வழித்துணை


இரவு பதினொன்று ஆகி விட்டது. வேலையை முடித்துக் கொண்டு கிளம்பினேன். சொந்தப் பயணமாக திருச்சியில் இருந்து கரூருக்குப் போய் அன்றிரவே திரும்பி வரவேண்டிய சூழலில் வேகன் ஆர் வண்டிப் பிரயாணம் கொஞ்சம் அலுப்பூட்டுவதாகவே இருந்தது.

எதிர் வரும் ஒன்றிரண்டு லாரிகளைத் தவிர வேறு ஏதும் இல்லாத இருள். வழியில் ஒரு டீக்கடையில் போகும் வழி விசாரித்துக் கொண்டேன். வடக்கால தெக்கால கிழக்கால என்று அஷ்டதிக்கையும் வலது இடதாக பிரித்து சொல்லினார் டீக்கடைக்காரர். நன்றி சொல்லி காரை உசுப்பி, காஸ் தான் ஃபுல்லாக இருக்கிறதே என்ற தெம்பில், என்ஹெச்67 வருவதற்கான சாலை என்றே நம்பிக் கொண்டு ஏதோ ஒரு உந்துதலில், முதல் மண் சாலையை தேர்ந்தெடுத்துத் திரும்பினேன். ஏறத்தாழ பத்து-பதினைந்து கிலோமீட்டர் கடந்ததும்தான் வழி மாறி என்ஹெச்45 திசை நோக்கி வந்து விட்டது உரைத்தது. தூக்கம் வேறு கண்ணை சுற்றியது. புளிய மரம், அரச மரம், வேப்ப மரம் என்று காரைக் கடந்து கடந்து ஓடிக் கொண்டே இருந்தன.

ஹெட்லைய்ட் வெளிச்சம் மட்டும். நட்சத்திரங்கள் கூட முணுமுணுக்காத நிசப்தம். கொஞ்சம் கொஞ்சமாக இந்தத் தனிமையை ரசிக்க ஆரம்பித்தது மனசு. மண்சாலை

மாந்துளிர் கலர் ஸ்விஃப்ட் ஒன்று சரக்கென்று ஓவர் டேக் செய்து போனது. அசலூரில் சொந்தக்காரனைப் பார்த்தது போல ஒரு சந்தோஷம். நானும் ஓவர் டேக் செய்து போனேன். இப்போது ஸ்விஃப்ட்-டின் வேகம் சற்று மெதுவாக ஆரம்பித்தது. நானும் கொஞ்சம் வேகம் குறைத்தேன். ஸ்விஃப்ட்-காரன் வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு புகைத்தான். நான் ஸ்விஃப்ட் புள்ளியாய் மறையும் வரை ரியர் வியூவில் அவ்வப்போது பார்த்துக் கொண்டே சென்று கொண்டிருந்தேன். மீண்டும் நான் மட்டுமேயான பயணம். பல்லாங்குழியாடிக் கொண்டே அலுப்புடனும் அரைத் தூக்கத்துடனும் வண்டியோட்டிக் கொண்டிருந்தேன். எப்படியாவது முக்கிய சாலைக்குப் போய் சேர்ந்தால் பரவாயில்லை என்றானது.

குறுகலான பாதை சற்றே விரிந்து விரிந்து தார்ச்சாலைக்கு இட்டுச் சென்றது. மணப்பாறை முறுக்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். திருச்சிக்கு போகாமல் மணப்பாறைக்கு வந்ததற்காக முறுக்கு வாங்கிக் கொண்டேன். நன்றாகத்தான் இருந்தது. திருநெல்வேலி அல்வா முதற்கொண்டு திருப்பதி லட்டு வரையும், அமெரிக்க டாப்ளர் ஒன் சாக்கலேட் வரை எல்லாமே சென்னையின் அங்காடிகளில் கிடைத்து விடுவதால், இப்படி என்றேனும் சுவைக்கும் போது கூட ருசிக்காமல் ஆகி விடுகிறது என்றே நினைத்துக் கொண்டேன். தீபாவளிக்கு புதுத்துணி வாங்குவது அப்படித்தான் சுவாரசியமில்லாமல் ஆகிவிட்டது. சந்தனக்காட்டில் வசிப்பவர் சமையலுக்கு சந்தனக்கட்டையை விறகெரிப்பது மாதிரி எல்லாம் அபரிமிதமாகக் கிடைக்கும் போது சுவாரசியம் குறைந்துதான் விடுகிறது.

லயிக்காமல் முறுக்கை கடித்துக் கொண்டிருந்த போது அதே மாந்துளிர் கலர் ஸ்விஃப்ட் லொடக்கியபடி தார்ச்சாலையில் ஏறிக்கொண்டிருந்தது. கைபேசிக்கு வந்த கணவருக்கு பதில் சொல்லிக்கொண்டே காருக்குள் தாவினேன். மாந்துளிர் கலர் ஸ்விஃப்ட்-டை முந்திக் கொண்டு சுமார் முப்பது மீட்டர் தொலைவிலேயே இருப்பது போன்ற வேகத்தில் ஓட்டிச் சென்றேன். மாந்துளிர் கலர் ஸ்விஃப்ட் கண்ணுக்கு தென்படாமல் போகும் போதெல்லாம் என்னையும் அறியாமல் பதற்றம் தொற்றிக் கொண்டது. மீண்டும் ஸ்விஃப்ட் கண் பார்வைக்கு வரும் வரையில் மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தேன். கண்ணாமூச்சி ஆடிக் கொண்டே கொளத்தூர் சாலை வரை வந்த ஸ்விஃப்ட் வடசேரிப் பக்கம் திரும்பிச் சென்றது. ராம்ஜி நகர் வரும் வரைக்கும் என்னையும் அறியாமல் மாந்துளிர் கலர் ஸ்விஃப்ட்-டை, ஏதோ ரயில் சினேகம் போல நினைத்து நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு முகம் கழுவிக் கொண்டு இன்னும் அரை மணிநேரத்தில் ஹோட்டல் அறைக்குப் போய் சேர்ந்து விடலாம் என்று நினைத்தபடியே மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தேன்.

எஸ் ஏ எஸ் கல்லூரிச் சாலையில் இருந்து வெளிவந்து அதே மாந்துளிர் கலர் ஸ்விஃப்ட் இருபது மீட்டர் முன்னால் சென்று கொண்டிருந்தது. நீண்ட நாள் கழித்து நண்பன் ஒருவனைச் சந்திக்கும் மகிழ்ச்சி போல அப்படியொன்று உங்களுக்கும் தோன்றியிருக்கிறதா?

6 comments:

Gopi Ramamoorthy said...

நிறைய. சொல்லப்போனால் ஒரு சில நட்புகளும் பூத்ததுண்டு.

சென்னை - பெங்களூர், பெங்களூர் - கும்பகோணம், பெங்களூர் - திருவண்ணாமலை சாலைகளில் செல்லும்போதேல்லம் இது போல எப்போதாவது வாய்க்கும்.

புதுகைத் தென்றல் said...

கதைன்னு நினைக்க முடியலை. வாழ்த்துக்கள்

பத்மா said...

nice narration vidhoosh ..
am missing u all the time every where ..what say u?

"உழவன்" "Uzhavan" said...

சென்னையைத் தாண்டி வெளியில் சென்றுவிட்டாலே, கண்ணில்படுகிற எல்லோருமே ஏதோ ஒருவகையில் தெரிந்தவர்கள் போல்தான் எனக்குப் படும் :-)

Vijay said...

//மாந்துளிர் கலர் ஸ்விஃப்ட் ஒன்று சரக்கென்று ஓவர் டேக் செய்து போனது//

மாந்துளிர் கலர் எவ்ளோ தேடி பார்த்தும் கெடைக்கல மாருதி ஸ்விஃப்ட் ப்ரொச்சர்ல... ராத்திரில வண்டி ஓட்டினா இப்புடித்தான்... :))முனியா இருக்குமோ?.......

இன்றைய கவிதை said...

விதூஷ்

இது கதை தானா? ஏதோ எங்கேயோ அனுபவபட்டார் போலிருந்தது

அருமையான் விவரணை

நன்றி விதூஷ்

ஜேகே

Post a Comment