தீபத் திருநாளை கொண்டாட வீட்டை சுத்தமாக துடைத்து / அலம்பி விட்டு இழை கோலம் போடலாம். வாசலிலும் கோலம் போட்டு விளக்கு வைத்தால் அழகாக இருக்கும்.
வீட்டில் உள்ள அனைவரும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். புதிய ஆடைகள் வாங்கி இருந்தால் அணிந்து கொள்ளலாம்.
சுவாமி இடத்தை சுத்தம் செய்து ஐந்து முக விளக்கேற்றவும். வெள்ளி விளக்கென்றால் நெய் மட்டும் தான் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். வெண்கலம், பித்தளை அல்லது மண் விளக்கென்றால் மட்டுமே நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்ற வேண்டும்.
புது அகல் விளக்குகளை வாங்கினாலும் / பழைய அகல்களையே பயன்படுத்தினாலும், ஒரு வாரம் முன்பே ஏதோ சனிக்கிழமையன்று இரவு முழுதும் தண்ணீரில் போட்டு வைத்து, மறுநாள் ஞாயிறு காலையில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பண்டிகையின் முதல் நாள் இரவே, விளக்குகளில் முக்கால் பாகம் எண்ணெய் ஊற்றி, திரிகளை இட்டு வைத்துக் கொள்ளவும். விளக்குகளில் வழிய வழிய எண்ணெய் ஊற்றக் கூடாது. தரை வீணாகும்.
விளக்குத் திரியின் முனையை நன்றாக கூர்மையாக திரிக்கும் போது, கற்பூரத்தைப் பொடித்துக் கொண்டு விரலால் அதை தொட்டுத் தொட்டுத் திரித்தால் விளக்கேற்றும் போது டக்கென்று ஏற்ற முடியும். திரி விளக்கின் உள்ளேயே இருக்குமாறும், ஒரு முத்து போல விளக்கின் ஜோதி சுடர் விடுமாறும் விளக்கேற்ற வேண்டும். கொழுந்து விட்டு எரிந்தால் சீக்கிரமே விளக்கு திரி அடி வரை தொடர்ந்து எரிந்து, எண்ணெய் வேறு கீழே சிந்தும்.
சமையல்:
"பண்டிகைச் சமையல் நம் தென்னிந்தியாவில் ஏற்பட்ட சாபம். வீட்டுப் பெண்கள் பண்டிகை என்றாலே பயந்தோடும் அளவுக்கு பண்டிகை சமையல்கள் உள்ளன" என்று என் தோழிகள் புலம்புவதைக் கேட்டிருக்கிறேன். அதனால் உருவானதுதான் இந்த வலைப்பூவே. முன்னமே திட்டமிட்டுத் தயார் செய்து கொண்டால் எந்த நாள் சமையலும் சுலபமாகவே இருக்கும்.
காலையில் பண்டிகைச் சமையலாக:
பொரித்த அப்பளம் / வடகம்
மோர்
மாலையில் நிவேதனம் செய்ய:
நெல் / அவல் பொரி உருண்டை
இதில் வெல்ல அடை மற்றும் கார அடையை சாப்பிட்டாலே இரவு உணவு முடிந்த மாதிரிதான். காலையில் செய்த மோர் குழம்பே இருந்தால் அவியல் செய்ய வேண்டாம்.
கார்த்திகை பற்றிய கீழ்க்கண்ட சுவையான செய்திகள் பல்வேறு புத்தகங்கள் / துணுக்குகள்/இணையதளத்தில் இருந்து திரட்டியவை:
கார்த்திகை மாதம் தமிழ் மக்களின் வாழ்வியலில் கலாசார பண்பாடுகளில் சிறப்புக்குரிய மாதம். இந்துக்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையன்று புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து வழிபாடு செய்து அதனைக் கொண்டாடுவர். அதனைத் தொடர்ந்து கார்த்திகைத் தீபமும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையென்றால் அது வியப்பில்லை. இந்தத் தீபத் திருநாளில் வீடுகளில், ஆலயங்களில் தீபங்களை ஏற்றி வழிபடுவது தொன்றுதொட்டுப் பேணப்பட்டு வரும் தமிழர்களின் மரபு.
குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடம் இலட்சுமிகரமாக இருக்கும். ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை, அன்பு போன்றவற்றுக்கு ஒப்பிடுவார்கள். நமிநந்தி அடிகள், கலியநாயனார், கணம்பில்ல நாயானார் போன்றோர் திருவிளக்கு ஏற்றிவைத்து கோயில்களில் தொண்டு செய்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது.அகல், எண்ணெய், திரி, சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது ‘விளக்கு’ என்று அழைக்கப்படுகிறது. இவை அறம், பொருள், வீடு என்ற குறள் நெறியை உணர்த்துகின்றன. இவையே சரியை, கிரியை,யோகம், ஞானம் ஆகும். இந்த அறவொளியையே தீபமாக, தீப சக்தியாக நாம் வணங்குகிறோம்.
கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று இப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது. ஆதிகாலம் தொட்டே மக்கள் அக்னியைத் தெய்வமாகக் கொண்டாடி வந்தனர். அந்த அடிப்படைக் காரணம் தான் பெரும்பாலும் நம் பண்டிகைகளில் தீபங்களை ஏற்றிவைத்துக் கொண்டாடுகின்றோம். பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியைத் திருப்தி செய்வதுதான் இப்பண்டிகையின் நோக்கமாகும். அருட் பெருஞ்ஜோதியாம் ஆண்டவன் அருவமாகவும், உருவமாகவும் விளங்குவது போன்று அக்னியும் பிரகாசிக்கின்றது. அக்னியிலே பல விதமான தீபங்கள் தோன்றுவது போல் 'சிவம்' என்ற நாமம் ஒன்றே பல தத்துவங்களைக் கடந்து பற்பல ஜோதி ஸ்வரூபமாகக் காட்சி தருகிறது. அக்கினியின் சக்தியால் அழுக்கு களையப்படுகிறது.
ஹோமத்தில் எழுகின்ற அக்னியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கின்றோம். கார்த்திகை மாதம் முதல் தேதி தொட்டு கடைசி நாள் வரை தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வைத்துக் கொண்டாடுவர். தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களிலாவது தவறாது நல்லெண்ணெய் விளக்கேற்ற வேண்டும். கார்த்திகை மாதம் 1, 28 ஆகிய இரு தேதிகளில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின் 28-ம் தேதி வரும் நட்சத்திரத்தில்தான் திருக்கார்த்திகைப் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும்.
திருவண்ணாமலை
தீபத் திருவிழா என்றதுமே நம் நினைவில் வந்து நிற்பது திருவண்ணாமலை திருத்தலம்தான். திருவண்ணாமலை கார்த்திகை தீபம் தமிழ்நாட்டில் நடைபெறும் மிகப் பெரிய உற்சவங்களில் ஒன்று. பஞ்சபூதங்களான நிலம், நீர், தீ, காற்று, வானம் இவைகளால் ஆனதே பிரபஞ்சம். அவற்றுள் நெருப்பை வழிபடுவதுதான் தீபத் திருவிழா. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவது இக்கார்த்திகை மாதத்தில்தான்.
இவ்விழா பதினேழு நாட்களுக்கு பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலையில் குன்றின் சிகரத்தில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஜோதியானது, உலகம் முழுதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியைப் பரப்பும் சிவஞான ஜோதியாகப் பிரகாசிக்கும் என்பது ஐதீகம்.
வள்ளலார் ‘ஒளியின் வடிவம் சிவம்’ என்று கருதி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடினார். அப்பர் பெருமான் ‘நமசிவாய’ மந்திரமே ஒளிமயமானது என்கிறார்.
ருக்வேகத்தில் இந்திரனுக்கு அடுத்தபடியாக அக்னி பகவான் முக்கிய இடம் பெறுகிறார்.
கீதையில் கிருஷ்ண பகவான், விளக்கின் ஒளி போன்று மனதை ஆடாமல், அசையாமல் சஞ்சலமற்று ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்கிறார்.
திருமூலர் தீபவழிபாட்டை பற்றி திருமந்திரத்தில்:
”விளக்கொளியாகிய மின் கொடியாளை
விளக்கொளியாக விளங்கிடு நீயே !
விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே !
– என்று சிறப்பித்துக் கூறுகிறார்.
”நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட
தலைநாள் விளக்கில் தகைமை யுடைவளாகி…”
என்று கார்நாற்பது கூறுகிறது.
நன்மைமிக்க கார்த்திகை விழாவில் நாட்டினர் ஏற்றி வைத்த முதல் தீபத்தைப் போல் அழகுடையவளாய் என்பது பொருள்.
"உடம்பெனு மனையகத்து உள்ளமே தகழியாக
மடம்படும் உணர்நெய்யட்டி உயிரெனும் திரிமயக்கி
இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கிற்
கடம்பமர் காளைத்தாதை கழலடி காணலாமே."
"ஆடிப்பாடி அண்னாமலை தொழ ஓடிப்போம் நமதுள்ளவினைகளே" என்கின்றார் அப்பர் சுவாமிகள்.
‘கார்த்திகை தீபக் காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின் கண்கள் வெறும் புண்கள் ” என்றார் பொங்கையாழ்வார்.
தொல்காப்பியம் ‘வேலியின் நோக்கிய விளக்கு நிலையும்’ என்று கார்த்திகையில் ஏற்றிய விளக்கு பற்றிக் கூறுகிறது.
”கார்த்திகை விளக்கிட்டனன்” என்று மலையில் தீபம் ஏற்றுவதை சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது.
திருஞானசம்பந்தர், மயிலையில் அங்கம் பூம்பாவைக்கு புத்துயிர் அளிப்பதற்காய்ப் பாடிய திருப்பதிகத்தில், 'கார்த்திகை விளக்கீடு காணாத போதியோ' என்று பாடியுள்ளார்.
தீபம் ஏற்றப்படுவதற்கான புராண வரலாறு மிகவும் பிரசித்தமானது. பிரம்மாவும் விஷ்ணும் தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டியில் உலகையே அழிக்கும் வண்ணம் சண்டையிட்டுக் கொண்டிருந்த போது பரமசிவன் அவர்கள் முன் எல்லையில்லாமல் நீண்டு விரிந்த அக்னிஸ்தம்பமாகக் காட்சியளித்து, இந்த அக்னியின் அடிமுடியை யார் முதலில் காண்கிறார்களோ அவரே பெரியவர் என்றறிவித்தார். அடிமுடி காண முடியாத அனற்பிழம்பாகத் திருவண்ணாமலையில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள தத்துவத்தை உலகிற்கு உணர்த்தவே திருமாலும் நான்முகனும் எம் பெருமானின் அடிமுடி தேடினர் என்று சொல்லப்படுகிறது. அனற்பிழம்பாக ஓங்கி உயர்ந்து நின்றார் எம் பெருமான். அன்னப்பறவை வடிவங் கொண்டு சதுர்முகப் பிரம்மன் அம்பலவாணரைத் தேடி விண்ணுலகம் சுற்றினார். திருமால், வராஹ அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அடிமலரடியைத் தேடினார். அடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான்.
ஒவ்வொரு சிவன் கோவிலின் பின்புற பிரகாரத்திலும் இந்த தத்துவத்தை விளக்கும் சிவனின் தோற்றத்தை சித்திர வடிவத்தில் காணலாம். ஜோதிலிங்கமாக காட்சி தரும் திருவாண்ணாமலை ஓர் அக்கினித் தலமாக விளங்குகிறது. சிவபெருமான் கோயில் கொண்டுள்ள ஆயிரத்தெட்டு முக்கிய ஸ்தலங்களில் காசி, சிதம்பரம், திருவாரூர், திருவண்ணாமலை, காளஹஸ்தி ஆகிய ஐந்து க்ஷேத்திரங்களும் பஞ்சமூர்த்தி ஸ்தலங்களாகக் கொண்டாடப்படுகின்றன. பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் ஆகியவை பிருத்வி பஞ்சமூர்த்தி ஸ்தலங்களாகும்.
மலை மீது காணப்படும் பெரும் செப்புக் கொப்பரையில் இருபத்து நான்கு முழம் துணி திரியாகப் போடப்படும். ஒரு மணங்கு கற்பூரத்தூள் சேர்த்துத் திரி சுற்றப்பட்டிருக்கும். இருபது மணங்கு நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுவார்கள். அந்த ஜோதியைக் காண்பதற்கு பஞ்ச மூர்த்தியும் எழுந்தருளுவதாக ஐதீகம். அன்றைய தினம் பக்த கோடிகள் ஜோதியைக் கண்டு சேவிப்பதால் பஞ்ச மூர்த்திகளின் அருட்கடாக்ஷத்தால் பஞ்சேந்திரியங்களை அடக்கும் ஆற்றல் பெற்று, மெய்ஞான சிந்தையுடையவர்களாக விளங்குவர் என்பது உட்பொருள்.
இந்த ஜோதியின் காரணமாகத்தான் மற்ற இடங்களில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கோவிலுக்கு முன்னால் பனை மரத்தைத் தரையில் ஊன்றி அதனுள் பனை ஓலையயும் வெடிகளையும், வண்ண மத்தாப்புக்களையும் கட்டி வைத்துக் கொளுத்துவர். சிவ பெருமானை ஜோதி வடிவாகக் காண்பது தான் சொக்கப்பனை கொளுத்துவதின் முக்கியமான ஐதீகம்.
இதன் பின் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடக்கும். அப்போது நடராஜருக்கு கார்த்திகை தீப மை சாத்தப்பட்டு, அதன்பின் பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் விநியோகிக்கப்படும்.
கார்த்திகை மைந்தன் கந்தன்
தாமரையில் பூத்து வந்த தங்கமுகம் ஒன்று
தண்ணிலவின் சாறெடுத்து வார்த்தமுகம் ஒன்று
பால்மணமும் பூமுகமும் படிந்தமுகம் ஒன்று
பாவலர்க்குப் பாடம்தரும் பளிங்குமுகம் ஒன்று
வேல்வடிவில் கண்ணிரண்டும் விளங்குமுகம் ஒன்று
வெள்ளிரதம் போலவரும் பிள்ளைமுகம் ஒன்று !
கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள். சிவபெருமானின் நெற்றிக்கண்ணினின்றும் தோன்றிய ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலுட்டிச் சீராட்டித் தாலாட்டினர். சிவபெருமான் பிராட்டியாருடன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார் அக்குழந்தைகளை வாரி அணைக்க, ஆறு உருவங்களும் ஓருருவாய், ஆறுமுகக்குழந்தையாய், தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது. அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானைப் பணிந்து போற்றி நின்றனர். சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி" உங்களுக்கு மங்களம் உண்டாகுக! உங்களால் வளர்க்கபட்ட இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தைச் சூட்டுகிறோம். உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டுவதாகுக!" என்று திருவாய் மலர்ந்தருளினார்.
சிவ கார்த்திகை, விஷ்ணு கார்த்திகை
சிவ கார்த்திகை, விஷ்ணு கார்த்திகை என கார்த்திகை இரண்டாக கொண்டாடப்படுகிறது. இதில் திரிபுர அசுரர்களை அடக்கிய திருநாள் சிவகார்த்திகை என்றும், மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க விஷ்ணு வாமன அவதாரம் எடுத்த நாள் விஷ்ணு கார்த்திகை என்றும் கொண்டாடப்படுகிறது.
இறைவன் சந்நதியில் ஏற்றப்படும் தீப ஒளியின் மகிமையை மகாபலி சக்கரவர்த்தியின் கதை மூலம் அறியலாம்.
முற்பிறவியில் மகாபலி சக்கரவர்த்தி எலியாக பிறந்திருந்தான். தான் அறியாமலேயே, தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெய் குடித்து வரும்போது, திரி தூண்டி வந்தது. இதன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று. அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற இறைவன் திருவுளம் கொண்டான்.
அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல் பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுகிறார்கள்.
இறைவனை விளக்கேற்றி வழிபடுவது தொன்றுதொட்டு வந்த பழக்கமாயினும், அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது. வைஷ்ணவ ஆலயங்களிலும் விளக்கொளிப் பெருமாள் என்று ஒரு பெருமானைக் கொண்டாடுகினனர். அகல், எண்ணெய், திரி, சுடரொளி ஆகிய நான்கும் அறம், பொருள். இன்பம், வீடு என்ற தத்துவங்களை உணர்துவது போலாகும். பலிமகராஜன் தனது உடம்பிலே தோன்றிய வெப்பத்தைக் கார்த்திகை விரதமிருந்து தீர்த்துக்கொண்டார் என்று புராணம் கூறுகிறது. எம்பெருமான் தன்மீது திருவடி சாதித்து ஆட்கொண்ட போது தனதுமறைவு நாளை தீபங்களை ஏற்றி உலகோர் அனைவரும் கொண்டாடவேண்டும் என்று அனந்தனைப் பணிந்து கேட்டான்.
ஒருமுறை அம்பிகை மகிஷாசுரனுடன் போர் புரியும் போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டார் என்றும் அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்திசெய்துகொள்வதற்குக் கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருந்து பெருமானின் பேரருளால் தோஷ நிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது.
இவ்வாறு பெருமையும் மேன்மையும் கொண்ட கார்த்திகைத் திருநாளை திருச்செங்கோடு, வேதாரண்யம் பழனி, திருச்செந்தூர் முதலிய கோயில்களில் திருவண்ணாமலைக் கோயிலைப்போன்றே கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். சில ஊர்களில் மந்தாரை இலையில், தீபம் ஏற்றுகிறார்கள்.வடநாட்டில் தீபத்தை தீப ஓடங்களில் ஏற்றி நீரில் விடுவது உடன்பிறப்பிற்கு நன்மை பயக்கும் என்று கருதுகிறார்கள். கார்த்திகைத் தீபங்கள் ஏற்றும் போது கூறப்படும் மந்திரம்:
கீட :பதங்கா மதகாஸ்ச வ்ருதா
ஜ்லே ஸ்தயே விசரந்தி ஜீவா
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜந்ம பாகிந:
பவந்தி நித்யம் சவ பசா ஹி விப்ரா.
இந்த மந்திரத்தைச் சொல்லி விளக்கேற்றி வழிபடுவதால் இம்மையில் அனைத்து சுபீட்சங்களுடன் வாழ்ந்து எம்பெருமானின் பேரருளால் பிறவாப் பெருவாழ்வு பெறலாம். தீபத்தின் ஒளி காணும் இடத்தில் ஸ்ரீதேவி மங்களம் பொங்க வாசம் புரிவாள். இக்கார்த்திகை தினத்தன்று நெற்பொரி வைத்து நிவேதனம் செய்வர். கார்த்திகை விரதத்தை பன்னீரண்டு ஆண்டுகள் கடைப்பிடித்து நாரத மகரிஷி சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடந்தார். திரிசங்கு மன்னன், பகீரதன் கிருத்திகை விரதத்தின் பயனால் பேரரசானார்கள்.
மாதங்களில் கார்த்திகை மாதம் மன உறுதி தரும் என்பது ஐதீகம். விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல்சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் "திருமண மாதம்" என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.
கார்த்திகை மாத மகிமை
கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின்போது நீராடுபவர்கள் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.
விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.
கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள், பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.
கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள். கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வழிபடுபவர்கள் புண்ணிய பலனை அடைவர்.
கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுசரிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணுபதத்தை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.
கார்த்திகையும் ஐயப்பனும்
காந்த மலையிலே கலியுக தெய்வம் ஐயப்பனின் மகர ஜோதி!
திருவண்ணாமலையிலே அவர்தம் ஐயனின் அண்ணாமலை ஜோதி!
கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது ஐயப்பன் தான். கார்த்திகை மாதம் பக்தர்களுக்காக சபரிமலை நடை திறக்கப்படும். கார்த்திகை பிறந்தால் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை யாத்திரை செல்வார்கள். மாசம் பிறந்தால் சபரிமலை ஐயப்பனுக்கு நேர்ந்துகொண்டு மண்டல கால பூஜைக்காக மாலை போடுவதும், 41 நாட்கள் விரதம் இருந்து வழிபடுவார்கள். கார்த்திகை முதல் நாளன்றுதான் சபரிமலை சன்னிதானத்தின் தங்கக்கதவுகளை மேல்சாந்தி திறந்து தீபம் ஏற்றி வணங்குவார்.
சபரிமலைக்கு மாலையணியும் பக்தர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு இதோ சில வழிமுறைகள்.
பெரும்பாலும் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல தயாராகும் பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல்தேதி தான் மாலையணிவார்கள். சிலர் கார்த்திகை மாதத்தில் ஏதாவது ஒரு நாள் மாலையணிவதும் உண்டு. ஆனால் முதல் நாளில் மாலை அணிவதே சிறப்பானதாகும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் குறைந்தது 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். கறுப்பு, நீலம், காவி நிற வேட்டிகளை அணிவது நல்லது. காலை, மாலை இருவேளைகளிலும் நீராட வேண்டும். அதோடு மட்டுமின்றி, வீட்டிற்கு அருகில் நடைபெறும் ஐயப்ப சாமி பூஜைகளிலும் கலந்து கொள்ள வேண்டும். "சாமியே சரணம் ஐயப்பா' என்ற சரணகோஷங்களை பூஜையில் சொல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இப்படி கோஷமிடும் போது, ஐயப்ப பக்தர்களின் மனம் தூய்மையடைந்து ஒருமுகப்படும். கடமைக்கு ஒருநாள், இருநாள் மாலையணிந்து பதினெட்டு படியேறுபவர்கள் பாவத்தையே சம்பாதிப்பார்கள்.
விஷு கனி தரிசனம் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஷு கனி தரிசனம் சித்திரை மாத முதல் நாள் அதிகாலை வேளையில் நடைபெறும். இதற்காக முதல்நாள் இரவு சுவாமி முன்பு கொன்றைப் பூக்கள், காய் கனிகள், பாத்திரம் நிறைய காசுகள் வைத்துவிட்டு நடையை அடைத்துவிடுவர். சித்திரை மாதம் முதல்நாளில் அதிகாலையில் நெய்விளக்குகள் ஏற்பட்டு சுவாமி கனி காணும் நிகழ்ச்சி நடைபெறும்.
மகர சங்கரம பூஜை: சூரியன் தனுசுராசியில் இருந்து மகர ராசிக்கு (தை முதல் நாள்) கடக்கும் வேளையில் சபரிமலையில் மகரசங்கரம பூஜையும், மகரவிளக்கும் நடக்கிறது. இவ்வேளையில் புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கிக் குளிப்பவர்களும், கோயில்களில் சுவாமி தரிசனம் செய்பவர்களும் புண்ணிய பலன்களைப் பெறுகிறார்கள். இதற்காக மகர சங்கரம பூஜை வேளையில் சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகிறார்கள். மகர சங்கரம பூஜை வேளையில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இப்பூஜையில் அபிஷேகம் செய்யப்படும் நெய் திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் வாழும் கவடியார் அரண்மனையிலிருந்து முத்திரை தேங்காயில் அடைத்து கொண்டு வரப்படுகிறது.
சங்கரம வேளையில் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யினை ஒரு துளி சாப்பிட்டால் கூட எல்லாவித நோய்களும் குணமாகும் என பக்தர்கள் நம்புகிறார்கள். பந்தளத்து அரண்மனையிலிருந்து பக்தி பூர்வமாக கொண்டு வரப்படும் திருவாபரணம் மகர சங்கரம மாலை வேளையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. ஆபரணம் சாத்தி முடிந்ததும் நடைபெறும் தீபாராதனை சிறப்பானதாகும்.
இந்த நேரத்தில் தான் கோயிலின் நேர் முன்புறம் உள்ள பொன்னம்பல மேட்டில் ஜோதி தெரியும். இந்த நேரத்தில்தான் வானில் ஒரு நட்சத்திரம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும். நட்சத்திரத் தையும், ஜோதியையும் கண்டு பரவசமடையும் பக்தர்கள் எழுப்பும் சரணகோஷம் விண்ணைத் தொடும் அளவுக்கு உரக்க கேட்கும்.
இருமுடியின்றி படியேறுபவர்: ஒவ்வொரு ஆண்டும் திருவாபரணப் பெட்டியுடன் ஐயப்பசுவாமி வளர்ந்த பந்தள அரண்மனையிலிருந்து ஒரு ராஜப்பிரதிநிதி சபரிமலைக்கு வருவது வழக்கம். இவருக்கு மட்டும் தான் இருமுடி இல்லாமல் படியேறும் அதிகாரம் உள்ளது.
கார்த்திகை தீப வழிபாட்டுப் பலன்கள்
கார்த்திகை மாதம் தீபத் திருநாளன்று, அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவது மரபு. வீட்டு வாசலில், விளக்கு ஒளியின் அணிவகுப்பு, பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். விளக்கேற்றி வழிபடும் போது, சில பூஜை விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு செய்தால், அஷ்டலட்சுமிகளும் உங்கள் இல்லத்தில் இஷ்டமாக வந்து குடியேறுவர் என்பது பெரியோர் வாக்கு.
விளக்கேற்றும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில முறைகள்:
தீபத்தை ஏற்றும் முறை:
ஒரு முகமாக ஏற்றினால் - மத்திமம்
இரு முகமாக ஏற்றினால் - குடும்ப சுகத்தைத் தரும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திர சுகத்தை தரும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வத்தை பெருக்கும்
தீபத்தை ஏற்றும் திசை:
கிழக்கு திசையில் ஏற்றினால், துன்பம் விலகும். மேற்கு திசையில் ஏற்றினால், கடன் தொல்லை, கிரக தோஷம் நீங்கும்; செல்வம் பெருகும். தெற்கு திசை பார்த்து ஒரு போதும் ஏற்றக் கூடாது.
தீபம் ஏற்றப் பயன்படுத்தும் திரி வகைகள்:
பஞ்சுத்திரி - குடும்ப ஒற்றுமை
தாமரைத் தண்டுத்திரி - முன்வினைப் பாவம் நீங்கும்
வாழைத்தண்டு நூல் திரி - சந்தானம் உண்டாகும்
வெள்ளெருக்குத் திரி- செல்வம் பெருகும்
புதுமஞ்சள் சேலைத்துண்டு திரி - அம்மன் அருள் கிட்டும்; பேய் சேஷ்டை நீங்கும்.
சிவப்பு சேலைத் துண்டு திரி - திருமணத்தடை, மலட்டுத் தன்மை நீங்கும்
வெள்ளைத் துண்டு திரி- குடும்ப நலன், உடல் ஆரோக்கியம் பெருகும்.
தீபத்திற்கு விடும் எண்ணெய்:
நெய் - சகல சம்பத்தும் பெருகும்
நல்லெண்ணெய் - எல்லா பீடைகளும் விலகும்; புகழ், தாம்பத்திய சுகம் கிடைக்கும்.
விளக்கெண்ணெய் - ப ந்துக்கள் உறவு விருத்தி
இலுப்பெண்ணெய் - தேவதைகள் அருள், தேவி பராசக்தி அருள் கிடைக்கும்
தீபம் ஏற்றும் போது கவனிக்க வேண்டியவை:
அதிகாலையில் 3 மணியிலிருந்து 5 மணி வரை தீபம் ஏற்றினால், வீட்டில் சர்வமங்களமும் பெருகும். விளக்கைத் திரியால் தூண்டி விட வேண்டும். பூஜை விளக்கைத் தானே அணைய விடக் கூடாது.
பூ, பால் துளி இவைகளைக் கொண்டு சமாதானமாக அணைக்க வேண்டும். வாயால் ஊதி அணைப்பது கூடாது. மாலையில் விளக்கேற் றும் போது, கொல்லைப் புறக் கதவை மூடி விட வேண்டும். வெள்ளி ஜோதியை பூஜை அறையில் வைத்தால், ஒரு பித்தளைத் தட்டின் மீதுதான் வைக்க வேண்டும். விளக்கை வெறும் தரையில் வைக்கக் கூடாது.
திருவிளக்கிற்கு பால், சர்க்கரை, கற்கண்டு கொண்டு நைவேத்தியம் செய்யலாம். கார்த்திகைத் திருநாளன்று அவல் பொரியில் வெல்லத்தைப் பாகு காய்ச்சி ஊற்றி 'கார்த்திகைப் பொரி' செய்து நைவேத்தியம் செய்து வழிபடுவது சிறப்பு.
கார்த்திகை தீபநாளன்று எல்லா தீபங்களையும் சுவாமி அறையில் வைத்து ஏற்றி கற்பூர தீபாராதனை செய்த பிறகு வாசலில் கோலத்தின் மீதும் படிகளின் ஓரங்களிலும் அழகு மிளிர வைக்கலாம்.
தீபத் திருநாளின் அருமை பெருமைகளை உணர்ந்து, விளக்கேற்றி வழிபட்டு, வாழ்வில் சகல வளங்களையும் பெற்று மகிழ்வோமாக!
இத்திருநாள் சம்பந்தமான சில துணுக்குச் செய்திகள்
இறைவனே கிரிவலம் வரும் நாள், திருவண்ணாமலையில் ஆண்டிற்கு இருமுறை அண்ணாமலையாரும், அம்பாள் உண்ணாமலைஅம்மையாரும் கிரிவலம் வருவர். தீபத்திரு விழாவின் 13 நாள் விழாவில், 12வது நாள், அதாவது, கார்த்திகை தீபத்தின் மூன்றாவது நாளும், அடுத்து, தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று நடைபெறும் திருவூடல் உற்சவத்தின் போதும் இறைவனும், அம்பாளும் கிரிவலம் வருவர்.
திருவண்ணாமலை ஆலயத்தில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள தலவிருட்சமான மகிழ மரத்தின் கீழ் நின்று பார்த்தால், திருவண்ணாமலை ஆலயத்தின் ஒன்பது கோபுரங்களையும் ஒருசேர தரிசிக்கும் அற்புத பாக்கியம் கிடைக்கும்.
திருச்சியிலுள்ள உத்தமர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளில் பெருமாளும், சிவனும் சேர்ந்து திருவீதி உலா வருவர்.
திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத்தன்று அதிகாலையில் பரணி தீபம் மற்றும் பூஜைகள் நடக்கும். மாலை 6.00 மணிக்கு மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். அப்போது 16 கால் மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள்வர்.
கார்த்திகைப் பெளர்ணமியில் பார்வதிதேவி சிவபெருமானின் இடப்பாகம் அமர்ந்தாகவும், சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக அன்று இறைவன் இருக்கிறான்.
இன்றும் தீபதரிசனத்திற்கு சற்று முன்பு மலை அடிவாரத்திலுள்ள அண்ணாமலையார் சந்நிதியிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு குதூகலத்துடன் வேகமாக ஓடிவந்து கொடிக்கம்பத்தைச் சுற்றிச் செல்வார். அவர் வந்து சென்ற உடன் வேட்டு சத்தத்துடன் மலை முகட்டில் தீப ஒளி சுடர்விடும். மலைதீபம் ஏற்றும் அதே நேரத்தில் எல்லா சுவாமிகளுக்கும் கற்பூர ஆரத்தி நடக்கும். சுவாமி சன்னதியிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் சிறிய விமானத்தில் வேக, வேகமாக வருவார். சுவாமிக்கு முன் நடனம் ஆடும் பாவனையில் அவரை இங்கும், அங்கும் கொண்டு செல்வர். இந்த மூன்று நிகழ்வுகளும் ஏககாலத்தில் நடக்கும் அருள் நிகழ்ச்சிகள்.
தீபம் ஏற்றி வழிபடமுடியாத இடங்களில் சொக்கப்பானை வேய்ந்து பனை ஒலையால் சுவாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பானைக் கொளுத்துவர். ‘சொக்கப்பானையை வணங்குவது சொக்கப்பனையாகும்’. சொக்கப்பனாகிய சிவனை ஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை ஆகும்.
திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகா தீபம் என்கிற வெண்கலக் கொப்பரை கி.பி., 1745ல் மைசூர் சமஸ்தான அமைச்சரான வெங்கடபதிராயால் வழங்கப்பட்டது.
தீபத் திருவிழா நாட்களில் தேரோட்டம் நடைபெறும்; உண்ணா மலை அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்துச் செல்வர்.
தீபத் திருநாளன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் பரணி தீபமும், மாலையில் மலையுச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகின்றன.
திருவண்ணாமலை கிரிவலத்தில் முதல் அடியில் உலகை வலம் வந்த பலனும், இரண்டாவது அடியில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனும், மூன்றாவது அடியில் அஸ்வமேத யாகம் செய்த பலனும், நான்காவது அடியில் அஷ்டாங்கயோகம் செய்த பலனும் கிடைக்கும்.
வயலூர் முருகனுக்கு கார்த்திகை தீபத்திருநாளில் இரும்பால் செய்யப்பட்ட வேல் காணிக்கை வழங்கும் வழக்கம் உள்ளது.
கார்த்திகை ஞாயிறு: தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவன், தன்னை அவமதித்து நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்களை தண்டிக்க தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரனால் தண்டிக்கப்பட்டவர்களில் சூரியனும் ஒருவர். இதனால் சூரியன் தன் ஒளி குறைந்து வருந்தி, ஸ்ரீவாஞ்சியம் (ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோயில்) குப்த கங்கையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், சூரியனுக்கு இழந்த ஒளியை மீண்டும் தந்தார். பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை நீங்கப் பெறலாம். கோவில் திறக்கும் நேரம் : காலை 6 - 12 மணி, மாலை 3 - 8 மணி. இடம்: கும்பகோணத்திலிருந்து (35 கி.மீ.) நாச்சியார் கோவில் வழியாக நன்னிலம் செல்லும் பஸ்சில் அச்சுதமங்கலம் ஸ்டாப்பில் இறங்கி, அங்கிருந்து ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம். போன்: 94424 03926, 93606 02973
சிவன் அருளிய கிருத்திகை விரதம்: கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பெற்றதால் முருகனுக்கு "கார்த்திகேயன்' என்ற சிறப்புப்பெயர் உண்டு. கார்த்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை நோக்கி விரதம் இருந்து வழிபடுவோருக்கு குறைகள் அனைத்தும் நீங்குவதோடு, மீண்டும் பிறவாநிலையாகிய முக்திப்பேறும் கைகூடும் என்று சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு ஒரு வரம் தந்தார். இக்குறிப்பு கந்தபுராணத்தில் இடம் பெற்றுள்ளது. இக்கார்த்திகை விரத மகிமையை விநாயகரிடமிருந்து நாரதமகரிஷி அறிந்தார். நாரதர் கார்த்திகை விரதமிருந்ததாலேயே சப்தரிஷிகளில் மேம்பட்ட பதவியைப் பெற்றதாக வரலாறு கூறுகிறது. பொதுவாக மாதம் தோறும் வரும் கார்த்திகை நாளில் மேற்கொள்ளப்படும் இவ்விரதம் கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை, உத்ராயண புண்ணிய காலத்தின் தொடக்கமான தையில் வரும் தைகார்த்திகைமற்றும் தட்சிணாயண புண்ணிய காலத்தின் தொடக்கமான ஆடியில் வரும் ஆடிக்கார்த்திகை நாட்களில் மிகவும் சிறப்பானவையாகும்.
கார்த்திகைப் பொரி உணர்த்தும் தத்துவம்!
கார்த்திகை என்றாலே, அவல் பொரியும் நெல் பொரியும்தான் நம் நினைவுக்கு வரும். கார்த்திகைப் பொரியில் ஒரு தத்துவம் உண்டு. வெண்மையாகவும், தூய்மையாகவும் இருக்கும் பொரியுடன் தேங்காய் துருவலைச் சேர்க்கிறோம். தூய்மைக்கு அடையாளமாக வெல்லத்தைச் சேர்க்கிறோம். வெண்ணீறு பூசிய சிவபெருமானை இந்த வெண்மையான நெல் பொரியும், வள்ளல் தன்மை கொண்ட மாவலியை தேங்காய் துருவலும் உணர்த்துகிறது. பக்திக்கு வசப்படும் இறைவன், பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பதே கார்த்திகைப் பொரி நமக்கு உணர்த்தும் தத்துவம்.
.
3 comments:
thx
திருக்கார்த்திகைப் பற்றிய செய்திகள் அருமை.
//பக்திக்கு வசப்படும் இறைவன் பொரிக்குள்ளும் தோன்றுவான்.//
மெய்சிலிர்க்க வைக்கும் நம்பிக்கை.
சிறப்பான பதிவு. நன்றி.
Post a Comment