தோபி காட் - ஹிந்தி சினிமா


நேற்று ஏதோ ஒரு பஸ்ஸில் ஆதவனுடன் பேசும்போது "தோபி காட்" பற்றிய பேச்சு வந்தது. அப்படி என்ன அந்தப் படத்தில் இருக்கும் "லிங்கிங் நாட்" என்று கேட்டார்.

ஒன்றரை மணிநேரம். பயங்கரமான மௌனத்துடன் கூடிய மெதுவான ஆர்ட் ரகத் திரைப்படம், மிகவும் மெல்லிய பின்ணணி இசை, குறிப்பாக டைட்டில் பி.ஜி. சூப்பர்ப். ரொம்ப நாளாக ரிங்க்டோனாக வைத்திருந்த "ஃபேஷன்" தீம் ம்யூசிக்கை மாற்ற வைத்த பெருமை இந்த பி.ஜி.க்கு உண்டு.

பெரும்பாலும் மௌனம், கொத்துக் கொத்தாக வீடுகள், இருட்டான சாலைகள், என்றாலும், ஏதோ ஒரு ஈர்ப்பு படம் முழுதும் நம்மையும் அந்த மக்கள் கூட்டத்தில் ஒருவராகவே உணர வைக்கிறது. செண்டிமெண்டல் ட்ராமாக்கள், கூச்சல்கள் எதுவுமே இல்லாது செம க்ளாஸ் மூவி. மும்பை போன்ற பெரு நகரங்களில் கூட்டத்திற்கு நடுவே இருந்தாலும் கேட்பாரின்றி தனிமையிலேயே பெரும்பாலானோர் வாழ நேரிடும் சூழலை சப்டிலாக உணர்த்துகிறது. அதே சமயம் பெரு நகரங்களில் அனைத்து சமூகத்தினரும் ஏதோ ஒரு விதத்தில் இயங்கும் ஒவ்வொரு செயலும் மற்ற அனைவரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது.

மொத்தம் நான்கு முக்கியக் கதாபாத்திரங்கள். துணையாக இரண்டு தொட்டிச் செடிகள், (இரட்டை தம்ளர் வகை) டீ கிளாஸ், டைனிங்க் டேபிள்-சேர்கள், முக்கியமாக அந்த ஃபேன். பேசவேபேசாது எப்போதும் வெறுமையாக வெறித்துக் கொண்டிருக்கும் நைட்டி அணிந்திருக்கும் பாட்டி, அமீர்கான் கடைசியில் அழும்போது மௌனமாகவே கொடுக்கும் அந்த பரிதாப லுக்ஸ்.... தோபி காட்டில் ஷய் எடுக்கும் ஃபோட்டோக்கள், இரானி கஃபேயில் "யூ லுக் ஹேண்ட்ஸம்" என்று ஷய் சொல்லும்போது முன்னா கொடுக்கும் எக்ஸ்ப்ரஷன்ஸ், மழை, ஜன்னல் வழியாகத் தெரியும் காட்சிகள், அந்த ஹோம் வீடியோவில் வரும் தாதியின் மகள் வனிதா அம்மாவுக்கு பின் ஒளிந்து கொள்ளும் காட்சி, மும்பை ரயில் வீடியோக்கள், யாஸ்மின் கொஞ்சம் கொஞ்சமாக ஹாண்ட் ஹெல்ட் வீடியோவை ஆடாமல் கையாளக் கற்றுக் கொண்டு விட்டாள் என்று உணர்த்தும் ஆடாத ஹோம் வீடியோ காட்சிகள், முன்னா ஒரு மழை பெய்யும் இரவில், கூரை ஒழுகும்போது, தன் மெத்தையைத் தூக்குகையில் கட்டிலாக மாற்றப்பட்டிருக்கும் க்ரேட்ஸ் என்று ரசிக்க நிறையா இருக்கு.. ஒவ்வொன்றுமே ரசனைக்குரிய காட்சிகள்தான்...

அருண் என்ற மிட்டில்ஏஜ்டு ஓவியனாக அமீர்கான், விவாகரத்தான பின் ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பை வந்து செட்டில் ஆகுகிறான்.

மும்பையில் பணக்காரர்கள் வீட்டுக்கு வந்து துணிகளை அயர்ன் செய்ய எடுத்துப் போகும் பிகாரி சலவைத் தொழிலாளி "முன்னா". முன்னாவுக்கு எல்லா மெட்ரோ அடித்தட்டு இளைஞர்கள் போலவே நடிகனாகும் ஆசை.. அதுவும் சல்மான்கான் போல :-). தன் சகோதரனைப் போல முறையற்ற வழிகளில் சம்பாதிக்காமல், நேர்மையாகச் சம்பாதிப்பதை விரும்பும் முன்னா, அப்பார்ட்மெண்ட்களில் எலிகளை அடித்துக் கொல்வது, ரயிலில் அடிபட்டு இறப்போரை நகர்த்திக் கிடத்துவது போன்றவைகளையும் கூடுதல் பணம் சம்பாதிக்கும் பொருட்டு செய்து வருகிறான் முன்னா. முன்னாவாக ப்ரதீக்பப்பார் (ஸ்மிதா பாட்டீல் / ராஜ்பப்பார் மகன்) அறிமுகம் - வாவ்.. என்ன ஆக்டிங். உண்மையிலேயே பிறவிக் கலைஞன் - ஸ்மிதாவின் அதே ஆன்ஸ்க்ரீன் ஆளுமை - ஸ்மிதாவின் மறு ஜன்மம் போலிருக்கு - ப்ரதீக் அற்புதமான ஆர்டிஸ்ட்.. நல்ல வாய்ப்புக்கள் கிடைத்தால், இன்னொரு குருதத் (கொஞ்சம் "ச்சோட்டி ஸீ பாத்" அமோல் பாலேக்கரும்தான்) நமக்கு கிடைப்பார்.

என் ஆர் ஐ பேங்கராக நீண்ட விடுப்பில் மும்பை வந்துள்ள பணக்காரப் பெண் ஷய் (மோனிகா). திரைக்கதை முழுதுமே ஒரு ஃபோட்டோகிராஃபராக இருக்கும் இந்தப் பெண்ணைச் சுற்றித்தான் நகர்கிறது. இந்தப் பெண் கிட்டத்தட்ட எல்லா ஃப்ரேம்களிலும் இருக்கிறார்.

ஜன்னல் தொட்டிச் செடிகளையும் ஆர்ட் பேப்பர்களையும் தன் சொத்து போல கூடவே வைத்திருக்கும் அருண், ஆர்ட் கேலரியில் ஷய்-யை சந்திக்கிறான். இருவரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மதுவருந்துகிறார்கள், உறவும் கொள்கிறார்கள். காலையில் அருண் தன் செய்கைக்காக வருந்துகிறான். ஆனால் ஷய்-யோ அவன் மீது தனக்கு ஈர்ப்பு உண்டாகிவிட்டதாகக் கோபப்படுகிறாள். அருண் இவளைத் தவிர்க்கும் பொருட்டு வீடு மாற்றிச் செல்கிறான். வீடு மாற்றம் குறித்து முன்னாவிடம் சொல்லிவிட்டுச் செல்கிறான் அருண்.

அதற்குப் பின் அருண் என்னவானான் என்று ஷய் தேடிச் செல்வதும், அதற்கு முன்னா உதவுவதும், அருண்-னுக்கு நிகழ்ந்தவைகளுமே கதையை இட்டுச் செல்கிறது.

அருண் புதிதாகப் போகும் அபார்ட்மெண்ட்டிற்குள் நுழையும் போதே மௌனமாய் உறைந்திருக்கும் ஒரு பாட்டியைக் கடந்து போகிறான். அது ஒரு அற்புதமான காட்சியமைப்பு. வீட்டை செட் செய்யும் போது அருணுக்கு ஏற்கனவே அங்கிருந்தவர்கள் விட்டுச் சென்ற மூன்று வீடியோ காஸட்டுகளும், ஒரு வெள்ளிச் செயினும், மோதிரமும் கிடைக்கிறது. "அவற்றை யாரும் பெற்றுக்கொள்ள வரமாட்டார்கள், வீசிவிடு" என்று சொல்கிறார் வீட்டு ஓனர்.

அந்த வீடியோக்களை பார்க்க ஆரம்பிக்கிறான் அருண். சாதாரணமாகத் துவங்கும் அந்த வீடியோ, உத்தரபிரதேசத்தின் மல்யாபாத் கிராமத்திலிருந்து திருமணமாகி வந்த ஒரு இளம் பெண், யாஸ்மின், தன் சகோதரனுக்காக, மும்பையை சுற்றிக் காட்டிக் கொண்டே பேசிய கடிதங்கள் அவை. அந்த வீடியோக்கள் பார்ப்பது அருணின் தினசரி வேலையாகவே ஆகிவிடுகிறது. ஒரு அடிக்ட் போல அவற்றை பார்த்துக் கொண்டே நேரங்களைக் கழிக்கிறான். அவனுடைய புதிய ப்ராஜக்ட் ஒன்றிற்காக அதைப் பார்த்து பல ஓவியங்களும் வரைகிறான்.

இதற்கிடையே முன்னா ஷய் வீட்டிற்கும் தோபியாகச் செல்கிறான். இருவரும் நட்பாகிறார்கள். முன்னா ஷய்-யிடம் ஃபோட்டோஷூட் ஆல்பம் செய்து தரச் சொல்லிக் கேட்கிறான். அவன் மும்பையை சுற்றிக் காட்டியும், தோபி காட் (வண்ணாந்துறை) பகுதிக்கு கூட்டிச் சென்றாலும் ஃபோட்டோஷூட் செய்வதாகக் கூறுகிறாள் ஷய். அதே போல ஃபோட்டோக்களும் (போர்ட்ஃபோலியோ) தயாராகின்றன. முன்னா அவளைக் காதலிக்க ஆரம்பிக்கிறான். ஸ்டேட்டஸ் இடைவெளி காதலை வெளிப்படுத்துவதில் அவனுக்குத் தடையாக இருக்கிறது. பேச்சினூடே அருணைப் பற்றிக் கேட்கிறாள் ஷய். பின்பு அவளுக்கு அருணின் முகவரியைக் கொடுக்கிறான் முன்னா. அருணை ரகசியமாக பின் தொடர்ந்து ஃபோட்டோ எடுக்கிறாள் ஷய். ஒரு நாள் ஷய்-யை வழியில் பார்த்து விடுகிறான் அருண். வீட்டிற்கு அழைத்துச் சென்று அவளுக்கு மீண்டும் அறிவுறுத்துகிறான். அச்சமயம் சலவைக்குத் துணிகள் எடுக்க வரும் முன்னா இருவரையும் பார்த்துவிட்டு தவறாக நினைக்கிறான்.

ப்ரொட்யூசரை சந்திக்கச் செல்லும் இரவு, அவன் சகோதரன் "தாதா"-வால் கொல்லப் படுகிறான். முன்னா அன்றிரவே மீண்டும் எலி அடிக்கப் போகிறான். ஃபோட்டோ எடுக்க வரும் ஷய் அவனை எலி அடிக்கும் போது பார்த்து விடுகிறாள். அவன் ஓடிப் போகிறான்.

அந்த வீடியோவில் இருக்கும் நான்காம் கேரக்டரான யாஸ்மின் என்ன ஆனாள்? என்பதற்கு திரைப்படத்தில் பதில் இருக்கிறது.

ஷய் என்னவானாள்? அருண் மீண்டும் வீடு மாறிச் செல்கிறானா? சிட்னியில் நடக்கும் ஆர்ட் ஷோவின் பயனாக அருண் குடும்பத்துடன் இணைகிறானா? முன்னா என்னவானான்? என்றெல்லாம் கதை முடிக்கப் படாமல் இருப்பது, "ஹேப்பி ஹேப்பி" "சுபம்" "அண்ட் தே லிவ்ட் லாங் ஹேப்பிலி வித் ஈச் அதர்" கும்பலாக நின்றுகொண்டு கலகலவென்று சிரிப்பது, என்றெல்லாம் நாம் பார்த்துப் பழகியதால், "ஃபில்ம் அபி பாக்கி ஹை" உணர்வே இருக்கிறது. ஆனால் மெட்ரோ நகரங்களில் எல்லாம் ஹேப்பி ஹேப்பியாகவா இருக்கிறது?

திரைப்படம் பார்த்து முடித்ததும் அமீர்கான், ஷய், அந்தப் பாட்டி, முன்னா, அந்த ஃபேன் தொங்கிக் கொண்டிருக்கும் ஹூக், மும்பை போலவே உங்கள் மனமும் வெறுமையாக, சூழலும் வெற்றிடமாக ஆகிவிட்டிருப்பது போல நீங்கள் உணர்ந்திருந்தால், இந்தப் படம் வெற்றிப் படம்தான். கமர்ஷியலாக எப்படியோ, அமீர்கானுக்கு இது இன்னொரு தாரே ஜமீன் பர். நல்ல படம்... ஆக்சுவலி, ப்ரதீக்பப்பார் படத்தில் அமீர்கான் என்றுதானே சொல்லணும்.. இல்ல? film-maker's movie. :)

2 comments:

Prathap Kumar S. said...

It's a classic movie...

R. Gopi said...

Excellent review.

I watched twice in the flight from London to Bangalore today.

I too want to write. Let us see.

Post a Comment