத்துக்கு வரவேண்டிய அடுத்த பட்டம் அல்லது இளையபட்டம் அல்லது இளவரசு; பின்னர் தகுதி, பதவி, அதிகாரம் முதலியவற்றின் அடிப்படையில் உள்ள ஸீனியர் சுவாமிகள், ஜூனியர் சுவாமிகள், ஸப்ஜூனியர் சுவாமிகள் என்றெல்லாம் ஏணிப்படிகள் இருந்தன. ஸீனியர்கள் முதலியோரைத் தம்பிரான் என்று சொல்வார்கள்.

பெரிய ஆதீனங்களுக்கு வெவ்வேறு இடங்களில் சொத்துக்கள் இருந்தன. கோயில்களும் இருந்தன. அவற்றை நிர்வகிப்பதற்கு ஆங்காங்கு கிளை மடங்கள் இருந்தன. அவற்றை நிர்வகிப்பதற்கு தனித்தம்பிரான்கள் இருந்தனர். அவர்களைக் 'கட்டளைத் தம்பிரான்கள்' என்பர். ஸப்ஜூனியர் சுவாமிகளை 'குட்டி'கள் என்று அழைப்பார்கள். அவர்களில் சிலர் மடத்திலேயே ஸீனியர் தம்பிரான்களிடமோ அல்லதுஆதீனப் புலவர்களிடமோ அல்லது அவ்வப்போது அங்கு அழைப்பின்பேரில் வரக்கூடிய பெரும்புலவர்களிடமோ படித்தனர். அவ்வாறு படிப்பவர்களைக் 'கற்றுக்குட்டி'கள் என்று குறிப்பிடுவார்கள்.

சாமியார்கள் தவிர மேல்காட்டு உத்தியோகம், ராயசம், காறுபாறு, கற்றுச்சொல்லி, கணக்கர், தவசிப்பிள்ளை, ஓடும்பிள்ளை, எடுபிடி என்று பலவகையான வேலைகளில் இருப்பவர்களும் இருந்தார்கள். இவர்களையும் அங்கு வந்து செல்லும் சன்னியாசம் வாங்காதவர்களையும் 'வெள்ளைவேட்டிக்காரர்கள்' என்று அழைத்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் மரியாதை, அதிகாரம். அதற்கேற்ப சாப்பாட்டுப்பந்தியிலும் வரிசை; வரிசையில் இடம்; இப்படியிருக்கும்.

பெரிய சன்னிதானம் சாப்பிட ஆரம்பித்த பின்னரே மற்றவர்கள் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். அவர் சாப்பிட்டுவிட்டு எழும்போது அனைவரும் இலையைவிட்டு எழுந்துவிடவேண்டும்.

சாப்பிட்டுமுடிக்கவில்லையானால் அது அவனவன் தலையெழுத்து. சிவப்பிரகாசர் ஒரு ஜூனியர் சுவாமிகளாக இருந்தபோது அவர் இருந்த மடத்திற்கு கோயம்புத்தூர்ப் பக்கத்திலிருந்து ஒரு சமையற்காரன் வந்திருந்தான்.

பெரிய சுவாமிகள் அனைவருக்கும் நல்ல அரிசியையும் மற்றவர்களுக்குக் குறுணை அரிசியையும் போட்டு சோறாக்கி வைத்திருந்தான். பந்தி ஆரம்பமாகியது. இலை போட்டாயிற்று. சோறு பரிமாறப்பட்டது. குறுணை அரிசிச்சோறு; குழைந்தும் போயிருந்தது. நெல்லும் கல்லும் இடையிடையே. பார்த்தார் சிவப்பிரகாசர்; திகைத்தார்; தயங்கினார். பின்னர் சொன்னார்.....

"கொங்கன் வந்து பொங்கினான் கொழியரிசிச் சோற்றினை"

அருகில் அமர்ந்திருந்த ஒரு ஜூனியர்சுவாமிகள், அவரைப் பார்த்து ஜாடையாக எச்சரித்தார்,

"சங்கமங்கள் கூடியே சாப்பிடத்தொடங்கின"

அருகில் அமர்ந்திருந்த மற்றொரு ஜூனியர் சுவாமிகள்,

"இங்கும் அங்கும் பார்க்கிறீர்; இலையிலே கண்ணில்லையே!" என்று அங்கலாய்த்தார்.

பயந்துபோனார், சிவப்பிரகாசர். மற்றவர்கள் உண்டு முடித்து எழுந்துவிடுவார்கள்; தயங்கி நின்ற சிவப்பிரகாசர் பட்டினியாக எழவேண்டியிருக்குமே! எப்படியும் சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும். சாப்பிடாமல் இருந்தால் இரவில்தான் மறு உணவு. நடுவில் எதுவும் கிடைக்காது. அதுவும் ஏதாவது இரவு விரதமாக இருந்தால் அதுவும் கிடையாது. முழுப்பட்டினிதான்.ஆகவே,

"எங்கள் பாவம்! எங்கள் பாவம்! எங்கள் பாவம், ஈசனே!"

என்று சொல்லிமுடித்து சிவனேயென்று சோற்றை விழுங்கிவைத்தார்.

இது பிற்காலத்தில் தர்மபுர ஆதீனத்தில் வழங்கப்படும் ஒரு பாடலாகிவிட்டது. முழுப்பாடல் இதோ:

"கொங்கன் வந்து பொங்கினான், கொழியரிசிச் சோற்றினை:
சங்கமங்கள் கூடியே சாப்பிடத் தொடங்கின!
இங்கும் அங்கும் பார்க்கிறீர்! இலையிலே கண்ணில்லையே!
எங்கள் பாவம்! எங்கள் பாவம்! எங்கள் பாவம், ஈசனே!"

ஒரு காலகட்டத்தில் சிவப்பிரகாச முனிவர் ஒரு மடத்துக்குத் தலைவரானார். அப்போது அவரிடம் மடத்துச் சமையற்காரனான தவசிப் பிள்ளை வந்து என்ன சமையல் செய்வது என்று பணிவுடன் கேட்டான். அன்று அவர் சாப்பிடவேண்டிய மெனுவை அப்படியே ஒரு வெண்பாவாகச் சொன்னார்.

"சற்றே துவையல் அரை; தம்பி ஒரு பச்சடி வை,
வற்றல்ஏ தேனும் வறுத்துவை - குற்றம்இலை
காயமிட்டுக் கீரைகடை; கம்மென வேமிளகுக்
காயரைத்து வைப்பாய் கறி."

மிளகுக்காய் என்பது மிளகாயின் பழைய பெயர். மிளகுக்கு பதிலாக நம் சமையலில் இடம் பெற்றது; போர்த்துகீசியரின் உபயம்.

'பெருங்காயம் சேர்த்துக் கடைந்த கீரை; மிளகாய் அரைத்து வைத்த கறி; வற்றல்; ஒரு பச்சடி; ஒரு துவையல்'

நல்ல ருசியான உணவு. 'கொங்கன் வந்து பொங்கியுண்டு’ச் செத்த நாக்கைச் சரிக்கட்டி விட்டிருக்கும்.


==========================
.
10 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

கலக்கறீங்க விதூஷ்! திருக்காட்டுபபள்ளி எப்படியிருக்கிறதோ இல்லையோ, மடைப்பள்ளிக்காரனுக்குச் சொன்ன பாட்டு சூப்பர்!

நேசமித்ரன் said...

வாய் அடைத்து பாய் நிற்கிறேன் அடேயப்பா
பாடல்கள் ,சரித்திரம் ,பாடல்களுக்கான விளக்கம்
விதூஷ் மெருகேறிய பதிவுகள் !

Vidhoosh said...

என் பழைய பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்டவர்களுக்கு பதில் சொல்ல, மற்றும் மற்ற பதிவர்கள் பதிவுகளுக்கும் பின்னூட்டம் இட முடியவில்லை. மன்னிக்கவும். நேரமின்மை, மற்றும் அடிக்கடி பவர் கட் ஆவது இரண்டுமே காரணம்.

நண்பர்கள் மன்னிக்க.
-வித்யா

Nundhaa said...

யப்பா ... எவ்வளவு தெரிஞ்சிருக்கு உங்களுக்கு ... யப்பா ... எவ்வளவு தெரியலை எனக்கு ... யப்பா ...

Anonymous said...

எங்க ஊர்க்காரங்க சமையல்ல குத்தமா கண்டுபிடிக்கறீங்க :)

Vidhoosh said...

Raghavan, syednavas, krishna54, tharun,idugaiman, suthir1974, kvadivelan,jegadeesh,gowtham

THANKS FOR VOTING IN TAMILISH.

=========

Hi ssrividhyaiyer,

Congrats!

Your story titled 'திருக்காட்டுப்பள்ளி' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 5th October 2009 03:54:03 PM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/121257

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

THANK YOU TAMILISH.

Vidhoosh said...

கி.மூ. நன்றி.

நேசன் - இதென்ன உங்கள் கவிதையா. :)) நான்தான் உங்கள் கவிதைகளால் வாயடைத்து, நான் எழுதுவதெல்லாம் கவிதையான்னு யோசிக்கிறேன்.

நந்தா: இதென்ன பாராட்டா பகடியா.. உங்களிடம் திட்டு வாங்கி வாங்கி, I am just reading between the lines of your comments and a smile behind it.

--வித்யா

Vidhoosh said...

சின்ன அம்மிணி: எந்தச் சமையலாவது தஞ்சாவூர் சமையலை மிஞ்சுமா? சான்ஸே இல்லைங்க.

-வித்யா

நசரேயன் said...

//'பெருங்காயம் சேர்த்துக் கடைந்த கீரை; மிளகாய் அரைத்து வைத்த கறி; வற்றல்; ஒரு பச்சடி; ஒரு துவையல்'//

எனக்கு கோழி பிரியாணி

அனுஜன்யா said...

அடேங்கப்பா. சூப்பர் போஸ்ட். நந்தா சொன்னதேதான் :)

அனுஜன்யா

Post a Comment