அர்மேனியக் குகை - மொழிபெயர்ப்புக் கதை - பாகம் 2

பாகம் 2 ஆங்கிலத்தில் The Caves of Armenia – Part 2

ஹிந்தி மூலம் - ஆசிரியை : திருமதி.ஜயா ஜாத்வானி - 2001
===================================
பாகம் 1 தமிழில்

"என் உடல் முழுதும் அவ்வளவு பெயர்கள் இருக்கின்றன. அவற்றை இந்தக் கத்தியால் அழிக்க முடியவில்லை. எவ்வளவு ஆழமாக வெட்டுகிறேனோ அவ்வளவு ஆழமாகவும் அழுத்தமாகவும் ஆகிவிடுகின்றன. இங்கே பாருங்கள்.. இது எவ்வளவு ஆழமாக இருக்கிறது..." என் தோளில் இருந்த காயத்தை அவரிடம் காண்பித்தேன். "இந்தக் கத்தி என் எலும்பில் போய் இடிக்கிறது... அந்த எலும்புகள்... என்னுடையவைதானா?"

அவர் ஒரு நர்ஸை அழைத்து என் உடைகளை மாற்றுவிக்கச் செய்தார். அவள் என் காயங்களுக்கு மருந்திட்டு என்னை ஒரு மென்மையான போர்வையால் போர்த்திவிட்டாள்.

நான் உரத்துச் சிரித்தேன். "டாக்டர். எவ்வளவு நாட்கள் நீங்கள் என்னை இப்படியே வைத்திருக்கப் போகிறீர்கள். என்றேனும் நீங்களும் உங்கள் பெயரை என்மீது எழுதிவிட்டுச் செல்வீர்கள். உங்களிடமிருந்தே நீங்கள் என்னை எவ்வளவு நாள் காப்பாற்றப் போகிறீர்கள்? என் சதைகளை வெட்டி எறியுங்கள். என் மீதுள்ள தோலை எல்லாம் உறித்து விட விரும்புகிறேன். அவர்கள் என்னை நோக்கித்தான் வருகிறார்கள்... இங்கே எனக்கு மூச்சுத் திணறுகிறது.. கடவுளே, சகதி நீர் என்னைச் சூழ்கிறது. நான் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்..." நான் உணர்வுமிகுதியில் அவரிடம் கத்திக் கொண்டிருந்தேன். மூச்சிறைத்தது. நர்ஸ் எனக்கு தூக்க ஊசி போட்டது, அழுதுகொண்டே தூங்கி விட்டேன்.

சிறிது நேரம் கழித்து நான் விழித்துக் கொண்டு, அருகிருந்த தண்ணீர் குவளையை நகர்த்தினேன். நான் தலையைத் தூக்கியதுமே, அலாரம் அடித்தது.

சற்றைக்கெல்லாம் டாக்டர் வந்து "இப்போது எப்படி இருக்கிறாய்?"என்று கேட்டுப் புன்னகைத்தார். என்னருகில் அமர்ந்து கொண்டு என் கைகளைப் பற்றிக் கொண்டார் "உனக்கு ஒன்று நினைவிருக்கிறதா?" என்று கேட்டு மெதுவாக நான் எப்படி இருக்கிறேன் என்பதைக் கண்டறிய முயன்றார்.

இதன் பின் பலநாட்கள் அவர் என் கைகளைப் பற்றியபடியேதான் பேசிக் கொண்டிருந்தார். ஒரு சிறப்பு அறைக்கு என்னை மாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டது. நர்ஸுகள் என் காயங்களுக்கு மருந்திட்டு ஆறச் செய்து கொண்டிருந்தனர். காயங்கள் எல்லாமே பெரும்பாலும் ஆறிவிட்டிருந்தன, எனக்கு இப்போது எங்கும் வலி தோன்றுவதில்லை.

என் குடும்பத்தினர் காலையும் மாலையும் ஒருமுறையென தினமும் என்னைச் சந்தித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வரும்போதெல்லாம் தூங்கிக் கொண்டிருப்பது போன்று நடித்தேன். சிலமுறை, விட்டத்தை முறைத்துக் கொண்டு பேசாமல் அமைதியாக இருந்தேன். என் அமைதியைக் கண்டு அவர்கள் நான் தேறிக் கொண்டிருப்பதாக உணர்ந்தார்கள். ஆனால், நானோ, என் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வதை நிறுத்தியே விட்டேன் என்பதாகவே உணர்ந்தேன். அவர்கள் ஏனோ எனக்கு அந்நியர்கள் போன்று தோன்றினார்கள். என் முன்னால் அப்படியே பேசிக் கொண்டாலும் அவர்கள் மிகவும் மெல்லிய குரலில் நான் கேட்க முடியாதவாறு பேசிக் கொண்டும் ஒருவருக்கொருவர் சைகைகள் செய்து கொண்டுமிருந்தனர். நான் என் குடும்பத்தினர் வந்தால் தடுமாறுகிறேன் என்பதை டாக்டர் உணர்ந்து கொண்டு அவர்களை அடிக்கடி வந்து பார்க்க வேண்டாம் என்று அறிவுருத்தி விட்டார். அவர் என்னை மிகச் சரியாக புரிந்து கொண்டது போலவே இருந்தது. அவர் மீது அதீத நம்பிக்கை வைக்க ஆரம்பித்தேன். அவர் தன் கேள்விகளால் என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தார், நானும் அப்படியாவதை அனுமதித்துக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் நான் என்னையே அறுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டேன்.

ஒருமுறை அவர் என்னை சிறிது தொலைவு நடக்க அழைத்துச் சென்றார். நான் அவர் கைகளைப் பிடித்துக் கொள்ள அனுமதி கேட்டேன். அவரும் சம்மதித்தார். அவர் சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். நான் அமைதியாக அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். நாங்கள் ஒரு புல்வெளியில் அமர்ந்து கொண்டோம். அங்கு சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதை அவர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவரிடம் "ஏன் பேசுவதை நிறுத்தி விட்டீர்கள்?" என்று கேட்டேன்.

என்னைப் பார்த்து அவர் கிண்டலாய் சிரித்தார். எனக்கு என்னவோ போலாகி விட்டது. "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

"உனக்கு நினைவிருக்கிறதா... என் க்ளினிக்கிற்கு அழைத்து வரப்பட்டபோது நீ என்னிடம் உன்னைக் கொன்று விடச் சொன்னாய். அப்படிச் செய்ய எனக்குத் துணிவிருக்கிறதா என்றும் வேறு கேட்டாய்.." அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"ஆமாம்.. நினைவிருக்கிறது. நீங்களும்தான் என்னிடம்... உன்னையே அறுத்துக் கொண்டு எவ்வளவு புதையல் கண்டுபிடித்தாய் என்று கேட்டு கிண்டல் செய்வீர்கள்... அப்புறம்.. எனக்குள் எவ்வளவு தங்கமும் வெள்ளியும் வைத்துள்ளேன் என்று வேறு நக்கல் செய்தீர்கள்.. சரியான கோமாளிதான் நீங்கள்..." நானும் சிரித்தேன். "ஆனால்.. டாக்டர்.. நான் நிறைய இழந்தும் தொலைத்தும் விட்டேன். நான் இழந்த காலங்களை உங்களால் மீட்டுத் தரமுடியுமா டாக்டர்?" நான் அழுது விடுவேன் போல ஆகிவிட்டேன்.

அவர் பதிலேதும் கூறவில்லை ஆனால் என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார்.

நான் பேசத் துவங்கினேன் "டாக்டர். உங்கள் அறை அர்மேனியக் குகை போலிருக்கிறது. நிறைய பேர் அங்கே வருகிறார்கள்... வேறெங்கும் போக முடியாமல், வேறெங்கும் கூற இயலாதவற்றை எல்லாம் கூறுகிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளித்தளித்து உங்களுக்கு சலிப்புத் தோன்றுவதில்லையா?"

அவர் பார்வை வெறுமையாக இருந்தது. புன்னகைத்துக் கொண்டே, "மிகவும் நேரமாகிக் கொண்டிருக்கிறது. நாம் நம் அறைகளுக்குத் திரும்பி, தூங்கப் போகலாம் என்று நினைக்கிறேன். சரிதானே?" என்று கூறியபடியே எழுந்து, நானும் எழும்படி தன் கரங்களை நீட்டினார்.

நாங்கள் எங்கள் அறைகளுக்குத் திரும்பினோம். சரியாக அரைமணிநேரம் கழித்து அவர் என் அறைக்கு வந்தார். நான் எழுந்து சென்று முன்னால் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டேன்.

அவர் என்னருகில் அமர்ந்து கொண்டு "ஏதோ அர்மேனிய குகை என்று சொல்லிக் கொண்டிருந்தாயே.. அது என்ன?" என்று கேட்டார்.

"ஒரு குறிப்பிட்டச் சமூகத்தினர், யாரிடமாவது சிக்கிக் கொண்டுவிட்டோம் என்று உணரும்போதும், ஏதும் உரையாடிப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப் படாதபோதும், அர்மேனியாவில் உள்ள குகைகளில் ஒளிந்திருந்து செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர். அப்படி கல்லாலான கதவுகளைக் கொண்டிருந்த குகைகள் நாளடைவில் அந்தச் சமூகத்தின் ஒரு அங்கமாகிப் போனது.. இப்போது எனக்கு ஆகிவிட்டதே அதே போலவே.." நான் மெதுவாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தேன்.

"எனக்கு இன்னும் ஒன்றும் புரியவில்லை" என்றார் அவர்.

"டாக்டர். அவர்கள் அக்குகைகளுக்குள் தனியாக கூறிய வார்த்தைகள் அனைத்தும் குகைச் சுவர்களில் ஒட்டிக் கொள்ளுமாம். அக்குகைளை விட்டு அவர்கள் வெளியேறிவிடும் போது, அந்த வார்த்தைகள் உயிர் பெற்று, சுவற்றிலிருந்து வழுக்கி தரையில் விழுந்து குகைளை விட்டு வெளியே நடக்கத் துவங்குமாம். எவ்வளவு அருமையான காட்சியாக இருக்கும் அது... இல்லையா?

அந்த வார்த்தைகள் குகைகளை மாற்றிக் கொண்டே இருக்கின்றன, அவை இறப்பதில்லை. அவை யாராலும் பாதிப்படைவதில்லை, யாரும் அவற்றை நசுக்கவும் முடியாது. சில முறை அவை பூட்ஸ் அல்லது வாகனச் சக்கரங்களால் நசுக்கப் பட்டு சாலையில் கிடக்கும், யாரேனும் அவற்றை இழுத்து நடைபாதையில் வீசிவிடுவார்கள். அவை பல மணிநேரம் அங்கேயே கிடந்து பின்பொரு நாள், யாரேனும் மனிதர்களின் நாக்கில் சென்று ஒட்டிக் கொள்ளும்... அவர்கள் மீண்டும் குகைகளுக்குப் போவார்கள், பேசுவார்கள், வார்த்தைகள் மீண்டும் சுவற்றில் ஒட்டிக் கொள்ளும்..."

"நீ கூறுவது விந்தையாக இருக்கிறது.." என்று வியந்தார் அவர்.

"ஆமாம்.. இன்னும் கேளுங்கள்.. மனிதர்களிடமிருந்து பிரிந்து சென்று விட்ட இந்த வார்த்தைகள், சாலையில் கிடந்து மீண்டும் மனிதர்களையே சென்றடைகிறது இல்லையா.. சிலதரம் இவை விண்வெளியைச் சென்றடைகின்றன.. பின்பு சூரியக் கதிர்களைப் பற்றிக் கொண்டு கீழே இறங்குகின்றன். இப்படியெல்லாம் எப்போதேனும்தான் நிகழுமாம். ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறையே என்னவோ.."

அவர் கேட்டுக் கொண்டிருந்தார். நான் அவரிடம் "ரொம்பக் குழம்பி போய் விட்டீர்களோ?" என்று கேட்டேன்.

அவர் புன்னகைத்தார்.

"உங்களுக்கு நினைவிருக்கிறதா. ஒருதரம் நீங்கள் குளிரூட்டப் பட்டக் கத்தியைப் பற்றி கூறிக் கொண்டிருந்தீர்கள்?"

அவர் ஆமாம் என்பது போல தலையாட்டினார்.

"நம் இதயமும் ஆன்மாவும் குகைகள், நாம் நம் ஆசைகளையும் கனவுகளையும் அவற்றுக்குள் ஒளித்து வைக்கிறோம். அவை அழுகிப் போகின்றன. துர்நாற்றம் வீசுகின்றன. பின்பு அவற்றின் சகிக்க முடியாத நாற்றம் வெளியே பரவ ஆரம்பிக்கின்றன. சில கனவுகளும் ஆசைகளும் அப்படியே புதிதாக இருந்து விடுகின்றன, ஐஸ்ட் னைஃப் (iced-knife) போலவே.. அவை பாதுகாக்கப்பட்டு, அடுத்தடுத்த வம்சங்களுக்கு ஏதோ சொத்து போன்று அளிக்கப்படுகின்றன. என் தாயாரும் தனக்குள் புதிதாகவே தங்கிவிட்ட கனவுகளை எனக்கு அளித்தார், அவர் காலங்காலமாய் பாதுகாத்து வந்தவை அவை... மேலும் அவர் எனக்கு எல்லாவற்றையும் சகித்துப் பொறுத்துக் கொண்டு அமைதி காக்கவும் கற்றுக் கொடுத்தார்....."

"ஓ.. .அப்படியானால் இப்படித்தான் எல்லாம் ஆரம்பித்ததா? உன் குழந்தைப் பருவம் பற்றி ஏதேனும் நினைவிருக்கிறதா?" என்று அவர் கேட்டார்.

"சொல்கிறேன்... நீங்கள் கேட்பீர்களா?"

"ம் ... கேட்கிறேன்"

நான் சந்தோஷமாகி விட்டேன். "இங்கே பாருங்கள்.. யாரேனும் இவற்றைக் கேட்டிருந்தால்... இப்படியெல்லாம் எனக்கு ஆகியிருக்காது.... அர்மேனியக் குகைகள்.." காது வரை மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தேன்.

"அவை புதியதானதாக இருந்தபோது அவற்றிலிருந்து பூக்களின் இனிமையான வாசனை வீசும்.... அந்த வாசனையை எப்போதும் நுகர்ந்திருக்கிறீர்களா...?"

"ம்... ம்.." அவர் கொஞ்சம் ஆடிப்போய் விட்டார்.

"இருங்கள் இருங்கள்... அதைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.. புத்திசாலிகள் எப்போதும் பெண்களிடம் தம் ரகசியங்களைப் பகிர மாட்டார்கள்..." என்று கூறிச் சிரித்தேன்.

"எது புதியதாக இருந்தது...?" என்று கேட்டார் அவர்.

"பழங்கள்... எனக்குள்ளேயே இருந்த மரத்தில் இருந்தப் பழங்கள்.... அந்தக் கனவுகள்... என் தாய் எனக்குக் கொடுத்தவை... நான் அவற்றைச் சுமந்து கொண்டே சுற்றிக் கொண்டிருந்தேன்... அவை மிகவும் இனிமையான நறுமணம் கொண்டவை. நான் தினமும் அந்த மரத்தில் ஏறிப் பழங்களை பறித்து ருசிப்பேன். நாளடைவில் அந்த மரத்தில் பழங்கள் அதிகமாகிப் போனதால் பாரம் தாங்காமல் கிளைகள் வளைந்து தரையைத் தொடும். நான் மட்டும்தானே தனியாக பறித்து உண்கிறேன்... அதனால் அந்த மரத்தின் பழங்கள் தீராமல் நிறைந்திருந்தன.. நான் மரத்தைப் பற்றி உலுக்கினேன்... பழங்கள் தரையில் விழ ஆரம்பித்தன... டப் .. டப் ... டப்..... நான் மற்றவர்களோடும் அந்தப் பழங்களைப் பகிர ஆரம்பித்தேன், எல்லோரும் மகிழ்ந்து ருசித்தார்கள், யார் வந்தாலும் நான் புன்னகையுடன் பழங்களைப் பகிர்ந்து கொண்டேன்..."

"அப்புறம்...?" என்று அவர் கேட்டார்.

"அவர்களுக்குப் பேராசை அதிகமாகிப் போனது... இன்னும் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தனர். அவர்கள் தேவை அதிகமாகி, அவர்களாகவே பறிக்க ஆரம்பித்தனர்... நான் மறுத்தேன். என் மீது கல்லெறிந்தனர். நான் அவர்கள் முகத்திலடித்ததாற் போல என் அறைக் கதவுகளைச் சாத்திக் கொண்டேன். அவர்கள் குரல்கள் கதவினூடே கேட்க ஆரம்பித்தது. பழங்கள் அழுகினாலும் பரவாயில்லை, அவர்களோடுப் பகிரக் கூடாது என்று தீர்மானித்தேன். என் அறைக் கதவுகளைத் தட்டத் துவங்கினர். பழங்களை ருசிப்பதை மறந்து அவர்களைக் கண்டு பயப்பட ஆரம்பித்தேன்... கதவு தட்டப் படும் ஒலி எனக்கு பயம் தர ஆரம்பித்தது.... கதவு எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடுமோ என்ற பயம்.."

"நான் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். மேலே சொல்.." என்றார் டாக்டர்.

"பழங்கள் கனிய ஆரம்பித்தன... பழங்களின் பாரத்தைத் தாங்க முடியாதவளாக ஆகிப் போனேன்... என் உடலில் இருந்து பழங்களின் மணம் வழிய ஆரம்பித்தது. நான் எங்கேனும் வெளியே போனால் .. இந்த வாசனையை நுகர்ந்து யாரேனும் பழங்களுக்காக என்னைத் தாக்குவார்களோ என்ற பயம் வர ஆரம்பித்தது..."

"அப்புறம் உன் தந்தை...?" அவர் கேட்டார்.

"அவருக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும் டாக்டர். அவர் தன் பெயரை என்மேலெல்லாம் எழுதி விட்டு, பின்பு 'டோல்' முழங்கச் செய்து ஒரு நாள் அவரது சொத்தாக என்னை அறிவித்தார். அவரது எதிர்பார்ப்புக்களை ஈடுகட்டும் ஒருவரிடம் என்னை ஒப்படைப்பதாகவும் அறிவித்தார்.... எதிர்பார்பென்பதா... அவற்றை விதிமுறைகள் அல்லது கட்டுப்பாடுகள் என்றே சொல்லாமோ?"

"விதிமுறைகளா?" என்று கேட்டார் அவர்.

"அதுதான்... வில்லை முறிப்பது, சண்டையில் ஜெயிப்பது, பாரம் தூக்குவது... தன் புஜபலத்தை நிரூபிக்க ஆண்கள் செய்வது எல்லாமேதான்... யார் ஜெயிக்கிறானோ, அவனுக்கு பெண் ஒரு சொத்தாகிப் போகிறாள்..."

அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"ஆற்றல் ரொம்பவும் தனித்துவமானது... இல்லையா டாக்டர்?"

"ம் ம்.." என்றார் அவர்.

"ஆற்றலை வெளிப்படையாகக் காட்டினால் தவறென்கிறார்கள்.. உள்ளார்ந்து செயல்பட்டால் தலைகனம் என்கிறார்கள்... தோல்வியை ஒப்புக் கொள்ள முடியாத திமிர் என்கிறார்கள்.. ஒருவன் என் அப்பாவின் விதிமுறைகளில் ஜெயித்தே விட்டான்... பின்பு அவன் என் திமிரை தன் லத்தியால் அடக்கினான்..."

"அவனை இப்போது அடையாளம் காண முடியுமா?" அவர் என்னிடம் கேட்டார்.

"ம்..." நான் கொஞ்சம் உறுமலாய் முனகினேன். என் உறுமலில் வெறுப்புத் தெறித்தது. "நான் அவர்களில் ஒவ்வொருவரையும் அடையாளம் காண முடியும். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நதிநீரின் மேல் படர்ந்துள்ள நிழல் போல நடுங்கிக் கொண்டிருந்தேன்... அவர்களிடம் இருந்து விடுபட வேண்டுமென விரும்பிக்கொண்டிருந்தேன். பின்பொரு நாள், பனிமூட்டத்தினூடாக, அவன் வந்தான்... எனக்காகவேயென... என்னைக் காப்பாற்ற. அவன் இருப்பு மிகவும் தன்மையாக இருந்தது... எல்லாம் சரியானது. ஏதோவொன்று அவனிடம் சிறப்பானதாக இருந்தது. அவனே சிறப்பானவன்தான். அவன் என்னை எடுத்துக் கொண்டான். அவன் ஈடில்லாதவனாகவே இருந்தான். ஆனால் பகல் ஆகிவிட்டால் பனி விலகிவிடும்தானே... இருந்தாலும் இருட்டில் மட்டும் என்ன பார்த்துவிடமுடியும்... பனிபோல அவனும் மறைந்து விட்டான்...

என் முன் எல்லாமே தெளிவாகிப் போனது. எல்லாமே எனக்குக் கிடைத்துவிடும் என்றே இருந்தது. ஆனால் நான் எதையும் தொட்டுப்பார்க்கக் கூட தைரியம் இல்லாதிருந்தேன். அப்படியொன்றைச் செய்யும் முயற்சியும் கூட செய்யவில்லை. அதன்பின்பு நான் கனவுகள் காண்பதை நிறுத்தியிருந்தேன். ஆனால் ஏற்கனவே இருந்த கனவுகள் அப்படியே இருந்துகொண்டிருந்தன.

எது சரி எது தவறு? எல்லாவற்றையும் சரி செய்து மீண்டும் ஆரம்பிக்க முடியுமா? நடந்தவற்றை எதையாவது மாற்றியமைக்க முடியுமா? ஸ்மிருதிக்கள் என்னைக் கட்டுப்படுத்தியிருந்தன, ஆனால் அவை என்றும் என்னை எங்கேயும் வழி நடத்திச் செல்லவில்லை. நான் ஒரு சூதாடி போல மீண்டும் மீண்டும் தோற்க முடியுமா? பகல் எப்போது முடிந்து எப்போது ஆரம்பிக்கிறது என்பதையெல்லாம் அறிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை.

வாழ்க்கைப் பயணத்தில் நான் எங்கு திசைமாறி இந்த இடத்தில் தங்கிப் போனேன்? அந்தச் சாலைச்சந்திப்பை மீண்டும் சென்றடைய முடியுமா?

சில நேரங்களில், அவர்களது குரல்கள் எனக்குக் கேட்காது. ஆனால் அப்படிப்பட்ட அமைதியான இரவுகளில் அவனது அழைப்பு மட்டும் கேட்டுக் கொண்டேயிருக்கும். நான் மிகுந்த ஆவலுடன் வேகமாகச் சென்று கதவுகளைத் திறப்பேன்."

டாக்டர் மென்மையான புன்னகையுடன் எனக்கருகில் அமர்ந்து கொண்டு என் கைகளைப் பற்றிக் கொண்டார்.

"ஒரு நாள் மதியம் என் வீட்டைவிட்டு வெளியேறினேன். எனக்குள் பயம் சூழ்ந்திருந்தாலும், அதிகபட்சம் என்னவாகிவிடப் போகிறது என்று நினைத்தேன். அதிகபட்சமாக வீட்டுக்கேத் திரும்புவேன்? அதனால் என்ன? அப்படி நான் திரும்பும் போது, என் வீட்டின் கதவும் எனக்காக நிரந்தரமாய் பூட்டப்பட்டு விடும் என்பதையும் அறிந்திருந்தேன். நான் வீட்டிலிருந்து வெளியேறி என் டூ-வீலரைச் செலுத்தினேன். தலைமுடியை அவிழ்த்து விரித்து விட்டேன். நான் சென்றுகொண்டிருந்த சாலையில் யாருமே இல்லை. இரவு கவிழும் வரை வண்டியோட்டிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் முதல்முறை குரல்கள் கேட்டன.... நான் பதிலுக்குக் கேட்டேன் 'உங்களுக்கெல்லாம் ஏன் பதில் சொல்லவேண்டும்? என்னிடம் எந்த விளக்கமும் கேட்காதீர்கள்... நீங்கள் யார்? என்னிடம் பேசுவதாயிருந்தால் நேரே வாருங்கள்' என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்புறம் எப்போது எப்படி வீட்டுக்கு வந்தேன் என்பதே எனக்குத் தெரியாது. அன்றிரவு மீண்டும் அக்குரல்கள் கேட்கவில்லை. ஆனால் அவன் குரல் ஒலிக்கும் போதெல்லாம் மட்டும் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். அவன் உதவி கேட்டான்.... உதவி செய்தான்.... பல இடங்களுக்கு என்னைக் கூட்டிச் சென்றான். நாங்கள் இணைந்து பயணித்தோம்."

நான் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தேன் "இதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்பாக வருகிறது... நான் மனம் பிழற்ந்து இருந்தபோது நன்றாக இருந்திருப்பதாகத் தோன்றுகிறது.. உண்மை உறைக்கும் போது, அதில் நாம் தொலைந்து போகிறோம் இல்லையா? இதிலிருந்து மீள பல கதவுகளைத் தட்டி விட்டேன்... தோல்விதான். உங்களிடம் வரும் முன்புவரை, உங்களிடம் வந்த போதும், என்ன... இது இன்னும் ஒரு கதவுதான்.. என்ற எண்ணத்தோடே இருந்தேன். என் கனவுகளின் சுமையைத் தாங்கும் அளவுக்கு எனக்கு சாமர்த்தியம் போதவில்லை... ஒருவேளை அதனால்தானோ என்னவோ, என் கனவுகளின் பின்னாலான உண்மைகளைக் கண்டறிய முற்படும்போதெல்லாம் என் தாய் என்னை பின்னிழுத்து விடுவாள்.

இப்போதெல்லாம் என் அறைக் கதவுகளை யாரும் தட்டுவதில்லை. குரல்கள் கேட்பதில்லை. யாரும் என்னிடம் வருவதில்லை. நான் செவிடாகி விட்டேனோ என்று கூடத் தோன்றுகிறது. நான் பயணிப்பதில்லை... நான் உயிருடன்தான் இருக்கிறேனா?

மேலும்... இனி திரும்பவே முடியாத இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். என் கடந்த காலத்தின் இருண்டநாட்களை இனி எப்போதுமே திரும்பிக் கூடப் பார்க்கமாட்டேன் என்று மிகவும் நம்பிக்கையும் நம்பிக்கொண்டிருக்கிறேன். என் சிகிச்சைகள் முடிந்த பிறகும் கூட, நான் பூரணமாக குணமடைந்து விட்டேன் என்று மருத்துவரீதியாக அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, இன்றும் உங்கள் க்ளினிக்கிற்கு வந்து சென்றபடி இருக்கிறேன். அர்மேனிய குகைகளால் குணமாக்கப்பட்டவள்..." என்று சொல்லிச் சிரித்தேன்.

பின் "டாக்டர்.. மற்றவர்கள் கூறுவதையெல்லாம் எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் சொல்வதை யார் கேட்பார்கள்?" என்று கேட்டேன்.

அவர் பெரிதாகச் சிரித்து, "நீ" என்றார். "நீதானே என் சேம்பரை அர்மேனிய குகை என்றாய். ஹா ஹா ஹா... உண்மையில் என் சேம்பர் இல்லை... நானேதான் அர்மேனிய குகை. வலிதான் மருந்தை நோக்கி நம்மைச் செலுத்துகிறது" என்று கூறிச் சிரித்தார்.

நான் "ஐயோ கடவுளே.. நான் மீண்டும் அந்த எபிசோடுகள் திரும்புவதை விரும்பவில்லை. எனக்கு இனிமேலும் அவற்றைத் தாங்கும் சக்தியில்லை" என்றேன்.

அவர் மெதுவாகப் பேசினார், "என் வாழ்வில் எப்போதுமே இரண்டு விஷயங்களை மட்டுமே நான் விரும்பியிருக்கிறேன், என் கைகளைப் பிடித்துக் கொள்ள ஒரு பொம்மையும், நான் உட்கார்ந்து கொண்டதும் உயரப் பறக்கும் பட்டம் ஒன்றும்தான். மேலும் ஒழுக்கமும் நற்பண்பும் உடையவர்கள் மட்டுமே ஆற்றல் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை நம்புகிறேன். ஒரு சைக்கோதெராபிஸ்ட்டாகத் தொழில் புரிவதை என்றுமே நான் விரும்பியதில்லை. ஆனால் இதைத்தான் கடவுள் எனக்கு விரும்பி கொடுத்திருக்கிறார். என்னவாக இருந்தாலும், நடந்தவை அனைத்துமே உன்னை நான் சந்திக்கவேண்டும் என்பதற்காகத்தானே நடந்திருக்கிறது..." என்று கூறிவிட்டு என்னைப் பார்த்தார்.

"ஆனால் கடந்தவற்றை கடந்தவையாகவே நம்மால் போக விட்டுவிட முடியுமா...?" என்று அவரிடம் கேட்டேன்.

"அப்படி ஏதாவது மிஞ்சியிருந்தால், நாம் அதை சேர்ந்தே அழிக்கலாம்" என்று கூறிவிட்டு என் முகத்தை அவர் கைகளில் ஏந்திக் கொண்டு "ஐ வில் மிஸ் யூ" என்றார்.

நான் என்னை அவரிடமிருந்து விடுவித்துக் கொண்டு "எனக்குத் தூக்கம் வருகிறது. உங்களுக்கு ஆட்சேபணையில்லை என்றால் ...?" என்றேன்.

அவர் "குட்நைட்" என்று ஏமாற்றமான தொனியில் கூறிவிட்டுச் சென்றார். நான் கதவைச் சாற்றி விட்டு சோபாவிலேயே படுத்துக் கொண்டேன்.

"டக் டக் டக்" என்று யாரோ கதவைத் தட்டும் ஒலி கேட்டது.

"யாரது?" என்று நான் கேட்டேன்.

"நான்தான்" என்றது குரல்.

நான் எழுந்து சென்று கதவைத் திறந்ததும் அவர் தன்னிடம் என்னை இழுத்து அணைத்தபடி "உன்னிடம் ஒன்று சொல்வதற்கு மிச்சம் இருக்கிறது... ஐ லவ் யூ... நான் படுகுழியில் விழுந்து கொண்டிருக்கிறேன்.. என்னைத் தாங்கிப் பிடித்துக் கொள்..." என்றார்.

என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

(முடிந்தது)

0 comments:

Post a Comment