அன்றுதான் நாம் கடைசியாகச் சந்தித்த நாள். எப்போதும் போல, ஏதேதோ கதைகள் பேசிக் கொண்டே அன்று அலுவலகத்தில் நடந்த கூத்துக்களைப் பற்றி பேசிப் பேசி, கண்ணீர் வரும் வரை சிரித்துக் கொண்டிருந்தோம். "ச்சே... கொசுக்களின் ரீங்காரம்தான் நேரமாகிக் கொண்டிருந்ததை சொல்லிக் கொண்டே இருக்கு" என்று சொல்லிச் சிரித்ததை எத்தனை டீனேஜ்த்தனமாய் இருந்திருக்கிறோம் என்பதைச் சொல்கிறது. "எப்போதும் இப்படியே சிரித்துக் கொண்டே இரு" என்று சொல்லிய போது நீ ஏதும் சொல்லாமல் புன்னகைத்துப் போனாய். அந்தக் கடைசிப் புன்னகையின் வலி, காதலின் வலியை விடக் கனமாகவே இருக்கிறது.
டெக்னாலஜிக்கள் அதிகம் ஏதும் இல்லாததும் நம்மிடையேயானத் தூரங்களை அதிகரித்துக் கொண்டேப் போனதற்குக் காரணம் என்றே சொல்லிக் கொண்டாலும், send செய்யப்படாமலேயே save as draft-ட்டில் இருக்கும் கடிதங்களுக்காகவும், முழுமையாகத் தொடர்பற்றுப் போகும் வரை அவ்வப்போது செய்து கொண்டிருந்த chat-களை save செய்திருக்கும் ஒரே காரணத்திற்காகவும் காலாவதியாக்காமல் வைத்திருந்த உனக்கு மட்டுமேயான அந்த ஹாட்மெயில் அக்கவுண்டை எல்லா ஈமைல்களையும் சமீபத்தில்தான் நிரந்தர back up செய்து அழித்துவிட்டேன்.
நாம் பிரிந்து விட்டதை நினைத்தாலும் அழுகை எல்லாம் வருவதே இல்லை. எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டுப் போய் விடும் குரூர குணம் உனக்கு என்று சொல்லிக் கொண்டே இருப்பது நினைவுக்கு வருகிறது. நீ சென்ற பின், உன்னைக் காதலிக்காமல் இருந்த நாட்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கவில்லை. காதலிக்காமல் இருந்திருப்பேனோ என்னவோ? அதன் பிறகான காலங்கள் முழுதும் நான் அங்கேயேதான் நின்று கொண்டிருக்கிறேன் என்பதை மட்டும் உனக்கு தெரிந்து விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சூரிய வெளிச்சத்தில் கைத் தட்டினால் வெள்ளை புள்ளிக்களாகப் பறக்குமே, அது போல, வாழ்க்கை தன் போக்குக்கு என்னைச் செலுத்தும் திசையெல்லாம் யார் கண்ணையும் உறுத்தாமல் பறந்து கொண்டேயிருக்கிறேன்.
நேரில் பார்க்கும் போது உதடளவில் புன்னகையும் கடந்து சென்ற பின் மறந்தே போவதும் என நண்பர்களாகப் பல பேர் என்று என்னைத் தெரிந்த யாருக்கும் என்னைத் தெரியாது. பற்றிக் கொள்ளும் கரமேதும் இல்லாமல், கூட்டத்தில் தனித்திருப்பது என்றே ஆகிவிட்டது. தினமும் இரண்டு பக்கமாவது எழுதுவது என்று உன் விரல் பற்றும் உணர்வோடு ஒவ்வொரு முறையும் அந்த எபோனைட் சுதேசிப் பேனாவைப் பற்றுகிறேன்.
உன் மீதான என் காதலுக்கும், என் மீதான உன் காதலுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் இருந்தது, எனக்கு நீயும், உனக்கு உலகம் முழுதும் தேவையாயிருந்தது. இப்போதெல்லாம் எதையும் புறந்தள்ளாமல், பற்றிக் கொண்டே விலகும் குரூரமும் கற்றுக் கொண்டதால், அவர்களின் பார்வைக்கு மென்மையாகத்தான் இருக்கிறேன். என் குரூரம் எனக்கே தரும் காயங்களுக்கும் இலக்காகி விட்டிருக்கும் போது, யாரைக் காயப் படுத்துவது.
விழித்துக் கொண்டே உறங்குவதை விட நீளமான காத்திருப்பை ஒளித்து வைத்திருக்கும் வரும் நாட்களின் நாளேட்டுப் பக்கங்களை புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொள்கிறேன். உன் நினைவுகளைக் கொஞ்சம் தள்ளிப் போடவென்றே காலியாக இருக்கும் பக்கங்களையெல்லாம் ஏதேனும் கமிட்மென்ட் கொண்டு நிரப்பிக் கொள்கிறேன்.
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை, உனது அந்தக் கடைசிப் பார்வையும் புன்னகையும் வலிக்கும் போதெல்லாம் புன்னகைக்கும் இந்த வரத்தை இறைவன் எல்லோருக்கும் கொடுப்பதில்லை. அன்று போலவேதான் இன்றும், உன் விழிகளைப் பார்த்துவிடும் துணிச்சலின்றி இருக்கிறேன். நீ வந்து விடாதே.
save as draft.
2 comments:
எல்லாவற்றையும் சொல்லிவிட்டு "SAVE AS DRAFT" செய்தது நியாயமா !!
நன்றி நண்பேண்டா. :)
Post a Comment