கர்ணன் என் காதலன் - 2

வசுஷேணன் என்று பெயரிடப்பட்டாலும் அவன் கர்ணன் என்றே உலகறியப்பட்டான்.

ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமரைப் பற்றியறிந்த பிறகு, கர்ணனுக்கு, முனிவராக இருந்தாலும், தலைசிறந்த போர்வீரராகத் திகழும் அவரைப் பற்றிய விபரங்களை அறிவதில் ஆர்வமேற்பட்டது. பரசுராமர் இந்திய நாட்டை இருபத்தியொரு முறை முழுமையாக விஜயம் செய்திருக்கிறார். அவரை எந்த க்ஷத்திரியனாலும் வெல்ல முடியாது. அவர் தன் வில்லில் நாணேற்றினால் எதிரிகள் நடுங்குவார்கள். க்ஷத்திரியர்களின் மேல் உள்ள வெறுப்பால், பிராமணர்களுக்கு மட்டும் வில் வித்தை பயிற்றுவித்து வந்தார். வில் வித்தையில் உள்ள நுணுக்கங்கள் அனைத்தையும் அறிந்தவராக இருந்த அவரை தன் குருவாகவே பாவித்து வளர்ந்தவன் கர்ணன்.அவரிடமே மாணவனாகி விற்பயிற்சி பெற விரும்பிய கர்ணன் மனதிற்குள் சூதவம்ஸியான தன்னை மாணவனாக அவர் ஏற்பாரா என்ற கவலையும் இருந்தது. இதனால், கர்ணன் தான் ஒரு பிராமணன் என்று பொய்யுரைத்து அவரிடம் வில்வித்தை பயில்கிறான். குருவை மிஞ்சும் சிஷ்யனாகிறான். ஒருநாள், பரசுராமர் இவன் மடியில் சாய்ந்து உறங்குகையில், கர்ணனின் தொடையை இந்திரன் தேள் ரூபத்தில்  துளைக்கிறான். இதனால் உண்மையறிந்த பரசுராமர் அவனுக்கு சாபமிடுகிறார்.


ராம்தாரி சிங் தினகர் என்பவர் எழுதிய "ரஷ்மிரதி" என்ற தொகுப்பில் இருந்து ஒரு பாடல். இந்த முழுத் தொகுப்பும் இங்கே ஹிந்தியில் இருக்கிறது.

தேஜஸ்வி சம்மான் கோஜ்தே நஹி கோத்ரா பத்லா கே
(உயரிய பெரியோர்கள் பெருமையை கோத்திரம் சொல்லித் தேடமாட்டார்கள்)
பாதே ஹை ஜக் மே பிரஷஸ்தி அப்னா கர்தப் திக்லா கே
(உலகின் முன் தன் திறமையைக் காட்டி பிரபலம் ஆகிறார்கள்)
ஹீன் மூல் கீ ஓர் தேக் ஜக் கலத் கஹெ யா டீக்
(உலகம் தவறென்றும் சரியென்றும் சொல்லால் கூட, ஒரு செயலால் விளையும் பலனை மட்டும் நோக்க வேண்டும்)
வீர் கீன்ச் கர் ஹீ ரஹதே ஹை இதிகாஸோமே மே லீக்
(வீரர்கள் இதிகாசங்களில் தன் பெயரை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்)
சூத்-வன்ஷ் மே பல, சகா பீ நஹி ஜனனி கா க்ஷீர் 
(சூத வம்சத்தில் வளர்ந்த இவன் தன்னைப் பெற்றவளின் தாய் பாலை கூட அருந்தவில்லை)
நிக்லா கர்ண ஸபி யுவகோ மே தப் பீ அத்புத் வீர்
(இப்படி இருந்தும் கூட அனைத்து இளைஞர்களிலும் கர்ணனே அற்புதமான வீரனாக இருந்தான்)
தன் ஸெ சமர்ஷூர், மன் ஸெ பாவுக், ஸ்வபாவ் ஸெ தானி
(உடலால் பரம வீரன், மனத்தால் உணர்வுமயமானவன், குணத்தால் தானியும் ஆவான்)
ஜாதி-கோத்ர கா நஹி, ஷீல் கா, பௌருஷ் கா அபிமானி
(ஜாதி, கோத்திரத்தால் உயர்ந்தவன் இல்லை என்றாலும், ஆண்களில் விரும்பத்தகுந்தவன் அவனே)

என் பதின்பருவத்தில், கர்ணனை முதலில் ராம்தாரி சிங் தினகர் அவர்கள் எழுதிய ரஷ்மிரதியில்தான் பார்த்தேன். கண்டதும் காதல் என்பார்களே, அது இவர் எழுத்தில் கண்ட கர்ணன் மீது ஏற்பட்டு விட்டது. :))

கர்ணனின் வீழ்ச்சிக்கு காரணமானவை:
  1. குந்திக்கு துர்வாசரின் வரம், கர்ணனுக்கு கிடைத்த முதல் சாபம். பிறப்பெனும் சாபம். பிறப்பால் அவனே ஹஸ்தினாபுர அரியணைக்கு உரிமை கொண்டவன். பாண்டவர்களில் அவனே மூத்தவன். பிறப்பின் இரகசியம் தெரியாததால், அவன் பிறப்பே அவனுக்கு சாபமானது.
  2. தக்க சமயத்தில் திறமைகள் உதவாமல் போக வேண்டும் என்ற பரசுராமரின் சாபம்
  3. அறியாமல் விலங்கென நினைத்து, பசுவைக் கொன்றதால், பரம எதிரியுடன் போரில் இருக்கும் போது எல்லாம் இருந்தும் பலனின்றி உதவியின்றிப் போவான் என்ற பிராமண சாபம்.
  4. ஒரு பெண்குழந்தை கேட்டதால், பூமியைப் பிழிந்து நெய்யெடுத்ததால், "எதிரிகளிடம் சிக்கி அழியும் வண்ணம் தேர் பூமியில் புதைய வேண்டும்" என்ற பூமாதேவியின் சாபம் 
  5. யாசகனுக்கு தன் கவச குண்டலங்களை தானமிட்டது 
  6. துரோணரின் சதியால், சக்தியாயுதத்தை கடோத்கஜன் மீது எய்து வீணடித்தது
  7. குந்திக்கு செய்த இரு சத்தியங்கள், அதில் ஒன்றான நாகாஸ்திரப் பிரயோகம்
  8. கூடவே இருந்து வஞ்சித்த தேரோட்டி சல்லியன், இவன் வார்த்தைகள் கர்ணனை சோர்வுறச் செய்தன.
  9. அபிமன்யுவின் மரணம் கொடுத்த வேதனை
  10. பதினேழாம் நாள் காந்தாரி, கர்ணனை ஆசிர்வதிக்க மறுத்தல்
கர்ணனுக்கும் குந்திக்கும் இடையேயான சம்பாஷணைகள் 
(மொழி பெயர்க்கப்பட்டது)
கர்ணன் : புனிதமான ஜானவி நதிக்கரையில், அந்தி சாயும் பொழுதில், தேரோட்டி அதிரதன் மற்றும் இராதையின் மகனான கர்ணன் உங்களை வணங்குகிறேன். மாதரசியே. நீங்கள் யார்?

குந்தி(மனதிற்குள்): இளைஞனே. முதன்முதலில் இந்த உலகிற்கு உன் அறிமுகம் என்னாலே ஏற்பட்டது. உன் தாயானவள் நான்தான், ஆனால் அதை உன்னிடம் கூறவே வெட்கப்படுகிறேன்.

கர்ணன் : மரியாதைக்கு உரியவரே, சூரியனைக் கண்ட பனி போல, உங்கள் குனிந்த இமைகளின் ஒளியினால் என் இதயம் உருகுகிறது. உங்கள் குரல் என் இதயத்தில் பூர்வ ஜன்ம நினைவுகளைக் கிளறி துன்புறுத்துகிறது. உங்களை யாரெனத் தெரியவில்லையே? பெண்மணியே. உங்களுக்கும் எனக்குமான அந்த பந்தம்தான் என்ன? மர்மமாக உள்ளதே?

குந்தி: பொறுமையாக இருக்க. சூரியன் அஸ்தமிக்கட்டும். இருள் சூழட்டும். வீரனே. நான் குந்திதேவி.

கர்ணன்: அர்ஜுனனின் தாயான குந்திதேவி நீங்களோ?

குந்தி: அர்ஜுனனின் தாய்தான். ஆனால் அதற்காக என்னை வெறுத்துவிடாதே. நீ சிறுவயதில் ஹஸ்தினாபுர போட்டி அரங்கிற்குள் தயங்கித் தயங்கி மெல்ல வந்தாயே, அது இன்றும் என் நெஞ்சில் இருக்கிறது. நட்சத்திரங்களுக்கிடையே சூரியன் கிழக்கில் மெல்ல உதிப்பதைப் போன்றே இருந்த அந்தக் காட்சி என் மார்பில் சொல்லவொண்ணாத் துயரத்தை விளைவித்தது. அர்ஜுனன் தாயாக நானே திரை மறைவிலிருந்து உன்னை கண்டு கொண்டிருந்தேன். உன் கரங்களை என் பார்வை முத்தமிட்டுக் கொண்டிருந்தது. கிருபாச்சாரியார் உன் தந்தையின் பெயரை அறிவிக்கச்சொல்லி, "க்ஷத்திரியன் அல்லாதவன் அர்ஜுனனுடன் போட்டியிடத் தகுதியில்லாதவன் என்றறிவித்த போது, நீ வாயடைத்து, வெட்கத்தால் முகஞ்சிவந்து, தலை குனிந்து நின்றாயே கர்ணா. நான் அன்றிலிருந்து அவமானத்தின் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கிறேன், அர்ஜுனனின் தாயான நான்தான் அவள். துரியோதனனை ஆசிர்வதிக்கிறேன். அவன் புண்ணியன், உன்னை அங்க அரசனாக்கினான். அவனை வாழ்த்துகிறேன். உனக்கு முடி சூட்டப்பட்ட பொழுது, என் கண்களில் கண்ணீர் பெருகி, உன்னை அணைக்கத் தோன்றியது. அதிரதன் அதிருஷ்டசாலி, அவனால் உன்னை பெருமையுடன் அணைத்துக்கொள்ள முடிந்தது. நீயும் அரசனான பெருமிதத்தில் தலை நிமிர்ந்திருந்தாய்.இலட்சக்கணக்கான பிரஜைகளின் ஆரவாரத்தில் திளைத்துக் கொண்டிருந்தாய். உன்னை வணங்கிய உன் சாரதியை தந்தையே என்று அழைத்து அவரை வணங்கினாய். குரூரத்தோடு புன்னகைத்துக் கொண்டிருந்த பாண்டவர்களின் இடையே அமர்ந்து, வீரனே, உன்னை வாழ்த்திக் கொண்டிருந்த பெண், அர்ஜுனனின் தாயான நான்தான்.

கர்ணன்: அப்படியா. மகிழ்கிறேன் மாதரசியே. உங்களை வணங்குகிறேன். நீங்கள் இந்தப் போர்க்களத்தில் ஏன் தனியாக இருக்கிறீர்கள். நான் கௌரவர்களின் சேனாதிபதி.

குந்தி: உன்னிடம் ஒரு வேண்டுகோளோடு வந்துள்ளேன். என்னை வெறும் கையேடு அனுப்பிவிடாதே.

கர்ணன்: வேண்டுகோளா? அதுவும் என்னிடமா? அப்படி நீங்கள் வேண்டினால் தர்மத்திற்கு உட்பட்ட எதையுமே தங்கள் காலடியில் சமர்பிப்பேன்.

குந்தி: உன்னை நான் திருப்பி அழைத்துப் போக வந்துள்ளேன்.

கர்ணன்: அப்படி நீங்கள் என்னை எங்கு அழைத்துப் போவீர்கள்?

குந்தி: உனக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் என் இதயத்திற்கு. என் தாய்மடிக்கு உன்னை அழைக்கிறேன்.

கர்ணன்:
பெண்மணியே. ஏற்கனவே நீங்கள் ஐந்து மகன்களால் வரம் பெற்றுள்ளீர்கள். நானோ சாதாரண அரசன், எந்தப் புகழும் இல்லாதவன். உங்கள் இராஜ்ஜியத்தில் எனக்கேது இடம்? எனக்கென்ன இடமளிப்பீர்கள்?

குந்தி: எல்லோரையும் விட மேன்மையான இடம். உன்னை என் மகன்களுக்கெல்லாம் மூத்தவனாக்குகிறேன்.

கர்ணன்: எந்த உரிமையில் அப்படிப்பட்ட தலை சிறந்த இடத்தை அளிக்கிறீர்கள்? எப்படி என்று கூறுங்கள்? ஏற்கனவே ஏமாற்றப்பட்ட அந்த இராஜ்ஜியத்தின் சொத்துக்களில் எந்தப் பகுதியை நான் எனதாக்க முடியும், அவை பாண்டவர்களுடையது. மேலும் அவர்களுக்கே உரிமையான தாயன்பை நான் எப்படிப் பெற முடியும்? அதிகாரத்தால் பெற ஒரு தாயின் இதயம் சூதாட்ட களமில்லை, அந்த உரிமை இறைவனின் நற்கொடை.

குந்தி: ஐயோ என் மகனே. அந்த இறைவனின் நற்கொடையால் உரிமையாக அன்றொரு நாள் நீ என் மடிக்கு வந்தாய். இன்று அதே உரிமையில் மீண்டும் வந்து விடு. கவலைப் படாதே. நீ உனக்கான இடத்தை உன் சகோதரர்களிடம் எடுத்துக்கொள், உன் தாய் மடியை மீட்டுக்கொள்.

கர்ணன்: மரியாதைக்குரிய பெண்மணியே. நான் கனவில் காணுவது போல் கேட்கிறது உங்கள் குரல். இருள் நாலாபுறமும் சூழ்ந்து விட்டது. நான்கு ஜாமம் கழிந்து விட்டது. நதிகளும் ஓடைகளும் அமைதியாகிவிட்டன. நீங்கள் என்னை ஏதோ மறந்து விட்டக் கனவுலகிற்கு அழைக்கிறீர்கள். ஏதோ கடந்தகால உண்மை போல உங்கள் வார்த்தைகள் என் இதயத்தை மயக்குகிறது. நானே இழந்துவிட்ட என் குழந்தைப் பருவம் போல, எனக்கு மறந்துவிட்ட கருவறையின் இருள் இன்றெனைச் சுற்றி வளருகிறதே? ராஜ மாதா. உங்கள் அன்புக்கு நன்றி. இது கனவோ, நனவோ, உங்கள் கரங்களை என் நெற்றியில், கன்னத்தில் ஒரு நிமிடம் வையுங்கள். என்னைப் பெற்ற தாயார் என்னை விட்டுச் சென்றதாக நான் அறிவேன். மெல்ல மெல்ல நடந்து, அன்புடன் என் தாய் என்னிடம் வருவதாக, எத்தனை இரவுகளில் இப்படிப்பட்டக் கனவுகளை நான் கண்டிருப்பேன்.  அவளை என் கண்ணீருக்கூடே  பார்த்திருக்கிறேன். அவளிடம் கெஞ்சியிருக்கிறேன் "தாயே. உங்கள் முகத்திலிருக்கும் திரையை விலக்குங்கள்" என்று என் குரல் ஒலித்ததும், அவள் மறைந்து விடுவாள். என்னை கண்ணீரில் நனைத்துவிட்டு, பேராசையின் தீராத தாகத்தோடு அந்தக் கனவும் மறையும். பாகீரதி கரையில், போர்க்களத்தில், இன்றைய இரவில், அந்தக் கனவேதான் நினைவாகி இன்றும் பாண்டவர்களின் தாயாக வந்திருக்கிறதோ, ஐயோ! பெண்மணியே, அந்தக் கரையில் பாண்டவர்களை பாசறை உள்ளது. அந்த வெளிச்சம் இக்கரைக்கு வருகிறது. என் கூடாரம் வெகு தொலைவில் இல்லை. கௌரவர்களின் பல்லாயிரக்கணக்கான குதிரைகளின் குளம்பொலிகல் ஓய்ந்து கொண்டிருக்கிறது. நாளை காலை பெரும் போர் மூளும் இந்தச் சூழலில், அர்ஜுனனின் தாயான உங்கள் வாயால், என் தாயின் குரலை நான் ஏன் இன்றிரவு கேட்க வேண்டும். அர்ஜுனனின் தாய் வாக்கில் என் பெயர் ஏன் ஒரு அற்புதமான இசை போல ஒலிக்க வேண்டும்? என் இதயம் பாண்டவர்களை சகோதரர்களே என்றழைத்து அணைக்கவும் ஓடுகிறதே?

குந்தி: அப்படியென்றால் இப்போதே என்னுடன் வந்துவிடு.

கர்ணன்: சரி தாயே. நான் உங்களுடன் வருகிறேன். எந்தக் கேள்வியும் கேட்க மாட்டேன். பெண்மணியே. நீங்கள் என் தாயாவீர்கள். உங்கள் அழைப்பு என் ஆன்மாவை எழுப்புகிறது. என்னால் போர் முரசுகளை கேட்க முடியவில்லை. சங்கு முழக்கங்கள் என் காதில் விழவில்லை. போரின் வன்மம், வீரனுக்கான புகழ், வெற்றி தோல்விகள், எல்லாமே பொய்யெனத் தோன்றுகிறது. என்னை அழைத்துக் கொள்ளுங்கள். நான் எங்கு வரவேண்டும்?

குந்தி: அங்கே, அக்கரைக்கு, வெளிறிய மணல் மீது கூடாரங்களின் விளக்கொளி ஜொலிக்கிறதே, அங்கு.

கர்ணன்: அங்கு, தாயில்லாத ஒரு மகன், தன் தாயை எப்போதைக்குமாக நிரந்தரமாகப் பெறுவான் இல்லையா? அங்கு ஒரு துருவ நட்சத்திரம் உங்களின் அன்பு நிறைந்த விழிகளை இரவெல்லாம் விழித்திருக்க வைக்கும். பெண்மணியே! இன்னொரு முறை நான்தான் உங்கள் மகன் என்று கூறுங்கள்.

குந்தி: மகனே.

கர்ணன்: அப்படியென்றால், என்னை அவமானமாகக் கருதி ஏன் விட்டெரிந்தீர்கள்? என் குடும்பத்தின் புகழ் எனக்கில்லாமல் செய்தீர்கள். என் தாயின் அன்புப் பார்வை என் மேல் படாமல் செய்தீர்கள். இந்த இரக்கமற்ற குருட்டு உலகின் முன் என்னை ஏன் தனியாக்கினீர்கள்? என்னை ஏன் நதியின் ஓட்டத்தில் திரும்பி வரவே முடியாதளவு தூரத்திற்கு அனுப்பினீர்கள்? என் சகோதரர்களிடமிருந்து விலக்கி வைத்தீர்கள்? அர்ஜுனனுக்கும் எனக்குமான இடைவெளிக்கு நீங்களே காரணம். சிறு வயதிலிருந்து வளர்ந்திருக்க வேண்டிய சகோதர பாசம், தவிர்க்க முடியாத பகைமையாக மாறியது. இந்த வஞ்சம் விஷமாகக் கசக்கிறது எனக்கு. தாயே! இதற்கெல்லாம் உங்களிடம் பதில் இல்லையா? உங்களின் அவமானத்தை நான் உணர்கிறேன். அந்த அவமானம்  இந்த இருளிலும் வார்த்தைகளே இல்லாமல் என் நரம்புகளைச் சுடுகிறது. என் கண்கள் இருட்டுகிறது. அப்படியே இருக்கட்டும். என்னை விட்டெறிந்த காரணத்தைக் கூறவே வேண்டாம். தாயன்பு ஒன்றேதான் இறைவனின் முதல் அன்பளிப்பு. அந்த புனிதமான ஒன்றை உங்கள் குழந்தையான என்னிடமிருந்து ஏன் பறித்தீர்கள்? இதற்கும் நீங்கள் பதில் சொல்ல விரும்ப மாட்டீர்கள். ஆனால் இப்போது மட்டும் என்னை ஏன் திரும்பப் பெற வந்துள்ளீர்கள் என்று மட்டும் சொல்லுங்கள்.

குந்தி: மகனே. உன் வார்த்தைகள் என்னை ஆயிரம் இடிகள் போல துளைக்கின்றன. என் இதயத்தை தூள் தூளாக்குகின்றன. உன்னை விலக்கிய சாபம் இன்றும் என்னை துன்புறுத்துகிறது, அதனாலோ ஏன் இதயம் ஐந்து குழந்தைகள் இருந்தும் குழந்தைக்காக ஏங்குகிறது. மகனே. உன்னை ஏந்திக் கொள்ள என் மனம் தவிக்கிறது. இந்த உலகில் உன்னையே துழாவி தேடியது என் கரங்கள். தனித்து விடப்பட்ட அந்த குழந்தைக்காகவே என் இதயமெனும் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அதன் ஜோதி என்னையே எரிக்கிறது. நான் மிகவும் துரதிருஷ்மானவள். உன் வாய் மழலை பேசும்முன்னே உனக்கு கொடுமையானதொரு துரோகம் செய்தேன். அதே வாயால் இந்த கொடூரமான தாயை மன்னித்துவிடு மகனே. உன் மன்னிப்பின் ஜ்வாலை என் இதயத்தில் இன்னும் ஏதும் கெட்ட எண்ணங்கள் இருந்தால் அவற்றை எரிக்கட்டும். என் பாவங்களை சாம்பலாக்கி என்னை புனிதமாக்கட்டும்.

கர்ணன்: தாயே. சிறிது உங்கள் பாததூளியைக் கொடுங்கள். என் கண்ணீரால் அவற்றைத் துடைக்கிறேன்.


குந்தி: மகனே. உன்னை என் மார்போடு அணைத்துக்கொள்ள மட்டும் இன்று வரவில்லை. உன்னை உன் உரிமையான இடத்திற்கு கூட்டிச் செல்லவே வந்துள்ளேன். நீ சூதபுத்திரன் இல்லை. நீ ஒரு க்ஷத்திரியன். உன் அவமானங்களைத் துடைத்து எறிந்துவிட்டு, உன் ஐந்து சகோதரர்களுக்கு மூத்தவனாக திரும்பி வா.

கர்ணன்: ஆனால் தாயே. நிதர்சனத்தில் நான் சூதபுத்திரன்தானே. இராதையே என் தாய் என்ற அந்தப் பெருமை  எனக்கு எல்லாவற்றையும் விட மேலானது. பாண்டவர்கள் பாண்டவர்களாகவே இருக்கட்டும். கௌரவர்களும் அப்படியே இருக்கட்டும். எனக்கு யார் மீதும் வருத்தம் இல்லை. வஞ்சமில்லை.

குந்தி: உன் புஜபலத்தால் உன் இராஜ்ஜியத்தை மீட்டெடு என் மகனே. யுதிஷ்டிரன் உனக்கு சாமரம் வீசுவான். பீமன் உனக்கு குடை பிடிப்பான். அர்ஜுனன் உனக்கு சாரதியாவான். தௌமிய மகரிஷி வேத மந்திரங்களை உச்சரித்து புரோதிதம் செய்யட்டும். எதிரிகளை வெல்பவனே, நீ உன் உறவுகளுடன் மகிழ்ந்திருப்பாய். யாருடனும் பங்கு கொள்ளாத பேரரசனாக அலங்கரிக்கப்பட்ட அரியணையில் அமர்ந்து நீயே இந்த இராஜ்ஜியம் முழுதும் ஆள்வாய்.

கர்ணன்: அரியணை? தாயே. அன்று தாய்மையின் அன்பை மறுத்த நீங்கள், இன்று எனக்கு அரியணையின் உத்திரவாதங்களை அளிக்கிறீர்களா? இதே உரிமைகளையும், இராஜ்ஜியங்களையும் என்னிடம் இருந்து நீக்கியது நீங்கள்தானே. என்னிடமிருந்து பறிக்கப்பட்ட எதையும் நீங்கள் திருப்பியளிக்கவே முடியாது. நான் இழந்தவை இழந்தவைதான். அவை உங்கள் கட்டுப்பாட்டினின்றும் மீறிவிட்டன. நான் பிறந்தபோது, தாயே, என் தாயிடமிருந்து, சகோதரர்களிடமிருந்து, இராஜ குடும்பத்திலிருந்து ஒரே நிமிடத்தில் என்னைப் பிரித்துத் தூக்கி எறிந்தீர்கள். ஆனால் இன்றோ, நான் என்னை வளர்த்த அன்பே உருவான அன்னை, தேரோட்டி குலத்தை சேர்ந்த இராதையை ஏமாற்றி, பெருமைக்காக இராஜகுலத்தோடு இணைவேனென்றும், அரியணையின் ஆசையில் உங்களோடு வந்து விடுவேன் என்றும் நீங்கள் நினைத்தால், அவற்றை நான் மறுக்கிறேன்.

குந்தி: நீ சுத்த வீரன்தான். மகனே. தர்மவானே. உன் நியாயம் எவ்வளவு உறுதியாக இருக்கிறது? அன்று உதவியற்ற ஒரு பச்சிளங்குழந்தையை விட்டுச் சென்றபோது, அவன் இப்படிப்பட்ட பேராற்றல்களைப் பெற்று வீரனாவான் என்று யாருக்குத் தெரியும்? அவனே மீண்டும் திரும்பி இருள் சூழ்ந்த பாதை வழியாக, தன் கையில் குரூரமான ஆயுதங்களை ஏந்தி, தன் தாய்க்குப் பிறந்த தன் சகோதரர்களையே நோக்கி வருவான் என்று யாருக்குத் தெரியும்? இதென்ன சாபம்?

கர்ணன்: தாயே. கலங்க வேண்டாம். நான் இன்றே சொல்கிறேன். பாண்டவர்கள்தான் வெல்வார்கள். இந்த இரவின் சாயலில் இந்தப் போரின் முடிவில் பாண்டவர்களின் வெற்றி எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.  இந்த அமைதியான, சலனமற்ற பொழுதில், எல்லையே இல்லாத ஆகாசத்தின் ஊடே வெற்றியடையப் போகாத ஒரு முயற்சி, நம்பிக்கையில்லாத உழைப்பின் வேர்வைத்துளிகள் போலவே நான் இருக்கும் இந்தப் போர்களத்தின் கடைசி நாளன்று வெறும் அமைதியும் வெறுமையும் மட்டுமே எனக்குத் தெரிகிறது. இந்தப் பக்கம் தளர்ந்து கொண்டே வருகிறது. பாண்டு புத்திரர்கள் வெல்லட்டும். அவர்களே அரசர்களாகட்டும். இந்தக் கூடாரத்தை விட்டு என்னை வரச் சொல்லாதீர்கள். நான் நம்பிக்கைகள் தூளாகித்  தோற்பவர்களின் பக்கமே இருந்துவிட்டுப் போகிறேன். நான் பிறந்த அன்றைய இரவில் என்னைத் தனியாக, பெயரின்றி, வீடின்றி இவ்வுலகில் விட்டுச் சென்றீர்கள். அதே போல இன்றைய இரவும், இரக்கமே இல்லாமல், உங்கள் இதயத்தைக் கொன்றுவிட்டு, என்னை விட்டுச் சென்று விடுங்கள் தாயே. என்னை தோற்கவிடுங்கள், புகழே இல்லாமல், பெருமையில்லாதவனாக தனியனாக்கிச் செல்லுங்கள் தாயே. நீங்கள் போவதற்கு முன், ஒரே ஒரு வரமளித்துச் செல்லுங்கள், நான் சுத்த வீரனாக, மார்பில் காயம் கொண்டு இறக்கும் வரை வெற்றியின் நம்பிக்கை என் இதயத்தைவிட்டு நீங்கக் கூடாது என்ற ஒரே வரமளியுங்கள்.(தொடரும்)
.

10 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

குந்தியும் கர்ணனும் தங்களை இன்னாரென ஒருவருக்கொருவர் அறிவித்துக் கொள்ளும் இந்தப்பகுதி, மகாபாரதத்தைப் படிக்கையில் என்னை மட்டுமல்ல அத்தனை பேரையும் நெகிழவைத்துக் கண்ணீர் சிந்த வைத்த இடம்.

கண்ணதாசனின் இந்தத் திரைப்படப் பாடல் வரி அத்தனை உணர்வுகளையும் தொட்டுச் சொல்கிறதே:

தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா!

விக்னேஷ்வரி said...

மனம் கலங்கும் உரையாடல். அளித்ததற்கு நன்றி வித்யா.

kamala said...

Lovely post and even i like karnan character very much.

நேசமித்ரன் said...

பீஷ்மரையும் கர்ணனையும் கும்ப கர்ணனையும் அனுமனையும் நாத்திகனும் கூட விரும்புவானே வித்யா நல்ல இடுகை உங்கள் டச் !!!

தேவன் மாயம் said...

கர்ணனின் உண்மைப் பெயர் இப்போதுதான் எனக்குத்தெரிகிறது

நசரேயன் said...

தொடர வாழ்த்துக்கள்

R.Gopi said...

மிக மிக அருமை...

விதூஷ்... தொடருங்கள்...

குந்தி-கர்ணன் உரையாடல் பலே....

இன்றைய கவிதை said...

தங்களுடைய முயற்சி அருமை. 'ரஷ்மிரதி'யை அறிமுகப்படுத்தியதில் நன்றி பல. குந்தி-கர்ணன் உரையாடல் எப்போதும் கண்களில் நீரை வரவழைப்பவை. இருந்தும் சில கருத்துக்களைப் பதிவு செய்ய விழைகிறேன்.

இரவில் கடோத்கஜனைப் போரில் இறக்கி, கௌரவப் படையை நாசம் செய்து, துரியோதனன் மூலம் 'சக்திஆயுதம்' எறியச் செய்தது 'எல்லாம் வல்ல' கண்ணன் என்பது கதை. துரோணரின் சதி அல்ல!

வில்லி பாரதம் மற்றும் தங்களுடைய பதிவு கர்ணனை உயர்த்திக் காட்டியுள்ளன. வியாச மஹரிஷியைப் பொறுத்தவரை, கர்ணன் 100+1 ஒன்றாகக் கருதப்படுகிறான். கர்ணன்-தான் திரௌபதியை சபைக்கு அழைத்து வரும்படியும், துரியோதனன் மடியில் உட்காரும்படியும் வற்புறுத்தியதாக வியாச பாரதம் கூறுகிறது.

நாகாஸ்திரத்தை மார்பில் எறியுமாறு சல்லியன் வற்புறுத்தியும் கேளாது கழுத்தில் கர்ணன் எறிய, கண்ணன் தேரை அழுத்த, அர்ஜுனனின் கிரீடம் பறிபோகிறது. ஆக, சல்லியன் கர்ணனை முழுதும் நிலைகுலையச் செய்தான் என்று சொல்வதற்கில்லை. ஆயின், பங்கு வகித்தான் என்பதில் ஐயமில்லை.

-கேயார்

Vidhoosh said...

அன்பின் கேயார்.
நன்றி. இன்னொரு முறை பார்த்து விடுகிறேன்.
:)
வித்யா

Vidhoosh said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி.
-வித்யா

Post a Comment