பேராசை

மூன்றரைக்கே ஆஜராகும் வேலைக்காரி
நாலு மணிக்கு மாமியாரி்ன் சாமி பூஜை
கூடையோடு வருவானே பூக்காரன்;
கூடவே வந்துவிடும் பால்காரன்

அதிகாலை நடை முடிக்கும் மாமனார் பின்
அப்போதே துவங்கி விடும் காபிக்கடை
பேப்பர்க்காரன் பெல்லடித்தால் ஐந்து மணி
பிடிக்கவேண்டும் தண்ணீரை ஐந்தரைக்கு

ஆறுக்குள் ஆகவேண்டும் சமையல்கடை
ஏழுக்குக் கிளம்பிடுவார் என்னவரும்;
எச்சில்தட்டோடு பாத்திரங்கள் எட்டாம் மணி
ஏதோ அவசரமாய் விழுங்கிப் பார்த்தால் எட்டே முக்கால்

ஒன்பது மணிக்கு ஸ்கூட்டரோடு உதையல் சண்டை
ஓராயிரம் சிக்னல் தாண்டி ஒன்பதரை
இளித்தபடி தாமதக்கையெழுத்திட்டுவிட்டு
இரவு சாயும் வரை கண்ணெரியக் கணிணி துணை

இனியும் வீடு வந்து பின் துணி துவைத்து
இரவுச் சோற்றுக்கு ஆகி விடும் ஒன்பது மணி
இன்னைக்கும் இதுதானா? புலம்பல் கேட்டு
புளித்தக்காதுகளை துளைக்கும் பத்துப்பாத்திரங்கள்

துலக்கி நிமிர்ந்த முதுகுவலிக்குப் பதினொன்று
தலைவலியும் கூடவே சேர்ந்து கொல்லும் - அப்போது
வந்திருக்கும் கணவரிடம் மாமியாரும் - அவள்
வயிற்றில் புள்ளபூச்சி இல்லையென்ற புலம்பல்களும்

“நாளைக்குப் போகிறோம்மா டாக்டரிடம்” நொந்துகொள்ளும்
நம்மவரின் சொல் கேட்டு நோகும் மனம்
அவருக்கும் உணவிட்டு முடித்துப்பார்த்தால்
அன்றைய தினம் முடிய மணி பன்னிரண்டு

ஒன்றாவது உண்டா நம் விதியில்-கணவர் கேட்பதற்குள்
ஓடிவிடும் இரவு மறுவிடியல் காண - மீண்டும்
ஓராயிரம் கனவோடு விழித்தெழுந்து - இன்றாவது
ஓர் இலக்கியம் வளர்க்க எண்ணிக் கொள்வேன்.



.

3 comments:

நந்தாகுமாரன் said...

கேட்ட புலம்பல் தான் எனினும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் - // இரவு சாயும் வரை கண்ணெரியக் கணிணி துணை // - இந்த வரி எனக்குப் பிடித்தது

Vidhoosh said...

நன்றி

Radhakrishnan said...

நல்லதொரு சந்தத்துடன் அமைந்த கவிதை மிகவும் ரசிக்கும்படியாக அமைந்து இருந்தது.

ஆம், வேலைக்குச் சென்று வரும் பெண்களின் நிலை வீட்டிலும் வேலை என மிகவும் பொல்லாததாகவே இருக்கிறது.

குழந்தைகளை கவனிக்கவும் முடிவதில்லை எனும் கவலை வேறு ஒருபக்கம்.

நல்லதொரு கவிதை.

Post a Comment