சக்தியா சகதியா

சக்தியா சகதியா

அவனுக்கு அவள் மனைவியென்ற
தகுதி மட்டும் போதுமாய்
அவளைத் தூக்கி எறியுங்கள்
தனிமைத் தீயில் எரியட்டும்
தனியாகத்தானே வந்தாள்
அங்கிருந்தென்று இவர்களும்,
தனியானாய்-விதவை நீயென
என் தாயே உன்கையால்
அழித்தழித்து இரத்தம்
தோய்ந்தவென் நெற்றியில்
நீங்கள் அறைந்து சாத்திய கதவுகள்
மீது மஞ்சளும் குங்குமமும் இட்டு
பொங்கட்டும் மங்கலம்
வழிபடுங்கள் சக்தியை
நான்தான்
பொட்டிழந்து
சகதியானேன் அம்மா
இன்னும் எத்தனை பெண்களுக்கு
துகிலுரிகிறதடா கண்ணா!
எப்போது வருவாய் நீ
விருந்தாவனத்துக்கு மீண்டும்? இங்கு
நாங்கள் மட்டும் தனிமையில்.

--விதூஷ்


================================
பொட்டில்லை
விதவை என்ற
வார்த்தைக்குக் கூட
என்றோ படித்த ஒரு ஹைக்கூ. எழுதியவர் யாரென நினைவில்லை. ஹைக்கூ வரிகள் தவறாக இருக்கலாம். ஆனால் சொன்னக் கருத்து இதுதான். சக்திகளாகப் பெண்களைக் கொண்டாடும் நம் இந்தியாவின் சாபக் கேடுகள் சில புரையோடிப் போனப் பழக்கங்களில் ஒன்றான விதவைச் சம்பிரதாயங்கள்.

ஹிந்து என்றால் என்ன?

சிந்தோ: சிந்துபர்யந்தம் யஸ்ய
பாரத பூமிகா மாத்ரு பூ:
பித்ரு பூ புண்ய (ஸ்)சைவ
வை ஹிந்து இதி ஸ்ம்ருதா:

சப்த சிந்து (இண்டஸ் நதி) முதல் இந்தியப் பெருங்கடல் வரையான நிலப்பரப்பை தாய்நாடு/தந்தைநாடாகவும் புண்ணிய பூமியாகவும் யார் கருதியிருக்கிரானோ அவன் ஹிந்து ஆவான்.

ஹிமாலயம் ஸமாரப்ஹ்ய
யாவத் ஹிந்து சரோவரம் தம்
தேவ நிர்மிதம் தேசம்
ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே

ஸ்வயம் கடவுளால் படைக்கப்பட்ட இந்நிலப்பரப்பு ஹிமாலயம் முதல் இந்தியப் பெருங்கடல் வரை பரந்து விரிந்து ஹிந்துஸ்தானம் என்றழைக்கப்படுகிறது.

சனாதன தர்மம் அல்லது இந்து தர்மத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், உண்மையில் இந்து தர்மத்தை உருவாகியவர்கள் இதை ஒரு மதமாகக் கருதாமல் தர்மமாகவே (way of life) கருதினார்கள். தர்மம் என்றால் வாழும் கலை, அதாவது நிம்மதியான முறையில் வாழ்வதற்கு ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகள் (ஆச்சார விதிமுறைகள்).

பெண்களால் பின்பற்றப்படவேண்டிய ஆச்சாரங்களை மாத்ரு தர்மம் என்றும், ஆண்களால் பின்பற்றப்பட வேண்டிய ஆச்சாரங்களை பித்ரு தர்மம் என்றும், மகன் செய்யவேண்டியதை புத்திர தர்மம் என்றும், ஆசிரியர் செய்ய வேண்டியதை ஆச்சார்யா தர்மம், சகோதரனுக்கு பிராத்ரு தர்மம், சகோதரிக்கு பாகினி (பாகம் உடையவள் என்ற பொருள் வரும்) தர்மம் என்றும், பௌர (குடிமக்கள்) தர்மம், ராஜ தர்மம் என்றும் வகை படுத்தி வைத்துள்ளனர். இதைத்தான் ஸ்ம்ரிதிக்களும் தர்ம சாஸ்திரங்களும் கடமைகளாகவும், பொறுப்புக்களாகவும், சட்டங்களாகவும் இயற்றி வைத்துள்ளன.

சனாதன தர்மம் என்றால் இவை அனைத்தையும் ஒன்றாகப் பின்பற்றும் நோக்கம் உடைய ஒரு குழுவாகும். இந்து தர்மத்தின் ஒவ்வொரு செயலிலும் ஆன்மீகம் பின்னிப் பிணைந்துள்ளது. ஆன்மீகம் இல்லாமல் இந்து தர்மம் இல்லை.

==============================

சிறிது நாட்கள் முன் ஒரு தோழி ஹிந்து சமூகத்தில் விதவைகள் மற்றும் மணமான பெண்களின் நிலைப் பற்றியும், ஹிந்து சாஸ்திரங்களில் விதவைகளை எப்படி நடத்த வேண்டும் என்றும் எழுதியிருப்பதாகக் கூறினார்.

எனக்கு அப்படியெல்லாம் வேதங்களில் இல்லை என்று தெரிந்திருந்தாலும், நான் இம்மாதிரி விவாதங்களில் அதிகம் பேசுவதில்லை. ஏனென்றால் பாதி மட்டும் படித்தறிந்து அல்லது விவாதிக்க வேண்டும் என்று மேம்போக்கான விவாதங்களில் ஈடுபடுவதை விரும்பாததே காரணம். ஆனால் அவரது கூற்று எனக்கு இன்னொரு தேடலைக் கொடுத்தது. நான் ஹிந்து தர்மங்களின் (வேதங்கள்) மேல் வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை.

உண்மையில் "சதி" என்றால் சமஸ்கிருதத்தில் என்ன அர்த்தம்? அறிவாற்றல்/தகுதி பெற்றக் கன்னிப்பெண் (virtuous woman) என்பதாகும். கணவன் விவகாரத்து அறிவித்தாலோ அல்லது இறந்து விட்டாலோ, அந்த பெண் மீண்டும் கன்னித்தன்மை உடையவர்களாகி திருமண பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ள தகுதி பெறுகிறார்கள் என்றே அர்த்தமாகிறது.

ஹிந்து தர்மங்களில் அல்லது வேதங்களில் எந்த இடத்திலும் விதவைகளை உயிருடன் எரிப்பதை அங்கீகரிக்கவில்லை, ஏன் அதைப் பற்றி எங்குமே பேசக் கூடப் படவில்லை. அப்படி யாரேனும் வேதங்களை தவறாக அர்த்தம் செய்து கொண்டு எடுத்துக்காட்டினால், இப்படிக் கேளுங்கள் - மகாபாரதம் இராமாயணம் போன்ற காவியங்களில் எட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்ததாகக் நம்பப்படும் குந்தி, வாகம்ப்ருனி, கார்கி, மைத்திரேயி, தேவயானி, தசரதனின் மனைவிகள், எல்லோருமே வேதங்களில் சிறந்தவர்களான விதவைப் பெண்கள்தான். அவர்கள் சதியானார்களா?

ஹிந்து தர்மப்படி, திருமணத்திற்கான உடற்தகுதி உள்ள பெண், தன் கணவன் தகனம் செய்யப்பட்டு அவன் சாம்பல் நீரில் கரைக்கப் பட்டதுமே, மீண்டும் அவள் திருமணத்திற்குத் தகுதியான கன்னியாகிறாள் என்றே கூறுகிறது. அவன் சாம்பல் நீரில் கரைக்கப் படாதவரையில் அவனுக்கு மட்டும்தான் அந்தப் பெண் சொந்தமாகிறாள். அதாவது ஒருவனுக்கு ஒருத்தி என்ற பொருளில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு கன்னி என்றால் திருமணமாகாத பெண் என்ற பொருள்படும்.

மைத்ரயனிய யஜுர்வேதத்தின் ஹரித தர்மசூத்திரத்தில் இரண்டு வகையான பெண்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கிறது. சத்யவது - அதாவது திருமண வாழ்வில் ஈடுபடுபவள், மற்றவள் பிரம்மவாதினீ - அதாவது தர்மத்தை வளர்ப்பவள், இவளுக்கு பூணூல் அணிந்து அக்னிஹோத்திரம் செய்யும் தகுதியும் உண்டு என்று குறித்துள்ளனர். பவபூதி உத்தம சரித்திரத்தில் அத்ரேயி (ஆத்திரேய மகாமுனிவரின் மகள்) என்ற பெண் அக்னி வளர்த்து ஆகம வேதங்கள் உரைத்ததாக குறிப்புக்கள் உள்ளன.

ஆதி சங்கரர், உபாயபாரதி என்ற பெண் பண்டிதருடன் நடத்திய ஆன்மீக வாக்குவாதங்கள் பற்றிய பெருங்குறிப்பு சங்கர திக்விஜயம் என்ற நூலில் இருக்கிறது. மேலும் அப்பெண் வேதங்கள் மற்றும் தர்க்க சாஸ்திரங்களில் கரை கண்டிருந்ததாகவும் சொல்லியிருக்கிறார். நம்மாழ்வாரின் திருவாய்மொழியை பற்றி 15-ஆம் நூற்றாண்டுகளில் எழுதியவர் தஸ்யை என்ற பெண். ஸ்ரீவில்லிப்புத்தூரின் ஆண்டாள் பற்றி அறியாதவர்கள் இருக்கவில்லை.

நெருப்பைத் தொடாதே என்று சொல்லும் தாய் இல்லை வேதங்கள். நெருப்பு சுடும் என்று சொல்லும் ஆசிரியராக மட்டும் வேதங்கள் இருக்கின்றன. மனிதர்கள் தவறுகிறார்கள். சட்டங்கள் /தர்மங்கள் தவறுவதே இல்லை. மனிதர்களின் தவறுகளுக்கு தர்மங்களை குறை கூறுவது, அல்லது நம் சௌகரியத்துக்கு ஹிந்து தர்மத்தை மதிப்பு குறைத்து கூறி வருவதால் எந்த மாற்றமும் பாதிப்பும் வேதங்களுக்கோ ஹிந்து தர்மத்துக்கோ ஏற்படப்போவதில்லை.

நான் படித்து அறிந்த வரை, வேதங்கள் அல்லது ஹிந்து தர்மம் என்றும் யாரையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை. இப்படி வாழ்தல் நன்மை என்று கூறியுள்ளதே தவிர இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்வதில்லை. தினசரி கோவிலுக்குப் போனால்தான் அவன் ஹிந்து என்று கட்டாயம் செய்வதில்லை. இந்தக் கட்டற்ற சுதந்திரம் மட்டுமே ஹிந்து தர்மத்தின் பலமாகும். காலங்காலமாய் வேதங்களையும் ஹிந்து தர்மத்தையும் அவதூறுகள் செய்து வந்தாலும், கட்டாயத்தாலோ பிறப்பாலோ அல்லாமல் உண்மையாகவே ஹிந்து தர்மத்தை வேதங்கள் மூலம் அறிபவர்கள், ஹிந்து தர்மத்தை மட்டும் இல்லை, எல்லா தர்மங்களையும் மதங்களையும் ஒன்றாகவே பாவித்து மதிப்புக் கொடுப்பார்கள்.

நம் முன்னோர்களில் யாரோ மனம் பிழன்ற ஒரு சிலர், ஆங்கிலேயரை மகிழ்விக்கச் செய்த தவறுகளுக்கு வேதங்களைப் பழிப்பது தவறு.
========================================
விதவைச் சம்பிரதாயங்கள் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன் இருந்ததாக சான்றுகள் இல்லை. மேலும் தர்மங்களில் மறுமணம் மற்றும் விவகாரத்து, தாலி/மங்கலசூத்திரம்/திருமாங்கல்யம் போன்றவைகள் பற்றிய விவரமான குறிப்புக்கள் இல்லை. இவையெல்லாமே முகலாயப் படையெடுப்புக்கு பிறகுதான் அதிகமாக நிகழ்ந்திருக்கின்றன என்பது போன்ற குறிப்புக்கள் உள்ளன.

மாலை மாற்றுதல் மற்றும் சப்தபதி என்ற அக்னி வலம் மட்டுமே இன்றும் ஹிந்து சமூகத்தில் தர்மப்படியான திருமணங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தாலி, மஞ்சள் கயிறு எல்லாம் .டி. கார்டு போன்ற ஒரு அடையாளங்கள்தான்.

குங்குமத்தை பெண்டிரும் ஆடவர்களும் நெற்றிப் பொட்டில் வைத்துக் கொள்வது என்பது மாந்த்ரீக சக்தி மற்றும் மஞ்சளின் மருத்துவ குணத்திற்காக என்ற காரணங்களுக்காகத்தான். வழக்கம் போல நாளடைவில் இவை பெண்களுக்கே மட்டுமான கட்டாயம் ஆனது.

வகிட்டுப் பொட்டு, குங்குமம், மெட்டி, தோடு, மூக்குத்தி போன்றவைக்கு மாந்த்ரீக மற்றும் அக்குபங்ச்சர் ரீதியான காரணங்கள் இருக்கின்றன. இவைகளெல்லாம் கூட VAS (value added sasthirangal) போன்றவைதான். தேவையென்றால் அல்லது விருப்பமிருந்தால் பின்பற்றலாம்.

புருஷனுக்கும், அவனுடைய ஆயுளுக்கும், பெண்கள் அணியும் பொட்டுக்கும், தாலி என்ற நகைக்கும், திருமணத்தின் போது இவைகளை அவனே தன் கையால் முதல் முறை, அணிவிக்கிறான் என்பதைத் தவிர வேறு எந்தத் தொடர்பும் இல்லை. இவைகளை அணியாமல் இருப்பதால் கணவனுக்கு எதுவும் கேடுகள் நிகழ்ந்து விடாது. அதனால் இவற்றைத் துறப்பதை ஒரு துக்ககரமான நிகழ்வாக்கி, அலங்கோலத்தைக் காட்டி பயமுறுத்தி, நகைகள் அணிவதை சுமங்கலித்தன்மையோடு இணைத்து, இதற்கு அதீத முக்கியத்துவம் அளித்துவிட்டார்கள் என்பதே கசப்பான உண்மை.

தாலி பொட்டு என்ற விஷயங்களை வைத்து பெண்களை ஒரு மாதிரி blackmailing செய்து வைத்திருக்கும் நடப்புக்கள் எல்லாம் 18-ஆம் நூற்றாண்டுக்கு மேல்தான் நடந்து வருகிறது. இருபதாம் நூற்றாண்டுகளில் என்னவோ, முன்னேறிவிட்டதாக அறிவித்துக் கொண்டிருக்கும் போதே, விதவைகள் நிலைகள் இன்னமும் மோசமானது. மிகவும் கீழ்த்தரமாக நடத்தப் படுவது விதவைகள்தான் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை.

திருமணம் முடிந்தன்றே என்னவோ அன்பளிப்பு போல சகல உரிமையோடும் கணவன் வீட்டார் கையோடே கூட்டிச் செல்லும் "புக்ககம்" ஏனோ, கணவன் இறந்தவுடன் உரிமைகளும் மாறிவிடுகிறது. மூட்டை முடிச்சுக்களுடன், அப்பா இருந்தால் அப்பாவுடன், அல்லது சகோதரன்/தாய்மாமன் வீட்டுக்கோ அனுப்பப்படுகிறாள்.

ஆக கணவனை மட்டுமே உறவாக அறிவிக்கிறதா இந்த முறைகள். பின் ஏன் அந்தப் பெண், கணவனை சார்ந்த பெற்றோரையும் பேண வேண்டும்?

சரி, அப்படி அனுப்பப்படுபவள் பிறந்த வீட்டு உறவுகளால் மதிக்கப்படுகிறாளா? அதுவும் கிடையாது. ஏதோ வேண்டாதவர் வந்து விட்டாற்போல் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ளப்படுகிறாள். இன்னும் குழந்தைகள் வேறு இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். விதவையாக இருப்பவளிடம் பணம் வேறு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தால் அவள் படும்பாடுகள் வார்த்தைகளால் சொல்லவே முடியாதது. பணம் இல்லாவிட்டால் அவளையோ அல்லது அவள் குழந்தைகளையோ விரும்பி ஏற்பார் யாருமில்லை. இருந்து விட்டாலோ, வல்லூறுகள் போல அவளைக் கொத்தும் உறவுகள்.

விதவையான ஒரு பெண்ணின் தலையை கணவன் இறந்த பதிமூன்று நாட்களுக்குள் மொட்டையடித்து, உடலில் உள்ள ரோமங்கள் எல்லாம் மழிக்கப்படும். புருவம் உட்பட (இப்போது இதெல்லாம் இல்லை). கண்ணாடி வளையல்கள் உடைக்கப்படும். ஒரே வண்ணத்தில் (வெள்ளை அல்லது காவி) புடவையணிந்து கொள்ளவும், நகை, பொட்டு, பூ போன்றவற்றை அணியக்கூடாதென்றும் விதிக்கப்பட்டனர். விதவைகளுக்கு புதிய துணிகள் எடுத்தாலும் அவற்றை நனைத்துத்தான் தருவார்கள், அதுவும் கையால் அவளிடம் கொடுக்க மாட்டார்கள், அவள் பக்கத்தில் வைக்கப்படும். சிலர் அவள் முகம் பார்க்காமல், இடது கையால் அவளுக்கு முதுகுகாட்டி நின்றுகொண்டு மேலிருந்து தரையில் போடுவார்கள் - இதை என் கண்ணால் பார்த்திருக்கிறேன். அதை எடுத்து அவள் உடுத்த வேண்டும்.

1950-க்களுக்கு முன் வரை எந்த உள்ளாடைகளும் அணியக்கூடாதென்றும் இருந்தது. அவள் அழகு ஆண்களுக்குத் தொந்தரவாக இருக்குமாம். இதென்ன நியாயம். பாவம் ஒருபக்கம் பழி ஒரு பக்கம். இப்போதெல்லாம் அதிகம் நிகழ்வதில்லையென்றாலும், ஆண்களுக்கு அவள் மீது ஆசை வந்துவிடக் கூடாதென்று அவளை அலங்கோலமாக்கியது, கணவன் இறந்து முதன் முதலாக பிறந்தகம் அல்லது தம் குழந்தைகள் வீட்டுக்குப் போகும்போது வாவென்று வரவேற்று அழைக்க யாரும் அவள் முன் செல்லக் கூடாது என்பது போன்றவைகளை எப்படித்தான் செய்ய முடிகிறதோ? தன்னுடனே இத்தனை நாள் இருந்த ஒரு ஜீவனை இப்படியெல்லாம் நடத்த முடிகிறதோ?

அவளுக்கு காரமான, சுவைமிகுந்த உணவுகள், உப்பு போட்ட அல்லது இனிப்பான பண்டங்கள் சாப்பிடக் கொடுக்கமாட்டார்கள். புதியதாக சமைத்த உணவை சாப்பிடக்கூடாது. இவையனைத்திலும் உள்ள உணவுகளை நீக்கி விட்டால், என்னதான் சாப்பிடுவார்கள்? வீட்டில் உள்ள அனைவரும் உண்ட பிறகுதான் சாப்பிட வேண்டும். சாப்பிட்டு கையலம்பி கொண்டு விட்டால் மீதும் அன்று சாப்பிடக் கூடாது. ஒருவேளை சாப்பாடுதான். அவள் திருமணம், குழந்தைபிறப்பு போன்ற சுப காரியங்களுக்கு வரக்கூடாது. அது அவள் பிள்ளையாக இருந்தாலும் கூட.

ரோமானியர்களைப் போன்றே, 1950-க்கள் வரை, இந்திய ஆண்களின் சராசரி வாழ்நாள் 36-40க்குள்ளேயே இருந்தது. அதனால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு பெண்ணாவது புருஷன் இறப்பதால் விதவையாகி வாழ்ந்திருக்கிறாள்.

விதவையாவதை, அவளை அலங்கோலமாக்குவதன் மூலம் பெண்களுக்கான சாபம் போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருந்தினர். பெண்களுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகளில் பெருந்துன்பமயமானது, விதவைக் கோலம். ஏற்கனவே காதல் கணவனை இழந்து, உடலாலும் மனதாலும் தனிமையின் கொடுமைகளை அனுபவிக்கும் பெண்ணுக்கு, அவள் வாழுவதே ஒரு சுமையாக்கி பார்ப்பதில் என்ன ஒரு குரூர சுகம் என்று தெரியவில்லை.

சதியாக்கி எரிக்கத்தானே கூடாது என்ற சட்டம் விதித்தீர்கள்? இப்போது உயிருடன் நடைபிணமாக்கி விட்டோம், என்ன செய்வீர்கள் என்ற குரூர திருப்தி -இல்லையா?

இந்நிலை ஓரளவு பெண்கள் கல்வியறிவு பெற்று, சம்பாதிக்கத் துவங்கிய பின் சிறிது மாறியது. இருந்தாலும், வேலைக்குப் போய் சம்பாதிக்க முடியாத, கல்வியறிவு குறைந்த சில விதவைகள் இன்றும் பிறர் வீட்டில் சமையல் செய்வது, ஊறுகாய், அப்பளம், பட்சணம் செய்து விற்று சம்பாதிப்பது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.

இன்றும் பிறந்தகமோ, புகுந்தகமோ அவளுக்கு ஆதரவு கொடுப்பதில்லை. அப்படிப்பட்ட சில இளம்விதவைகளின் உடல் தேவைகளை, மறுமண ஆசைக் காட்டி, தன் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளும் ஏமாற்றுக்கார இளைஞர்கள் எத்தனோ இன்றும் உள்ளனர். ஒரு நொடியில் மனம் சிதறி, அப்படி உடலால் தவறிப் போன விதவைகளில் சிலர் விபச்சாரம் போன்ற தொழிலுக்குள்ளும் தள்ளப்படுகின்றனர்.

அப்படி ஒருவேளை பிறந்தகத்தாரால் ஆதரவு கொடுக்கப்படுபவள் அவர்கள் வீட்டில், தனியொருத்தியாக சமைப்பது, அவர்கள் வீட்டு குழந்தைகளைப் பேணுவது, பத்துப் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது போன்ற அனைத்து வேலைகளையும் செய்யும்படி நெருக்கப்படுகிறாள். மீண்டும் இவள் இளம் விதவையாக இருந்தால், மனசாட்சியே இல்லாமல் அவ்வீட்டின் ஆண்களின் பாலியல் பலாத்காரங்களுக்கு ஆளாகிறாள்.

யமுனை நதிக்கரையில், விதவைகளின் நகரம் என்று அழைக்கப்படும் வ்ருந்தாவன், நம் தலைநகரான தில்லிக்கு 135 கி.மீ. தூரத்திலேயேதான் உள்ளது.

விதவைகள் மீதான வன்கொடுமைகள் இந்தியா மட்டுமில்லை, உலகின் பல்வேறு பாகங்களிலும் இன்றும் சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆப்பிரிக்காவின் கானா-வில் விதவையான அந்தப் பெண் சாலையில் அன்று முதல் முதல் எதிரில் வரும் ஆணுடன் உறவு கொள்ளவேண்டும் என்ற சட்டம் இருந்திருக்கிறது. மேலும், அவள் தனியாக ஊருக்கு வெளியே உள்ள வீட்டில் தனித்து விடப்படுவாள். இந்நிலையில், தனித்திருக்கும் பெண்ணின் மன உளைச்சல், பாலியல் தொந்தரவுகள், கணவனை இழந்த துக்கம் இவையெல்லாம் அவளை தற்கொலைக்குத் தூண்டுகின்றன. கானாவில் 1990-யில்தான் விதவைகளுக்கு எதிரான மனித உரிமைப்பறிப்புகள் பற்றிய விழிப்புணர்வு தோன்றி மாற்றுச் சட்டங்கள் உருவாகின.

இன்னும் சில வளர்ந்த நாடுகளில் விதவைகளின் நிலை பற்றி திரட்டிக் கொண்டிருக்கிறேன். தகுந்த ஆதாரங்கள் கிடைத்தது வெளியிடுகிறேன்.

===================


.

8 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

நவராத்ரி கொலு வைத்த பிறகு சக்திக் கனல் கொஞ்சம் அதிகமாகவே தகிக்கிறது போல:-))

சதி, உடன்கட்டை ஏறுவது இதெல்லாம் ராஜபுதனத்தில் மட்டுமே வலியுறுத்தப்பட்ட விஷயம். காரணம், ராஜபுத்ரர்கள் என்ற ஒரு குழுவே, இந்த மண்ணின் மீது ஆக்கிரமித்து வந்த ஹூணர்களும் இங்கிருந்த கூர்ஜர இனத்தவர்களும் கலந்து உருவான ஜாதி. ஹூணர்களிடத்தில் ஒரு பழக்கம், பெண்களுக்கு அதீத சுதந்திரம், அதே நேரத்தில் சுய கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்ற கண்டிப்பான ஒழுங்கு, தம் இனப் பெண்களுக்காக உயிரையும் கொடுப்பதென்பது அந்த முரட்டு ஜாதிக்குரிய குணாதிசயங்கள், கலப்பினமான ராஜபுத்திரர்களிடத்திலும் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. வேறு எந்தப் பகுதியிலும் உடன் கட்டை ஏறுகிற பழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை.

அதே நேரம், சதி என்று தக்ஷ யாகத்தில் தன் கணவனுக்கு இழுக்கு ஏற்பட்டதால் யாகத்தீயில் விழுந்து தன்னை மாய்த்துக் கொண்ட தாக்ஷாயணியின் பெருமை சிலாகித்துக் கூறப்படுவதும், அதே மாதிரிப் பின் பற்ற வேண்டும் என்ற கிறுக்குத்தனமான இடைச்செருகல்களும் இங்கே நிறையவே உண்டு.

கைவல்யம் என்பது,ஒரு பத்தினிப்பெண் தானாக விரும்பி ஏற்றுக்கொண்ட ஒரு தனிமை, தவம். ஏதோ ஒரு காலகட்டத்தில் விகாரப்பட்டுப் போனது.

இங்கே சமீப காலத்தில் அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றித் தெரியுமா?

கொடுமுடி கான கோகிலம், கே பி சுந்தராம்பாள் தான் அவர்! தனது கணவர் எஸ் ஜி கிட்டப்பா மறைவுக்குப் பின் ஒதுங்கியே இருந்த தவம் அவருடையது. மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகே அவரைச் சில திரைப்படங்களில் நடிக்க வைக்கவே முடிந்தது.

சக்தியா? சகதியா?

இப்போது நடந்துகொண்டிருக்கும் புவனேஸ்வரி புராணங்களைப் பார்த்தால் சகதியாகத் தான் தெரிகிறது.

சக்தி வெளிப்பட இன்னமும் தவம் இருக்க வேண்டுமோ?

"உழவன்" "Uzhavan" said...

மனம் வலிக்கும் உண்மைகள். உங்களின் உழைப்பு, தேடல் மிக அதிகம். வாழ்த்துக்கள் மேடம்.

வால்பையன் said...

//சப்த சிந்து (இண்டஸ் நதி) முதல் இந்தியப் பெருங்கடல் வரையான நிலப்பரப்பை தாய்நாடு/தந்தைநாடாகவும் புண்ணிய பூமியாகவும் யார் கருதியிருக்கிரானோ அவன் ஹிந்து ஆவான்.//


இந்த பகுதிகளை தாய்நாடாக நினைக்கும் இஸ்லாமியர்களும், கிருஸ்தவர்களும் கூட இந்துக்கள் தானா!?


இந்த விசயத்தை ஏன் மற்ற மொழிகளில் எதிலும் சொல்லவில்லை!
சமஸ்கிருதத்தில் மட்டும் சொல்லபட்டுள்ளது!

R.Gopi said...

சக்தியா சகதியா அனல் பறக்குதே விதூஷ்...

//சக்திகளாகப் பெண்களைக் கொண்டாடும் நம் இந்தியாவின் சாபக் கேடுகள் சில புரையோடிப் போனப் பழக்கங்களில் ஒன்றான விதவைச் சம்பிரதாயங்கள்.//

மிக‌ ச‌ரி... ஆனால், ந‌ம் ச‌முதாய‌ம் அவ‌ர்க‌ளுக்கு என்ன‌ செய்ய‌ வேண்டும்?? அதாவது அவ‌ர்க‌ளின் ம‌றுவாழ்வுக்கு??

//சனாதன தர்மம் என்றால் இவை அனைத்தையும் ஒன்றாகப் பின்பற்றும் நோக்கம் உடைய ஒரு குழுவாகும். இந்து தர்மத்தின் ஒவ்வொரு செயலிலும் ஆன்மீகம் பின்னிப் பிணைந்துள்ளது. ஆன்மீகம் இல்லாமல் இந்து தர்மம் இல்லை.//

ந‌ல்ல‌ விரிவான‌ விள‌க்க‌ம்... அதானே...விதூஷ் விள‌க்க‌மா ஒரு விஷ‌ய‌த்தை எழுதுவ‌து என‌க்கு ஒன்றும் ஆச்ச‌ரிய‌மான‌ விஷ‌ய‌மாக‌ ப‌ட‌வில்லை...

//நெருப்பைத் தொடாதே என்று சொல்லும் தாய் இல்லை வேதங்கள். நெருப்பு சுடும் என்று சொல்லும் ஆசிரியராக மட்டும் வேதங்கள் இருக்கின்றன. மனிதர்கள் தவறுகிறார்கள். சட்டங்கள் /தர்மங்கள் தவறுவதே இல்லை. மனிதர்களின் தவறுகளுக்கு தர்மங்களை குறை கூறுவது, அல்லது நம் சௌகரியத்துக்கு ஹிந்து தர்மத்தை மதிப்பு குறைத்து கூறி வருவதால் எந்த மாற்றமும் பாதிப்பும் வேதங்களுக்கோ ஹிந்து தர்மத்துக்கோ ஏற்படப்போவதில்லை.//

ந‌ன்றாக‌ விள‌ங்க‌ வைக்கும் விள‌க்க‌ம்...

//வகிட்டுப் பொட்டு, குங்குமம், மெட்டி, தோடு, மூக்குத்தி போன்றவைக்கு மாந்த்ரீக மற்றும் அக்குபங்ச்சர் ரீதியான காரணங்கள் இருக்கின்றன. இவைகளெல்லாம் கூட VAS (value added sasthirangal) போன்றவைதான். தேவையென்றால் அல்லது விருப்பமிருந்தால் பின்பற்றலாம்.//

ச‌ரிதான்...

//திருமணம் முடிந்தன்றே என்னவோ அன்பளிப்பு போல சகல உரிமையோடும் கணவன் வீட்டார் கையோடே கூட்டிச் செல்லும் "புக்ககம்" ஏனோ, கணவன் இறந்தவுடன் உரிமைகளும் மாறிவிடுகிறது. மூட்டை முடிச்சுக்களுடன், அப்பா இருந்தால் அப்பாவுடன், அல்லது சகோதரன்/தாய்மாமன் வீட்டுக்கோ அனுப்பப்படுகிறாள்.//

மிக‌வும் துய‌ர‌மான‌ ம‌ற்றும் சிந்திக்க‌ வேண்டிய‌ ஒரு விஷ‌ய‌ம்...

//இன்னும் சில வளர்ந்த நாடுகளில் விதவைகளின் நிலை பற்றி திரட்டிக் கொண்டிருக்கிறேன். தகுந்த ஆதாரங்கள் கிடைத்தது வெளியிடுகிறேன்.//

அன‌ல் ப‌ற‌க்கும், அதே ச‌ம‌ய‌ம் நன்கு சிந்திக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌த்தை ப‌ற்றி எழுதி இருக்கிறீர்க‌ள் விதூஷ்... அத‌ற்காக‌ உங்க‌ளுக்கு என் ஸ்பெஷ‌ல் ச‌ல்யூட்...

பா.ராஜாராம் said...

வித்யா,எவ்வளவு அழகாய் சொல்கிறீர்கள் எதை சொன்னாலும்!உள் இருக்கும் விஷயங்கள் "தைக்கிறது"என்னை மாதிரியான தான் தோன்றிகளுக்கு கூட.

இன்றைய கவிதை said...

'ஆவ்...' என்ற நினைத்துதான்
படிக்கத் துவங்கினேன்!

படிக்கப்படிக்க
'வாவ்...!'-ஆகிப் போனது!

அருமை....!

சந்தான சங்கர் said...

தேவதையின்
வரமிட்டிருக்கின்றேன்
உங்கள்
கரமிட்டுச்செல்லுங்கள்..

Vidhoosh said...

கி.மூ. -- //கொடுமுடி கான கோகிலம், கே பி சுந்தராம்பாள்// பகிர்வுக்கு நன்றி

உழவன்-நன்றி

வால்பையன்: ம்ம். அப்படியும் சொல்லலாம். "நீரிதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்"

கோபி: நன்றி.

பா.ராஜாராமா: நன்றி

இன்றைய கவிதை: நன்றி.

சந்தான சங்கர்: தேவதையைக் கண்டேன்.

-வித்யா

Post a Comment