அர்மேனியக் குகை - மொழிபெயர்ப்புக் கதை - பாகம் 1

எந்த வணிக ரீதியான லாப நோக்கமுமில்லாமல் என் சொந்த விருப்பத்தில் மொழிபெயர்த்தது. ஹிந்தி மாத இதழ் "காதம்பினி"யில் 2001-ஆம் வருடம் வெளிவந்தது. Copyright violation ஏதும் இருப்பதாகத் தெரிந்தால் இந்தப் பதிவு நீக்கப்படும்.

பாகம் 1 ஆங்கிலத்தில் நான் மொழிபெயர்த்தைப் படிக்க The Caves of Armenia – Part 1

ஹிந்தி மூலம் - ஆசிரியை : திருமதி.ஜயா ஜாத்வானி - 2001

===============================

அங்கு நான் அனுப்பப்பட்ட போது, சூழல் மிகவும் மோசமாகி இருந்தது. எவ்விதத் தயக்கமோ முனகலோ இன்றி சிதறிக்கிடந்தவை அனைத்தையும் எனக்குள்ளாகவே அப்படியே ஏற்றுக் கொண்டேன். அப்படியே புலம்பினாலும் யாரிடம்தான் புலம்புவது? சூழலின் பாரம் தாங்காது என் உடல் முழுதும் வலித்தது. காயங்கள் வெளியே தெரியவில்லை என்றாலும் முணுக்முணுக்கென்று வலித்துக் கொண்டே இருப்பை உணர்த்திக் கொண்டிருந்தன.

"இவற்றை ஆரம்பத்திலிருந்து மீண்டும் சரிசெய்யும் படியாக அடிக்கடி என் மேல் பாரஞ்சுமத்துவது அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. இருப்பினும் அவர்கள் இன்னொரு முறை முயற்சித்தார்கள். அப்போது வரை, இது சமூகத்தின் மீதான பயமா இல்லை பச்சாதாபமா என்று கூட என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது இவ்விரு உணர்வுகளின் இடையே வித்தியாசங்களே இல்லை என்றளவுக்கு பழகிக் கொண்டுவிட்டேன், அப்படியே மாற்றியிருந்தாலும், பெரிதாக என்ன நிகழ்ந்து விடப் போகிறது? இவ்விரு உணர்வுகளும் வெறும் பிதற்றல்கள்தான், எனக்கு அவற்றைப் பற்றிய பொருட்டே இல்லை.

அவர் என் படுக்கைக்கு அருகில்தான் கும்மிருட்டில் நின்றிருந்தார். நான் படுக்கையில் கிடந்தேன். பகல் முழுதும் ஆனவரை பரிட்சை செய்தார். ஏறத்தாழ எனக்கும் அவருக்கும் ஒரே நேரத்தில் மற்றவர்களைப் போலவே தோற்றுத் திரும்பிச் செல்லப் போகிறார் என்ற உணர்வு மேலிட்டது. எனக்கு என்னவோ போலிருந்தது. வேறொருவர் வருவார் மீண்டும் மீண்டும் இவையனைத்தும் ஆரம்பத்திலிருந்து நிகழும்.

நான் ஏளனமாய் பேசி அவரை நிறுத்தினேன் "பகலில் ஏதும் தெரியப்போவதில்லை. எதையேனும் அடைய வேண்டுமானால் சேற்றில் இறங்கவேண்டும். நீங்கள் அதைப் புதைகுழி என்றும் சொல்லலாம் அல்லது சாக்கடை... அதில் மூச்சையடக்கிக் கொண்டு மூழ்கி சகதியில் துழாவி நீங்கள் தொலைத்தவற்றைத் தேடவேண்டும்"

அவரை நம்புவதும் ஏமாற்றத்தையே தந்தது. அவர் எனக்கானாலும் வயதில் பெரியவராகவும் அனுபவஸ்தராகவும் இருந்தார். அவர் கரம் பற்றி, இதுவரை யாரும் வராத, யாரையும் அனுமதிக்காத அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லாம் என்றே நினைத்தேன்.

"நீ சமஸ்கிருதப் புராணங்களைப் போன்றே இருக்கிறாய்" என்றான் அவர் "புரிபடாமல், கவர்ச்சிகரமாயில்லாமல், நம்ப முடியாமல், ஏகப்பட்ட உள்ளர்த்தங்களைக் கொண்ட புத்தகம் போல, இரகசியமானவளாய், புதிராய், ஒரே இடத்தில் சிக்கிக் கொண்டவளாய்...." வார்த்தைகளை விழுங்கினார். நான் அவரைப் பார்த்துக் கொண்டே அவராகப் பேசுவாரெனக் காத்திருந்தேன்.

கொஞ்சம் உரத்த குரலில் அவர் கத்துவது போலிருந்தது. "அர்த்தமே புரியாத அந்த சுலோகங்களினால் என்ன பயன்? உலகம் அவையின்றியும் சுழன்று கொண்டுதானிருக்கிறது, சந்தோஷமாக..... யாருக்கு அவற்றைப் புரிந்து கொள்ளுமளவு நேரம் இருக்கிறது?" என்று கூறி அமைதியானார்.

பின் சிறிது நிதானமாகி "உண்மைதான்... இப்படி புரியாத புதிரானவற்றைப் புரிந்து கொள்ளும் சக்தியைப் பெற பல காலம் காத்திருந்தேன். உணர்வுகளுக்கு சிறிதும் முக்கியத்துவம் அளிக்காமல், க்ஷண நேரத்தில் சம்பாதித்துவிடும் செல்வங்களுக்காகவும் பொருட்களுக்காவும் இவ்வளவு இடம் தந்திருக்கிறோம் என்பதைக் கூட நாம் தாமதமாகவே உணர்ந்திருக்கிறோம். உணர்வுகள் அழுகிப் போய், அயர்ச்சியடைந்து ஒருதரம் கூட உணரப்படாமலேயே தீர்ந்து போய் விடுகின்றன. யாரும் அவற்றைப் பற்றி அறியக் கூட முயற்சிப்பதில்லை. ஆனால் சம்பாதித்தப் பொருட்களைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொரு முயற்சியையும் விடாமல் செய்கிறார்கள்."

எனக்கு எதுவும் தோன்றவில்லை. ஸ்தம்பித்து அமர்ந்திருந்தேன்.

"நீ குணமாகி இதிலிருந்து மீள வேண்டும் என்று விரும்புகிறாயா?" என்று கேட்டார் அவர்.

"இல்லையென்றால் நான் ஏன் வரப்போகிறேன்?" என்று முனகினேன்.

கொஞ்சம் உறுதியான குரலில் "நீயாக வரவில்லை. நீ கொண்டுவரப் பட்டாய். எல்லாவற்றிற்கும் மேல், உன்னைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்கிறார்கள், இரக்கப் படுகிறார்கள் என்பதையும் உணருகிறேன். ஆனால் உண்மையில் நீதான் அவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறாய். அவர்கள் மீது வெறுப்புடன் உமிழ்கிறாய். பொறுப்பில்லாமல் பொறுப்புக்களையேற்று இருப்பதைப் பற்றி அவர்களைப் பழி தீர்க்கவும் விரும்புகிறாய். அப்படி இருக்கலாமா? ஆனால் பழி தீர்க்கும் வழி இது இல்லையே. அவர்கள் செய்வதை இல்லாமல் மாற்றி அமைக்கும்படி சாதுரியமாய் இரு. இல்லையேல் முட்டாள்த்தனமாக எதிர்வினை செய். இவை இரண்டுமே ஒன்றிற்கொன்று முற்றிலும் மாறுபட்டது என்பதையும் உணர்ந்து புரிந்து கொள். அவர்களுக்கு என்னவெல்லாமாயிற்று என்பதைப் பற்றி நான் உறுதியாக அறிந்திருக்கவில்லை.. உண்மைதான்.. ஆனால்.. உனக்கு என்னவாயிற்று?" ஆக்ரோஷமாய் பேசினார்.

எந்தவித பதிலும் கூறாமல் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் கடைசியில் அவர் கூறியதைப் பற்றி உரக்கச் சிரித்து விட்டேன்.

"இன்னும எனக்கு என்னவாக முடியும் டாக்டர்?" நான் இப்போது நேரிடையாகவே கேட்டுவிட்டேன்.

"உன் தோல்வியை ஒப்புக் கொள். உனக்கு ஏதும் ஆகவில்லை என்பதை நம்பு. இந்த உலகில் இருக்கும் எல்லாமே, எல்லாருடையதும் ஆகும்.. எல்லாருக்குமாகவே இருக்கிறது. பொறுப்புக்கள் உன்னுடையவையாக இல்லையென்றால், அவை மற்றவருடையதாக மட்டும் ஏன் இருக்க வேண்டும்? உன் கைகளை நீட்டி அவற்றைப் பற்றிக் கொள். அப்போது ஏதேனும் நிகழக் கூடும். நான் மீண்டும் அதையேதான் கேட்கிறேன். நீ நிஜமாகவே குணமாக விரும்புகிறாயா?"

நான் பதில் சொல்லவில்லை.

"நீ உடனே பதில் சொல்ல வேண்டாம், அதற்கான அவசியமும் இல்லை. ஆற அமர பதில் சொல்லலாம். உனக்கு பதில் கூறலாம் என்று தோன்றும் போது என்னிடம் வா" என்று கூறி பெருமூச்சுடன் இருக்கையில் சாய்ந்து கொண்டார். நான் எழுந்து வெளியேறாததைக் கண்டு "உனக்கு என்னதான் பிரச்சினை?" என்று கேட்டார்.

"நான் நிரந்தரமாக திரும்பிச் சென்று விட விரும்புகிறேன்....இன்றே"

"எங்கே போவாய்? இத்தனை வருஷமாய் மீண்டும் மீண்டும் போய் கொண்டிருந்த இடத்துக்கே திரும்பி ஏன் போகிறாய்? மீண்டும் எல்லாம் நிகழவா?"

"ஆமாம். ஆனால்.. இந்த முறை... நான் ஆயுதங்கள் இல்லாமல் செல்ல மாட்டேன்" நான் அழுத்தமான குரலில் கூறினேன்.

"ரொம்ப கனமாக இருக்கிறது வார்த்தைகள்.. உனக்குத் தோதாக இல்லை. கனமான வார்த்தைகள் இதயத்தை உறையச் செய்கின்றன, பின் மெதுவாகச் சுற்றியுள்ளவற்றைத் தின்கின்றன, பின் மிகவிரைவில் அனைத்தும் முடிந்து விடும். இவை எல்லாவற்றையும் நீ காப்பாற்ற விரும்பினால் உறைந்த வார்த்தைகளை உருகச் செய். அவை பின்பு மழை போல் இதயங்கள் மீது பொழிந்து அமைதியாக வடியும். பின்பு எல்லாம் சரியாகி விடும்"

எந்த கட்டாயமோ எதிர்ப்போ இன்றி அவர் சொன்னவையனைத்தையும் ஏற்றுக் கொண்டேன். அவர் மிகவும் நேரடியாகப் பேசியதால், உண்மையில், அவனை ஏற்பது இம்முறை கடினமாக இல்லை. "நான் மிகவும் யோசித்து ஆலோசித்து உணர்ந்தே, எனக்காக ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன். நிஜத்தில் வேறேதும் எனக்கு செய்வதற்கும் இல்லை. நாம் இவற்றிலிருந்து இப்போதைக்கு தப்பிக்கலாம்.. ஆனால் எவ்வளவு காலம்? விதி முகத்தைத் திருப்பிக் கொண்டு போகும் போது, படுகுழியில் விழுந்து கிடக்கிறோம் என்பதைக் கூட தாமதமாகவே உணரும் போது, புதைமணல் போல உள்ளிழுத்து கொண்டே காலங்கடந்திருக்கும். நான் நிராகரிக்கப்பட்டு இருக்கிறேன் என்பதே உண்மை. இப்போதெல்லாம் நீங்கள் பேசுவதை எல்லாம் கேட்டே ஆகவேண்டும் என்றும் யாரும் கேட்டிறாத என் எண்ணங்களை உங்களிடம் பேசவேண்டும் என்பதையும் தீவிரமாக நம்ப ஆரம்பித்துவிட்டேன்." அவர் கண்களை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவரால் என் கண்களைப் பார்க்கமுடியவில்லை. எழுந்து சென்று ஜன்னலுக்கு அருகில் நின்று கொண்டார். "உனக்கு உண்மையான பிரச்சினைதான் என்ன என்று இன்னும் என்னிடம் நீ கூறவில்லையே?" என்றார்.

அவர் தன் தொழில்நோக்கிலிருந்து மாறுதற்கு விரும்பவில்லை. இதுதான் அவரையும் மற்றவரையும் வித்தியாசப்படுத்துகிறது. என்னை ஒரு ஆதரவற்ற கைவிடப்பட்ட நோயாளியாக அவர் நடத்தவில்லை. அவர் என்னை இன்னொரு சகமனுஷியாக, சாதாரணமானவளாக நினைக்கிறார். என்னிடமிருந்து அவருக்கான மரியாதைக்குரிய இடைவெளியை தக்கவைத்துக் கொண்டே இருந்தாலும், என் இதயத்திற்கு மிகவும அருகில் இருப்பதாக உணரச் செய்தார், எப்போதும் தன் பொறுப்புக்களிலிருந்து மீறாமல்.

அவரைப் பார்த்து குரூரமாக புன்னகைத்து "ஏன் உங்களுக்கு அது பற்றி சொல்லப் படவில்லையா?" என்று கேட்டேன்.

"நான் அதை உன் வார்த்தைகளில் கேட்க விரும்புகிறேன் என்று சொல்லினேன் இல்லையா?" என்று புன்னகைத்தார்.

"சரி" என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

"யோசிக்காதே.. அப்படியே உணர்வதைப் பேசு" என்று கோரினார்.

"எங்கு பார்த்தாலும் துர்நாற்றம்.. நடக்கும் போது, பயணிக்கும் போது, தூங்கும் போது, வேலை செய்யும் போது என்று.. எல்லா நேரமும். எங்கிருந்து நாற்றம் வருகிறது என்று தெரியவில்லை? அது அழுகிய நாற்றம் வீசுகிறது... அழுகிய பிணங்களின் நாற்றம் போல. சில நேரங்களில் அழுகிய பழங்களின் துர்மணமும் வீசுகிறது. நான் தூங்கும் போது, யாரோ கதவுகளைத் தட்டும் ஓசை கேட்கிறது. கதவைத் திறந்து பார்த்தால் யாருமே இல்லை. எனக்கு காலடி ஓசைகளும் குரல்களும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. அவர்கள் என்னை தெருவில் இழுத்துத் தள்ளுகிறார்கள். இது பற்றி எனக்கு எப்போதும் பயமாக இருக்கிறது. பயப்படும் போது எனக்கு அதிகமாக வியர்க்கிறது. நான் எதையும் யோசிக்கும் முன்பே, யாரோ என் முகத்தை துண்டால் துடைத்து விடுகிறார்கள்.

டாக்டர். அவர்களிடம் இருந்து நான் தப்பியோடிக் கொண்டே இருக்கிறேன். இருந்தாலும் நான் எங்கே சென்றாலும் என்னைப் பின்தொடாந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நிற்பதே இல்லை. உலகமெங்கும் பயணித்துப் பார்த்து விட்டேன். ஒவ்வொரு புது இடத்திற்கும் அவர்கள் வந்து விடுகிறார்கள். ஒவ்வொரு தெருவுக்கும் அடுத்தாக ஒரு புதிய தெரு, ஒரு பயணத்திற்கு அடுத்து இன்னொரு புதிய பயணம்.

என் காதுகளைப் பொத்திக் கொண்டு என்னை செவிடாக்கிக் கொண்டாலும், எனக்குள்ளேயே சில குரல்கள் புகுந்து கிசுகிசுத்துக் கூப்பிடுகின்றன. அப்போது என் இதயத்தில் இருந்து கைகள் கிளம்பி எனக்குள்ளேயே என்னை இழுக்கின்றன. என்னுள் இருக்கும் இருள் என்னைப் பயம் கொள்ளச் செய்கின்றது. எனக்குள் யாரையேனும் சந்தித்தால் அவர்கள் இறந்து போய் நிழலாகி விடுகிறார்கள். நிழல்கள் நீண்டு தரையில் விழும்போது மிகவும் தெளிவாகவும் இருட்டாகவும் இருக்கின்றன. அப்போது தரை புதைமணலாகி அவர்களை உள்ளிழுக்கும். அப்போது என் கால்களை தரையில் வைக்க பயப்படுகிறேன், நான் எழுந்து நிற்க எங்கேனும் இடமிருக்கிறதா?

டாக்டர். இவையெல்லாம் நிஜமாகவே நிகழுமா? ஆனால் நான் அவை நிகழ்வதைப் பார்க்கிறேன். நான் அந்நியமாகத் தோன்றுகிறேனா?"

அவர் புன்னகைத்து "இல்லவேயில்லை" என்று சொல்லிவிட்டு தொடர்ந்து "இப்போதுதான் உன்னை முழுமையாகப் புரிந்து கொள்ளவே முடிகிறது" என்றார்.

எனக்கு ஆறுதலாக இருந்தது. "டாக்டர். உங்களுக்குத் தெரியாது. ஒவ்வொரு நொடியும் நான் அவர்களைப் பார்க்கிறேன். எல்லா இடத்திலும். நான் என்னையே கூட அத்தனை முறை பார்த்திருக்க மாட்டேன். நாங்கள் எப்போதும் கூடவே இருக்கிறோம். எங்களையே எரித்துக் கொண்டு நெருப்பைப் பற்றி எழுதுகிறோம்." என்று சொல்லி விட்டு நான் என்னையே எரித்துக் கொண்ட இடங்களையெல்லாம் காண்பித்தேன்.

அவர் அதிர்ச்சியானார் என்பதை மறைத்துக் கொள்ள முயற்சித்தார். "சரி. சரி. உன் பெற்றோர்கள் கூட நீ என்ன எழுதுகிறாய் என்பதே புரியவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் அவற்றைப் பார்க்க முடியுமா? உனக்கு ஆட்சேபணை ஏதுமில்லையே?" என்று கேட்டுச் சமாளித்து, பின் மென்மையாக என்னிடம் "நான் உன்னை நல்லவிதமாகப் புரிந்து கொண்டேன் என்று நீ நினைக்கிறாயா?" என்று கேட்டார்.

நான் அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன். "அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரிதான் யோசிக்கிறார்கள் டாக்டர். எங்களைப் போலவே இரு என்கிறார்கள். ஆனால் என்னால் அவர்களைப் போல இருக்க முடியவில்லை..... அப்போது நான் என்னையே வருத்திக் கொள்கிறேன். இருட்டில் ஏற்படும் அனுபவங்களைக் குறித்து வேறென்ன என்னால் எழுத முடியும்?"

என்னைப் பார்த்து புன்னகைத்தார். "இவ்வளவு குரூரமாக இருக்கவேண்டாம். இவையெல்லாம் உண்மை. நான் இவற்றை வேறெங்கும், வேறு யாரிடமும் பகிர முடியாது. யாரும் என்னை நம்புவதில்லை. நீங்கள் நம்புகிறீர்களா என்னை...?" என்று கேட்டு அழத் துவங்கியிருந்தேன். முதன்முறையாக அழுவதில் கொஞ்சம் சுமை குறைந்தது போல இருந்தது.

"ஆனால் நீ உண்மையென்று நம்புவதைக் குறித்து பேசுவதற்கு ஏன் தயங்குகிறாய்? ஏன் மறைக்கிறாய்? எதை நீ மிகவும் வெறுக்கிறாய்?" அவர் என்னிடம் கேட்டார்.

"என்னையேதான்" அவர் கண்களைக் கூர்ந்தேன்.

"அப்புறம்....யாரை நேசிக்கிறாய்?" என்று கேட்டார்.

"யாரையும் இல்லை" என்றேன்.

"பொய் சொல்கிறாய். அப்போது யாரிடமிருந்து தப்பிக்க முயல்கிறாய்?"

"நான் தப்பிக்க விரும்பவில்லை"

"பின் ஏன் எழுதுகிறாய்?"

"வாயை மூடுங்கள்... சரியா... எழுதுவது பற்றி உங்களுக்கென்ன தெரியும்? நான் யாரென்று காட்டுகிறேன்?" கோபத்தில் என் உடல் நடுங்கியது. கோபமிகுதியில் உத்வேகப்பட்டுக் கொண்டிருந்தேன்.

அவர் என்னை நெருங்கி வந்து "ஆனால் எல்லோரும் நீ உன்னையே மிகவும் நேசிக்கிறாய் என்கிறார்களே. அடிக்கடி குளித்து சுத்தம் செய்து அழகாக அலங்கரித்துக் கொண்டு.... பின் மீண்டும் குளித்து அலங்கரித்து என்று..." அவர் குரல் எனக்குக் கேட்டது ஆனால் அவர் பேசவேயில்லை.

"என் தந்தை முதன்முதலில் அவர் பெயரை என்மேலெல்லாம் எழுதினார். எனக்கான அடையாளம் தொலைந்தது. இந்த அடையாளத்தை அழித்து விடவே விரும்பினேன். அந்த அடையாளம் இருந்த இடத்தையெல்லாம் வெட்டி அலம்பிக் கொண்டேன். பின்பொரு நாள் அவர் என்னை இன்னொருவனிடம் ஒப்படைத்தார். அவன் பெயரும் என் உடலெங்கும் எழுதப் பட்டது. மீண்டும் வெட்டினேன்." என்றேன்.

"பின்பு?" கேட்டார் அவர்.

"என் தந்தை என்னை விட்டுச் சென்றுவிட்டார். இரண்டாமவனும் சென்று விட்டான். மூன்றாமவன் வந்தான். அவன் பெயரும் என் உடலெங்கும் எழுதப்பட்டது. மீண்டும் அவற்றை அழித்துத் துடைக்கவே விரும்பினேன். முழுதும் வெட்டி நறுக்கியெறிந்து அலம்பி சுத்தமாக்க வேண்டும்"

என் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. என் உடலெங்கும் வெட்டுக்களும் இன்னும் ஆறாத ரணங்களும் நிறைந்திருந்தன. பழைய காயங்களின் தழும்புகளும் வலியுடன் குருதிகசியும் புதிய காயங்களும் உடலெங்கும் இருந்தன.

டாக்டர் என் கைகளைப் பற்றிக் கொண்டு "கவலைப் படாதே. உன் காயங்கள் அனைத்தும் குணமாகும்" என்ற கூறி புன்னகைத்தார்.

(தொடரும்)

10 comments:

ambi said...

நல்லா வந்ருக்கு. மூலத்தின் சாரத்தை உள்வாங்கிண்டு அழகா கொண்டு வந்ருக்கீங்க.

சில டவுட்ஸ்:

1) மொழி பெயற்ப்புன்னா இப்படி எழுத்துருவை மாத்தி வைக்கனுமா..? கொஞ்சம் அயற்ச்சியா இருந்தது.

2) பல இடங்களில் எ.பிழை.

3) அவர் என்று விளித்து விட்டு ஒருமையில் மொழி தாவுகிறது.

//கொண்டவளாய்...."வார்த்தைகளை விழுங்கினான்.//

குறை சொல்றத்துக்குனே சில பேர் வராங்கடா நாராயணா! :P

Vidhoosh said...

எழுத்துருவா? எதை சொல்றீங்க. எப்போது பக்கோடாவில் லதா-12- சைசில்தான் வருவாள்.

கிர்ர்.. ரொம்ப நாள் கிடப்பில் இருந்தது. இப்போத்தான் ஒருதரம் படிச்சுட்டு வெளியிட்டேன். எழுத்துப் பிழை - சரி பண்ணிடறேன்.

ஒருமையில் தான் முதலில் எழுதி இருந்தேன். அப்புறம் டாக்டர் என்பதால் மாற்றினேன். ஒரு இடத்தில் விட்டு போயிடுத்து - அம்பிக்காக :-))

நாராயணா.. இது போல நிறையா பேரை கிளப்பி விடுடா..

Vidhoosh said...

நன்றி அம்பி :-)

ambi said...

அடடே எழுத்துருன்னா லதாவை குறிக்குமா..? அப்போ லதாவோட ஸ்டையில்ன்னு வெச்சுக்குங்க. இப்ப நல்லா இருக்கு.

2) //குரூரமாக புன்னனைத்து //

3) ஒரு இடம் இல்லை, ரெண்டு இடம். :)

நன்றியெல்லாம் எதுக்கு..? நான் என் கடமைய தான் செஞ்சேன். (தமிழ் சினிமாவுல வர டயலாக்கை சும்மா சொல்லி பாத்தேன்) :))

Vidhoosh said...

:)

நசரேயன் said...

// Copyright violation ஏதும் இருப்பதாகத் தெரிந்தால் இந்தப் பதிவு
நீக்கப்படும்.//

ஐயா சாமிகளா சீக்கிரமா கண்டு பிடிச்சி சொல்லுங்க, நாங்க நிம்மதியா இருப்போம்

Philosophy Prabhakaran said...

முதல்முறையாக உங்கள் வலைப்பூவிற்கு வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... இனி பின்தொடர்கிறேன்...

ambi said...

பிலாசபி பிரபாகர், உங்கள நெனச்சா பாவமா இருக்கு. :P

btw பதிவ படிச்சீங்களா..? :))

Vidhoosh said...

அம்பி மாமா... சித்த நேரம் சிவனேன்னு இருக்கலாம்னா விட மாட்டீர் போலருக்கே... அடுத்த பாகத்தை வெளியிட்டாத்தான் சரிப்படுவீர்.. இந்தோ வரேன்.

Thenammai Lakshmanan said...

அருமை வித்யா,, எப்பிடி டைம் கிடைச்சுது இவ்வளவு பெரிய மொழிபெயர்ப்பு செய்ய..

Post a Comment