பெரியண்ணன் - 1 - முன்ஷி பிரேம்சந்த்


http://anuvaadh.blogspot.com/2011/03/blog-post.html
என் பெரியண்ணன் என்னைவிட ஐந்து வருடம் மூத்தவர். ஆனால் பள்ளியிலோ மூன்று வருடம் சீனியராக இருந்தார். நான் பள்ளிப் படிப்பு ஆரம்பித்த வயதிலேயேதான் அவரும் படிக்க ஆரம்பித்தார்; ஆனால் கல்வி மாதிரியான மகத்துவமான விஷயங்களில் அவசரப்படுவதைத் துளியும் விரும்பாதவராக இருந்தார். அஸ்திவாரம் மிகப்பலமாக இட்டு அதன் மீது ஆடம்பர பங்களா உருவாக்குவதில் ரொம்ப ஆர்வம் இருந்தது. ஒருவருடத்தில் முடிக்க வேண்டியதை இரண்டு வருடங்களில் நிதானமாக செய்து முடித்தார். சில முறை மூன்று வருடங்களும் ஆகிப் போனது. அஸ்திவாரம் திடமாக இல்லையென்றால் கட்டிடம் எப்படி உறுதியாக இருக்கும்.

நான் இளையவன். அவர் பெரியவர். எனக்கு ஒன்பது வயது. அவருக்கு பதினான்கு வயது. என் மீது அதிகாரம் செலுத்துவதும் என்னைக் கண்காணிப்பதும் அவரது பிறப்புரிமையாகவே இருந்தது. அவரது ஆணைகளை சட்டம் என்று நினைத்துக் கட்டுப்பட்டு இருப்பதே என் கௌரவத்தைக் காத்தது.

அவர் இயல்பாகவே படிப்பாளியாக இருந்தார். எப்போதும் ஏதோ ஒரு புத்தகத்தைத் திறந்து வைத்துக் கொண்டும், மூளைக்குக் கொஞ்சம் ஓய்வு தர நோட்டுப் புத்தகத்தின் மார்ஜின் பகுதிகளில் பறவைகள், நாய்கள், பூனைகளின் படங்களை வரைவார். சில தரம் ஒரே வார்த்தை அல்லது பெயரை பத்திருபது முறை எழுதி விடுவார். சிலமுறை ஷேர்(ஷாயரி)-க்களை இன்னும் அழகான வார்த்தைகளை மாற்றிப் போட்டு காப்பியடிப்பார். சிலமுறை அர்த்தமேயில்லாத, கோர்வை இல்லாத வரிகளை யாருக்கும் புரியாதபடி எழுதி விடுவார். இப்படித்தான் ஒருதரம் இப்படியொரு ரைட்டிங் ஸ்டையிலைக் கண்டேன் - ஸ்பெஷல், அமீனா, பாயியோ-பாயியோன் (சகோதரர்களே), தர்-அசல் (இன்-ஃபாக்ட்), பாயி-பாயி, ராதேஷ்யாம், ஸ்ரீயுத் ராதேஷ்யாம், ஒரு மணி வரை - என்றெல்லாம் எழுதி, அதன் பின், ஒருவரது முகம் வரையப்பட்டிருந்தது. இந்தப் புதிருக்கான அர்த்தம் எதையாவது புரிந்து கொள்ளவேண்டும் என்று ரொம்ப முயற்சி செய்தேன்; ஆனால் தோற்றேன். மேலும் அதைப் பற்றி அவரிடம் கேட்கும் தைரியமும் வரவில்லை. அவர் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். நான் ஐந்தாம் வகுப்பு. அவருடையப் படைப்புக்களைப் புரிந்து கொள்வது என்பது எனக்கு பிஞ்சிலே பழுப்பது போன்றது மாதிரி இருந்தது.

என் மனம் படிப்பில் சுத்தமாய் லயிக்கவே இல்லை. ஒரு மணி நேரம் புத்தகத்தை வைத்துக் கொண்டு உட்காருவது என்பதே மலைப்பாயிருந்தது. வாய்ப்புக் கிடைத்ததுமே ஹாஸ்டலிலிருந்து கிளம்பி மைதானத்துக்குப் போய்விடுவேன், சில நேரம் கல்லெறிந்து விளையாடியும், பேப்பர் பட்டாம்பூச்சி பறக்கவிட்டும் பொழுது போக்கினேன். எப்போதாவது நண்பர்களும் சேர்ந்து கொண்டால் கேட்பானேன்? குட்டிச் சுவற்றின் மேலேறிக் கீழே குதிப்பது, கேட்டில் ஏறி முன்னும் பின்னுமாய் மோட்டார்கார் சவாரி செய்து குதூகலிப்போம். ஆனால் அறைக்குள் வந்ததுமே அண்ணனின் ரௌத்திரமான ரூபத்தைக் கண்டதும் சந்தோஷமெல்லாம் வற்றி பிராணன் ஒட்டிவிடும். அவரது முதல் கேள்வி - "எங்கே போயிருந்தாய்?". எப்போதும் இதே கேள்விதான், இதே அதட்டல் குரல்தான்; என்னிடம் இதற்கு வெறும் மௌனம் மட்டுமே பதிலாக இருந்தது. கொஞ்சம் வெளியே விளையாடி விட்டு வந்தேன் என்று சொல்ல ஏனோ வாயில் வார்த்தைகளே வருவதில்லை. நான் மௌனமாயிருப்பதனால் என்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டதாகக் கருதி, வாயில் வந்த வார்த்தையெல்லாம் சொல்லித் மரியாதை செய்வதைத் தவிர வேறேதும் அண்ணனுக்குத் தெரியாது.

இப்படி ஆங்கிலம் படித்தாயானால் வாழ் நாள் முழுதும் படித்தாலும் ப்ரயோஜனப்படாது. யார் வேண்டுமானாலும் படிக்க ஆங்கிலம் படிப்பது ஒன்றும் விளையாட்டு இல்லை, அப்படியிருந்தால் சும்மா போகிறவன் வருகிறவன் எல்லாம் ஆங்கிலத்தில் பண்டிதனாகியிருப்பான். இங்கே ராப்பகலாய் ரத்தம் கொதிக்கக் கண்விழித்துப் படிக்க வேண்டியதாயிருக்கிறது, அப்போதுதான் ஏதோ கொஞ்சம் படிப்பு வரும். அப்போதும் என்ன பெரிய படிப்பா வரும், ஏதோ சொல்லிக்கொள்ளும்படியாக கொஞ்சம்தான் வரும். பெரிய பெரிய வித்வான்கள் கூட ஆங்கிலம் சரியாக எழுத முடியாமல் இருக்கிறார்கள். பேசுவதெல்லாம் ரொம்ப கஷ்டம். நீ என்ன இத்தனை சொங்கித்தனமாக (கோந்தா - நத்தை, ஸ்னக்4) இருக்கிறாய், என்னைப் பார்த்துக் கூட பாடம் கற்றுக்கொள்ள மாட்டேனெங்கிறாய். நான் எவ்வளவு கஷ்டப்பட்டுகிறேன் பார், உன் கண்ணையும் பார்த்துக் கொள், அப்படி உன்னால் பார்க்க முடியவில்லை என்றால், அது உன் கண்ணின் குற்றம், உன் புத்தியின் குறை. எவ்வளவோ திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் நடக்கின்றன, என்றாவது நான் போவதை நீ பார்த்திருக்கிறாயா? தினமும் கிரிக்கெட் ஹாக்கி மாட்சுகள் நடக்கின்றன. அந்தப் பக்கம் கூடப் போவதில்லை.எப்பொழுதும் படித்துக் கொண்டே இருக்கிறேன், அப்படியும் ஒவ்வொரு வகுப்பிலும், இரண்டிரண்டு மும்மூன்று வருடங்கள் கிடக்கிறேன், இப்படி விளையாட்டில் நேரவிரயம் செய்து நீயெல்லாம் தேர்ச்சி பெற முடியும் என்று எப்படி நினைக்கிறாய்? எனக்காவது இரண்டு-மூன்று ஆண்டுகள்தான் ஆனது, நீ வாழ்நாள் முழுதும் இதே வகுப்பில் கிடந்தொழியப் போகிறாய். இப்படித்தான் காலங்கழிக்கப் போகிறாயென்றால், நீ திரும்ப ஊருக்குப் போய் கில்லி-டண்டா (கிட்டிப்புல்) விளையாடிக் கொண்டிரு, தாத்தன் கஷ்டப் பட்டு சம்பாதித்ததையெல்லாம் பாழாக்குகிறாய்?

இந்த வசவுகளைக் கேட்டதும் கண்ணீர் பெருக ஆரம்பித்துவிடுவேன். என்னதான் பதில் சொல்வது? நான் தானே தவறு செய்தேன், வசவு வாங்க வேறொருவரா வருவார்? பெரியண்ணன் உபதேசம் பண்ணுவதில் பெரிய நிபுணராக இருந்தார். ரொம்ப பெரிய பெரிய விஷயங்களையெல்லாம் பேசிப்பேசி, பாணங்களையெல்லாம் வீசி என்னை துண்டுத்துண்டாக்கி என் நம்பிக்கையெல்லாம் போகும்படியாக்கி விடுவார். இப்படியாக உயிரைவிட்டு உழைக்கும் ஆற்றலைப் பெற்றுக் கொண்டிருந்தேன், சிலசமயம் நிராசையில் வீட்டுக்கேத் திரும்பிப் போய்விடலாம் என்று தோன்றும். என் கைக்கெட்டாத ஒன்றைப் போய் எதற்கு முயற்சி செய்து வாழ்க்கையை வீணடித்துக் கொள்ள வேண்டும். நான் முட்டாளாக இருப்பதில் எனக்கு ஏற்புடையதாக இல்லை; ஆனால் அவ்வளவு கடினமாய் உழைப்பது பற்றியும் நினைத்தால் தலைச்சுற்றியது. ஒன்றிரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் நிராசை மேகங்கள் விலக ஆரம்பிக்கும், அதன் பிறகு நான் நன்றாகப் படிப்பேன் என்று உறுதியாய் முடிவெடுத்துக் கொள்வேன். சட்புட்டென்று ஒரு டயம் டேபிள் தயார் செய்வேன். ஒரு வழிகாட்டியோ, ஸ்கீமோ எதுவும் தயார் செய்யாமல் எப்படி வேலையை ஆரம்பிப்பது? நான் போட்டு வைக்கும் டயம் டேபிளில் விளையாட்டுக்கான நேரம் காணாமற் போய் விடும். விடியற்காலையில் எழுந்திருத்தல், ஆறு மணிக்கு கை-கால் கழுவுதல், காலை உணவுக்குப் பின் படிக்க வேண்டும். ஆறு மணியில் இருந்து எட்டு மணிவரை ஆங்கிலம், எட்டில் இருந்து ஒன்பது வரை கணக்கு, ஒன்பது முதல் ஒன்பதரை வரை வரலாறு, அப்புறம் சாப்பாடு, பின்பு பள்ளிக்குச் செல்லல். மூன்றரை மணிக்கு பள்ளியில் இருந்து திரும்பி வந்து அரை மணி நேரம் ஓய்வு, பின் நான்கு முதல் ஐந்து வரை பூகோளம், ஐந்து முதல் ஆறு மணிவரை இலக்கணம், அரைமணி நேரம் ஹாஸ்டலுக்கு முன்னால் உலாவுதல், ஆறரை மணி முதல் ஏழு மணி வரை ஆங்கில காம்போஷிசன் அப்புறம் சாப்பிட்டு விட்டு எட்டில் இருந்து ஒன்பது வரை மொழிபெயர்த்தல், ஒன்பது முதல் பத்து வரை ஹிந்தி, பத்திலிருந்து பதினொன்று வரை பல்வேறு விஷயங்கள் பற்றியும் படித்து விட்டு பின் தூக்கம்.

ஆனால் டயம் டேபிள் தயாரிப்பது என்பதிருக்கட்டும், அதை நடைமுறைப்படுத்துவதுதான் விஷயமே இருக்கிறது. முதல் நாளே அதை அலட்சியம் பண்ணுவது ஆரம்பித்துவிடுகிறது. கண்ணுக்குத் தெரியும் அந்த பச்சை பசேல் என்ற மைதானம், மெல்லியதாய் வீசும் தென்றல், தாவித் தாவி துள்ளும் ஃபுல்பால், கபடியின் அந்த குரல்கள், வாலிபாலின் அந்த வேகம் என்னை அஞ்ஞாதமாக என்னையேயறியாமல் என்னை இழுத்துச் செல்லும். அங்கே போனதும் நான் எல்லாவற்றையும் மறந்து விடுகிறேன். பிராணனையெடுக்கும் அந்த டயம்டேபிள், முழியைப் பெயர்க்கும் அந்தப் புத்தகங்கள், எதுவுமே நினைவிருப்பதில்லை. மீண்டும் பெரியண்ணனுக்கு போதனை செய்யும் வாய்ப்பு கிடைத்து விடுகிறது. அவர் நிழலைக் கண்டாலே நான் ஓடி ஒளிவேன், அவர் கண்ணில் கூட படாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்வேன். அறைக்குள் நுழையும்போது கூட பூனை போலக் காலடி எடுத்துவைப்பேன். அவர் பார்வை என் மேல் பட்டால் கூட செத்தேன். எப்போதும் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருப்பது போலவே இருந்தது. அழிவுக்கும் மரணத்திற்கும் இடையே கூட மனிதனின் மோக மாயையின் பிடியில் கட்டுண்டு இருப்பது போல நான் வசவுகளையும் உபதேசங்களையும் விழுங்கி விட்டு விளையாடுவதைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.

-2- அடுத்து

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

interesting.

pudugaithendral said...

முன்ஷி ப்ரேம்சந்திக்கி அமர் கஹானியான் மாதிரி இருக்கும் போல இருக்கே!!!

அடுத்த பதிவுக்கு மீ த வெயிட்டிங்

Post a Comment