இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது. மற்ற கதைகளை இங்கே காணுங்கள்.
அக்கரைப் பச்சை
ஸ்ரீவித்யா பாஸ்கர்
“நான் ஒரு விளையாட்டு பொம்மையா?” என்று நவரச கானடாவில் கீர்த்தனையை ஜானகி தலை குனிந்தபடி பாடினாள். "பொண்ணு ரெண்டு கையாலயும் முறுக்கு சுத்துவா. சமையல் நன்னா பண்ணுவா. பள்ளிக்கூடத்திலேயே முதல் வாங்கி தேறினா. போரும்னு நிறுத்திட்டோம். 18 வயசாயிடுத்தோல்யோ" என்று ஜானகியின் அம்மா அடுக்கினாள்.
சுப்பைய்யர் என்னிடம் வந்து "அவளுக்கு பாட மட்டும் தான் தெரியுமா. பேசவே மாட்டாளா? உனக்கும் ஜானகி வயசிருக்கும் போலருக்கே. என்ன பண்ற” என்றார். நான் பதில் சொல்லும் முன்பே, ஜானகியின் அம்மா, "ஹரி. ஜானகி அப்பாக்கு கொஞ்சம் ஒத்தாசை செய்யுடா போ." என்று இடைமறித்தார்.
மாப்பிள்ள. அவன் என் நாத்தனார் பையன், பாவம் சின்ன வயசுலேயே அப்பாவை பறிகொடுத்துட்டான். என் நாத்தனார் மதராஸ்ல மோகன் வக்கீலாத்துல சமையல் பண்ணி ஜீவனம் பண்ணறா. இவர்தான் இவனை படிக்க வச்சார். ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பம். ஆடிட்டருக்குப் படிச்சிருக்கான்" என்று ஜானகியின் அம்மா என்னை முறைத்தபடி இழுத்தார்.
ஓரத்தில் நின்றிருந்த எனக்கு கண்ணில் ஜலம் முட்டியது. கிடைத்த சந்தர்ப்பத்தில் ஜானகியிடம் "வேண்டாம் ஜானகி. ரெண்டாம் தாரமா போகாத. இன்னும் கொஞ்ச நாளில் எனக்கு நல்ல வேலை கிடைச்சிடும். உன்னையும் படிக்க வைக்கிறேன். அப்பாவிடம் பேசவா?" என்றேன். பதிலே சொல்லவில்லை அவள்.
அவள் தோள்களை உலுக்கி, "நீதானடி என்னை இன்னிக்கி வரச் சொன்னே?" என்றேன். அதற்குள் அவள் அம்மா வந்து விட்டார். "உன் தரித்திரத்திற்கு நீ ஜீவனம் பண்ணரத்துக்கே உன் அம்மா சமையல் பண்ண வேண்டி இருக்கு. மீதி நாளை இவள சமையல் பண்ணச் சொல்லி ஓட்டலாம்னு பாக்கறியா. வெளில போடா" என்று கத்தினார். அவள் அப்பாவும் ஏதும் சொல்லவில்லை. ஜானகி பேசவில்லை எப்போதும் போல.
"வரேன்" என்றபடி சொல்லிக்கொள்ள வந்த என் அம்மாவிடம் "அடுத்த முறை வரும் போது கொஞ்ச நாள் இருக்கா மாதிரி வா" என்றபடி ஜானகியின் அம்மா பட்சணங்களை கையில் திணித்துக் கொண்டிருந்தாள். "அம்மா. போகலாமா." என்று வாசப்படி இறங்கும்போது, ஜானகியை பார்த்து "வரேன் ஜானகி" என்றேன். அதற்கும் சுப்பைய்யர்தான் "வாடா" என்றார்.
ஜானகி அவள் அம்மா விரும்பியது போல சுப்பைய்யர் மனைவியாகி "பெரிய வீட்டம்மா"வாக ஆனாள்.
----------------------------------------------------------------------
மதராஸில் என் வேலை என் நாட்களை நகர்த்திக்கொண்டு இருந்தது. எப்போதாவது வேலை பளுவில் கலங்கும் போது ஜானகி என் கைகளை பிடித்துக் கொண்டு ஆறுதல் சொல்ல மாட்டாளா என்று மனம் ஏங்கும். "ஜானகியின் குழந்தையை பார்க்க போகணும்டா. பத்திரிக்கை ஏதும் வரலையே. வர ஞாயிறு அதுக்கு ஒரு வயசாறது. அண்ணாக்கும் யார் இருக்கா? நாமளே பரவால்லைன்னு போயிட்டு வரலாம்" அம்மா சொல்லும்போதுதான் நாட்கள் ஆகிவிட்டது தெரிந்தது.
அங்கே கொண்டாட்டத்திற்க்கான எந்த அறிகுறியும் இல்லை. குழந்தை மட்டும் கூடத்தில் விளையாடிக்கொண்டிருந்தது. "பையனா? என்ன பேர் வெச்சிருக்க?" என்று கேட்டாள் என் அம்மா.
"ரவி" என்றார் ஜானகியின் அப்பா.
அவர் கையிலேயே பழம், குழந்தைக்கு வாங்கிய துணிகளைக் கொடுத்தேன். "ஜானகி எங்கே?" நான் அவள் அப்பாவிடம் தயக்கத்தோடு கேட்டேன்.
"என்ன மன்னிச்சுடுடா ஹரி. நான் உங்க ரெண்டு பேருக்கும் பெரிய கொடுமை செஞ்சேன்." என்று கதறினார்.
"என்ன?" என்னால் கேள்வியை முடிக்க முடியவில்லை. நான் எந்தக் கற்பனையும் செய்து கொள்ளும் மன நிலையில் இல்லை. ஜானகி பலமாகச் சிரிப்பது மட்டும் என் காதுகளில் கேட்டது. எனக்கு தலை சுற்றும் போல இருந்தது. என் இதயம் துடிப்பது என் காதுகளை துளைத்தது.
அதற்குள் ஜானகியின் அம்மா "மாப்பிள்ளை அவளை நிறைமாதமாய் இருக்கும் போது தலையில் பூட்டால் அடித்து விட்டாராம். அன்னிலேந்து இப்படித்தான். அடிக்காதீங்கோ அடிக்காதீங்கோன்னு அழுவா. இல்லைனா இப்படி சிரிப்பா. அப்பலேந்து இங்கதான் இருக்கா. ஒரு மருந்தும் கேக்கல. மாப்பிள்ளை வந்து கூடப் பாக்கறதில்லை."
"இன்னும் என்னடி மாப்பிள்ளை. இவளை 40 வயசுக்காரனுக்கு கொடுக்காதேன்னு கதறினேனே. மேல படிக்க வையுன்னு கெஞ்சினாளேடா. படிக்க வச்சு ஒரு வேலைக்கு அனுப்பி இருந்தா இப்படியா இருப்பா இவள்" என் அம்மா அழுதாள்.
பத்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு நான் "இவள் இனிமேல் என்னோடுதான் இருப்பா. அம்மா நீயும் வா" என்று குழந்தையை தூக்கிக் கொண்டேன். என் குரல் அன்றுதான் ஓங்கியது.
--------------------------------------------------------------------------
என் வீட்டிற்கு வரும் மருமகள் நிறைய படித்திருக்க வேண்டும், வேலைக்கு போகவேண்டும் என்று ஆசைப்பட்டு ரவியிடம் அப்படியே சொல்லி வந்தேன். மீடியாவில் ரிப்போர்ட்டராக இருக்கும் பத்மாவை காதலிப்பதாகச் சொன்னான். நானே இருவருக்கும் திருமணம் செய்தும் வைத்தேன்.
ரவிக்கு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை. அப்படியே அவன் அம்மாவைப் போல இயல்பாகவே அதிகம் பேசாத குணம் உடையவன். கம்ப்யூட்டர்தான் அவன் உலகம். பத்மா நிமிடத்திற்கு நூறு வார்த்தைகளைப் பேசுபவள்.
இப்படி ஏட்டிக்குப் போட்டியாகத்தான் சொர்க்கத்தில் திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன போலிருக்கிறது. அதிகம் பேசுவதால் மட்டுமே பிரச்சினைகள் பெரிதாவதில்லை. பல நேரங்களில் பேசாமல் இருப்பதாலேயே பிரச்சினைகள் வளர்கின்றன.
“இப்போது நான் எதற்காக வேலைக்குப் போக வேண்டும், நமக்கு என்ன குறைவாக இருக்கிறது?” தீர்மானமாய் அவனை பார்த்தாள். “குழந்தையை யாரிடம் விடுவது?”
“அப்பாவிடம் சொல்லறேன். எல்லாம் அப்பா பார்த்துப்பார். நீ மறுபடி வேலையில் சேர்ந்து விடு. எவ்வளவு கமிட்மெண்ட்ஸ் இருக்கு. வீட்டுக் கடன் வேற.” ரவி சிறிது நேரம் அவளையே பார்த்து விட்டு கம்யூட்டருக்குத் திரும்பினான். பத்மாவும் அதற்குமேல் பேசவில்லை.
ஒரு வழியாக ஒரு வாரம் கழித்து ஒரு வேலையில் சேர்ந்தாள். குருவி ஒன்று மரத்திற்கும் தரைக்கும் மாறி மாறி உட்கார்ந்து கொண்டிருந்தது. பத்மாவிற்கும் மனம் அப்படித்தான். வேலையில் மனம் லயிக்கவில்லை. குழந்தையை விட்டு விட்டு போகும் குற்ற உணர்ச்சி வேறு.
காலையில் ஆபிசுக்குக் கிளம்பும் போது குழந்தையை விட்டு விட்டுச் செல்ல எத்தனிக்கும் போது "அம்மா நீ ஆபிசுக்கு போகாத" என்று காலைக் கட்டிக்கொண்டு அழுதபோது அவளும் நெஞ்சு வெடிக்க அழுதாள்.
“தாத்தா. அம்மா அழறா.” என்று என்னிடம் ஓடி வந்த பேத்தியை மடியில் அமர்த்தி ப்ரகலாதன் கதை சொன்னேன். எனக்கு இன்றும் குழப்பமாகத்தான் இருக்கு. பெண்விடுதலை என்றால் என்ன?
12 comments:
அருமையாக இருக்குங்க கதை...கடைசி வரிகளில் யோசிக்க வச்சிட்டிங்க.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)
ஒவ்வொரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு போகும் போது நடுவில் ஒரு லைன் போட்ட படிக்கும் போது ஈசியாக இருக்கும்.
நன்றி கோபிநாத். கோடு போட்டுவிட்டேன்.
போட்டியில் நானும் கலந்து கொள்வதால் இப்போது கருத்து சொல்ல விருப்பமில்லை ... ரிசல்ட் எப்படி இருந்தாலும் முடிவு வந்த பிறகு என் கருத்தை சொல்கிறேன் ...
உங்கள் சிறுகதை நன்றாக உள்ளது. பரிசு வெல்வது நிச்சயம். வாழ்த்துக்கள்.
நந்தா. போட்டி என்பது வெறும் outletதான் என்னைப் போன்ற புதிய பிளாக்கர்களின் எழுத்துக்களை அடையாளம் காட்டிக்கொள்ள. என்னை பொறுத்தவரையில் மொழி, எழுத்து ஆகியவை மரியாதைக்குரியவை. அவற்றை மதித்தால்தான் உங்களுக்கும் அது மரியாதை பெற்றுத் தரும். நிறைய எழுதுங்கள்.
ஐயோ ... தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் ...
thanks citizen.
ha ha ha... nandhaa. i didnt mistake you. i was just sharing my thought... ha ha ha...
சரி ... போட்டி ஒரு புறம் இருக்கட்டும் ... உங்கள் கதை பற்றிய என் கருத்தைச் சொல்லிவிடுகிறேன் - கதையைப் ப்ரகலாதன் கதை கூறுவதோடு முடித்து // எனக்கு இன்றும் குழப்பமாகத்தான் இருக்கு. பெண் விடுதலை என்றால் என்ன?
// என்பதை நீக்கியிருந்தால் இது ஒரு அபாரமான சிறுகதை ... போட்டிக் கதைகளில் ஒரு பத்திக்கு மேல் என்னை கட்டாயமாகப் படிக்கத் தூண்டிய வெகு சில கதைகளுள் இதுவும் ஒன்று ... :)
முதலில் நான் எழுதியதை முழுதாய் படித்து விமர்சனமும் எழுதியதற்கு நன்றி நந்தா.
இந்தக் கதையில் நான் நேரிடையாக எழுதியதை விட எழுதாமல் படிப்பவரின் புரிதலுக்கு, கற்பனைக்கு என்று விட்டதே அதிகம்.
இருந்தாலும், நீங்கள் கேட்டு விட்டதால் நான் உங்கள் கேள்விக்கு இங்கே (http://vidhoosh.blogspot.com/2009/05/blog-post_5835.html) விரிவான விளக்கம் கொடுத்துள்ளேன்.
ம்ம். நீங்கள் நினைத்தது கரெக்ட்தான் நந்தா. சொல்ல வந்தது புரியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று நினைத்தேன்? :)
நல்ல அனுமானம்...
மிகவும் வித்தியாசமாக எழுதப்பட்டிருக்கு நல்லதொரு சிறுகதை.
எழுதப்பட்ட விதத்தில் சில குழப்பங்கள் தவிர்க்க முடியாதவைகளாக இருக்கின்றன, இருப்பினும் கொண்டு சென்ற விதமும், முடித்த விதமும் நன்றாகத்தான் இருக்கிறது. கதை முடிந்துவிட்டதா? எனும் ஒரு கேள்வியை எழுப்பி கதை நிறைவு பெறுகிறது.
நல்லதொரு சிந்தனையைத் தூண்டிய கதை இன்னும் கொஞ்சம் வலுவாக அமைத்திருக்கலாம் என எண்ணத் தோன்றியது.
கதாபாத்திரங்கள், எழுதப்பட்ட வரிகள் என சிறப்புடன் இருப்பதை மேலும் சிறப்பு செய்திருந்திருக்கலாம்.
மிக்க நன்றி வித்யா.
Post a Comment