நீதானா அந்தக் குயில்

சரியாக ஒன்றிரண்டு மாதம் முன்னால் புழுதி கவிதையும், திருக்காட்டுப்பள்ளியும் பற்றிய பதிவுகள் இணையத்தில் வெளியிடும் போது இதெல்லாம் நிகழும் என்று கனவிலும் நினைக்கவில்லை. நித்யாவின் facebook கிடைக்கவும் மெசேஜ் அனுப்பினேன். "sorry i don't remember you" என்று பதில் வந்தது. :( விடுமா விக்ரமாதித்தன் வேதாளம். மீண்டும் ஒரு மெயில் அனுப்பி "குடும்பப் பாட்டு" ஒன்றையும் பாடிக் காட்டினேன். கண்களில் தண்ணீர் தளும்ப, செவாலியே சிவாஜி ரேஞ்சுக்கு நாத்தழுதழுக்க "வித்யா-நித்யா" அலம்பல் ஜோடி மீண்டும் இணையத்தால் இணைந்தது. பிறகென்ன..... கேக்கணுமா??

சென்ற 27.11.09 அன்று காரில் திருச்சி போய் கொண்டிருக்கும் போது கார்த்தியின் போன் வந்தது "என்ன, எப்படி இருக்க, என்ன செய்யுற" என்றெல்லாம் கேட்டுக் கொண்டே போனேன். நான் இப்போ எம் எல் முடிச்சுட்டேன். "அப்ப வக்கீலாயி"ட்டீங்களா"??? என்று சுருதி கொஞ்சம் இறங்கியது. "இல்ல. எம்எல்ஏவா ஆயிட்டேன்".... தொண்டையில் இருந்து வார்த்தைகள் நீளவில்லை. செருமிக் கொண்டு, "அப்படீங்களா சார்" என்றேன். அருகிருந்த என்னவர் "என்ன திடீர்னு பம்மற...யாரு போன்ல" நாம் பம்முவது பற்றிய உள்ளூர மகிழ்ச்சியோடு கேட்டார். "என் பழைய நண்பர்.. என்று கொஞ்சம் அழுத்தம் கொடுத்துக் கொண்டேன்.

அப்போதும் நினைக்கவில்லை, வில்சனின் ஈமெயில் வரும் என்று. திடீர்னு ஒருநாள் நாமெல்லாம் டிசம்பர் 12 அன்று சந்திக்கப் போறோம் என்று வில்சனின் மெயில் வந்தது. :)

=====================================



கல்லணையைக் கட்டிய கரிகால் சோழன்


கல்லணை




=======================================================================
11.12.2009 அன்று மாலை ஆறு மணி வாக்கில் புத்தக விழாவுக்குக் கிளம்ப முடியாமல் அலுவலகத்திலேயே இருந்தேன். "Still in office. convey my best wishes to vasu. to you too" என்று sms ஒன்றை நர்சிம்முக்கு அனுப்பினேன். "no chance. come" என்று பதில் வந்தது. என்ன சொல்வது இவருகிட்ட என்று யோசிக்கும் போதே, வீட்டிலிருந்து அம்மா-அம்மா டென்ஷன் ஆகி போன் பண்ணி திட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக good night boss சொல்லி அலுவலகத் தலை(வலி)யை வீட்டுக் அனுப்பிவிட்டு பார்த்தால் ஏழு மணி.

முடிந்த வரை வேகமாப் போய் டிஸ்கவரி புக் ஹவுசில் தலையைக் காட்டி புறப்பட்டு விடலாம் என்று ஆக்டிவாவை திருப்பினால், ஐ.டி. காரிடார் முடியும் மத்திய கைலாசத்திலிருந்து கிண்டி வரை ஊர்ந்து ஊர்ந்து போனால், அம்மாவின் போன் "சைதாப்பேட்டையில் ஏதோ திறப்பு விழாவாம்.. நங்கநல்லூரெல்லாம் வந்துண்ட்ருக்காத. நாங்க கிளம்பியாச்சு. நீ நேர கோயம்பேடு வந்துரு" என்று தாயின் ஆணை. வேறன்ன செய்ய. அட ஆபீசுலேந்து நேர வர ஒரு பொண்ணுக்கு வேற எந்த உபாதையோ, பசியோ இருக்காதான்னு யோசனையே கிடையாது இந்தம்மாக்கு என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டே ஊர்ந்தேன்.

வடபழனிக்கருகில் வரும்போது மணி இரவு எட்டரை. இனிமே பூமி தாங்காது என்று இருக்கும் சந்தில் எல்லாம் புகுந்து, டிராபிக் ஜாமிலிருந்து தப்பித்து வளசரவாக்கம் தெருக்கள் வழியாக கோயம்பேடு சாலையை அடைந்தேன்.

மீண்டும் ஊர்ந்து ஊர்ந்து "ஒன்று" வாசனை மூக்கைத் துளைக்கவும் "ஆகா வந்துட்டோம்டா" என்று என்னையே பாராட்டிக் கொண்டு, டூ-வீலர் பார்கிங்கில் இரண்டு நாளுக்கு பார்க்கிங் டிக்கட்டு வாங்கி மூன்று முறை சைடு லாக் பண்னோமானு பாத்து, நாலஞ்சு முறை சென்டர் ஸ்டாண்டு போட்டாமானு செக் பண்ணி, ஆறாவது நிமிஷம், ஏழு எட்டு வைத்து ஒம்பதாம் பிளாட்பாரம் சென்றால் பத்து மணி பஸ்ஸு கண்டேக்கடரூ என்னைத் திட்டிக் கொண்டிருந்தான். "இவங்கல்லாம் வரலைன்னு யாரு ...." என்று முடிக்கும் முன்னேயே நல்ல வேளை முன்னால் சென்று நின்றேன்.

ரயிலில் டிக்கட்டு கிடைக்காமல் லொட லொடவென்று அரசு பேருந்தில் இரவு பதினொன்றை வரைக்கும் சிங்கிள் ஆம்ப்ளிபையரில் அலறிக்கொண்டிருந்த "சுர்ருங்குது" பாட்டை "பூம் டீவி" வீடியோவில் பார்த்துக் கேட்டுக் கடுப்பாகி, "உங்கள் குறைகளை 044 25366351 என்ற எண்ணுக்குத் தெரிவியுங்கள்" என்ற அறிவிப்பைப் பார்த்து, போன் பண்ணினேன். "ஏங்க.. நான் உங்க பஸ்சுல காசு கொடுத்து போயிட்டுருக்கேங்க. இந்த பாட்டை எப்போ நிறுத்துவீங்க" அப்படீன்னு கேட்டேன்.

"இன்னுமா நிறுத்தல கண்டேக்க்று கிட்ட கொண்டுங்க" என்கவும் ஒரு நம்பிக்கையோடு என்னதான் பஸ்ஸு ஊர்ந்து கொண்டிருந்தாலும், பாலன்ஸ் பண்ணும் சமத்து பத்தாமல் நான் தள்ளாடிக் கொண்டு, கிட்டத் தட்ட கண்டேக்க்று மேலே விழுந்து விடும் தொலைவில் ஒரு கம்பியில் தொத்திக் கொண்டு "இந்தாங்க" என்று மொபைலைக் கொடுத்தேன். பேசினார் கண்டக்டர். என்னை முறைத்துக்கொண்டே இருந்தார். ஒரு நிமிஷம் போனது, "ஆமாண்டா. அண்ணி நல்லாருக்கு. சின்னப் பொண்ணை இனிமேத்தான் இஸ்கோலுல சேக்கோணும்" என்று ஒரு பத்து நிமிஷம் சொந்தக் கதை எல்லாம் பேசி முடித்து பின் "இதுங்க வரணும்னு பஸ்ஸை போட்டு வைச்சேன். இதுங்க கம்ப்ளைண்டு கொடுக்குதுங்க." என்று வரிசையாய் அக்றிணையாகி நொந்தேன். அப்படியும் பாட்டு நிறுத்தப்படலை. ஒரு வழியாக ஒரு மணிக்கு பாட்டு நிறுத்தப் பட்டது. நானும் மழையின் ஜதிக்கேற்ப தலையை இப்படியும் அப்படியும் ஆட்டி தூங்கிப் போனேன்.

காலையில் திருச்சியில் மீண்டும் ஒன்று மணம்தான் எழுப்பியது. பின்னாடியே அம்மா அப்பா தம்பி எம்பொண்ணு எல்லோரும் வரிசையாய்... என் பெற்றோர் குலதெய்வம் கோவிலுக்குப் போகவும், நான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பள்ளிக்குப் போகவும், யார் கேட்டாலும் (திட்டினாலும்) பரவால்லைன்னு நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை என்று பாடிக் கொண்டே இறங்கினேன். பெரியம்மா அனுப்பிய கார் வந்தது. அவங்க வீட்டுக்குப் போய் நாலு இட்லி அருமையான காப்பி குடித்து மீண்டும் எட்டு மணியளவில் திருக்காட்டுப்பள்ளி நோக்கிப் பிரயாணம்.

இப்போது திருச்சி சாலைகளும், திருக்காட்டுப்பள்ளி நோக்கி செல்லும் சாலைகளும் அகலம் குறைந்தும் நீளம் அதிகமாகியும் தோன்றியது. கல்லணை பாலத்தை ஒரு காலத்தில் நடந்தே கடக்கும் போது அலுப்பாய் இருக்கும். இன்று நடக்கலாம் என்று தோன்றினாலும் நேரம் ரொம்பக் குறைந்து போன உணர்வு வேறு துரத்திக் கொண்டே இருந்தது.

'நாங்க வந்துட்டோம்' என்று ஐந்து நிமிஷத்துக்கு ஒரு போன் வந்து கொண்டே இருந்தது. சரியாக முக்கால் மணி நேரத்துக்குள் திருக்காட்டுப்பள்ளி போய் விடுவோம். வயல், சின்னச்சின்ன வாய்க்கால்கள், குட்டைகளில் லில்லிப் பூக்கள், பச்சைப் பட்டு புல் வெளிகள், துரத்திய மரங்கள் என்று ஒரு பக்கம் பசுமையை நிலை நாட்டிக் கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் அகண்ட காவேரியின் மணல் வெளி கண் கூசியது. கொஞ்சூண்டு தண்ணீ இருக்கென்று காண்பிக்க நடுவில் ஓடிக் கொண்டிருந்தது.

மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்து
கருங்க யல்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி!
கருங்க யல்கண் விழித்தொல்கி நடந்த தெல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி!
பூவர் சோலை மயில்ஆலப் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி!
காமர் மாலை அருகசைய நடந்த தெல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறம்கண்டே அறிந்தேன் வாழி காவேரி!

என்று மாதவி பாடுவதாகத் சிலப்பதிகாரம் பேசுகிறது. இன்று உன் கணவன் திருச்செங்கோல் வளைந்தது போலும். இந்தனை மேல்மெலிந்து கிடைகிறாயடி காவேரிப் பெண்ணே என்று வருந்திக் கொண்டேன்.

என். வெங்கட்ராமன் உரக்கடை என்று போர்டு போட்டிருந்த கடை முன் இருந்த பூக்கடையில் சாமிக்கும் அம்பாளுக்கும், திரௌபதி அம்மனுக்கும் என்று மூன்று மாலைகள் வாங்கிக் கொண்டு இருந்தார் அப்பா. கடையிலிருந்த இளைஞனின் கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. அடப் பாவி செந்தில் இன்னும் இவ்வளோ சின்னவனாவே இருக்கானா என்று நினைத்தேன். உள்ளே போய் விட்டான் அந்த இளைஞன். மீண்டும் கிஷோர் போன் வந்தது "எங்க இருக்கீங்க" என்று கேட்டான். 'நேரமாகிட்டது கோவிலுக்கு போயிட்டு ஸ்கூலுக்குப் போலாம் என்றார் அப்பா. "சரீங்கப்பா" என்று என் சுருதி கொஞ்சம் குறைந்தது.


சர் சிவசாமி ஐயர் (எங்கள் பள்ளி ஸ்தாபகர்)

ஸ்கூலைத் தாண்டி சென்றது கார். என் கண் ஸ்கூல் மீதே நின்று விட்டது. முருகன் கோவில் புதுப்பிக்கப்பட்டிருந்தது. அருகில் இருந்த பஞ்சாயத்து போர்டு ஸ்கூல் இரண்டு மாடிக் கட்டிடம் ஆகி விட்டிருந்தது. திரௌபதி கோவிலுக்குப் போனோம். கோவில் வாசலில் கர்ப்பகிரகத்தை மறைத்தவாறு பாலிவினைல் போர்டில் ரஜினி அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். "நீ நடந்தால் நடையழகு" என்று ஆளுயர ஸ்பீக்கர் கத்திக் கொண்டிருந்தது. அருகிருந்த கிரௌண்டில் பதினைந்து வயதுக்குள் இருக்கும் சிறுவர் சிறுமிகள் எல்லாம் விளையாடியும், பாட்டுக்கு ஆடியும் கொண்டிருந்தனர். எம்பொண்ணுக்கு குஷி தாங்கலை. புழுதியில் புரண்டு பட்டுப் பாவாடையெல்லாம் மண்ணாக்கி கொண்டாள். விளையாடட்டும் என்று விட்டு விட்டேன். பொங்கல் பிரசாதத்தைக் கூட அவர்களோடு க்யூவில் நின்று வாங்கி சாப்பிட்டாள். எனக்கு எம்பொண்ணு நானாவே ஆனா மாதிரி இருந்தது. (அடங்கு வித்யா...)

இன்னொரு கோவில் போய் திரும்பிய போது "நாங்கல்லாம் ஸ்கூல்லேந்து கல்லணை டிராவலர் மாளிகைக்குப் போறோம். நீங்க அங்க வந்துருங்க" என்று வில்சன் லூர்து சேவியர் சொன்ன போது மணி இரண்டு."எனக்காக காத்திருக்க வேண்டாம். நீங்க எல்லோரும் சாப்பிட்டு விடுங்க" என்றேன். "நீங்க வரலைனாலும் பரவால்லை. ஹிந்தி மிஸ் (எங்கம்மா) கண்டிப்பா வரணும்" என்றான் (ர்) கிஷோரும் வெங்கியும். அடப் பாவிங்களா....

அக்ரஹாரத்தில் எல்லாம் மாறி விட்டிருந்தது. யார் வீட்டு வாசல் திண்ணையிலோ என் பெண் நின்று உள்ளே எட்டிப் பார்த்தாள். திட்டப் போகிறார்கள் என்று பயந்தேன். "பொண்ணு. ஒட்டுல (ஓரத்தில்) நிக்காதடீ.. விழுந்துடுவடீ..." என்று கரிசனமாய் ஒரு குரல் வந்து என் நெஞ்சைக் கரைத்தது. இன்னும் மனுஷங்க மாறலீங்க.

இரண்டு மணிக்கு கார் கிளம்பிய போது தூர ஆரம்பித்திருந்தது. கல்லணை டிராவலர் மாளிகைக்குப் போயிட்டு போலாம்ங்க என்று எங்கள் "பார்த்தசாரதி" முருகேசன் அண்ணாச்சியிடம் சொல்லவே "இருபது நிமிஷத்துல போயிடலாம்ங்க" என்றார். வழியில் பூண்டி மாதா கோவில் தெரிந்தது. "கிஷோர் நாங்க பூண்டி கிட்ட இருக்கோம். வந்திருவோம். நீங்க இருப்பீங்கல்ல" என்றேன். "பங்களா வந்து கார்த்தி சார்னு சொல்லுங்க" என்றான்(ர்) கிஷோர்.

"பார்த்தசாரதி" சொன்னதுபோல இல்லாமல் பதினைந்து நிமிஷத்திலையே கொண்டு போய் சேர்த்தார். எனக்கு முப்பத்தி நாலு பல்லும் தெரிந்து கொண்டிருந்தது. எம்பொண்ணு தூங்கி போய் விட்டாள். அவளை காரிலேயே கிடத்தி விட்டு அம்மா அப்பா நான் மூவரும் போனோம். முப்பது பேர், முப்பதும் "பசங்க" . அபர்ணா வரலையா, பவானி வரலையா, கஸ்தூரி??? என்றெல்லாம் கேட்டுக் கொண்டே எல்லாப் "பசங்க"ளையும் மறு அறிமுகம் செய்து கொண்டேன். நிறையா முகம் மாறி விட்டிருந்தது.


பள்ளி கரஸ்பாண்டென்ட்  திரு. என்.வி.என். அவர்களோடு நம்ம பசங்க


கிஷோர் சின்ன வயதில் பெண் வேடம் போடுவான். அதே போலத்தான் இப்போது, "பால் வடியும்" முகம் - நம்பாதீங்க பெண்களே.. இன்னும் பிரம்மச்சாரியாம்.. :)) உங்கல்யாணத்துல இருக்கு மண்டகப்படி என்று சொல்லிவிட்டுத்தான் வந்தேன்.

செந்தில் இருந்தான்(ர்)...அதே முகம், அப்போ கடையில் இருந்தது செந்திலின் தம்பி... :))




வில்சன் அதே உருவம், அதே முகம், அதே உயரம். எங்கள் பள்ளிக்கு முன். வெங்கட், முருகேசன், செந்தில், கிஷோர், வரதராஜன், பஞ்சாபகேசன், சிவசண்முகம், வேணுகோபால் என்று எல்லார் முகமும் மாறி இருந்தது. பழனியப்பன் ரமேஷ் வரலை. அவங்களை பற்றி கேட்கவும் மறந்து விட்டது. டொனால்ட் (நாங்க டக்குன்னு கூப்பிடுவோம்) இப்போ பாதர் ஆகிட்டானாம் (ராம்)


அண்ணன் மாவலியார் வாழ்க வாழ்க

எல்லாரும் நல்லவங்களா நல்ல நிலைமையில், இருக்கிறதப் பாத்து ரொம்ப சந்தோஷம்... மெட்ராஸ் வரும் வரை முப்பத்தி நாலு பல்லும் சிரித்தவாரே காணப்பட்டதாக சமூகத்துல பேசிக்கிறாங்க. அவ்வளோ சிரிப்புங்க அங்க.

மாவலியார் (கார்த்தி) மன்னிக்க, blackcat பாதுகாப்பில் புடை சூழ நின்றபோது கிண்டலடித்து பேசினத்துக்கு ஆட்டோவெல்லாம் அனுப்பவேண்டாம்னு கெஞ்சிக் கேட்டுக் கொண்டு புறப்பட்டபோது கும்பலா ... எல்லாரும் சேர்ந்து என்னைப் பாத்து "நீதானா அந்தக் குயில்" என்று பாடியதை மட்டும்....



..

23 comments:

அண்ணாமலையான் said...

ஹை ஸ்பீட்ல போவுது ரைட்டிங்..

anujanya said...

ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கு. உங்க பள்ளியின் புகைப்படம் மனத்தைக் கொள்ளை கொள்கிறது. எவ்வளவு பெரிய முகப்பு அந்தக்காலப் பள்ளிகளுக்கு! எத்தனை கதைகள் சொல்லும்!

அனுஜன்யா

sathishsangkavi.blogspot.com said...

திருக்காட்டுப்பள்ளிய பார்த்த மாதிரி ஒரு பீலிங்............

அப்படியே நேரம் இருந்தா என் பதிவையும் கொஞ்சம் பாருங்க.............

http://sangkavi.blogspot.com/

உண்மைத்தமிழன் said...

மிக மிக சுவாரஸ்யம்..!

நேரம் போனதே தெரியாமல் படித்தேன்..!

நன்று..!

"உழவன்" "Uzhavan" said...

அனுபவத்தை அருமையா சொல்லிட்டீங்க. மறக்கமுடியாத ஒரு இனிய அனுபவமா இருந்திருக்கும்.

S.A. நவாஸுதீன் said...

முழுவதும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன். அத்தனை சுவாரசியம்.

creativemani said...

படிக்கும் போதே மகிழ்ச்சியா இருக்கு..
உங்களுக்கு நிச்சயம் சந்தோஷமான மற்றும் மறக்கமுடியாத அனுபவம் தான்..

சங்கர் said...

குயிலை பாக்க போனதை புயல் வேகத்துல சொல்லியிருக்கீங்க, அருமை

கல்யாணி சுரேஷ் said...

//S.A. நவாஸுதீன் said...

முழுவதும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன். அத்தனை சுவாரசியம்.//

ரிப்பீட்டு.

கல்யாணி சுரேஷ் said...

//அருகிருந்த என்னவர் "என்ன திடீர்னு பம்மற...யாரு போன்ல" நாம் பம்முவது பற்றிய உள்ளூர மகிழ்ச்சியோடு கேட்டார்.//

பாவம், நொடி நேரமாவது சந்தோசம் கிடைச்சுதே? (சும்மா..... சும்மா......)

கல்யாணி சுரேஷ் said...

//மீண்டும் ஊர்ந்து ஊர்ந்து "ஒன்று" வாசனை மூக்கைத் துளைக்கவும் "ஆகா வந்துட்டோம்டா" என்று என்னையே பாராட்டிக் கொண்டு, டூ-வீலர் பார்கிங்கில் இரண்டு நாளுக்கு பார்க்கிங் டிக்கட்டு வாங்கி மூன்று முறை சைடு லாக் பண்னோமானு பாத்து, நாலஞ்சு முறை சென்டர் ஸ்டாண்டு போட்டாமானு செக் பண்ணி, ஆறாவது நிமிஷம், ஏழு எட்டு வைத்து ஒம்பதாம் பிளாட்பாரம் சென்றால் பத்து மணி பஸ்ஸு கண்டேக்கடரூ என்னைத் திட்டிக் கொண்டிருந்தான்.//

சரி சரி உங்களுக்கு கணக்கு நல்லா வரும் னு தெரிஞ்சிடுச்சு.

கல்யாணி சுரேஷ் said...

//ஒரு பக்கம் அகண்ட காவேரியின் மணல் வெளி கண் கூசியது//

மணல் லாரி எதுவும் நிக்குதா னு பார்த்தீங்களா?

கல்யாணி சுரேஷ் said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க வித்யா. எங்க ஸ்கூல் ல கூட இது மாதிரி ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய மாட்டங்களா னு ரொம்ப நாளா ஏங்கிட்டிருக்கேன்.

இன்றைய கவிதை said...

நல்ல பதிவு!

'பள்ளி'யை மறக்க முடியுமா என்ன?!

-இகஅ

கல்யாணி சுரேஷ் said...

ஒண்ணு கேட்க மறந்துட்டேன், தர்ஷிணி சமாதானமாயாச்சா?

PPattian said...

சுவாரசியம்.. சந்தோசம்.. குறிப்பாக

//எம்பொண்ணுக்கு குஷி தாங்கலை. புழுதியில் புரண்டு பட்டுப் பாவாடையெல்லாம் மண்ணாக்கி கொண்டாள். விளையாடட்டும் என்று விட்டு விட்டேன். பொங்கல் பிரசாதத்தைக் கூட அவர்களோடு க்யூவில் நின்று வாங்கி சாப்பிட்டாள். எனக்கு எம்பொண்ணு நானாவே ஆனா மாதிரி இருந்தது.//

ஆமா "ஒரு" வாசனை, "ஒரு" வாசனைன்னு சொன்னீங்களே.. அது என்ன வாசனைன்னு கடைசி வரை சொல்லவே இல்லயே.. :)

மணிஜி said...

அருமை வித்யா..திருக்காட்டுப்பள்ளியில் ராமையா என்றோரு நண்பன் உண்டு.சரபோஜியில் ஒன்றாக படித்தோம்..

Srivatsan S said...

Hello Vidhya,

ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம்!!!

Ungal Rasigan
Srivatsan

Anonymous said...

நல்லா சுவாரஸ்யமா இருக்கு.

Vidhoosh said...

நன்றி அண்ணாமலையான்.

நன்றி அனுஜன்யா

நன்றி சங்கவி: நிச்சயம் வருகிறேன்.

நன்றி உண்மைத் தமிழன்

நன்றி நவாஸ்

நன்றி மணிகண்டன்: ஆமாம்

நன்றி சங்கர்

நன்றி கல்யாணி சுரேஷ்: :)) nowadays பம்மிங் unlimited... மண் லாரியும் அங்கங்கே... நன்றிங்க. எம்பொண்ணு சமாதானம் ஆன கதையை தனிப் பதிவாக போடுகிறேன்

நன்றி இ.க.அ

நன்றி பு.பட்டியன்: LOL அத வேற சொல்லணுமாக்கும்.

நன்றி தண்டோரா: நீங்களும் தஞ்சையா...
அதான பாத்தேன்.

சின்ன அம்மிணி: நன்றி

வாய்யா ஸ்ரீவத்சா: உங்களையே கொ.ப.செ-வா சபை அறிவிக்கிறது. எல்லாரும் பலம்மா கைத் தட்டுங்கப்பா..

--வித்யா

KarthigaVasudevan said...

//எம்பொண்ணுக்கு குஷி தாங்கலை. புழுதியில் புரண்டு பட்டுப் பாவாடையெல்லாம் மண்ணாக்கி கொண்டாள். விளையாடட்டும் என்று விட்டு விட்டேன். பொங்கல் பிரசாதத்தைக் கூட அவர்களோடு க்யூவில் நின்று வாங்கி சாப்பிட்டாள். எனக்கு எம்பொண்ணு நானாவே ஆனா மாதிரி இருந்தது. //

:)))

ஸ்கூல் டேஸ் நல்லா இருக்கு. அதுக்கென்ன அது எப்பவும் நல்லாத் தானே இருக்கும். வருஷத்துக்கு ஒரு தடவை இப்படி பழைய பிரெண்ட்ஸ் எல்லாரையும் பார்த்தா நல்ல எனர்ஜி டானிக் சாப்பிட்ட எபெக்ட் கிடைக்கும் தான். சுவாரஸ்யமா இருக்கு வித்யா பதிவு.

Radhakrishnan said...

மிகவும் அருமையாக இருந்தது. நண்பர்கள் வந்து சிறப்பித்தனர், நண்பிகள் ஏனோ வரவில்லையே!

அருமையான எழுத்து நடை.

காவேரி என அழகிய வரிகள் படித்ததும் மிக்க மகிழ்ச்சி.

மிக்க நன்றி நித்யா, மன்னிக்கவும் வித்யா.

பா.ராஜாராம் said...

//என்று மாதவி பாடுவதாகத் சிலப்பதிகாரம் பேசுகிறது. இன்று உன் கணவன் திருச்செங்கோல் வளைந்தது போலும். இந்தனை மேல்மெலிந்து கிடைகிறாயடி காவேரிப் பெண்ணே என்று வருந்திக் கொண்டேன்.//

//அடப் பாவி செந்தில் இன்னும் இவ்வளோ சின்னவனாவே இருக்கானா என்று நினைத்தேன்//

//எனக்கு எம்பொண்ணு நானாவே ஆனா மாதிரி இருந்தது. (அடங்கு வித்யா...)//

//முப்பதும் "பசங்க" . அபர்ணா வரலையா, பவானி வரலையா, கஸ்தூரி??? என்றெல்லாம் கேட்டுக் கொண்டே எல்லாப் "பசங்க"ளையும் மறு அறிமுகம் செய்து கொண்டேன். நிறையா முகம் மாறி விட்டிருந்தது.//

//கிஷோர் சின்ன வயதில் பெண் வேடம் போடுவான். அதே போலத்தான் இப்போது, "பால் வடியும்" முகம் - நம்பாதீங்க பெண்களே.. இன்னும் பிரம்மச்சாரியாம்.. :)) உங்கல்யாணத்துல இருக்கு மண்டகப்படி என்று சொல்லிவிட்டுத்தான் வந்தேன்.//

கும்பிட தோனுகிறது வித்யா.கும்பிட்டுக்கட்டுமா?

எங்களுக்காகவது நீங்க நிறைய எழுதணும் மக்கா.அது மட்டும்தான் சொல்ல தோணுது.

Post a Comment