பில்லியன்

"ஸ்கூட்டியே வாங்கிடலாம் மீரா, அதுதான் சௌகரியமா இருக்கும். ரெண்டே நாளில் கிடைத்துடும். ஆக்டிவான்னா 1 1/2 மாசம் காத்திருக்கணும்". ஹெல்மெட்டின் வழியே மெல்லியதாகிப் போன என் குரல், என் மனம் போல கனமாக இல்லைதான்.

"இல்லை. ஆக்டிவாதான். இனிமே பில் கட்டறதிலிருந்து கறிகாய் வாங்கும் வரை உங்களுக்காகக் காத்திருக்கவேண்டாம். அப்படியே வரும்போதே என் வேலையெல்லாம் முடிஞ்சிடும்".

"அதுல பிக்கப் ஜாஸ்தி. நீ வேகமாப் போவ". கொஞ்சம் சத்தமாகவே கூறினேன். குரல் ஹான்கர்களின் ஹாரன்களில் கரைந்தது.
அவள் பெருமையாக பேசிக்கொண்டே போனாள். எனக்கும் இந்தப் பல்சரை வாங்கும் போது அப்படித்தான் இருந்தது.

ஆக்டிவாவுக்கே பணம் கட்டினோம். எனக்கு வேறென்ன வழி. இல்லையென்றால் உர்ரென்று அவள் முகம் காணச் சகிக்காது. வீட்டுக்குள் நான் விழித்திருக்கும் இரண்டு மணிநேரம் கூட அவளை அப்படி பார்க்கவேண்டாம் என்ற என் சுயநலத்திற்காகவே பேசாமல் இருந்தேன். சரியாக நாற்பத்தைந்து நாட்களில் ஸ்கூட்டர் வந்தது.

-----------------------------------

அதுவரை நான்தான் அவளை அலுவலகத்தில் விட்டுவிட்டுச் செல்வேன். இரவு நானும் வர நேரம் ஆகும் என்பதாலேயே அவள் பேருந்தில் திரும்புவாள்.

அன்று அவள் வரும்போது இரவு பன்னிரண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. நான் அவளுக்காகக் கவலைப்பட்டதுதான், அவளுடைய இந்த ஸ்கூட்டர் நச்சரிப்பின் துவக்கம்.

அவளை காதலிக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து போகும் இடமெல்லாம் அவள் என் பல்சரின் பில்லியனில்! அவள் என்னை அணைப்பதற்காகவே கிழக்குக் கடற்கரைச் சாலையில்
போன வேகமான பயணங்கள், நண்பர்களிடம் பொய் சொல்லி வீக் எண்டில் அவளோடு போன சென்னையின் சந்து பொந்துகள் - நான் பைக்கில் போகும் போதெல்லாம் என் பல்சரின் பில்லியனில் அவள் நிச்சயம் இருப்பாள். என்னவோ அவள் என்னோடு ஓடிப்போனதாகச் சொல்லப்பட்டாலும், இந்த பல்சரில் தான் அழைத்து வந்தேன். அவளோடு தினமும் போக வேண்டும் என்பதற்காகவே ஆபிசிலிருந்து கொஞ்சம் தள்ளியே வீடு பார்த்தேன். அவளோடு திருமணமான பின்னும் ஏனோ அவள் என் வண்டியின் பில்லியனில் அமர்ந்து வருவது எனக்குச் சுகமான ஒன்றுதான். நான்தான் பிரிதிவிராஜ் போலவும் பல்சர் என் ஆஸ்தான குதிரை போலவும், ஒரு மகாராணியாகவே அவளை காதலிக்கிறேன்.

இன்று வரை நடந்துகொண்டிருக்கும் எங்கள் தினசரி சண்டைகளில் ஆரம்பித்து, எல்சிடி டீவி மற்றும் இன்று வந்த ஆக்டிவா,
தீபாவளிக்கு இந்த முறை வடபழனிக்கா அடையாருக்கா என்று அம்மா வீட்டுக்கு போவது வரையான எங்கள் குடும்ப வாழ்க்கையின் முடிவுகள் எல்லாமே அந்த பில்லியனில் உட்கார்ந்தபடி அவள் எடுத்ததுதான்.

இப்போதெல்லாம் எந்த 'அச்சுக்குட்டி' ரோடில் போவதைப் பார்த்தாலும், அந்த வண்டியை ஓட்டிச்செல்லும் அழகான பெண்களைப் பார்ப்பதின் பரவசத்தையும் மீறி எனக்குக் கோபம் வருகிறது. அவள் என்னவோ மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறாள், எனக்குத்தான் பிரசவித்த பின் காலியாய் இருக்கும் கர்ப்பகிரஹத்தைப் போல பல்சரின் பில்லியன் சுடுகிறது.

3 comments:

நந்தாகுமாரன் said...

sssuuuppப்eeerrr ... உங்களுக்கு உரையாடல், கதை, கட்டுரை லாவகமாக வருகிறது ... கவிதையை என் போன்ற சிறுவர்களிடம் விட்டுவிட்டு நீங்கள் இதைத் தொடருங்கள் ... கதைக்கு தலைப்பிடுவதில் கொஞ்சம் கவனமாயிருங்கள் ... அது தான் வாசகரை நம்மை நோக்கி இழுக்க அழைக்கும் முதல் குரல் (அது என்ன சக்களத்தன் ... பில்லியன் என்று வைத்திருக்கலாம்), single apostrophe-இல் இருப்பதெல்லாம் special meaning என்று நீங்களே சொல்லக் கூடாது நாங்களே புரிந்து கொள்ள வேண்டும் ...

Unknown said...

நன்றி. அப்படியே செய்து விட்டேன். இனி ஒரு நாலு நாளாவது ஆகும் நான் ப்ளாக. :( முடியவே முடியாது. நான் கவிதையையும் முயற்சித்துக்கொண்டே இருப்பேன். அப்படியெல்லாம் விட்டு விட முடியுமா (உங்களை எல்லாம்தான்) :))

Sundar சுந்தர் said...

very nice. i like the subtle love in this. (sorry vidhu. google tamil transliterate is not working for me)

Post a Comment