ஹனுமத் ஜெயந்தி - டிசம்பர் 16-2009 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்தப் பதிவு
பெரும்பான்மையான இடங்களில் ஒவ்வொரு வருடமும் சித்திரை சுக்கில பௌர்ணமி (மார்ச் - ஏப்ரல்) அன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் நாட்டில் மார்கழி மாசம் (டிசம்பர் - ஜனவரி) கொண்டாடப் படுகிறது. (ஏன் இந்த நாள் வித்தியாசம் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் பகிரலாம்).
பிறப்பு:
பிருஹஸ்பதி முனிவரின் ஆஸ்ரமத்தில் புஞ்சிகஸ்தலா (மனகர்வா என்ற அப்சரஸ்) தேவ சேவைகள் செய்து வந்தாள். இவளைத்தான் இராவணன் பலாத்காரித்து, "பெண்களை அவள் விருப்பத்திற்கு மாறாக தீண்டினால் தலை சுக்கு நூறாகத் தெறிக்கும்" என்ற பிரம்மனின் சாபம் பெற்றான். இராவணன் வால்மீகி இராமாயணத்தில் இவ்வாறு கூறுகிறான்.
பிதாமஹஸ்ய பாவனம் கச்சந்தீம் புஜ்ஞ்சிகச்தலாம் |
சஞ்சூர்யமாநாமத்ராக்ஷமாகாஷே அக்னிஷிகாமிவ || 6-13-11
அத்ராக்ஷ்ஹம் = நான் கண்டேன்; புஞ்சிகஸ்தலா = புஞ்சிகஸ்தலா (பெயர்); அக்னிஷிகாமிவ = நெருப்பைப் போன்ற ஒளியுடைய; சஞ்சூர்யமாநாம் = தன்னை ஒளித்துக் கொண்டவாறு (இராவணனைக் கண்ட பயத்தில்); ஆகாஷே = வானில்; கச்சந்தீம் = போய் கொண்டிருந்தாள்; பாவனம் = சொர்கத்தை நோக்கி; பிதாமஹஸ்ய = பிரம்மனின் இடமான
ஒரு முறை அக்னியைப் போன்ற ஒளியுடைய அப்சரஸ் ஒருவள், புஞ்சிகஸ்தலா என்ற பெயருடையவள், தன்னை தானே மறைத்து ஒளிந்து கொண்டு வானில் பிரம்மன் இருக்கும் சொர்க்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.
ஸா ப்ரஹஸ்ய மயா புக்தா க்ரிதா விவஸனா தத: |
ஸ்வயம்பூபாவனம் ப்ராப்தா லோலிதா நளினீ யதா || 6-13-12
ஸ்வயம்பூபாவனம் ப்ராப்தா லோலிதா நளினீ யதா || 6-13-12
ஸா = அவள்; க்ரிதா = ஆக்கப் பட்டு இருந்தாள்; விவஸனா = ஆடைகள் இன்றி; மயா = என்னால்; புக்தா = அனுபவிக்கப்பட்டு; ப்ரஹஸ்ய = பலாத்காரமாக; தத: = அதன் பின்; ப்ராப்தா = அவள் சென்று அடைந்தாள்; ஸ்வயம்பூ பாவனம் = பிரம்மனின் இடமான சொர்கத்தை; லோலிதா = நசுக்கி சிதைக்கப்பட்ட; நளினீ யதா = ஒரு தாமரை போல;
அவளது ஆடைகளை நீக்கி அவளைப் பலாத்காரம் செய்தேன். அதன் பின், அவள் நசுக்கிச் சிதைக்கப் பட்ட ஒரு தாமரையைப் போல, பிரம்மனின் இடமான சொர்கத்தை சென்றடைந்தாள்.
தச்சா தஸ்ய ததா மன்யே ஜ்ஞானாதமாஸீன்மஹாத்மன: |
அத ஸம்குபிதோ வேதா மாமிதம் வாக்யமப்ரவீ || 6-13-13
அத ஸம்குபிதோ வேதா மாமிதம் வாக்யமப்ரவீ || 6-13-13
மன்யே =நான் நினைக்கிறேன்; தச்சா = இது (இந்த விஷயம்); ஜ்ஞானாத = சொல்லப்பட்டது; ததா = அதன் பிறகு; தஸ்ய = பிரம்மாவுக்கு; மஹாத்மன: = மகாத்மாவான; அத = பிறகு; ஸம்குபித = கடுங்கோபம் கொண்ட; வேதா: = பிரம்மா; அப்ரவீத் = பேசினார்; இதம் = இந்த; வாக்கியம் = வார்த்தைகள்; மாம் = என்னிடம்
இந்த விஷயம் பிரம்மாவிடம் தெரிவிக்கப் பட்டதென்று நினைக்கிறேன். மகாத்மாவான பிரம்மா கடுங்கோபம் கொண்டு இந்த வார்த்தைகளைச் சொன்னார்.
அத்யப்ரப்ருதி யாமன்யாம் பலான்னாரீம் காமிஸ்யஸி |
ததா தே ஷ்டதா முர்தா பலிஸ்யதி ந சம்ஷய: || 6-13-14
ததா தே ஷ்டதா முர்தா பலிஸ்யதி ந சம்ஷய: || 6-13-14
அத்ய ப்ரப்ருதி = இன்று முதல்; காமிஸ்யஸி = காமம் கொண்டு ; யாம் அந்யாம் = வேறெந்த; நாரீம் = பெண்மணி; பலான் = பலத்தை பிரயோகித்து பலாத்காரம்; ததா = பிறகு ; தே = உனது; மூர்தா = தலை; பலிஸ்யதி = தூள் தூளாக (சுக்கு நூறாக); ஷடதா = நூறு (துண்டுகளாக); ந சம்ஷய: = சந்தேகமின்றி
இன்று முதல் காமத்தோடு நீ எந்த பெண்ணையும், உன் பலத்தைப் பிரயோகித்து பலாத்காரம் செய்தால், உன் தலை சுக்கு நூறாக தூளாகும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
இத்யாஹம் தஸ்ய ஷாபஸ்ய பீதா: ப்ரஸபமேவ தாம் |
நாரோஹயே பலாத்சீதாம் வைதேஹீம் ஷயனே சுபே || 6-13-15
நாரோஹயே பலாத்சீதாம் வைதேஹீம் ஷயனே சுபே || 6-13-15
பீதா: = பயத்தால்; தஸ்ய = அவரது; ஷாபஸ்ய = சாபத்தால்; இதி = இந்த வகையில்; அஹம் = நான்; நாரோஹயே சீதா (தா)ம் = சீதையை நான் ஒன்றும் செய்யவில்லை வைதேஹீம் = விதேக நாட்டு அரசரின் மகளான அவளை அடைய; சுபே = (என் ) கவர்ச்சிகரமான (அழகான); ஷயனே = படுக்கை; ப்ரஸபமேவ = அவசரப்பட்டு
பிரம்மனால் இந்த வகையில் சபிக்கப் பட்ட பயத்தால், நான் விதேக அரசரின் மகளான சீதையை பலாத்காரம் செய்ய எனது அழகான படுக்கைக்குக் கொண்டு செல்லவில்லை.
==================
இப்படியாக புஞ்சிகஸ்தலா தன்னையுமறியாது சீதைக்காக ஒரு உதவி புரிந்த பூர்வ ஜன்ம புண்ணியத்தால், மீண்டும் அஞ்சனையாகப் இப்புண்ணிய பூமியில் பிறந்து சிவனாரின் ரூபமான அனுமனின் தாயாகிறாள். அதைப் பற்றி மேலே படிக்கலாம்.
இப்படியாக புஞ்சிகஸ்தலா தன்னையுமறியாது சீதைக்காக ஒரு உதவி புரிந்த பூர்வ ஜன்ம புண்ணியத்தால், மீண்டும் அஞ்சனையாகப் இப்புண்ணிய பூமியில் பிறந்து சிவனாரின் ரூபமான அனுமனின் தாயாகிறாள். அதைப் பற்றி மேலே படிக்கலாம்.
புஞ்சிகஸ்தலா ஒரு நாள் தெய்வ ஆராதனைக்காக பூக்கள் பறித்துக் கொண்டிருந்த பொழுது, மானுடப் பெண்கள் சிலர் தங்கள் துணைவரோடு உறவில் இருப்பதைக் கண்டு, உணர்ச்சிவசப்படுகிறாள். காமவயத்தில் அவள் பிருஹஸ்பதி முனிவரை கவர முயற்சிக்கிறாள். இதனால் கோபம் கொண்ட முனிவர் அவளைப் பெண்குரங்காக மாறும்படி சபிக்கிறார். அவள் மன்னிப்பு கேட்ட போது, சிவ ஸ்வரூபமாக ஒருவனை மகனாகப் பெறும் போது இந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவாள் என்றும் சொல்கிறார்.
இப்படி குரங்காக மாறிய அப்சரஸ், கௌதம மகரிஷிக்குப் பெண்ணாகப் பிறந்து அஞ்சனை என்று அழைக்கப்படுகிறாள். இந்தக் குறிப்பு சிவபுராணத்தில் உள்ளது. கௌதமருக்கு அஹல்யா என்ற ரிஷி பத்தினி ஒருவர் மட்டுமே மனைவி என்பதால், இவரையே அஞ்சனையின் தாய் எனக் கொள்ளலாம். (ஆதாரக் குறிப்புக்கள் ஏதும் இல்லை. இது யூகம் மட்டுமே). அஹல்யாவின் தந்தை பிரம்மா என்று புராணங்கள் கூறுகின்றன. ஆகையால் அஞ்சனையின் தாய் வழித் தாத்தா பிரம்மன் என்பதாகிறது.
இங்கே குறிப்பிடத்தகுந்த ஒன்று: இராவணனின் தந்தை வழி தாத்தா பிரம்மன் என்றும் சிவபுராணம் குறிக்கிறது. அனுமனும், இராவணனும் பல மொழிகள் பேசும் வல்லமை பெற்று இருந்தனர். அனுமன் கிஷ்கிந்தையில் பேசும் மொழியான தெலுங்கு/கன்னடம் ஆகிய மொழிகள் சீதைக்குத் தெரியாது என்றும், வடமொழியான சமஸ்கிருதத்தில் பேசினால் இராவணன் என்று நினைத்து விடுவாள் என்றும், அயோத்தியாவின் மொழியான ப்ரகிரித் மொழியில் பேசியதாக இராமாயணம் கூறுகிறது. க்ஷத்திரியர்களின் பாஷையான ப்ரகிரித் மொழி, சமஸ்கிருதத்துக்கும் புராதனமானது என்று நம்பப் படுகிறது. சிலர் இதை பண்பட்ட சமஸ்கிருதம் என்றும் கருதிகிறார்கள். அசோகச் சக்கரவர்த்தியின் கல்வெட்டுக்களில் இம்மொழி அதிகம் பயன்படுத்தப் பட்டுள்ளது என்று அகழ்வாராய்ச்சி வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அனுமனும், இராவணனும் இசையில் சிறந்து விளங்கினர். இராவணனின் சகோதரன் விபீஷணன் கூட,
வாதே விவாதே சங்க்ராமே; பய் கோரே மகாவரே;
சிங்வ்யாக்ரதி சோரேப்ய ஸ்தோத்ரே பதத் பயம் ந ஹி; என்கிறார்.
அதாவது ஆஞ்சநேயா என்று அழைத்தாலே (பெயரை உச்சரித்தாலே) போதும், பேச்சு, வாக்கு, வாத விவாதங்கள் ஆகியவற்றில் வளமை பெற்று, அதி பயங்கரமான பயன்கள் போன்றவையிலிருந்து விடுபடலாம். மேலும் பேரழிவை உண்டாக்கும் அபாயங்களில் இருந்தும் விடுபட்டு, செய்யும் எச்செயலிலும் வெற்றி பெறுவார் என்கிறார்.
இன்றும் ஹிந்துஸ்தானி இசையில் ஸ்ரீ ஹனுமத் ராகா என்ற ராகம் பாடப் பட்டு வருகிறது. இது தவிர அஞ்சனி கல்யாண் போன்ற இராகங்களும் ஹனுமானால் பாடப் பட்டவை என்கிறார்கள்.
இப்போது இருக்கும் வயலின் கருவி, இராவணன் கி.மு.5000-ஆம் ஆண்டுகளில் உருவாக்கிய இராவணஸ்தம் என்ற கருவியின் அடிப்படையில் அமைந்தது என்றும் கூறுகிறார்கள். அதேபோல, இராவணன் வாசித்த ஹஸ்தவீணை / இராவண ஹஸ்தம் (தந்திகள் கொண்ட வீணை) ஏழாம் நூற்றாண்டில் இருந்ததாக அகழ்வாராய்ச்சி வல்லுனர்கள் கூறுகின்றனர். 22 அங்குல நீளமும், எட்டு கட்டைகள் (ஆக்டேவ்) கொண்டதும், குடம் தேங்காய் ஓட்டாலும், தண்டு மூங்கிலாலும், தந்திகள் உலோகத்தாலும், குதிரை வால் முடியாலும் செய்யப்பட்டு இருந்ததாகக் குறிப்புக்கள் புராணங்களிலும், நவீன ஆராய்ச்சி சான்றுகளிலும் உள்ளன. இப்படிப் பார்த்தால் வயலின் வாத்தியக் கருவி, மூன்று கட்டைகளும், நான்கு தந்திகளும், விரல் பலகை 5-1/4 அங்குலம் அளவுகளைக் கொண்டது. இது கணக்குப்படி நான்கால் பெருக்கும் போது இராவணஹஸ்தத்தின் அளவான 22 வருகிறது. அப்படியென்றால் அவர்களின் உருவ அளவை கற்பனை செய்து பாருங்கள். :)
இன்றும் இவ்வகை தந்தியுடைய கருவிகள் குஜராத் மற்றும் இராஜஸ்தானில் வாசிக்கப் படுகின்றன. புராணங்கள், இராவணனின் கொடியில் கூட வீணை முத்திரை இருந்ததாகக் குறிக்கிறது. போரில் இராவணன் மூக-வீணை (வாயாலும் வாசிக்கலாமாம்) வாசித்து எதிரிகளின் நம்பிக்கையைக் குலையச் செய்வானாம். சரி, மீண்டும் அனுமனுக்கு வருவோம்.
அஞ்சனையின் கணவரான கேசரி வானர அரசராவார். கேசரியின் தந்தை ப்ரிஹஸ்பதி. ப்ரிஹஸ்பதி தேவகுருக்களில் ஒருவர், நாரதரைப் போன்ற சமகால தேவ ரிஷி ஆவார். அனுமன் தன் தந்தையென்று சொல்லும் போதெல்லாம் இவரை முதலிலும் பின்தான் வாயுவையும் குறிப்பிடுகிறார்.
இராமாயணத்தில் அனுமனின் பிறப்பு பற்றிய குறிப்புக்களில், அயோத்தி அரசரான தசரதன் பிள்ளை வேண்டி புத்திர காமேஷ்ட்டி யக்ஞம் செய்யும் போது அக்னி தேவன் ஹோமத்தின் (யக்ஞம்) பலனாக (பிரசாதம்) பாயஸம் ஒன்றை, தசரதனின் நான்கு மனைவிகளுக்குப் பகிர்ந்து அளிக்குமாறு கூறி, கொடுக்கிறார். இந்நிலையில் சிவனை குறித்து கடுந்தவம் புரிந்த அஞ்சனைக்கு சிவரூபமாக ஒரு மகன் பிறப்பான் என்று வரமளிக்கிறார். தசரதன் கொண்டு செல்லும் பாயசத்தின் ஒரு பகுதியை கழுகு ஒன்று பறித்துச் செல்கிறது. இதில் சிதறிய துளிகளில் கொஞ்சம் காற்றில் கலந்து அஞ்சனையின் கைகளில் விழுகிறது. இதை அருந்தும் அஞ்சனைக்கு பின்னாளில் அனுமன் பிறப்பதாக சிவ புராணம் கூறுகிறது. பீமனும் வாயுவுக்குப் பிறந்ததாகக் கருதப் படுகிறான்.
மருத் வம்சத்தின் வாயுவின் மகன் என்பதால் வாயு புத்திரன் / மாருதி / பவன புத்திரன் என்றும், அஞ்சனை மகன் என்பதால் ஆஞ்சநேயன் என்றும், வானர அரசரான கேசரி மகன் என்பதான் கேசரி நந்தன் என்றும், வஜ்ஜிரம் (வைரம்) போன்ற உடலுடையவர் என்பதால் பஜ்ரங்கபலி (சமஸ்கிருதம்) என்றும், சிவரூபமானதால் மகாருத்ரன் என்றும் அழைக்கப் படுகிறார்.
மகாராஷ்ட்ராவில் உள்ள த்ரிம்பகேஷ்வர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பிரம்மகிரி மலை அனுமன் பிறப்பிடமாக கருதுகிறார்கள். சிலர் கர்நாடக மாநிலத்தில் (மாநிலமாக நவம்பர் 1, 1956-ஆம் ஆண்டு உருவானது) உள்ள ஹம்பியில் (இப்போது விஜயநகர சாம்ராஜ்யத்தின் வரலாற்று மிச்சங்கள்), பம்பை நதிக்கரையில் அமைந்துள்ள ரிஷ்யமுக பர்வதம் என்றழைக்கப்படும் மலையில் பிறந்ததாகவும் கருதுகின்றனர்.
மேலும் ஜார்கண்ட் மாநிலத்தில் கும்லா என்ற இடத்திலிருந்து 18 கி.மி. தொலைவில், ஆஞ்சன் என்ற கிராமம் ஒன்றும் உள்ளது, அஞ்சனை இருந்ததால் இப்பெயர் காரணம் என்கின்றனர். இன்றும் நான்கு கிலோமீட்டர் மலை உயரத்தில் குகைகள் இருப்பதாகவும், அங்கே அகழ்வாராய்ச்சிக்கு உகந்த பொருட்களும் கிடைப்பதாக கூறுகின்றனர். இந்தப் பொருட்களை பாட்னாவில் காட்சிக்கு வைத்துள்ளனர்.
தொன்மை மற்றும் சிறப்பு மிக்க வழிபாட்டுத் தலங்கள்:
- மிகத் தொன்மையான ஆஞ்சநேயர் சிலையொன்று கஜுராஹோவில் உள்ளது. இதை கி.பி.883-யில் 'காஹில் மகனான கோல்லாக்' என்பவர் நிறுவியதாக கல்வெட்டுக் குறிப்புள்ளது.
- ஜலந்தரில் உள்ள பில்லௌர் (பஞ்சாப்) என்ற 50362 கி.மி. பரப்பளவில் சங்கட மோச்சன் ஸ்ரீ ஹனுமான் மந்திர் உள்ளது. இக்கோவிலின் உயரம் 121 அடியாகும். இங்கு உயரமான 67 அடி ஆஞ்சநேயர் சிலை உள்ளது.
- மகாராஷ்டிரா NH-6-ல் அமைந்துள்ள நந்துரா என்ற இடத்தில் 105 அடியுள்ள சிலை உள்ளது.
- தமிழ்நாடு நாமக்கல்லில் சுயம்பு எனக் கருதப் படும் 18 அடி உயரமுள்ள சிலை உள்ளது. இது வளர்ந்து வருவதாகக் கூறுகிறார்கள். இதனால் இங்கு கூரை வேயப் படவில்லை.
- 108 திவ்ய க்ஷேத்திரங்களில் ஒன்றான சோழிங்கூர் / சோளிங்கர் (வேலூர் வாலாஜா தாலுக்கா) என்ற இடத்தில் யோக ஆஞ்சநேயர் சின்ன மலையில் அமைந்துள்ளார். இதற்கு 480 படிகள் உள்ளன. சங்கு, சக்கரம், ஜபமாலை, ஜப சங்காரம் ஏந்திய நான்கு கைகள் (சதுர்புஜம்) உள்ள ஆஞ்சநேயரை இங்கு காணலாம்.
- ராகிகுட்டா ஆஞ்சநேயர் கோவில் பெங்களூர் ஜே.பி.நகரில் உள்ளது. இக்கோவில் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது.
- நேருல், நவி மும்பையில் ஒரு தொன்மையான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. வெள்ளிக் கவசத்தோடு கூடிய சிலை காணப் படுகிறது.
- சென்னை நங்கநல்லூரில் 32 அடி உயரமுள்ள ஆதிவியாதிஹர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ஒரே கல்லில் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலை இங்கு மிகவும் சிறப்பு மிக்கது.
- ஒரிசா ரூர்கேலாவில் 72 அடி ஹனுமான் சிலை உள்ளது.
- ஆந்திரா குண்டூர் பொன்னூரில் 30 அடி ஹனுமான் சிலை உள்ளது.
- ராஜஸ்தான் தௌசா-வில் உள்ள ஹனுமானை டாகுர்ஜி (ஸ்ரீ மேஹந்திபுர்ஜி பாலாஜி)என்று அழைக்கிறார்கள்.
- ஆந்திராவில் பரிதலா என்ற இடத்தில் 135 அடி ஆஞ்சநேயர் உள்ளார். (2003 ஆம் ஆண்டு கட்டப்பட்டது)
- கும்பகோணத்தில் பஞ்சமுக அனுமான் - கிழக்கை நோக்கி குரங்கு முகம் (அ) ஹனுமான் (புத்தி-வெற்றி), தெற்கில் சிங்க முகம் (அ) நரசிம்மர் (வெற்றி-தைரியம்), மேற்கில் கருட முகம் (அ) விஷ்ணு (மாந்த்ரீகம் மற்றும் விஷம் நீக்க), தெற்கில் வராஹம் (அ) விஷ்ணு, வான் நோக்கி குதிரை முகம் (அ) ஹயக்ரிவர் (ஞானம் மற்றும் குழந்தைச் செல்வம்)
- இவற்றில் மிக முக்கியமாக ஹிமலாயாவில் உள்ள சித்ரகூட், அனுமன் ஓய்வெடுக்கும் இடமாகக் கருதப் படுகிறது. மலை முகட்டில் அமைந்துள்ள கோவிலும் ஹனுமான் தாரா என்று அழைக்கப் படும் நீர்வீழ்ச்சியும் ஒரு அற்புத அனுபவம்.
- பஞ்சவடியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்
சைனாக்கார சன் வுகாங்
குரங்கு அரசனான சன் வு குங் (Sun Wukong) என்பவன் கற்பனையில் உருவாக்கப்பட்ட நாயகனாகக் கொண்டு 1590-யில் மிங் டைனாஸ்டியின் போது எழுதப் பட்ட சீன இலக்கியங்களில் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். மிகவும் சுவாரசியமான எழுத்து நடைக்கு இவ்விலக்கியம் ஒரு சிறந்த உதாரணம். Journey to the West பி.டி.எப். கோப்பு இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ள கிளிக் செய்யுங்கள். நூறு அத்தியாயங்களுடன் மொத்தம் 1410 பக்கங்கள் இருக்கின்றன.
இந்த இலக்கியம் இவன் வானிலிருந்து விழுந்த ஒரு துகளிலிருந்து பிறந்ததாகக் கூறுகிறது. பேராற்றல் படைத்த வீரனாகவும், குரங்குகளிலேயே மிகவும் அழகானவனாகவும் (!!?), மிருகமாகவும், மனிதனாகவும், உருவத்தை பெரிதாக்கியும், சிரியதாக்கியும் கொள்ள முடியும் ஆற்றல் கொண்டும், 72 வகையான உருவத்தில் தன்னை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டும், கூடு விட்டு கூடு பாயும் சக்தியோடும் விளங்கினானாம். 13500 கேட்டி (jīn (or) catty i.e., 1 jīn = 8,100 kgs ) அளவுக்கு பாரம் தூக்கும் பலம் பெற்றவனாகவும், ஒரு நிமிடத்திற்குள் 108,000 Li (1 Li = 500 metres) தொலைவு தாண்டக் கூடிய ஆற்றலும் கொண்டிருந்தானாம். டாவோயிசம் (Taoism) கற்றவனாகவும் இருந்தானாம்.
டன் சங் ஜங் (Tan Sang Zang) என்றவன் (அரசன்!!) பயணம் செய்து கொண்டிருந்த போது இவனைச் சந்தித்து, இவனை காக்கின்றனர். இருவரும் நட்பாகி விட்டனர். இவனுக்கு மனிதர்கள் போல பேசவும் நடந்து கொள்ளவும் கற்றுக் கொடுத்தானாம். மேலும் சன்-னுக்கு மந்திர மாந்த்ரீக ஆற்றல்களையும் கற்பித்தானாம். Space Shifting என்று இப்போது அழைக்கப் படும் ஆகாய கமனம் (ஆகாய பயணம்/விண் நடமாட்டம்) செய்தலையும் சன் கற்றானாம். வழியில் இவர்கள் இருவரைச் சந்தித்து அவர்களும் கூட்டணியில் இணைகின்றனர்.
தன் உடலின் ஒவ்வொரு ரோமத்தையும் ஒரு உயிராகப் படைக்கும் வித்தையையும் கற்பித்தானாம். (கவனிக்க: லங்கா தகனத்திற்குப் பிறகு அனுமன் தன் வாலை கடலில் முழ்க வைத்து அணைக்கும் போது சிந்திய வேர்வைத் துளியிலிருந்து பாதாள லோக காப்பாளன் மகர-த்வஜன் பிறந்ததாக இராமாயணம் கூறுகிறது)
இவனால் ஒரே சமயத்தில் பல தலைகளையும், பல கைகளையும் ஒரே உடலில் உருவாக்க முடியுமாம். (கண் கட்டு வித்தையோ??!!) நீருக்குள்ளும், நெருப்பிலும் எந்த பாதிப்பும் இல்லாமல் கடக்க முடியுமாம். இவன் நினைத்த மாத்திரத்தில் கொதி நீர்ச் சுனையிலும், ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரிலும் மூழ்கிக் குளிக்க முடியுமாம். இவனுக்கு பச்சிலை வைத்தியம் தெரிந்திருந்ததாம். ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் ஒரு அரசனனின் உயிர் காக்க இந்த ஆற்றலைப் பயன் படுத்தினானாம். (துரோணகிரியில் இருந்த, லக்ஷ்மணனைக் காத்த பச்சிலையோ???) இவனை பீ மா வென் / Bi Ma Wen (பீமவான்!!) என்றும் கூறுகிறார்கள். இவன் குதிரைகள் அடக்கவும் அவற்றை தன் கட்டுப் பாட்டில் கொண்டுவரவும் ஆற்றல் மிக்கவனாம். ஒருமுறை இவன் கடலைக் கடந்து கொண்டிருந்த போது நான்கு டிராகோன்-களைக் கொன்றானாம்.
சன் வுகாங் பெருவிழா (Monkey God Festival) சீனாவில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதங்களில் கொண்டாடப் படுகிறது.
கண்டோனிய மொழியில் ஸ்யுன் இங் ஹூங் (Syun Ng Hung) என்றும், கொரியாவில் சொன் ஒஹ் கோங் (Son Oh Gong) என்றும், வியட்நாமில் டான் இங்கோ கோங் (Ton Ngo Khong) என்றும், ஜப்பானில் சொன் கோகூ (Son Goku) என்றும், இந்தோனேசியாவில் சன் ஹோ காங் (Sun Go Kong) என்றும் அழைக்கப்படுகிறான்.
( ^_^ )
.
14 comments:
இது இந்திய கப்ஸா.. அது சீன கப்ஸா... அவ்வளவுதான் வித்தியாசம்... :)
//அனுமன் கிஷ்கிந்தையில் பேசும் மொழியான தெலுங்கு/கன்னடம் ஆகிய மொழிகள்//
திராவிடர்கள் ”குரங்குன்னு” கன்ஃபார்ம் பண்ணியதற்கு நன்றி!
// அன்புசிவம் said...
இது இந்திய கப்ஸா.. அது சீன கப்ஸா... அவ்வளவுதான் வித்தியாசம்... :)//
அதையெல்லாம் பார்த்தா தொழில் பண்ணமுடியுமா தல!
குமரி மாவட்டம் சுசீந்தரத்தை விட்டுட்டீங்களே விதூஷ்? (இந்த மாதிரி விஷயங்களை எங்கேயிருந்து புடிக்கிறீங்க?)
பெங்களூரில் H.S.R. Layout (ஒளிப்படம் என் பதிவில் எப்போதோ வெளியிட்டிருக்கிறேன் என நினைக்கிறேன்) மற்றும் ISKON temple அருகே (நாளை செல்ல இருக்கிறேன் - ஒளிப்படம் எடுத்தால் பிறகு என் பதிவில் வெளியிடுகிறேன்) என இன்னும் ரெண்டு famous ஆஞ்சநேயர் கோவில்கள் இருக்கின்றன
//December 4, 2009 5:59 PM
வால்பையன் said...
அதையெல்லாம் பார்த்தா தொழில் பண்ணமுடியுமா தல!//
அதானே ! அன்பு ”சிவம்” (?)
விதூஷ் ...
எவ்வளவு உழைப்பு ஒவ்வொரு இடுகைக்கும் !!!
கிடைத்த தகவலகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி விதுஷ்
ஹலோ.. நான் தமிழே தெரியாம தள்ளாடிக்கிட்டு இருக்கேன், நீங்க பல மொழி களிலே பின்னி படல் எடுக்குறீங்க
அன்புசிவம்:
முதலில் நன்றி. கற்பனை என்பதும் (உங்கள் வார்த்தையில் கப்ஸா) ஒரு சில நிகழ்வுகளைக் கொண்டு புனைவதே. இவர்கள் நிஜமாககக் கூட இருந்திருக்கலாம். இல்லையென்றாலும், இவற்றை கற்பனை செய்தவரின் மன உலகம் பாராட்டத்தக்கது இல்லையா!! :)
வால்:
:))
கல்யாணி சுரேஷ்: அட ஆமாம். சுசீந்திரம். மறந்து விட்டது. :(
எல்லாம் வாசிப்புக்களின் வெளிப்பாடுதான்.
நந்தா:
உங்கள் ஸ்தலபுராணங்கள் கூட இரசிப்பானவை. நான் கூட அதே மாதிரி எழுத முயற்சித்து :( புஸ் ஆகிப் போனது :))
நேசன்: ம்ம்ம்..நீங்களும் நடுவர்களில் ஒருத்தரோ!! உரையாடல் கவிதைக்கு நேத்தெல்லாம் உங்கள் விமர்சனத்தை எதிர்பார்த்தேன். :))
வாசிப்புத்தான். உழைப்பெல்லாம் இல்லை. நினைவில் ரொம்ப உறுத்துவதை மட்டும் எழுதுகிறேன்.
நசரேயன்: :)) இங்கிலீஷ் மட்டும்தான் . இதில் என்ன பல மொழி
ரொம்பவும் மெனக்கெட்டு உழைத்து,
எங்களுக்கு கருத்துக்களை வழங்கியமைக்கு நன்றி!
-கேயார்
நல்ல தொகுப்பு.
ஜகார்த்தா (இந்தோனேஷியா)வில் ஒரு பெரிய ஹனுமான் சிலை நகரின் நடுவில் இருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எப்போதும் சட்டைப் பையில் ஹனுமான் விக்ரஹம் / பொம்மை வைத்திருக்கிறாராம்.
தகவல்கள் அருமை. இவ்வளவு விவரங்கள் பகிர்வதற்கு எவ்வளவு விவரங்கள் தெரிந்திருக்க வேண்டுமென்று நினைத்தால், உன் ஆர்வம் வியப்பாயிருக்கிறது. :)
இல்லையென்றாலும், இவற்றை கற்பனை செய்தவரின் மன உலகம் பாராட்டத்தக்கது இல்லையா!! சத்தியமான வார்த்தை. புராணக் கதைகளை பகடி செய்து ‘பெருமைப்’ பட்டுக் கொள்பவர்களைப் பார்த்து தோன்றும்.. நாம எழுதறதுக்கே இவ்வளவு பீலிங்.. பல நூறு வருஷமா நிக்கற ‘கற்பனைகளுக்கு’ அப்போ மனசார சல்யூட் அடிக்க வேனாமா.. ஆஸ் எ ரைட்டரா..
எவ்வளவு முகம் இருக்கு வித்யா உங்களுக்கு.
சேம்,சேம்,பப்பி சேமாக உணர வைத்து விடுகிறது உங்களின் இந்த உழைப்பும் விபரங்களும் சகா.
நம்ம குண்டுசட்டிக்கும் வர்றீங்களே.அதுவே பெருமைதான் எனக்கு.
Post a Comment