ஹரி அவளை கைத்தாங்கலாய் பிடித்து, வெளிகேட்டைத் திறந்து அழைத்து வருவதை பால்கனியிலிருந்து பார்த்துக் கொண்டேயிருந்தேன். கருப்புப் புடவைக்காரி! வெள்ளைப் புடவை கட்டிக் கொண்டால் மட்டும் பேரழகியாக ஆகிவிடப் போகிறாளாக்கும். முட்டை கண் சூனியக்காரி. என்னை முழுங்காமத் தீராது அவளுக்கு என்று வாய்விட்டே திட்டினேன். தனியாகத்தானே இருக்கிறேன். வாயில்மணி அடிக்கட்டும் என்று கதவைத் திறக்காமலேயே அமர்ந்திருந்தேன். மூன்று முறை அடித்துவிட்டது வாயில் மணி.
"வரேன் வரேன்" என்று கூவிக்கொண்டே வாசல் கதவருகேயே நின்று கொண்டேன். இன்னொரு தரம் மணி அடித்தது.
"இந்த சூனியக்காரச் சனியனை இன்னிக்கும் கூட்டிண்டு வந்துட்டான்" என்று கருவிக்கொண்டே விரிந்திருந்த அரைச்சாண் கூந்தலை ரப்பர்பேண்டால் இறுக்கிக் கொண்டே கதவைத் திறந்தேன். அவள் தலை நிமிர்ந்து பார்க்கவேயில்லை. நானும் வா-வென்று அழைக்கவில்லை. நிலைப்படியிலேயே நின்று கொண்டிருந்தேன்.
"தூங்கிட்டியா அம்மா, இந்தப் பையை என் மேஜையில் வையு" என்று லேப்டாப் பையை ஒப்படைத்தான் ஹரி.
"இந்த ஏவக்காரியத்துக்கு ஒருத்தி வேணுமோல்யோ!" என்றபடியே வாங்கிக் கொண்டு உள்ளே போனபடியே, "நன்னா கதவை அடிச்சு சாத்து, கீழாத்து நாய் மேல ஓடி-ஓடி வந்துடறது" என்றேன். அப்போதுதான் மனசு கொஞ்சம் ஆறியது. படபடப்பு அடங்கியது. என்னையும் அறியாமல் புன்னகைத்துக் கொண்டேன், குரூரமாய்தான் இருந்திருக்கும், ஆனால் அவள் சூனியக்காரிதானே. வீட்டை முழுங்கத்தானே வந்திருக்காள்.
"போன மூன்று மாசத்தில் ஏழெட்டு தரம் வந்தாச்சு. ஒவ்வொரு தரமும் நாலஞ்சு நாள் டேரா போட்டாயிடறது. இவனே டீ போட்டுக் கொடுக்கறதும், துணியைத் துவைச்சு போடறதும். தலை பிடிச்சு விடறதும்ணு. முண்டச்சிக்கு இன்னும் ஆசை தீரல போலருக்கு. எல்லாம் இவனைச் சொல்லணும். இவனை பெத்த வயித்துலே பிரண்டைய வச்சுக் கட்டிக்கணும்னேன்." என்று சத்தமாகவே புலம்பிக் கொண்டே என் சமையலறைக்குள் போய் காப்பி கலக்க ஆரம்பித்தேன். ரெண்டு தம்ளர்தான்... ஹுக்கும்.
"தோ பாருடி. புத் என்ற நரகத்துக்கு போகப்டாதுன்னு ஒரு புள்ளையப் பெத்தேன். நெய்பந்தம் பிடிக்க ஒரு பேரன் வருவான் உசுரக் கையில் பிடித்துக் கொண்டு உக்காந்திருக்கேன். சாயந்திரம் போறம்போது சொல்லிண்டே போ!" என்று தம்ளர் மேல் ஆத்திரத்தைக் காண்பித்தேன்.
"எப்போ வரும்னே தெரியாதது மரணம். சாகறத்துக்குன்னே வாழறீங்களே ஆன்ட்டி. ரெண்டு நாள் இருந்துட்டு புதன்கிழமை சாயந்திரம்தான் போறேன். சொல்லிட்டே போறேன்" என்றாள் அவள்.
(...)
அவள் குடித்தத் தம்ளரையும் ஹரியே அலம்பி வைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து எனக்கு வயிறெரிந்தது. தொண்டை அடைக்க அழுகை பீறிட்டது.
"அவளுக்குன்னு யாருமேவா இல்லாம போயிட்டா? எங்கேயாவது லேடீஸ் ஹாஸ்டல்ல சேர்த்துட வேண்டியதுதான்னே?"
"அம்மா. எங்களை நம்பினா நம்பு. வார்த்தையால கொல்லாதே. அப்பா செத்துப் போனப்ப உன்னைப் பாத்து இப்பிடியெல்லாம் யாராவது பேசியிருந்தா உனக்கெப்படி இருந்திருக்கும்? அட்லீஸ்ட், உனக்குன்னு நான் இருந்தேன். அவளுக்கு அந்தத் துணை கூட இல்லை, கல்யாணமாகி பதினஞ்சே நாள்ல அப்பா அம்மா மாமனார் மாமியார் கணவன்-னு அத்தனை பேரையும் விபத்துல போகக் கொடுத்துட்டு இறுகிப் போயிருக்கா மனுஷி. நம்மாத்துக்கு மட்டும்தான் வருகிறாள் இப்போ. காலேஜ் ப்ரெஃபஸரா இருக்கே? இப்படி இருக்கியேம்மா?" ரொம்ப ஆதுரமாய் ஒலித்தது அவன் குரல்.
"என் வாயை அடைச்சுடு... படுபாவி.. அக்கம்பக்கமெல்லாம் சிரிப்பாச் சிரிக்கறதுடா"
"நீ அழாமல் இரு, அது போதும் எனக்கு" என்று கூறிவிட்டுப் போயே விட்டான்.
சமையலறையில் இருந்த முக்காலியிலேயே உட்காந்திருந்தேன். முழுசா மூன்று மணிநேரத்துக்கு மேல் ஆகி விட்டது. இதையெல்லாம் சகித்துக் கொள்ளும்படி விட்டுட்டு போயிட்டார் இந்த மனுஷன். இருப்புக் கொள்ளாமல் புத்தக அலமாரிக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டேன். என் முதுகுக்குப் பின் யாரோ பார்த்துக் கொண்டு நிற்பது போலத் தோன்றியது. பிடிவாதமாய் திரும்பிப் பார்க்காமல் நின்றிருந்தேன். வெறுமனே புத்தகங்களைத் திருப்பிக் கொண்டும் மீண்டும் அலமாரியில் அடுக்கிக் கொண்டும் நின்று கொண்டிருந்தேன். மீண்டும் ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்து ஒரு பக்கத்தைத் திருப்பினேன். இன்னும் அந்தப் பார்வை என் முதுகின் மீது குத்தலாய் உறுத்திக் கொண்டிருந்தது.
"எக்ஸ்யூஸ் மீ ஆன்ட்டி" என்றாள்.
சிறிது கோபத்துடன் திரும்பிப் பார்த்தேன். அவள்தான்!
"உங்களோடு கொஞ்சம் பேசணும்"
"என்ன?"
"ஹரி சொன்னான். அவன் அப்பா இறக்கும் போது உங்களுக்கு இருபத்தோரு வயதுதானாமே! மறுமணம் செய்து கொள்வதைப் பற்றி நீங்கள் ஏன் யோசிக்கவேயில்லை?"
"இங்க பாருடி, ஏதோ வீட்டுக்கு விருந்தாளியா வந்திருக்கையேன்னு பாக்கறேன். கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளும்படி பண்ணிக்காதே!" என்றேன்.
"அதுனாலதான் கேட்கறேன் ஆன்ட்டி"
"இங்க பாரு. வந்தியா போனியான்னு இரு. என்னைத் தொந்தரவு பண்ணாதே" என்று கூறிவிட்டு நகர்ந்தேன்.
"ஸாரி டு டிஸ்டர்ப் யூ ஆன்ட்டி. வேற ஒருத்தரிடமும் பேச முடியாது, நினைவுகள் திரும்பும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. எப்படி சமாளிச்சீங்க நீங்க?" என்ற ஒரு கேள்வியில் அவளை நன்றாகத் தெரிந்து கொண்டேன் நான்.
"இங்க பாருடி. அண்ணனா இருந்தாலும் ஆம்பிளை ஆம்பிளைதாண்டி. ஹரி நான் வளர்த்த பிள்ளைதான். இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் வரைதான் எல்லாரும் நல்லவா. நீயா போயி படுகுழில விழுந்துடாதே. நாமதான் அழுது புரண்டுண்டு கிடக்கணும். அப்புறம் பஞ்சாயத்துக்கு எங்கிட்டே வரப்டாது ஆமா" என்றேன். கிடைத்த வாய்ப்பில் என் பிள்ளை ஹரியை மீட்டாகவேண்டிய பதட்டம் உள்ளுக்குள் பரவ ஆரம்பித்தது.
அவள் சற்றே குழப்பம் அடைந்த மாதிரியேதான் தோன்றியது. நான் தொடர்ந்தேன் "பாரும்மா. உனக்குச் சின்ன வயசு. பார்க்கவும் சுமாரா இருக்கே. யாரும் கேட்பாரும் இல்லே. டிஷ்யூ பேப்பர் மாதிரி தூக்கியெறிஞ்சுட்டுப் போயிடுவா. நல்ல சம்பளம் வரது. நீ ஏன் மேட்ரிமேனியல் வெப்சைட்டுகளில் தேடி இன்னோரு கல்யாணம் பண்ணிக்கப் படாது. ஹரி மாதிரி இருக்கறவன் ஃபரெண்டா இருக்கத்தான் லாயக்கு. அவன் அப்பா போட்டுண்ட சட்டையைக் கூடப் போட்டுக்க மாட்டான். நீ அவனை எதாவது லவ் கிவ் பண்ணறியா?" நேரடியாகவே கேட்டுவிட்டேன்.
"ஆன்ட்டி. அவனை நான் லவ் பண்ணியிருந்தா உங்களை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க மாட்டேன். கல்யாணம் பண்ணிக் கொண்டுதான் வந்திருப்பேன்" என்றாள் முகத்திலறைந்தாற் போல.
எனக்கு முகத்திலறைந்தது போலவே வலித்தது. "என்னையே எதிர்த்துப் பேசுகிறாள். நந்துருணி" மனசுக்குள் கருவிக் கொண்டேன். வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது. பாத்ரூமுக்குள் போய் கதவை சாத்திக் கொண்டேன்.
அவள் ஹரியிடம் பேசிக் கொண்டிருப்பது நன்றாகக் கேட்டது.
"ஹரி. உங்களுக்கு என் மேல் ஏதாவது அபிப்பிராயம் இருக்கா? இன்னொரு முறை நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள், என்னிடம் நட்புக் கரம் நீட்ட. பின் கைவிடுதல் இல்லாமல் போகக்கூடும், கையே இல்லாமலும். நான் என்னை ஏமாற்றுபவரைச் சும்மா விடமாட்டேன்"
ஹரி பதிலேதும் கூறாமல் இருந்தான்.
"உங்கள் அம்மா இப்போது உங்களைப் பற்றிக் கூறியது என்னை வெளியே அனுப்பத்தான் என்பதும் எனக்கு நன்றாகப் புரிகிறது" என்றாள்.
"இங்கே பார் ஹரி. இப்படித்தான் இருப்பேன் என்று நேராக இருத்தல் எப்பவுமே ரொம்ப சௌகரியம். யாருக்காகவும் எதற்காகவும் வளைந்து கொடுக்கவோ, நடிக்கவோ வேண்டி இருக்காது. எனக்கு உங்களை மறுமணம் செய்து கொள்வதைப் பற்றிய எந்த ஆட்சேபணையும் இல்லை"
"இல்லை உமா. நாம் கொஞ்ச நாள் நண்பர்களாகவேத் தொடருவோம். சரிப்பட்டு வரும் என்று தோன்றும் பட்சத்தில் திருமணம் பற்றி யோசிக்கலாம். நீ வேண்டுமானால் என்னுடனேயே தங்கிக் கொள்ளலாம். நீ அம்மாவோடு பேசியதைக் கேட்டேன். உனக்கு உடனடியாக வேண்டியதை என்னால் தரமுடியும்" என்றபடியே படுக்கைக்கு அருகில் சென்றான்.
"என்ன ஹரி. நீ என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?"
"யார்தான் யோக்கியர்கள். என் அயோக்கியத்தனத்தை யாரிடம் எப்போது காட்டுகிறேன் என்பதை பொறுத்துத்தான் என் யோக்கியத்தனத்தை நிர்ணயிக்க முடியும். நீயொன்றும் முதல் ஆள் கிடையாது. அம்மாவுக்குக் கூட தெரியாமல் பார்த்துக் கொள்கிறேன்." என்றான் கிசுகிசுப்பாக.
நான் அவர்கள் அறைக்குள் சட்டென்று நுழைந்தேன். "ஹரி. கொஞ்சம் தலை சுத்தலாக இருக்கிறது. டாக்டரிடம் போகலாம் வா" என்றேன்.
"நானும் உங்கள் கூட வருகிறேன்" என்றபடியே உமா என் கைகளைப் பற்றிக் கொண்டாள். நான் கைகளைத் தட்டிவிட முயற்சித்தேன். அவள் இறுகப் பற்றிக் கொண்டிருந்தாள்.
மூவருமாகப் போனோம். ஹரி வெளியே நின்று கொண்டான். டாக்டர் அனைத்துப் பரிசோதனைகளையும் முடித்துவிட்டு என்னிடம் "ப்ரிகாஷன்ஸ் ஏதும் செய்து கொள்ளமாட்டீர்களா? யூ ஆர் ப்ரெக்னெட்." என்றார். நான் அதிர்ச்சியில் உறைந்து நின்றேன். உமா கைகளைப் பற்றிக் கொண்டாள். டாக்டரிடம் கருக்கலைப்புக்கான ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு குற்றவுணர்வோடு விடைப் பெற்று எழுந்தேன். அவள் என் கைகளை இன்னும் இறுகப் பற்றிக் கொண்டாள். என் கைகள் ஜில்லென்று ஆனாது. நடக்கவே இயலாமல் கால்கள் துவண்டன. கண்கள் இருட்டிக் கொண்டு பூச்சிகள் பறப்பது போல உணர்வு ஏற்பட்டது. உமா "ஹரி ஹரி" என்று கூவினாள்.
-----------------
கண் விழித்த போது வீட்டில் இருந்தேன். ஹரி பக்கத்திலேயே அமர்ந்திருந்தான்.
"ஹரி... இந்தப் பொண்ணை முதல்ல அனுப்பிடு" என்றேன்.
ஹரி மெல்லிய குரலில் பேசினான். "இப்போதாம்மா எல்லாம் சொன்னாள். நாலு மாசம் ப்ரெக்னென்ட்டா இருக்காளாமே! கோயம்புத்தூரில் எங்கள் அலுவலகம் ஒன்று இருக்கிறது. அங்கேயே தங்குமிடமும் தருவார்கள். நானே சிபாரிசு செய்து அனுப்பிடப் போறேன். உனக்குப் பிடிக்கலைன்னா அவள் எப்படி இங்கே இருக்கமுடியும்? நீ உடம்பைப் பாத்துக்கோ. நான் அவளை அனுப்பிடறேன். சரியா? உனக்குச் சப்பாத்தி செய்து வைத்திருக்கேன். எனக்கு நைட் ஷிஃப்ட் இன்னிக்கு." என்றபடியே எழுந்து போனான்.
"ஹரி. கர்ப்பமாயிருக்கும் பொண்ணை எப்படிடா தனியா அனுப்பறது? எனக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணிடுடா" என்றேன்.
உமா முதல்முறையாக உடைந்து அழுதுகொண்டிருந்தாள் தனியாக.
11 comments:
simply superb and very touching vidya.
why uma crying ? puriyala :( pls help to understand this
sathiyama puriyaleenga.....
Am I reading pakoda papers?
Yes, indeed. Looks like you have touched a new height.
Very well done Vidhoosh.
Though unrelated, I want to read Thi Ja's 'Amma Vanthal' novel now.
விதூஷ் செம ட்விஸ்ட் கதையில் ரொம்ப நல்லாயிருந்ததுங்க :)
முடிவு நல்லாயிருக்குங்க. சில வசனங்கள் ரொம்பவும் அழுத்தமா அழகா எழுதியிருக்கீங்க. அதுதான் முக்கியம்.
ஆனா திரும்ப படிக்கும்போது சில இடங்கள் நிரடுது. வலிந்து திணிச்சாப்புல...
தொடர்ந்து எழுதுங்க. :)
எனக்கும் கதை புரியலை .. அப்புறம் நீங்க விடுமுறையிலே போறேன்னு சொன்னதா ஞாபகம்
நன்றி கலா. :)
நன்றி எல்.கே. :)
நன்றி தினேஷ். அவரவர் நியாயங்களில் அடுத்தவரின் உணர்வுகளை புறக்கணிப்பதும், கிடைக்கும் வாய்ப்பை, யார் தலையிலாவது காலை வைத்துக் கொண்டே, அவரவர் விருப்பங்களுக்கும் ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்கிறோம். இதில் முதலில் கையாலாகமல், எத்தனை தன்னம்பிக்கை இருந்தாலும், சூழ்நிலைக் கைதியாகிப் போவது சுற்றங்களின் ஆதரவு இல்லாமல் போகின்றவர்கள் தான் என்பது நிதர்சனம், நான் பார்த்தது. இது சும்மா ஒரு பார்வைதான். அவரவர் கற்பனைக்கும் :).
நன்றி பொழுதுபோக்கு. :)
நன்றி கோபி. :)
நன்றி ஸ்ரீதர். வேண்டாத துருத்திக் கொண்டிருந்த வசனங்களையும் நீக்கி விட்டேன். அதனால் இடையிடையே கொஞ்சம் தொங்கிக் கொண்டிருக்கு. சரியாகிடும். :)
நன்றி நசர்: ஒரு நாளைக்குத்தானே. :)) நல்லா பாருங்க வீடியோவை :))))
superb vidhoosh !
மிக அருமை , நேரம் கிடைக்கும் போது இங்கும் வாங்கோ
http//samaiyalattakaasam.blogspot.com
Post a Comment