மரமும் செடியும் -- தி. ஜானகிராமன்

மூங்கில்காரருக்கும் ஈயக்காரருக்கும் அப்படி ஒன்றும் பகை மூசல் இல்லை. இவருக்கு மூங்கில் வியாபாரம், அவருக்கு ஈய வியாபாரம். இவர் இருக்கிறது தைக்கால் தெரு, அவர் இருக்கிறது கொடிக்கால் தெரு. இவர் தெரு கிழக்குக் கோடியில். அவர் தெரு மேலைக் கோடியில். இவர் விசுவமையர் கடையில் காபி குடிக்கிறார். அவர் மலையாளத்து நாயர் கடையில் டீ குடிக்கிறார். இவர் நிலம் தெற்கே பிடாரி கோவிலண்டை. அவர் நிலம் ஆற்றங்கரைப் பாதையில். அதிகமாகச் சந்திக்கிறதுகூட இல்லை, சந்தித்தாலும், “சொகந்தானே, சொகந்தான்” – அவ்வளவுதான் பேச்சு.

மூங்கில்காரனின் மூங்கில் கடை ஈயக்காரனின் ஈயக்கடைக்கு மேற்கே ஏழெட்டுக் கடை தள்ளி, காலையில் கடை திறக்க வரும்போது இருவரும் சந்தித்துக் கொள்வார்கள். அப்போதுதான் இந்த சுருக்கமான க்ஷேம விசாரணை நடக்கும்.

எப்போதாவது மாயூரமோ கும்பகோணமோ போவதற்காக பஸ் ஸ்டாண்டில் சந்தித்துக் கொண்டாலும் பேச்சு அதற்குமேல் நீண்டுவிடாது.

பகைக்கும் போட்டிக்கும் என்ன இருக்கிறது?

ஆனால் ஜனங்கள் சும்மா இருக்கிறார்களா? ஜனங்கள் என்றால் ஜனங்களின் தலைவர்கள். அவர்களுக்கு, ஜனங்களுக்கு நன்மை செய்து கொண்டேயிருக்கவேண்டும். இல்லாவிட்டால் மனம் நிம்மதிப்படாது, பொழுதும் போகாது.

கீழைச்சேத்தி நாட்டாண்மைக்காரர் மூங்கில்காரரிடம் வந்தார். அவருக்கு வேலை! முத்திரை ஸ்டாம்பு விற்கிறதும் சாசனம், கோர்ட்டு மனு இவையெல்லாம் எழுதிக் கொடுக்கிறதும் - இது வயிற்றைக் கழுவ, ஆனால் முக்கிய வேலை நாட்டாண்மை.

"வாங்க" என்றார் மூங்கில்காரர்.

"வர்றேன், அது என்ன ஊர் நிலவரத்தையே காதிலே போட்டுக்காம குந்திருக்கீங்க?"

"என்ன நிலவரம்? மூங்கில் என்ன சர்க்கரையா, துணியா, பால்புட்டியா பதுக்கிவைக்க? நான் யாரு கண்ணிலேயும் மண்ணைத் தூவிக் காசு சம்பாரிக்க முடியாது. இங்க நிலவரம் எல்லாம் சரியாத்தான் இருக்கு."

"இங்க சரியாயிருந்தா மட்டும் போதாது. ஜனங்க முணுமுணுக்காம இருக்கணும். இப்ப நீங்க சொன்னதைப் பார்த்தா, நியாயமில்லாத காரியம் ஊரிலே நடந்துகிட்டு இருக்கு, அதுக உங்களுக்குத் தெரியாமியும் இல்லேங்கறதும் தெரியுது."

"தெரிஞ்சுருக்கு, அந்தந்த மனுஷன் யோக்கியனா இருந்துட்டா வம்பே கிடையாது"

"கிடையாது, அப்படி இல்லையே!"

"இல்லை"

"இல்லேன்னு சொல்லிட்டுப் பெரிய மனுசங்கள்ளாம் உக்காந்திருந்தா அப்புறம் என்னதான் நடக்கும்?"

மூங்கில்காரருக்கு உச்சி குளிர்ந்தது. பெரிய மனிதன் என்று இவர் வாயாலே லேசில் வருமா?

"நாம என்ன செய்யறது?"

"பணத்தாலே ஒண்ணும் செய்ய முடியாது. எனக்குத் தெரியும். அப்படி நல்லது பண்றதுன்னா ஓரோரு ஊருக்கும் பத்து கோடி ரூபா வேணும்"

"வேறே வழி?"

"அதிகாரம் வேணும்."

மூங்கில்காரர், அவர் மேலே என்ன சொல்லப்போகிறார் என்று காத்திருந்தார்.

"காசுக்கடைக்காரரு சேதி தெரியுமா?"

"தெரியாதே!"

"காசுக்கடைக்காரரு இப்ப ப்ரெசிடெண்டுக்கு நிக்கிலியாம். உடம்பு தள்ளமாட்டேங்குது அவருக்கு. போதுமே.. பதினஞ்சு வருசம் பாத்தாச்சுன்னு நினைக்கிறாரு, ஈயக்காரருகிட்ட, 'இனிமே நீங்கதான் ஊரைப் பார்த்துக்கணும்'னு சொல்லிட்டாரு."

"ம்..."

"என்ன ம்? உங்களுக்குப் புரியவில்லையா? காசுக்கடைக்காரரு நல்லவருதான். அதுக்காக அடுத்து வர ஆளையும் இவரே வச்சுப்பட முடியுமா? ஊருக்கில்ல பொறுப்பு அது?"

"ஈயக்காரரு என்ன சொன்னாரு?"

"அவருக்கென்ன கசக்குமா? மேலத் தெருக்களுக்கெல்லாம் ஊதா விளக்கு, பம்புக் குழாய் எல்லாம் போட்டுடறதுன்னு பேசிக்கிட்டிருக்காரு. இப்பவே ப்ரெசிடெண்டு நாற்காலியிலே உட்காந்திட்டாப்பல."

"ம்"

"அதுதான் சொல்றேன். அவருக்கு முன்னாடி உங்க பேரைத் தாக்கல் பண்ணிப்பிட்டா?"

"பிரெசிடெண்டு எலக்சனுக்கா?"

"பின்னே? முப்பது வருசமா நீங்க சம்பாரிச்சு எங்களுக்கு ஏதாவது பெருமை பிரயோசனம் வேணாமா? நாங்க யாரிட்ட போய் சொல்றது?"

"தாக்கல் பண்ணிடுவோமே" என்றார் மூங்கில்காரர்.

அடுத்தவாரம் மூங்கில்காரரின் பெயர் தாக்கலாகிவிட்டது. அவருக்குத் தேர்தல் சின்னம் மரம், கடைசித் தேதியன்று ஈயக்காரர் பெயரும் தாக்கலாயிற்று. அவருக்குச் சின்னம் செடி.

மாயவரத்திலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் வாடகைக் கார்கள் வந்தன. ரெயிலடிக்குப் போக ஊரில் ஒரு வண்டி கிடைக்கவில்லை. மரத்துக்கும் செடிக்கும் அலைந்து கொண்டிருந்தது. மூங்கில்காரர் மரியாதைப்படி நடந்து கொண்டுவிட்டார். கடைகடையாக ஏறி கேட்டுக் கொண்டார்; பள்ளிக் கூடத்துக்குக் கொட்டகை போட்டுக் கொடுத்தார். மார்கெட்டுக்குச் சரக்கு ஏற்றிவரும் வண்டி மாடுகளுக்கு அவசர அவசரமாகத் தண்ணீர் தொட்டி கட்டி வைத்தார். வயிற்றுக்கும் நிறையப் போட்டார். வெறும் காபி, டீ இல்லை; கழுத்துவரை சாப்பாடு. ஒரு மரியாதை குறையவில்லை.

ஓட்டு எண்ணினார்கள். பகீர் என்றது மூங்கில்காரருக்கு. தமக்குத் தோற்றுப் போகும் என்று அவர் கனவுகூடக் காணவில்லை. மரியாதை குறைவாக, தரித்திரத்தனமா நடந்து கொண்டால்தானே பயப்பட வேண்டும்? அவர் காசைக் காசாகப் பார்க்கவில்லையே! அவருக்கு எப்படித் தோற்கும்?

தோல்வி வந்து விட்டது.

நாட்டாண்மைக்காரர் கூடவே வந்தார். வீட்டுக்கு வந்தார்.

"அது ஒண்ணுமில்லீங்க. ஈயக்காரரு கவுல் பண்ணிட்டாரு" என்றார்.

"பெட்டியை மாத்தினாரா?"

"அடிமடியிலே கையைப் போட்டுட்டாரே. அப்பவே ஒரு அப்ஜெக்ஷன் போடலாம்னு நெனச்சதுண்டு... இப்ப நினைச்சு என்ன?"

"அடிமடியிலே கையைப் போட்டார்னீங்களே, என்ன?"

"நமக்கு மரம் அடையாளமா இருக்கறப்ப அவர் செடி வச்சுக்கிட்டாரே; அது பெரிய மோசடி இல்லியா? நேரப் பார்க்கறப்ப மரம் பெரிசு, செடி சிறிசு. படத்திலே போட்டா மரமும் சாண் உசரம், செடியும் சாண் உசரம். தொள்ளாயிரத்துச் சொச்சம் ஓட்டு வித்தியாசம் எப்படின்னு நானும் யோசிச்சுப் பார்த்தேன். இப்பல்ல புரியுது!" என்றார் நாட்டாண்மை.

மூங்கில்காரருக்கு வயிறு குமைந்தது.

"இப்படியா புத்தியில்லாத கூட்டமாயிருக்கும்? குருமா-ண்டும், பிரியாணின்டும், சாப்ஸு-ண்டும் மூச்சு முட்டத் தின்னுப்பிட்டு மரமிண்டும் செடியிண்டுமா தெரியாத போயிடும்? பிரியாணியை முழுங்கிச்சே ஒளிய அப்படியே ஆட்டுக் கூட்டம்யா" என்று புகைந்தார்.

"சனங்க என்ன செய்யும்? ஈயக்காரரு சூது பண்ணிட்டாரு?"

"எத்தினி வண்டி! எத்தினி டின் நெய்யி?"

"நெய்யைத் திண்ட்டுப்பிட்டே கண்ணு மயங்கிடுச்சி சனங்க. அதுவும் உங்களுக்குப் பெருமைதான்" என்று தோல்வியையே வெற்றியாகக் காட்டிப் பேசினார் நாட்டாண்மைக்காரர்.

ஈயக்காரர் கடையில் கூட்டம் இப்போது அதிகம், தாசில்தார் என்ன, விற்பனை வரி ஆபீசர் என்ன, ஹெல்து ஆபீசர் என்ன, இன்னும் 'லீடர்கள்' என்ன - யார் வந்தாலும் அங்கேதான் போகிறார்கள், பேசுகிறார்கள். ஜீப் நிற்கிறது. காராக நிற்கிறது. ஈயக்காரரை அழைத்துப் போகிறது; கொண்டு விடுகிறது.

"எல்லாம் செடியைப் போட்டு அடையாளத்தைக் குழப்பி ஏமாற்றியதுதானே! ஹ்ம்! மரமும் செடியும் ஒன்றாகிவிடுமா? மரத்துக்கு வயசு அதிகம். வைரம் அதிகம். உரம் அதிகம். சமயம் வரட்டும்" என்று காத்திருந்தார் மூங்கில்காரர்.

சமயம் ஒரு நாள் வந்தேவிட்டது.

ஈயக்காரர் மகன் வந்தான். ஈயக்காரருக்கு இப்போது கொடி கட்டி அல்லவா பறக்கிறது? மேலைச் சேத்தியில் இருக்கிற சொத்துப் போதாதென்று கீழைச் சேத்தியிலும் பூமி வாங்க வந்துவிட்டார். பூமியென்றால் அதுவும் வியாபாரத்துக்குத்தான். ஈயக்கடைக்குப் பக்கத்திலேயே ஒரு சர்பத் கடை ஆரம்பித்திருக்கிறார். அவர் சர்பத் வாங்கி விற்பது மட்டும் அல்ல; சர்பத்தே செய்கிறார். எலுமிச்சம் பழ சர்பத் பண்ணப் போகிறாராம். இதுவரையில் செய்து வந்தது நன்னாரி சர்பத் மட்டும்தான்.


அதற்காகத்தான் ஈயக்காரர் மகன் வந்தான். மூங்கில்காரருக்குக் கீழைச் சேத்தியில் எலுமிச்சைக் கொல்லை இருந்தது. மிகவும் பிரயாசைப்பட்டு நானூறு எலுமிச்சங்கன்று வைத்திருந்தார் மூங்கில்காரர். கொல்லையிலேயே கிணறு தோண்டி இறைத்தார். ஆனால் பலன் மூக்கழுகை. காய்ப்புக் கண்ட நாளிலிருந்து முக்கால் வாசி வெம்பி விழுந்து கொண்டிருந்தது.

"கொல்லையைப் பார்க்கணும், பெரியப்பா" என்றான் ஈயக்காரர் மகன்.

பெரியப்பாவாம்! என்ன அன்பு சொரிய அழைக்கிறான்! ஏய் தம்பி! உங்கப்பா ஏமாத்தினது மறந்திடலடா! செடியைப் போட்டா சயிச்சீங்க? இப்ப யாரு சயிக்கப் போறா பாரு!

இதெல்லாம் மூங்கில்காரர் வாயைத் திறந்து சொல்லுவாரா? மனசுக்குள் தோன்றியது.

"பாக்கறது" என்று மட்டுந்தான் சொன்னார் அவர்.

"அப்பாவும் பார்க்கணும்கறாங்க."

"பார்க்கட்டுமே!"

"என்னக்கி வரலாம்?"

"சனிக்கிழமை வாங்களேன்."

சனிக்கிழமை வந்தார்கள் அவர்கள்.

ஒன்றரை ஆள் உயரத்திற்கு நெருக்கமாக வேலி போட்டு, சகல காபந்துகளும் செய்திருந்த கொல்லைக்குள் நுழைந்ததுமே ஈயக்காரருக்கு முகம் மலர்ந்து விட்டது. குண்டு குண்டாகப் பழங்கள் உதிர்ந்து கிடந்தன. ஆயிரக்கணக்கில் கொல்லை முழுவதுமே புற்களுக்கு இடையிலும் வேலிக்கு அடியிலும் அங்கும் இங்கும் எங்கும் இறைந்து கிடந்தன. ஈயக்காரர் நாலைந்து பழங்களை எடுத்து மோந்தார். நகத்தால் லேசாகச் சுரண்டி மோந்தார்.

"ஹப்பா! கீளச்சேத்திப் பழம்னா கேக்கணுமா" என்று வாசனையை மெய்மறந்து இழுத்தார். அவர் பொடி போடுகிறதுண்டு. ஒரு சிட்டிகைப் பொடியை இடது உள்ளங்கையில் போட்டு ஓர் எலுமிச்சம் பழத்தை லேசாகத் தோல் சுரண்டி அந்தச் சிட்டிகைமீது நாலு தேய்ப்புத் தேய்த்து விட்டு, பொடியை உறிஞ்சினார்.

"இந்த மாதிரி பொடி போடறதிண்டா எனக்கு உசிரு" என்றார்.

அவர் முகமலர்ச்சியைக் கவனித்தார் மூங்கில்காரர். ஆள் அகப்பட்டுவிட்டான்! கொல்லை ஓர் ஏக்கரா, மரம் நானூறு, இரண்டுமாகப் பதினாயிரம்.

"புன்செய்க்குப் பதினாயிரம் நீங்க கொடுப்பீங்களா, முந்நூறு குளிக்கு?" என்று கேட்டார் ஈயக்காரர்.

"நீங்க வியாபாரத்துக்குக் கேக்கறீங்களேன்னுதான் கொடுக்கறதிண்டு பேச்சே எடுத்தேன் நான். ஒரு மரம் வருசம் பத்து ரூபா கொடுக்குது, நாலாயிரம் ஆச்சு. என்னதான் செய்நேத்திக்குச் செலவு பண்ணினாலும் ரெண்டாயிரத்துக் மேலவா செலவாயிடும்? மிச்சம் ரெண்டாயிரம் நிக்குது எனக்கு. பத்துக் ரெண்டுன்னா ஒண்ணரை வட்டிக்கு மேலாச்சே. பத்தாயிரமான்னு மலைக்கிறீங்களே!"

ஈயக்காரருக்குப் பேச முடியவில்லை. ரூபாயைக் கொடுத்துச் சாசனம் வாங்கிவிட்டார்.

"ஈயக்காரரே, மரமும் செடியும் ஒண்ணாயிடாதுய்யா. எலக்சன்லே சயிக்கலாம். இதிலே நடக்காது. நீங்க பார்த்த அத்தனை பழமும் முந்தா ராத்திரி கும்மாணத்திலேந்து வாங்கியாந்து கொல்லையிலே கொட்டினது. மரத்திலேந்து உதிந்த பழமா, கையால கொட்டின பழமான்னு கூடக் கண்டு பிடிக்க முடியல்லே. எலக்சன்லெ சயிக்கிறாராம்? என்ற மூங்கில்காரர் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்.

ஈயக்காரர் எலுமிச்சை சர்பத் பண்ணி விற்க ஆரம்பித்து விட்டார். வண்டியிலே வைத்து, பல இடங்களுக்கு அனுப்புகிறாராம். 'அனுப்பு, அனுப்பு! முதலை எடுக்க முப்பாட்டன் வரவேணும்.'

மூங்கில்காரருக்கு ஓயாமல் எக்களிப்பு வரும். நடுநடுவே பயமும் வரும். பழத்தைக் கொட்டிக் காரியத்தை முடித்ததுதானே?

அந்தப் பயந்தான் அவரைக் கொல்லைப் பக்கம் நாட விடாமல் அடித்தது. ஆனால் அன்று சலவைக்காரனைப் பார்க்கப் போகவேண்டிய கட்டாயம் வரவே, என்ன செய்கிறது? அந்தப்பக்ம் போனார். கொல்லையை ஓரக்கண்ணால் பார்த்தும் பார்க்காமலும் நடந்தார். சாபமாகக் காய்த்திருக்குமோ என்ற அச்சம்; நடை விரைந்தது.

"என்ன பெரியப்பா?" என்று குரல் கேட்டது. வேலிக்குள்ளிருந்து வந்தது குரல்.

"இங்க பாருங்க!"

முள்ளிடுக்கில் ஈயக்காரர் மகனின் முகம் தெரிந்தது.

"இந்தப் பக்கமே தலைகாட்ட வாண்டாம்னும் இருக்கீங்களா?"

மூங்கில்காரர் உள்ளே நுழைந்தார்.

"காய்ப்பெல்லாம் எப்படி இருக்கு?"

"நீங்களே பாருங்களேன்."

மூங்கில்காரர் பார்த்தார். நன்றாகப் பார்த்தார். ஏகத்தாறாக் காய்த்துக் கிடந்தது. குண்டு குண்டாகப் பழம். இலை தெரியாத பழம்.

"இப்ப மரத்திலேயே காய்க்குது" என்றான் அவன்.

என்ன வெகண்டை!

"நீங்க காமிச்சப்ப, தரையிலேல்ல காச்சிருந்தது. இப்ப மரத்திலேயே காய்க்குது, அதே மாதிரி பழங்க!"

பேசுகிறது விஷமமா இல்லையா என்ற கண்டுபிடிக்க முடியாதபோது எப்படிக் கோபித்துக் கொள்கிறது?

"கொல்லை வாங்கினவுடனே என்ஜினீயரும் விவசாய ஆபீசரும் வந்தாங்க."

"எதுக்கு?"

"வாய்காத் தலைப்பிலேந்து கால்வாய் சாங்சன் பண்ணினாரு என்ஜினிரு. விவசாய ஆபீசரு எரு சொல்லிக் கொடுத்தாரு. ஊரிலே நாயடிக்கிறாங்கள்ள, பஞ்சாயத்து போர்டிலே, அடிச்சதுங்களை அப்பா அப்படியே வாங்கி எருவாப் புதைச்சிட்டாங்க. இப்ப மரத்திலேயே காய்க்க ஆரம்பிச்சிடிச்சே, ஆறு மாசமா" என்று சிரித்தான். மூன்று தடவை சொல்லியாயிற்று.

"அதான் காய்ப்பு எகிறிக் கிடக்கு" என்றார் மூங்கில்காரர்.

"நல்லவேளையா எலக்சன் ஆனத்துக்கும் கொல்லை வாங்கினதுக்கும் சரிய ஒத்துக்கிட்டுது. இல்லாட்டி இந்த வசதியெல்லாம்-- கிடைக்குமா?" என்றான் அவன்.

இப்போதுதான் அவனைத் திரும்பிப் பார்த்தார் மூங்கில்காரர். அவன் லேசாகச் சிரித்துக்கொண்டான். விஷமச் சிரிப்புத்தான்.

"எல்லாருக்கும் வசதி கிடைக்குமா? அதான் நல்லாருக்கு" என்று சிறிது நின்றுவிட்டு விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தார்.

"மரம் பெரிது, செடி சிறிது. ஆனால் மூத்தது மோழை, இளையது காளை என்றாகிவிட்டது. இருந்தாலும் நானூறு குழிக்கு பதினாயிரம். மூன்று விலைதானே? அப்படி என்ன ஏமாந்து விட்டோம்?" என்ற தேற்றிக் கொண்டு நடந்தார் அவர்.

(அக்பர் சாஸ்திரி கதை தொகுப்பில் இருந்து)

2 comments:

Vidhoosh said...

நான் சொன்னேன் இல்லையா… அந்த எலுமிச்சைமரக்கதை இதுதான்.

மரமும் செடியும்
தி. ஜானகிராமன்

LK said...

நான் அப்பாலிக்கா அந்து படிக்கிறேன்

Post a Comment