பயணக்குறிப்பு #3: ஷிர்டி கோவிலில்

பயணக்குறிப்பு #3: ஷிர்டி கோவிலில்

பொழுது புலர்ந்தது. த்வாராவதி கேண்டீனில் அதிரடி விலைக்குறைப்பு, ஒரு ரூவாய் டீ, ஒன்றரை ரூவாய் காபி, தண்ணீர் பாட்டில் எட்டே ரூபாய். பிசுகோத்து எல்லாம் ரொம்ப விலை குறைச்சல், ஆனா அங்கிருந்த பிஸ்கோத்து பிராண்ட் நாம் எல்லாம் சின்ன வயசுல ஏங்கி பார்த்தவை, நம் பிள்ளைகள் சீந்தாதவை. நல்ல வேளை கால் லிட்டர் கொள்ளளவில் பெரிய்ய்ய தம்ப்ளர் கொண்டு வந்திருந்ததால், டீ "குடிச்சோம்". இல்லேன்னா நாக்கு மட்டும்தான் நனைஞ்சிருக்கும்.

மொபைல் போன் பர்ஸ் கையில் எதுவும் கொண்டு போகக் கூடாது-ன்னு த்வாரவதி floor manager சொன்னார். அதே போல காலை உணவுக்கும் ஏதாவது பூ மட்டுமாவது வாங்கிக்கலாம்னு அவரவர் கொஞ்சமாக பணம் மட்டும் கையில் எடுத்துக் கொண்டோம்.

உடுப்பி ஹோட்டல் உண்மையில் கன்னடக்காரரோடதாம். அப்போ "ஓனர் மலையாளி"ன்னு பரஞ்ச அந்த எலி மூஞ்சி மல்லு அப்பரசண்டிக்கு இன்க்ரீமென்ட் கிடைக்காத கோவமாக்கூட இருக்கலாம். அடுத்த ஏப்ரலில் பார்த்துக்கலாம்.

அது கிடக்கட்டும், வயிற்றுக்கு உஷத் கால பூஜை ஆனது. சார் காபி சார்... லெவலுக்கு காபி குடிச்சேன். சாம்பாரோட அவலத்தை விவரிக்க இயலாது. இருந்தாலும் சாம்பாரோல்யோ, சாப்ட்டோம். சப்ஜிக்கு சாம்பார் கோடி பெரும்.

ஆச்சா.. பாதயாத்ரையா கோவிலுக்கு போகலாம்னு முடிவாச்சு.. ஏன்னு கேட்டேளா? அஞ்சு நிமிஷம் நடைதான்.. ஹி ஹி..

போற வழில "சார்.. கைட் (Tourist Guide) சாஹியே? மந்திர் தக் லே ஜாய் கா" நூறு ரூவா கேட்டுக்கிட்டே வந்தாங்க. தெள்ளத் தெளிவா ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் "சாய்பாபா கோவிலுக்கு போகும் வழி"ன்னு அம்புக் குறி போட்டிருக்கு, இந்த வழியா போகக்கூடாது மெயின் ரோடு வழியாத்தான் போகணும்னு guide misguide பண்றாங்க.

எங்களைப்போன்ற அ-இலக்கியவாதிகளுக்கு ஆறாம் அறிவும் ஜாஸ்தி என்பதால் நாங்களே பார்த்துக்கறோம்னு சொல்லிட்டு, மணிஜி பபாஷா வழி நடத்த முன்னேறினோம். கோவில் வாசலில் ஒரு ரோஜா, விபூதி பச்சிலை, ரெண்டு வெள்ளை கோடு மாதிரி ஏதோ ஒரு செடி/மரத்தின் பகுதி (பூவா இலையா ஒன்னும் புரியலை). பத்து ரூபாய்க்கு நாலு என்பதாக வாங்கினோம். ஒரு இலையோ இல்லை அந்த வெள்ளைக் கோடோ இல்லாம வாங்கி இருந்தா பத்து ரூபாய்க்கு ஐந்து, ஆறு கூட தந்து கொண்டிருந்தார்கள்.

க்யூவில் ஐக்கியம். அறியாமையின் காரணமாக முதலில் கூட்டத்தின் வீரியம் தெரியவில்லை. ஷீரடி சாய்நாத் மஹாராஜ் கி.. ஜெய்-ன்னு குரல் ஒலிக்க ஆரம்பித்த போது தான் கூடம் நிறைந்து விட்டதை உணர்ந்தோம். நல்லவேளை குழந்தைகளும் நாங்களும் சாப்ட்டுட்டே வந்தோம். பதினொன்றரை முதல் ஒரு மணி வரை தரிசனம் நிறுத்தப் படும்னு அறிக்கைப் பலகையில் இருந்தது. உள்ளுக்குள் வேண்டிக்கொண்டே ஊர்ந்து கொண்டு இருந்தோம். பதினொன்னேகால் மணிக்கு ஹாலில் இருந்து திறந்து விடப்பட்டு மாடிப்படி வழியாக அனுப்பப்பட்டோம். மாடியில் ஒரு ஹால், அங்கே காத்திருப்பு, ஒரு வழியாய் கையிலிருந்த ரோஜா பொக்கே கெக்கே பிக்கே என்று ஆனது. குழந்தைகள் தண்ணீர் தண்ணீர் சரிதா போலாயினர். இரக்கப்பட்டால் இன்னும் நச்சரிப்பு ஜாஸ்தியாகும்னு "தரிசனம் ஆனதும்தான்"ன்னு அவர்களை அமர்த்தியானது. க்யூவில் அங்கங்கே பெஞ்ச் போல அமைத்துள்ளனர்.

தாவணிப் பெண் ஒருத்தி எங்களுடன் தெலுங்கில் மாட்லாடினார். நாங்க தங்கிலிஷில் பேசினோம். அவர் சொன்னது எதுவுமே எங்களுக்கு புரியலை. அதே நிலைதான் அங்குமாக இருந்திருக்கும், ஆனாலும் பேசிக் கொண்டிருந்தோம். கும்க்கி பார்த்துக் கொண்டிருந்தார். ஜூனியர் கும்க்கி-கிட்ட "அம்மா கிட்ட ஊருக்கு போனதும் எதை எல்லாம் கவனிச்சு வந்து சொல்லணும்னு சொல்லி கொடுத்தாங்க இல்ல" என்று கேட்டேன். குழந்தை பாவம், ஊமைக் குசும்பன். அவனுக்கு தெரியும் என்றே விட்டுட்டேன். பகவான் பார்த்துப்பான். மணிஜி & செல்வம் தம்பதி சமேதராய் பின்தங்கிப் போனதால், அங்கு நடந்த "நிகழ்வுகள்" குறிக்க முடியவில்லை. ராதிகாவை கேட்டால் தெரியும். பிரேமலதா பாவம் அப்பிராணி.

இந்த ஹாலும் திறந்து விடப்பட்டது. பாபா சந்நிதானத்தில் இருபக்கமும் நாலு வரிசையாகப் பிரித்திருக்கிறார்கள். அவரவர் அதிருஷ்டம் எந்த வரிசையில் அமைகிறது என்பது. கடைசி வரிசையில் அமைத்து முன்னால் போய் விட்டால் பாபா-வை பார்க்கிறது சிரமமாக இருக்கு. எம்பி எம்பி பார்க்கணும். கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் பூஜை பஜன் ஆரத்தி எல்லாம் ஆகிறது. அது வரை நின்று கொண்டே இருக்கவேண்டியதுதான். க்யூவில் வந்து சந்நிதானத்துக்கு உள்நுழையும் போது, சற்றே முன்பாகவே நின்று கொண்டு விட்டால் நல்ல தரிசனம் கிடைக்கும். கிட்டக்க போய் பார்க்கவேண்டும் என்ற வழக்கத்தில் இருப்பவர்கள் கொஞ்சமா விட்டுக் கொடுத்து எட்டி நின்று பார்க்க காம்ப்ரமைஸ் பண்ணிக்கொண்டால் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம்.

விருப்பம் இருந்தால் வெளியே உண்டியலில் பணம் போடலாம். கோவிலுக்குள் யாரும் பணம் கொடுவென்று டிமாண்ட் செய்வதில்லை. சிறப்பு தரிசனமும் கிடையாது. ஐ.எ.எஸ். ஐபிஎஸ் போன்ற முக்கிய அதிகாரிகளின் கடிதம் இருந்தால் ஏதோ ஒரு வழியாக அனுமதிகிறார்கள். அப்பிடி இருந்தாலும் கடைசியில் சன்னிதானத்துக்குள் போகும் போது எல்லாம் ஒன்றாகத்தான் போக வேண்டும். சன்னிதானத்துக்குள் ஒரே நேரத்தில் ஏறத்தாழ 300 பேர் வரை நின்று தரிசிக்கிரார்கள் என்று தோன்றியது.

உண்மையில் பாபா கோவிலுக்குள் பக்தர்கள் கொண்டு வந்து தரும் எதையுமே ஏற்பதில்லை. நம்மிடமே திருப்பித் தந்து விடுகிறார்கள். ஆகவே பக்த ஜனங்களே வெறும் கையோடும் மனம் நிறைய பிரார்த்தனைகளை சாய்பாபா சந்நிதானத்தில் மனமுருக வேண்டிக்கொண்டால் போதும், மீதியெல்லாம் சாய்பாபா பார்த்துக் கொள்வார். ஷ்ரத்தா ஸபுரி..

வெளியே வந்ததும் பாபா அமர்ந்திருந்த மரத்துக்கு எதிரே ஊதுவத்தி ஏற்றி வைக்கும் படி அறிக்கை பலகை கேட்டுக் கொள்கிறது. இதுவும் அவரவர் விருப்பம் தான். கட்டாயமில்லை. ஊதுவத்தி புகையில் படிந்த கரியை எல்லாரும் நெற்றியில் இட்டுக் கொண்டார்கள்.

வெளியே க்யூவில் நின்று வெண்-கேசரி பிரசாதம் வாங்கி வந்து கொடுத்தார்கள். சர்க்கரை மிட்டாய் பிரசாதமும் பாபா மீது போர்த்திய துணியும் வேண்டும் என்றால் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். வேறு பிரசாதங்களும் (தின்பண்டங்கள்) விற்பனையாகிறது.

சர்க்கரை மிட்டாயில் இருந்த எள்ளுருண்டை ரோஸ் எசன்ஸ் கலந்து செய்திருப்பாங்க போல, நன்றாக இருந்தது. பேரிட்சை வறட்டு பழம்.

வெளியே வந்தும் கும்க்கி அவர்கள் கலாச்சார பரிமாற்றங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு மாற நிழலில் ஓய்வு கொண்டிருந்தார். ஜூனியர் கும்க்கி இதைக் குறித்த மனக்குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்திருக்கலாம். மணிஜி செல்வம் & வாசு வாங்கி வந்த லஸ்ஸி மற்றும் ப்லேவர்டு மில்க் குடிச்சோம்.

இப்படியாக மதியம் இரண்டாகி விட்டது. எனக்கு கால் வீக்கம், பிரேமா-அக்காவுக்கு ஜுரம் ஜலதோஷம், கும்க்கிக்கு முதுகு வலி, மற்ற அனைவருக்கும் அசதி. மதிய உணவு நாங்கள் ரூமுக்கே வாங்கித் தரோம்னு சொன்ன நல்லவங்க மணிஜி, வாசு, செல்வம், ஷங்கர் ஆகியவர். பாக்கெட்ல கார ரசம், தித்திப்பு குழம்பு (ஐயடா), சாதம், மோர், சப்பாத்தி, மசாலா தூக்கலான சப்ஜி, எல்லாம் வாங்கி கொடுத்துட்டு சாப்பிடும் தட்டே வாங்கி வரலை. இருந்த பசியில் எப்டியோ சாப்ட்டோம். இந்நிகழ்வு மறந்து விடக்கூடாது என்பதற்காகவே இங்கே குறித்து வைக்கப் படுகிறது. மீதியை நானும் ராதிகாவும் அடுத்த ட்ரிப்பில் தீர்த்துக்கொள்வோம்.

சனி சிங்கனாபூர் போயிருக்க வேண்டியது, மறுநாளைக்கு ஒத்தி வைக்கப் பட்டது. குழுவில் சலசலப்பு ஏற்பட்டது. (இடக்கரடக்கல்) கைகலப்பு ஆகும் முன் வாசுவும் ஷங்கரும் வந்து தடுத்து விட்டதால் வெங்கலப்பானைகள் மீண்டும் தேங்காய்த் துருவிகள் ஆயின.

சாயந்திரம் செல்வம் பேபி சிட்டிங் பண்ணுவதாக ஒப்புக் கொள்ள, பெண்கள் அனைவரும் ஷாப்பிங் போனோம்.. ஹுக்கும்.. எல்லாம் மூணு மடங்கு விலை... கல்யாணமாகி ஏழெட்டு வருஷத்துக்கு மேல் ஆனா டிக்கட்டுகள் என்பதால் இஷ்டப்படி எதுவும் வாங்காமல் அடக்கி வாசித்து திரும்பிட்டோம்.

மறுபடி பாபா தரிசனம் பண்ணலாம்னு நினைச்சு கோவில் முழுக்க சுத்தினோம். ராதிகா கண்ணெதிரே அந்த செக்யூரிட்டி காசு வாங்கிக் கொண்டு யாரையோ உள்ளே அனுப்பினார். எங்களை அனுமதிக்கலை.

த்வாரகாமயி கோவில் மற்றும் ஹனுமார் கோவிலுக்கு (மாருத் மந்திர்) போயிட்டு, பக்கத்திலேயே இருந்த கடையில் ரூ.40 க்கு polished marble பாபா சிலை சின்னதாய் உள்ளங்கை அளவுக்கு கிடைத்தது. சில புத்தகங்கள் வாங்கினோம். உடுப்பியில் சாப்பிட்டோம்.

இதற்குப் பிறகான குறிப்புக்களில் தண்ணீரை விட நாங்கள் பருகியது லஸ்ஸி என்பதாகக் கொள்க. நாங்கள் என்பது பெண்களும் குழந்தைகளும். அவர்கள் தண்ணீர் மட்டுமே பருகினர்.

முக்கிய குறிப்புக்கள்: சாய்பாபா கோவிலுக்கு எதுவும் வாங்கிப் போக வேண்டாம். பர்ஸ், தண்ணீர், சிதறாத பழ உணவுகள் கொண்ட பை கொண்டு போகலாம்.

அடுத்தது சனி சிங்கனாபூருக்கு.

3 comments:

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

இராஜராஜேஸ்வரி said...

ஷீரடி சாய்நாத் மஹாராஜ் கி.. ஜெய்-

புதுகைத் தென்றல் said...

நிஜமாகவே ஆச்சரியமாக இருக்கு. ஷீரடியில் ஆனந்தமான தரிசனம். நான் தங்கியிருந்த ஹோட்டலும் மிக அருகில்தான். அந்த போன் நம்பர்கூட போட்டோவில் இருக்கே. அங்கே புக் செய்திருக்கலாமே!!

Post a Comment