முதலில் இதைப் படித்து விட்டு வாங்க. இது எதிர் பதிவில்லை, அதை படிச்சதும் டக்னு தோணியது... ஜஸ்ட் ஃபன் இன்ட்டென்டட்.
பிரபஞ்சத்திலேயே மிகவும் கவர்ச்சியான ஜந்து எது என்று என்னையும் யாராவது கேட்டால், அது குட்டிக் கொசுதான் என்பேன். குட்டி என்று பெயர் இருப்பதால் மட்டும் இல்லை, நிஜமாகவே அழகாகவும் இருப்பதால்தான் அப்படிச் சொல்கிறேன். அதுவும் பாருங்கள், தூக்கி போடாமல் மொட்டை மாடியில் வைத்திருக்கும் பழைய டயர், உடைஞ்சு போன வாளி எல்லாவற்றிலும் வருணனின் கொடையால் தேங்கி இருக்கும் சொட்டுத் தண்ணீரில் கூட, எஃபெக்டிவ் யூசேஜ் செய்யும் ஒரே ஜந்து கொசுதான். அழகழகாய் ஜியாமெட்ரிகல் டிசைன்களில் முட்டையிட்டு, குட்டி லார்வாக்களும் அதே ஜியாமெட்ரிகல் ஷேப்பிலேயே வெளி வரும். என்ன ஒரு கலை ரசனை இருந்தால் இப்படிச் செய்ய முடியும் பாருங்கள். பயாலாஜிகல் சைக்கிள் சரியான பாதையில் சுற்றி வர கொசு, தன்னையே, மீன், வவ்வால், பறவைகள் போன்றவைகளுக்கு உணவாக்கி, எகோ சிஸ்டம் நல்லபடியாய் இருக்க உதவுகிறது. இதை புரிஞ்சுக்காமல் நம் மனுஷப்பயல்கள், நம்மளைக் கடிக்கிறதே என்று அதை வெறுத்தால் வேலைக்கு ஆகுமா? மனுஷனுக்கு உதவலேன்னா நம்மைச் சுற்றி இருக்கும் ஜீவராசிகளுக்கும் உதவலே, பிரயோஜனம் இல்லேன்னு ஆகிடுமா? வாட் இஸ் திஸ்?
மனுஷனுக்கும் கொசுவுக்கும் ஆதிகாலத்துலேர்ந்தே அமானுஷ்யத் தொடர்பு இருந்திருக்கிறது. முதன்முதலா மனுஷன் தூங்கிய போது, கணுக்காலிலும், காதுக்கு பின் புறமும், சொரிந்து கொள்ளவே முடியாத விரல் இடுக்குகளிலும், நடு முதுகிலும் நறுக்கென்று கடித்து ரத்தம் குடித்துப் பறந்து போகும் போது, கடிபட்டு தூக்கம் கலைந்த அந்த மனுஷன் முகத்தை பார்க்கும் போது, நமக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கும்... எப்படின்னு கேளுங்கள்.
ஆபீசில் இருந்து அலுத்துச்சலித்து சாயந்திரம் ட்ராஃபிக்கில் வண்டியோட்டி படபடப்பா வீட்டுக்குள் வந்து, டிகிரி காப்பி குடிச்சுட்டு, நிதானமா, நீங்க தீபம் எண்ணையில் விளக்கு வைத்து, உட்காரும் சோபாவில் ஹேன்ட்பேக்கையும் ஹெல்மெட்டையும் வைத்து விட்டு, சேரில் காய்ந்த துணிகளை எடுத்து மடித்து வைத்து விட்டு, மிஞ்சி இருக்கும் ஒரே இடமான, டைனிங் டேபிளுக்கு அடியில் உட்கார்ந்து, தியானம் பண்ணும் போது, மைக்கேல் ஜாக்சனின் டேஞ்சரஸ் போட்டு படபடப்பை அதிகமாக்கும் விரோதியாக இருந்தால், கொசு எத்தனை அழகானதுன்னு தெரியும்.. யோசிச்சு பாருங்க. இப்படியாக யோசித்துக் கொண்டிருக்கும்போது, உதித்தது கொசு புராணம்.
கூவத்துக் கரையில் கொலுவிருக்கும் சென்னையில், ஈயா கொசுவா என்று பிரித்துப் பார்க்க முடியாத மடிப்பாக்கம்வாசியான நான், கொசுவை அழிக்க பல வழிகளைக் கையாண்டாலும், கொசு என் மீது தன் அளவில்லாத நன்றியுணற்சியையும் பிரேமையையும் காண்பித்து, என் வீட்டை விட்டுப் போகாமல், அருகிலிருக்கும் குப்பை மேட்டில் தன் சந்ததிகளைப் பிரவாகமாகப் பல்கிப் பெருக்கி, நான் போகும் இடமெல்லாம் ஹட்ச் நெட்வொர்க் நாய் போல பின்தொடர்ந்து, ஒரு மனுஷனுக்கு இரண்டு கொசு என்றளவில் வளர்ந்து வருகிறது.
வேப்பிலை மூட்டம், டார்ட்டாய்ஸ் கொசுவத்தி சுருள், மஸ்கிடோ மாட், அட்வான்ஸ்ட் குட் நைட் ரெபெல்லன்ட் வரை கம்பெனிக்காரனுக்கு காசழுது, கடைசியில் கம்பல்சிவ் அப்செஷன் விதிகளின்படி, தன் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக கொசுவையும் சேர்த்துக் கொண்டு, ரத்தம் ஊற அயர்ன் டானிக் குடிக்கும் அளவுக்கும் நேசம் வளர்ந்து போனது. அதே கம்பல்சிவ் அப்செஷன் விதிகளின் படியே நாளடைவில் எனக்கும் கொசுவுக்குமான குணாதிசியங்களும் சமன்பட்டு, என் குணம் கொசுவுக்கும், கொசுவின் குணம் எனக்குமானது, என்னங்கரீங்களா? அதான், கதை கவிதை கட்டுரை என்றெல்லாம் ப்ளாக்கில் எழுதி அடுத்தவரின் ரத்தம் குடித்து தூக்கம் கெடுக்கும் பழக்கம் வந்தது.
அதே போலத்தானே மற்றவர்களும், முதலாளி தொழிலாளியின் ரத்தத்தை உரிஞ்சறான், பணக்காரன் ஏழையின் ரத்தத்தை உரிஞ்சறான், அரசியல்வாதிகள் மக்களின் ரத்தத்தை உரிஞ்சறான், பலசாலி பலமில்லாதவனின் ரத்தத்தை உரிஞ்சறான். யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, கிடைக்கும் போதெல்லாம், அடுத்தவனின் ரத்தத்தை உரிஞ்சறான்.
ஒரு விதத்தில் வாம்பயர்களும் கொசுக்களும் மனுஷனும் ஒரே ஜீன்ஸ் தான் என்று வேறு தோன்றுகிறது. இந்தியக் கொசு ஜீன்கள் என்றால் வடக்கும் தெற்கும் சங்கமித்த சாமுத்ரிகா பட்டு ஜீன்ஸா வேறு இருக்க வேண்டும்.
இப்படியாக கொசுகுணம் மனுஷனுக்கு வந்ததைப் பற்றி பார்த்தோம். இப்போது கொசுவுக்கு நாம் ட்ரான்ஸ்ஃபர் செய்த அவகட துர்குணங்கள் பற்றிப் பார்க்கலாம்.
எம்பி எம்பி கட்சி மாறும் நம் ஊர் எம்பிக்களின் ரத்தம் குடித்தக் கொசுவெல்லாம் பாருங்கள். அவையெல்லாம் கொசுக்கட்சி தலைவர் பிஎம்-மை கவிழ்க்கும் பெருஞ்செயலில் ஈடுபட ஆரம்பித்தன. இவை எல்லாம் குடித்து விட்டு வந்து ஆடுகிறார்கள் என்று பிஎம் கொசு உடனே புரிந்து கொண்டு, கொசுக்கட்சியில் இருந்த எல்லாக் கொசுவையும் டாக்டர்.கொசுகிட்ட போட்டு கொடுத்து விட்டது. டாக்டர் கொசுவோ, ஊழல் டாக்டரா இருந்தது. வந்த கொசுவிடம் இருந்தெல்லாம், அதிக ஃபீஸ் வசூல் பண்ணி, தப்புத்தப்பா ரிப்போர்ட் கொடுத்து, கிட்னி ஆபரேஷன் பண்ண ஆரம்பித்தது. எம்பி கொசுவெல்லாம் உடனே டாக்டருக்கு மந்திரி பதவி ஆசை காட்டி, பி.எம்.மை டம்மி, பைத்தியக்காரன்-என்று சர்டிஃபிகேட் வாங்கி பதவிலேர்ந்து தூக்கி வீச ஆலோசனை பண்ணி வைத்தன. இதைக் கேள்விப்பட்ட பி.எம் கொசு, உடனே ரகசிய பொதுக்குழுவைக் கூட்டி, எம்பி கொசுக்களையும் டாக்டர் கொசுவையும் காலி பண்ண முடிவெடுத்தது. இப்படியாக அவங்கங்க கொசுப் பதவிய அந்தந்த கொசுவெல்லாம் காப்பாற்றிக் கொள்ள முடிவு செய்தன.
இந்த அல்லோலகல்லோலத்தை எல்லாம் கேள்விப் பட்டு மகளிரணி கொசுக்கள் எல்லாம், மாமியார் மருமாள் அழுவாச்சி சீரியல்களில் நடிக்கும் ஆதிகாலத்து நடிகைகளின் ரத்தத்தை குடித்து விட்டு, சதிச் செயல்கள் எல்லாம் பண்ண ஆரம்பித்தன.
இப்படியாக கடைசியில் மனுஷ ரத்தம் மட்டும் குடித்துக் குடித்து அதுவும் போதாமல் கொசுவுக்கு கொசுவே ஒருத்தரை ஒருத்தர் கடிச்சு ரத்தம் குடிக்க ஆரம்பித்தன. மாமியார் கொசுக்கள் மருமாள் கொசுக்களை மட்டப்படுத்திகிட்டே இருந்தன. "அந்தக்காலத்துல எல்லாம் இப்படியா" என்றெல்லாம் வேறு பேசிக் கொண்டன. மருமாள் கொசுவெல்லாம் மாமியாரை எப்படி மேல அனுப்பலாம்னு திட்டம் போட்டுக்கொண்டே இருந்தன.
இப்படி ஒற்றுமையாக மனுஷ ரத்தம் குடித்துக் கொண்டு இருந்த கொசுக் குடும்பங்கள் எல்லாம் சிதறி சின்னா பின்னமாகிப் போயின. புரட்சிக்காரக் கொசுக்கள் எல்லாம் கூட்டம் போட்டு உணர்ச்சிவசப்பட்டார்கள். முடிவாக எல்லாரும் மனுஷ ரத்தம் குடிப்பதில்லைன்னு தீர்மானஞ் செய்து புரட்சி கொசுவெல்லாம் சேர்ந்து ப்ளட் பாங்க் உண்டாகின. ரவுடிக் கொசுவெல்லாம் ப்ளட் பாங்கில் தண்ணீர் கலந்து ஊழல் பண்ணி கலப்படம் பண்ணின. இதனால் கொசுக்களின் ஆரோக்கியம் பெருமளவில் பாதிக்கப் பட்டது. நிறைய இறப்பும் நிகழ்ந்தன. கொசுக்கள் தெம்பில்லாமல் பறக்கவும் முடியாமல் தொய்ந்து போயின.
இதைக் கண்ட பி.எம் கொசு, எல்லோருக்கும் நூறு நாள் திட்ட வேலை வாய்ப்பை அறிவித்தது. எல்லாக் கொசுக்களும் ஒரே ஒரு செங்கல்லை நகர்த்தி சோம்பேறித்தனத்தை வளர்த்துக் கொண்டன. நோய்கள் பெருகின. ஊழல் டாக்டர்களின் மருத்துவமனைகளில் கூட்டம் பெருகியது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நாய்கள், பூனைகள், பசுக்கள், பறவைகள் எல்லாம் மனுஷர்கள் பக்கமே வரக்கூடாது என்று முடிவெடுத்தன.
3 comments:
அடடா..என்ன கற்பனை. கொசுக்கள் சாம்ராஜ்யத்திலும் ஊழலா.:)
நினைக்க முடியாத கற்பனைவளம் உங்களுக்கு வித்யா.:)
வரேன், வரேன்...ஒரு ஸ்ட்ரா வாங்கிக்கிட்டு வரேன். வரேன்....
நன்றி வல்லியம்மா. :))
நன்றி விஜய் .. உங்களை விடவா ?
Post a Comment