உமா - பாகம் 1

ஹரி அவளை கைத்தாங்கலாய் பிடித்து, வெளிகேட்டைத் திறந்து அழைத்து வருவதை பால்கனியிலிருந்து பார்த்துக் கொண்டேயிருந்தேன். கருப்புப் புடவைக்காரி! வெள்ளைப் புடவை கட்டிக் கொண்டால் மட்டும் பேரழகியாக ஆகிவிடப் போகிறாளாக்கும். முட்டை கண் சூனியக்காரி. என்னை முழுங்காமத் தீராது அவளுக்கு என்று வாய்விட்டே திட்டினேன். தனியாகத்தானே இருக்கிறேன். வாயில்மணி அடிக்கட்டும் என்று கதவைத் திறக்காமலேயே அமர்ந்திருந்தேன். மூன்று முறை அடித்துவிட்டது வாயில் மணி.

"வரேன் வரேன்" என்று கூவிக்கொண்டே வாசல் கதவருகேயே நின்று கொண்டேன். இன்னொரு தரம் மணி அடித்தது.

"இந்த சூனியக்காரச் சனியனை இன்னிக்கும் கூட்டிண்டு வந்துட்டான்" என்று கருவிக்கொண்டே விரிந்திருந்த அரைச்சாண் கூந்தலை ரப்பர்பேண்டால் இறுக்கிக் கொண்டே கதவைத் திறந்தேன். அவள் தலை நிமிர்ந்து பார்க்கவேயில்லை. நானும் வா-வென்று அழைக்கவில்லை. நிலைப்படியிலேயே நின்று கொண்டிருந்தேன்.

"தூங்கிட்டியா அம்மா, இந்தப் பையை என் மேஜையில் வையு" என்று லேப்டாப் பையை ஒப்படைத்தான் ஹரி.

"இந்த ஏவக்காரியத்துக்கு ஒருத்தி வேணுமோல்யோ!" என்றபடியே வாங்கிக் கொண்டு உள்ளே போனபடியே, "நன்னா கதவை அடிச்சு சாத்து, கீழாத்து நாய் மேல ஓடி-ஓடி வந்துடறது" என்றேன். அப்போதுதான் மனசு கொஞ்சம் ஆறியது. படபடப்பு அடங்கியது. என்னையும் அறியாமல் புன்னகைத்துக் கொண்டேன், குரூரமாய்தான் இருந்திருக்கும், ஆனால் அவள் சூனியக்காரிதானே. வீட்டை முழுங்கத்தானே வந்திருக்காள்.

"போன மூன்று மாசத்தில் ஏழெட்டு தரம் வந்தாச்சு. ஒவ்வொரு தரமும் நாலஞ்சு நாள் டேரா போட்டாயிடறது. இவனே டீ போட்டுக் கொடுக்கறதும், துணியைத் துவைச்சு போடறதும். தலை பிடிச்சு விடறதும்ணு. முண்டச்சிக்கு இன்னும் ஆசை தீரல போலருக்கு. எல்லாம் இவனைச் சொல்லணும். இவனை பெத்த வயித்துலே பிரண்டைய வச்சுக் கட்டிக்கணும்னேன்." என்று சத்தமாகவே புலம்பிக் கொண்டே என் சமையலறைக்குள் போய் காப்பி கலக்க ஆரம்பித்தேன். ரெண்டு தம்ளர்தான்... ஹுக்கும்.

"தோ பாருடி. புத் என்ற நரகத்துக்கு போகப்டாதுன்னு ஒரு புள்ளையப் பெத்தேன். நெய்பந்தம் பிடிக்க ஒரு பேரன் வருவான் உசுரக் கையில் பிடித்துக் கொண்டு உக்காந்திருக்கேன். சாயந்திரம் போறம்போது சொல்லிண்டே போ!" என்று தம்ளர் மேல் ஆத்திரத்தைக் காண்பித்தேன்.

"எப்போ வரும்னே தெரியாதது மரணம். சாகறத்துக்குன்னே வாழறீங்களே ஆன்ட்டி. ரெண்டு நாள் இருந்துட்டு புதன்கிழமை சாயந்திரம்தான் போறேன். சொல்லிட்டே போறேன்" என்றாள் அவள்.

(நாளை...)

5 comments:

எல் கே said...

ஹ்ம்ம் தொடருங்கள்

Vidhoosh said...

:)) இந்த தரம் எல்லா பாகத்தையும் வரிசையா schedule பண்ணிட்டுதான் முதல் பாகமே ரிலீசு. :)))))

Vidhya Chandrasekaran said...

என்ன மாதிரின்னு பிடிபடறதுக்குள்ளே முடிஞ்சிடிச்சு.

நெக்ஸ்ட்...

R. Gopi said...

மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்தும் கதையோ?

ஒரு எட்டு வந்து பாத்துட்டுப் போயிடுங்க

http://vavaasangam.blogspot.com/2010/12/blog-post_08.html

Jaleela Kamal said...

பாகம் ஒன்றூ படிச்சாச்சு

Post a Comment