ஆஸ்துமாவும் பெண் விடுதலையும்

ஆஸ்துமாவுக்கும் பெண் விடுதலைக்கும் என்னய்யா சம்பந்தம் என்கிறீர்களா? இருக்கே! அதுக்குத்தானே சொந்தக் கதையா இருந்தாலும் பரவால்லைன்னு எழுதறேன்.

எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து வீசிங் பிரச்சினை இருக்கு. ஆஸ்தாலின் இன்ஜெக்ஷன், ஆடுதொடா இலை, வேப்பெண்ணை-யில் துவங்கி, பத்தாம் வகுப்பு தேர்வுக்கு முன், பரீட்சை எழுத முடியாமல் போய் விடுமோ என்று அழுது கொண்டே டாக்டரிடம் போக, டாகடர் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்தது ஸ்டீராயிட் மருத்துவம், டெகடான் மற்றும் டெரிபிலின் இன்ஜெக்ஷன் மற்றும் பெட்னிசால் மாத்திரைகள். பத்தாம் வகுப்பு முடித்ததும் வேதாத்திரி மகரிஷி யோகா/தியான பயிற்சி வகுப்புக்களுக்கு அனுப்பினார் அப்பா. அதையும் முடித்து, பின் மாதம் ஒரு முறை ஸ்டீராயிட் இன்ஜெக்ஷன் என்று இருந்தது இரண்டு மாதம் மூன்று மாதம் என்று கொஞ்சம் இடைவெளி விட்டு தொடரும் அட்டாக்குகளும் நானும் என்று ஓடியது. வேலைக்கு சென்னை வந்து, பஸ்ஸில் ஓர சீட்டு கிடைத்தால் மகிழ்ந்து போகும் அப்பாவிப் பெண்ணாக இருந்து இப்போ அடப்பாவிப் பெண்ணாக ஆகிய வரை கையில் இன்ஹேலர் இல்லாமல் ஒரு நாள் கூட இருந்ததில்லை. சாதாரண ப்யூடோகார்ட்-டில் ஆரம்பித்து, ஸ்டீராயிட் இன்ஹேலர்கலான ஃப்ளோவென்ட், பல்மினாயிட், அல்புடரால் என்று வளர்ந்து கொண்டே போன மருந்துகள் மற்றும் நோயின் வீரியம், என் பருமனை அதிகரித்ததைத் தவிர எதையும் மாற்றவில்லை. இதன் பக்க விளைவுகளாக நான்கு miscarriages என்று. போராக் குறைக்கு, நடு ராத்திரிதான் வந்து தொலைக்கும், நடக்கவே முடியாமல் நடந்து ஆஸ்பத்திரிக்கு போனால் "நெபுலைஸ் ஹெர்" என்பதைத் தவிர வேறெந்த ட்ரீட்மெண்டுக்கும் refer செய்யாத டாக்டர்கள் மீது அலுத்துக் கொண்டே, வீட்டிலேயே நெபுலைசர் வாங்கி, குடும்ப பட்ஜெட்டில் ஒன்றாகிப் போனது ஆஸ்தாலின் ரெப்சூல்ஸ்களும்.

மல்லிகைப்பூ வைத்துக் கொண்டால் வீசிங், perfume-கள் போட்டுக் கொண்டால் வீசிங்
பவுடர் போட்டுக் கொண்டால் வீசிங், ஏதாவது துர்நாற்றம் அடித்தால் வீசிங்
ஓடினா வீசிங், படியேறினா வீசிங், வெயில் வியர்த்துக் கொட்டினால் வீசிங், மழையில் நனைந்தால் வீசிங், குளிரினால் வீசிங், காத்துல தூசி பட்டா வீசிங், புது டிரஸ் கூட துவைத்துதான் போட்டுக்கணும், அந்த ப்ளீச் வாசனை கூட ஆகாதுன்கர அளவு ஆகிப்போய், கடைசியில், சாதாரண ஜோக்குக்கு வாய் விட்டு சிரிக்கும் போது கூட "பாத்துடி, வீசிங் வந்துரப் போறது" என்று சொல்லும் அளவுக்கு ஆகிப்போனது. நமக்கோ காப்பணம் கொடுத்து சிரிக்கச் சொன்ன அரைப்பணம் கொடுக்கணும் சிரிப்பை நிறுத்த. இப்படி எப்படி தெனாலி கதை ஆகும்.

இப்போதெல்லாம் வீசிங் இல்லேன்னா உயிரோட இருக்கோம இல்லையானே சந்தேகம் வந்துடும் போல வீசிங் என்னோடு மூச்சோடு மூச்சாக ஆகிப் போனது. அப்போது தர்ஷிணிக்கு இரண்டு வயசு இருக்கும். ஒருதரம் நெபுலைஸ் பண்ணிக்கும் போது தர்ஷிணி பார்த்து விட்டு பயந்து போய் அழுதாள். அப்போதிலிருந்து அவளுக்கு முன் நெபுலைஸ் பண்ணிக் கொள்வதே இல்லை. மூன்று வாரம் முன் அலுவலக வேலையை மதிய வெயிலில் அலைந்து திரிந்ததில் ரொம்ப சிவியர் அட்டாக் ஆகிப் போனது. வீட்டுக்கு வந்து விட்டேன். அவளும் பள்ளியில் இருந்து வந்து விட்டிருந்தாள். நிலைமை மோசமாகவே நெபுலைஸ் பண்ணிக் கொண்டு சிலபல மாத்திரைகளை விழுங்கி விட்டு தூங்கிப் போனேன். அது வரை பக்கத்திலேயே படுத்துக் கொண்டிருந்த தர்ஷிணி அவ அப்பா வந்ததும் ஓன்னு ஒரே அழுகை.. அப்பா! அம்மா செத்துப் போயிடுவா என்று. விளைவாக "ஆஸ்பத்திருக்கு போலாம் வா" புராணம் ஆரம்பித்தது. அதான் பிராணாயாமம் பண்ணறேன், ஆஸ்பத்திரி என்றாலே மறுபடி "நெபுலைஸ் ஹெர்" தானே இதில் என்ன புதுசா இருக்கு என்று நான் சொல்ல, அவர் இவளுக்காகவாவது வா என்று செண்டிமெண்ட் பேச நீண்ட ஆர்குமென்ட்டுக்கு அப்புறம் அன்றே குடும்பத்தோடு காமாட்சி ஹாஸ்பிடல் போனேன்.

டாக்டர்.செந்தில்குமார், மிகவும் இளைஞராக இருந்தார். ஆஸ்துமான்னா என்னன்னு தெரியுமா? என்ற வழக்கமான கேள்வியில் ஆரம்பித்தது டயாக்னாசிஸ்கள். ரத்தப் பரிசோதனை, கம்ப்யூடரைஸ்ட் பல்மனரி ஃபங்க்ஷன் டெஸ்ட் என்று மூன்று மணிநேரம் பாவம் பாஸ்கரும் தர்ஷிணியும் வேறு கூடவே உட்கார்ந்திருந்தார்கள். எல்லா டெஸ்ட் ரிபோர்ட்டுகளையும் வாங்கிக் கொண்டு டாக்டரைப் பார்க்கப் போகும் போது இரவு மணி எட்டரை. டாக்டரின் வழக்கமான எல்லா கேள்விகளுக்கும் மோனோடோனில் அவரே வெறுத்து போகும் அளவுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். கடைசியில் "வழக்கம் போல நெபுலைஸ் தானே பண்ணப் போறீங்க. அதைத்தான் வீட்டிலேயே பண்ணிக்கிறேனே. ஐ ஃபீல் நார்மல்" என்றேன்.

"ஸோ, படி ஏற முடிலன்னு லிஃப்ட்டுல போறீங்க. சாலிட் ஃபுட் சாப்பிட முடியலைன்னு லிக்விட் டயட்டுக்கு மாறிட்டீங்க. அதுக்கு அர்த்தம் நீங்க நார்மலா இல்லைதானே." என்றார். எனக்கு பளார்னு அறைவாங்கின உணர்வு. என் பிடிவாதம் தளர்ந்தது. அப்புறம் சின்னச்சின்ன மருத்துவ முறைகளையும், மாத்திரைகளையும் பரிந்துரைத்தார். இன்னும் கொஞ்ச நாளில் ஸ்டீராயிடுகள் நிறுத்தப்பட்டு விடும் என்றே தோன்றுகிறது.

டாக்டர் செந்தில்குமார் சொன்னது "ஒரு ஆரோக்கியமான நபர் செய்யக்கூடிய எல்லா காரியங்களையும் ஆஸ்துமாவைக் கட்டுக்குள் வைத்து இயல்பாகச் செய்ய முடியும் என்று செய்து காட்டும் நிலைதான் நார்மலாக இருப்பது. செய்யமுடியலையா செய்வதை நிறுத்தி விடுகிறேன் என்பது தற்கொலைக்கு சமம்" என்றார்.

ஆஸ்துமா போலத்தான் சமூகத்தின் மூடத்தனமான கட்டுப்பாடுகளும், நம் பொறுப்புக்களைத் துறந்து, இயல்பைத் தொலைத்து, குடும்பத்தை இழந்து பெறுவது சுதந்திரம் இல்லை. அப்பேற்பட்ட சுதந்தரத்தினால் யாருக்கும் பயன் இல்லை. விட்டுக் கொடுத்து வாழுங்கள். வாழ்வதை மட்டும் விட்டுக் கொடுக்காதீர்கள்.

அனுபவம் தானே ஒவ்வொன்றும். அனுபவித்துதான் கற்றுக் கொள்வேன் என்பது தனிநபர்களின் இஷ்டம்தான். புத்திசாலிகள் பிறர் அனுபவத்தில் இருந்து கஷ்டப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்கிறார்கள்.

(இந்தக் காலாண்டு சந்திப்பில் பேசியது)

34 comments:

எல் கே said...

அட்டகாசம் விதூஷ். அதுக்கும் இதற்கும் அருமையா தொடர்பு படுத்தி இருக்கீங்க.

எல் கே said...

http://lksthoughts.blogspot.com/2010/12/blog-post_07.html

இதை பாருங்கள் உங்களை கொஞ்சம் வம்புக்கு இழுத்து இருக்கேன்

pudugaithendral said...

போன வருஷம்தான் வீசிங் ஆரம்பிச்சிருக்கு. நானும் ப்ராணயம் செய்யறேன் அது இதுன்னு சொல்லிகிட்டு இருக்கேன். ஆனா இப்ப என்ன ஆனாலும் சரின்னு இரண்டாவதுமாடியில் இருக்கும் என் வீட்டிலிருந்து இறங்குதல் ஏறுதல் எதற்கும் லிஃப்டுக்கு நோ சொல்லிட்டேன்.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

//விட்டுக் கொடுத்து வாழுங்கள். வாழ்வதை மட்டும் விட்டுக் கொடுக்காதீர்கள்.//

அருமை.

அகமது சுபைர் said...

அந்த டாக்டருக்கு என் வாழ்த்தையும் சொல்லி விடுங்கள்..

நல்ல டாக்டர்.

sakthi said...

அனுபவம் தானே ஒவ்வொன்றும். அனுபவித்துதான் கற்றுக் கொள்வேன் என்பது தனிநபர்களின் இஷ்டம்தான். புத்திசாலிகள் பிறர் அனுபவத்தில் இருந்து கஷ்டப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்கிறார்கள்.

உண்மை தான் விதூஷ்

சாந்தி மாரியப்பன் said...

//விட்டுக் கொடுத்து வாழுங்கள். வாழ்வதை மட்டும் விட்டுக் கொடுக்காதீர்கள்.//

விதூஷாய நமஹ..

ஹுஸைனம்மா said...

மூச்சுப் பயிற்சி, யோகா போன்றவை ஆஸ்துமாவை வெகுவாகக் கட்டுப் படுத்தும் என்று சொல்லக் கேள்வி. உங்கள் அனுபவம் பயமுறுத்துகிறது. சித்த/ஆயுர்வேத/ஹோமியோ சிகிச்சைகள் ஏதாவது மேற்கொண்டீர்களா? இயற்கை மருத்துவ முறைகளில் நிச்சயம் பயன் இருக்கும் என்று தோன்றுகிறது. இதுவரை முயற்சிக்கவில்லையென்றால் முயன்று பாருங்கள்.

//புத்திசாலிகள் பிறர் அனுபவத்தில் இருந்து கஷ்டப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்கிறார்கள்.//

:-)))))

மங்கை said...

:)

எனக்கு கல்லூரி படிப்பின் போது ஆரம்பித்தது.. மற்றபடி.. அதே அனுபவம்..எனக்கு வெயிலும்... மனகுழப்பமும்..அளுத்தமும் காரணிகள்..

நீங்க சொன்னது போல..ஆஸ்தும இல்லைனா...எனக்க் என்னமோ ஆய்டுசுன்னு நினைக்க தோனும்... அந்த அளவிற்கு வாழ்கையோடு ஒன்றி... வாழ்கை முறையை அதற்காக மாற்றிகொண்டாகிவிட்டது...

உணர்ச்சிவசப்படுவத்ற்கு கூட முடிவதில்லை...:))))))) எனக்கு பிப்பரவி 16..எப்பொழுதும் கண்டம்.. அந்த நினைப்பு இருக்கறதுனாலயோ என்னமோ.. பல முறை அட்டாக் வந்திருக்கு..

இப்ப ஆஸ்துமா தான் எனக்கு நெருங்கிய தோழி...என்ன பண்ணாலும் என்னை விட்டு போக மாட்டா...:)

மங்கை said...

சமீபத்தில் தான் யோகா ஆரம்பித்து இருக்கேன்..நல்ல பலன்... அனுபவத்தில் சொகிறேன்

Radhakrishnan said...

உடல்நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள் விதூஷ். சிரமங்களுக்கு இடையேயான வாழ்வில் சிரமங்களை தவிர்த்து வாழ்தல் சாமர்த்தியம் தான். தங்களின் இந்த பதிவைப் பார்த்த பின்னர் தான் நான் என்றோ தொடங்கி வைத்த ஆஸ்துமா தொடரை வெகுவிரைவாக எழுதப் போகிறேன்.

எனது அண்ணி அவர்கள் சென்னையில் இருக்கும்போது ஆஸ்துமா பிரச்சினை வரும் என்பார்கள், அதே வேளையில் கிராமத்துக்கு சென்றுவிட்டால் ஆஸ்துமா இல்லை என சொல்வார்கள்

ஆஸ்துமா எதனால் ஏற்படுகிறது, ஏன் ஏற்படுகிறது என்பதை இன்னும் பல மருத்துவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை என்பதுதான் மிகவும் கவலைக்குரிய விசயம்.

இன்ஹேலர்கள், ஸ்டீராய்டுகள் தாண்டிய ஒரு பிரச்சினை இந்த ஆஸ்துமாவில் உண்டு. விரைவில் ஸ்டீராய்டுகளை நிறுத்திவிடுங்கள்.

மனிதர்களின் உடலில் எத்தனை உபாதைகள்?! அதைப்போல சமூகத்தில் தான் எத்தனை உபாதைகள். சமூக சிந்தனையுடன் அமைந்த இந்த பதிவுக்கு எனது நன்றிகள்.

Vidhoosh said...

நன்றி எல்.கே. காலையிலேயே பார்த்தேன். வ.வ.ச.வையும்தான். உங்களுக்கெல்லாம் எனக்கு வேலை அதிகமானது கொண்டாட்டமா போச்சு. வந்து வச்சுக்கிறேன்.

Vidhoosh said...

நன்றி கலா. ஆரம்பத்திலேயே ஹோமியோபதி பண்ணிக்கோங்க. கைகூடுதுன்னு கேள்வி. உங்கூருல மீன் கூட முழுங்கி இருக்கேன். :))) யக்...

Vidhoosh said...

நன்றி ராமலக்ஷ்மி. :)

நன்றி சுபைர். டாக்டருக்காகத்தான் பேசினதே / எழுதியதே. டீச்சர்களும் டாக்டர்களும் ஒருவர் வாழ்கையில் நேர்மறை / எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதால்தான் அவர்களை கடவுள் என்கிறோமோ என்னவோ.

Vidhoosh said...

நன்றி சக்தி. :)

நன்றி அமைதி :)) ததாஸ்து

நன்றி ஹுசைனம்மா: கொஞ்சம் லேட்டா ஆரம்பிச்சுட்டேன் ஹுசைனம்மா. நோய் வீரியப் படும் முன்பே கவனித்துக் கொண்டிருந்தாள் உடம்பும் சொன்னப் பேச்சை கேட்டிருக்கும். நான் இப்போ இயற்கை, சித்தா, மீன், ஹோமியோ, யோகா, ஆங்கிலம் என்று ஆஸ்துமாவில் அரை வைத்தியச்சியாக்கும். :))

Vidhoosh said...

நன்றி மங்கை: நமக்குத் தேவை நல்ல டாக்டர் மட்டுமே. இளம் வயதாக (இருபது வயசுக்குள்) இருந்தால் யோகாசனங்கள்/ இயற்கை வைத்தியம் அட்டாக்குகளை தள்ளிப் போட உதவும் / உதவுகிறது. முற்றிலும் கட்டுப் படுத்துவது என்பது தற்போதைய சூழலில் யோகாசனம் செய்வதால் மட்டுமே ஆகப் போவதில்லை.

Vidhoosh said...

நன்றி வெ.ரா. :) ஆஸ்துமா கவனிக்கப் படாத போது உயிரே போகும் அபாயம் இருக்கிறது, இது வரை டா.செந்திலைப் போன்ற ஒருவரை சந்திக்காதது என் துரதிருஷ்டமே! :(
எழுதுங்கள் வெ.ரா. :)

மங்கை said...

பதிவை படித்த பிறகு தான் கவனித்தேன்.. பையில் இன்ஹேலர் இல்லையென்று..இலையென்று தெரிந்த பின்னால் என்னாகும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை..:)

Vidhoosh said...

மங்கை: :))) ஒன்றே இனம் என்று பாடுவோம்... இன்ஹேலர் ஒருவனே தேவன் என்று போற்றுவோம்..

அமுதா கிருஷ்ணா said...

ஆஸ்த்துமாவின் கொடூரத்தை சகித்துக் கொண்டு ஜோக் வேறு.பயங்கரமான ஆளுங்க நீங்க..

எம்.எம்.அப்துல்லா said...

வர்றீங்களா பார்ப்போம் யார் ஆஸ்த்மா பெருசுன்னு???

உங்க ஆஸ்த்துமாவுக்கும் என் ஆஸ்த்துமாவுக்கும் சோடி போட்டுகுவோமா சோடி.. யாருக்குப் பெரிய இம்சைன்னு பார்த்துருவோமா??

:)))

இனியா said...

Good post vidhoosh!!!

R. Gopi said...

சாதாரண த்ரோட் infection வந்தாலே நான் ஊரைக் கூட்டி ஒப்பாரி வைப்பேன். ஆஸ்துமா, கஷ்டம்தான்.

உங்களுக்காக தன்வந்திரியையும், வைத்தீஸ்வரனையும் வேண்டிக் கொள்கிறேன்.

உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனாலும் சொல்கிறேன். பங்கஜ கஸ்துரி சாப்பிட்டு வந்தால் ஒரு வேலை குறையலாம்.

நசரேயன் said...

//காலாண்டு சந்திப்பில் பேசியது//

அரை ஆண்டு சந்திப்பு எப்ப வரும் ?

Vidhoosh said...

அமுதா: :))

அப்து: வாரும் ஐயா.. இம்சை அரசனா இம்சை அரசியான்னு போட்டி வச்சுடலாம்..

நன்றி இனியா: :)

நன்றி கோபி: பங்கஜ கஸ்தூரி நிரந்தர சப்ஸ்க்ருப்ஷனை நிறுத்தி அந்த பிளாஸ்டிக் டப்பாக்களை போட்டு பேரீச்சம் பழமும் சாப்பிட்டுட்டேன். :))

நசரேயா: இந்தியா வாங்க ஒரு தரம், அழைத்துப் போறேன்.

rajasundararajan said...

சொந்த அனுபவத்தில் இருந்து எழுதினால் சிறப்பாகத்தான் வரும். உங்கள் எழுத்தும் அப்படியே. ஆனால், தளர்ந்த மனத்தினரை ஊக்கி அவர்கள் வாழ வழிவகுக்கும் வண்ணம், அதை சமூகப் பிரச்சனைகளோடு எழுதிக் கூட்ட, கலைஞர்களாலேயே முடியும். வாழ்க!

தனது தோல்விகளை, பலவீனங்களை பிறர் நன்மைக்காகத் திறந்துசொல்லக் கூச்சப்படாதவர்களை எனக்குப் பிடிக்கும், வணங்கும் அளவுக்கு.

Take care. டாக்டர் செந்தில்குமார் அவர்களையும் வணங்குகிறேன். நம்மிடம் உள்ள ஒளியை நமக்குக் காட்ட வல்லவரே குரு.

Vidhoosh said...

ரா.சு.சார். ரொம்ப நன்றிகள் சார். :)

"உழவன்" "Uzhavan" said...

//செய்யமுடியலையா செய்வதை நிறுத்தி விடுகிறேன் என்பது தற்கொலைக்கு சமம்//
 
குட் :-)
 
ஆடுதொடா இலை - இந்த இலையைக் கிள்ளி சாப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். என்னே கசப்பு

Sri said...

Try Art of Living Vidhoosh. It gives great relief to one of my friend.

Unknown said...

//ஆஸ்துமா போலத்தான் சமூகத்தின் மூடத்தனமான கட்டுப்பாடுகளும், நம் பொறுப்புக்களைத் துறந்து, இயல்பைத் தொலைத்து, குடும்பத்தை இழந்து பெறுவது சுதந்திரம் இல்லை. அப்பேற்பட்ட சுதந்தரத்தினால் யாருக்கும் பயன் இல்லை. விட்டுக் கொடுத்து வாழுங்கள். வாழ்வதை மட்டும் விட்டுக் கொடுக்காதீர்கள்.
//

இந்தியாவில் வாழ்வதை விட்டுக் கொடுத்து:-(, ஆஸ்த்மாவுக்கு பைபையும்:-) சொல்லியிருக்கிறேன், 22வயதிலிருந்து இல்லை. +2கணிதத் தேர்வுக்கு ஆஸ்த்மா வந்தது.... "கம்ப்யூட்டர் வேலை செய்யாதே", "ஏஸியில் இருக்காதே", இன்ஹேலர் என்று சொல்லவிரும்பாத கதை/adviceகள் இன்னும் எத்தனையோ.

ஆனால், என் மனத்தின் ஓரத்தில் தோன்றுவது, என் எண்ணச் சுதந்திரம் தான் ஆஸ்த்மாவிலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்தது என்று. இந்தியாவிலேயே இருந்து, என் விருப்பமான வாழ்வை அமைத்துக் கொண்டிருந்தாலும் சாத்தியமாகி இருக்கலாம். ஏன் எதுக்குச் சிலது செய்கிறோம் என்று இப்பப் பேசிப் பயனில்லை...

புறக் காரணிகள் (physical / physiological) ஒவ்வாமை(allergy)யைக் கிளப்பி, அகக் (psychological) காரணிகளால் ஆஸ்த்மா அதிகரிக்கிறது என்று ஒரு மருத்துவர் ஒரு முறை சொன்னார், சரி தான்.

என் வாழ்விலும் என் குழந்தைகள் வாழ்விலும் விளையாடும் ஆஸ்த்மா! வாழ்வின் ஆதாரமான மூச்சு விடுவதற்குக் கஷ்டப்பட்டு, விலா எலும்பிலிருந்து விடுதலை கிடைக்காதான்னு இருக்கும். என் முதுகை நீவி நீவி என் அம்மா கை நோகும்:-(

என்றாலும், மிக விரைவில் உங்களுக்கு ஆஸ்த்மாவிலிருந்து நல்ல விடுதலை கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்.

vinthaimanithan said...

வாவ்! எக்ஸலண்ட் போஸ்ட். அழகா முடிச்சு போட்ருக்கீங்க. சின்ன வயசுல எனக்கு ரெகுலரா வைத்தியம் பாக்குற டாக்டர் இப்டித்தான்... ஏதாவது சுவாரஸ்யமா "காலைல இட்லிக்கு தொட்டுக்க என்னடா?" மாதிரி பேசிட்டெ சுருக்குன்னு ஏத்துவாரு ஊசிய. குத்துனதும் தெரியாது எடுத்ததும் தெரியாது. அதே கனகச்சிதமான டெக்னிக்.

Jaleela Kamal said...

அருமையான பதிவு

Jaleela Kamal said...

இந்த குளிர் காலத்தில் தான் அதிகமாக நிறைய பேர் வீசிங் ஆல் அவஸ்தை படுகின்றனர்.

ஆவி பிடிப்பது இஞ்சிசாறு , தேன் காலையில் அருந்துவது இது போல் ஏதும் முயற்சி செய்து இருக்கீஙக்லா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

அய்யோ விதூஷ்

இந்த ஆஸ்த்துமா என்னையும் படாத பாடு படுத்தியிருக்குப்பா / இன்னமும் படுத்துது.

குறிப்பா தூசி, தினமும் காலைல சாதத்திற்காக அரிசி எடுக்கும்போது ஒரு பத்தும் தும்மல் கூடவே கண், மூக்கு நமைச்சல்.

நீங்க சொன்னா மாதிரி அதிகமா சிரிச்சா வீசிங்க் வந்துரும். யாரும் சொன்னா நம்ப மாட்டாங்கன்னு வெளிய சொல்லமாட்டேன்.

இந்த மாதிரி ஒரு பதிவு நானும் போட்ட ஞாபகம்.

டாக்டரின் வார்த்தைகள் நச், கடைசியில் உங்க வாசகங்களும் நச்

Post a Comment