எப்டிடா என்னைக் கண்டுபிடிச்ச

பழனி, கரூர், நெரூர், மதுரை என்று நான்கு நாட்களாக பிரயாணம். பழனியில் முருகனையும, நெரூரில் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதியான இடத்தையும், கரூரில் மாரியம்மன் கோவில், தாந்தோணி மலைக்கோவில், மதுரை மீனாக்ஷி என்று தெய்வ தரிசனங்களும் நட்பும் உறவுமென நிறைவாய் போன நாட்கள்.

முகூர்த்த நாட்கள் என்றாலே பயணமும் கூடவே சேர்ந்து கொள்கிறது. கொளுத்தும் வெயில், யப்பா, யாராவது முகூர்த்த நாட்களை எல்லாம் நவம்பர் டிசம்பர் மாசங்களுக்கு மாத்துங்கப்பா...

நெரூரில் அத்தனை வெயிலில், ஜல்லி கற்களுக்கு மேல் ஒரு பச்சிளங் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது. என்னவென்று கேட்டேன்.... "கரும்பு வெட்ட வந்தவங்க பிள்ளையாக இருக்கும், டெக்சுக்கு போறதுனால உள்ளூருல விவசாயக் கூலிக்கு ஆள் கிடைப்பது இல்லை, ஆந்திராவிலிருந்து வராங்க. பிள்ளைங்க என்ன செய்யும்.. என்று சொல்லிவிட்டு மீண்டும் என்னிடம் சர்வ சாதாரணமாய் சொன்னது "நான் கூட இப்படி கிடந்தவன் தாங்க, இன்னும் என் அப்பா அம்மா விவசாயம்தான்" என்றார் இன்று தொழில், அரசியல் என்று கரூரில் ஊரே கொண்டாடிக் கொண்டு இருப்பவர். "இன்னும் பத்து வருஷம் கழிச்சு வேலைக்கு ஆள எங்கிருந்து கூட்டி வருவீங்க"ன்னு கேட்டேன். கீற்றாக ஒரு புன்சிரிப்பு பதிலாய் வந்தாலும் ஊடாக வேதனை மட்டுமே உணர்வாக இருந்தது.

மாலையில் வான வேடிக்கைக்கு மட்டும் பல ஆயிரம் ரூபாய். 'அரசியலில் இருந்தால் செய்தாக வேண்டி இருக்கு' என்றார். "விடுங்க வித்யா, அதுக்கு பதிலா இதுக்கு பதிலான்னு நான் யோசித்தால், என் கோவணத்தைக் கூட உருவிடுவாங்க, நிதர்சனத்திற்கு ஆடையே இல்லை" என்றார். "என் கையில் இருக்கரதை தக்க வச்சுகிட்டாத்தான் மேல வருவதை பொதுவுக்கு தர முடியும்" என்றும் சொன்னார். மறுமொழிக்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.

கைபேசியில் அனானி அழைப்பு ஒன்றை ஏற்றேன். "என்ன வித்யா என்னை தெரிகிறதா?" என்று கேட்டார் ஒருவர். இவ்வளவு அணுக்கமாய் உரிமையாய் இந்தக் குரல் யாருது என்று யோசிக்கிறேன்.

கார்கில் பார்டர், அல்லூர், சந்தன வீரப்பன், யூனிபார்ம் என்று ஒவ்வொன்றாய் ஹிண்ட் கொடுத்துக் கொண்டே வருகிறார். எத்தனை போட்டி நடக்குமங்க நமக்கு, ஒரு பென்சில் பரிசாக பெறுவதற்கு எத்தனை முறை ரேஸ் ஓடி இருக்கோம், என்னை "டா" போட்டு அழைக்கும் ஒரே பொண்ணு நீதான்" என்றெல்லாம் நினைவூட்டியும் தெரியவில்லை. இர்பான், வில்சன், பழனியப்பன் என்று அவன் பெயரைத் தவிர எல்லார் பெயரையும் சொல்கிறேன்.

அடிப்பாவி மறந்துட்ட பாத்தியா... ரவிச்சந்திரன் சார் ஸ்டுடென்ட்.. இப்போ கூட தெரியலையா என்றதும் உரைத்தது. ஆமாண்டா உன் குரல் கொஞ்சம் மாறிடுச்சு என்றேன். "how can I call you disloyal, you could not hurt me even now" என்று சிரிக்கிறான். நானும்.

ஆ... எப்படி கண்டு பிடிச்ச? எப்படி? என்றே கேட்டுக் கொண்டிருந்தேன். கைபேசியில் பேசிக் கொண்டே முன் வந்து நின்றான். பழங்கதையெல்லாம் பேசி விட்டு, எம்பொண்ணின் கவரிங் ஹூக் டிராப் ஜிமிக்கி ஒன்று கல்யாணத்தில் காணாமல் போனதையும் அவனிடம் கம்ப்ளைன்ட் செய்துவிட்டு வந்திருக்கேன். தனி குழு அமைத்து அமராவதி/காவேரி முழுக்க தேடித் தரேன்னு சொல்லி இருக்கான்(ர்).... அன்று போலவே இன்றும் தேனீயை நினைவூட்டுகிறான் - சுறுசுறு துருதுரு. அதே முகம், அதே சிரிப்பு, அதே கண்கள் என, அதே நட்புதானே.

போன வருடமும் இந்த வருடமும் தொலைந்தவை கிடைத்தல் என்றே என் அதிருஷ்டத்தில் எழுதி இருக்கிறார் போலருக்கு அருணாச்சல ஈசன்.

கடந்து போன வருடங்களின் கணக்காக வயதும், ஆண்-பெண் வித்தியாசமும் தோளில் கை போட்டுக் கொண்டும், கை பிடித்துக் கொண்டே பேசுவதை ஏனோ நிறுத்தி விட்டாலும், நட்பில் தெளித்த அன்பு மழையில் மீண்டும் பூக்கிறது இளமைக் காலம். "எப்டிடா என்னைக் கண்டுபிடிச்ச" என்றேன் மீண்டும்.. "உங்கப்பாதான் நீ இன்னிக்கு இங்க வரேன்னு சொன்னாரு" என்றான். "அப்படியேத்தான் இருக்கிறாய் இன்னும், எப்படி இப்டி லூசாவே maintain பண்ற?" என்கிறான். "ஏன் நீயில்லையா, அதே போலத்தான்" என்கிறேன் அதே சிரிப்புடன்.

வெங்கட் என்ற புதிய நட்பையும் கொடுத்தான், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறாராம். இவ்ளோ நேர்மையா இருக்கீங்க, எப்டி வெங்கட் கடை ஓடுது என்கிறேன். புன்னகைக்கிறார்.

மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு தந்த மண்ணை ஒரு பிடி அள்ளிக் கொண்டு திரும்புகிறேன், சென்னைக்கு கொஞ்சம் நிறையாவே வயது குறைந்தும் சின்ன துள்ளலுமாய் இன்று காலை.

மீண்டும் வயதை நினைவூட்டுகிறது சென்னை... முயன்று முயன்று பார்க்கிறேன், புன்னகைக்க, ரொம்பப் புழுக்கமாக இருக்கு!!! மழை வரக்கூடும். வரணும்! உள்ளங்கையில் கொஞ்சமாய் ஒட்டிக் கொண்டிருந்த மணல் வாஷ் பேசினுக்குள் கரைந்து கொண்டிருந்தது.

"பத்திரமா போய் சேந்தியா? பேசிச் சொல்லரதில்லையா இதெல்லாம். என்னாவாச்சோன்னு நினைக்கிறேன். பாஸ்கருக்கு அந்த டி ஷர்ட் பிடிச்சுதா" என்றெல்லாம் பேசிக்கொண்டே போகிறான்.
===============================
அகநாழிகையில் ஞான மரம் வெளியாகி இருக்கிறது. நன்றி வாசு.

லேடிஸ் ஸ்பெஷல் என்ற பத்திரிகையில் பெண் வலைபூ எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகம் கொடுக்கிறார்கள். பக்கோடா பேப்பர்கள் மூலம் எனையறிந்து "நீ நான் தேடிய முத்து" என்று சொல்லி கை பிடித்து கொண்ட மதிப்பிற்குரிய திருமதி.கிரிஜா ராகவன் அவர்களுக்கு என் நமஸ்காரங்கள். இன்னிக்கு என்னாச்சு தெரியுமா -வும் பிரசுரமாகி உள்ளது. பக்கம் 25
நன்றி கிரிஜா மேம்.

=====================

14 comments:

அநன்யா மஹாதேவன் said...

பழைய நட்பைப் பற்றிய உங்கள் வர்ணனை என்னை நெகிழ வைத்தது. வாழ்த்துக்கள் விதூஷ்!

எறும்பு said...

"வந்தாச்சா"
:)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

பதிவு அருமை

LK said...

நெரூர் போக வேண்டிய இடம். ஒரு முறை சென்று இருக்கிறேன்.

நேசமித்ரன் said...

//மழை வரக்கூடும். வரணும்! உள்ளங்கையில் கொஞ்சமாய் ஒட்டிக் கொண்டிருந்த மணல் வாஷ் பேசினுக்குள் கரைந்து கொண்டிருந்தது.//

பெய்யெனப் பெய்யும் மழை வாய்த்த நேயங்கள் உலவும் வெளியில் வாழ்வு சஞ்சீவினியை பொடித்து பரப்பி இருக்கிறது மணலாக

Vidhoosh(விதூஷ்) said...

அநன்யா : நன்றி. :) நட்பே நெகிழ்சியானதுதான்

ஆமா எறும்பு ராஜு, ஒரு வழியாய் :)

நன்றி உலவு. :)

நன்றி எல்.கே. நெரூர் ரொம்ப அற்புதமான அமைதியான இடம். ஒருதரம் காவேரிக் கரையில் பிரம்மேந்திரர் தியானம் செய்து கொண்டிருந்தாராம். அப்போது வெள்ளம் பெருகி, மணல் இவரை மூடி விட்டதாம். சில நாட்கள் கழிந்து, மணல் எடுக்கும் பொருட்டு ஒருவர் கோடரியால் வெட்டும் போது, இரத்தம் தெரித்ததாம். பிரம்மேந்திரர் ரத்தக் காயத்தோடு நடந்து சென்று விட்டாராம். ஞானிகளுக்கு உடலும் உணர்வும் ஒரு பொருட்டாகவே இருக்கிறதில்லை. கொடுப்பினை வேண்டும் இந்நிலை பெற.

சதாசிவ பிரம்மேந்திரர், பிபரே ராமரசம், மானஸ சஞ்சரரே, கேளதி மம ஹ்ருதயே, சர்வம் பிரம்ம மயம் என்று மனத்தைக் குறித்தே எழுதுகிறார். வாய்ப்பு கிடைத்தால் சுதா ரகுநாதன் குரலில் கேளுங்கள். நானும் முடிந்தால் பகிர்கிறேன்.

நேசன்: நான் ரொம்பவே மதிக்கும் நேசனின் நட்பும் இந்த வெளிக்குள் அடக்கம். :)

V.Radhakrishnan said...

நெரூர் எனும் ஊர் இன்றுதான் அறிகிறேன். நட்பின் ஆழம் கண்களில் கண்ணீரை எட்டிப் பார்க்க வைத்தது, சந்தோசத்தில்தான்.

நசரேயன் said...

ம்ம்ம்

எம்.எம்.அப்துல்லா said...

ஞானமரம் முன்பே இடுகையாய் ரசித்ததுதான். எனிவே வாழ்த்துகள்.//பழனியில் முருகனையும //

அதன் கீழே போகரின் ஜீவசமாதி


//
மதுரை மீனாக்ஷி //


அங்கே வல்லப சித்தரின் ஜீவ சமாதி.

ஃபுல் ரீச்-சார்ஜா :)

Sundar சுந்தர் said...

வாழ்த்துக்கள்!
கவிதையாய் அனுபவங்களை எழுதி இருக்காய். மாற்றங்களையும் மாறாதவைகளையும் கூட.

LK said...

//சதாசிவ பிரம்மேந்திரர், பிபரே ராமரசம், மானஸ சஞ்சரரே, கேளதி மம ஹ்ருதயே, சர்வம் பிரம்ம மயம் என்று மனத்தைக் குறித்தே எழுதுகிறார். வாய்ப்பு கிடைத்தால் சுதா ரகுநாதன் குரலில் கேளுங்கள். நானும் முடிந்தால் பகிர்கிறேன்.//

கேட்டிருக்கிறேன். ஆனால் சுதாவின் குரலில் அல்ல. வேறு ஒருவர் குரலில். எனக்கு அங்கு சென்று அவரது ஆரதானையில் கலந்து கொள்ளும் வைப்பு ஒரு முறை கிடைத்தது,

இனியா said...

Good one vidhoosh!!! Interesting...

ர‌கு said...

//மழை வரக்கூடும். வரணும்!//

இப்போதான் லேசா தூற‌ல் ஆர‌ம்பிச்சிருக்கு...நிஜ‌மாவே

வவ்வால் said...

Pethamila natpu patri vikraman padam pola sonninga enaku la...la..la nu rerecording kettuchu :)

nerurla kodari la manvettunanganu pudusa dumeel viduringale!

Post a Comment